Monday, August 6, 2012

ஐந்திணை சுற்றுச்சூழல் விழா - ஒரு பார்வை !


29 -07-2012 , ஞாயிற்றுக்கிழமை , பரபரப்பான நாட்களுக்கிடையே வந்த ஒரு வசந்த நாள் . ஆம் ,உண்மையில் வசந்த நாள் தான் நம் மண்ணுக்கும் மனதிற்கும் .நம்  மண்ணைப்பற்றி நமக்கு நினைவூட்டிய நாள் .மக்கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்  சென்னை நகரத்தில் ,லயோலா கல்லூரியில் நடந்தேறியது அவ்விழா . தமிழ் கூறும் நல்லுலகின் வசந்த விழா .அது , பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைத்த " ஐந்திணை சுற்றுச்சூழல் விழா ". குறிஞ்சி ,முல்லை ,மருதம் ,நெய்தல் மற்றும் பாலை இந்தப் பேர்களைக் கேட்கும் போது எல்லோருக்கும் பள்ளிக்கூட நினைவுகளும் , தமிழ் மண்ணின் தனிச் சிறப்பும் பொங்கி வருவதைத் தடுக்க முடியாது .ஆனால் , அவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் ஐந்திணையின் இன்றைய நிலை என்ன ?

நோபெல் பரிசுக்கு இணையாக மதிக்கப்படும் " Right Livelihood Award (2008 )" வென்ற மண்ணுக்கும் மனிதர்களுக்குமான போராளியான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தார் . வினோ பாவே இயக்கத்தில் தான் இணைந்து பணியாற்றிய அனுபவங்களையும் மக்களுக்காக எப்படியெல்லாம் பாடுபட்டார்கள் என்பதையும் வினோ பாவேவின் தொலைநோக்கு பார்வை குறித்தும் ,மக்கள் மேம்பாடுக்கான பணிகள் பற்றியும் குறிப்பிட்டார் .இறால் பண்ணைகள் அமைத்து கடற்கரையை நாசமாக்க முயன்றவர்களிடமிருந்து  தமிழக கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்க எப்படியெல்லாம் போராடினார் என்பதையும் விளக்கிக் கூறினார் .

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் மிகவும் வருத்தப்பட்ட விசயம் நம் கல்வி நிலையங்களின் அமைவிடங்கள் பற்றியது ." தடுக்கி விழுந்த இடத்திலெல்லாம் இன்ஜினியரிங் கல்லூரிகள் ;பாவிகளா ,அந்த கல்லூரிகளை எந்தப்பொருளும் விளைய தகுதியற்ற இடங்களில் கட்டலாமே .நெல் அதிகம் விளைந்த தஞ்சாவூர் எங்கும் கல்வி நிலையங்கள் .முக்கியத்துவம் அறிவுக்கா ? உணவுக்கா ? நாமெல்லாம் மாதம் முழுதும் உழைத்தாலும் போதிய பணம் கிடைப்பதே அரிது . நம்மைச் சுற்றி கொள்ளைகாரங்களா இருக்காங்க , இந்தக் கொள்ளைக்காரங்க அளவுக்கதிகமான பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கல்லூரிகள் கட்டி மறுபடியும் கொள்ளையடிக்கிறாங்க .இதப் போய் மக்கள்கிட்ட சொல்லுங்க ,விளைநிலங்களை  காப்பாத்துங்க "  என்று உருக்கமாக பேசினார் .

நம்மாழ்வார் பேசும்போதும் வினோ பாவே பற்றிக் குறிப்பிட்டார் . இளங்கோவடிகள் மற்றும் அவ்வையாரின் பாடல்களை மேற்கோள் காட்டி இன்றைய சூழலில் ஐந்திணையும் பாதிக்கப்பட்டுள்ளது என்று பேசினார் .சூரிய ஒளி ஆற்றலை உள்ளே விட்டும் , வெப்ப ஆற்றலை வெளிவிடாத கார்பன் வளையங்கள் பற்றி குறிப்பிட்டார் .எவ்வாறு மரங்கள் கார்பன் வளையங்களைக் குறைக்கும் என்பதையும் சொன்னார் . மாலத்தீவில் கடலுக்கு அடியில் நடந்த உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் பற்றிச் சொன்னது புதிதாக இருந்தது . ஹோமோ சேப்பியன் என்று சொல்லிக்கொள்ளும் நாம் "இயற்கைக்கு விரோதமானத சாப்பிட்டு இயற்கைக்கு விரோதமா சிந்திக்கிறோம் " என்று சொன்னார் .கல்விக்கூடங்களின் மோசமான செயல்பாட்டை சுட்டிக்காட்டினார் ." புத்தகங்களுக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை, நம் கல்வி முறை நம்மைச் சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்றவாறு வாழ நம்மைப் பழக்கவில்லை " என்றார் .
  
காலை 9-30 முதல்  மாலை  5.00 வரை ஐந்திணைகள் பற்றிப் செயல்பாட்டாளர்கள்  பேசினார்கள் .ஐந்திணைகள் பற்றிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன . பாரம்பரிய விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது , நம் மரபு வழி விதைகளை இழந்து விட்டோம் ,உணவே மருந்து என்ற நிலை மாறிவிட்டது என்று கூறினார் அடுத்து பேசிய சுல்தான் இஸ்மாயில் . வினோ பாவே வேம்புக்கு கொடுத்த முக்கியத்துவம் குறித்துப் பேசினார் . தேசிய கொடியை சமையலறையில் ஓட்டச் சொன்னார் .எதற்கு என்றால் நாம் சாப்பிடும் உணவில் ஆரஞ்ச் ,வெள்ளை மற்றும் பச்சை நிற  உணவுகள் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் . நடுவில் உள்ள ஊதா நிறச் சக்கரம் தண்ணீரைக் குறிக்கிறது .இவ்வாறு நாம் இருந்தால் சக்கரத்தில் உள்ள ஆரங்களின் எண்ணிக்கையைப் போல 24 மணி நேரமும் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் .Ecology ,Economyயாக  மாறும் போது தான் பிரச்சனையே .Management , t யை எடுத்து விட்டால் Managemen , n யை எடுத்து விட்டால் Manageme என்று சுவாரசியமாகப் பேசினார் .     

குறிஞ்சி நிலப்பரப்பு குறித்து வேலூர் சி .சீனிவாசன் பேசினார் . வேலூரில் தாங்கள் செயல்படுத்தி வரும் VHRP - Vellore Hill Restoration Project பற்றிக் குறிப்பிட்டார் .மலைக் குன்றுகளில் சிறு சிறு குளங்கள் அமைப்பதும் , வறண்ட மலைக் குன்றுப் பகுதிகளைப் பசுமையாக்குவதும் இந்த செயல் திட்டத்தின் முக்கிய நோக்கம் .இதன் பயனாக மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வற்றாமல் இருக்கிறது .பயனுள்ள முயற்சியாக தெரிந்தது .

குறிஞ்சி நிலப்பரப்பு குறித்து அடுத்து பேசிய வழக்குரைஞர் இரா .முருகவேல் பழங்குடிகளுக்கும் காட்டுக்கும் ,இயற்கைக்கும் உள்ள நெருக்கம் பற்றிக் குறிப்பிட்டார் . பழங்குடிகள் தாங்கள் குடியிருக்க வீடுகள் கட்ட மூங்கிலையும் ,நாணலையும் பயன்படுதுகின்றனர் . மூங்கில் மீண்டும் வளரும் ,நாணல் காய்ந்தால் காட்டுத் தீயை அதிகப்படுத்தும் . சமவெளியில் வாழும் மக்களே காடுகளின் அழிவிற்கு காரணம் .பழங்குடிகளால் மட்டுமே காடுகளை பாதுகாக்க முடியும் ,அவர்கள் பழங்குடிகளாக இருக்கும் வரை .

முல்லை நிலப்பரப்பு குறித்து பேசிய பேராசிரியர் .த .முருகவேல் , பிணந்திண்ணி கழுகுகளின் அழிவு எவ்வாறு உயிர்ச் சூழ்நிலையை பாதிக்கிறது என்றும் காடுகளின் பரப்பு குறைவதால் சிறுத்தை போன்ற விலங்குகளை காடுகளை விட நிலப்பரப்பில் அதிகம் காண முடிகிறது என்றும் குறிப்பிட்டார்.

முல்லை பற்றி அடுத்து பேசிய பேராசிரியர் கு.வி .கிருஷ்ணமூர்த்தி திணைச்  சிதைவு பற்றிக் குறிப்பிட்டார் . ஒரு நிலப்பரப்பில் வாழும் உயிருள்ள மற்றும் உயிரட்ட கலவையே திணை எனப்படும் .அதாவது நிலத்தோடு இயைந்த பண்பாட்டுக் கூறுகளே திணையாகும் . இன்று எந்த நிலப்பரப்பும் திணையாக இல்லை .வெறும் நிலமாகச் சுருங்கிவிட்டது அல்லது வேறு திணையின் கூறுகளோடு கலந்து விட்டது . குறிஞ்சி ,முல்லை ,மருதம் மற்றும் நெய்தல் ஆகிய நான்கு திணைகளும் ஒருங்கே அமைந்த மாவட்டம் ,திருநெல்வேலி . வரகு ,குதிரைவாலி ,சாமை ஆகியன முல்லையின் உணவுப்பொருட்கள் . 10000 ஆண்டுகளுக்கு முன்பு 70 % இருந்த முல்லை நிலப்பரப்பு ,இன்று 15 % குறைந்து விட்டது .

ருதம் பற்றி வைகை குமாரசாமியும் ,அறச்சலூர் செல்வமும் பேசினார்கள் .இயற்கை விவசாயம் குறித்து பேசினார்கள் . இயற்கை முறையில் சாகுபடி செய்யும் பொருட்கள் விலை ஏன் அதிகமாக உள்ளது என்று விளக்கினார்கள் .உழுதல் ,மழையைக் கணித்தல் ,விதைகளைத் தேர்ந்தெடுத்தல் , நாடு நடுதல் ,சரியாக நீர் பாய்ச்சுதல் ,சரியான நேரத்தில் களை பறித்தல் ,சாகுபடி செய்தல்  என்று  60 கும் மேற்பட்ட தொழில்நுட்பங்கள் தெரிந்த ஒருவன் மட்டுமே விவசாயியாக இருக்க முடியும் . விதையிழப்பும் , நவீன இயந்திரங்களால் தொழில்நுட்ப இழப்புமே விவசாயம் , விவசாயிகளின் அழிவிற்கு காரணங்கள் .

பாலை நிலம் பற்றி சு .தியோடர் பாஸ்கரன் பேசினார் . காங்கிரஸ் அமைப்பைத் தோற்றுவித்தவரான  A .O .ஹியூம் , பறவைகளை அவதானிப்பதில் வல்லவராக இருந்திருக்கிறார் . அவர் Bustard என்று அழைக்கப்படும் கான மயிலைப் பார்த்திருக்கிறார் . இதுவே இந்தியாவின் தேசிய பறவையாக இருந்திருக்க வேண்டியது .Bustard  என்ற வார்த்தை தவறாக உச்சரிக்கப்பட்டால் தவறாகப் போய்விடும் என்ற காரணத்தால் தேசிய பறவையாக இடம் பெறவில்லை . இது பாலை நிலத்தின் பறவையாகும் . முன்பு தமிழ்நாட்டில் அதிகளவில் இருந்த கான மயில்கள் தற்போது இல்லை . மத்திய பிரதேசத்திலும்  ,கர்நாடகாவிலும் உள்ள சரணாலயங்களில் மட்டுமே தற்போது கான மயில்கள் உள்ளன . காடை ,கள் கவுதாரி ,ஆள்காட்டிக் குருவி முதலிய பறவைகளும் ,குள்ள நரி ,குழி நரி ,காட்டுப்பூனை முதலிய விலங்குகளும் பாலை நிலத்தில் வாழ்ந்துள்ளன . பாலை நிலத்தில் வாழ்ந்தவர்கள் பிங்களர்கள் என்று அழைக்கப்பட்டனர் . துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதன் பின்பு தான் அதிகமான காட்டுயிர்கள் கொல்லப்பட்டுள்ளன . இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு தான் அதிக காடுகளும் ,காட்டுயிர்களும் அழிக்கப்பட்டுள்ளன .அணைகள் கட்டுவதால் பாலை நிலம் அழிகிறது .

 கான மயில் :


நெய்தல் நிலம் பற்றிப்  பேசிய வறீதையா அழுத்தமான கருத்துகளை முன்வைத்தார் . வரலாற்றிலும் சரி தற்போதும் சரி நெய்தல் நில மக்களான பரதவர்கள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை ." மீனை உணவாக மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள் , மீன் தான் எங்கள் வாழ்க்கை என்பதை நீங்கள் உணரவேயில்லை "  என்று சாடினார் . சேது சமுத்திரத் திட்டத்தின் காரணமாக பவளப்பாறைகள் சேதப்படுத்தப் பட்டதால் தான் சுனாமியின் காரணமாக நாகபட்டினமும் ,வேளாங்கண்ணியும் அதிகளவு பாதிக்கப்பட்டன ;பவளப் பாறைகளால் ராமேஸ்வரமும் ,கன்னியாகுமரியும் தப்பித்துக் கொண்டன .

நெய்தல் நிலம் பற்றி அடுத்து பேசிய அருள் எழிலன் , நெய்தல் நில மக்கள் குறித்த நீண்ட  வரலாற்றை  பதிவு செய்தார் . கிறித்துவம் நெய்தல் நில மக்களுடன் எப்படிக் கலந்தது ,தற்போது எப்படி உள்ளது என்று விளக்கினார் . புன்னைகாயல் என்னும் இடத்தில் தான் தமிழகத்தின் முதல் அச்சகமும் ,முதல் மருத்துவமனையும் மற்றும் முதல் கல்விக்கூடமும் இருந்ததாக குறிப்பிட்டார் . சென்னையில் கடலை நம்பி வாழ்ந்தவர்கள் கண்ணகி நகருக்கும் ,செம்மஞ்சேரிக்கும் துரத்தி அடிக்கப்பட்டது குறித்தும் வேதனையுடன் குறிப்பிட்டார் .ஜோ .டி .குரூஸ் நெய்தல் நில உரைகளுக்கு தலைமை தாங்கினார் .

மொத்தத்தில் வளர்ச்சி என்ற பெயரால் எல்லாவற்றையும் அழித்துக்கொண்டிருக்கிறோம் . இப்படியே போனால் ஐந்திணை என்பதே இருக்காது .ஒரே திணையான காங்கிரட் திணை மட்டுமே இருக்கும் .

மாலை 5 மணிக்கு மேல் இருளர் பழங்குடி மக்களின் களை நிகழ்ச்சிகளும் ,கொல்லிமலை மலையாளி பழங்குடிகளின் சேர்வையாட்டமும் நடைபெற்றது . அடுத்ததாக சுற்றுச்சூழல் சார்ந்த புத்தகங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டன .சிறு தானிய உணவுகளில் உள்ள சத்துகள் குறித்து சித்த மருத்துவர் கு .சிவராமன் தெளிவாக விளக்கிக் கூறினார் . நீண்ட நாட்களாக நான் பார்க்க விரும்பிய மருத்துவர் புகழேந்தியைச் சந்திக்க முடிந்தது .முடிவாக பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டது .


அந்த உணவில் இடம்பெற்ற உணவு வகைகள்,
1.பானகம்
2.தேனும் தினை மாவும்
3.காணச்சாறு( கொள்ளு )
4.கம்பு வல்லாரை தோசை
5.நிலக்கடலைச் சட்னி
6.சாமை தயிர்சோறு
7.வழுதுணங்காய் ( கத்தரிக்காய் )  சாம்பார்
8.பருப்புக்கீரை மசியல்
9.குதிரைவாலி புளிச்சோறு
10.ராகி வாழைப்பூ வறுத்த சோறு
11.வரகு கூட்டாஞ்சோறு
12.தட்டைப்பயறு பிரட்டல்
13.தினை இனிப்புப் பொங்கல்
14.நவதானிய கொழுக்கட்டை
கிராமத்தில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் சாமை ,வரகு ,தினை , குதிரைவாலி சாப்பிட்டதில்லை .இந்நிகழ்வின் மூலம் இவற்றையெல்லாம் உண்ணவும் ,உணரவும் முடிந்தது . எங்கள் வீட்டில் சிறு தானிய உணவுகளை சேர்த்துக்கொள்ளத் தொடங்கிவிட்டோம் .

இனம் ,மொழி ,மதம் ,நாடு போன்ற பேதங்களில் சிக்க வேண்டாம் என்று தான் இருக்கிறேன் . ஆனால் , நம் முன்னோர்கள் பிரித்த இந்த ஐந்திணை என்னை பெருமைப்பட வைக்கிறது . உலகில் வேறு எங்கும் இது போல நிலத்தை பிரித்து வாழ்ந்தார்களா என்று தெரியவில்லை .

பூவுலகின் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ..!

 பூவுலகின் நண்பர்களின் இணையதளம் :-  www.poovulagu.net .

 ஐந்திணை சுற்றுச்சூழல் விழா - காணொளி -http://www.periyarthalam.com/2012/07/31/ainthinai-vizha-videos/

மேலும் படிக்க : -

நியூட்ரினோ ஆய்வுமையம் தேவையா ?

நாமெல்லாம் குற்றவாளிகளே !
.....................................................................................................................................................................

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் பதிவை படித்த பின், விழாவில் கலந்து கொண்ட திருப்தி...

பாரம்பரிய உணவு... சிலது கேள்விப்பட்டதோடு சரி... சாப்பிட்டதில்லை...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms