நாம் வாழும் பூமி மண்ணின் மூலமே சுவாசிக்கிறது. மனித இனத்தின் செயல்பாடுகளால் நாளுக்கு நாள் பூமி மூச்சு விடவே சிரமப்படுகிறது. மண்ணே தெரியாதவாறு கான்கிரீட்களை கொட்டுகிறோம் அல்லது செரிக்க முடியாத அளவிற்கு கழிவுகளைக் கொட்டுகிறோம்.மிச்சமிருக்கும் விவசாய நிலங்களில் மட்டுமே மண் வெளியே தெரிகிறது.
கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் மண்ணில் வாழ்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் நம் பூமியின் உயிர்ச்சூழலில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்கின்றன. அவை ,மண்ணில் தாவரங்கள் , மரங்கள் வளர்வதற்கு துணை புரிவதோடு நாம் அனாயசமாக தூக்கியெறியும் பொருட்களை மட்கச் செய்து மண்ணிற்கு வளம் சேர்க்கின்றன. பூமியின் கதாநாயகர்கள், மட்குண்ணிகள் என அழைக்கப்படும் இந்த நுண்ணுயிரிகள் தான். நாம் தூக்கியெறிபவை மட்காமல் போனால் என்ன ஆவது ?
மண்ணிலிருந்து தொடங்கி மண்ணிலேயே முடிகிறது வாழ்க்கை. மண்ணிற்கு மரியாதை கொடுக்காத எந்த இனமும் நிலைத்திருக்காது. மழை பெய்தால் வருகிற மண்வாசனை கூட அசலாக இல்லை. தார் வாசனை தான் முதலில் வருகிறது. கிராமங்களையும் கான்கிரீட் சாலைகளைக் கொண்டு நிரப்பிவிட்டார்கள், பாவிகள். மழைநீர் மண்ணில் இறங்கவே வழியில்லாமல் செய்துவிட்டு நிலத்தடி நீர் கீழே போய்விட்டது, நிலத்தடி நீர் கீழே போய்விட்டது என்று புலம்பினால் மட்டும் வந்து விடுமா ?
இப்பவே ஆயிரம் அடி போர் போட்டாலும் தண்ணீர் கிடைக்கலைங்கிறீங்க, இப்படியே பண்ணுங்க அப்புறம் எத்தனை அடி போட்டாலும் தண்ணீர் கிடைக்காது . இன்னும் கொஞ்சம் ஆழமா தோண்டுனா நெருப்புக்குழம்பு வேணுமின்னா கிடைக்கலாம்.
முதலில் கிராமங்களில் போடப்பட்ட கான்கிரீட் சாலைகளை உடைத்தெறிய வேண்டும். மழை பெய்து முடித்த அடுத்தநாளில், மழைநீர் பாய்ந்தோடியதால் உருவான தண்ணீர் தாரையுடைய தெரு மண்ணில் கொட்டாங்குச்சியில் மண் நிரப்பி இட்லி சுட்டு விளையாண்ட காலம் இனி திரும்பப்போவதில்லை. இன்று குழந்தைகள் மண்ணில் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை அல்லது அவர்கள் விளையாட மண்ணே இல்லை.
நாம் பேசத் தயாராக இருந்தால் மண் நம்முடன் பேசும் !