காட்சி மொழியின் உதவியுடன் என்னவெல்லாம் பேச முடியும் என்பதை தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல தமிழ் திரையுலகிற்கும் சேர்த்தே செய்து காட்டியிருக்கிறார் , இயக்குநர் ராம். வயது வந்த அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். நாம் எந்த அளவிற்கு போலியான கற்பிதங்களை உருவாக்கி வைத்து கொண்டு உளண்டு கொண்டிருக்கிறோம் என்பதை தெளிவாக காட்சிப்படுத்தி இருக்கிறார். ஒரு நாகரிக சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்.
திரைப்படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை அரசியல் பேசப்பட்டிருக்கிறது. கட்சி அரசியல் அல்ல ; சமூக அரசியல். சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் பேச வேண்டிய அரசியல். பல இடங்களில் மிக கூர்மையான வசனங்கள் , விமர்சனங்கள் , கோபங்கள் என விரவி கிடந்தாலும் மனித மனங்களின் ஆதாரமார அன்பையே முன்னிலைப் படுத்தியிருக்கிறார். நாம் ஒவ்வொருவரும் அன்பிற்காகவே ஏங்கி கிடக்கிறோம். எல்லோருக்கும் முழுமையான அன்பு கூட வேண்டியதில்லை , கால்வாசி அன்பு கிடைத்துக் கொண்டிருந்தாலே போதும் இந்த வாழ்க்கையை ஓட்டி விடுவார்கள்.
அன்பு நிராகரிப்பட்டு ஒதுக்குப்படுவதை தான் மனித மனங்கள் விரும்புவதில்லை. இதை வேறு வேறு பெயர்களில் அழைக்கிறோம். நாம் குற்றங்கள் , தவறுகள் , தப்புகள் , ஒழுங்கீனங்கள் என்று சொல்வதெல்லாம் அன்பு நிராகரிக்கப்பட்ட இடத்திலிருந்தே தோன்றுகின்றன.
அன்பு நிராகரிப்பட்டு ஒதுக்குப்படுவதை தான் மனித மனங்கள் விரும்புவதில்லை. இதை வேறு வேறு பெயர்களில் அழைக்கிறோம். நாம் குற்றங்கள் , தவறுகள் , தப்புகள் , ஒழுங்கீனங்கள் என்று சொல்வதெல்லாம் அன்பு நிராகரிக்கப்பட்ட இடத்திலிருந்தே தோன்றுகின்றன.
ஆண் - பெண் உறவு சார்ந்த சிக்கல்கள் அதிகரித்து வரும் சூழலில் இந்த திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. குழப்பமான மனநிலையில் உள்ளவர்களில் சிலருக்காவது இப்படம் ஒரு தெளிவைக் கொடுக்கும். " 'அவள் அப்படித்தான் ' திரைப்படத்தின் உள்ளடக்கத்தை விட இதில் அதிகம் " என்று எழுத்தாளர் சுரேஷ் கண்ணன் சொன்னது போல இத்திரைப்படத்தை நவீன 'அவள் அப்படித்தான்' என்றும் சொல்லலாம். இதுவரை 'அவள் அப்படித்தான்' திரைப்படம் பார்க்காதவர்கள் இப்போதாவது பார்த்து விடுங்கள். அந்த திரைப்படமும் அடுத்தடுத்த உரையாடல்கள் மூலமே நகரும் அது போலவே இந்த தரமணியும்.
அடுத்தவர்களின் தனிப்பட்ட சொந்த விசயங்களில் தலையிடாத சமூகமே ஆரோக்கியமானது. நம் சமூகம் நிச்சயமாக ஆரோக்கியமானது அல்ல. சதா அடுத்தவர்களின் விசயங்கள் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறோம். அது பிரபலமாகவும் இருக்கலாம் , நமது தெருக்காரராகவும் இருக்கலாம், நம் குடும்ப உறுப்பினராகவும் இருக்கலாம். யாராக இருந்தாலும் நமது இரத்த சொந்தங்களாக இருந்தாலும் அவர்களுக்கான இடத்தை கொடுக்க வேண்டும். அவர்களின் விருப்பு , வெறுப்புகளில் தலையிடக்கூடாது. அன்பு என்ற பெயரில் யாரும் யாரையும் அடிமைப்படுத்தக் கூடாது.
சரியான நேரத்தில் வெளிவந்திருக்கும் சரியான திரைப்படம் இது. ஒரு பக்கம் மதவாதிகள் நம்மை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய மனநிலைக்கு இழுத்து கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு புறம் மேலை நாடுகள் இன்று நாம் சிக்கலாக பார்க்கும் ஆண் - பெண் உறவுகளில் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்து விட்டன. இன்னமும் இந்திய சமூகங்கள் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. அந்த பயணத்தை இம்மாதிரியான திரைபடங்கள் மூலமாகவும் விரைவு படுத்தலாம். இன்னும் பேசபடாத விசயங்கள் பேசப்பட வேண்டும். ராம் ஒருத்தர் மட்டுமல்ல மற்றவர்களும் முன்வர வேண்டும்.
ஓவியாக்கள் காலம். ஆம் இது ஓவியாக்களின் காலம் தான். 'அவள் அப்படித்தான்' திரைப்படத்தில் இடம்பெற்ற மஞ்சு கதாப்பாத்திரத்திற்கு ( ஸ்ரீபிரியா ) பிறகு முதர்ச்சியான மனநிலையுடைய , ஆண் - பெண் புரிதலுடைய, தைரியமான பெண்ணாக ஆன்ட்ரியா வின் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. பிக்பாஸில் ஓவியாவும் இப்படி இருந்ததால் தான் எல்லோருக்கும் பிடித்துப் போனது. ஆன்ட்ரியாவும் பிசிறில்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆன்ட்ரியாவும் படம் முழுவதும் மாடர்ன் உடைகள் தான் அணிந்திருக்கிறார்.ஆனால் உறுத்தவில்லை. ஆன்ட்ரியாவும் கொண்டாடப்படுவார். அதனால் தான் இது ஓவியாக்களின் காலம்.
'அவள் அப்படித்தான் ' திரைப்படத்துடன் இப்படம் பல விதங்களில் பொருந்துகிறது. தானாக நிகழ்ந்ததாகவும் இருக்கலாம். அப்படத்தில் இடம் பெற்ற கமல் நடித்த கதாப்பாத்திரத்தை ஒட்டியே தரமணி திரைப்படத்தின் வசந்த் ரவி கதாப்பாத்திரம் அமைந்திருக்கிறது. இவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவள் அப்படித்தான் திரைப்படத்தில் வரும் ரஜினி கதாபாத்திரம் ( கம்பெனி பாஸாக இருந்து கொண்டு பெண்களுக்கு தொல்லை கொடுப்பது ) போலவே இப்படத்திலும் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. இரண்டு படத்திலும் பாஸ்களுக்கு , கதாநாயகிகள் சிறப்பான பதிலடிகளைக் கொடுத்திருக்கிறார்கள். இப்படி பல விதங்களில் இப்படம் அப்படத்துடன் ஒத்துப் போகிறது.
ராம் எடுத்திருக்கும் மூன்று திரைப்படங்களும் அதிகம் பேசப்படாத விசயங்களே கருப்பொருளாக இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் ராம் தனித்து தெரிகிறார். ஒரு சமூக பொறுப்புள்ள கலைஞனாக தன்னை முன்வைக்கிறார். தனது படங்களில் குழந்தைகளை கழந்தைகளாக காட்ட தொடர்ந்து முயற்சி செய்கிறார். குழந்தைகளை மையமாக வைத்து குழந்தைகளை குழந்தைகளாக காட்டும் திரைப்படங்கள் நிறைய வர வேண்டும். தமிழ் திரையுலகில் 70 களுக்கு பிறகு குழந்தைகள் திரைபட பிரிவில் பெரிய வெற்றிடம் இருந்து கொண்டே இருக்கிறது.
சமீபத்தில் நண்பர் ஜேம்ஸிடம் பேசிக்கொண்டிருக்கும் போது பாலியல் சிக்கல்கள் குறித்த விவாதமும் , விழிப்புணர்வும் தேவை அதற்கு வாசிப்பு முக்கியம் என்று நான் சொன்னேன். " வாசிப்பு என்பது குடும்பத்திலும் சரி , சமூகத்திலும் சரி நிறைய இடங்களில் தீண்டத்தகாததாகவே இருக்கிறது. எல்லா வேறுபாடுகளையும் கடந்து எல்லோரும் கூடும் இன்னொரு இடம் இருக்கிறது. அது சினிமா. ஒரு நல்ல சினிமாவின் மூலம் இந்த மாற்றத்தை உருவாக்கலாம் " என்று கூறினார். அவரின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் இந்த தரமணி திரைப்படம் அமைந்திருக்கிறது.
கடந்த நாற்பதாண்டுகளாக ஆண்டுக்கு நூறு படங்கள் விதவிதமான காதல்கள் பற்றி எடுக்கப்பட்டும் இங்கே எந்த மாற்றமும் நிகழவில்லை. காதல் பற்றிய புரிதலும் உருவாகவில்லை. காதலால் உருவாகும் பிரச்சனைகளும் தீரவில்லை. அப்புறம் என்ன இதுக்கு ஆண்டுக்கு இவ்வளவு காதல் திரைப்படங்கள் எடுக்கிறீர்கள் நியாயமார்களே ! இப்படிப்பட்ட சூழலில் இந்த தரமணி திரைப்படம் சற்றே ஆசுவாசத்தையும் , நம்பிக்கையையும் அளிக்கிறது.
அந்த காலத்தில் எம்.ஆர்.ராதாவின் நாடகங்கள் பற்றி ( அறிஞர் அண்ணாவோ , பெரியாரோ ) , " நாங்கள் நூறு பொதுக்கூட்டங்களில் பேசுவதும் சரி எம்.ஆர்.ராதா ஒரே ஒரு நாடகம் போடுவதும் சரி " என்று சொல்லியிருக்கிறார். அதே போலவே பல புத்தகங்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டியதை இந்த ஒரே திரைப்படத்தில் புரிய வைத்துவிட்டார் இயக்குநர் ராம். இந்த திரைப்படத்தில் அரசியல் , விமர்சனம் எல்லாம் தாண்டி ஒரு சில இடங்களில் இருக்கும் பிரச்சார நெடியைத் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
திரைப்படங்களில் சோகப்பாடல்கள் தொடர்ந்து இடம்பெற்ற காலங்களில் நாம் நலமாகவே இருந்தோம். நமது வலிகளை மறக்கச் செய்வதாகவும் , வாழ்வின் மீது நம்பிக்கை அளிப்பதாகவும் அந்த சோகப்பாடல்கள் அமைந்திருந்தன. சமீப காலங்களில் எடுக்கப்படும் திரைப்டங்களில் சோகப்பாடல்கள் இடம்பெறுவதே இல்லை. அந்த குறையை போக்கும் வரையில் இத்திரைப்படத்தில் சோகப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இப்படியொரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக ராம் அவர்களுக்கு தலைவணங்குகிறேன் !
ஆண் - பெண் உறவு சிக்கல்களை சரியாக விதத்தில் முதிர்ச்சியுடன் பேசும் நிறைய திரைப்படங்கள் வெளிவர வேண்டும். இந்த திரைப்படத்தை 77 ரூபாயில் பார்த்தது கூடுதல் மகிழ்ச்சி !