Monday, March 21, 2011

அனைத்து அரசு அலுவலகங்களிலும் வீடியோ கேமரா ?

அரசு செயல்படுத்தும் எந்தத் திட்டமாக இருந்தாலும் அதில் ஒட்டுமொத்த மக்கள் நலன் கவனிக்கப்பட வேண்டும் . கட்சி நலன் கவனிக்கப்படக் கூடாது . மக்களுக்காகத் தான் அரசு . கட்சிக்காக அரசு இல்லை . யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு பயன்படும் திட்டங்களை தொடர்ந்து செயல் படுத்த வேண்டும் ." டாஸ்மாக் " திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி , " மழைநீர் சேகரிப்பு " திட்டத்தை மறந்தது போல் நடக்கக் கூடாது . ஒட்டுமொத்த மக்கள் நலனும் , ஒட்டு மொத்த வளர்ச்சியும் எல்லா காலகட்டத்திலும் கவனிக்கப்பட வேண்டும் . யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒரு சில விசயங்கள் மாறுவதே இல்லை . எல்லா இடங்களிலும் தரமில்லாத சாலை வசதிகள் , பிரச்சனை குறித்து மனு கொடுக்கப்போகும் போது காட்டும் அலட்சியம் , அரசு வேலைக்கு லஞ்சம் ( மாத சம்பளம்  2000 ஆக இருந்தாலும் சரி , 20000 ஆக இருந்தாலும் சரி )  , அரசு அலுவலகங்களில் லஞ்சம் என்று நாம் சந்திக்கும் அவலங்கள் மாறுவதே இல்லை . ஆட்சியை மாற்றுவதை விட , முதலில் இந்த மாதிரியான விசயங்களை மாற்ற வேண்டும் .  

அதற்கு என்ன செய்யலாம் ? . எல்லா அரசு அலுவலகங்களிலும் வீடியோ கேமரா பொருத்தி , அனைத்து அரசு அலுவலகங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் கண்காணித்தால் என்ன ? 

என்ன நடந்தாலும் , எது வந்தாலும் லஞ்சம் வாங்கியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டவர்கள் அதிகமாக வாழும் தேசம் இது . இவர்களுக்கு எதிராக எதுவும் செய்யாமல் இருப்பதற்கு பதில் இதை மட்டுமாவது செய்யலாம் . நாம் கண்காணிக்கப் படுகிறோம் என்று உணர்ந்தால் இவர்களின் வாங்கும் லஞ்சத்தின் அளவு கொஞ்சமேனும் குறையுமல்லவா ! 

நம் ஜனநாயக நாடு இதைச் செயல் படுத்துமா ?
..................................

Friday, March 18, 2011

தமிழ்நாட்டுக்குத் தேவை இரண்டு இலவசங்கள் ?!


தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே இரண்டு இலவசங்கள் தேவை . ஒன்று இலவச மருத்துவ வசதி , இன்னொன்று இலவச கல்வி வசதி . இரண்டுமே தற்பொழுது இலவசங்கள் என்ற போர்வையில் இருந்தாலும் உண்மையில் அவை இலவசமாக கிடைப்பதில்லை . பெரிய செலவு வைக்கும் எந்த அறுவை சிகிச்சையையும் நாம் இலவசமாக பெற முடியாது . தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் யாருமே பயன்பெறவில்லை என்று கூற முடியாது . மிக மிக குறைந்த அளவு மக்களே இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர் . ஆனால் , இதற்கு ஒதுக்கப்பட்ட பணம் , மருத்துவமனைகளுக்கும் , காப்பீட்டு நிறுவனத்திற்கும் லாபம் , அரசுக்கு இழப்பு . இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை வைத்து எல்லா வசதிகளுடன் கூடிய குறைந்தபட்சம் ஓரே ஒரு மருத்துவமனையாவது கட்டி இருக்க முடியும் . ஆனால் , கட்டவில்லை .இதே நிலைமை தான் கல்விக்கும் . ஓரளவிற்குத்  தரமான பள்ளிக்கல்வி இலவசமாக கிடைக்கிறது .ஆனால் , தரமான தொழிற்கல்வியையோ , மருத்துவ கல்வியையோ நாம் இலவசமாக பெற முடியாது . 

இன்றைய சூழ்நிலையில் , எந்தக் குடும்பமாக இருந்தாலும் மருத்துவத்திற்க்காகவும் , கல்விக்காகவும் தான் அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது . ஒரு பெரிய மருத்துவ செலவை எல்லாக் குடும்பமும் ஏதோ ஒரு காரணத்திற்காக செய்ய வேண்டியுள்ளது . அந்த மருத்துவ செலவு அந்தக் குடும்பத்தின் சேமிப்பை கரைத்து அவர்களை கடனாளி ஆக்குகிறது . அது போலத் தான் கல்வியும் , நல்ல கல்விக் கூடத்தில் இடம் கிடைக்கவும் , தொடர்ந்து படிக்க வைக்கவும் பெரும் தொகை தேவைப் படுகிறது .அவர்களை மீண்டும் கடனாளி ஆக்குகிறது . இந்தக் கடன்களில் இருந்து  மீள பெரும் போராட்டத்தைச்  சந்திக்க வேண்டியுள்ளது . கல்விக்கடன் திட்டம் ஓரளவிற்குப்  பயன் தருகிறது , ஆனால் , ஒட்டுமொத்த தீர்வாக அத்திட்டம் அமையவில்லை . 

நமது கல்வித் திட்டத்தையே ஓட்டுமொத்தமாக மாற்ற வேண்டும் . நாம் படிக்கும் பெரும்பான்மையான விசயங்கள் நம் வாழ்க்கையில் எந்த நேரத்திலும் பயன் தருவதில்லை . அடிப்படை விசயங்களைத் தவிர்த்து மற்றவை நீக்கப்பட வேண்டும் . நம் கல்வி முறை , ஆரம்ப கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை மனப்பாடம் பண்ணும் திறமையை மட்டுமே வளர்க்கிறது . எவ்வளவு படித்தாலும் வேலைக்காக மற்றவர்களையும் , அரசையும் சார்ந்தே நாம் இருக்க வேண்டியுள்ளது .படித்த எல்லோருக்கும் அரசாலோ மற்றவர்களோ வேலை கொடுக்க முடியாது . சுய வேலை வாய்ப்பு தான் தீர்வு . நம் கல்வி முறை சுய வேலைவாய்ப்பை உருவாக்க முனைவதே இல்லை . அதனால் தான் நாடு முழுவதும் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது . சுய வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில் நம் கல்விமுறையை மாற்றி அமைக்க வேண்டும் .  செயல் வழிக் கற்றல் முறையும் , சமச்சீர்க் கல்வியும் பாராட்டுக்குரியவை . யார் ஆட்சிக்கு வந்தாலும் எல்லா வகுப்புகளுக்கும் சமச்சீர்க் கல்வி முறையை அமல் படுத்த வேண்டும் . 

நமக்கு வேண்டியதெல்லாம் இரண்டு தான் . ஒன்று , ஒவ்வொரு இந்தியனுக்கும்  பிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஆகும் மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும் . தரமான மருத்துவ வசதி எல்லோருக்கும் ,எல்லா நேரங்களிலும் இலவசமாக கிடைக்கச் செய்ய வேண்டும் .இன்னொன்று , இந்தியர்கள் அனைவருக்கும் ஆரம்பக்கல்வி முதல் வேலை வாய்ப்பை உருவாக்கும் கல்வி வரை இலவசமாக கொடுக்கப்பட வேண்டும் . நம் தேசிய மொழியான இந்தி , ஆரம்பக்கல்வி முதல் எல்லோருக்கும் கற்றுத் தரப்பட வேண்டும் , தமிழ்நாட்டிலும் தான் . தமிழ்நாட்டில் தமிழ் , இந்தி , ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் எல்லோருக்கும் கற்றுத் தரப்பட வேண்டும் .அதே நேரம் , தமிழ் மொழியை எந்தக் காரணத்திற்க்காகவும் ஒதுக்கக் கூடாது .  இன்றைய சூழ்நிலையில் இவை எல்லாம் சாத்தியமா ! என்று கூட நினைக்கத் தோன்றும் . ஆனால் , சாத்தியம் தான் .

மருத்துவ வசதியும் , கல்வியும் இலவசமாக வேண்டும் !

மற்ற இலவசங்கள்  எதுவும் வேண்டாம் !

மேலும் படிக்க :

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !

திண்ணைப் பேச்சு வீரரிடம் ! 
................................................................................

உலகத்தின் தூக்கம் கலையாதோ ?



" உலகத்தின் தூக்கம் கலையாதோ ...!

உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ ...!

உழைப்பவர் வாழ்க்கை மலராதோ ...!

ஒருநாள் பொழுதும் புலராதோ ...!  "


"தரைமேல் பிறக்க வைத்தான்

எங்களைத்  தண்ணீரில் பிழைக்க வைத்தான் !

கரைமேல் இருக்க வைத்தான்

பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான் !

................................................................................................

ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்

ஒவ்வொரு நாளும்  துயரம் !

ஒரு ஜான் வயிறை வளர்ப்பவர் உயிரை

ஊரார் நினைப்பது சுலபம் ! "



இந்தப்பாடல் படகோட்டி படத்துக்காக திரு . வாலி அவர்கள் எழுதியது . திரு .TMS அவர்களால் அற்புதகமாக பாடப்பட்டது . MGR உணர்வுபூர்வமாக நடித்து இருந்தார் .மீனவர்களின் துன்பங்களையும் , துயரங்களையும் வெளிப்படுத்தும் வகையில் இந்தப்பாடல் அமைந்து இருக்கும் . இந்தப்பாடல் வரிகள் இன்றைய சூழலுக்கும் பொருந்துகின்றன . ஆனால் , " ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்   " என்ற வரி இன்றைக்கு பொருந்துமா ? மீன் பிடிக்கச் சென்றவர் எப்படியும் மறுநாள் வருவார் என்ற நம்பிக்கை அன்று இருந்தது , இன்று இல்லை !. சாதாரண மனிதனுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை . ஆனால் , நடப்பதோ மக்கள் ஆட்சி . உங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமெனில் நீங்கள் பதவியில் இருக்க வேண்டும் . இல்லையென்றால், உங்களை  யார் வேண்டுமென்றாலும் , என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் . கேட்க நாதி இல்லை . 


இன்று , பாதுகாப்புக்கென்று செய்யப்படும் அனைத்தும் ( ராணுவம் ,கப்பல் படை , வான் படை , காவல் நிலையங்கள் , பல்வேறு தொழில்நுட்பங்கள் இன்னும் பல)    " மனிதனிடமிருந்து மனிதனைக் காப்பதற்காக ". என்ன கொடுமை பாருங்கள் . எந்த நாடக இருந்தாலும் , எந்த மதமாக இருந்தாலும் இறப்பவன் மனிதன் தானே . எத்தனை எத்தனை பிரிவினைகள் . நம் மனதை நன்றாக சலவை செய்து வைத்துள்ளனர் . பிரிவினைகளை ஒழிக்க யாருமே முயலவில்லை . பிரிவினைகளை வளர்க்கத்தான் செய்கின்றனர் . சிங்கள கப்பல் படை வீரர்கள் , தமிழக மீனவர்களை கொல்லத்தூண்டுவது எது ? எப்படி ஒரு சக மனிதனை சந்தோசமாக கொல்ல முடிகிறது ? உலகம் முழுவதும்  மனிதர்களால் மனிதர்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும் .

உலகம் எல்லோருக்கும் பொதுவானது ! .

எங்கு வாழ்ந்தாலும் மனிதர்கள் அனைவரும் மனிதர்களே !

மேலும் படிக்க :

காங்கிரஸ்காரர்களையும்,காங்கிரசையும் வன்மையாக கண்டிப்போம் !

காங்கிரஸை அழிப்போம் !
.......................................................

தமிழக பத்திரிக்கை உலகம் - ஆளும் கட்சியின் அடிமையா ?




தமிழக பத்திரிக்கை உலகம் ஆளும் கட்சியின் அடிமையாக மாறிவிட்டது . மக்கள் பிரச்சனைகள் தலைப்பு செய்தியாக வருவதில்லை . அரசியல் தலைவர் குளிக்கப்போனார்  , நேற்று அவர் தூங்கவில்லை , கடிதம் எழுதினார் , கூட்டு வைத்தார், டெல்லி பயணம் ( பதவி பிச்சை வாங்க) . ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஆட்டம் காண்கிறது .

முதல்வர் மற்றும் பிரதமர் பேசும் எதற்கும் பயன்படாத வெட்டிப்பேச்சை
பக்கம் பக்கமாக போடுகின்றன .மக்களுக்கு பயன்தரும் செய்திகளை எங்கோ
ஒரு ஓரத்தில் போடுகின்றன . தினத்தந்தி படித்துதான் நான் நன்கு தமிழ் கற்றுக் கொண்டேன். இன்றும் எழுத்துப்பிழைகள் குறைவாக உள்ள நாளிதழாக தினத்தந்தி உள்ளது .ஆனால், இப்பொழுது  தினத்தந்தியில் வரும்  தலைப்பு செய்திகள் அனைத்தும் ஆளும் கட்சியின் ஜல்ராவாகவுள்ளது . எப்போதுமே தினத்தந்தி ஆளும் கட்சியின் ஜால்ரா தான் .ஆனால், அது  வெளியில் தெரியாது . இப்போது சாதாரண மனிதனுக்குக்கூட தினத்தந்தியின் 
நிலை புரியும் . அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும்  அவர்களுக்கும் ஜால்ரா போடுவார்கள் . நம் நிலைமை தான் பாவம் .


மக்கள்  பிரச்சனைகள் தலைப்பு செய்தியாக வருவதில்லை . தினத்தந்தியின் தலையங்கம் யாருமே படிக்க முடியாத வகையில் மிகச்சிறிய எழுத்தில் அச்சடிக்கப் பட்டுள்ளது . தினத்தந்தியில் தலையங்கம் என்று ஒன்று வருவதே மூன்று நாட்களுக்கு முன்புதான் எனக்குத்தெரியும் . தலையங்கத்தைமுதல்பக்கத்தில் போடுங்கள் அல்லது 4 வது பக்கத்திலேயே 
பெரியதாகபோடுங்கள் . இல்லையென்றால் தலையங்கமே போடாதீர்கள் . 

இந்த நேரத்தில் சுப்பிரமணியன் சாமி அவர்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும் . இந்தியாவின் துணிச்சல் மிகு மனிதர் . எத்தனையோ பேருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றித் தெரிந்திருந்தாலும் யாரும் வழக்கு தொடர  முயற்சி செய்யவில்லை . இவர் மட்டுமே வழக்கு தொடர்ந்தார் . வெற்றியும் பெற்றார் . பெருவாரியான மக்களுக்கு ஸ்பெக்ட்ரம் பற்றி தெரியவந்தது சுப்பிரமணியன் சாமி அவர்கள் புண்ணியத்தில் தான் . அடுத்து தமிழக முதல்வரை குறி வைத்துள்ளார் ? ஆக மொத்தத்தில் இவர் ஒரு " ஒன் மேன் ஆர்மி " . இவர் பணி தொடரட்டும் . இவர் புண்ணியத்தில் இந்தியாவில்   ஜனநாயகம் கொஞ்சம் உயிருடன் இருக்கிறது .


மின்சார தட்டுப்பாடு மீண்டும் தலை தூக்குகிறது . இரண்டு மணி நேரமாக இருந்த மின்தடை தற்பொழுது ஐந்து மணி நேரமாக மாறிவிட்டது . இது மட்டும் இல்லாமல் எப்பொழுது மின்சாரம் போகும் , எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது . மின்சார தட்டுப்பாடு ஆரம்பித்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டாலும்  ஆளும் அரசு எதிர் கட்சியை குறை சொல்கிறது .
இதைப்பற்றி எந்தப்   பத்திரிக்கையும் பெரிதாக எழுதுவதில்லை . சின்ன பெட்டிச்  செய்தியாக மட்டுமே இடம் பெறுகிறது .


தமிழகத்தில் எல்லாப் பத்திரிக்கைகளும் ஆளும் கட்சியின் அடிமையாக இல்லை . ஆனால் , எந்தப் பத்திரிக்கையும் (ஒரு சில விதிவிலக்குகள் உண்டு ) நடுநிலையாகவும் , மக்கள் நலனில் கவனம் செலுத்தும் நிலையிலும் இல்லை .அவரவர் சார்ந்த அரசியல் கட்சியின் நலனுக்காகவும் , பரபரப்பாக எதையாவது எழுதி பணம் சம்பாதிக்கவும் மட்டுமே பத்திரிக்கை நடத்துகின்றனர் . இடையில் மாட்டிக்கொள்வது இளிச்சவாயர்களான நாம்தான் .


உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கரையிருந்தால் அடுத்து நடைபெறும் தேர்தலில் மக்கள் ஓட்டுப்போட உதவவேண்டும் . எப்படி ? 234 தொகுதிகளிலும் களப்பணியாற்ற வேண்டும் . ஒவ்வொரு தொகுதியிலும் 5 வருடத்திற்கு முன்பு என்னென்ன பிரச்சனைகள் இருந்தன . கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அந்தப்பிரச்சனைகள் தீர்க்கப்பட்டனவா இல்லையா ? தீர்க்கப்படவில்லை எனில் அந்த சட்டமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட   நிதி எங்கே போனது ? தொகுதிக்கு என்ன செய்திருக்கிறார் ? என்று கண்டுபிடித்து எழுதுங்கள் . இதைச் செய்யக்கூடிய தகுதி  நிறையப்
 பத்திரிக்கைகளுக்கு உள்ளது .இவர்களின் நிருபர்கள் எல்லாத்தொகுதியிலும்
உள்ளனர்  . ஆனால் ,  செய்ய மாட்டார்கள் .  வெட்டிக் கருத்துக்கணிப்பு
 மட்டும்   எல்லாப் பத்திரிக்கைகளும் வெளிவரும் .


சட்டமன்ற உறுப்பினர் எந்தக்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நிதியை ஒழுங்காகப் பயன்படுத்தி தொகுதிக்கு நல்லது செய்திருந்தால் அவர் மீண்டும் பதவிக்கு வரட்டும் . இல்லையென்றால் அவரை தூக்கி எறியுங்கள் . கட்சியைப் பார்த்து ஓட்டுப் போடாதீர்கள் . உங்கள் தொகுதியில் நிற்பவரில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உங்களுக்கு நல்லது செய்பவரை தேர்ந்தெடுங்கள் .

கட்சிக்காக நடத்தப்படும் ஆட்சியை தூக்கி எறியுங்கள் !


மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியை கொண்டு வாருங்கள் !

தமிழக பத்திரிக்கை உலகம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள

இந்த இணைய தொடர்பில் சென்று  படித்துப்பாருங்கள் .


ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஆட்டம் காண்கிறது !
..............................................

காங்கிரஸ்காரர்களையும்,காங்கிரசையும் வன்மையாக கண்டிப்போம் !

                                                                        
சோனியாகாந்தி யார் ? காங்கிரஸ் கட்சியின் தலைவி அவ்வளவுதானே.
அவர் , மத்திய அரசு சார்ந்த எந்தப்பதவியிலும் இல்லை . அப்புறம் எதற்கு மத்திய அரசு சார்ந்த விளம்பரங்களில் சோனியாகாந்தியின் படம் வெளியிடப்படுகிறது . கட்சித்தலைவி என்றால் கட்சிக்குள் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் சொந்தப்பணத்தில் உங்கள் தலைவிக்கு விளம்பரம் செய்யுங்கள் . எங்கள் வரிப்பணத்தில் ஏன் விளம்பரம் செய்கிறீர்கள் ? குடியரசுத்  தலைவர் பெயர் கூட இடம்பெறுவதில்லை .





கடந்த ஆண்டு நடந்த ஒரு சம்பவம் . ஜூலை 6 ஆம் தேதி டெல்லி விமான நிலையத்தில் 3 வது டெர்மினல் திறக்கப்பட்டது . அந்த அடிக்கல்லில்  சோனியாகாந்தி பெயர் எதற்கு உள்ளது ?


                               


தேசிய நெடுஞ்சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்ட பெயர் பலகைகளில் மன்மோகன் சிங் படமும் சோனியா காந்தி படமும் இடம்பெற்றன .இங்கும் நெடுஞ்சாலைத் துறைக்கும் சோனியா காந்திக்கும் என்ன சம்பந்தம் ?  நீதி மன்றம் , இவர்களின் படங்கள் இடம் பெற்ற பெயர் பலகைகளை நீக்கக்கோரி உத்தரவிட்டது . ஆனால் ,இன்னும் பெரும்பாலான இடங்களில் அவர்களின் படங்கள் உள்ள பெயர் பலகைகள் நீக்கவில்லை .( தேசிய நெடுஞ்சாலைகளின் நடுவில் வைக்கப்பட்ட அரளிச் செடிகளுக்கு தண்ணீர் ஊத்துகின்றனர் . ஆனால் வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக நடப்பட்ட மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதில்லை ,பல இடங்களில் மரங்களே நடப்படவில்லை . கணக்குக் காட்டாமல் வாங்கப்படும் சுங்கப்பணம் எங்கே போகிறது ??? )




இதைக் கண்டிக்காத சோனியாகாந்தியையும், இந்தச்செயலை தொடர்ந்து செய்து வரும் மத்திய அமைச்சர்களையும் வன்மையாக கண்டிப்போம் . இனிமேலாவது இதை நிறுத்திக்கொள்ளுங்கள் .


இதுவரை நடந்த பெரும் ஊழல்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் போதுதான் நடந்துள்ளது . உதாரணம் : நகர்வாலா , போபர்ஸ் , ஹவாலா , காமன்வெல்த் ,ஆதர்ஷ் , ஸ்பெக்ட்ரம் இன்னும் பல . அடுத்து S கற்றை ஸ்பெக்ட்ரம் ??  ஊழல் செய்யவே ஆட்சிக்கு வருகின்றார்களா என்றும் தெரியவில்லை . அப்போ காங்கிரஸ் இருக்கும் வரை ஊழல் இருக்கும் .  ஊழல் இருக்கும் வரை இந்தியா வளராது . அதனால அடுத்து யாருக்கு ஓட்டு போடலாம் ?????!!!!!!? அது ரகசியம்   ?


பாரத பிரதமர் சொல்கிறார் "ஊழல்தான் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது ". யார் ஆட்சியில் ஊழல் நடக்கிறது ? உங்கள் ஆட்சியில் தானே . உங்களால் தான் நாட்டில் நடக்கும் ஊழலைத் தடுக்க முடியவில்லையே அப்புறம் எதற்கு இன்னும் பதவியில்இருக்கிறீர்கள் ?  தேர்தல் செலவு உங்கள் ஊழல் பணத்தைவிடகுறைவுதான் . அதனால் மீண்டும் தேர்தல் நடத்துவதில் ஒன்றும் தப்பில்லை .

 மக்கள் நலனும் , நாட்டின் வளர்ச்சியும் தான் முக்கியம் என்றால் உடனே ஆட்சியைக் கலைக்க வேண்டியது தானே ஆனால் செய்யமாட்டீர்கள்  . பதவி சுகம் உங்களை கலைக்க விடாது .  மக்கள் நலனுக்காக மட்டும்  ஆட்சி செய்யுங்கள் . இல்லை என்றால் உடனே பதவி  விலகுங்கள் . வீண்பேச்சு பேசாதீர்கள் ! சோனியாகாந்தி அவர்களே , பிரதமர் வேண்டுமானால் உங்கள்பொம்மையாக இருக்கலாம் ,அதற்காக         இந்தியனும் ,இந்தியாவும்  உங்கள் பொம்மையாக இருக்கும் என்று நினைக்காதீர்கள் !

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும் போது அது வேறு நாடு என்று சொன்னீர்கள் . இப்போது தமிழக மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள் . இந்தியர்கள் அனைவரும் தமிழர்கள் இல்லை .ஆனால் இந்தியாவில் வாழும் தமிழர்கள் அனைவரும் இந்தியர்கள் தானே. இப்பொழுது கொல்லப்படும் ஒவ்வொருமீனவரும் இந்தியர் . இப்போது என்ன சொல்லப்போகிறீர்கள் ? ஒட்டுமொத்த இந்தியாவின் ஆதரவைப்   பெறவேண்டிய காலகட்டம் இது .
ஊடகங்களும் "தமிழக மீனர்வர்களைக்  காப்பாற்றுவோம்  " என்று தான் போராடுகின்றன . இனி "இந்திய மீனர்வர்களைக்  காப்பாற்றுவோம்" என்று போராட வேண்டும் .  இந்தியிலும் , ஆங்கிலத்திலும் நம் மீனவர்கள் நிலை மொழி பெயர்க்கப்பட  வேண்டும் . ஓட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை பெறவேண்டும் .

இலங்கை கடற்படை அவர்கள் எல்லையில் காவல் காக்கின்றனர் . இந்திய கடற்படை  என்ன செய்கிறது ? பதில் சொல்லுங்கள் ?
பூமியில் வாழும் எல்லா மனிதர்களும்  சமம் தான் . ஒரு மனிதன் பெரிய பதவியில் இருக்கும் போது கொல்லப்பட்டால் அதற்கு காரணமானவர்களை பல ஆண்டுகளுக்கு கொடுமைப் படுத்துவீர்கள் முடிந்தால் கொல்வீர்கள் . ஆனால் கொல்லப்படுவது ஒரு  சாதாரண மனிதனாக இருந்தால் ஒரு நாள் இரங்கல் ,  2  இலட்சம் பணம் அவ்வளவுதானா ?  பதில் சொல்லுங்கள் ?

மக்கள் நலனுக்காக மட்டும் ஆட்சி செய்யுங்கள் !

இல்லையென்றால் உடனே பதவி விலகுங்கள்  !

வீண்பேச்சு பேசாதீர்கள் !

கட்சி நலன் சார்ந்த அரசியலை காலி செய்வோம் !

மக்கள் நலன் சார்ந்த அரசியலை உருவாக்குவோம் !
......................................

சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் அவர்களைப் பாராட்டுவோம் !


                                                              
சென்னை, தமிழ்நாட்டின் தலைநகரம் . சென்னையைச் சிங்காரச் சென்னையாக மாற்றுவோம் என்று பல வருடங்களாகச் சொல்லப்பட்டு வந்தாலும் தற்போதைய மேயர் மா.சுப்பிரமணியன் அவர்களின் வரவுக்குப் பிறகுதான் சென்னைக்கு கொஞ்சம் அழகு கூடியுள்ளது . நம் பணத்திற்கு வேட்டு வைக்கும் மலிவான விளம்பரங்களும் , வாகனம் ஓட்டுபவர்களை திசை திருப்பும் ஆபாச போஸ்டர்களும் , இரண்டு , மூன்று மாதத்திற்கு பின்பு நடைபெறும் மாநாடு அல்லது கட்சித்தலைவர் பிறந்தநாளுக்காக எழுதப்படும் புரட்சி வாசகங்களும் மட்டுமே இடம் பெற்று வந்த சென்னை நகரின் சுவர்கள் , இன்று கருத்தைக் கவரும் பலவண்ண ஓவியங்களின் இருப்பிடமாக இருக்கிறது . இந்த நிலையைத் தொடரச் செய்ய வேண்டும் . இது சாதாரண விசயமாகத் தெரிந்தாலும் இதற்கு முன்பு யாரும் செய்யாதது .

சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன . இது எல்லாத் தரப்பு மக்களுக்கும் பயன்தரக்கூடியது . இதற்குப் பல வகைகளில் எதிர்ப்புக் கிளம்பியது . ஒரு சில இடங்களில் சிறுவர்கள் விளையாடுவதற்காக இருந்த நிலங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டதால் சிறுவர்கள் விளையாடுவதற்கு நிலமில்லாமல் போய்விட்டது . ஆனால் பூங்காவையே சிறுவர்கள் விளையாட பயன் படுத்த முடியும் . இரண்டாவது ,பணக்காரர்கள் நடை பயிற்சிக்காக மட்டுமே பூங்காக்கள் பயன்படுகின்றன என்று சொல்லப்பட்டது . ஆனால் , இதிலும் உண்மை இல்லை . பூங்காக்கள் எல்லோருக்குமே பயன்படுகின்றன . பச்சை பசேல் புல்வெளிகள் , அழகான மரங்கள் , செடி ,கொடிகள் , சிறுவர்கள் விளையாடும் அழகு , இதமாக வீசும் தென்றல் இவையனைத்தும் இயந்திர வாழ்க்கையில் தினமும் அல்லல் படும் மனதிற்கு ஒரு அமைதியைத் தருகிறது . இயற்கையின் ஒரு சிறு துளியாக பூங்கா உள்ளது .

சாலைகளில் சுற்றித் திரியும் மன நோயாளிகள் , ஆதரவற்றோர் , முதியோர்கள் நலனில் மேயர் அவர்கள் அக்கரை காட்டி வருவது பாராட்டுக்குரியது . அவர்களுக்காக இரவு காப்பகங்கள் அமைக்கப்படுவது மனதிற்கு ஆறுதலைத் தருகிறது . ஆதரவற்றோர் எங்குமே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் . இந்த உலகில் வாழ்வதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு . இதற்கு எல்லோரும் இணைந்து செயலாற்ற வேண்டும் .
சென்னை நகரில் இன்னும் தீர்ப்பதற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன . எல்லாத் தெருவிலும் குப்பைகள் , தரமில்லாத சாலைகள் , இன்னும் பிச்சைக்காரர்கள் இருப்பது , எதிர்கால சிந்தனையில்லாமல் கட்டப்படும் மேம்பாலங்கள் , தொடரும் போக்குவரத்து நெரிசல் , கூவம் , நடைபாதையில் இன்னும் மக்கள் வசிப்பது , அவர்களின் வாழ்க்கைத்தரம் உயராதது , சுட்டுச்சூழல் பாதிக்கப்படுவது என்று நிறைய பிரச்சனைகள் . இவை எல்லாம் தீர்க்கப் பாட வேண்டும் .

சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் அவர்களைப் பாராட்டுவோம் !
................................................

ஏழைகள் சார்பில் ராசாவை பாராட்டுகிறேன்:கருணாநிதி - இதற்கு விகடன் வாசகரின் விமர்சனம்


மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா? மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.

1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வாதி படைத்தவர்களாச்சே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரையம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.

நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல். இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

நியாய கணக்கு:

இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம். அப்போ 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை 2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம். இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள். ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.

துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.

துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.

துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.

துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.
துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.

துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.

துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.
துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.

துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.

துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர். அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலசவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.

எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.

சிவகுமார்.M
சீனியர் எஞ்சினியர்
தனியார் நிறுவனம்
துபாய்

நன்றி - விகடன் ........................................................   

கட்சி அரசியலை வேரறுப்போம் !


சிதறி கிடந்த மக்களை ஒன்றுபடுத்த அன்று கட்சி ஆரம்பிக்கப்பட்டது . ஆனால் இன்று அந்த கட்சி தான் மக்களைப் பிரிக்கிறது . நமது நாடு பாரம்பரியமானது . பல்வேறு விதமான கலாச்சாரங்கள் பின்பற்றப் படுகின்றன . பல்வேறு விதமான மொழிகள் பேசப் படுகின்றன . பல்வேறு விதமான மதங்கள் பின்பற்றப் படுகின்றன . இப்படி எத்தனையோ பேதங்கள் இருந்தாலும் நாம் அனைவரும் மனிதர்கள் . ஆனால் நம் ஒற்றுமையை கட்சி பேதங்கள் அசைத்துப் பார்க்கிறது .

 மக்கள் நலன் சார்ந்த அரசியல் அழிந்து வருகிறது . கட்சி நலன் சார்ந்த அரசியல் வளர்ந்து வருகிறது . இன்று இருக்கும் அரசியல் தலைவர்கள் மக்களைப் பற்றியோ ,மக்கள் நலன் சார்ந்தோ சிந்திப்பதில்லை . கட்சி நலன் சார்ந்து , கட்சியை எப்படி வளர்ப்பது ? ஆட்சியை எப்படி பிடிப்பது ? பதவிகளை எப்படி கைப்பற்றுவது ? என்று தான் சிந்திக்கின்றனர் . இதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள், இன்றைய அரசியல்வாதிகள் . ஒரு சிலர் மட்டுமே மக்கள் நலன் சார்ந்தும் , ஒட்டு மொத்த முன்னேற்றம் சார்ந்தும் சிந்திகின்றனர் , செயல்படுத்துகின்றனர் .

மக்கள் தொடர்ந்து ஏமாற்றப் பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் . அரசாட்சி முடிவு பெற்றதாக சொல்லிக்கொண்டாலும் இன்றும் அரசாட்சி, நம் ஜனநாயகத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறது . அடுத்த கட்ட தலைவர்களும் இளவரசர்கள் போலே உலவுகின்றனர் கட்சியை வளர்க்கும் பணியில் மத்தியிலிருந்து மாவட்டம் வரை . கட்சியை வளர்த்தால் தான் எல்லா இடங்களிலும் ஆட்சியை பிடிக்க முடியுமாம் . ஆட்சியைப் பிடித்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியுமாம் . நன்றாக கதை அளக்கிறார்கள் . நல்லதை இப்போதே செய்ய ஆரம்பித்தால் கட்சி தானாக வளருமே . என்ன கொடுமை இது ?

வியாபார உலகில் இன்று எல்லாம் வியாபாரம் தான் . இதற்கு அரசியலும் விதிவிலக்கல்ல . ஆனால் இது நாட்டுக்கு அழிவைத் தரக்கூடியது . கல்வியும் , அரசியலும் வியாபாரமாவதைத் தடுக்கா விட்டால் நாம் மிகப்பெரிய அழிவைச் சந்திக்க நேரிடும் . பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன . கல்வியையும் , அரசியலையும் விட்டுவிடுங்கள் அவை பிழைத்துக்கொள்ளட்டும் . அற்பணிப்பு  உணர்வும் , சேவை மனப்பான்மையும் உள்ளவர்கள் மட்டுமே கல்வித் துறையிலும் அரசியலிலும் சிறந்து விளங்க முடியும் . அரசியல் வியாபாரத்திலும் இடைத் தரகர்கள் உருவாகி விட்டது           மானக்கேடான விசயம் . இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிவது அவசியம் .

மனசாட்சியே இல்லாத மனிதர்களாக அரசியல்வாதிகள் மாறிவிட்டனர் . மக்களின் வரிப் பணத்தில் தான் வாழ்கிறோம் என்பதையே மறந்து விட்டனர் . கட்சித் தலைவர் என்னவோ தன் சொந்த பணத்தில் ஆட்சி நடத்துவது போலவும் இவர்கள் அவர் வழி நடப்பது போலவும் நடந்து கொள்கின்றனர் . மக்களின் வரிப்பணத்தில் தொட்டதுக்கெல்லாம் வெட்கமே இல்லாமல் விளம்பரத்தட்டிகள் (பேனர்கள் ) வைக்கின்றனர் . சம்பந்தமே இல்லாமல் ரெண்டு மைல் தூரத்திற்கு கொடிக்கம்பங்கள் , ஒளிவிளக்குகள் அமைக்கின்றனர் . ஏற்கனவே இருப்பவர்கள் தான் இப்படி என்றால் , புதிதாக வருபவர்களும் பேனர்கள் வைப்பதிலும் , தோரணம் கட்டுவதிலும் தான் ஆர்வம் காட்டுகின்றனர் . அதிக பேனர்கள் வைத்ததை பெருமையாக மேடையில் பேசுகின்றனர் . இவர்கள் மாற்றத்தை உருவாக்குவார்கள் என்று எப்படி நம்புவது ?

தான் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் அன்றாட வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறான் சாதாரண மனிதன் . இன்று முன்னேற வேண்டுமானால் நீங்கள் அதிக பேரை ஏமாற்ற வேண்டும் . யார் அதிக பேரை ஏமாற்றுகிறாரோ அவரே வெற்றி பெற்றவர் . இங்கே நீங்கள் நீதி , நேர்மை பார்க்கக் கூடாது , பார்த்தால் தோற்று விடுவீர்கள் . நம்மை , நம் இளிச்சவாய்தனத்தை எல்லோரும் நன்கு பயன்படுத்துகின்றனர் . நமக்கு எந்த விதத்திலும் பயன் தராத எத்தனையோ பொருட்களை தினமும் பயன்படுத்துகிறோம் .ஏன் என்று கேட்டால் , உலகமயமாதல் , நாம் வளரும் நாடு ,இதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று பதில் வருகிறது .


உலகத்தின் மிகப்பெரிய வியாபாரச் சந்தையாக இந்தியா மாறிவிட்டது . இந்தியாவில் மட்டும் 1,38,73,854 சில்லரை வர்த்தக அங்காடிகள் உள்ளன 2009 ஆம் ஆண்டு கணக்குப்படி . இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவில் உள்ள சில்லரை அங்காடிகளின் எண்ணிக்கை 48,17,367 . வித்தியாசம் இரண்டு மடங்குக்குமேல் ( G.K.Today February 2011) . இவ்வளவுக்கும் இந்தியா ஒரு விவசாய நாடு . 80% மக்கள் விவசாயத்தையும் , விவசாயம் சார்ந்த தொழில்களையும் நம்பி வாழ்கின்றனர் . விவசாயம் சார்ந்த பெரிய திட்டங்கள் இதுவரை செயல்படுத்தவே இல்லை . விவசாயம் தீண்டத்தகாத தொழில் போல் ஆகிவிட்டது . விளைநிலங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக விற்கப்படுகின்றன . விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை . உரங்கள் மண் வளத்தைப் பாழ்படுத்தி விட்டன . தொழிற்சாலைக் கழிவுகள் நீர் ஆதாரங்கள் அனைத்தையும் பாதிக்கின்றன . இன்னும் கொஞ்சம் நாட்களில் சோறு கிடைக்காமல் அலையப்போகிறோம் . அப்போதும் எதுவும் பேசாமல் மாத்திரை வடிவில் கிடைக்கப்போகும் உணவை உண்டு மருத்துவமனைகளில் வாழப்போகிறோம் .

பெரும் வணிக நிறுவனங்களின் பிடியில் அரசியலும் , அரசியல்வாதிகளும் உள்ளனர் . தேர்தலுக்கு செலவளிக்கப்படும் பணத்தின் பெரும் பகுதி இந்த வணிக நிறுவனங்களுடையது . இதற்காக அரசு இயந்திரம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் விருப்பம் போல் சுழலும் . வளைந்து கொடுக்கும் . அப்பாவி மக்களைப் அடித்து விரட்டும் . அரசு மானியத்தில் , 24 மணி நேர மின்சார , தண்ணீர் வசதியுடன் , ஊரெங்கும் தொழிற்சாலைகள் அமையும் . தொழிற்சாலைக் கழிவுகள் பக்கத்தில் இருக்கும் அந்தப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் ஆறு அல்லது குளத்தில் கலக்கும் . இதை யாரும் கேட்க மாட்டார்கள் . அவர்கள் பொருட்களை உற்பத்தி செய்து வேண்டுமென்றே அதிக விலை நிர்ணயிப்பார்கள் . உள்நாட்டில் விலை போகாது . ஏற்றுமதி செய்யப்படும் . இவர்களுக்கும் நம்மை அடிமையாக வைத்திருந்த ஆங்கிலேயர்க்கும் பெரிய வித்தியாசமில்லை . தொழிற்சங்கம் என்பதே இல்லாமல் செய்து விட்டனர் . யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டுத் தூக்கலாம் . யாராலும் கேள்வி கேட்க முடியாது . இது தான் இன்றைய நிலை .

நாட்டில் இப்படி எத்தனையோ மக்களைப் பாதிக்கும் விசயங்கள் இருந்தாலும் இங்கு இருக்கும் கோடானகோடி கட்சிகள் கண்டுகொள்வதில்லை . ஆட்சியை பிடிக்கவே போராடுகின்றனர் . மக்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களை தங்கள் ஓட்டு வங்கியாக மாற்றவே முயல்கின்றனர் . இதற்கு ஜாதி , மதம் , சமூகம் என்று பல்வேறு ஆயுதங்களை பயன் படுத்துகின்றனர் . ஜாதி சார்ந்த அரசியல் மீண்டும் தலைதூக்குகிறது . இதை இப்போதே தடுக்க வேண்டும் . ஜாதிப்பேரைச் சொல்லி ஓட்டு கேட்கும் யாருக்கும் ஓட்டுப் போடாதீர்கள் . அப்படிப் போட்டாலும் உங்களுக்கு எந்த நன்மையையும் இல்லை . இதை எல்லாம் விட பெரிய பேதம் கட்சி சார்ந்த பேதம் .

அன்று கட்சித் தலைவர்களை முன்மாதிரியாக கொண்டு கட்சியில் இணைந்தார்கள் . தனது தலைவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற பிம்பத்தில் வாழ்ந்து வந்தார்கள் , வருகிறார்கள் . தனது தலைவரையும் , கட்சியையும் உயிரினும் மேலாக மதித்தான் , இதற்காக மற்றவர்களிடம் சண்டையும் போட்டான் , சாதாரண தொண்டன் . பணம் இறங்கி விளையாட ஆரம்பித்த பிறகு உண்மைத் தொண்டனுக்கு எந்த மதிப்பும் இல்லை . ஆனாலும் விட்டுக்கொடுக்காமல் தான் சார்ந்த கட்சியின் தவறான செயல்பாடுகளுக்குக் கூட எந்த எதிர்ப்பும் காட்டுவதில்லை . இது தான் நம் ஜனநாயகத்தின் பிகப்பெரிய வியாதி .

தப்பு யார் செய்தாலும் தட்டிக் கேட்க வேண்டும் . " நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே " வழி வந்தவர்கள் தானே நாம் . தப்பு செய்தவர் தலைவராக இருந்தாலும் தட்டிக் கேட்க வேண்டும் . கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் , ஆனால் ஓட்டு மட்டும் எனக்குப் போடுங்கள் , என்று சொல்பவர்களை என்ன செய்வது . நல்ல மக்கள் தலைவராக இருந்தால் ,"யார் கொடுக்கும் பணத்தையும் வாங்காதீர்கள் , உழைத்து சேர்ப்பதுவே நிலைக்காத இந்தக் காலத்தில் உங்களையும் , உங்கள் தன்மானத்தையும் விற்று அந்தப் பணத்தை வாங்காதீர்கள் " என்று தானே சொல்ல வேண்டும் . ஆதலால் , மக்களே , மக்களுக்கு மக்களே ஏமாந்து விடாதீர்கள் .

"ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் " என்ன கொடுமை இது . ஏழைகளையும் , அவர்களின் படிப்பறிவின்மையயும் தங்களது ஓட்டு வாங்கும் ஆயுதங்களாகப் பயன்படுத்துகின்றனர் . ஆட்சியாளர்கள் நினைத்தால் ஏழைகளே இல்லாமல் செய்ய முடியும் . எல்லோருக்கும் முழுமையான படிப்பறிவைக் கொடுக்க முடியும் . ஆனால் ,செய்ய மாட்டார்கள் . அப்படிச் செய்தால் இவர்கள் ஏமாற்றுவதற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் .

யார் ஆட்சிக்கு வந்தாலும் கட்சியின் பேரைச்சொல்லி, கட்சியில் உள்ள முக்கியப்புள்ளிகளின் பேரைப் பயன்படுத்தி வார்டு முதல் வட்டம் , மாவட்டம் , மாநகராட்சி வரை ஏகப்பட்ட அடாவடிகளும் , அட்டூழியங்களும் தினமும் நடந்தேறுகின்றன . நிலத்தை மிரட்டி எழுதி வாங்குவது , கட்டப்பஞ்சாயத்து செய்வது , வணிக நிறுவனங்களை  மிரட்டுவது என்று இவர்கள் குட்டி மன்னர்கள் போல்தான் செயல் படுகின்றனர் . இதில் வாரிசு அரசியல் வேறு , தலைவர் முதல் , வார்டு உறுப்பினர் வரை . " ஊருக்கு ஒரு லீடர் , ஆளுக்கொரு கொள்கை , அவனவனுக்கு ஒரு டசன் பட்டினி பட்டாளம் " என்று எம் .ஆர் .ராதா சொன்னது போலத் தான் இன்று வரை நம் நிலை உள்ளது .

இதற்கெல்லாம் என்ன தான் தீர்வு . கட்சியை வைத்து உருவாக்கப்படும் பிரிவினைகளை தடுத்து நிறுத்த வேண்டும் . கட்சி நலன் சார்ந்த அரசியலை வளர விடக்கூடாது . மக்கள் நலன் சார்ந்த அரசியலை உருவாக்க வேண்டும் . ஆள்வது யாராக இருந்தாலும் , தப்பு யார் செய்தாலும் தட்டிக் கேட்க வேண்டும் . தண்டனை, நாம் கொடுக்காவிட்டாலும் காலம் கொடுக்கும் . நல்லது யார் செய்தாலும் ஆதரிக்க வேண்டும் இதில் ஆளும் கட்சி , எதிர்க்கட்சி என்ற பேதம் இருக்கக் கூடாது . மக்கள் நலன் மட்டுமே முன்னிறுத்தப்பட வேண்டும். எல்லோரும் ஒன்று பட்டால்தான் உண்மையான மக்கள் ஆட்சியை மலரச் செய்ய முடியும் . மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படும் அனைவரையும் தூக்கி எறியுங்கள் . இந்த தேர்தலில் முடியா விட்டாலும் அடுத்த தேர்தலுக்குள் மக்களுக்கான ஆட்சியை உருவாக்க முடியும் .

கட்சியினால் உருவாக்கப்படும் பேதங்களை வேரறுப்போம் !

மக்கள் நலன் சார்ந்த அரசியலை உருவாக்குவோம் !

..........................................................

Monday, March 14, 2011

பணம் மட்டும் தான் வெற்றியின் அளவீடா ?

இன்று , ஒரு மனிதனின் வெற்றியும் தோல்வியும் பணத்தை வைத்தே அளவிடப்படுகின்றன . பண்ட மாற்று முறைக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது தான் பணம் . பண்ட மாற்றுமுறையில் ஓரளவிற்கு எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தது . ஒரு குறிப்பிட்ட பண்டம் மற்றும் உற்பத்தி செய்தால் போதும் . அதை வைத்து மற்ற பொருட்களை வாங்கி விடலாம் . ஆனால், அதற்காக அந்த குறிப்பிட்ட பண்டத்தை மட்டுமே அவர்கள் அளவுக்கு அதிகமாக சேர்த்து வைக்க வில்லை , பதுக்கவில்லை .இன்று பணம் என்ற ஒன்றை வைத்துதான் நாம் எல்லாவற்றையும் வாங்குகிறோம் . இந்தப் பணத்தை நாம் பெற கடுமையாக உழைக்க வேண்டும் . ஒரு குறிப்பிட்ட பண்டத்தை
 விளைவித்தாலோ , உருவாக்கினாலோ அதை விற்று பணமாக மாற்றி தான் நாம் வேறு பொருள் வாங்க முடியும் . பண்டத்தை அதிக நாள் சேர்த்து வைக்காத நாம் பணத்தை மட்டும்  அதிகளவு , அதிகநாள்  சேர்த்து வைப்பது எதற்காக ?

பணம் எல்லோருக்கும்  தேவை தான் . தேவையில்லை என்று சொல்ல முடியாது . இன்று , நாம் எந்த காரணத்திற்காக  அதிகமான பணத்தைச்  செலவு செய்கிறோம் , ஒன்று மருத்துவம் சார்ந்த செலவு , இன்னொன்று  கல்விக்கான செலவு . சரியான உணவு பழக்கம்  மற்றும் சரியான புரிதல் இருந்தால் மருத்துவத்துக்கும் கல்விக்கும் ஆகும் செலவை குறைக்க முடியும் . உயிர் வாழத்தேவையான உணவுக்காக கூட நாம் அதிக பணம் செலவழிப்பதில்லை .இதையெல்லாம் விட இன்று வீண் ஆடம்பரங்களுக்குத் தான் அதிகம் செலவு செய்கிறோம் . நாம் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை , நம்மை சுற்றி பலவேறு விதங்களில் சுற்றி வரும் விளம்பரங்கள் எளிதாக கொள்ளை அடிக்கின்றன . விளம்பரங்களில் வரும் பொருட்களை வாங்குவதற்காக மடாகவோ , கழுதையாகவோ உழைக்க ஆரம்பித்து விடுகிறோம் . அடுத்தடுத்து  நம் கண்ணில் படும் விளம்பரங்கள் நம்மை மாடகவே மாற்றி விடுகின்றன . மனிதனாக பிறந்து , மாடாக வாழ ஆரம்பித்து விட்டோம் .


நமது உண்மையான  , நிலையான மகிழ்ச்சிக்கு வீண் ஆடம்பரங்கள் என்றுமே துணை புரிந்ததில்லை . நம் மனதை இளகுவாக்குவதும் , வாழ்க்கை என்பதே கொண்டாடபடுவதற்குத் தான் என்று உணர்த்துவதும் பயணங்கள் தான் . ஆனால் , நம் வாழ் நாளில் பயணத்துக்காக என்று எவ்வளவு செலவழிக்கிறோம் ? . மிகவும் குறைந்த அளவு தான் . நம்மைப்  பொருத்தவரை பயணங்களுக்கு ஆகும் செலவு வெட்டிச் செலவு . ஆனால் , பயணங்கள் அற்புதமானவை . பல்வேறு விதமான மனிதர்கள்  ,பழக்க வழக்கங்கள் , இயற்கையின் அற்புதங்கள் , நினைவுச் சின்னங்கள்  என்று நாம் பயணங்களின் மூலம் அறிந்து கொள்வது ஏராளம் . ஆக மொத்தம் நாம் வாழ அளவான பணம் இருந்தால் போதும்  . அளவான பணம் மட்டும் இருந்தால் கவலைகள் குறையும் , நிம்மதி பெருகும் .  அதே சமயம் , அளவான பணம் மட்டுமாவது இருக்குமாறு   பார்த்துக் கொள்ள வேண்டும் . அதில் கொஞ்சம் பயணங்களுக்காக பயன்படட்டும் . அதிகமாக சம்பாதிக்கும் பணத்தை பயணங்களுக்காகச்   செலவழியுங்கள் .

ஒருவன் , எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் , எவ்வளவு கெட்ட பழக்கங்கள் இருந்தாலும் அவனிடம் பணம் மட்டும் இருந்தால் இவை அனைத்தும் மறைந்து கொள்கின்றன . அவன் , நம் சமூகத்தின் உயர்ந்த மனிதனாக கருதப்படுகிறான் . " பணம் பந்தியிலே ....! குணம் குப்பையிலே ...!" . பணமில்லாதவன் நிலைமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை . பணம் சம்பாதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் . பதுக்காமல் செலவழிக்கவும் தெரியவேண்டும் . வாழ்க்கையில் பாதிக்கும் மேற்ப்பட்ட நாட்களை பணத்தைச் சேர்ப்பதிலேயே தொலைத்து விடுகிறோம் .

நம் வாழ்க்கை முடியும்போது எவ்வளவு சேர்த்து வைத்தோம் என்று இருக்கக் கூடாது .

எவ்வளவு வாழ்ந்தோம்  என்று தான் இருக்க வேண்டும் ..!

வாழ்க்கை கொண்டாடுவதற்கே..!

மேலும் படிக்க :




 ...............................................

Saturday, January 22, 2011

கண்ணீர் துளி - மனிதத்தின் சுவாசம்

கண்ணீர் சிந்தாத மனிதன் என்று பூமியில் யாரும் இல்லை . நம்  வாழ்க்கைப்  பயணத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை  பல்வேறு சூழ்நிலைகளில் நம் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் சிந்துகின்றன . சிறு பிள்ளைகள் தாங்கள் கேட்டது கிடைப்பதற்காக அழுகின்றன. காரியம் சாதித்து கொள்வதற்காக ஒரு சில பெண்கள் கண்ணீரைப் பயன்படுதுகின்றனர் . அப்பா அடிக்கும் போது பிள்ளைகள் அழுகின்றன .தாங்க முடியாத இழப்புகள் நம்மை கதறி அழச்செய்கின்றன . இழப்புகள் என்பவை மனிதனாக இருக்கலாம் , மனித உறவாகவும் இருக்கலாம் .கண்ணில் விழும் சிறு தூசியும் நம்மை கலங்க வைக்கிறது . நாம் நினைத்ததை அடைய முடியவில்லை என்ற ஆற்றாம்மை நம்மை துடிக்க வைக்கிறது . குருஞ்சிப் பூ  மலர்வதை போல எப்போதாவது
கண்ணீர் நமது அதிகபட்ச மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது . அது ஏன் ? ஆஸ்கார் விருது வாங்கும் போது மட்டும் ஏறக்குறைய எல்லா நடிகைகளும் கண்களிலும் கண்ணீர் வருகிறது . உழைப்பின் பயன் !

 நீண்ட நாள் பிரிந்திருந்த இரு உறவுகள் சந்திக்கும் போது வார்த்தைகளுக்குப் பதில் கண்ணீர் தான் முதலில் வருகிறது . நம் இனம் நம் கண் முன்னே அழிந்த போதும் நம்மால் கதறி அழ மட்டுமே முடிந்தது தாங்க முடியாத வேதனை . இந்திய அரசியல்வாதிகள் கட்சியை வளர்க்கவும் , குடும்பத்தை வளர்க்கவும் மட்டுமே போராடுகின்றனர் .ராகுல் காந்தியும் கட்சியை வளர்க்க மட்டுமே முயற்சிக்கிறார் . ஜாதி மத பேதங்களுக்கு மத்தியில் கட்சி சார்ந்த பேதமும் நம்மிடம் அதிகம் உள்ளது . பேதங்கள் களையப்பட வேண்டும் . மக்கள் நலன் சார்ந்த அரசியல் உருவாக கடுமையாக உழைக்க வேண்டிய காலகட்டம் இது . நல்லது யார் செய்தாலும் பாராட்டுவோம் , தப்பு யார் செய்தாலும் தட்டி கேட்ப்போம் . எங்களின் ஏமாளித்தனத்தைப் பார்த்து சிரிக்கும் உங்கள் பேனர்கள் வேண்டாம் . எங்கள் அழுகையை நிறுத்துங்கள் இல்லாவிடில் காலம் உங்களை அழவைக்கும் .

 உடல் அல்லது மனம் சார்ந்த தாங்கமுடியாத வலி தான் நம்மை அதிகம் கண்ணீர் சிந்த வைக்கிறது . எத்தனையோ வகையில் நாம் கண்ணீர் சிந்தினாலும் அதை இரண்டு வகையில் பிரிக்கலாம் . ஒன்று நமக்காக அழுவது , இன்னொன்று மற்றவர்களுக்காக அழுவது . கண்ணீர் துளிகள் நம் துன்பத்தைக் கரைக்கின்றன . காலம், நமது எல்லாவிதமான துன்பங்களையும் துயரங்களையும்  துடைத்து விடுகிறது . தற்காலிக ஆறுதல் கண்ணீர் மட்டுமே , நமது கண்ணீரும், நமக்காக மற்றவர்கள் சிந்தும் கண்ணீரும் . எதற்கும் கலங்காத மனம் வேண்டும் . அன்பிற்காக நாம் கலங்கியே தீர வேண்டும் .

 ஊடகங்களின் புண்ணியத்தால்  இன்று பரவலாக ஒரு வியாதி பரவி வருகிறது . யாருக்காகவும் எதற்காகவும் கலங்கக் கூடாது என்ற மாயை உருவாகி உள்ளது . மற்றவர்கள் தப்பாக நினைப்பார்கள் என்ற காரணத்திற்காக அழுவதற்கு மிகவும் யோசிக்கிறோம்  . அழுவது உணர்ச்சி சார்ந்த விசயம் . எந்த உணர்ச்சியையும் அதிகமாக கட்டுப்படுத்தும் போது பின்விளைவுகள் பெரிதாக இருக்கும் . முடிந்த வரை அழுகையை கட்டுப்படுத்தாதீர்கள் . அழுவது நல்லது நம் கண்களுக்கும் , நம் மனதிற்கும் . கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேற கண்ணீர் தேவை . நம் மனதின் அழுக்குகளும் , உடலின் வலிகளும் வெளியேறவும் கண்ணீர் தேவை .

கடந்த முப்பது நாட்களுக்குள் இரு முறை அழுதேன் . இரு முறையும் படம் பார்க்கும் போது அழுதேன் . படம் பார்க்கும் போது அழுவது கோழைத்தனம் என்ற மனப்பாங்கு நம்மை மிகவும் அழுத்திவைத்திருக்கிறது . அழ வேண்டும் என்று தோன்றினால் அழ வேண்டியது தானே , அது எப்போது என்றால் என்ன ?.கடந்த மாதம் நானும் என் நண்பனும் அம்பத்தூர் ராக்கி திரையரங்கத்தில் " நந்தலாலா " படம் பார்த்தோம்  . படத்தின் முடிவு காட்சியில் இருவரும் அழுது விட்டோம் . ஆனால் படம் பார்க்கும் போது அவன் அழுதது தெரியாது. வெளியில் வந்ததும்  "படத்திற்கு கூட்டி வந்து  ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னை அழ வச்சுட்ட "  என்று சொன்னான் . நண்பனின் பெற்றோரிடம்  நாங்கள் படம் பார்க்கும் அழுததை அவன் சொன்னான் . "இத்தன வயசுக்கப்புறம் படம் பார்த்து அழுதேன்னு சொல்றீங்க என்ன காதல் படமா" என்று நண்பனின் அப்பா கேட்டார் . "இல்லை அன்பையும் பாசத்தையும் பற்றிய படம் " என்றோம். "அப்ப அழ வேண்டியது  தான்" என்று அப்பா சொன்னார் . "அழ வைக்கிற மாதிரி எல்லாம் தமிழில் படம் வருதா. முன்னாடியே தெரிஞ்சிருந்தா நானும் படத்திற்கு வந்திருப்பேன் "என்று அம்மா சொன்னார் . அன்பு நம்மை அழ வைத்து விடுகிறது .

 இரண்டாவது முறை நான் அழுதது " அங்காடி தெரு " படம் பார்த்த போது . படம் வெளிவந்த போது பார்க்க முடியவில்லை . திருட்டு DVD , இணையத்தில் பார்த்து நான் திருடனாகவும் மாறவில்லை . ஜனவரி 1 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் தான் பார்த்தேன் . படம் பாதி முடிந்த போது எனக்குள் எந்த பாதிப்பும் இல்லை . யாரும் யோசிக்காத கதைக்களம் என்று மட்டும் நினைதேன் . ஆனால் , படம் முடிந்த பிறகு தாங்க முடியாத வலி ஏற்பட்டது . கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் சிந்தின . சாதாரணமான  மனிதர்களின்  வாழ்க்கையை படம் உணர்த்தியது .

 கடந்த வாரம் தொலைக்காட்சியில் ஒரு விபத்து பற்றிய செய்தி  ஒளிபரப்பாகிக்  கொண்டிருந்தது . அறுபது வயதுடைய எங்கள் பெரியம்மா சொன்னார் " முன்பெல்லாம் துயர சம்பவங்களைப் பார்க்கும் போது அழுகை வரும் , இப்போ மறத்துப்போச்சு" . இது தான் இன்றைய நிலை . அளவுக்கு அதிகமான துன்பங்களையும் , துயரங்களையும் ஊடகங்களில் பார்த்து பார்த்து நம் மனம் மறத்துப் போய்க்கொண்டே இருக்கிறது . யாருக்கு எது நடந்தால் என்ன ? எனக்கு என் வாழ்க்கை மட்டுமே முக்கியம் என்ற மனப்பாங்கு அதிகரித்து விட்டது . இது காட்டு விலங்குகளுக்குப் பொருந்தும் . சமூக விலங்கான நமக்கு நம் நலனைப் போல மற்றவர் நலனும் முக்கியம் . அதனால் தான் நாம் மற்றவர்களுக்கு எதைச் செய்கிறோமோ அது தான் நமக்கு திரும்பி வருகிறது . நாம் மற்றவர்களுக்குச் செய்வது நல்லதாகவே இருக்கட்டும் . நமக்கும் நல்லதே திரும்பி வரட்டும் .

கண்ணீர் துளிகளால்  மனிதம் உயிருடன் இருக்கட்டும் !

மனசு மறத்துப்போகாமல் இருக்க கண்ணீர் சிந்துங்கள் !

கண்ணீர் நல்லது !

மேலும் படிக்க :



..............................................

Friday, December 31, 2010

பரிமளா திரையரங்கம்

திரைப்படங்கள் நம்முடைய மிகப்பெரிய பொழுதுபோக்கு. ஒவ்வொரு
புதுப்படத்தையும் ஒரு திருவிழாவாக கொண்டாடியவர்கள் தான் நாம்.
திரையரங்கம் ஒவ்வொரு முறையும் பிரமாண்டமாக அலங்கரிக்கப்படும். இன்று விளம்பரத்தட்டிகள் மட்டுமே இடத்தை அடைக்கின்றன. காலமாற்றத்தால் சிறு நகரங்களில் இருக்கும் திரையரங்கங்கள் பழைய பொலிவை இழந்து விட்டன ,பெரும்பாலான திரையரங்கங்கள் காணாமல் போய்விட்டன.இந்த சூழலிலும் சிறு நகரத்தில் ஒரு திரையரங்கம் தப்பி வாழ்ந்து வருகிறது . அது "ஸ்ரீ தங்கராஜா திரையரங்கம்", வேடசந்தூர் , திண்டுக்கல் மாவட்டம். கடந்த இரண்டு மாதமாக அதன் பெயர், "பரிமளா திரையரங்கம்" , காரணம் சினிமா படப்பிடிப்பு .

               
              இந்தத் திரையரங்கம் 1965 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான திரையரங்கமாகும் . முன்பு இந்த திரையரங்கத்தின் பெயர் நடராஜா திரையரங்கம் . பின்பு, ஸ்ரீ தங்கராஜா திரையரங்கம் என்று ஆனது . 1980 களில் சில சினிமா படங்களை (நீங்கள் கேட்டவை ,துடிக்கும் கரங்கள் ...(உண்மையா என்று தெரியவில்லை ))தயாரித்தும் உள்ளனர். எங்கள் பகுதியின் ஒரே ஒரு பொழுதுபோக்காக இந்த திரையரங்கம் இருந்தது . மாலை நேர காட்சியும், இரவு நேரக்காட்சியும் எப்பொழுதும் நிறைந்தே காணப்படும். உழைக்கும் வர்க்கத்தின் ஒரே கொண்டாட்டமாக திரைப்படங்கள் விளங்கின. திரையரங்கத்துக்கும் ரசிகனுக்கும் இடையே ஒரு சொல்லப்படாத உறவு இருந்துகொண்டே இருந்தது.

              
               நான் பள்ளிக்கூடம் போன காலங்களில் 4 மணிக்கு பிறகு இந்த திரையரங்கத்தில் நடக்கும் காட்சிகளைக் காணும் வாய்ப்பைப் பெற்றேன். என் நண்பனின் அப்பா அங்கு வேலை செய்ததால். என்ன படம் என்றும் தெரியாது , யார் நடிகர் என்றும் தெரியாது , ஆனால் அப்படி பார்க்கும்போது ஒரு உற்சாகம் கிடைக்கும். எனக்கு விவரம் தெரிந்து நான் பார்த்த முதல் திரைப்படம் "சின்ன தாயி ". அதன் பிறகு ஏராளமான படங்களை இந்த திரையரங்கத்தில் பார்த்தேன். இதில் Anagonda , Deep Blue Sea , Tomb Raider போன்ற ஆங்கிலப் படங்களும் அடங்கும். Jurassic Park படத்தை எங்கள் ஊரிலிருந்த இன்னொரு திரையரங்கத்தில் (சாந்தி ) பார்த்தேன். அந்த திரையரங்கம் கல்யாண மண்டபமாக மாறி தற்பொழுது வீடுகளாக மாறி விட்டது. தங்கராஜா திரையரங்கம் இன்றும் இயங்கி வருகிறது.


             தங்கராஜா திரையரங்கம் என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது
ஒரு குள்ளமான மீசைக்கார மனிதர். எனக்கு தெரிந்து இருபது ஆண்டுகளாக இந்த திரையரங்கத்துடனே வாழ்ந்து வருகிறார். இன்றைய சூழலிலும் அவர் இந்த திரையரங்கத்திலேயே இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது . இவரைப்போன்ற மனிதர்கள் தான் வாழ்க்கையை சுவாரசியம் ஆனதாக மாற்றுகின்றனர் ."தினசரி 4 காட்சிகள் ","தினசரி 4 காட்சிகள் ", " இன்று இப்படம் கடைசி " , "நாளை முதல் ".. போன்றவை புகழ்பெற்ற திரையரங்க வாசகங்கள். தொ(ல்)லைக்காட்சியின் பரவல் இவற்றுக்கெல்லாம் முடிவு கட்ட ஆரம்பித்தது . மக்கள் திரையரங்கங்களை மறக்க ஆரம்பித்தனர் . DVD மற்றும் Internet இன் பரவல் திரையரங்கத்தை ஒட்டு மொத்தமாக மறக்க வைத்து விட்டது. "சமுதாயத்தின் சீர்கேடுகளுக்கு தொ(ல்)லைக்காட்சி முக்கிய காரணம் " என்று சொன்னது ஒரு நீதிபதி.


             வலுத்தது நிலைக்கும் (Survival of Fittest ) என்பது போல இயங்கி வந்த தங்கராஜா திரையரங்கத்தில் கடந்த மாதம் ஒரு மாறுதல். திரையரங்கத்தின் பெயர். "பரிமளா திரையரங்கம்"என்று மாறி இருந்தது.தோரணங்களும் பல்வேறு விதமான திரைப்படங்களின்
விளம்பர தட்டிகளும் திரையரங்கத்தை அலங்கரித்தன. முதலில் பார்த்தவுடன் யாரோ ஒருவர் இந்த திரையரங்கத்தை வாங்கிவிட்டார் என்று தான் நினைத்தேன் . பிறகு தான் தெரிந்தது , "பரிமளா திரையரங்கம்" என்ற திரைப்படத்திற்கான படப்பிடிப்பு என்று. கடந்த இரண்டு மாதங்களாக திரையரங்கத்திற்கு மீண்டும் ஒரு பொலிவு வந்து விட்டது. தினமும் ஏராளமானோர் வந்து பார்த்து சென்றனர். எங்கள் பகுதி திண்டுக்கல் மாவட்டத்தின் வறண்ட பகுதியாகும் . அப்படிப்பட்ட எங்கள் பகுதிக்கு படப்பிடிப்பை கொண்டு வந்த பெருமை எங்கள் திரையரங்கத்தையும் அதை விடா முயற்சியுடன் அதை இயக்கி வந்த உரிமையாளரையும் சேரும். நடிகர் ஆரியா வந்த போதும் , விவேக் வந்த போதும் ஒட்டு மொத்த ஊரே அங்கு தான் இருந்தது.


               இந்தச் சூழலிலும் படப்பிடிப்பை ஒரு நிமிடம் கூட பார்க்காத சுவாரசியமான மனிதர்களும் வாழ்ந்து வருகின்றனர். தற்பொழுது படிப்பிடிப்பு முடிந்து விட்டது. தற்காலிகமாக கட்டப்பட்ட சுற்று சுவர் நீக்கப்பட்டது . இதைப்பார்த்த போது என்னையும் அறியாமல் எனக்குள் ஒரு இனம் புரியாத வலி வந்தது. அந்த வலி தான் இதை எழுத வைத்தது . எங்கள் திரையரங்கம் மீண்டும் பொலிவை இழந்து விட்டது. மீண்டும் "ஸ்ரீ தங்கராஜா " என்று மாறிவிட்டது. இனி தனது பணியைத் தொடங்கிவிடும்..


               திரையரங்கங்கள் வாழ்வதும் , காணாமல் போவதும் நம் கையில் தான் உள்ளது. திருட்டு DVD இல் படம் பார்ப்பதும் ,இணையத்தில் டவுன்லோட் செய்து படம் பார்ப்பதும் ஒரு வகையில் திருட்டு தான். திருட்டு DVD இல் ,இன்டர்நெட்டில்  படம் பார்க்கும் அனைவரும் திருடர்கள். இவர்கள், நம் ஊர் ஊழல்அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது.
புதுப்படங்களைத் திரையரங்கத்தில் மட்டும் பாருங்கள்.
தரமில்லாத திருட்டு DVD வாங்கும் 30ரூபாய்க்கு தரமான பழைய
திரைப்படங்கள் மூன்று அடங்கிய DVD வாங்கலாம் (Eg . Moser Baer), படக்காட்சிகளும் துல்லியமாக இருக்கும் . தெளிவில்லாத திருட்டு DVDயை
யாரும்மறுபடியும் பயன்படுத்துவதில்லை. அது பூமிக்கு பாரமாக குப்பையாக
மாறுகிறது. இதைத் தவிர்த்து  தரமான DVD வாங்கிப் பார்த்து பாதுகாக்கலாம். ஒருவர் திருந்துவதால் எல்லாம் மாறிவிடவா போகிறது என்று
 நினைக்காதீர்கள். உங்களுக்கு நீங்கள் நேர்மையாக இருங்கள். மீண்டும்
திருட்டு தொழில் செய்து திருட்டுப்பழிசுமக்காதீர்கள்.
திரையரங்கங்களை வாழ விடுங்கள்...

வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களையும் கொண்டாடுவோம்...!

வாழ்க்கை கொண்டடுவதற்கே...!
...........................................

Friday, December 3, 2010

நந்தலாலா - உயிரோட்டமான பயணம்

 இந்த வருடம் (2010 ) , நிறைய நல்ல தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ளோம் . அந்த வகையில்  நந்தலாலா திரைப்படமும் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது . இந்தப்படத்தின் கதைக்களம் இதற்குமுன் நாம் அறியாதது . கால மாற்றத்தாலும் , உலகமயமாக்கலினாலும் நாம் பெரிதும் இழந்த ஒரு விசயம் ,"அன்பு ". அன்பைக் கொடுக்கவும், பெறவும் மறந்து கொண்டே போகிறோம் . அன்பால் எதுவும் சாத்தியம்.  அன்பில்லாமல் போனால் எதுவும் சாத்தியம் இல்லை . அன்பின் பிறப்பிடம், தாய் . அந்தத்  தாயைத் தேடி, ஆதரவற்ற இரு ஜீவன்கள் செய்யும் பயணம் தான் கதை . அன்பின் முக்கியத்துவம் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது .

                   பயணத்தை மையமாக வைத்து தமிழில் அதிக திரைப்படங்கள் எடுக்கப்படவில்லை . இது முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைப்படம் . பயணத்தின் போது பல்வேறு விதமான மனிதர்களின் வாழ்க்கையும் பதியப்படுகிறது . பக்கம் பக்கமான வசனங்கள் தேவைப்படும் இடங்கள் ,வசனமேயில்லாமல்  அழகாக நகர்கின்றன . கலைக்கு எந்த மொழியும் தேவையில்லை . இந்தக்காட்சிகளைப் பார்க்கும்போது வசனமே இல்லாமல் ஒரு திரைப்படம் எடுத்தால் என்ன ?  என்று தோன்றுகிறது . இயற்கையான சூழலில் , இயற்கையான ஒளியில் முழுப்படமும் எடுக்கப்பட்டுள்ளது . இயற்கையான சூழல் என்றால் எதார்த்தத்தை மீறாத சூழல் . படத்தில்  நடித்த அனைவரும் நடித்தது போல் தெரியவில்லை , வாழ்ந்தது போல்தான் தெரிகிறது . 

                 இசையும் , ஒளிப்பதிவும் படத்தின் மிகப்பெரிய பலம் . படத்திற்கு உயிர் கொடுத்து , படம் முழுவதும் நம்மை உயிர்ப்புடன் வைத்து , உயிரோட்டமான மனிதர்களின் வாழ்க்கையை உணர வைக்கிறது ,  இசை .   இளையராஜா , இளையராஜா தான் . படம் முழுமைக்கும் ஆதிக்கம் செலுத்துகிறது அவரது இசை . சின்ன சின்ன காட்சிகளைக் கூட மிக அழகாக படம்பிடித்துள்ளார் , ஒளிப்பதிவாளர் . வாழ்க்கையில் , சின்ன சின்ன விஷயங்கள் எப்பொழுதுமே அழகானவை .  இயற்கையான ஒளியை வைத்தே அதிகபட்ச காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன . இயற்கை , இல்லாமல் இயங்க முடியாது . அன்பு ,  இல்லாமல் வாழ முடியாது .  

                  இதற்கு முன் திரைப்படங்களில் ,சொல்லப்படாத நிறைய விஷயங்கள் இந்தப்படத்தில் சொல்லப்பட்டுள்ளன . படம் முடியும் முன் வரும் ஆலமரக்காட்சியில் ஒரு சின்ன படத்தொகுப்பு பிழை உள்ளது .  மொத்தத்தில் ஒரு உயிரோட்டமான கதையை , உயிரோட்டமான முறையில் நடித்து , உயிரோட்டமான முறையில் நமக்கு படம்பிடித்துக்  காட்டியுள்ளார் , திரு . மிஷ்கின் அவர்கள் . எங்களுக்கு சித்திரம் பேசுதடி , அஞ்சாதே போன்ற படங்கள் வேண்டாம் . நந்தலாலா போன்ற வெவ்வேறு விதமான  கதையமைப்புள்ள ,  இன்னும் வித்தியாசமான நிறைய திரைப்படங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் ..

அனைவரும் கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம் ..

இந்த படத்திற்கு நாம் கொடுக்கும் ஆதரவைப் பொருத்தே எதிர்காலத்தில் இது போன்ற நல்ல திரைப்படங்கள் பார்க்கக்கூடிய வாய்ப்பைப் பெறமுடியும் ..

ஒரு நல்ல அனுபவத்திற்கு வாழ்த்துகிறேன் ...


மேலும் படிக்க :

................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms