Tuesday, October 19, 2010

நாமெல்லாம் யார் ?

நாமெல்லாம் யார் ? அகதிகள். ஆம் , நாமெல்லாம் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி வாழ வழி தேடி நாடோடிகளாக திரிந்து , கால மாற்றத்தால் பல்வேறு இன, மொழி, மத , ஜாதி பேதங்களுடன் நம் வரலாற்றை மறந்து நமக்குள்ளே பகைமையுடன் வாழ்பவர்கள் தானே நாம். இன்று நம்மால் இந்து , முஸ்லீம் , கிறித்துவன், பவுத்தன்.... என்று பிரித்து உணரப்படும் எல்லோருக்கும் ஒரே மூதாதையன் , ஆப்பிரிக்கன்.

            ஒரு வேளை நம் எல்லோருக்கும் போதுமான உணவும் , உறைவிடமும் , பாதுகாப்பும் இருந்திருந்தால் நாம் ஆப்பிரிக்காவைத் தாண்டி இருக்க மாட்டோம் . மனித இனமும் பூமியெங்கும் பரவி இருக்காது. இனப்பெருக்கத்தின் காரணமாக மனித இனம் ஒரே இடத்தில் வாழ முடியாத சூழல் உண்டானது . உணவுக்காகவும் , இடத்துக்காகவும் , பாதுகாப்புக்காகவும் வேறு இடம் தேடி ஓட ஆரம்பித்த காரணத்தால் இன்று பல்வேறு பேதங்களுடன் வாழ்ந்து  கொண்டிருக்கிறோம்.

              இன்று, நமக்குள்ளே (மனிதர்களுக்குள்ளே) எத்தனை போராட்டங்கள் ,
உரிமைக்கான போராட்டம் ,நாடுகளின்எல்லைகளுக்கான போராட்டம் , தண்ணீருக்கான போராட்டம் என்று ஏகப்பட்ட போராட்டங்கள். என்று ஓயுமோ இத்தகைய போராட்டங்கள்...!?

               இன்றும், பிழைப்புக்காக சொந்த ஊரை விட்டு இடம் பெயர்ந்து நாடோடிகளாக பெரிய நகரங்களில், வெளிநாடுகளில் திரிந்து கொண்டிருக்கிறோம். நாமெல்லாம் நாடோடிகள் தான். பேதங்களை மறப்போம் , மனிதனாக வாழ்வோம் . மத்தவர்களை வாழவிடுவோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே !!!
.......................................

Wednesday, August 11, 2010

உயிரை உயிராய் மதிப்போம்

                             
நாம் வாழும் பூமி மிகப்பெரிய அற்புதங்களையும் ஆச்சரியங்களையும் உள்ளடக்கி அழகாகச் சுற்றி வருகின்றது. கோடிக்கணக்கான உயிரினங்கள் இந்த பூமி எங்கும் வாழ்ந்து வருகின்றன. இயற்கை எனும் சக்தி இந்த உலகத்தையே ஒன்றிணைகிறது. நீர்,  நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்கள் அனைத்து விதமான உயிரினங்களின் வாழ்க்கையிலும் பங்குபெறுகின்றன.

         நம் கண்ணால் பார்க்கமுடியாத உயிரினங்கள் கோடிக்கணக்கில் இந்த உலகத்தில் வாழ்கின்றன. இந்த உயிரினங்கள் மட்டும் இல்லாவிட்டால் இந்த பூமியே ஒரு குப்பைமேடாகதான் இருக்கும். அழுகிப்போன, இறந்துபோன உடல்கள் ஆகியவற்றை மட்கச் செய்வதிலிருந்து , பாலை தயிர் ஆக மாற்றுவது வரை இந்தக் கண்ணுக்குத் தெரியாத உயிரினங்கள், இந்த பூமிக்கு ஆற்றும் பங்கு மிகப்பெரியது. இந்த உயிரினங்களால் ஒரு சில கெடுதல்களும் உண்டு. தாவரங்களிலும் , விலங்குகளிலும் பல்வேறுவிதமான நோய்களை பரப்புகின்றன. ஆனாலும் இவை செய்யும் நன்மைகள் அதிகம் .

         மனிதனால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் , மின்சார கழிவு பொருட்களால்தான் உலகம் அதிகம் மாசுபட்டுள்ளது . இந்த கழிவுகளால் இயற்கை சமநிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது . அதனால்தான் இன்று பருவ காலங்களும் , காலநிலைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சீர்கேடுகள் அனைத்திற்கும் மனிதன் மட்டுமே காரணம்.

           இந்த உலகமே அற்புதமான நிகழ்வுகளை உள்ளடக்கியது . ஒவ்வொரு உயிரினமும் மற்ற உயிரினங்களைச் சார்ந்துதான் வாழமுடியும் . மனிதனாகிய நாம் சக மனிதனை மனிதனாக மதிப்பதுடன் , மற்ற உயிரினங்களையும் மதிக்க வேண்டும். இந்தப் பூமி எல்லோருக்கும் சொந்தம். பூமியைக் காப்பது நம் கடமை . பூமியின் எதிர்காலம் நம் கையில் தான் உள்ளது . ஆனால் , நம் எதிர்காலம் பூமியின் கையில் உள்ளது .

பூமி எல்லோருக்கும் சொந்தம் ..!

 உயிரை உயிராய் மதிப்போம்...!
.......................................

Tuesday, July 20, 2010

எது நிரந்தரம் ?

வாழ்க்கை எப்பொழுதும் அழகானது. அந்த அழகான வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை. நித்தமும் மாறிக்கொண்டே இருக்கின்றது. இவ்வாறு மாறுகின்ற உலகில் மாறாமல் இருப்பது எது?. "அன்பு" மட்டுமே உலகில் மாறாமல் இருகின்றது.அன்பில் கிடைக்கும் சக்திக்கு நிகரான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை . அன்பு என்ற அந்த அற்புத மருந்து தான் இந்த உலகை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது . அந்த அன்பின் அளவு என்று குறைகிறதோ அன்று இந்த உலகம் அழிந்துவிடும் .

"தாயிற் சிறந்த கோவிலுமில்லை , தந்தை சொல்மிக்க மந்திரமில்லை ".ஆம் ,தாயை விடச் சிறந்த கோவில் இல்லை , ஏனெனில் அன்பின் பிறப்பிடம் தாய்தான் . உலகில் வாழும் எந்த ஜீவராசியாக இருந்தாலும் அன்னை இல்லாமல் உருவாக முடியாது . நாம் முதன் முதலில் தாயிடம் இருந்துதான் அன்பைப் பெறுகிறோம் . தாயின் அன்புக்கு ஈடு இணை இந்த உலகில் எதுவுமில்லை . நம் வாழ்க்கையில் ஆயிரம் உறவுகள் வரலாம் , போகலாம் . ஆனால் , என்றென்றும் நிலையான அன்பு தாயிடம் இருந்து மட்டுமே கிடைக்கும் . எந்த ஒரு சூழ்நிலையிலும் தன பிள்ளையை விட்டுக்கொடுக்காமல் வாழும் நடமாடும் தெய்வம்தான் " அன்னை " .


அன்பு ஓர் உணர்வு எனச் சொல்வது தவறு . அன்பு என்பது இறைவனின் முகம் .இறைவனை , அன்பின் மூலமே காண முடியும் . " அளவற்ற அருளாளனும் ,நிகரற்ற அன்புடையோருமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் " எனத் துவங்கும் குர் ஆன்-னும் , " அன்பே சிவம் சிவமே அன்பு " எனும் சிவவாக்கியமும் , " எளியவர்களுக்கு அன்பு செய்கிறவர்கள் எனக்கே அதைச் செய்கிறார்கள் " என்ற பைபிளின் வாசகமும் , இறைவனின் முகம் அன்பு என்பதற்கான ஆதாரங்கள் .


அன்புக்கு நோயைக் குணமாக்கும் சக்தி உண்டு . பல ஆராயச்சிகளுக்குப்பின் , " அன்புக்கு நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு " என ஆதாரப்பூர்வமாக அறிவிக்கிறது , உடல் மன மருத்துவத் துறை ( Mind Body Medicine Department ). அன்னையின் முத்தம் , தோழியின் கைக்ர்ப்பு , மற்றவர்களின் அன்பு நிறைந்த வார்த்தைகள் , இதையெல்லாம் விட ஒரு குழந்தையின் பாசக்குரல் நம்முள் நல்ல மாற்றங்களை ஏற்ப்படுத்துகிறது . அந்த மாற்றம் தான் அன்பின் மருத்துவ குணம் . அதனால்தான் எத்தனை சண்டைகள் இருந்தாலும் ஒரு குழந்தை இருக்கும் வீடு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது .


இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அன்பைக் கொடுப்பதற்கும் , அன்பைப் பெறுவதற்கும் நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருகின்றோம். அன்பைப் பணத்தால் வாங்க முடியாது . அது , தகுதியானவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படுகிறது . அன்பு , கொடுக்கக் கொடுக்கக் கூடும் , அது என்றும் குறைவதில்லை . அன்பு குறையுமிடத்தில் தான் தவறுகள் பெரிதாகத் தெரிகின்றன . இன்று , மனிதன் இயற்கையின் மீது வைக்கும் அன்பு குறைந்து விட்டது . அதனால் தான் இன்று , சுனாமி , சூறாவளி ,புயல் எல்லாம் அதிகரித்து விட்டது .  அன்பு உள்ளவரை மட்டுமே இந்த பூமி இயங்கும் . பண, மத, அதிகார, இன பேதங்களை மறந்து அன்பு செய்வோம் வாருங்கள்.

சக மனிதனை மனிதனாய் மதிப்போம் !  உயர்வோம். !.

அன்பு ஒன்று மட்டுமே உலகை வாழவைக்கும் !
............................................

Saturday, January 17, 2009

வாழ்க்கை ஒரு சுற்றுலா

                                       
வாழ்க்கை ஒரு சுற்றுலா. சுற்றுலா வந்த இடத்தில் சுற்றுலாவைக் கொண்டாடாமல் கவலைப்  படுவது எதற்காக ?. எதற்கும் கவலை வேண்டாம். உங்கள் மனதுக்குச்  சரி என்று பட்டதைச்  செய்யுங்கள்.
                
                   வாழ்க்கை ஒரு முறை தான் அதை உங்கள் விருப்பப்படி வாழுங்களேன்! . பயம் இல்லை , கண்ணீர் இல்லை , கவலைகள் இல்லை , மகிழ்ச்சியாய் இருங்கள் மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துங்கள்..............

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms