Thursday, March 4, 2021

நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்!

 


தமிழ்த் திரையுலக வரலாற்றை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை தவிர்த்துவிட்டு எழுதிவிட முடியாது. அப்படிப்பட்ட கலைவாணரின் வரலாற்றை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் கால இயந்திரத்தில் பயணம் செய்து நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார், அறந்தை நாராயணன். போகிற போக்கில் துதிபாடும் மனநிலையில் எழுதாமல் ஆய்வுப்பூர்வமாக தமிழக அரசியல்,கலை வரலாற்றுடன் சேர்த்தே கலைவாணரையும் எழுதி இருக்கிறார். தரவுகள் எங்கிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 


'நகைச்சுவை அரசு' , 'தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின் ', 'கலைவாணர் ' என பல பட்டங்கள் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் நூலாசிரியர் ஏன் 'நாகரீகக் கோமாளி ' எனும் பட்டத்தை நூலின் தலைப்பாக தேர்ந்தெடுத்தார் ? என்ற கேள்விக்கான பதில் நூலாசிரியரின் ' என்னுரை' யில் கொடுக்கப்பட்டிருக்கிறது. கலைவாணர் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பட்டப்பெயர் ' நாகரீகக் கோமாளி ' என்பதாகும். அதனால் அதையே இப்புத்தகத்தின் தலைப்பாக வைத்ததாக அறந்தை நாராயணன் கூறியிருக்கிறார். 

குடும்பச் சூழல் காரணமாக சிறு வயதிலேயே நாடகத் துறைக்கு வந்து தங்களின் திறமைகளை மெருகேற்றி சினிமாவிலும் வெற்றி பெற்ற வரலாறு உலகெங்கிலுமே பலருக்கும் இருக்கிறது. அப்படிப்பட்ட வரலாறு தான் கலைவாணருடையதும். நாடக நடிகர்களும், நாடக கம்பெனிகளும் தொடர்ந்து செல்வாக்காக எந்தக்காலத்திலும் இருந்ததில்லை என்பதையே தமிழக நாடக வரலாறு வெளிப்படுத்துகிறது.சினிமாவின் வரவு நாடக நடிகர்களுக்கு புது வாழ்வை அளித்ததையும் காண முடிகிறது. ஆனால் மக்கள், நாடகங்களையும் கொண்டாடியிருக்கிறார்கள், சினிமாவையும் கொண்டாடியிருக்கிறார்கள். 

சினிமாவின் ஆரம்ப காலங்களில் மற்றவர்கள் உருவாக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தவர், பின்னாட்களில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அவரது காட்சிகளை அவரே உருவாக்கி நடிக்க ஆரம்பித்தார். உடுமலை நாராயணகவி போன்றவர்களுடன் சேர்ந்து இவர் பாட வேண்டிய பாடல்களையும் உருவாக்கினார். கலைவாணர்-மதுரம் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணியாகவே திரைவாழ்வின் கடைசி வரை இருந்திருக்கிறது. நிஜ வாழ்விலும் மதுரம் , கலைவாணரின் வாழ்வில் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார். லட்சுமிகாந்தன் கொலைவழக்கு காலங்களில் கலைவாணரை வெளியே கொண்டு வர படாதபாடு பட்டிருக்கிறார். பெரும் வள்ளலாக இருந்த போதிலும் கலைவாணர் சிறையில் இருந்த காலங்களில் வழக்குச் செலவிற்காக அலைந்து திரிந்தும் மதுரத்திற்கு போதிய பண உதவி கிடைக்கவில்லை. இது குறித்து வருத்தம் உண்டானாலும் கடைசி வரை தனது வள்ளல் குணத்தை கலைவாணர் மாற்றிக் கொள்ளவேயில்லை.

மற்ற துறைகளைப் போல நாடகத் துறையிலும் தீண்டாமை இருந்திருக்கிறது. பிராமண நடிகர்களுக்கு தனிச்சாப்பாடும், மற்றவர்களுக்கு தனிச்சாப்பாடும் என்றிருந்த முறையை 1934ல் தனது மதிநுட்பத்தால் மாற்றிக் காட்டியிருக்கிறார், கலைவாணர். மற்ற இடங்களில் எப்படியோ அவர் இருக்கும் இடங்களில் பாரபட்சம் இல்லாமல் இருப்பதேயே விரும்பியிருக்கிறார். கலைவாணர் நடத்திய நிகழ்வுகளில் பெரிய தலைவர்கள் பங்கெடுத்தாலும் சாப்பாடு என்பது ஒரே மாதிரியாகத்தான் போடப்பட்டுள்ளது. 

சமூக சீர்திருத்தக் கருத்துகளை ஆரம்ப கட்டங்களிலேயே தனது நடிப்பில் சேர்க்க ஆரம்பித்து விட்டார், கலைவாணர். இயக்குநர் யாராக இருந்தாலும் இவரது காட்சிகளை இவரே உருவாக்கிக் கொண்டதால் ஒரு தொடர்ச்சியை இவரது படங்களில் காண முடிகிறது. திரைப்படம், பக்திப்படமாக இருந்தாலும் அந்த பக்திக்குள் இருக்கும் மூடத்தனங்களை பகடி செய்வதாக கலைவாணரின் பாத்திர அமைப்பு இருக்கும். தமிழக நகைச்சுவை நடிகர்களுக்கு ஆரம்ப காலம் முதலே ஒரு மதிப்பும், மரியாதையும் உண்டாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனே முதல் காரணம். அதே போல தமிழ் திரைப்பட வரலாற்றில் நகைச்சுவை, வெறும் நகைச்சுவையாக கடந்து போய்விடாமல் சமூகசீர்திருத்த கருத்துகள் இன்று வரை நகைச்சுவை காட்சிகளில் இடம்பெறுவதற்கும் கலைவாணரே முன்னோடி. 

கலைவாணர் தனது வாழ்நாளில் பலரை நல்வழிபடுத்தியிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கும் இருமுறை அறிவுரை கூறியிருப்பது நமக்குத் தெரிய வருகிறது. அதில் ஒன்று, 1938ஆம் ஆண்டு படபிடிப்பிற்காக கல்கத்தா சென்றிருந்த போது ஒரு வாய்க்காலைத் தாண்டும் போது எம்.ஜி.ஆரின் செருப்பு ஒன்றின் வார் அறுந்துவிடுகிறது. அறுந்த செருப்பையும், மற்றொரு செருப்பையும் அங்கேயே விட்டுவிட்டுச் சென்று விடுகிறார். மறுநாள், கலைவாணரிடம் வந்து " வாங்க, செருப்பு வாங்க போகலாம் " என்று எம்.ஜி.ஆர். கூப்பிடுகிறார். " நாளைக்கு போகலாம் " என்று பதிலளிக்கிறார், கலைவாணர். மறுநாள் வந்த எம்.ஜி.ஆர்., " கடைக்கு போலாம்", என்று கலைவாணரைக் கூப்பிடுகிறார். 

" போகலாமா ? பணம் எடுத்துண்டையா ? இரு ! சட்டையை மாட்டிக்கிட்டு வர்றேன் !" என்று கூறிய , கிருஷ்ணன் உள்ளே போய், "ராமச்சந்திரா! " என்று குரல் கொடுக்கிறார்.

ராமச்சந்திரன் உள்ளே போகிறார்.

"அந்த நாற்காலியில் உட்கார்!" என்று கூறிய கிருஷ்ணன், கீழே கிடந்த ஒரு பொட்டலத்தைக் காட்டி , " இந்தச் செருப்பு உன் காலுக்குச் சரியா இருக்கா, பாரு!" என்கிறார் 

பொட்டலத்தைப் பிரித்ததும் எம்.ஜி.ராமச்சந்திரன் திகைத்தார். முதல் நாள் அவர் விசிறி எறிந்த அதே செருப்புக்கள் புதுப்பிக்கப்பட்டு , மெருகிடப்பட்டிருந்தன. ஏதோ பேச முயன்றார் எம்.ஜி.ராமச்சந்திரன். முந்திக் கொண்டார் கிருஷ்ணன்:

" உன்னுடைய பழைய செருப்புத்தான். நீ வீசி எறிந்துவிட்டுப் போனதை பின்னால் வந்து கொண்டிருந்த நான் பார்த்தேன். அப்பவே பத்திரமா எடுத்து வந்துவிட்டேன். ஆணி அடித்து, தைத்து சரி பண்ணிட்டேன் இப்போ இதுக்கு என்ன குறை ? இன்னும் ஆறுமாசம் வரும். உன்னையும் உன் அண்ணனையும் பிரிந்து அறியாத உங்கம்மா , நீங்க கல்கத்தா வருவதற்கு ஒத்துக் கொண்டது ஏன் ? நீங்க சினிமாவிலே நடிச்சு முன்னேறுவீங்க. நல்லா சம்பாதிப்பீங்க, பணம் அனுப்புவீங்கனு எதிர்பார்த்துத் தானே ? செருப்புதாதானே ? பழசென்ன, புதிசென்ன ? முடிஞ்சவரை எதையும் முழுசா பயன்படுத்திப் பழகணும் " என்றார். 

இது ஏற்கனவே பலருக்கும் தெரிந்த செய்தி தான் என்றாலும் மீண்டும் குறிப்பிடக் காரணம், " பழசென்ன , புதிசென்ன? முடிஞ்சவரை எதையும் முழுசா பயன்படுத்திப் பழகணும் " என்ற கலைவாணரின் வார்த்தைகள் தான். உலகமயமாக்கல் விரிவடைய , விரிவடைய 'எதையும் முழுதாகப் பயன்படுத்த வேண்டும்' என்ற மனநிலை நம்மிடையே மறைந்து வருகிறது. தேவையில்லாமல், தேவையில்லாத பொருட்களை வாங்கி குவித்துக்கொண்டே இருக்கிறோம். இந்த மனநிலை மாற வேண்டும். முடிந்தவரை எதையும் முழுதாக பயன்படுத்த நாம் முன்வர வேண்டும். 

கலைவாணரின் அசோகா பிலிம்ஸ் நிறுவனத்திற்கு வருமானவரி செலுத்த அவரின் உதவியாளர், திருவேங்கடம் கணக்குகளை எடுத்துக் கொண்டு கோவையில் உள்ள வருமானவரி அலுவலகத்திற்குச் சென்றார். ஹனுமந்தராவ் என்பவர் அதிகாரியாக இருந்தார். கணக்கைப் பார்த்தார் ஹனுமந்தராவ். 

" தர்மம், தர்மம் என்று தான் கணக்கில் பெரும்பகுதி காணப்படுகிறது !இதெல்லாம் உண்மையா? உண்மையாக இருந்தாலும் வரி விலக்கு எப்படிக் கொடுக்க முடியும் ? " என்று கேட்கிறார், ஹனுமந்தராவ். 

உதவியாளர், திருவேங்கடம், " நீங்கள் வேணும்னா , ஆபீஸர் என்பதை மறந்து சென்டிரல் ஸ்டுடியோவுக்கு ஒரு சாதாரண மனிதர் போலப் போங்க ! என் மகளுக்குக் கல்யாணம், வரதட்சிணையின் காரணமாக நிற்கிறது என்று என்.எஸ்.கிருஷ்ணனிடம் சொல்லிப் பாருங்க! அவர் என்ன சொல்கிறார், என்ன செய்கிறார் என்பதைப் பார்த்துவிட்டு வந்து இந்தக் கணக்குகளைச் சரி பாருங்க !" என்றார்.

திருவேங்கடம் ஒரு பேச்சுக்குத்தான் அப்படிச் சொன்னார். ஆனால், ஹனுமந்தராவ், உடனேயே சென்ட்ரல் ஸ்டுடியோவிற்கு சென்று என்.எஸ்.கிருஷ்ணனிடம் ,

" ஒரு பெண்ணைப் பெத்தவன் நான். ஆயிரம் ரூபாய் இல்லாததால் பெண்ணின் கல்யாணம் தடைபடும் போலிருக்கிறது " என்றார், ஹனுமந்தராவ்.

" ஆயிரம் ரூபாய்க்காக நல்ல காரியம் நிற்க வேண்டாம்.தயவு செய்து கொஞ்ச நேரம் இருங்கள். என்னுடைய ஆள் இன்கம்டாக்ஸ் ஆபிசுக்குப் போயிருக்கிறார். வந்தவுடன் நீங்கள் கேட்ட தொகையுடன், உங்களை எனது காரிலேயே அனுப்பி வைக்கிறேன்" என்றார் கிருஷ்ணன். 

அசந்து போனார், இன்கம்டாக்ஸ் ஆபீசர் ஹனுமந்தராவ். " உனக்கு கர்ணன் என்ற பெயரை வைத்திருக்கணும் .தவறாக, உன் அப்பா உனக்கு கிருஷ்ணன்னு பேர் வச்சிட்டார் ! அப்பா கிருஷ்ணா! நான் தான் இன்கம்டாக்ஸ் ஆபீசர்! உன்னுடைய ஆள் என்னிடம் வந்து உனது தர்ம குணத்தைக் கூறினார். நம்பாமல் நானே வந்தேன். இனி, நான் இருக்கும் வரை உனது தர்மச் செலவுத் தொகைக்கு வரி விலக்குத் தருகிறேன். ஆனால், நீ கொடுக்கும் தொகைக்கு வவுச்சர் மட்டும் வாங்கி வைத்துக் கொள் ! " என்று கூறிவிட்டு, ஹனுமந்தராவ் புறப்பட்டார்.

கலைவாணரின் வள்ளல் குணத்திற்கு இந்தச் சம்பவம் உதாரணமாகச் சொல்லப்படுகிறது.யாரென்றே தெரியாதவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் தன் வாழ்நாள் முழுவதும் வாரி வாரி வழங்கியிருக்கிறார்.பல்வேறு அமைப்புகளுக்கு, தனிநபர்களுக்கு நிதியுதவி நாடகங்களை தொடர்ந்து நடத்திக் கொடுத்திருக்கிறார். வள்ளல்களாக நிறைய பேர் வாழ்ந்து மறைந்திருக்கலாம். ஆனால் என்.எஸ்.கிருஷ்ணன் போல நிபந்தனையற்ற வள்ளலாக இருந்திருப்பார்களா ? என்பது சந்தேகமே. 

"நியாயம் என்று தனக்குத் தெரிந்த எதையும் வெளியில் சொல்லாமலே அதற்காகப் போராடாமலே அவரால் இருக்க முடியாது; இருக்கவும் மாட்டார். இதுதான் கலைவாணரின் உள்ளம்." என்று எம்.ஜி.ஆர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். பார்ப்பன எதிர்ப்பை தனது திரைப்படங்களில் வலுவாகவே பதிவு செய்திருந்தாலும் எந்தக் கட்சியையும் சாராதவராகவே கடைசி வரை வாழ்ந்திருக்கிறார். முதன் முதலாக நடிகர்களுக்கென சங்கம் தொடங்கியவர். நடிகர்கள், கூத்தாடிகள் என அழைக்கப்பட்டதை மாற்றி கலைஞர்கள் என அழைக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்திருக்கிறார்.
இயக்குநர்கள் கையில் இருந்த தமிழ் சினிமா, கதாநாயகர்கள் கைக்கு மாறுவதை கண்டு வறுத்தம் அடைந்திருக்கிறார். 

1948 ஜனவரி 21ம் தேதி கம்யூனிச தலைவர் ப.ஜீவானந்தத்திற்கும், பத்மாவதிக்கும் காதல் திருமணம் எளிய முறையில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ,சொந்தக்காரர்களுக்கும்,நண்பர்களுக்கும் தெரிவிக்காமல் எளிதாக நடைபெற்ற செய்தி இரண்டு நாளுக்கு பிறகே கலைவாணருக்கு தெரிய வந்தது. " நாடறிந்த தலைவருக்கு , அதுவும் என் நாஞ்சில் நாட்டுத் தலைவருக்கு ரகசியக் கல்யாணமா ? இதை நான் அனுமதிக்க மாட்டேன் !" என்று சொன்ன கலைவாணர் " ஜீவா - பத்மா திருமணப் பாராட்டு விழா ! ஜனவரி 30-ம் நாள் மாலை " என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார். திடீரென, ஜனவரி 30ம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதால் , கலைவாணர் விரும்பிய ஜீவா -பத்மா திருமண வரவேற்பு விழா நடைபெறவில்லை.

மதுவிலக்கு குறித்தான கருத்துகளைப் பரப்ப 'நல்லதம்பி ' திரைப்படத்தின் பெரும்பகுதியை ஒதுக்கினார், கலைவாணர். அவர், காந்தி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது கதறி அழுதிருக்கிறார். காந்திக்காக ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக அவரது மனதில் இருந்தது. அதற்கு செயல் வடிவம் கொடுக்க தனது சொந்த ஊரான நாகர்கோயிலில் உள்ள நகரப் பூங்காவில் யாரிடமும் பணம் பெறாமல் அன்றைய மதிப்பில் நாற்பதாயிரம் ரூபாய்க்கும் மேலாக செலவு செய்து 60 அடி உயர காந்தி நினைவுத் தூணை எழுப்பியிருக்கிறார். இன்றும் அந்த தூண் இருக்கிறதா என்று தெரியவில்லை? 

என்.எஸ்.கிருஷ்ணனை 'தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின் ' என்று குறிப்பிடதற்கு அவரது பதில்,
" சார்லி சாப்ளினை ஆயிரம் பங்கு போட்டு வர்ற ஒரு பங்குக்கு கூட நான் சமானம் இல்லே. என்னைவிடச் சிறந்த நடிகருங்க வட நாட்டிலே , மலையாளத்திலே, தெலுங்கு தேசத்திலே எத்தனையோ பேர் இருக்காங்க ! ஆனா, அவங்க யாரும் இந்த என்.எஸ்.கிருஷ்ணன் புகழப்படுவது போலப் புகழப்படுவதில்லை.அதற்குக் காரணம் அவர்களிடம் தமிழர்களைப் போல அவ்வளவு அதிகமான தாய்மொழிப் பற்று இல்லாமல் போனதுதான். தமிழர்களிடம் தமிழ் மொழி மேலே ரொம்பப் பற்று ! அதனாலே, இந்த என்.எஸ்.கிருஷ்ணனிடமும் பற்று ! அவ்வளவுதான் !".


" சேலத்திற்குச் சென்றிருந்த கலைவாணர் ஒரு தியேட்டரில் , 'மந்திரி குமாரி' படத்தைப் பார்த்தார்; வசனச் சிறப்பு கண்டு பிரமித்தார்; மறுநாள் , காலையில், சேலத்தில் தங்கியிருந்த, அப்படத்தின் கதை - வசன ஆசிரியர் மு.கருணாநிதியைச் சந்தித்தார்; வாழ்த்தினார்; பாராடாடினார். "நான் தயாரிக்கத் திட்டமிட்டுள்ள 'மணமகள்' படத்திற்கு நீங்கள் தான் திரைக்கதை- வசனம் எழுத வேண்டும் " - என்று கலைவாணர் வலியுறுத்தினார். 
எழுத்து ஊதியமாக ரூபாய் 10 ஆயிரம் பேசி முடிக்கப்பட்டது. கலைவாணரின் கட்டாயத்தால் , மு.கருணாநிதியின் குடும்பம் சென்னையில் குடியேறியது. "
கலைஞர் மு.கருணாநிதி சென்னையில் குடியேறியதற்கு கலைவாணரும் ஒரு விதத்தில் காரணமாக இருந்திருக்கிறார்.

"1956 நவம்பர் முதல் நாள் . கேரளத்தின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சியிலிருந்த அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு , செங்கோட்டை உள்ளிட்ட இரண்டாயிரம் சதுரமைல் பரப்பளவுள்ள தமிழ் மண் தாய்த் தமிழகத்தோடு இணைந்த நாள், அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அந்த இயக்கத்திற்காகப் பாடுபட்டவர்களில் பலருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்படவில்லை. ஒதுக்கப்பட்டவர்களில் ஒருவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். 

1945ம் ஆண்டு தொடங்கிய திருவிதாங்கூர் தமிழரியக்கத்திற்கு ஏராளமாகப் பண உதவிகளைத் தாராளமாகச் செய்தவர் கலைவாணர், அவர் மாத்திரம் இல்லாதிருந்தால் , இயக்கம் தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் மாண்டு மடிந்து போயிருக்கும். அத்தகைய "கலைவாணருக்கு அழைப்பில்லையா ?" என்று நாகர்கோயில் திலகர் வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்கள் கொதித்தனர். அதே நவம்பர் முதல் தேதி மாலையிலேயே பெரிய வீதியில் இணைப்பு விழாவைத் தங்கள் சொந்த முயற்சியில் திலகர் வாலிபர் சங்கத்தினர் நடத்தினர். " 

சமூக சீர்திருத்தம் என்பதையே முழுமூச்சாக கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்தி இருக்கிறார்,கலைவாணர். பெரியாரின் தாக்கத்தால், பார்ப்பன எதிர்ப்பு, சாதி மறுப்பு திருமணம் ,விதவை மறுமணம், ஆண் பெண் சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், கல்வியின் முக்கியத்துவம் என்று இன்று நாம் முற்போக்கு என்று சொல்லும் அனைத்தையும் அவரது படங்களில் அப்போதே வெளிப்படுத்தியுள்ளார். 

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், கலைக்காகவும், கலைஞர்களுக்காகவும் மட்டுமல்லாமல் மக்களுக்காகவும், மண்ணிற்காகவும் வாழ்ந்து மறைந்த மக்களின் கலைஞர்!

இந்தப் புத்தக உருவாக்கத்திற்கான அறந்தை நாராயணன் அவர்களின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது !

தலைப்பு - 'நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்', 
ஆசிரியர் - அறந்தை நாராயணன், வெளியீடு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் .

அச்சு எழுத்துரு, மற்ற புத்தகங்களில் உள்ளதை விட சிறியதாக இருந்ததால் வாசிக்க சிரமமாக இருந்தது. பதிப்பகத்தார் அடுத்த பதிப்பின் போது இதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

இக்கட்டுரை திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரிலிருந்து வெளிவரும் 'குறி' எனும் சிற்றிதழில் வெளிவந்துள்ளது. 

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .50
பத்து இதழ் சந்தா ரூபாய்.500
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :


1 comments:

Nanjil Siva said...

எங்கள் ஊர்க்காரர்... தர்மத்தின் தாரக மந்திரம்... பணிவின் சிகரம்...
https://www.scientificjudgment.com

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms