Tuesday, August 21, 2012

உணவிற்கான உள்நாட்டுப் போர் ?

நாடோடிகளாக அலைந்து திரிந்த மனித இனம் ஒரே இடத்தில் தங்கி நாகரிக வாழ்க்கை வாழ வழிவகுத்த முதன்மைத் தொழில் தான் "விவசாயம் " . விவசாயத்தின் இன்றைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது .விவசாயம் இவ்வளவு மோசமான நிலையை அடைந்த பிறகும் எந்தவிதமான ஆதரவும் இல்லாமல் நிர்கதியாய் நிற்கிறான் விவசாயி . தொழில்துறைக்கும் ,சேவைத்துறைக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் விவசாயத்திற்கு கொடுக்கப்படவில்லை .விளைவு ,விவசாய நிலம் சுருங்கி விட்டது ; விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது ;விலைவாசி உயர்ந்துவிட்டது .
அரசு , தொழில்துறை வளர்ச்சிக்கும் , சேவைத்துறை வளர்ச்சிக்கும் கொடுக்கும் சலுகைகளால் நேரடியாக வருமானத்தைப் பெறுகிறது . ஆனால் ,விவசாயத்திற்கு  கொடுக்கும் சலுகைகளால் அரசிற்கு நேரடியாக வருமானம் கிடைப்பதில்லை . அதனால் விவசாயம் ஆட்சியாளர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது .வளர்ச்சியின் பெயரால் விவசாயம் மற்றும் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன .விவசாயம் செய்யத் தெரிந்த மனிதர்களின்  எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது . விவசாயம் செய்ய ஏறக்குறைய 60 கும் மேற்பட்ட தொழில்நுட்பங்கள் (உழுதல் ,விதைத்தல் ,நீர் பாய்ச்சுதல் ,களை பறித்தல் ,அறுவடை செய்தல்......) தெரிந்திருக்க வேண்டும் . பரம்பரை பரம்பரையாக சொல்லிக்கொடுக்கப்பட்ட தொழில்நுட்பங்களில் இன்று பாதி தான் மிச்சம் இருக்கிறது . அதையும் கற்றுக்கொள்ள இன்று ஆட்கள் இல்லை .

விதை இழப்பு அடுத்த காரணம் . தலைமுறை தலைமுறையாக தங்கள் உயிரை விட மேலானதாக பாதுகாத்து வைக்கப்பட்ட பல்வேறு விதமான விதை வகைகளை இழந்துவிட்டோம் . நெல்லில் மட்டும் நூற்றுக்கணக்கான நெல் ரகங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது . இன்று அவற்றில் பத்து ரகங்கள் இருந்தாலே ஆச்சரியம் தான் . நெல்லில் மட்டும் இவ்வளவு இழப்பு மற்ற தானியங்கள் புழக்கத்தில் இல்லாத அளவிற்கு மறைந்து விட்டன . இன்று விவசாயம் செய்ய வேண்டுமானால் விதையை அங்காடியில் தான் வாங்க முடியும் என்ற நிலை உருவாகி விட்டது . பசுமைப் புரட்சியின் விளைவு இது .

பாரம்பரிய தானிய வகைகள் அழிந்து போக பசுமைப்புரட்சி தான் முக்கிய காரணம் . மரபு விதைகளை அழித்தது, மகசூல் அதிகரிக்கச் செய்தல் என்ற பெயரில் மீண்டும் முளைக்காத கலப்பின விதைகளை அறிமுகப்படுத்தி மண்ணின் வளத்தைக் கெடுத்தது , விதவிதமான பூச்சி மருந்துகள் மூலம் மண்ணை நஞ்சாக்கியது ,பயிர்களுக்கும் ,மனிதர்களுக்கும் விதவிதமான நோய்களை உருவாக்கியது ,சுயசார்பு  வேளாண்மையை அழித்தது , விவசாயத்தை வணிகம் சார்ந்ததாக மாற்றியது  இவைதான் பசுமைப் புரட்சியின் சாதனை என்பது .  அன்றைய சூழலைச் சமாளிக்க உதவிய பசுமைப்புரட்சி பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரமிது .

தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்தவர்களின் இன்றைய தலைமுறை விவசாயம் செய்யவில்லை ;வேறு வேலைகளைத் தேடிக்கொண்டு நகர்புறங்களுக்குச் சென்று விட்டனர் . விவசாயம் செய்வது என்பது சமூகத்தில் மிகவும் மதிப்புக் குறைந்த தொழிலாக மாறிவிட்டது .தங்கள் குழந்தை  எதிர்காலத்தில் ஒரு விவசாயியாக வர வேண்டும் என்று எந்தப் பெற்றோரும் விரும்புவதில்லை . ஏன் ஒரு விவசாயியே தன் குழந்தை விவசாயம் செய்வதை விரும்பவில்லை .காரணம் , விவசாயத்தைப் பாதித்துள்ள பல்வேறு விதமான காரணிகள் .

விவசாயம் தொடர்ந்து செய்வதால் ஏற்படும் வருவாய் இழப்பு .தொடர்ந்து விவசாயம் செய்ய தடையாக இருக்கிறது . கடந்த வாரம் ஒரு விவசாயி சொன்னார், " கடந்த வருடம் மட்டும் 3 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது . விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை .ஆட்கள் கிடைத்தாலும் 150 ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் வேலையாவதில்லை ,அதனால் இந்த வருடம் எதுவும் பெருசா பண்ணல .இருக்கும் இடங்களில் தென்னை மற்றும் நெல்லி மரங்களை நட்டுவிட்டேன் .விவசாயத்தை விட மனசில்லை ஆனாலும் என்ன செய்ய ,மகன்கள் வெளியூரில் தங்கிவிட்டனர்,பாடுபட ஆள் இல்லை  " .இன்றைய நிலை இது தான் .

காலநிலை மாற்றங்களால் சரியான நேரத்தில் மழை பெய்வதில்லை . உதாரணமாக  ஆடி மாதத்தில் மழை பெய்யும் ,எதாவது விதைக்கலாம் என்று காத்து இருந்த வானம் பார்த்த பூமிக்காரர்கள் ,மழை பெய்யாததால் ஏமாந்து போயினர் . மிதமிஞ்சிய வெப்பமும் விவசாயத்தைப் பாதிக்கிறது .பயிர் அறுவடை நேரத்தில் பெய்யும் மழை விவசாயியை கடனாளியாக்குகிறது . கிணற்றில் நீர் அதிகம் உள்ள நிலங்களில் விவசாயம் பார்க்க ஆட்கள் இல்லை . மத்திய அரசின் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் விளைவாக விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை .

விவசாயத்தில் மட்டுமல்லாமல் ,எந்த வேலையிலும் உடலுழைப்பு சார்ந்த வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை . எல்லோரும் வியர்வை சிந்தாமல் சொகுசாக வாழ விரும்புகிறோம் . அதானால் தான் இன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வட இந்தியர்கள் ,உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் மிகவும் குறைவான சம்பளத்திற்கு அமர்த்தப்படுகின்றனர் .நாம் அதிக உடலுழைப்பு இல்லாமல் அதிகமாக உண்டு மருத்துவமனைகளின் தயவில் உயிர் வாழ்கிறோம் .

நகரமயமாக்கலின் விளைவாக விளைநிலங்கள் படிப்படியாக அழிக்கப்படுகின்றன . அதிக பணத்தின் மூலம் விவசாய நிலங்கள் விலைபேசப்பட்டு வாங்கப்படுகின்றன . அவை பிளாட் போட்டு கூவி கூவி விற்கப்படுகின்றன .விவசாய நிலமாக இருந்ததில் தான்  இன்று புதிதாக கல்வி நிலையங்கள் , தொழிற்சாலைகள் ,வீடுகள் கட்டப்படுகின்றன . எந்தவிதமான புதிய கட்டுமானமும் சுற்றுச்சூழலை பெருமளவில் பாதிக்கிறது . மணல் ஆற்றை நாசப்படுத்தி எடுக்கப்படுகிறது . கற்கள்,ஜல்லிகள் பாறையை அல்லது மலையை உடைத்து எடுக்கப்படுகின்றன .செங்கல் உருவாக்க செம்மண் விவசாய நிலத்திலிருந்து எடுக்கப்படுகிறது ;செங்கலைச் சூடு பண்ண நிறைய மரங்கள் வெட்டி எரிக்கப்படுகின்றன .

கட்டுமானத்திற்கு தேவையான தண்ணீர் ஆழ்துளை கிணறு அமைக்கப்படுவத்தின் மூலமாக பூமியிலிருந்து எடுக்கப்படுகிறது .
தமிழகத்தின் எந்தப்பகுதியிலும் எப்போது வேண்டுமானாலும் இனி நிலநடுக்கம் வரலாம் ;தயாராக இருங்கள்.எந்தப்புதிய கட்டுமானமும் சுற்றுச்சூழலை நேரடியாகவும் ,விவசாயத்தை மறைமுகமாகவும் பாதிக்கிறது .அதனால் ,புதிதாக நிலம் வாங்கி வீடு கட்ட நினைக்காத அனைவரும் பூவுலகின் நண்பர்கள் தான் . நம்ம சம்பாதிக்கிற பணத்தை வச்சு நிலத்தை பார்க்கத்தான் முடியும் ,வாங்க முடியாதுனு நினைக்கிறீங்களா ,சரி விடுங்க அதுவும் நல்லதுக்குத்தான் . நாமெல்லாம் பூவுலகின் நண்பர்கள் .

விவசாயம் வீழ்ச்சியடைய முக்கிய காரணம் ,விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமை . விவசாயப் பொருட்களுக்கு நிலையான விலை கிடைத்திருந்தால் விவசாயம் இவ்வளவு பெரிய இழப்பைச் சந்தித்து இருக்காது . விவசாயிக்கு பொருளை விற்பதற்கு பெரிய சந்தை கிடைப்பதில்லை . கூடவோ குறைச்சலோ உள்ளூர் சந்தையில் மட்டுமே பொருளை விற்க முடிகிறது .எப்படிப் பார்த்தாலும் விவசாயிக்கு குறைந்த அளவே லாபம் கிடைக்கிறது ,தரகர்களும் ,பெரிய வியாபாரிகளுமே அதிக லாபம் அடைகின்றனர் .

" உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது " என்ற பழமொழி இன்றைக்கும் மிகச் சரியாக பொருந்தும் . விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் போனால் விவசாயி கடனாளி ஆகிறான் . மீள முடியாத கடன் தற்கொலைக்கு தூண்டுகிறது .1997 பிறகு மட்டும் 2,20,000 கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் .நாமெல்லாம் மறைமுக குற்றவாளிகள் .தூக்குத் தண்டனையை தடை செய்ய எத்தனையோ பேர் போராடுகிறார்கள் . விவசாயிகளுக்காக போராடக் கூடிய  ஆட்கள் மிகக் குறைவாகவே உள்ளனர் .  விவசாய கடன் தள்ளுபடி என்பதெல்லாம் கண்துடைப்பு . விவசாய மானியங்கள் விவசாயிக்குக் கிடைப்பதற்குப் பதிலாக ரசாயன உர நிறுவனங்களுக்கும் , பூச்சி மருந்து நிறுவனங்களுக்கும் கிடைக்கிறது . எந்த விதமான மானியங்களும் கிடைக்காத காரணத்தால் தான் இயற்கை முறையில் விளைவிக்கும் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன .

விலையேற்றம் ,சமீப காலமாக எல்லோரும் உணரும் விசயம் . விவசாயம் அதிகளவில் பாதிக்கப்பட்டதால் தான் விவசாயப் பொருட்களின் விலை பெருமளவு உயர்ந்துவிட்டது . விவசாய நிலங்கள் அழிந்து வருவதை தினமும் பார்த்து வருகிறோம் .கடந்த ஆண்டு நெல் உற்பத்தி அளவுக்கு அதிகமாக இருந்தும் தற்போது அரிசி விலை எதனால் பெரிய அளவில் உயர்ந்தது . கிரானைட் குவாரிகளில் சோதனை நடத்தியது போல தனியாருக்குச் சொந்தமான அரிசி சேமிப்புக் கிடங்குகளில் சோதனை நடத்தினால் என்ன ? அரசிற்கு வருவாயும் ,ஊடகங்களின் பசிக்குத் தீனியும் கிடைக்கும் .பதுக்கல் திடீர் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது . அரசால் பதுக்கல் கண்காணிக்கப்பட வேண்டும் . அனைத்து விவசாயப் பொருட்களையும் இறக்குமதி செய்யக்கூடிய சூழ்நிலை வந்தால் விலையேற்றம் இன்னும் அதிகமாகும் .நிலைமை நீடித்தால் உணவிற்கான உள்நாட்டுப்போர் உண்டானாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை .

விவசாயத்திற்கு எதாவது செய்ய நினைத்தால் ,முதலில் விளைபொருட்களுக்கு நிலையான விலை நிர்ணயிக்க வேண்டும் . எந்தப் பகுதியில் எந்தப்பொருள் அதிகம் விளைகிறதோ அங்கு அந்தப் பொருளைச் சேமித்து வைக்க சேமிப்புக் கிடங்குகள் கட்ட வேண்டும் .தன்னிறைவு வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .விவசாயி ,தன்னால் விளைவிக்கக்கூடிய விவசாயப் பொருட்களை தானே உற்பத்தி செய்யும் சூழலை உருவாக்க வேண்டும் . அப்படி ஒரு சூழல் உருவானால் சந்தையில் பொருட்களின் தேவை கணிசமான அளவு குறையும் ;விலைவாசியும் கட்டுக்குள் இருக்கும் .

 மண்ணின் வளத்தை அதிகப்படுத்த தொடர்ந்து ஒரே பயிரை விளைவிக்காமல் பயிர் சுழற்சி முறையை ஊக்கப்படுத்த வேண்டும் . அரிசி ,கோதுமை மற்றும் கரும்பை மட்டும் கொள்முதல் செய்யாமல் அனைத்து தானிய வகைகளையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் .ரேசன் கடைகளில் நெல் ,கோதுமை ,சர்க்கரை மட்டும் விநியோகிக்காமல் மற்ற தானிய வகைகளையும் விநியோகம் செய்யலாம் . 

இயற்கை விவசாயத்திற்கு மானியம் வழங்க வேண்டும் . இயற்கை விவசாயத்தை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் . உணவே மருந்தாக இருந்த நிலை ,மருந்தே உணவாக மாறியதற்கு பூச்சிக்கொல்லி மருந்துகளும் , ரசாயன உரங்கலுமே முக்கிய காரணம் .மிகக்கொடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று தெரிந்த பிறகும் " என்டோசல்பான் " பூச்சிக்கொல்லி மருந்தை தடை செய்ய மத்திய அரசு யோசிக்கிறது .நம் உடலுக்கு உகந்த நம் பாரம்பரிய உணவுகள் குறித்த விழிப்புணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்த வேண்டும் . துரித உணவுகள் உண்டாக்கும் தீமைகள் குறித்த ஆராய்ச்சி முடிவுகள் மேற்கத்திய நாடுகளில் இருந்தே வெளிவருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .

சமூகத்தில் விவசாயத்திற்கு மரியாதை கிடைக்க வேண்டும் . " என் மகன்  ஒரு விவசாயி ஆக வர விரும்புகிறேன் " என்று பெற்றோர் நினைக்கும் நிலையை உருவாக்க வேண்டும் .விவசாயம் செய்ய நிலம் ? வீட்டு மொட்டை மாடிகளிலும் ,வீட்டிற்கு அடியிலும் விவசாயம் நடைபெறலாம் .உணவு ,தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருளாகக் கூட மாறலாம் .மாத்திரைகளை விழுங்குவதன் மூலம் உடலிற்கு தேவைப்படும் சக்தியைப் பெறக்கூடிய நிலை உண்டாகலாம் .இந்நிலை வராமல் தடுக்க இருக்கும் விவசாய நிலங்களையாவது காப்பாற்ற வேண்டும் .

 நிலையான லாபம் தரும் தொழிலாக விவசாயத்தை மாற்ற வேண்டும் .இந்தியா ஒரே மாதிரியான நிலப்பரப்பும் ,காலநிலையும் கொண்ட தேசமல்ல .ஒரே மாதிரியான நிலைப்பாடுகள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் பொருந்தாது . ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் ஒவ்வொரு விதமான செயல்பாடுகள் அவசியம் . நில மற்றும் நீர் பரப்புகள் வணிக நோக்கத்துடன் படிப்படியாக அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் .சுற்றியுள்ள சூழ்நிலைகள் உகந்ததாக இருந்தால் மட்டுமே நம்மால் விவசாயம் செய்ய முடியும் .

ஊடகங்கள் விவசாயத்தை தொடர்ந்து புறக்கணிக்கின்றன . 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் விவசாயத்தை நம்பியுள்ள சூழலில் இதுவரை எத்தனை திரைப்படங்கள் விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளன . தொலைக்காட்சி நிறுவனங்களும் விவசாயத்தைக் கண்டுகொள்வதில்லை .ஏன் ஒரு விவசாயியின் உண்மை நிலையை ஒரு நெடுந்தொடராக எடுத்திருக்கலாமே  .ஏன் எடுக்கவில்லை ?

சமூகத்தின் பிரதிபளிப்பு தான் திரைப்படம் என்றால் 100 க்கு 70 திரைப்படங்கள் விவசாயம் சார்ந்ததாக மட்டுமே இருக்க முடியும் . விவசாயம் இவ்வளவு பாதிப்புக்குள்ளான பிறகும் விவசாயியின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ஒரு திரைப்படம் கூட எடுக்கப்படவில்லையே .அப்புறம் நீங்கள் என்ன பெரிய படைப்பாளிகள் ? எந்தவொரு சமூக நிகழ்வையும் சுவாரசியமாக அதே நேரம் உண்மையாகவும் ,அழுத்தமாகவும் பதிவு செய்பவர்கள் மட்டுமே உண்மையான படைப்பாளிகளாக இருக்க முடியும் .அவ்வப்போது சில சிறுகதைகளும் ,நாவல்களும் மட்டுமே விவசாயியின் உணர்வுகளை பதிவு செய்கின்றன . 

இன்று எல்லாம் வணிகம் தான் .விவசாயமும் வணிகம் சார்ந்ததாக மாறி எவ்வளவோ நாட்களாகி விட்டது . விவசாயிகளும் பணப்பயிர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் சூழலை உருவாக்கி விட்டோம் . விவசாயத்தை வணிகத்தின் பிடியிலிருந்து மீட்டு உணவுப்பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழலை  உருவாக்க வேண்டும் .

விவசாயத்தை நோக்கி ஒரு நாள் எல்லோரும் உறுதியாக திரும்பி வருவார்கள் .இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது . எல்லாம் ஒரு வட்டம் தான் . 

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு ...!

மேலும் படிக்க :

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !

ஐந்திணை சுற்றுச்சூழல் விழா 2012 !

..................................................................................................................................................


1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கமான கட்டுரை...

உண்மையான விவசாயி கூட தன்னுடைய வாரிசுகள் கஷ்டப்படக் கூடாது என்று நினைக்கும் நிலைமைக்கு வந்தது காலத்தின் கொடுமை...

மாற வேண்டும்... மாறா விட்டால் நீங்கள் சொன்னது போல்... இந்த விசயத்தில்...

"ஒவ்வொரு மோசமான வினைக்கும் அதற்கு மேலான எதிர்வினை உண்டு..."

நன்றி...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms