Tuesday, July 24, 2012

சமத்துவத்தைப் பேணுமா கல்வி ?

" மாற்றம் ஒன்றே மாறாதது " என்பது பொது நியதி .ஆனால் ,அது  ஒன்றே ஒன்றுக்கு மட்டும் பொருந்தாது .அது நம் கல்வி முறை . அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் , தொழில்நுட்பப் புரட்சியாலும் உலகம் எவ்வளவோ மாறுதலுக்கு உட்பட்ட பிறகும் நம் இந்திய கல்வி முறை மாற்றம் இல்லாமல் தொடர்கிறது . மனப்பாடம் செய்யும் திறமையை மட்டுமே நம் கல்வி முறை தொடர்ந்து வளர்த்து வருகிறது .எல் .கே .ஜி . படித்தாலும் இன்ஜினியரிங் படித்தாலும் மனப்பாடம் செய்யத் தெரிந்தால் போதும் நீங்கள் பாஸ் . மற்ற எதுவும் தேவையில்லை . உலகம் குறித்தோ , இயற்கை குறித்தோ , அரசியல் குறித்தோ , மனித இனத்தின் வரலாறு குறித்தோ ,தன்னைச் சுற்றி வாழும் மனிதர்கள் குறித்தோ எந்தப் புரிதல்களும் நம் கல்வி முறையால் ஏற்படுத்தப் படுவதில்லை .

அழகான , பகட்டான , அதிக மதிப்பெண் பெற்றுத் தரும் ஒரு பள்ளியில் தன் பிள்ளையைச் சேர்த்துவிட்டால் போதும் , தன் கடமை முடிந்தது என்று பெற்றோர் முடிவெடுத்து ஒதுங்கி விடுகின்றனர் .ஆசிரியர்கள் பாடத்திட்டத்தைத்  தாண்டி எதையும் கற்பிப்பதில்லை . வகுப்பறையின் ஜன்னல் வழியே தெரியும் மரத்தின் பெயர் கூட அங்கு படிப்பவர்களுக்கு சொல்லித்தரப்படுவதில்லை . அற்பணிப்பு உணர்வுடன் ஆசிரியர் பணிக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது .பெற்றோரும் , "மற்றவர்களுடன் சேராதே , மற்றவர்கள் பற்றிக் கவலைப் படாதே " என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளை சுயநலவாதிகளாக வளர்கின்றனர் .ஊடகங்கள், இந்த சுயநல மனப்போக்கை கவனமாக வளர்க்கின்றன . ஒரு குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டி யாரையும் இன்றைய ஊடகங்கள் சிந்திக்க விடுவதில்லை . நம் காலத்தின் மிகப்பெரும் அவலம் இது .


செய்முறைப் பயிற்சி என்பது நம் கல்வி முறையில் மிகவும் குறைவாக உள்ளது .ஒரு மரத்தை வரைபடமாக காட்டுவதை விட நேரடியாக மரத்தைக் காட்டிச் சொல்லிக் கொடுத்தால் எளிதில் புரியும் . எல்லாவற்றிலும் இப்படிச் செய்ய வேண்டிய அவசியமில்லை . முடிந்தவற்றை இவ்வாறு சொல்லித் தரலாம் .அடுத்து ,எவ்வளவு படித்தாலும் வேலைக்காக அரசாங்கத்தையோ , தனியார் நிறுவனங்களையோ சார்ந்து இருக்கும் வகையிலேயே நம் கல்வி முறை உள்ளது . தொழில் முனைவோர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில் நம் கல்வி முறை அமைய வேண்டும் . எந்தக் குடும்பமாக இருந்தாலும் கல்விக்காகவும் , மருத்துவத்திற்காகவும் மட்டுமே அதிக பணம் செலவிடுகிறது .

கல்வி முறையில் மாற்றத்தை அரசால் மட்டுமே கொண்டு வர முடியாது . பெற்றோர்களும் ஆசிரியர்களும் அரசும் சேர்ந்து தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் . தான் யார் என்பதை உணர வைத்தல் மூலமே பாதி மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியும் . உலகில் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களில் தானும் ஒரு சாதாரண விலங்கு ( பல நேரங்களில் தானும்  ஒரு மிருகம் தான் என்பதை மனிதன் மறந்து விடுகிறான் ) இனம் தான் என்பதையும் , இயற்கையின் ஒரு சிறு பகுதி தான் மனிதர்கள் என்பதையும் , மரங்கள் ,பறவைகள் ,விலங்குகள் என்று இயற்கையின் பங்களிப்பில்லாமல் நம்மால் வாழவே முடியாது என்பதையும்  உணர வைக்க வேண்டும் .

சமத்துவத்தை உருவாக்கும் கல்வியே நல்ல கல்வியாக இருக்க முடியும் . ஆண்களுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ , அதே அளவு உரிமை பெண்களுக்கும் உண்டு .  எந்த உயிரினத்திலும் பெண் இல்லாவிட்டால் உலகே இல்லை என்பதையும் , நாகரிக வளர்ச்சி இல்லாத சமயத்தில் மனித சமூதாயம் பெண் வழிச் சமூதாயமாக தான் இருந்தது என்பதையும் உணர வைத்து பெண்ணைத் தன் சக மனுசியாக மதிக்க கற்றுத் தருவது தான் இன்றைய கல்வியின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் . அப்படிச் செய்தால் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகளிலிருந்து அவர்களைக் காக்க முடியும் . படித்தவர்களும் பெண்களைத் தரக் குறைவாக நடத்துகின்றனர் . கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களை ஒடுக்குவதைத் தடுக்க வேண்டும் .பெண்களை பொத்தி பொத்தி வளர்க்காமல் ஆண்கள் போலவே வளர அனுமதிப்பதன் மூலமே நம்மால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் .ஆபிரிக்காவில் வாழ்வதற்கு ஏற்றவாறு எந்த சிறப்புத் தகுதிகளும் இல்லாத ,மற்ற விலங்குகளால் அடித்து விரட்டப்பட்ட ஒரு விலங்கு இனம் தான் மனித இனம் என்பதையும் புரிய வைக்க வேண்டும் .

சமூகத்தில் அனைத்து மட்டங்களிலும் வாழும் மனிதர்களை தன் சக மனிதனாக மதிக்க வேண்டும் . நாகரிக மனிதன் என்று சொல்லிக் கொள்ளும் நாம் இன்னும் ஜாதி ,மத , இன , மொழி ,தேச பேதங்களில் இருந்து வெளி வரவில்லை .இவை அனைத்தும் கடந்த சமத்துவத்தில் என்று வாழ்கிறோமோ அன்று தான் நாம் நாகரிக மனிதன் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கிறது .அதுவரை நாம் காட்டுமிராண்டிகள் தான் .  

கல்வி கற்போரை  சுய சிந்தனை உடையவர்களாக ,தனக்கு ஏற்படும் எந்த விதமான பிரச்சனைகளையும் எதிர் கொண்டு தீர்வு காணும் திறமை மிக்கவர்களாக , அரசியல் குறித்து கவனிப்பவர்களாக , சுய வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்பவர்களாக , ஆண் , பெண் என்ற பாலின பேதங்களைக் கடந்து ஒரு பொது வெளியில் இயங்குபவர்களாக ,பெண்களையும் ,சக மனிதர்களையும் ,மற்ற உயிரினங்களையும் தனக்கு இணையாக மதிப்பவர்களாக , இயற்கையின் உன்னதத்தைக் கொண்டாடுபவர்களாக , தனித்துவம் மிக்கவர்களாக , பணம் சம்பாதிப்பதைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக மாற்றுவது நமது கல்வி முறையின் நோக்கமாக இருக்க வேண்டும் . பெற்றோரும் ,ஆசிரியர்களும் மற்றும் சமூகமும் இணைந்து தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் .

இதையெல்லாம் சொல்வதற்கு எனக்கு எந்தவித  சிறப்புத் தகுதியும் இல்லை . நானும் ஒரு சமூதாய விலங்கு தான் என்ற தகுதியைத் தவிர ...

மேலும் படிக்க :

 செல்போன் சேவை நிறுவனங்களின் பகல் கொள்ளை !


கழிப்பிடங்கள் எங்கே ?
....................................................................................................................................................................

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms