Wednesday, March 13, 2013

ஈழத்தை நோக்கி ....

ஊடகங்களின் பிடியிலிருந்து வெளிவந்து சமூகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மாணவர்கள் அனைவருக்கும் உறுதுணையாக இருக்க வேண்டியது நம் கடமை . நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை மறைத்து தொடர்ந்து ஒரு போலியான ,மாயமான உலகை நம் கண்முன் நிறுத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வேலையை மட்டுமே ஊடகங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன . அப்படிப்பட்ட ஊடகங்களைத் தாண்டி இப்படி போராட்டம் தொடங்கி இருப்பதற்காக நாம் பெருமைப்பட வேண்டும் . சினிமாவைத் தாண்டி ,அரசியலைத் தாண்டி நம் ஊடகங்கள் யோசிப்பதே இல்லை . அரசியல் செய்திகளும் ,சினிமா செய்திகளும் ,கிரிக்கெட் செய்திகளும் மட்டுமே ஊடகங்களால் தொடர்ந்து முன்நிறுத்தப்படுகின்றன . நம் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கும் வேலை ஊடகங்களால் தொடர்ந்து செய்யப்படுகின்றன .

இந்த மாணவர்கள் போராட்டத்தை மறைக்கவே ஊடகங்கள் விரும்புகின்றன . ஆளும் கட்சி என்ன சொல்கிறதோ அதைச் செய்வதும் பணம் சம்பாதிப்பதும் மட்டுமே ஊடகங்களின் கடமைகளாக இருக்கின்றன . நாளிதழ்களில் மாணவர்கள் போராட்டம் பற்றிய செய்திகள் வெளியிடப்படவில்லை.செய்தி  தொலைக்காட்சிகளில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மாணவர்கள் போராட்டம் பற்றிப் பேசுகிறார்கள் .மற்ற நேரங்களில் அடக்கி வாசிக்கிறார்கள் . செய்தித் தொலைக்காட்சிகளின் மூலம் நடக்கும் ஒரே நல்ல விசயம் "கருத்துச் சுதந்திரம் ".இதற்கு முன்பு யாரையும் யாருக்கு எதிராகவும் கருத்துச் சொல்ல எந்தச் தொலைக்காட்சியும் அனுமதித்ததில்லை . இன்று கருத்துகள் மக்களைச் சென்றடைகின்றன . அவர்கள் சொல்வது சரியா? தவறா ?என்று முடிவு செய்வது மக்கள் வேலை . அரசுக்கு எதிராக கருத்துச் சொல்லவே இவ்வளவு காலம் ஆகிவிட்டது . எப்போது நம் உரிமைகளை மீட்டெடுக்கப் போகிறோமோ தெரியவில்லை .

உணர்ச்சிவசப்படாமல் ,அமைதியாக ஆக்கப்பூர்வமாக சிந்தித்து இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் . தமிழக மாணவர்களின் குரலாக மட்டுமல்லாமல் தமிழர்களின் குரலாக ,இந்தியர்களின் குரலாக ,உலக நாடுகளின் குரலாக ,மனிதர்களின் குரலாக ஒலிக்க வேண்டும் . இந்தியாவின் 65 சதவீத இளைஞர்களின் சக்தியை சரியாகப்  பயன்படுத்த வேண்டும் . வன்முறையைத் தூண்டி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவே ஆளும் அதிகார வர்க்கம் விரும்பும் என்பதை மனதில் கொண்டு கூடங்குளம் போராட்டத்தைப் போல தொடர்ந்து அற வழியில் போராட வேண்டும் .

இலங்கையில் கொல்லப்பட்டது தமிழர்கள் மட்டுமல்ல சக மனிதர்கள் தான் என்ற மனப்போக்கை இந்தியா முழுவதும் , உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் . அதை நோக்கி இந்தப் போராட்டம் முன் நகர்ந்தால் மட்டுமே வெற்றியைப் பெற முடியும் .தனித் தமிழ் ஈழம் கிடைக்கும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் . சமீபத்தில்  டெல்லி போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்தது .அதன் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக உலகெங்கும் விவாதங்கள் நடந்தன . முன்பை விட தற்பொழுது இந்தியாவில் என்ன நடந்தாலும் உலகம் கூர்ந்து கவனிக்கிறது ,கருத்து சொல்கிறது .இந்தச் சூழலை நாம் தவர விடக்கூடாது .

அடுத்த கட்டமாக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களை ஒன்றிணைத்து இந்தப் போராட்டத்தில் பங்குபெறச் செய்ய வேண்டும் . பெரும்பான்மையான தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டிலிருந்து இந்தப்போராட்டம் தொடங்கியிருப்பது தான் சரியானது .போராட்டத்தின் முதன்மையான நோக்கம் பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் ஈழத்தை உருவாகுவது தான் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் .

தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களின் ஆதரவு இல்லாமல் தமிழ் ஈழம் உருவாக முடியாது என்பது தான் உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்களின் ஒரே நம்பிக்கை . இந்த நிலையிலாவது அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் .இன்னொரு அடியை அவர்களால் தாங்க முடியாது .அவர்கள் துணையுடன் உலகத் தமிழர்களின் ,உலக மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும் .பொது வாக்கெடுப்பின் மூலம் தெற்கு சூடான் உருவானது  போல தனி ஈழம் உருவாகும் வரை போராட்டம் தொடர வேண்டும்  . 




கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும் . கிடைப்பது சுதந்திர தனி ஈழமாக இருக்கட்டும் !

நான் காலத்தை நம்புகிறேன் !

2011,ஜூலை 11 - இன்று தெற்கு சூடான் , நாளை தமிழ் ஈழம் ...! ....



Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms