Sunday, May 15, 2016

ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் !


கதாநாயக துதிபாடல்,நம் சமூகத்தை தொடர்ந்து சிதைத்து வருகிறது. படிப்பறிவு சதவீதம் எவ்வளவோ உயர்ந்து விட்டதாக சொல்கிறோம். ஆனால் அந்த படிப்பறிவு அதிகரிப்பு சமூக அளவிலோ , அரசியலிலோ எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை ; தனிப்பட்ட பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளவே பயன்பட்டிருக்கிறது. "பயன்படுத்து , தூக்கியெறி " என்ற உலகவணிகமயமாக்கல் கோட்பாட்டை மேலும் வலுப்படுத்தவே இந்தக் கல்வியறிவு உதவியிருக்கிறது. சமூகத்தில் நடக்கும் அநீதியை தட்டிக் கேட்கவோ , குறைந்தபட்சம் அநீதி குறித்து விவாதிக்கவோ செய்யமால் கண்டுகொள்ளாமல் இருந்து கொள்ளவே கல்விக்கூடங்களில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். படித்து , பணம் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்று அவ்வளவுதான் அதற்கு மேல் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை என்ற மனநிலையையே இன்றைய கல்வி உருவாக்குகிறது. 

கதாநாயக துதிபாடல்களின் விளைவுகளை அறியாமலேயே கதாநாயக துதிபாடல் இங்கே வளர்க்கப்படுகிறது. சினிமாக்காரர்களும் , அரசியல்வாதிகளும் , மதவாதிகளும் சராசரி மனிதர்கள் தான் என்பதை மறந்து கண்மூடித்தனமாக அவர்களைப் பின்பற்றுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று தெரியாமலேயே இருக்கிறோம். ஜெயலலிதாவின் செயல்பாடுகள் பிடித்திருந்து அவருக்கு ஓட்டுப்போடுவதில் தவறில்லை. ஆனால் யார் எப்படி ஆட்சி செய்தாலும்  எம்.ஜி.ஆர். கொண்டுவந்த சின்னமான இரட்டை இலைக்குத்தான் சாகும்வரை ஓட்டுப் போடுவேன் என்பது அறிவீனம். இன்னொரு பிரிவினர் , தி.மு.க. ஆட்சியில் தான் எங்களுக்கு வேலை கிடைத்தது. அதனால் தி.மு.க. வின் செயல்பாடு எப்படியிருந்தாலும் நாங்கள் தி.மு.க.விற்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்கிறார்கள்.

தொகுதியில், தங்களுக்குப் பிடித்த இயக்கத்தின் சார்பாக கடைந்தெடுத்த அயோக்கியனே நின்றாலும் நாங்கள் அவருக்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது. இந்த நிலை மாற வேண்டும்.  கதாநாயக துதிபாடல் ஒழிய வேண்டும். முதல்வர் வேட்பாளரை முன்வைத்தோ , கட்சியை முன்வைத்தோ , சாதி, மதம் , இனம் உள்ளிட்டவையை முன்வைத்தோ வாக்களிக்கக் கூடாது. தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில்  யார் சிறந்தவரோ , தேர்தலுக்குப் பிறகும் எளிதாக அணுகக்கூடியவரோ அவர் எந்தக்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்குதான் வாக்களிக்க வேண்டும். 

ஒரு நல்ல வேட்பாளரை நமது தொகுதிக்குத் தேர்ந்தெடுப்பதுதான் நமது முதல் கடமை. நமக்குப் பிடித்தவர் முதல்வராக வேண்டும் என்று எண்ணுவதெல்லாம் இரண்டாம்பட்சம் தான். நாம் முதல்வரை நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது. நாம் நமது தொகுதிகளில்   தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் சேர்ந்து தான் முதல்வரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நாம் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் அனைவரும் நல்லவர்களாக இருக்கும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் முதல்வரும் நல்லவராகவே இருப்பார். இன்றைய சூழலில் இது பெருங்கனவு என்றாலும் இப்போதாவது தொடங்க வேண்டும்.  முன்பெல்லாம் வெற்றி பெற்ற பிறகுதான் முதல்வரையை தேர்ந்தெடுப்பார்கள். இப்போது, கட்சி ஆரம்பித்த உடனேயே முதல்வர் கனவில் மிதக்கிறார்கள்.

மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றமல் , தேர்தலின் போது மட்டும் மக்களைச் சந்திப்பதையே எல்லாக் கட்சிகளும் கடைபிடிக்கின்றன. இதில் பழைய கட்சிகள் , புதிய கட்சிகள் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. கம்யூனிஸ்டு கட்சிகளும் தமிழக அளவில் சரிவர பணியாற்றவில்லை. இவ்வளவு பெரிய அரசியல் வெற்றிடம் இருந்தும் , இரு பெரிய கட்சிகள் மீதும் வெறுப்புகள் இருந்த போதும் இந்த வெற்றிடத்தை நிரப்ப கம்யூனிஸ்டுகள் தான் சரியான தீர்வாக இருந்தும் அதை அவர்கள் முன்னெடுக்கவில்லை. 

தங்களை மாற்றத்துக்கான கட்சி என்று அறிவித்து கொண்ட தேமுதிக கூட இதுவரை தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களைச் சந்தித்திருக்கிறது. அந்த கட்சி வளராமல் இருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம். மக்களோடு மக்களாக,  மக்களுக்கான போராட்டங்களில் தொடர்ந்து பங்கு பெற்றால் மட்டுமே ஒரு கட்சியால் வளர முடியும். ஒரு கட்சியில் ஒருவர் மட்டும் முன்நிறுத்தப்படாமல் அடுத்த கட்டத்தலைவர்களையும் உருவாக்க வேண்டும் . இதை எந்தக்கட்சியும் முறையாக கடைபிடிப்பதில்லை. ஜனநாயக சர்வாதிகாரம் தான் எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறது . 

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில் இவ்வளவு குழப்பங்கள் ஏற்பட்டதற்கு காரணம் மாற்றி மாற்றி ஆட்சி செய்த அதிமுக மற்றும் திமுக இரு கட்சிகளும் மக்களின் நம்பிக்கையை இழந்தது தான். இந்த இரு கட்சிகளின் மீதிலும் கடுமையான வெறுப்பு இருந்தாலும் , இந்த இரு கட்சிகளைத் தவிர்த்து வேறு ஒருவருக்கு வாக்களிக்க பெருவாரியான மக்கள் தயங்குகிறார்கள்.  ஏன் என்று தான் தெரியவில்லை. புதிய கட்சிகளும் போதிய நம்பிக்கையைப் பெறவில்லை. மக்கள் நலக்கூட்டணி ஒரு மாற்றாக இருந்தாலும் , அவர்கள் ஒருங்கிணைந்து மக்களைக் கவரவில்லை. எத்தனை பேர் சேர்ந்திருந்தாலும் கூட்டணியின் பெயரை மாற்றியிருக்கக் கூடாது. " தேமுதிக -மக்கள் நலக்கூட்டணி - தாமாக கூட்டணி " வாசிக்கவே நன்றாக இல்லை.  எல்லாக் கட்சிகளும் மக்களின் நலனுக்காகத்தானே ஆட்சிக்கு வருவதாக சொல்கின்றன. அப்புறம் கூட்டணி பேர் வைப்பதில் ஏன் இத்தனை பேதங்கள். வைகோ வின் தான்தோன்றித்தனமான பேச்சுகளும்,  செயல்பாடுகளும் மக்கள் நலக்கூட்டணிக்கு பின்னடைவையே தருகின்றன. 

இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சி இளைஞர்களை கவர்ந்து வருகிறது. சீமான் முன்வைக்கும் வாதங்கள் சிறப்பானதாக இருந்தாலும் , இனம் இனம் என்று  இனத்தை மட்டுமே முன்னிலைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.இந்தியாவில் யாரும் எங்கேயும் வாழ்வதற்குதான் சுதந்திரமே பெற்றோம்.ஜனநாயகத்தின் தேவையும் அது தான். நாம் தமிழர் கட்சி இன்னொரு சிவசேனாவாக மாறாமல் இருக்க வேண்டும்.

முதலில் தற்போது நடைமுறையில் இருக்கும் சின்னங்களை ஒழிக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சிக்கும் குலுக்கல் முறையில் தனித்தனி  சின்னம் ஒதுக்க வேண்டும். ஓரே கட்சிக்கு ஒரே சின்னத்தை தொடர்ந்து ஒதுக்குவதை நிறுத்த வேண்டும். குழப்பங்கள் நிகழும் என்று சொல்லப்படலாம். 75% மேல் படிப்பறிவு பெற்றவர்கள் உள்ள மாநிலத்தில் குழப்பம் எதற்கு வருகிறது.  இதை மீறியும் தேர்தலை முன்வைத்து நிறைய எதிர்பார்ப்புகள் மக்களிடத்தில் உள்ளன. ஓட்டுப் போடுவதைத் தாண்டியும் மக்களுக்கு அதிகாரம் வேண்டும். விகிதாச்சார முறையில் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறையைக் கொண்டு வரலாம்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் பேசப்படும் விசயம் ஓட்டு வங்கி. கடந்த தேர்தல்களில் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீததை வைத்தே தற்போதைய தேர்தலில் அக்கட்சிகளின் வெற்றி, தோல்வி  மட்டுமல்லாமல் , மற்ற கட்சிகளுடன் பேரங்களும் பேசப்படுகின்றன. நாம் கட்சிகளை பார்த்து ஓட்டுப்போட்டதன் விளைவு இது. கட்சிகளைப் பார்த்து ஓட்டுப் போடாமல் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் நல்லவர்களைப் பார்த்து ஓட்டுப் போட்டால் இந்த ஓட்டு வங்கி சதவீதம் சினானாபின்னமாகிவிடும். இந்த தேர்தலில் எப்படி மதுவிலக்கையும் ,பெரும்பாலும் இலவசமில்லா தேர்தல் அறிக்கைகளை வெளியிட வைத்தோமோ , அதே போல நல்லவர்களை மட்டுமே தங்கள் கட்சியின் சார்பாக வேட்பாளர்களாக நிறுத்தும் நிலையை நாம் உருவாக்க வேண்டும். எல்லாம் நாம் போடப்போகிற ஓட்டில் இருக்கிறது. 

நம் வாக்கு! நம் மாற்றம் !

மேலும் படிக்க :

கட்சி அரசியலை வேரறுப்போம் !


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms