Saturday, October 22, 2011

ஈட்டி எட்டுறமுட்டும் பாயும் , பணம் பாதாளமுட்டும் பாயும் !

" ஈட்டி எட்டுறமுட்டும் பாயும்   , பணம் பாதாளமுட்டும் பாயும்  " தேர்தல் முடிவின் போது காதில் விழுந்த பழமொழி . பதவிக்காக ஏராளாமான பணம் செலவளிக்கப்பட்டுள்ளது . மெம்பருக்காக நின்றாலும் , தலைவருக்காக நின்றாலும் வாக்காளருக்கு பணம் கொடுத்தே ஆக வேண்டிய  கட்டாயம் உருவாக்கப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல . வாக்காளருக்கு பணம் கொடுத்தவர்கள் மட்டுமே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர் . 

பதவிக்காக மனிதன் என்னவெல்லாம் செய்வான் என்பதை மக்கள் நேரடியாக பார்த்த தேர்தலாக , இந்தத் தேர்தல் அமைந்துவிட்டது .ஓட்டுக்காக எதையும் இழக்கத் தயாராக இருந்தனர் . ஒரு வகையில் உள்ளூர் கறுப்புப் பணத்தை வெளிவர வைத்த தேர்தலாகவும் அமைந்து விட்டது . அதே சமயம் தேர்தலில் போட்டியிட்டதால் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் . 

இந்தத்தேர்தலில் தமிழ்நாடு முழுக்கத் தோற்றவர்கள் மக்கள் மட்டுமே . தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டனர் . ஓட்டுக்காக பணம் வாங்குவதும் லஞ்சம் தான் . லஞ்சம் வாங்கிகொண்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தங்களை அடமானம் வைத்துவிட்டனர் . 

இந்தத் தேர்தலில் "எங்கள் ஊருக்கு இதைச் செய்ய வேண்டும் "
 என்ற சத்தம் கேட்கவில்லை " எனக்கு எவ்வளவு தருவீங்க " என்ற சத்தம் தான் கேட்டது . "யார் பதவிக்கு வந்தாலும் எதுவும் செய்யப்போவதில்லை ", அதனால் கிடைத்தவரை லாபம் என்று நினைத்துத்தான் பணம் வாங்குகிறோம் என்றும் , " பணம் வாங்காவிட்டால் வேட்பாளர் தப்பாக நினைப்பார் " என்பதற்க்காகத்தான் பணம் வாங்குகிறோம் என்றும் சொல்கிறார்கள் மக்களில் சிலர் .

காரணம் எதுவாக இருந்தாலும் ஓட்டுக்கு லஞ்சம் வாங்குவது தப்பு  தான் . உழைத்துச் சேர்க்கும் பணமே நிலைக்காத இந்தக்காலத்தில் , ஓட்டுக்காக பெற்ற  பணம் எந்த மூலைக்கு ?  உழைக்காமல் வரும் எந்தப்பணமும் நம் பணமல்ல . நம் நாட்டில் பலர்,  வாங்கும் ஊதியத்திற்கு  ஏற்ப உழைப்பதில்லை . கடுமையாக உழைப்பவர்களுக்கு போதிய ஊதியம் கிடைப்பதில்லை .

எது எப்படியோ இந்தத் தேர்தலில் பணத்துக்காக விலை போய்விட்டது ஜனநாயகம் !

பின்குறிப்பு :

திருச்சி இடைத் தேர்தலில் தி.மு.க . வாங்கிய ஓட்டுக்களை அ .தி.மு.க . வும் உள்ளாட்சித் தேர்தலில் அ .தி.மு.க .பெற்ற வெற்றியை மற்ற கட்சிகளும்  கவனத்தில் கொள்ள வேண்டும் .

மேலும் படிக்க :


.........................................

Tuesday, September 27, 2011

எங்கேயும் எப்போதும் !


திரைப்படங்களை  தங்கள்  வாழ்கையின்  ஒரு  பகுதியாக  கருதும்  சமூகத்தில்  தான்  நாம்  வாழ்ந்து   வருகிறோம் . திரைப்படங்களை  அவ்வளவு  எளிதில்  நம்மிடமிருந்து  பிரிக்க  முடியாது . கடந்த  இரண்டு  வருடங்களாக  நிறைய  நல்ல  தமிழ்ப்படங்களைப்  பார்க்கும்  வாய்ப்பைப்  பெற்று  வருகிறோம்  . அந்த  வகையில்  " எங்கேயும்  எப்போதும் " திரைப்படம்  நம்  திரையுலகை  ஒரு  புதிய  உயரத்தை  நோக்கி   நகர்த்துகிறது  .  

"எங்கேயும்  எப்போதும் " - மிகப்பெரிய  உழைப்பின்  வடிவம்  . படம்  தொடங்குவது  முதல்  படம்  முடியும்  வரை  ஒவ்வொரு நொடியிலும்  உழைப்பு  தெரிகிறது  . மிகச்சிறப்பான  திரைக்கதை  அமைப்பு  ,நல்ல  நடிப்பு , நல்ல  நல்ல  வசனங்கள்  , நல்ல  பாடல்கள்  ,நல்ல  ஒளிப்பதிவு  ,நல்ல படத்தொகுப்பு  என்று  படத்தில்  நிறைய  ' நல்ல  ' இருக்கிறது  . படத்தின்  சூழல் , சமூகத்தின்  சூழலோடு   மிகவும்  நெருங்கி  இருக்கிறது  . சென்னை நகரம்  அவ்வளவு  அழகாக  காட்டப்பட்டுள்ளது  . சென்னையைப்  பிடிக்காமல்  சென்னையில்  வாழ்ந்து  வருபவர்களுக்கு  , இனி  சென்னையைப்  பிடிக்கும் என நம்பலாம் .

அனன்யாவும்  , அஞ்சலியும்  (கொஞ்சம்  முதிர்ச்சி  தெரிந்தாலும்  ) அவ்வளவு  அழகு  (நடிப்பிலும் ) . நாடோடிகள்  படமும்  , இந்தப்படமும்  அனன்யாவின் சிறந்த  நடிப்புக்கு  உதாரணம்  . கற்றது  தமிழ்  , அங்காடித்தெரு  வரிசையில்  அஞ்சலியின்  மற்றுமொரு  சிறந்த  படம்  இந்த   " எங்கேயும்  எப்போதும்  " . தொடர்ந்து  இந்த  மாதிரியே  நடிக்கலாமே  அஞ்சலி ! இந்தப்படத்தில்  அஞ்சலி  பேசும்  வசனங்களை  இன்றைய  காதலர்கள்  கவனித்தால்  நல்லது  .

சர்வா ( " காதல்னா  சும்மா  இல்ல  " படத்துல  நடித்தவர்  தானே  ?) மற்றும்  ஜெய் 'யும்  சிறப்பாக  நடித்துள்ளனர் . ஜெய் , இந்த  மாதிரியான  படங்களை  தேர்ந்தெடுத்து  நடிக்கலாம் . சின்ன  சின்ன  கதாப்பாத்திரங்களில்  நடித்தவர்களும்  சிறப்பாக  நடித்துள்ளனர்  . படத்தின்  மிகப்பெரிய பலம்  ஒளிப்பதிவு  மற்றும்  படத்தொகுப்பு . சென்னையைக்  காட்டும்  பொது  நாமும்  சென்னையில்  இருப்பது  போலவும்  , திருச்சியைக்  காட்டும்  பொது  நாமும்  திருச்சியில்  இருப்பது  போலவும்  , பேருந்தைக்  காட்டும்  பொது  நாமும்  பேருந்தில்  இருப்பது  போலவும்  நம்மை  உணர  வைக்கிறது  ஒளிப்பதிவும்  , ஒலிப்பதிவும் . உயிரோட்டமான  சூழ்நிலைகளுக்கு   பின்னணி  ஒலி சேர்க்க  இசையமைப்பாளர்  மிகவும்  உழைத்திருக்கிறார்  .அற்புதமான படத்தொகுப்பு  , படத்திற்கு  வேகம்  கொடுக்கிறது .   

உதவி  இயக்குனர்களின்  உழைப்பும்  இந்தப்படத்தில்  தனியாக  தெரிகிறது  . இயக்குனரை  மீறி  அவர்கள்  தெரிவது  அதிசயம்  .கொஞ்சம்  தவறினாலும்  சோகமாக  மாறிவிடக்கூடிய  கதையை  அவ்வளவு   அழகாக , அதேசமயம்  அழுத்தமாக  படம்பிடித்துள்ளனர்  . நல்ல  கதைக்கரு  ,தொய்வே  இல்லாத  திரைக்கதை  , தற்போதைய  சூழலுக்குப்  பொருந்தும்  எளிமை  + இனிமை  வசனங்கள்  , சிறந்த  இயக்கம்  என்று  முதல்  படத்திலேயே  முத்திரை  பதித்து  விட்டார்  , இயக்குனர்  சரவணன்  , உங்களை  வருக  ! வருக  ! என  வரவேற்கிறோம்  .

எங்கேயும்  எப்போதும்  , எதையாவது  கற்றுக்கொள்ள  நமக்கு  வாய்ப்பு  இருக்கிறது  . இந்த   "எங்கேயும்  எப்போதும் " -விழும்   நாம்  (முக்கியமாக  ஓட்டுநர்கள் ) கற்றுக்கொள்ள  நிறைய   இருக்கிறது  . வாகனத்தை  ஓட்டும்போது   அதிக  வேகமும்  , செல்போனும்  கண்டிப்பாக  தவிர்க்கப்பட  வேண்டும்  . செல்போனைக்  கூட   தவிர்த்து  விடலாம் ? ஆனால்  வேகத்தைத்  தவிர்க்க  முடியுமா  ? தெரியவில்லை  . இன்றைய  அவசர  வாழ்க்கையில்  வேகத்தை  கவனத்தில்  கொண்டுதான்  நாம்  பேருந்திலேயே  ஏறுகிறோம்  . வேகத்தை  மட்டுமே  தேர்ந்தெடுத்தால்  வேகமாக  போய்ச்  சேர  வேண்டியது  தான்  , பாலிசி  எடுக்க  மறந்து  விடாதீர்கள் ! ?   

இயல்  , இசை  , நாடகம்  மூன்றும்  சேர்ந்தது  தான்  நமது  தமிழ்  மொழி . நாடகத்தின்  மறுவடிவமான  சினிமாவிற்கு  கொடுக்கும்  முக்கியத்துவம்  இயல்  மற்றும்  இசைக்கு  கொடுக்கப்படுவதில்லை . வாரயிதழ்களின்  அட்டைப்படங்களை  சினிமாக்காரர்களும்  , அரசியல்வாதிகளும்  மட்டுமே  அலங்கரிக்கிறார்கள் . இலக்கியத்துறையில்  ஒருவர்  எவ்வளவு  பெரிய  விருது  வாங்கினாலும்  , பெரிய  சாதனைகள்  செய்தாலும்  கவனிக்கப்படுவதேயில்லை  . இசை  என்றால்  திரையிசை  மட்டும்  தான்  என்ற  அளவில்  சுருங்கி  விட்டது  . எவ்வளவோ  திரைப்படங்கள்  எடுக்கப்படுவது  போல்  , எவ்வளவோ  புத்தகங்கள்  எழுதப்படுவது  போல்  இசையிலும்  எவ்வளவோ  செய்யலாம்  . இயல் , இசை  ,நாடகம்  மூன்றையும்   இதன்  வரிசைப்படியே  கொண்டாடலாம் . இந்த  மூன்றின்  வளர்ச்சியில்  தான்  அடங்கியுள்ளது  நம்  மொழியின்  வளர்ச்சி .

வாழ்க  வளமுடன் ! 

மேலும் படிக்க :


....................................................................... 

Monday, September 5, 2011

ஜப்பானும் தனிமனித ஒழுக்கமும் !

"திருடனாய்ப்  பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .." , " தனியொரு மனிதன் திருந்திவிட்டால் சிறைச்சாலைகள் தேவையில்லை ..." இரண்டும் புகழ்பெற்ற பாடல் வரிகள் . நாம் எவ்வளவுதான் சட்டங்கள் போட்டாலும் இன்னும் நம்மால் நிறைய விசயங்களை மாற்றமுடியவில்லை . செயல்படுத்துபவர்களும் , பின்பற்றுபவர்களும் சரியாக இல்லாதவரை சட்டங்களால் என்ன செய்ய முடியும் ?

அண்ணா  ஹசாரே , சமீபத்தில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் . பாதிப்பேர் அவரை ஆதரிக்கிறார்கள் மீதிப்பேர் அவரையும் ,ஜன் லோக்பாலையும் எதிர்க்கிறார்கள் . அண்ணாவிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான் விசயம் "அகிம்சை " . அவரது போராட்டத்தின் போது யாருக்கும் எந்த இடையூறும் ,முக்கியமாக பொதுச்சொத்துக்கு எந்தவிதமான சேதமும் ஏற்ப்படவில்லை. மற்றவர்கள் நடத்திய , நடத்தும் போராட்டங்களில் இவை சாத்தியமில்லை .அகிம்சையின் சக்தியை தற்போது எல்லோராலும் உணர முடிந்திருக்கிறது . இவரை காந்தியுடன் ஒப்பிடவேண்டிய அவசியம் இல்லை .

 யாரும் எதுவும் செய்யமாட்டேன் என்கிறார்கள் , யாரவது எதாவது செய்யும் போது அவரை எதிர்க்க மட்டும் அணி திரண்டு விடுகிறார்கள் . இது ஒரு வகையான  நோய் . கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி வெற்றிப்பெறும்  போது அந்த அணி தோற்கவேண்டும் என்று எல்லோரும் வேண்டுகிறோம் . இது நம்மால் முடியாததை இன்னொருவன் செய்யும்போது ஏற்படும் ஆற்றாமையின் வெளிப்பாடு . நாமளும் எதுவும் செய்யக்கூடாது , அடுத்தவனும் எதுவும் செய்யக்கூடாது என்ற மனநிலையையே இதற்குக் காரணம் .

நாட்டில் ஊழலைவிடப் பெரிய பிரச்னைகள் இருக்கின்றன . அதில் கவனம் செலுத்தாத மக்கள் , "ஜன் லோக்பால்" மீது கவனம் செலுத்துவது நிறைய பேருக்குப் பிடிக்கவில்லை . உண்மையைச் சொல்லப்போனால் ஜன் லோக்பால் மூலமாக மற்ற பிரச்னைகளான இரோம் சர்மிளா , ஒரிசா போஸ்கோ , பழங்குடியினர் பிரச்னைகள் அதிக மக்களைச் சென்றடைந்திருக்கின்றன . மற்ற பிரச்னைகளை மக்கள் கவனிக்கவில்லை என்று சொல்பவர்கள் அதை அண்ணா ஹசாரே உண்ணாவிரத மேடையில் சொல்லியிருந்தால் அது எல்லோருக்கும் சென்று சேர்ந்திருக்குமே , அதைச் செய்யாமல் எல்லோரும் ஒவ்வொரு மூலையிலிருந்து எதிர்ப்புக் குரல் மட்டுமே கொடுத்தார்கள் .எப்போதும் போல்  எதையும் செயல் படுத்தாமல் பேசிக்கொண்டே இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு விட்டார்களோ என்னவோ !


 நம் சமூகத்தின் அடிப்படைப் பிரச்னை "தனிமனித ஒழுக்கம்" தான் ,சட்டங்கள் அல்ல . தனிமனித ஒழுக்கம் இல்லாதவரையில் எந்தச் சட்டங்களாலும் எந்தப்பயனும் இல்லை .தனிமனித ஒழுக்கத்திற்கு சமீபத்திய மிகச் சிறந்த உதாரணம் , ஜப்பான் மக்கள் . ஜப்பான் மக்களைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது . அவ்வளவு பெரிய பேரழிவு நிகழ்ந்தபோதும் அமைதியாக நேர்மையான வழியில் நடந்து கொண்டனர் . திறந்து கிடந்த கடையில் யாரும் திருடவில்லை , அமைதியாக வரிசையில் நின்று பொருட்கள் வாங்கினர் . சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களில்  கிடந்த பணத்தை எடுத்து தொடர்ந்து அரசுக்கு செலுத்தி வருகின்றனர் . இதுவரை 800 கோடிக்கும் அதிகமான பணம் அரசிடம் சேர்க்கப்பட்டிருக்கிறது . இவை எப்போதும் இந்தியாவில்  சாத்தியமில்லை . காரணம் ?

நாம் இன்று செய்ய வேண்டியது தனிமனித ஒழுக்கத்தை இந்தியச் சமூகத்தில் பரவச் செய்வது மட்டுமே . போராட்டத்தில் கலந்து கொள்ளும் எல்லோரும் எதோ ஒரு வகையில் லஞ்சத்திற்கும் , ஊழலுக்கும் துணை போனவர்கள் தான் .தனி மனிதனாக நாம் நிறைய விசயங்களிடம் தொடர்ந்து தோற்றுக்கொண்டே தான் இருக்கிறோம். பிளாஸ்டிக்கிடம் தோற்கிறோம் , காலத்திடம் தோற்கிறோம், இயற்கையை ரசிக்க மறக்கிறோம் , உடலிடம் தோற்கிறோம் , உணவிடம் தோற்கிறோம் . இவ்வளவு விசயங்களில் தோற்றாலும் மீண்டும் அவற்றை வெற்றிக்கொள்ள தொடர்ந்து போராட வேண்டியிள்ளது .

இந்தியாவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களின் மிகப் பெரிய எதிரி " உலகமயமாக்கல் " மட்டுமே . உலகமயமாக்கல் , நம்மை நாமாக பார்க்க அனுமதிக்காமல் மற்றவர்களுடன் பொருத்திப் (Comparison) பார்க்கவே செய்கிறது .மற்றவர்கள் போல் இருக்க நாம் தினமும் தூண்டப்படுகிறோம் . நம் சுயத்தை இழக்கிறோம் . நம்மை நினைத்து நாம் பெருமைப் படுவதற்குப் பதிலாக , மற்றவர்களைச் கவனிக்கச் செய்து நம்மை கவலைப்பட வைப்பது தான் உலகமயமாக்கலின் தந்திரம் . முக அழகு கிரீம் , முடி வளர , முடி கொட்டாமல் இருக்க,ஒல்லியாக ,குண்டாக  என்று விதவிதமான குப்பைகளை  நம் தலையில் கட்டுகிறார்கள் . நாம் உணவுக்குச்  செலவு செய்வதை விட நம் ஆடம்பரத்துக்கு அதிகம் செலவழிக்கிறோம் . கடன் வாங்கியாவது நம் ஆடம்பரத்தை நிலை நாட்டுகிறோம் .

பழங்குடியினர் பிரச்னை, ஒரிசா போஸ்கோ பிரச்னை என்று பல பிரச்னைகளுக்கு உலகமயமாக்கல் தான் காரணம் . உலகமயமாக்கலால் மற்ற நாடுகள்  சூடு பட்ட நிலையிலும் தற்போதைய காங்கிரஸ் அரசு , உலகமயமாக்கலின் உதவியுடன் இந்தியாவை மற்றவர்களின் அடிமை தேசமாக மாற்றவே தொடர்ந்து முயல்கிறது . 

 தொடர்ந்து பெரிய முதலாளிகளை வளர்ப்பது ,சிறிய முதலாளிகளைப் அழிப்பது , இயற்கை வளங்களை அழிப்பது , விவசாயத்தைக் கெடுப்பது , பூமியின் சுற்றுச்சூழலைப் பெருமளவு பாதிப்பது , பணத்தை ஒரே இடத்தில் சேர்ப்பது , பணக்காரனுக்கும் ஏழைக்கும் உள்ள வித்தியாசத்தை தாறுமாறாக உயர்த்துவது , ஒட்டுமொத்தப்  பொருளாதாரமே ஒருசிலரை நம்பி இருப்பது ,கலாச்சார அடையாளங்களை அழிப்பது ,எல்லோரையும் நோயாளிகளாக்குவது ,   இவை தான் உலகமயமாக்களின் சாதனைகள் .

தனிமனித ஒழுக்கமும், உலகமயமாக்கலும் தான் நமது பெரிய பிரச்னைகள் !

நமக்கு நடக்காத வரை எல்லாமும் வேடிக்கை தான் !

மேலும் படிக்க :


.......................................................................................


Wednesday, August 17, 2011

காங்கிரஸை அழிப்போம் !

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம் . விவசாயத்தை முதுகெலும்பாகக் கொண்ட நம் பொருளாதரத்தை வணிகமயமாக மாற்றியதன் விளைவு தான் இது . வழக்கமான உணவுப் பொருட்களை பயிரிட்டு வந்த விவசாயிகளை, பணப்பயிர்களை பயிரிட அரசு ஊக்குவித்தது.  வழக்கமான பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு, அந்த விளைபொருட்கள் விற்காவிட்டாலும், அந்த உணவு தானியங்களை வைத்து பட்டினியை தவிர்க்க முடிந்தது.  ஆனால், பருத்தி ,மக்காச்சோளம் ,சூரியகாந்தி போன்ற பணப்பயிர்களை பயிரிட்டு, உரிய விலை கிடைக்காத விவசாயிகள், கடும் வறுமையில் சிக்கி, தற்கொலையை நோக்கி தள்ளப் பட்டிருக்கிறார்கள்.

வனத்தை தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் மலைவாழ் மக்களை அப்புறப்படுத்துகிறார்கள் . எதற்காக என்றால் அங்கு இருக்கும் கனிம வளத்தைத் தோண்டி எடுக்க . இயற்கை வளத்தையும் அழித்து , மக்களையும் அப்புறப்படுத்தி பணமுதலைகளுக்கு விற்பதை வளர்ச்சி என்று சொல்கிறார்கள் . பாஸ்கோ நிறுவனம் ஒரிசாவை அழிக்கப் பார்க்கிறது . இப்படியே போனால் ஒவ்வொரு மாநிலத்தையும்  ஒவ்வொரு நிறுவனத்திற்கு விற்றுவிடுவார்கள் . அவர்கள் இந்தியாவைச் சுரண்டி இந்தியாவை குப்பைத்தொட்டி  ஆக்கிவிட்டு பணத்தை எண்ணிக்கொண்டு போய்விடுவார்கள் . இளிச்சவாயர்கள் நாம் மட்டும் தான் . 

உண்மையில் கறை படிந்த கட்சி காங்கிரஸ் தான் . சாதாரண கறை அல்ல ரத்தக்கறை . விவசாயிகளின் ரத்தம் , மலைவாழ்மக்களின் ரத்தம் ,ஈழத் தமிழர்களின் ரத்தம் , தற்போது ஒரிசா மக்களின் ரத்தம் என்று ரத்தத்தைக்  குடித்து உயிர் வாழ்கிறது காங்கிரஸ் . இலங்கையில்  " இறுதி கட்டப்போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது உண்மை தான் " என்று இலங்கை அரசே ஒப்புக்கொண்டுவிட்ட நிலையிலும் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு எதுவும் சொல்லாமல் மவுனமாக  இருக்கிறது .இந்த மவுனத்தின் மூலம் போரை நடத்தியது இலங்கை அல்ல நாங்கள் தான் என்று இன்றைய காங்கிரஸ் அரசு ஒப்புக்கொண்டு விட்டது .காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரதமர் கொல்லப்பட்டதற்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்களைக் கொன்று விட்டனர் . இது போதாது என்று இன்னும் மூவரையும் தூக்கிலிட்டு கொல்ல நினைக்கிறது காங்கிரஸ் அரசு . காங்கிரசின் ரத்த வெறி இன்னும் அடங்கவில்லை .

காங்கிரஸ் ஆட்சியில் பெருமுதலாளிகள் மட்டுமே பிழைக்க முடியும் , வளர முடியும் . சாதாரண மக்கள் வளரவே முடியாது  . பெரும் முதலாளிகளை வளர வைக்க எது வேண்டுமானாலும் செய்வார்கள் . நமக்கு எதுவும் செய்யமாட்டார்கள் .காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொடுக்கும் பேட்டியைப் பார்த்தால்  நம்மைக் கேலிப்பொருளாக மட்டுமே பார்ப்பது புரியும் . பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒரு பொம்மை சொல்கிறது " உண்ணாவிரதத்தால் ஊழலை ஒழிக்க முடியாது " என்று . வேறு எப்படி ஒழிப்பது .ஆயுதம் எடுத்தா ? நாங்கள் " ஓட்டு " என்னும் ஆயுதத்தை எடுத்துவிட்டோம்  உங்களை ஒழிப்பதற்கு . ஒழிக்காமல் ஓய மாட்டோம் . நமது சுதந்திரமே உண்ணாவிரதத்தால்தானே கிடைத்தது .

 இந்த நிலையில் தொடர் சில்லறை  வணிக கடைகள் தொடங்குவதற்கு 51 % அந்நிய முதலீட்டை அனுமதிக்க இருக்கிறது . இதன் மூலம் விலைவாசி குறையும் என்று அரசு சொல்கிறது . ஆனால் அப்படி நடக்காது . நாடு முழுவதும் உள்ள விவசாயிகளும் ,சிறுவணிகர்களும் அழிக்கப்படுவார்கள் .நாட்டில்  சிறுமுதலாளிகள் இருக்க மாட்டார்கள் .அந்நிய நிறுவனங்களின்  தொழிலாளிகளாக மாற்றப்படுவார்கள்  .சீனத் தயாரிப்புகள் மலிவான விலையில் கிடைக்கும் .லாபம் அமெரிக்காவுக்குச் சென்றுவிடும் .நம் பொருளாதாரம் அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சார்ந்ததாக மாறிவிடும் .அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் நமது பொருளாதாரமும் இப்போது பாதிக்கப்படுவதை விட அதிகளவு  பாதிக்கும் .நாமெல்லாம் பிச்சைக்காரர்களாகவும் ,அடிமைகளாகவும் மாற்றப்படுவோம் .இவற்றில் எதையும் உணரும் மனநிலையில் தற்போதைய  காங்கிரஸ் அரசு இல்லை .

 சர்க்கரைநோய் , இதயநோய் , எயிட்ஸ் ,புற்றுநோய் அதிகம் உள்ள தேசமாக இந்தியா மாறிப்போய் விட்டது . இவற்றைத் தடுப்பதற்கோ ,குறைப்பதற்கோ ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை . போலி மருந்து , மாத்திரைகளும் , மற்ற நாடுகளில் தடை செய்யப்பட மருத்துகளும் இந்தியாவில்  தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன . பெரிய மருத்துவமனைகள் பணத்தைக் குறி வைத்தே இயங்குகின்றன . இவர்களுக்கு எந்தக்கட்டுப்பாடும் இல்லை. 

121 கோடி மக்கள் இருந்தும் ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்லவே போராட வேண்டியிருக்கிறது . ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுக்கு என்று ஒதுக்கப்படும் நிதி எங்கே போகிறது .

நம் மக்கள்தொகையில் 30 % அதிகமானவர்கள் ஒரு வேளை உணவுக்கே போராடும் நிலை தான் இன்றும் உள்ளது .எத்தனையோ நோய்கள் உலகில் இருந்தாலும் பசியால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கை இன்றும்அதிகம் . உலகில் பசியால் வாடும் மூவரில் ஒருவர் இந்தியர் (http://www.bhookh.com/) . ஆனால் உலகப் பெரும்பணக்காரர்களில்  முதல் பத்தில் மூவர் இந்தியாவில் தான் உள்ளனர் . என்ன கொடுமை இது ? எவ்வளவு பெரிய பொருளாதார வேறுபாடு . எங்கெல்லாம் இந்தப் பொருளாதார வேறுபாடு குறைவாக இருக்கிறதோ அங்கெல்லாம் நல்லாட்சி நடக்கிறது . எங்கெல்லாம் இந்தப் பொருளாதார வேறுபாடு அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நல்லாட்சி நடக்கவில்லை . கண்டிப்பாக இந்தியாவில் நடப்பது நல்லாட்சி அல்ல கொல்லாட்சி .

தேசியக்கொடியின் நிறங்களை காங்கிரஸ் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் . தேசிய கொடியின் நிறங்களில் இரண்டை மட்டுமே மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் . 

மனசாட்சி உள்ள எந்த மனிதனும் காங்கிரஸ் கட்சியில்  இருக்கமாட்டான் . ஏனென்றால் உண்மையான காங்கிரஸ் காமராஜர் செத்த போதே செத்துவிட்டது  . உண்மையான  காங்கிரஸ்காரர் யாரும் இன்று  காங்கிரஸில் இல்லை. காங்கிரஸ் இந்தியாவை ஆட்சி செய்யும் வரை நான் இந்தியன் என்று சொல்லவே வெட்கப்படுகிறேன் . உள்ளாட்சித்  தேர்தல் , சட்டமன்றத்  தேர்தல் , நாடாளுமன்றத்  தேர்தல் என்று எந்தத் தேர்தலாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போட வேண்டாம் .வேறு யாருக்கு வேண்டுமானாலும் போடுங்கள் . தன் தலையில் தானே தீ வைத்துக்கொள்ள விரும்புவர்கள் மட்டும் மனசாட்சியே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு உங்கள் பொன்னான ஒட்டைப்போடுங்கள் .

 இந்தியா இன்றும் அடிமை தேசம் தான் . அன்று அந்நியர்கள் நேரடியாக ஆண்டார்கள் .இன்று ,  காங்கிரஸ் உதவியுடன் மறைமுகமாக ஆள்கிறார்கள் . என்று இந்த போலியான காங்கிரஸ் அழிகிறதோ அன்று தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் !

போலியான காங்கிரஸ் அழியட்டும் ! 

இந்தியா சுதந்திரம் பெறட்டும் !

மேலும் படிக்க :



................................................... 

Monday, July 25, 2011

வாழ்க்கை ஒரு போராட்டம் !

போராட்டத்தைச் சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது . நாம் பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்துகொண்டே தான் இருக்கிறது . ஏன் நாம் பிறப்பதே ஒரு போராட்டம் தானே . லட்சக்கணக்கான விந்தணுக்களுடன் சண்டையிட்டு , போராடி தான் நமக்கான இருப்பை , பிறப்பை உறுதி செய்துள்ளோம் .போராட்டத்தில் பிறந்து , போராட்டத்தில் வளர்ந்து , போராட்டத்தில் மடிவது தான் நம் வாழ்க்கை . நாம் இன்று போராட்டமே  இல்லாத வாழ்க்கையை மட்டுமே வாழ நினைக்கிறோம் . இது எப்போதும் சாத்தியமில்லை . பிறப்பதற்கே  லட்சக்கணக்கான அணுக்களை வென்ற நம்மால் வாழ்வதற்கான  போராட்டத்தில் வெல்ல முடியாதா என்ன ?!

வீதியில் நின்று போராடுவதும் , நாட்டுக்காக போராடுவதும் மட்டும் போராட்டம்   அல்ல . உயிர் வாழ்வதற்கான போராட்டம் தான் உண்மையான போராட்டம் . இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும் .கடந்த வாரம் Discovery யில் ஒரு நிகழ்வை ஒளிபரப்பினார்கள் . அலாஸ்காவில் வாழும் பனிக்கரடிகளையும் , சாலமன் மீன்களைப் பற்றிய ஒளிபரப்பு அது . பனி காலம் முடிந்த நிலையில் தங்களுக்கு வேண்டிய ( பிடித்தமான ) உணவைப்பெற நதிக்கரைக்கு வருகின்றன கரடிகள் . சாலமன் மீன்கள் , கரடிகள் இருக்கும் இந்த நதிப்பகுதியைக் கடந்தால் தான் தங்களது இனப்பெருக்கத்தை நடத்த முடியும் . இல்லையென்றால் கரடிகளுக்கு உணவாக வேண்டியது தான் . 

ஒரே நதிக்கரை இரண்டு இனங்களின் வாழ்க்கைப் போராட்டம் . கரடிகள் வருகின்றன மீன்களைப் பிடிக்கின்றன , பனிக்காலத்திற்கு வேண்டிய கொழுப்பைச் சேமிக்கின்றன . குட்டிகளுடன் வரும் பெண் கரடிகள் , குட்டிகளை ஒளித்து வைத்துவிட்டு ஆண் கரடிகள் இல்லாத இடத்தில் சாலமன் மீன்களை தனக்காகவும் , தன் குட்டிகளுக்காகவும் வேட்டையாடுகின்றன . ஆண் கரடி பார்த்து விட்டால் உறவுக்கு கட்டாயப் படுத்தும் . இடையுறாக இருக்கும் குட்டிகளையும் கொன்று விடும் . அதனால் பெண் கரடிகள், மிகவும் எச்சரிக்கையாக  இருக்க வேண்டிய காலகட்டம் இது . கரடிகளிடமிருந்து தப்பித்த சாலமன் மீன்கள் உகந்த இடத்திற்குச் சென்று  தங்கள் இனப்பெருக்கதைச் செய்கின்றன . பெண் மீன், தன் வால் பகுதியால் பள்ளம் தோண்டி  முட்டையிடுகிறது . ஆண் மீன், முட்டைகளின்  மீது  விந்துவைப் பீய்ச்சி அடிக்கிறது . உரிமையில்லாத மற்றொரு ஆண் மீனும் முட்டைகளின்  மீது விந்துவைப் பீய்ச்சி அடிக்கிறது . கொஞ்ச காலம் அடை காக்கும் பெண் மீன் பிறகு இறந்து விடுகிறது . பிறகு முட்டைகளிலிருந்து குஞ்சுகள் பிறந்து தங்கள் போராட்டத்தைத் தொடருகின்றன .

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான் . நேர்மையாக இல்லாமல் இருப்பதும் ஒரு போராட்டம் தான் . ஏனென்றால் எல்லா நேரங்களிலும் நேர்மையாக இருப்பதற்கான சூழலும் , எல்லா நேரங்களிலும் நேர்மையாக இல்லாமல் இருப்பதற்க்கான சூழலும் யாருக்கும் அமைவதில்லை .தங்கள் கொள்கைகளை நிலைநிறுத்திக்கொள்ள போராட வேண்டிய கட்டாயம் இருக்கிறது . அதற்கான பலன்கள் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் அவர்கள் மட்டுமே அடைவர் . உண்மைக்காக , நீதிக்காக , நேர்மைக்காக , உரிமைக்காக,மண்ணுக்காக  என்று நாம் போராட வேண்டியுள்ளது .

சமீபத்தில் இங்கிலாந்தில் 11 வயதில் கடத்தப்பட்டு ஒருவனிடம்  16 ஆண்டுகளாக செக்ஸ் அடிமையாக இருந்து மீட்கப்பட்ட  பெண்ணிடம் , "எப்படி இவ்வளவு கொடுமைகளையும் சகித்து கொண்டீர்கள் ? " என்று கேட்டதற்கு " எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்ற நினைப்பு தான் காரணம் . அவ்வப்போது நான் இருக்கும் கொடுமையான சூழ்நிலையை மறந்து விடுவேன் " என்று கூறினார் . இத்தனைக்கும் சரியான உணவு கிடையாது . 14 வயதிலேயே தனது பிரசவத்தை  தானே பார்த்துக்கொண்ட கொடுமை வேறு . தன் குழந்தை தனக்கு மிகவும் ஆறுதலாக இருந்ததாகவும் குறிப்பிட்டார் . மறதி தான் ,நம் வாழ்கையின் பெரும் துயர்களை மறக்கச் செய்கிறது .எத்தனையோ போராட்டங்கள் இருந்தாலும் உயிர் வாழ்வதற்கான போராட்டம் ,மற்ற அனைத்து போராட்டங்களையும் வென்று விடுகிறது .

நல்லதை நினைத்தே போராடுவோம் !



முகப்பு 


...............................................................................................

Monday, July 11, 2011

இன்று தெற்கு சூடான் , நாளை தமிழ் ஈழம் ...!

ஜூலை 9 ஆம் நாள் தெற்கு சூடான் தனி நாடாக உதயமாகியுள்ளது . 50 ஆண்டு காலப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது . யாரும் யாரையும் அதிக காலம் அடக்கியாள முடியாது . எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் போராட்டம் வெடிக்கும் என்பது வரலாறு . இதற்கு தெற்கு சூடானும் விதிவிலக்கல்ல,  தமிழ் ஈழமும் விதிவிலக்கல்ல . சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க தெற்கு சூடான் கொடுத்த விலை "20 இலட்சம் மனித உயிர்களும் 50 வருட நிம்மதியும் ". தங்கம் , வைரம் போன்ற கனிம வளங்களும் , விவசாயம் செய்வதற்கு மிகச்சிறந்த சூழ்நிலையும் தெற்கு சூடானுக்கு கிடைத்துள்ளது . புதிய ஆட்சியாளர்கள் கையில் உள்ளது தெற்கு சூடானின் எதிர்காலம். 

மனிதனால் மனிதன் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கும் அனைவரும் துரோகிகள் தான் . இந்த துரோகிகள் பட்டியலில் அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் வரும் . இலங்கை ஒரு எண்ணெய் வளம் மிக்க நாடாக இருந்திருந்தால் அமெரிக்காவின் நிலையே வேறுவிதமாக இருந்திருக்கும் . நம் இனம் அழிக்கப்படுவதை வேடிக்கை பார்த்த தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாமெல்லாம் இனத்துரோகிகள் . நமக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது .

ஈழத்தின் இன்றைய நிலை மிகவும் கொடியது . போரை விட போருக்குப் பிறகான வாழ்க்கை தான் மிகக் கொடியது என்பது வரலாறு .ஈழப் போரில் இறந்த மாவீரர்களை விட அதிக துன்பங்களை இன்று எஞ்சியிருக்கும் நம் இனம் சந்திக்கிறது . மண்,உடைமை , உரிமை ,உறவுகள் , உறுப்புகள் , மானம் , சுதந்திரம்,என்று அனைத்தையும் இழந்து இனி இழப்பதற்க்கு எதுவுமில்லை என்ற நிலையில் தான் இருக்கிறது நம் இனம் . தினமும் துன்பங்களும் துயரங்களும் மட்டுமே மிஞ்சி இருக்கிறது . சொந்த மண்ணில்  எந்தவித உரிமைகளும் இல்லாமல் வாழ்வது மிகவும் கொடுமை . இந்நிலை நிச்சயம் மாறும் .

இந்தச்சூழ்நிலையில் ஒரே ஆறுதல் தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகள் . ராஜபக்சேவை கூண்டில் ஏற்றவும் , இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டுவரவும் கொண்டுவரப்பட்ட தீர்மானம் சிறந்த ஒன்று . ஈழத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் வாழ்ந்து வரும் நம் இனம் இதுவரை சிந்திய கண்ணீரும் துடைக்கப்பட இருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி .தமிழகத்தில் உள்ள  ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் இனி அனைத்து  உரிமைகளும் கிடைக்கும் . மேற்கத்திய நாடுகள் நம் நலனில் அக்கறை கொண்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது . அனைத்து நாடுகளின் கவனத்தையும்
நாம் பெற வேண்டும் .

மனிதனால் மனிதன் கொல்லப்படுவதை தடுக்கவே  முடியாதா ? மனிதன் என்று அடுத்தவன் உடைமைக்காக சண்டை போட ஆரம்பித்தானோ அன்றே மனிதனால் மனிதன் இறப்பது நிகழ்ந்து இருக்க வேண்டும் . காடுகளில் வாழ்ந்த போது அடுத்த மனிதன் வேட்டையாடிய உணவைப் பறிக்கவும் , அடுத்தவனின் பெண் துணையைப் அடையவும் , பிறகு மன்னராட்சி காலங்களில் மற்ற நாடுகளின் செல்வங்களைக் கொள்ளையடிக்கவும் , நாட்டை விரிவு படுத்தவும் , தன் பலத்தை நிருப்பிக்கவும் என்று மனிதனால் மனிதன் கொல்லப்படுவது தொடர்ந்து கொண்டே வந்தது . இன்றைய இயந்திர வாழ்க்கையில் நம் மனமும் கல்லாகிப் போனது . சக மனிதன் கொல்லப்படுவது இன்று மிகவும் சாதாரணம் . நம்மை ஆளும் உலக அரசுகளும் , ஊடகங்களும் மனிதனால் மனிதன் கொல்லப்படுவதை தடுக்கவே இல்லை . மாறாக இன்றும் போர் என்ற பெயரில் நிறைய மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள் . தீவிரவாதிகள் தங்களின் பலத்தைக் காட்ட பயன்படுத்துவது மனித உயிர்களைத்தான் . மனித உயிர்கள் மட்டுமல்ல மற்ற உயிரினங்களும் கொல்லப்படுவது நம் வாழும் பூமிக்கு நல்லதல்ல . நம் பூமி எல்லோருக்கும் சொந்தம் !

மனித இனம் என்பதிலிருந்து பிரிந்த இனங்களின் எண்ணிக்கை மிக அதிகம் . வாழும் சூழ்நிலை  , உணவு, கலாச்சாரம் , பண்பாடு ,மதம் , முக்கியமாக மொழி இவற்றை மையமாக வைத்து பல்வேறு மனித இனங்கள் இன்று எஞ்சியிருக்கின்றன . பல இனங்கள் அழிந்து விட்டன . நாம் எல்லோரும் ஆப்பிரிக்காவில்  இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது . இன்று எஞ்சியிருக்கும்
இனங்களில் ஒன்று தமிழினம் ( முன்பு , திராவிட இனம் ). இந்த இனம் தமிழ் மொழி பேசும் ஆனால் தமிழினம் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கும் . அழிக்க முடியாத களங்கம்  இது . ஆனாலும்  "வலுத்தது நிலைக்கும்" என்பது போல இன்றும் நிலைத்து நிற்கிறது . இனியும் நிற்கும் . 

சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை உயிர்த்து எழுமாமே அது போல நம் தமிழ் ஈழமும் உயிர்த்து எழும் . எத்தனை முறை அழித்தாலும் மீண்டும் மீண்டும் எழும் . காலத்தை நான் மிகவும் நேசிக்கிறேன் . காரணம் ,
காலம்தான் நம் வாழ்க்கையின் ஆற்ற முடியாத அத்தனை துயரங்களையும் , ரணங்களையும் ஆற்றுகிறது .நமது துயரையும் நிச்சயம் ஆற்றும் . யாரும் யாரையும் நீண்ட காலம் அடக்கியாள முடியாது .

தமிழக சட்டமன்றத்தில் தமிழ் ஈழம் மலர தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் .இலங்கையில் ஈழம் அமைய  வாக்கெடுப்பு நடத்த தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும் . ஈழம் அமைவதில் மிகவும் கொஞ்சப் பேருக்கு விருப்பம் இல்லை . அவர்கள் பல்வேறு விதமான காரணம் சொல்கிறார்கள் . அதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை . கூட்டுக்குடும்பம் நல்லது தான் அதனால் அனைவரும் நலமாக இருக்கும்வரை . நலன்கள் பாதிக்கப்படும் போது தனிக்குடும்பமே சிறந்தது . இது குடும்பத்துக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பொருந்தும் .

இலங்கையில் அழிக்கப்பட்டது தமிழினம் மட்டும் அல்ல , மனித இனமும் தான் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்த வேண்டும் . இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின்
ஆதரவையும் பெற வேண்டும் . ஒட்டுமொத்த உலகமும் தமிழ் ஈழம் அமைய குரல் கொடுக்கும் வகையில் நம் செயல்பாடுகள் அமைய வேண்டும் .வாக்கெடுப்பு நடத்த வேண்டும் . தமிழ் ஈழம் மலர வேண்டும் .

ஈழத்தில் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் நாள் தொலைவில் இல்லை !


மேலும் படிக்க:

 முகப்பு 

 காங்கிரஸை அழிப்போம் !
...............................

Monday, July 4, 2011

அற்புதங்களும் ஆச்சரியங்களும் !

எண்ணிலடங்காத அற்புதங்களும் ஆச்சரியங்களும் நிறைந்தது தான் நம் வாழ்க்கை . ஒவ்வொரு நொடியும் அற்புதம் தான் . நம் வாழ்க்கை, மீண்டும் சந்திக்க முடியாத நிமிடங்களில் அடங்கியிருக்கிறது . ஆனால் , இதை எல்லா நேரங்களிலும் உணர முடியாத நிலையில் தான் நம் பயணம் இருக்கிறது . நம்மைச்சுற்றி தினமும் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்திய ஆச்சரியம் பத்மநாபசாமி கோவில் .

அனந்த பத்மநாபசாமி கோவில் , கேரளாவில் புகழ்பெற்ற விஷ்ணு கோவில் .இது , விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று . இதுவரை இந்தக் கோவிலைப்பற்றி தெரியாதவர்கள் கூட இப்போது தெரிந்து கொண்டிருப்பர் . புதையலைத் தேடி அலையும் பல கௌ-பாய் படங்கள் பார்த்திருப்போம் . அதையெல்லாம் மிஞ்சும் வகையில் இருக்கிறது இந்தக்கோவிலின் பாதாளப் புதையல் . அள்ள அள்ள தங்கம் . ஓரே வாரத்தில் உலகின் பணக்கார கடவுளான திருப்பதி பாலாஜியின் சொத்து மதிப்பை மிஞ்சி விட்டார் இந்த பத்மநாபசாமி.
அந்தப் பாதாள அறையில் இறுதி 8 இடங்களுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது  . இன்னும் எவ்வளவு அதிசயங்கள் வெளியே வருமோ ? தெரியாது . 
இன்றும் தஞ்சை பெரிய கோவிலின் அதிசயங்கள்  தொடர்ந்து கொண்டிருக்கின்றன . நம் முன்னோர்களின் திறமையைக் கண்டு ஒவ்வொரு நாளும் பெருமை கொள்கிறோம் . எந்தவிதமான தொழில்நுட்ப வசதியும் இல்லாத  காலகட்டத்தில் அவர்களால் இவ்வளவையும் செய்ய முடிந்திருக்கிறது . வாழ்க்கையைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் . அடுத்த வாரமே இன்னொரு கோவில் முதலிடத்தைப் பிடித்தாலும் பிடிக்கலாம் .

வரலாறு மிகவும் சுவாரசியமானது . நாம் இன்று பயன்படுத்தும் அநேக பொருட்கள்  கடந்த 100 வருடங்களுக்குள் கண்டுபிடிக்கப் பட்டவையாக இருக்கும் . அடுத்த 100 வருடங்கள் கழித்து இவை கண்டிப்பாக இருக்காது . ஆனால் , ஒரு சில பொருட்கள் காலம் கடந்தும் தனக்கான இடத்தைப் பெற்றுக்கொள்ளும் . அந்தப் பொருட்களின் நீட்சி தான் வரலாறாக மாறுகிறதோ என்னவோ ! . மண்ணோடு மண்ணாக கலந்துவிட்ட பொருட்களுக்கு வரலாறு இல்லை . 

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்  கொண்டாடப்பட வேண்டியது . ஆனால் , நமக்கு அந்த கொண்டாட்ட மனநிலை தொடர்ந்து வாய்ப்பதில்லை . நம் நாகரீக வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டாட்ட மனநிலையில் இருப்பது மிகவும் கடினம் . நாகரீகம் தோன்றாத காலத்தில் இந்த கொண்டாட்ட மனநிலை அதிகமாக இருந்து இருக்கும் . நாகரீகம் தோன்றியவுடன் பிரிவினைகள் அதிகமாகி விட்டன . வலுத்தவன் மட்டுமே எல்லா நலன்களையும் பெற்றான் . மன்னர் ஆட்சிக்காலத்தில் மன்னர்களுக்கு மட்டுமே அதிகபட்ச சுதந்திரம் இருந்தது . ஜனநாயக ஆட்சியில் மக்களாகிய நமக்குத்தான் அதிக உரிமை இருக்க வேண்டும் . ஆனால் , உண்மையில் நிலைமை  அப்படியில்லை . இன்றும் ஏறக்குறைய மன்னராட்சி போலவே இருக்கிறது நம் ஜனநாயகம் . ஒருவேளை இது மன்னராட்சியின் நீட்சியாக இருக்குமோ !

நம் வாழ்க்கை ஆச்சரியங்கள் நிறைந்தது . நம் சற்றும் எதிர்பாராத சூழ்நிலையில்  நமக்குப்பிடித்த விசயம் நிகழும் போது நம் மனம் துள்ளிக் குதிக்கிறது . உதாரணமாக, அசாதாரண சூழ்நிலையில்  நமக்கு மிகவும் பிடித்த , நீண்ட நாட்களாக கேட்க வேண்டும் என்று எண்ணிய ஒரு பாடல் ஒலிக்கும் போது நம்மை அறியாமலேயே நாம் கொண்டாட்ட மனநிலைக்கு இடம் பெயர்ந்து  விடுகிறோம் . வாழ்க்கை ஒரு முறை தான் . அதனால் , முடிந்த அளவுக்கு  வாழ்க்கையைக் கொண்டாடுவோம்.

அடுத்த நொடி இந்த உலகம் தரப்போகின்ற  அற்புதங்களும் ஆச்சரியங்களும் ஏராளம் !

மேலும் படிக்க  :



..........................................

ஜூலை 2011 - 823 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பது பொய் !

இந்த ஜூலை ( 2011 ) மாதத்தில் 5 வெள்ளி , 5 சனி , 5 ஞாயிறு கிழமைகள் வருகின்றன .இது , 823  ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும் என்பது சுத்தப் பொய் . ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு  பிறகும் இவ்வாறு வருகிறது . இதே மாதிரியான ஜூலை 2005 ஆம் ஆண்டு வந்தது , அடுத்து  ஜூலை 2016 ஆம் ஆண்டு இதே போன்ற ஜூலை வரவுள்ளது . பொதுவாக எந்த மாதத்தில் 31 நாட்கள் வருகின்றனவோ அந்த மாதத்தில் அடுத்தடுத்த 3 நாட்கள் 5 முறை  வரும் . இதில் எந்த அதிசயமும் இல்லை .

ஜூலை 2005 :



ஜூலை 2016 :


நாட்காட்டி 2011 :


உதாரணமாக 2011 நாட்காட்டியைப் பாருங்கள் . எந்த மாதத்தில் எல்லாம் 31 நாட்கள் இருக்கின்றதோ அந்த மாதத்தில் அடுத்தடுத்த 3 நாட்கள் 5 முறை வருவதைக் காணமுடியும் .

மேலும் படிக்க :

முகப்பு 

................................................

Saturday, June 25, 2011

செல்போன் சேவை நிறுவனங்களின் பகல் கொள்ளை !

பலவிதமான கொள்ளைக்காரர்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . நாளுக்கு நாள் இவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது . ஒருவேளை 2012 ல் உலகம் அழிந்து விடுமோ ?  தெரியாது . அரசியல் கொ.கா. , ஆன்மீக கொ.கா.,இயற்கை கொ.கா., உலகமயமாக்கல் கொ.கா., பதுக்கல் கொ.கா. என்று பல கொ.கா. நம்மிடையே உலவுகிறார்கள் . இதில் செல்போன் சேவை நிறுவனங்களும் அடக்கம் . இவர்களுக்காகவே  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 60 ஆண்டுகளுக்கு முன்பே  இந்தப் பாடலை ( "குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா _ இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்திருட்டு உலகமடா _ தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்திருந்த மருந்து சொல்லடா ( http://jselvaraj.blogspot.com/2011/04/blog-post_27.html) " )  எழுதியுள்ளார் .

பெட்ரோலோ , டீசலோ , பஸ் டிக்கெட்டோ ஒரு ரூபாய் ஏறினால் கூட குதி குதி என்று குதிக்கும் நாம் , செல்போன் சேவை நிறுவனங்கள் ஓசையில்லாமல் கூட்டிய 4 முதல் 5 ரூபாயை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு விட்டோம் . முன்பு 50 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால் 43 அல்லது  42 ரூபாய் ஏறும் . ஆனால் தற்போது 50 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால் 39 அல்லது  38 ரூபாய் மட்டுமே ஏறுகிறது . நம் செல்போனில் இருக்கும் 1 ரூபாயின்  மதிப்பு 1.31. ஒரு காலுக்கு 60 பைசா என்று சொல்லப்பட்டாலும் நாம் உண்மையில் செலவழிப்பது 78 பைசா . இது பகல் கொள்ளை தானே .

 மதிப்பு கூட்டு சேவை ( Value Added Services) என்ற பெயரில் இவர்கள் செய்யும் கொடுமை ஏராளம் . உங்கள் செல்போனில் 20 ரூபாய்க்கு மேல் இருந்தால் ஏதோ சர்வீசை  Telecommunication call மூலமாகவோ  , SMS மூலமாகவோ,Flash SMS மூலமாகவோ  உங்கள் தலையில் கட்டி மாதம் மாதம் உங்கள் பணத்தைச் சுரண்டி  விடுவர் . Telecommunication Call மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் அதிகம் . மிகவும் முக்கியமான வேலையில் இருக்கும் பொது இவர்களது call வரும் , முக்கியமான call ஆக இருக்குமோ என்று நினைத்து ஆன் செய்தால் " உங்களுக்கு எந்தப்பாடல் வேண்டும் என்று இயந்திரக் குரல் ஒலிக்கும் ". இதைவிடக் கொடுமை Flash SMS தான் , போனை ஆன் செய்யும்போதே நம் கணக்கில் இருந்து பணம் திருப்பட்டுவிடும் . இதுபோல் எனக்கு இரண்டுமுறை நிகழ்ந்துள்ளது . உண்மையில் Caller tone காக ஒரு மாதத்திற்கு எடுக்கப்படும் தொகை  ரூபாய் 30 , ஆனால் உண்மையில் நாம் செலவளிப்பது  40
 ரூபாய் . படித்தவர்களை விட செல்ல்போனைச்  சரியாக பயன்படுத்தத் தெரியாத பாமர மக்கள் தான் அதிகம் பாதிக்கப் படுகின்றனர் .

இதற்க்கெல்லாம் என்ன தான் தீர்வு ?

செல்போன், ஒரு எளிமையாக்கப்பட்ட ஒரு தொலைதொடர்பு கருவி அவ்வளவுதான் . பொதுவாக ஒரு பொருளின் விலை உயர்ந்தால் என்ன செய்வோம்  , பணம் அதிகம் இருப்பவர் கவலைப்பட மாட்டார்கள் . ஆனால் , நடுத்தரவர்க்கம் கவலைப்படும் . அந்தப்பொருளின் பயன்பாட்டைக் குறைக்க முயற்சி செய்யும் . அது போலத் தான் இதற்கும் . முடிந்தவரை செல்போனில் பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள் . உங்கள் பொன்னான நேரமும் மிச்சம் , உங்கள் பணமும் மிச்சம் ஒரு சில சிட்டுக்குருவிகளும் உயிர் பிழைக்கும் .

Customer Care கு போன் செய்து தற்போது ஏதேனும் சர்வீஸ் இருந்தால் அதை நீக்குங்கள் .தற்போது  ஒரே முறையில் சர்வீசை நீக்க மாட்டார்கள் .மீண்டும் மீண்டும் முயற்சி செய்துதான் நீக்க வேண்டியுள்ளது . 

இரண்டாவதாக Do Not Disturb சர்வீசை உறுதி செய்யுங்கள் . இதைச் செய்தால் உங்களுக்கு செல்போன் நிறுவங்களிடமிருந்து எந்தவிதமான ( Telecommunication call , SMS, Flash SMS ) தொல்லையும் இருக்காது . இவை தான் தற்காலிக தீர்வு . நிரந்தர தீர்வு என்பது செல்போனே பயன்படுத்தாமல் இருப்பது .Do Not Disturbகு 1909 முதலில் START 0(zero) என்று  SMS செய்யுங்கள் . பிறகு Y என்று அதே 1909 கு SMS செய்யுங்கள் . பிறகு அவர்கள் தொல்லை இருக்காது .

செல்போன் பயன்படுத்தினால் மூளை கேன்சர் வரும்( Cell phone causes brain cancer ) !

செல்போன் பயன்படுத்தினால் மூளை கேன்சர் வரும் என்பதை சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது . தொடர்ந்து செல்போனை பயன்படுத்தும் போது மூளை கேன்சரை உருவாக்குகிறது . பெரியவர்களை விட வயது 1 முதல்  12  வரை உள்ள குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் . காரணம் , அவர்களின் மண்டை ஓடு அந்த வயதில் முழு வளர்ச்சி பெற்று இருக்காது . அதனால் மின்காந்த அலைகள் ( Electro Magnet Waves) அவர்களை அதிகமாக பாதிக்கிறது .முடிந்த வரை  குழந்தைகளை செல்போன் பேச அனுமதிக்காதீர்கள் . 
மொத்தத்தில் முடிந்த அளவிற்கு செல்போன் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்வது தான் எல்லோருக்கும் நல்லது !

எல்லோருமே திருடர்கள் தான் !

மேலும் படிக்க :


.........................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms