Thursday, July 7, 2022

Jana Gana Mana - பாசிச எதிர்ப்பு சினிமா !

 


தற்போதைய ஒன்றிய பாஜக அரசு, இந்திய மக்களுக்கு எதிராக ஏவி விட்டிருக்கும் விதவிதமான அடக்குமுறைகளை இத்திரைப்படம் தோலுரித்துக் காட்டுகிறது.  ஊடகங்கள் எந்த அளவிற்கு நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். விதவிதமான சந்தைப்படுத்துதல் மூலமாக எப்படி நமது பொருளாதாரம் கார்ப்பரேட் நிறுவனங்களால் சூறையாடப்படுகிறதோ அப்படி நமது உணர்வுகளை  ஆளும் வர்க்கமும் ஊடகங்களும் சேர்ந்து சூறையாடுவதை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 


'வேற்றுமையில் ஒற்றுமை ' தான் இந்தியாவின் பலம். அந்த ஒற்றுமையை சீர்குலைத்து தனது அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை காவு வாங்குகிறது தற்போதைய ஒன்றிய பாஜக அரசு. ஏற்கனவே உலகவணிகமயமாக்கலால் நமது வாழ்க்கை முறையின் மீதும் நமது பண்பாட்டின் மீது தாக்குதல்கள் நடந்து வருகின்றன. 


உலகமயமாக்கலால் உலகெங்கும் வாழும் பல்வேறு விதமான தனித்த இனக்குழுக்களின் தனித்த அடையாளங்கள் அழிந்து வருகின்றன. இந்தச் சூழலில் இந்தியாவை தற்போது ஆளும் ஒன்றிய பாஜக அரசு இந்தியா முழுவதும் வாழும் பல்வேறு விதமான இனக்குழுக்களின், மற்ற அரசியல் கட்சிகளின் , மற்ற மொழிகளின் அடையாளங்களை அழித்து தனது சாதிய பிரிவினையை முன்னிலைப்படுத்தும்  RSS சித்தாந்தங்களை மக்கள் மீது திணிக்கிறது. ஏற்கனவே சாதிய திமிரில் ஊறித்திளைப்பவர்களுக்கு  இது வசதியாகப் போய்விட்டது. இன்று வரை சாதியப் பிரிவினையால் அதிகளவில் பலன்களை பெற்று வருபவர்கள் பார்ப்பனர்களே. சாதியை முன் வைத்து நிகழும் மரணங்கள் அதிகரித்து வருவது மிகவும் ஆபத்தானது. இது போதாதென்று பாஜக கட்சி, மக்களிடத்தில் மத ரீதியான பிரிவினையையும் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. 


அதிகாரத்தை தக்க வைக்க அரசியல்வாதிகள் எந்த எல்லைக்கும் போவார்கள். ஏற்கனவே கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரத்தை அழித்து, மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து, நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்திய பிறகும் கூட   இந்திய ஊடகங்கள் நாட்டில் நல்லாட்சி நடப்பது போன்ற பிம்பத்தையே தொடர்ந்து உருவாக்கி வருகின்றன. தற்போதைய இந்தியப் பிரதமர் மோடியோ இதுவரை ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக்கூட நடத்தவில்லை. அந்தளவிற்கு பயந்து கிடக்கும் ஒரு மனிதரைத் தான் சங்கிகள் வீரர் என்று கொண்டாடுகிறார்கள். கூடவே ஊடகங்களும் துதிபாடுகின்றன. தங்களின் வாட்ஸ்அப் குழுவில் போட்டோசாப் செய்து பரப்பப்படும் அத்தனை பொய்களையும் உண்மை என்று நம்பி வாழ்ந்து வருகிறார்கள். 


ஊடகங்கள் மூலம் தான் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஊடகங்கள் மூலம் தான் தாங்கள் செய்து அத்தனை அயோக்கியத்தனங்களையும் மறைக்கிறார்கள். 2024 தேர்தலுக்கும் ஊடகங்களையே பயன்படுத்துவார்கள். இதை எதிர்த்து வெல்வதில்தான் இந்தியாவின் எதிர்காலமே இருக்கிறது. இப்படியான சூழலில்தான் ' Jana Gana Mana' திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஊடகங்கள் எப்படி மக்களை முட்டாளாக்குகின்றன என்பதை அப்பட்டமாக விளக்குகிறார்கள். கேரள மக்களின் அரசியலறிவு பற்றி நாம் அறிந்ததே. இப்படியான அரசியல் சினிமா அங்கு மட்டுமே சாத்தியமாக இருக்கிறது. இந்த விசயத்தில் தமிழகம் மிகவும் பின்தங்கி இருக்கிறது. நாயகத்துதிபாடல் ஒழியாதவரை தமிழ் சினிமா உருப்படாது. மிகவும் தைரியமான ஒரு முன்னெடுப்பு இந்த சினிமா. மக்களின் நலன்களுக்காக சிந்திப்பவர்களுக்கும் , மக்களின் நலனிற்காக களத்தில் இறங்கி செயல்படுபவர்களுக்கும் மிகுந்த நம்பிக்கையை இந்த சினிமா உருவாக்கி இருக்கிறது. 


 நீதிமன்றங்களை முன் வைத்து எடுக்கப்படும்  திரைப்படங்களே மக்களின் அரசியலை, மக்களுக்கான அரசியலை விரிவாக பேசுகின்றன. இத்திரைப்படமும் அப்படியே. மக்களின்  பக்கம் நின்று மக்களின் பிரச்சனைகளை பேசுவதுதான் நல்ல படைப்பாக இருக்க முடியும். அந்த வகையில் 'Jana Gana Mana' ஒரு மக்களின் படைப்பு. எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். Netflix OTT ல் காணலாம் !

மேலும் படிக்க :

ஜெய்பீம் - அறத்தின் குரல் !

சர்தார் உத்தம் - உலகத்தரம் !

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms