Tuesday, September 22, 2015

புகழேந்தி - மக்களின் மருத்துவர் !

" நவீன மருத்துவத்தின் தந்தை வில்லியம் ஆஃப்லர். இவர்தான் அலோபதி மருத்துவத்துக்கான முதல் புத்தகத்தை உருவாக்கியவர்.  ' ஒரு மருத்துவர் , நோயாளியின் உடல் மூலமாகத்தான் மருத்துவம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும் முடிவான அறிவைப் பெறுகிறார்.அதே சமயம் , நோய் பற்றியும் மருந்துகள் பற்றியும் விளக்கிக் கூறுவது அந்த நோயாளிக்கு மருத்துவர் தரும் சன்மானமோ , பிச்சையோ அல்ல. அது ஒவ்வொரு மருத்துவரின் கடமை!' என்கிறார் ஆஃப்லர்.  ஆனால் இன்று , 'ஏன் , எதற்கு ' என்று கேள்வி கேட்காமல் , நோயாளிகள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் நினைக்கிறார்கள் ! " -நோயாளிகளின் மீது அன்பும் , மனிதத்திற்கு எதிரானவர்கள் மீது வெறுப்புமாகப் பேசுகிறார் மருத்துவர் புகழேந்தி. ஆயிரங்கள் , லட்சங்களில் மருத்துவக் கட்டணங்கள் கொள்ளையடிக்கப்படும் இந்தக் காலத்தில் மூன்று ரூபாய் கன்சல்டேஷன் ஃபீஸூக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர்.அணுக்கதிர் வீச்சு , தடுப்பூசி என ஆய்வுகளின் அடிப்படையில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்பவர். தான் கடந்து வந்த பயணத்தை விவரிக்கிறார்.

"நான் , பிறந்து வளர்ந்தது அருப்புக்கோட்டை .அப்பா , அம்மா இருவருமே பள்ளி ஆசிரியர்கள். ' யார் எது சொன்னாலும் , ஏன் , எதற்கு என்று கேள்வி கேள் ' என்று பழக்கப்படுத்தப்பட்ட நாத்திக வழியில் வந்த அப்பா. காந்தியவாதி அம்மா. அந்தச் சூழல்தான் எனக்குத் தெளிவையும் எளிமையையும் பழக்கப்படுத்தியது. அருப்புக்கோட்டை தேவாங்கர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த,  மதுரை மருத்துவக் கல்லூரியின் 1984 -வது வருட பேட்ச் மாணவன். ஆரம்பத்தில் படிப்பில் மட்டுமே இருந்தது கவனம். ரமேஷ் , செல்லபாண்டியன் , நாகர்ஜூனன் போன்ற நண்பர்களின் அறிமுகம் காரணமாக,  சமூகம் சார்ந்த விசயங்களில் கவனம் திரும்பியது.

பட்டம் பெற்று வெளியே வரும்போது மருத்துவத் தொழிலைப் பணம் சம்பாதிக்கும் விசயமாக மேற்கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். கிராமத்தில் பணியாற்ற வேண்டும் என்பது மட்டும் விருப்பமாக இருந்தது. நண்பர்கள் இருந்த தைரியத்தால் , கல்பாக்கம் பகுதியில் கிளினிக் தொடங்கினேன். கன்சல்டேஷன் ஃபீஸாக மூன்று ரூபாய் வாங்கினேன். தேவை இல்லாமல் ஊசி போடுவது இல்லை , வீரியமிக்க ஆன்ட்டிபயாடிக் கொடுப்பது இல்லை என்பதும் எனது கொள்கை.

ஆனால் , ' மருத்துவரைப் பார்த்து வந்த மறுநாளே நோய் குணமாக வேண்டும் ' என்ற மனநிலையில் இருந்தவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள்.  'இந்த ஆளு லூசா ? மூணு ரூபாய்க்கு வைத்தியம் பார்க்குறாராம் !' என்று சந்தேகப்பட்டார்கள். 'நோய் ஏன் வருகிறது ? அவை மீண்டும் நம்மைத் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?' என்று நான் விலாவாரியாக விளக்குவதையும் அவர்கள் ரசிக்கவில்லை . 'என்ன பிரச்னைன்னு கேட்டோமா... கலர் கலரா ரெண்டு மாத்திரையை எழுதிக் கொடுத்தோமான்னு இல்லாம வளவளன்னு பேசுறானே !' என்று அலுத்துக் கொண்டார்கள். அப்போதெல்லாம் நான் பொறுமையை மட்டுமே கடைப்பிடித்தேன்.

நாட்கள் , மாதங்கள் , வருடங்கள்... இன்று என் கிளினிக்குக்கு 50 மீட்டர் தள்ளிதான் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. ஆனால் , அங்கு செல்பவர்களைவிட என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். இப்போது கன்சல்டிங் ஃபீஸை 10 ருபாயாக உயர்த்தி இருக்கிறேன்.இதுவே குறைவு என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் , இந்தக் கட்டணமே எனக்குப் போதுமான வருமானம் அளிக்கிறது என்றால் நம்புவீர்களா ?

உதாரணமாக , மருந்துக் கடைகளில் 32 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு மருந்து , அரசு பதிவு பெற்ற மருத்துவர்களுக்கு 4 ரூபாய்க்கு  வழங்கப்படும். டிரிப்ஸ் செட் 50 ரூபாய் என்றால் , எங்களுக்கு 5 ரூபாய்க்குக் கிடைக்கும்.  இந்த சலுகையைப் பெரும்பாலான மருத்துவர்கள் தங்களை வளப்படுத்திக்கொள்ள எப்படி மடை மாற்றுகிறார்கள் என்பது நான் விளக்கிச் சொல்லித்தான் உங்களுக்குப் புரியும் என்பது இல்லை!

அணுக்கதிர் கசிவினால் கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் ஆறு பேர் அதிகபட்ச கதிர்வீச்சுக்கு உள்ளானார்கள் என ஒரு பத்திரிகை செய்தி வெளியிடுகிறது. அந்தப் பகுதியில் அணுக்கதிர் வீச்சின் பாதிப்பு பற்றிய பிரசாரங்களைத் தொடங்குகிறோம். 'உங்களுக்கு விவரம் தெரியாது.  அணுக்கதிர்கள் கசிய வாய்ப்பே இல்லை.  விளம்பரத்துக்காக ஏதேனும் கலகம் செய்யாதீர்கள்! ' என்று கல்பாக்கம் அணுசக்தி மையத்தில் இருந்து எங்களிடம் மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.  அணுசக்தி நகரிய மக்களிடம் ஆய்வு நடத்தியதில் , மல்டிபிள் மைலமா நோயால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. போராட்டங்களை முன்னைக் காட்டிலும் தீவிரப்படுத்துகிறோம்.மத்திய, மாநில உளவுப் பிரிவுகள் ஓரு கட்டத்தில் பொறுமை இழந்து , மாமல்லபுரம் டி.எஸ்.பி. என்று ஒருவரை இடையூறு செய்ய வைக்கிறார்கள்... 'நீ யாரு ? அணுசக்தி பத்தி உனக்கு என்னய்யா தெரியும் ? நீ ஒரு போலி டாக்டர்னு சொல்லி அரெஸ்ட் பண்ணவா ?' என்று மிரட்டுகிறார் அவர். 'உங்களுக்கும் சேர்த்துத்தாங்க நான் பேசுறேன்.2006-ல் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவிடம் , 'சிறந்த மருத்துவர்'னு விருது வாங்கின என்னை 'போலி டாக்டர்'னு அரெஸ்ட் பண்ணா , நீங்க யார் யாருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கும் னு யோசிச்சுப் பார்த்தீங்களா ?' எனக் கேட்டேன். அமைதியாகிவிட்டார்.

'உயிரியல் போர் ஆயுதம் ' குறித்து , பேசியும் எழுதியும் வருகிறேன். 'எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி. கிருமி.பரிசோதனைக்கூடத்தில் உருவாக்கப்பட்ட ஓர் உயிரியல் போர் ஆயுதம் ' என நான் சொன்னபோது ,
மருத்துவ உலகத்தில் இருந்தே பலத்த எதிர்ப்புகள். ஆனால் , அது என் சொந்தக் கருத்து இல்லை.  நோபல்  பரிசு பெற்ற வங்காரி மாத்தாய் சொன்னது. ஒருமுறை இயக்குநர் ஜனநாதனிடம் இது தொடர்பாகப் பேசிக்கொண்டு இருந்தேன் . இந்த விவகாரம் தொடர்பாகச் சில புத்தகங்களை அவருக்குப் படிக்க கொடுத்தேன். அதை மையமாக வைத்து உருவான படம்தான் 'ஈ'!

எனக்குக் கல்யாணம் முடிந்து இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தனர்.சென்னையின் பிரபல மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றார்கள். நான் கூடவே கூடாது என்றேன். "என் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட நான் மறுத்துவிட்டேன் 'னு எழுதிக்கொடுங்க' எனக் கேட்டார்கள். 'மத நம்பிக்கையா ? பெண் குழந்தைகள் என்பதால் அலட்சியமா ?' என்றெல்லாம் பல விதங்களில் இம்சித்தார்கள். தடுப்பூசிகளின் ஆபத்துகள் பற்றி நான் என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. குழந்தைகளுக்குப் போடும் போலியோ சொட்டு மருந்தே அவர்களுக்குப் பெரும் பிரச்னைகள் ஆகும் தீமைபற்றி அவர்களுக்கு விளக்கினேன்.

போலியோ சொட்டு மருந்தைக் கண்டுபிடித்த அமெரிக்காவிலேயே வாய் வழியாகப் போடும் போலியோ சொட்டு மருந்து புழக்கத்தில் இல்லை.  அவர்கள் ஊசி வழியாகத்தான் போலியோ மருந்து செலுத்துகிறார்கள். ஆனால் , சொட்டு மருந்து பழக்கத்தை இன்னமும் நாம் புழக்கத்தில் வைத்திருக்கிறோம். உலக சுகாதார நிறுவனம் 500 பொது மக்களுக்கு ஒரு மருத்துவர் கட்டாயம் என்று நிர்ணயித்திருக்கிறது. ஆனால் , இங்கோ கிராமப்புறங்களில் 30 ஆயிரம் மக்களுக்குத்தான் ஒரு மருத்துவர் இருக்கிறார். அப்படி இருப்பவர்களும் 'மருத்துவர்'களாக இருக்கிறார்களா என்பதுதான் இங்கு பிரச்னையே ! இந்த நிலைமை மாறும். நான் மாறி இருக்கிறேன். நீங்களும் மாறத் தயாரானால் , நம்மால் மாற்ற முடியும் ! ".

22-09-2010 என்று தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் எனர்ஜி பக்கங்கள் பகுதியில் ' நான் புகழேந்தி ஆனது எப்படி 'என்ற தலைப்பில் வெளிவந்த மருத்துவர் புகழேந்தியின் பேட்டி இது.

அணுக்கதிர் வீச்சின் பாதிப்பு குறித்து பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் மிகத் தீவிரமாக களப்பணியாற்றும் மருத்துவர் தான் நம் புகழேந்தி. கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்தும் அணுக்கதிர் வீச்சின் பாதிப்பு குறித்தும் நாம் பரவலாக அறிந்து கொள்ளும் முன்னரே கல்பாக்கம் அணுமின் நிலையத்திலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகளால் உருவான பாதிப்புகள் குறித்து தனது விரிவான கள ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியவர். புகழேந்தியின் கேள்விகளுக்கு கல்பாக்கம் அணுமின்நிலைய அதிகாரிகள் இன்னமும் உரிய பதில் அளிக்கவில்லை.

இன்று வரை நம்மிடையே "பாதுகாப்பான உறவு" எனப் பரப்பப்பட்ட செய்திகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விசுவாசமான பிரச்சாரங்களும் ஒழுக்கம் பற்றிய விளிம்புக்குள்ளேயே சுற்றிவந்தன. மூன்றாம் உலக நாடுகளின் சுற்றுலா தளங்களில் இறக்கிவிடப்பட்ட, இந்த எய்ட்ஸ் பற்றிய மறுபக்க ஆய்வுகள், இன்றுவரை புரிய வைக்கப்பட்ட செய்திகளைத் தலைகீழாக மாற்றியுள்ளது.
எய்ட்ஸ் பீதியை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட ஊசி தயாரிக்கும் குழுமங்களும், இரத்தம் செலுத்தும் மையங்களும், ஆணுறை தயாரிக்கும் நிறுவனங்களும் கொள்ளையடிக்கத் தொடங்கிவிட்டன. " என்கிறார் புகழேந்தி. மேலும் படிக்க - எயிட்ஸ் - அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட பேரழிவு ஆயுதம்!, மருத்துவர் புகழேந்தி 

"குறிப்பிட்ட ஒரு நோயால் ஒரு நாட்டில் ஒரு இடத்தில் அதன் பாதிப்பு, இறப்புவிகிதம் அதிகம் இருக்குமானால், தடுப்பூசியின் காரணமாக அது உறுதியாக தடுக்கப்படும் என்று அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்டிருந்தால், செலவுகுறைந்த மாற்று வழிகளில் அதை தடுக்கமுடியாது என இருக்கும் சமயத்தில் மட்டுமே தடுப்பூசியை பயன்படுத்துவது நன்மை பயக்கும்." என்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதே தவறு என்றும் சொல்கிறார் .

மக்களோடு இருந்து கொண்டு , மக்களுக்கு சேவை செய்து கொண்டு , மக்களுக்காகவே போராடுகிறார் , மக்களின் மருத்துவர் , புகழேந்தி !

புகழேந்தி பற்றிய வேறு பதிவுகள் :
நன்றி - ஆனந்த விகடன். 

மேலும் படிக்க :..................................................................................................................................................................


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms