Thursday, September 1, 2016

ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் !

ஒலிம்பிக் போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டாலும் உலக நாட்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் கவுரவம் மிக்க போட்டித் தொடராக இருக்கிறது. உலக நாடுகள் தங்களது வேற்றுமையை மறந்து ஒன்றாக போட்டிகளில் பங்கு பெறுகின்றன. பதக்கங்கள் வெல்வது மட்டுமல்ல,  ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட தகுதி பெறுவதே பெரும் கவுரவமாக இருக்கிறது.  போட்டிகளை ஏற்று நடத்துவதில்   கிடைக்கும கவுரவத்திற்காக உலக நாட்கள் போட்டி போடுகின்றன. பலத்த போட்டிகளுக்குப் பிறகே ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்தும் நகரம் (நாடு ) தேர்வாகிறது.

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதற்கு காரணம் எதுவாக இருந்தாலும் முதலில் பல்வேறுவிதமான இடர்பாடுகளுக்கிடையில் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக கலந்து கொண்டவர்களுக்கும், பதக்கங்கள் வென்ற சாக்ஷிக்கும் , சிந்துவிற்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வது நம் கடமையாகும்.

நமது கல்விமுறை மேம்படாதவரை அனைத்து துறைகளிலும் நம்மை நாமே குறை சொல்லிக்கொள்வது தொடரும்.இன்று நாம் நமது பிள்ளைகளை விளையாடக் கூட அனுமதிப்பதில்லை. பெரும்பாலான பள்ளிகளில் பெயரளவில் தான் விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றன. அப்படியே இருந்தாலும் பிள்ளைகள் போதிய அளவுக்கு விளையாட அனுமதிப்பதில்லை. அதுவும் பத்தாம் வகுப்பிலிருந்து சுத்தமாக அனுமதிக்கப்படுவதில்லை. கல்லூரிகளில் நிலைமை இன்னும் மோசம். பள்ளிகள் , மாணவ,  மாணவிகளின் மதிப்பெண்களை உயர்த்துவதில் மட்டுமே அக்கறை கொள்கின்றன. மற்ற திறமைகள் அங்கிகரிக்கப்படுவதில்லை.

ஒலிம்பிக்-ல் பதக்கம் வெல்பவர்களில் பெரும்பாலானோர் தங்களது 10 வயதிலேயே பயிற்சியைத் தொடங்கியவர்களாக இருப்பார்கள். இதற்கு இந்தியா சார்பில் பதக்கம் வென்ற சிந்துவும் , சாக்ஷியுமே சாட்சி. துரதிர்ஷ்டவசமாக பால்ய வயதிலேயே பிள்ளைகளின் விளையாட்டுத் திறமையைக் கண்டடையும் வாய்ப்போ , வசதியோ இந்தியாவில் இல்லை. இந்தியா அதிக பதக்கங்களை  வெல்லாததற்கு இதுவும் ஒரு காரணம். மிக அரிதாகவே  இந்தியக் குழந்தைகளின் விளையாட்டுத் திறமை பால்ய வயதில் கண்டறிப்படுகிறது. இந்நிலை மாறாதவரை பதக்கங்கள் எட்டாக்கனி தான்.

கல்விச்சீர்திருத்தம் குறித்து பரவலாக விவாதம் நடந்து கொண்டிருக்கும் சூழலில் பள்ளிக்கல்வியில் விளையாட்டிற்கு கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தையும் வரையறுக்க வேண்டும். படிப்படியாக விளையாட்டுகளுக்கான கட்டமைப்பை உருவாக்குவதுடன் , திறமையாளர்களை இளம்வயதிலேயே கண்டறிய வழிவகை செய்யவேண்டும். கண்டறியப்படும் திறமையாளர்கள், தொடர்ந்து பயிற்சி பெறுவதற்கு தேவையான வசதிகளைச் செய்து தருவதுடன் அவர்களின் பொருளாதாரப் பாதுகாப்பையும் இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இப்படி ஒரு நிலை ஏற்படும் போது இந்தியா ஒலிம்பிக் ல் பதக்கங்களைக் குவிக்கும்.  
கிரிக்கெட்டைத் தவிர மற்ற விளையாட்டுகளுக்கும் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  கிரிக்கெட் செய்திகளை மட்டும் முதன்மைப்படுத்திவிட்டு மற்ற விளையாட்டுகள் தொடர்பான செய்திகளை ஒதுக்கவோ , ஓரம்கட்டவோ கூடாது. இந்தியாவின் வளர்ச்சி , வீழ்ச்சி எதுவானாலும் நம் ஒவ்வொருவருக்கும் பங்கிருக்கிறது.

சாக்ஷியும் சிந்துவும் :

பிற்போக்குவாதிகளும் , ஆணாதிக்கவாதிகளும் , படித்த ஆணாதிக்கவாதிகளும் எண்ணிக்கையில் குறைவதற்கு பதிலாக அதிகரித்து வரும் சூழலில் இந்தப் பதக்கமங்கைகளின் வெற்றி அவர்களின் முகத்தில் அறைந்திருக்கிறது. காலங்காலமாக ஒடுக்கப்பட்டவர்களின் வெற்றியாகவே இதைப் பார்க்க முடிகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில் இந்த வெற்றி முக்கியத்துவம் பெறுகிறது.

ஆணாதிக்கவாதிகளே உங்களால் ஒரு பதக்கத்தைக் கூட வெல்ல முடியவில்லையே ! சிந்துவின் புகைப்படத்தையும் , சாக்ஷியின் புகைப்படத்தையும் இந்தியா முழுவதும் தெருத்தெருவாக ஒட்டி வைக்க வேண்டும். இவர்களின் வெற்றியால் ஆயிரக்கணக்கான பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தும் சாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். சமூக மதிப்பீடுகளில் மாற்றத்தை விரும்பும் எல்லோரும் சாக்ஷியின் வெற்றியையும் , சிந்துவின் வெற்றியையும் கொண்டாடுவோம் !


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms