Wednesday, September 24, 2025

Stress Buster - மன அழுத்தத்திலிருந்து விடுபட !


நவீன வாழ்வு நாள்தோறும் நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறது. நாம் சந்திக்க நேரும் நெருக்கடிகளை தவிர்க்க முடியாது. ஆனால் அவற்றிலிருந்து விரைவாக வெளியேறலாம். எந்த நெருக்கடிக்கான தீர்வும் அந்த நெருக்கடிக்குள் இருப்பதில்லை. அந்த நெருக்கடிக்கு வெளியிலிருந்து அணுகுவதன் மூலமே அந்த நெருக்கடியைக் கடக்க முடியும். எந்த ஒன்று நெருக்கடியிலிருந்து நம்மை வெளியே கொண்டு வந்து அந்த நெருக்கடியை கடக்க உதவுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 


எல்லாவித நெருக்கடிகளையும் ஒரே மாதிரியாக நம்மால் கடக்க முடியாது. எதுவெல்லாம் நெருக்கடியிலிருந்து நம்மை வெளியேற உதவுகிறதோ அதுவே அதிகம் நினைவில் இருக்கும் ,அதுவே அதிகம் கொண்டாடப்படவும் செய்யும். இயற்கை ஒரு மாபெரும் ' Stress Buster ' ஆக இருக்கிறது. இயற்கையை நெருக்கமாக கவனிப்பதன் மூலமே இந்த வாழ்வு தரும் அழுத்தத்திலிருந்து வெளியேறலாம். நாம் செல்லும் பாதையின் ஊடாக கடந்து செல்லும் ஒரு பறவையின் நிழலுக்கு கூட நம் மனநிலையை மாற்றும் வல்லமை இருக்கிறது. இயற்கையின் ஒவ்வொரு செயல்பாடும் கவனிக்க வேண்டியதே. மழை ஒரு கொண்டாட்ட மனநிலையை எல்லோருக்கும் கொடுக்கிறது. மனதை சாந்தப்படுத்துகிறது. மழை பெய்யும் நேரத்தில் ஏதாவது செய்ய மிகவும் பிடிக்கிறது. மழைக்கு முந்தைய மனநிலையும் பிந்தைய மனநிலையும் வேறு வேறாகவே இருக்கின்றது. மழை மட்டுமல்ல , சூரியன் ,நிலவு , வானம் , மலை,மரம் ,செடி,கொடி,பூ ,காய் ,கனி , பறவைகள் ,விலங்குகள் என இயற்கையின் ஒவ்வொன்றுமே தனித்துவத்துடன் இயங்குகின்றன. இதை கவனிப்பதன் மூலமே நமக்கான சமாதானங்களைப் பெற முடியும்.


இயற்கைக்கு அடுத்ததாக கலை இருக்கிறது. பாடல்கள் கேட்டல் ,புத்தகம் வாசித்தல் ,எழுதுதல், திரைப்படங்கள், பயணங்கள் என ஏதோ ஒன்றை செய்வதன் மூலம் நமக்கான நெருக்கடிகளை விரட்ட முடியும். இதுவும் கடந்து போகும் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தக்கூடியது தான். கடந்த போக எது துணை புரிகிறது என்று பார்க்க வேண்டும். இன்றைய சூழலில் இளையராஜாவும் ,வடிவேலுவும் இல்லையென்றால் நமக்கு பைத்தியமே பிடித்துவிடும். அந்த அளவிற்கு இந்த இருவரும் தமிழ் சமூகத்தை ஆக்கிரமித்துள்ளனர். தினசரி வாழ்க்கையின் ஊடாக நமக்கு பிடித்தமான ஒன்றைச் செய்யவும் நேரம் ஒதுக்க வேண்டியது அவசியமாகிறது. பொழுதுபோக்கு என வகைப்படுத்தினாலும் அதைச் செய்யும் போது நமக்கு மகிழ்ச்சி உண்டாக வேண்டும். அதானால் தான் ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்கை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது முக்கியமானதாகிறது. 


மனம் விட்டு பேசுவதன் மூலமும் நெருக்கடியை கடக்கலாம். இன்றைய சூழலில் சரியான புரிதல் இல்லாதவர்களிடம் மனம் விட்டு பேசுவது மேலும் நெருக்கடியையே உருவாக்குகிறது. இன்னொரு மனிதரின் மனக்குறைகளை கேட்பதற்கு கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். மிகவும் சிறிய காரணங்களுக்காக நிகழும் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. அதுவும் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தாங்களும் சாவது என்பது அதிகரித்து வருகிறது. அவர்கள் வாழ்வதற்கான நம்பிக்கையை நாம் கொடுக்கவில்லை. சமூகம் என்ற அமைப்பில் நிகழும் தற்கொலைகளுக்கு நாமும் மறைமுக காரணம் தான்.எல்லா மனிதர்களும் வாழ்வதற்கான நம்பிக்கையை சமூகம் கொடுக்க வேண்டும். மனித மனம் விசித்திரமானது தான். எப்போது எப்படி நினைக்கும் என்று தெரியாது தான். தற்கொலைகள் எங்குமே தான் நிகழ்கின்றன. ஆனால் தற்கொலைக்கான காரணங்கள் ஆராயபட வேண்டியவை, விவாதிக்கப்பட வேண்டியவை. எந்தச் சூழலிலும் அந்த எண்ணம் வராத வாழ்க்கையை வழி நடத்துவது தான் முக்கியமானதாகிறது. மரணம் எல்லோருக்கும் பொதுவென்றாலும் அது தானாய் நிகழ வேண்டும். 


இயற்கையையும், கலையையும் கொண்டாடுவதன் மூலமே வாழ்க்கையையும் கொண்டாட முடியும் !


மேலும் படிக்க:

பாலியல் சுரண்டல்கள் ஒழியட்டும் !

மனிதம் பரவட்டும் !


Friday, September 12, 2025

Chat With Chen - அலெக்ஸ் - நேர்காணல் ❤️

 


Chat With Chen ரொம்பவே விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. பங்கு பெறும் ஒவ்வொருவரையும் அவர்களின் மனம் திறந்து பேச வைக்கிறார், ஷாஜி. மனம் சோர்வாக இருக்கும் போது Chat With Chen தொடரில் இருக்கும் ஏதேனும் ஓர் நேர்காணலைக் காண்பது வழக்கம். அதனாலேயே முழுவதும் பார்க்க வாய்ப்பிருந்தாலும் இன்னும் பலரின் நேர்காணல்கள் பார்க்கப்படாமலே இருக்கின்றன. இடையில் எப்பவாவது ஒரு புது நேர்காணலை காண்பது வழக்கம். அப்படி உடனே பார்த்தது தான் அலெக்ஸ் அவர்களின் நேர்காணல்.


நாம் எல்லோருக்குமே இசை பிடிக்கும். அது எந்த மாதிரியான இசை என்பது மட்டும் தான் வித்தியாசம். இசையை, இசைக்கலைஞர்களை அங்கத உணர்வோடு அலெக்ஸ் அணுகும் விதம் தான் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. இசையை அங்கத உணர்வோடு அணுகியவர்கள்  சமீபத்தில் நம் சூழலில் இல்லை. நம்மில் பெரும்பாலானோர்களுக்கு டைமிங் காமெடி ரொம்பவே பிடிக்கும். இசையுடன் டைமிங் காமெடியும் கலந்தால் இன்னும் சுவாரசியம் தானே. அந்த இடத்தில் தான் அலெக்ஸ் ஜெயிக்கிறார். 


நம்மில் பெரும்பாலானோர், நமக்கு பிடித்த வேலையைச் செய்வதில்லை அல்லது அப்படி பிடித்த வேலையைச் செய்ய முயற்சிப்பதும் இல்லை. பிழைப்பிற்காக கிடைத்த வேலையைச் செய்பவர்களே அதிகம். கிடைத்த வேலையைச் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு காலகட்டத்தில் நமக்கும் தோன்றியிருக்கும், " இந்த வேலையை விட்டுவிட்டு நமக்கு பிடித்த வேலையைச் செய்ய வேண்டும்" என்று. ஆனால் அதற்கு முக்கியத்துவம் தராமல் பிழைப்பிற்கான வேலையை தொடர்ந்து செய்பவர்களே அதிகம். பிடித்த வேலையை செய்வதற்காக கிடைத்த வேலையை விட்டவர் தான், அலெக்ஸ். இவரைப் போல உலகெங்கும் உதாரணங்கள் நிறைய உள்ளன. 


Prime Video -ல் வெளியான அவரது ' Alex in Wonderland ' அற்புதமான நிகழ்ச்சி. தமிழ் திரையிசை ரசிகர்கள் அனைவரும் ரசித்து பார்த்த நிகழ்ச்சி. இசை விமர்சகர் ஷாஜிக்கு பிறகு மலேசியா வாசுதேவன் அவர்களை பொதுவெளியில் முன்னிலைபடுத்திய நிகழ்ச்சியாக அது அமைந்தது. அதற்கு காரணம் நம்மை போல் அவரும் ஷாஜியின் ' மலேசியா வாசுதேவன் மகத்தான திரைப்பாடகன்' கட்டுரையை படித்ததின் பிறகான பாதிப்பில் தான் இதைச் செய்திருக்கிறார் என்பது இந்த நேர்காணல் மூலமாக தெரிய வருகிறது. அலெக்ஸ் பங்கு பெற்றதாக சொல்லும் ஷாஜி அவர்கள் ஒருங்கிணைத்த மலேசியா வாசுதேவன் நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு சென்னையில் இருந்த போது எனக்கும் அமைந்தது. அது ஒரு அற்புதமான நிகழ்வு. 


ஒவ்வொரு மனிதரின் வாழ்வும்,  கேட்கும் நமக்கு கதை தான். கதை கேட்பது என்பது நமக்கு சலிப்பதேயில்லை. அதனால் தான் இத்தகைய நேர்காணல்கள் நம்மை ஈர்க்கின்றன. அலெக்ஸ் பற்றி நமக்குத் தெரியாத நிறைய விசயங்களை இந்த நேர்காணல் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். அலெக்ஸ் இந்த இடத்தை அடைவதற்கு நிறைய உழைத்திருக்கிறார். நிறைய பயிற்சிகள் செய்திருக்கிறார். எத்தனையோ நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உழைப்பில் உருவாகும் எத்தனையோ  திரைப்படங்கள் நமக்கு சலிப்பைத்  தருகின்றன. தனிமனிதனாக 2 , 3 மணி நேரம் நமக்கு சலிப்பில்லாமல் ஒரு  நிகழ்ச்சியைக் கொண்டு செல்வது ரொம்பவே பெரிய விசயம். 


Amazon நிறுவனத்தின் Prime Video இவரது புதிய மேடை நிகழ்ச்சியான '  Alexperience ' நிகழ்ச்சியை வாங்க மறுத்த சூழலில் மற்ற இடங்களிலும் முயற்சி செய்தும் பலனளிக்காததால் தானே ஒரு பதிய OTT தளத்தை உருவாக்கி அதில் இந்த Alexperience நிகழ்ச்சியை கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியிட்டு இருக்கிறார். அந்த OTT ன் பெயர் ANBA TV. இதுவும் ரொம்பவே பெரிய விசயம். இதிலும் அலெக்ஸிற்கு வெற்றி கிடைக்கட்டும்.


மொத்தத்தில் நல்லதொரு நேர்காணல் ❤️

மேலும் படிக்க :

நான் உங்கள் வீட்டு பிள்ளை - பூவை செங்குட்டுவன் !

மனிதர்கள் - குற்றமுடைய நெஞ்சு குறுகுறுக்கும் !

Tuesday, September 2, 2025

நான் உங்கள் வீட்டு பிள்ளை - பூவை செங்குட்டுவன் !

 


'புதிய பூமி' திரைப்படத்தில் இடம்பெற்ற "நான் உங்கள் வீட்டு பிள்ளை..." என்ற பாடல் வாலி அல்லது கண்ணதாசன் எழுதியிருப்பார் என்று நினைத்தால் இப்பாடலை எழுதியிருப்பவர், பூவை செங்குட்டுவன் ❤️. அதிகளவில் பக்திப்பாடல்கள் எழுதியிருக்கிறார்.  அவற்றில் பெரும்பாலானவை பெருவெற்றி பெற்ற பாடல்களாக இருக்கின்றன. இப்பாடலும் பக்தி பாடல்தான், நாயக பக்திப்பாடல் .

" நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை

காலம்தோறும் பாடம் கூறும்
மாறுதல் இங்கே தேவை
ஏழை எளியோர் துயரம் போக்கும்
செயலே எந்தன் சேவை

இதயம் என்பது ரோஜாவானால்
நினைவே நறுமணமாகும்
எங்கே இதயம் அங்கே வாழும்
அன்பே என்னை ஆளும்

கோவில் என்றால் கோபுரம் காட்டும்
தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
எண்ணம் வேண்டும் இங்கே

பிறந்த நாடே சிறந்த கோவில்
பேசும் மொழியே தெய்வம்
இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால்
கோபுரமாகும் கொள்கை

உனக்கொரு பங்கும்
எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு

எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி "

பூவை செங்குட்டுவன் இயற்றிய மற்ற பாடல்கள்...

 
தாயிற் சிறந்த கோயிலுமில்லை (அகத்தியர்)


ஏடு தந்தானடி தில்லையிலே (ராஜராஜ சோழன்)


இறைவன் படைத்த உலகை (வா ராஜா வா )


ராதையின் நெஞ்சமே (கனிமுத்துப்பாப்பா)

 
காலம் நமக்கு தோழன் (பெத்த மனம் பித்து)


காலம் எனக்கொரு (பௌர்ணமி),

 
வானம் நமது தந்தை (தாகம்)


திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் (கந்தன் கருணை)


ஆடுகின்றானடி தில்லையிலே (கந்தன் கருணை)


திருப்புகழைப் பாட பாட (கௌரி கல்யாணம்)


வணங்கிடும் கைகளில் (கற்பூரம்)


வணக்கம் சிங்கார (காதல் வாகனம்)


திருநெல்வேலி சீமையிலே (திருநெல்வேலி)

//உனக்கொரு பங்கும்
எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு

எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி// ❤️

மேலும் படிக்க :

ஆலோலங் கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே... !

காதல் வானிலே... காதல் வானிலே...-பிரித்தி உத்தம்சிங் ❤️

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms