தற்போதைய தொடுதிரை வாழ்வு தரும் நெருக்கடிகளிலிருந்து நம்மை விடுவித்து சில மணி நேரங்களாவது நம்மதியாக தூங்க வைப்பது மட்டும் கலையல்ல. நம்மைத் தூங்க விடாமல் செய்வதும் கலை தான். அப்படியாக இந்தத் தொடரின் முதல் தொகுதியின் 8 பகுதிகளும் பார்த்து முடிக்கும் வரை நிம்மதியாக தூங்க முடியவில்லை. விழித்திருக்கும் நேரம், தூங்கும் நேரம் என அனைத்திலும் இந்த 'One Hundred Years of Solitude' தான் நிரம்பியிருந்தது. உண்மையிலேயே இது புது அனுபவம்.
லத்தின் அமெரிக்க எழுத்தாளரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் எழுதிய நாவலான இந்த 'One Hundred Years of Solitude' பற்றி முன்பே நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் இதுவரை வாசிக்கவில்லை. மாய யதார்த்தம் (Magical Realism) என்பதற்கு உதாரணமாக இந்த நாவலே முதன்மையாக முன்நிறுத்தப்படுகிறது. கிளாசிக் தன்மையுள்ள இந்த நாவலை மிகக் கவனமாக படமாக்கி இருக்கிறார்கள். நாவலை வாசித்தவர்கள் இன்னும் நெருக்கமாக உணர்வார்களாக இருக்கும். நாவல் வாசிப்பது போலவே கதாப்பாத்திரங்கள் அறிமுகம், அந்த கதாப்பாத்திரங்களின் பெயர்களை மீண்டும் மீண்டும் உச்சரித்து பதிய வைப்பது என நாவலை வாசித்த உணர்வையே இந்தத் தொடர் கொடுத்தது.
வெறும் அழகியல் மட்டுமே கலையாகாது. அழகியலுடன் அரசியலும் சேரும் போது தான் கலை முழுமையடைகிறது. அப்படியாக இந்த ' One Hundred Years of Solitude ' ஒரு முழுமையான கலைப்படைப்பு. அமைதியாக ஒற்றுமையாக வாழ்ந்த மக்களிடையே 'அரசு' என்ற அதிகாரத்தை மட்டுமே முன்வைக்கும் அமைப்பு உள் நுழைந்தவுடன் உருவாகும் சிக்கல்களை மிகத் தெளிவாக முன் வைத்திருக்கிறார், மார்க்கேஸ். இடதுசாரியாக இருந்தாலும் அதிகாரம் கைக்கு வந்தவுடன் எப்படி மாறிப் போகிறார்கள் என்பதையும் காட்டத் தவறவில்லை.
இசையும், ஒளிப்பதிவும் அற்புதம். நாமும் அந்தச் சூழலில் வாழ்வது போலவே தோன்றுகிறது. அடுத்த தொகுதி (Season-2) எப்போது வரும் என்ற ஆவல் அதிகரித்திருக்கிறது. அடுத்ததாக இந்த நாவலை வாங்கி வாசிக்க வேண்டும். வாசிக்கவில்லை என்றால் கூட இந்த நாவல் நம் வீட்டில் இருக்க வேண்டும் என்ற மனநிலை உருவாக்கியிருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் நாமும் மக்கோன்டோ(Macondo)-வின் குடிமகனாகவும் உணர வைக்கிறது இந்த One Hundred Years of Solitude. இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉
2006 ஆம் ஆண்டு, மார்க்கேஸ் பிறந்த ஊரான Aracataca- வை Macondo என பெயர் மாற்ற ஓட்டெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. போதிய நபர்கள் ஆதரவாக வாக்களிக்காததால் பெயர் மாற்றம் சாத்தியமாகவில்லை. அதனாலென்ன இந்த நாவலை வாசித்தவர்கள், இந்தத் தொடரை பார்த்தவர்கள் மனங்களில் மக்கோன்டோ (Macondo) என்ற பெயர் எப்போதும் நிறைந்திருக்கும்.
One Hundred Years of Solitude is a Eternal art ❤️
மேலும் படிக்க: