Saturday, August 31, 2024

எங்கெங்கு காணினும் குப்பைகள் !


நாகரீக மனிதர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வாழும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் குப்பைகள் குறித்து மக்கள் மட்டுமல்ல அரசுகளும் கண்டுகொள்வதில்லை. ஆனால் குப்பை மேலாண்மைக்கு தனியாக வரி மட்டும் சேர்த்து வாங்குகிறார்கள். 

நாளுக்குநாள் சேரும் குப்பைகளின் அளவு மிகவும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த குப்பைப் பெருக்கத்திற்கு பல்வேறு விதமான காரணிகள் இருக்கின்றன. ஆனால் அதிகமும் கண்ணில் படுவது பிளாஸ்டிக் பொருட்கள்தான். அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களால் உண்டாகும் குப்பைகளுடன் பயன்பாட்டில்  இருந்து பயன்படாமல் மாறும் குப்பைகளும் சேர்ந்து கொள்கின்றன. 

குப்பைகள் என்றுமே இருக்கின்றன. ஆனால் முன்பு அவை எளிதில் மட்கும் குப்பைகளாக, விவசாய நிலங்களுக்கு உரமாக இருந்தன. இன்று எளிதில் மட்கும் குப்பைகளுடன் எளிதில் மட்காத குப்பைகளும் சேர்ந்து கொள்வதால் தானாக மட்குவதில் சிரமம் உண்டாகிறது, அத்துடன் விவசாய நிலங்களுக்கு உரமாக பயன்படுத்த முடியாமலும் போகின்றன. 

சுகாதார பணியாளர்களின் அயராத உழைப்பால்தான் இந்த அளவிற்காவது பேசிக் கொண்டிருக்கிறோம். இவர்கள் மட்டும் தொடர்ந்து இயங்காமல் போனால் நாம் குப்பைகளுடன் குப்பைகளாகத்தான் வாழ வேண்டியிருக்கும். இன்றும் எல்லா ஊர்களிலும் குப்பைகளை, தினமும் அள்ளப்படும் இடங்களில் கொட்டாமல் கண்ணில் படும் காலி இடங்களில் கொட்டும் மனநிலையே அதிகம் உள்ளது. இந்த விசயத்தில் மக்களாகிய நமக்கு பொறுப்புணர்வு தேவை. 

மட்கும் குப்பைகளையும், மட்காத குப்பைகளையும் பிரிப்பது என்பது சவாலான வேலையாக இருக்கிறது. அரசுகளும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை அறிவிக்காமல் திடீரென பிளாஸ்டிக் பொருட்களுக்கு  தடை என அறிவிப்பதும் அப்புறம் அந்த அறிவிப்பை காற்றில் விடுவதும் தொடர்கதையாக இருக்கிறது. அந்த பிளாஸ்டிக் தடையும் எளிய மக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்  பொருட்களுக்குத்தான். கார்பரேட் நிறுவனங்கள்தான் பிளாஸ்டிக் குப்பைகளை அதிகப்படுத்துகின்றன. ஆனால் இன்று வரை எந்த அரசும் கார்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கவேயில்லை. 

மறுசுழற்சி என்பது ஏமாற்று வேலை. மறுசுழற்சி செய்யக்கூடியவை என்று வலம் வரும் பிளாஸ்டிக் பொருட்களில் 5%  கூட மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. எளிதில் மட்கும் பொருட்களை நோக்கி பயணிப்பதுதான் சரியான தீர்வாக இருக்கும்.    

இயற்கையில் கழிவு என்றும் குப்பை என்றும் எதுவும் இல்லை. நாமும் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்படித்தான் வாழ்ந்து வந்தோம். மட்கும் குப்பைகளை மண்ணுக்கு உரமாகவும், மட்காத குப்பைகளை பழைய இரும்புக்கடையில் எடையாகவும் போட்டோம். இப்போது எல்லாம் மாறிவிட்டது. எதற்கும் நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். 

எப்படிப் பார்த்தாலும் குப்பைகள் குறித்து அரசுகளும், மக்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலகட்டமிது. அனைத்து வகையான வணிக நிறுவனங்களும் குப்பைகளை குறைக்க முன்வர வேண்டும். இந்நிறுவனங்கள் சரியாக திட்டமிட்டால் நிறைய குப்பைகளை குறைக்க முடியும். வரும் காலங்களில் குப்பைகளை கையாள தனியாக அமைச்சரகம் உருவாக்க வேண்டிய சூழல் உண்டாகும் வாய்ப்பே அதிகம். 

மொத்தத்தில் ஆக்கப்பூர்வமான கழிவு மேலாண்மை உடனடி தேவையாக இருக்கிறது. இப்போதும் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்தால் இயற்கை, நாம் வீசும் குப்பைகளை நம் மீதே வீசும்  !

மேலும் படிக்க:

நாமெல்லாம் குற்றவாளிகளே !

அக்னியையும் தாண்டி ...!

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms