சென்னை, தமிழ்நாட்டின் தலைநகரம் . சென்னையைச் சிங்காரச் சென்னையாக மாற்றுவோம் என்று பல வருடங்களாகச் சொல்லப்பட்டு வந்தாலும் தற்போதைய மேயர் மா.சுப்பிரமணியன் அவர்களின் வரவுக்குப் பிறகுதான் சென்னைக்கு கொஞ்சம் அழகு கூடியுள்ளது . நம் பணத்திற்கு வேட்டு வைக்கும் மலிவான விளம்பரங்களும் , வாகனம் ஓட்டுபவர்களை திசை திருப்பும் ஆபாச போஸ்டர்களும் , இரண்டு , மூன்று மாதத்திற்கு பின்பு நடைபெறும் மாநாடு அல்லது கட்சித்தலைவர் பிறந்தநாளுக்காக எழுதப்படும் புரட்சி வாசகங்களும் மட்டுமே இடம் பெற்று வந்த சென்னை நகரின் சுவர்கள் , இன்று கருத்தைக் கவரும் பலவண்ண ஓவியங்களின் இருப்பிடமாக இருக்கிறது . இந்த நிலையைத் தொடரச் செய்ய வேண்டும் . இது சாதாரண விசயமாகத் தெரிந்தாலும் இதற்கு முன்பு யாரும் செய்யாதது .
சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன . இது எல்லாத் தரப்பு மக்களுக்கும் பயன்தரக்கூடியது . இதற்குப் பல வகைகளில் எதிர்ப்புக் கிளம்பியது . ஒரு சில இடங்களில் சிறுவர்கள் விளையாடுவதற்காக இருந்த நிலங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டதால் சிறுவர்கள் விளையாடுவதற்கு நிலமில்லாமல் போய்விட்டது . ஆனால் பூங்காவையே சிறுவர்கள் விளையாட பயன் படுத்த முடியும் . இரண்டாவது ,பணக்காரர்கள் நடை பயிற்சிக்காக மட்டுமே பூங்காக்கள் பயன்படுகின்றன என்று சொல்லப்பட்டது . ஆனால் , இதிலும் உண்மை இல்லை . பூங்காக்கள் எல்லோருக்குமே பயன்படுகின்றன . பச்சை பசேல் புல்வெளிகள் , அழகான மரங்கள் , செடி ,கொடிகள் , சிறுவர்கள் விளையாடும் அழகு , இதமாக வீசும் தென்றல் இவையனைத்தும் இயந்திர வாழ்க்கையில் தினமும் அல்லல் படும் மனதிற்கு ஒரு அமைதியைத் தருகிறது . இயற்கையின் ஒரு சிறு துளியாக பூங்கா உள்ளது .
சாலைகளில் சுற்றித் திரியும் மன நோயாளிகள் , ஆதரவற்றோர் , முதியோர்கள் நலனில் மேயர் அவர்கள் அக்கரை காட்டி வருவது பாராட்டுக்குரியது . அவர்களுக்காக இரவு காப்பகங்கள் அமைக்கப்படுவது மனதிற்கு ஆறுதலைத் தருகிறது . ஆதரவற்றோர் எங்குமே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் . இந்த உலகில் வாழ்வதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு . இதற்கு எல்லோரும் இணைந்து செயலாற்ற வேண்டும் .
சென்னை நகரில் இன்னும் தீர்ப்பதற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன . எல்லாத் தெருவிலும் குப்பைகள் , தரமில்லாத சாலைகள் , இன்னும் பிச்சைக்காரர்கள் இருப்பது , எதிர்கால சிந்தனையில்லாமல் கட்டப்படும் மேம்பாலங்கள் , தொடரும் போக்குவரத்து நெரிசல் , கூவம் , நடைபாதையில் இன்னும் மக்கள் வசிப்பது , அவர்களின் வாழ்க்கைத்தரம் உயராதது , சுட்டுச்சூழல் பாதிக்கப்படுவது என்று நிறைய பிரச்சனைகள் . இவை எல்லாம் தீர்க்கப் பாட வேண்டும் .
சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் அவர்களைப் பாராட்டுவோம் !
................................................
0 comments:
Post a Comment