Tuesday, June 26, 2012

வாடிக்கை மறந்ததும் ஏனோ?


தமிழின் தலைசிறந்த பாடகர்களில் ஒருவரான A.M.ராஜாவின் இசையமைப்பில்  1959 ஆம் ஆண்டு வெளிவந்த " கல்யாண பரிசு " என்ற மாபெரும் வெற்றிப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . கல்யாண பரிசு , இயக்குனர் ஸ்ரீதரின் முதல் படம் .இந்தப்படத்தில் இடம்பெற்ற தங்கவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் இன்று வரை ரசிக்கப்படுகின்றன .காதல் ரசம் சொட்ட சொட்ட இந்தப்பாடலை எழுதியுள்ளார்,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . இவரே இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார் . A.M.ராஜாவும் சுசீலாவும் இந்தப்பாடலைப் பாடியுள்ளனர் . பாடும் திறமையுள்ள இசையமைப்பாளர்களில் A.M.ராஜாவே முதன்மையானவர் .சிறப்பான முறையில் பாடப்பட்ட பாடலிது . 



ஆண் : வாடிக்கை மறந்ததும் ஏனோ? _ என்னை
வாட்டிட ஆசை தானோ? _ பல
கோடி மலரழகை மூடிவைத்து மனதைக்
கொள்ளை யடிப்பதும் ஏனோ? (வாடிக்கை…)

பெண் : வாடிக்கை மறந்திடுவேனோ? _ என்னை
வாட்டிடும் கேள்விகள் ஏனோ? _ புது
மங்கைஎந்தன் மனதில் பொங்கிவரும் நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ? (வாடிக்கை…)

ஆண் : அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும்
அன்பு மணக்கும் தேன்சுவைப் பாட்டும்
அமுத விருந்தும் மறந்து போனால்
உலகம் வாழ்வதும் ஏது? _ பல
உயிர்கள் மகிழ்வதும் ஏது? _ நெஞ்சில்
இனித்திடும் உறவை இன்பமெனும் உணர்வைத்
தனித்துப் பெற முடியாது

பெண் : அந்தி நேரம் போனதால்
ஆசை மறந்தே போகுமா?
அன்புக் கரங்கள் சேரும்போது
வம்பு வார்த்தைகள் ஏனோ?
இன்ப வேகம் தானோ? (வாடிக்கை…)

ஆண் : காந்தமோ இது கண்ணொளி தானோ?
காதல் நதியில் நீந்திடும் மீனோ?
கருத்தை யறிந்தும் நாணம் ஏனோ?

பெண் : பொறுமை இழந்திட லாமோ? _ பெரும்
புரட்சியில் இறங்கி லாமோ? _ நான்
கருங்கல்லுச் சிலையோ? காதலெனக் கில்லையோ?
வரம்பு மீறுதல் முறையோ?

இருவர் : சைக்கிளும் ஓடமண் மேலே _ இரு
சக்கரம் சுழல்வது போலே _ அணை
தாண்டிவரும் சுகமும், தூண்டிவிடும் முகமும்
சேர்ந்ததே உறவாலே

இந்தப்பாடல் , பட்டுக்கோட்டையாரின் மற்றுமொரு சிறந்த காதல் பாடலுக்கு உதாரணம் ." இனித்திடும் உறவை இன்பமெனும் உணர்வைத் தனித்துப் பெற முடியாது" ,"அந்தி நேரம் போனதால் ஆசை மறந்தே போகுமா? " ,"காந்தமோ இது கண்ணொளி தானோ? காதல் நதியில் நீந்திடும் மீனோ? ","நான்
கருங்கல்லுச் சிலையோ? காதலெனக் கில்லையோ? வரம்பு மீறுதல் முறையோ? " என்னே அழகான  வரிகள் !

சேர்ந்ததே உறவாலே...!

நன்றி :  http://www.pattukkottaiyar.com/site/ .

மேலும் படிக்க :

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே ! 

உனக்காக எல்லாம் உனக்காக ..!
......................................................................................................................................................................

Monday, June 18, 2012

பிரியாத பிரியங்கள் ...!

நீ என்னைவிட்டு பிரிந்த பின்பும்
பிரியாத பிரியங்களை என்ன செய்ய
கடலில் கரைத்தேன் மழையாக
பொழிந்து என்னை வந்து சேர்ந்தன
காற்றில் தூவினேன் சுவாசிக்கும் போது
மீண்டும் என்னுள் வந்துவிட்டன
மண்ணில் கலந்தேன் என் வீட்டு தக்காளிச்செடிக்கு
உரமாகி பழமாகி உணவாகி என்னை அடைந்தன
இறக்கைகள் கொடுத்து பறக்க விட்டேன்
சிறகொடிந்து என் வீட்டு மாடியில் விழுந்து விட்டன
நீயே சொல்லிவிடு
உன் பிரியங்களை என்ன செய்ய !

மேலும் படிக்க :

முதல் காதல் !
.................................................................................................................................................................

Sunday, June 17, 2012

அக்னியையும் தாண்டி ...!

தலைப்பைப் பார்த்ததும் இந்தியா நம் வரிப்பணத்தில் பாயவிட்ட அக்னி 5 பற்றியோ அல்லது வராத ,வரக்கூடாத போருக்காக அடுத்து பாயவிட தயாராகும் அக்னி 6 ,அக்னி 7 பற்றியோ எதுவும் சொல்லவரவில்லை . மற்ற அனைத்து ஆராச்சிகளையும் குறைத்துவிட்டு இயற்கைக்குப்  பாதிப்பு இல்லாமல் வாழ்வதற்கு தேவையான அனைத்து ஆராய்ச்சிகளையும் உடனே  செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் . விசயத்துக்கு வருவோம் .அக்னி வெயில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது குறித்து தான் எல்லா ஊர்களிலும் உள்ள மக்கள் கவலைப்படுகின்றனர் .

அக்னி வெயில் முடிந்த பிறகும் வெப்பம் குறையாமல் இருப்பதற்கு என்ன காரணம் ? எளிய காரணங்கள் தான் தென்படுகின்றன . நாம் பள்ளியில் படித்திருக்கிறோம் " ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது ; ஆனால் , ஒரு வகை ஆற்றலை இன்னொரு வகை ஆற்றலாக முடியும் " என்று . நாம பயன்படுத்தும் பெரும்பான்மையான பொருட்களின் பயன்பாட்டின் போதும்  பயன்பாட்டிற்கு பிறகு வெளிவரும் ஆற்றலாக இருப்பது " வெப்ப ஆற்றல் ".

                 மின் ஆற்றல் --> இயந்திர ஆற்றல் --> வெப்ப ஆற்றல்
                 மின் ஆற்றல் --> ஒளி ஆற்றல்  --> வெப்ப ஆற்றல்
                                   
 டிவி ,ரேடியோ ,செல்போன் ,தொலைபேசி ,கணினி ,கிரைண்டர் ,மிக்ஸி ,குளிர்சாதன பெட்டி ,காற்றாடி ,ஒளி விளக்குகள்  போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் மூலம் வெப்ப ஆற்றல் வெளிவருகிறது .

ருசக்கர ,நான்கு சக்கர மற்றும் அனைத்து வகையான மோட்டார் வாகனங்களும் வெப்ப ஆற்றலை வெளிவிடுகின்றன .

பூமியிலிருந்து  தண்ணீர் இழுக்க பயன்படும் மின்சார மோட்டார்கள் ,மின்தடைக்கு மாற்றாக பயன்படுத்தும் ஜெனரேட்டர்கள் ,UPS போன்றவையும் வெப்பத்தை வெளிவிடுகின்றன .

ல்வேறு வகையான தொழிற்சாலைகளில் ,பல்வேறு விதமான இயந்திரங்கள் இயக்கப்படுவதன் மூலம் பெருமளவில் வெப்பம் வெளியேற்றப்படுகிறது .  

ரிபொருள் எங்கெல்லாம் எரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் வெப்பம் வெளியேறும் . அது பெட்ரோலிய பொருட்களாக இருந்தாலும் சரி , குளுக்கோஸாக இருந்தாலும் சரி வெளிவருவது வெப்பம் தான் . அது போல இயந்திரங்கள் (சிறியது முதல் பெரியது வரை ) எங்கெல்லாம் இயக்கப்படுகிறதோ அங்கெல்லாம் வெப்ப ஆற்றல்  வெளிவரும் .

வ்வளவு வெப்பமும் எங்கு போகும் ? பூமில் தான் இருக்கும் .  வாகனங்கள் அதிகம் ஓடும் இடங்களிலும் ,தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடங்களிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கிறது .அதனால் தான் காலநிலையில் பெருமளவு மாற்றங்கள் நடைபெறுகிறது .

ரண்டு தீர்வுகள் தான் தெரிகின்றன . ஒன்று மிதமிஞ்சிய வெப்ப ஆற்றலை வேறு வகை ஆற்றலாக மாற்றுவது ;இரண்டு அதிக அளவில் மரங்கள் நடுவது . மூன்றாவதாக ஒரு தீர்வு உள்ளது .அது பூமியின் கையில் உள்ளது . வலுத்தது நிலைக்கும் ( Survival of Fittest ) என்ற கொள்கையின் படி பூமி ,வெப்ப ஆற்றலைக் கட்டுப்படுத்தி தானாகவே சம நிலைக்குக் கொண்டு வரலாம் .இயற்கையின் போக்கை யாராலும் நிர்ணயிக்க முடியாது .

மற்றபடி சூரியனையும் ,வெயிலையும் திட்டுவதில் எந்தப் பயனும் இல்லை . சூரிய வெப்பம் தேவையானது .சூரியன் இல்லாமல் பூமியில் யாருக்கும் வாழ்க்கை கிடையாது .ஏன் பூமியே கிடையாது . எல்லாவற்றுக்கும் மாற்றுவழி நாம் தான் தேட வேண்டும் . இல்லையேல் இயற்கையின் விளையாட்டை பொறுமையாக ரசிக்கவும் .

பொருத்துக்கொண்டிருக்கும் பூமி என்று பொங்கப் போகிறதோ ..!


மேலும் படிக்க :

 நாமெல்லாம் குற்றவாளிகளே ! 

வேடந்தாங்கலில் ஒரு நாள் !
..................................................................................................................................................................

Wednesday, June 6, 2012

முதல் காதல் !

மழையின்               
முதல் துளி
சிட்டுக்குருவியின்
முதல் சிணுங்கல்
மலரை தீண்டும்   
முதல் தென்றல்
சூரியனின்               
முதல் வெளிச்சம்
துளிர் விடும்          
முதல் இலை
வானவில்லின்     
முதல் தரிசனம்
பவுர்ணமி இரவின்
முதல் குளுமை
கடல் அலைகளின்
முதல் நனைத்தல்
நம்  முதல் காதல் !

மேலும் படிக்க :

ஒற்றையடிப் பாதை ! 

கேணியின் ஆயுட்காலம் !
..................................................................................................................................................................

Saturday, June 2, 2012

தேவதச்சன் - கவிதைகளின் நாயகன் !

தில் எதுவும் சொல்ல வேண்டாம்
பதிலுக்கு என்னைப் பார்க்கவும்
வேண்டாம்
உன்னைத் தீண்டும் போது
பதிலுக்குப் பதில்
என்னைத் தொட்டுவிடத் தேவையில்லை
பார்வையில் பட்டோ
படாமலோ
அருகிருந்தால் போதும்
என்னை நனைக்கும்
நீரின் ஈரம்
எதற்கும் பதிலாக இல்லை
                                         - தேவதச்சன்

நீங்கள் கவிதை வாசிக்கும் பழக்கம் உள்ளவரா ? இல்லையென்றாலும் பரவாயில்லை , ஒரு முறை தேவதச்சனின் கவிதைகளைப் படித்துப் பாருங்கள் . உங்கள் தினசரி வாழ்க்கையை சுவை மிக்கதாக மாற்றும் வல்லமை அவரது கவிதைகளுக்கு உண்டு .ஒரு நாள் முழுவதும் வாசிப்பதின் மூலம் கிடைக்கும் அனுபவத்தை அவரது ஒரே ஒரு கவிதை கொடுத்துவிடும் .

இதுவரை கவிதைகளின் பக்கம் திரும்பியதில்லை .அவ்வப்போது வாசிப்பின் இடையில் தட்டுப்படும் கவிதைகளை மட்டுமே படிப்பது வழக்கம் .அப்படி வாசித்த கவிதைகளின் வழியே அறிமுகமானவர் தான் " தேவதச்சன் ( Devathachchan )" . ஏனோ இவரது கவிதைகளை மட்டும் மிகவும் பிடித்துப் போனது .அவரது கவிதை தொகுப்புகளை வாங்கி நாளுக்கு ஒரு கவிதை என சுவைத்து வாசிக்கிறேன் . ஆம் , ஒரு நாளுக்கு ஒரு கவிதை போதும் ,அந்தக் கவிதையின் இனிமை அந்த முழு நாளுக்கும் போதுமானது .

எஸ் .ராமகிருஷ்ணன் மொழியில் ( வாழ்க்கையை கரும்பைச் சுவைப்பது போல் சுவைத்து வாழ வேண்டும் ) சொல்வதென்றால் தேவதச்சன் கவிதைகளை கரும்பைப் போல சுவைத்து வாசிக்க வேண்டும் .

வாழ்வின் எளிய கணங்களை அழகாக ,இனிமையாக ,சுவையாக தனது எளிய கவிதைகளின் வழியே வெளிப்படுத்துகிறார் . " ஜென் கவிதைகள் போல் அர்த்தம்  பொதிந்ததாய் தேவதச்சனின் கவிதைகள் இருக்கின்றன " என்று எஸ் .ரா ., குறிப்பிடுகிறார் . தினசரி வாழ்வில் நம் கண்ணில் படும் , நாம் பயன்படுத்தும் , நாம் கற்பனை செய்யும் பொருள்களின் வாயிலாக தான் சொல்ல விரும்புவதை சொல்லும் பேரற்புதத்தை தேவதச்சனால் மட்டுமே செய்ய முடியும் .

தேவதச்சனின் கவிதைகள் எல்லைகள் அற்றதாய் இருக்கின்றன . எந்த வரையறைக்குள்ளும் அவரது கவிதைகள் அடங்குவதில்லை . பிரபஞ்சத்தைப் போலவே அவரது கவிதைகளின் பரப்பை நம்மால் கண்டறிய முடியாது . பூமியில் இருக்கும் அனைத்து பொருட்களும் அவரது கவிதைகளின் பகுதிப் பொருட்களாக இருக்கின்றன .உயிருள்ளவை - உயிரற்றவை ,முக்கியமானவை - முக்கியமற்றவை என்ற பேதமெல்லாம் இல்லை . உதாரணமாக மைனா ,சூரியன்,நீல பலூன்,இலை,மரம்,பாலிதீன் பை ,கடிகாரம் ,காக்கி நிற டப்பா , முரட்டு லாரி , மீன்,கடற்கன்னிகள், லோயா தீவு ,மலை ,ஜெல்லி மீன் , சைக்கிள் பூட்டு ,பிரபஞ்சத்தின் வெளிபிரகாரம் ,சர்க்கஸ் கோமாளிகள் ,புகையிலைப் பொட்டலம் , ஓணான் ,இரும்புக் கிராதி ,நீல நிற இலந்தைப் பழங்கள் , சிறுவண்டுகள் , ஆழத் திமிங்கலம் ,வாலைப் பெண் ,நகப்பூச்சு , கண்ணாடி டம்ளர் , இளம்பெண் துறவி , தேநீர்த் தோழி ,மலர்கள் ,ரகசியக்கல் , அலைபேசி ,டினோசர் ,நகவெட்டி ,புத்தக குவியல்கள் , நிலைவாசல் ,பழச்சாறு , அமரர் ஊர்தி  இவையெல்லாம் " ஹேம்ஸ் என்னும் காற்று " என்னும் தொகுப்பில் இடம் பெற்ற சில வார்த்தைகள்  . 

தேவதச்சனின் கவிதைகளில் சில சாதாரணமாய் வாசிக்கும் போது ஒன்றும் புரியாதது போல் தெரியும் . முதல் வரிக்கும் ,அடுத்த வரிக்கும் தொடர்பு இல்லாதது போல் தெரியும் . ஒரு அழகான செடி இருக்கிறது .செடி என்றாலே அழகு தான் ;அழகான செடி வேறு உள்ளதா என்ன ? (வண்ணதாசன் மொழி ) அதன் இலை ஒரு வித அழகு ,கிளை ஒரு வித அழகு ,மொட்டு ஒரு வித அழகு .
எவ்வளவு அழகான செடி என்றாலும் தேன் என்பது மலரில் மட்டுமே இருக்கும் .ஆனால் தேனை செடியின் எல்லா பகுதிகளிலும் எதிர்பார்ப்பது நம் சமூகத்தின் மிகப்பெரிய முட்டாள்தனம் . நமக்கு எல்லா விசயத்திலும் ஒரு தொடக்கம் ஒரு நிறைவுடன் கூடிய முடிவு தேவைப்படுகிறது . தேவதச்சன் கவிதைகளில் இதை எதிர்பார்க்க முடியாது . நிறைய நல்ல திரைப்படங்கள் தோல்வி அடைவதற்கு இந்த மனநிலை தான் காரணம் .

கிளிங் என்று
கீழே விழுந்து
உடைகிறது கண்ணாடி டம்ளர்
                     அழகிய இளம்பெண் துறவியைப் போல
                     இருந்த அது
                     அல்லும் சில்லுமாய்
                     உடைந்தாலும்
ஒவ்வொரு துண்டாய்
                     சுத்தம் பண்ணுகையில்
                     விரல் கீறி
                     குருதி கொப்புளிக்கும் என்றாலும்
நீர்மையின் அந்தரங்க ரகசியத்தை
                     போட்டு உடைத்து விட்டது என்றாலும்
இனிமையாகவே இருக்கிறது
ளிங் ஒலி.
ஏனோ நினைவிற்கு வருகிறாள்
என் தேநீர்த்தோழி
                                         - தேவதச்சன்  

எஸ் .ஆறுமுகம் எனும் இயற்பெயர் கொண்ட தேவதச்சன் எழுபதுகளில் ( 1970 ) இருந்து எழுதுகிறார் . மிகக் குறைவாகவே எழுதியுள்ளார் .ஆனாலும்  அனைத்தும் அழுத்தமான பதிவுகள் . விளம்பர வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியே இருக்கிறார் . அழுத்தமான ,ஆழமான மொழிநடை அவருடையிது . தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் . 2011 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது அவருக்குக் கிடைத்தது . 


அவரது நூல்கள் :

கடைசி டினோசார்  :


யாருமற்ற நிழல் :


ஹேம்ஸ் என்னும் காற்று :


இரண்டு சூரியன் :


அனைத்து நூல்களையும்  உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது .

அவரது ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன . மொத்தக் கவிதைகளிலும் ஒரு கவிதை கூட மற்றொரு கவிதை போல இல்லை .

லைகள் மலர்கள்
ஒருசில மணிநேரங்களில் வித்தியாசமாகி விடுகின்றன
நீயும் நானும்
சில வருடங்களில்
அதற்குள்
ஒருவருக்கொருவர் அடையாளம் தெரியாமல்
போய்விடுகிறோம்
அடையாளம் தெரியாமல் போகும்
அடையாளத்தில்
ஒருவருக்கொருவர்
முகமன் கூறிக்கொள்கிறோம்
நமது புன்னகைகளும் கைகுலுக்கல்களும்
குருடர்கள் இல்லைபோலும் , எப்படியோ
அவற்றிற்கு
எப்போதும்
அடையாளம் தெரிந்தேவிடுகிறது
                                          - தேவதச்சன்

தமிழ் கூறும் நல்லுலகின் ( சுஜாதா மொழி ) ஈடு இணையற்ற கவிஞனாக ,   கலைஞனாக , அழுத்தமான படைப்பாளியாகவே தேவதச்சன் தெரிகிறார் .

உரிய மீனுக்காக ஒற்றைக்காலில் நிற்கும் கொக்கைப் போல , தேவதச்சனின் புதிய கவிதைகளுக்காக காத்திருக்கிறேன் !



நன்றி - தேவதச்சன் ,உயிர்மை .

மேலும் படிக்க :

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !  

M.R.ராதாவின் சிறந்த பேச்சு !  
...................................................................................................................................................................  

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms