Tuesday, September 30, 2014

காகித மலர்கள் !

தமிழ்  இலக்கியத்தின் தவிர்க்கமுடியாத ஆளுமையான ஆதவனால் எழுதப்பட்டது தான் இந்த 'காகித மலர்கள் ' ( 1977 ) நாவல் . மனிதர்களின் மனப்போக்குகளை ,வேசங்களை இவ்வளவு நெருக்கமாக எழுத்தில் பதிவு பண்ண முடியுமா ? என்ற ஆச்சரியம் நாவல்  முழுமைக்கும் உள்ளது . ஆனால், இது சாத்தியம் என்றே நிரூபித்திருக்கிறார் ,ஆதவன் .ஆம் ,இவருக்கு மட்டுமே சாத்தியம் . 70 களில் டெல்லியில் வாழ்ந்த சில தமிழ்க் குடும்பங்கள்  எப்படி இருந்தன என்ற பிம்பத்தை இந்த நாவல் வெளிப்படுத்துகிறது .

 நாகரிக வாழ்வு என்ற பெயரில் தனது சுயத்தை இழந்து விதவிதமான வேசங்கள் அணிவதன் மூலம் தன்னை திருப்திபடுத்த முயலும் கதாப்பாத்திரங்களை 'காகித மலர்கள் ' முன்வைக்கிறது . மனிதர்களின் சுயம் , தனித்துவம் , அணியும் பிம்பங்கள் பற்றி அதிகம் பேசும் இந்நாவல் இயற்கை குறித்தும் ,செயற்கை உரங்கள் மற்றும் வீரிய விதைகளின் தீமைகள் குறித்தும் , மத்திய அரசில் அதிகாரத்தை கைபற்றத் துப்பில்லாத தமிழக அரசியல் கட்சிகள் குறித்தும் பேசுகிறது . இந்நாவலில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் விதவிதமான வேசங்கள் அணிந்தாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனச்சாட்சி அவர்களைக் கேள்வி கேட்கிறது ; தாங்கள் அணியும் வேசங்களை உணருகிறார்கள் .ஆனால் ,மீண்டும்  வேசங்களையே அணிகிறார்கள் .

இந்த நாவலிலிருந்து சில பகுதிகள் :-

" தன்னைத் தன் பார்வையில் நிரூபித்துக்கொள்வதுதான் அவனுக்கு முக்கியம் .தன்னைப் பற்றித் தன் திருப்திக்காகத் தெரிந்துகொள்வதுதான் முக்கியம் .ஆழத்தில் வெகு ஆழத்தில் , அவன் யார் ? அவன் யாசிப்பது எது?

இதை அவன் கண்டுபிடிக்க வேண்டும் . தேடியவாறிருக்க வேண்டும் .மற்றவர்கள் அவனைப்பற்றி உருவாக்கும் பிம்பங்களுக்குப் பலியாகமல் அவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் "

...........

"ஆம்; திரையுலகத்துக்கு வெளியிலும்கூட சிறிய அளவிலோ பெரிய அளவிலோ ஒவ்வொருவருக்கும் நடிப்புத்திறமை தேவைப்படுகிறது "

.................

" இயற்கை , பெண்ணைப்போல , மனிதனை இயங்க வைக்கும் சக்தி ; மனித குலத்துக்குத் தொடர்ச்சியை அளிப்பது ; அதை மிகையாக இலட்சியப்படுத்தி பூஜை செய்யாமல் அன்னியோன்னியமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அதைப் பயன்படுத்த வேண்டும் - அதே சமயத்தில் அதைச் சூறையாடிவிடக்கூடாது "

......................

" முதலில் , நம்மை நாமே தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம் . அதற்கு வேண்டிய அவகாசத்தைக்கூட நாம் பெறாமலிருப்பதே நம் துரதிஷ்டம் . இதுதான் வெற்றி , இதுதான் முன்னேற்றம் , என்று ஏதோ சிலவற்றை நாம் நிச்சயமாக நம்பிக்கொண்டு , அவற்றையே அடிப்படையாகக் கொண்டு நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு விட்டோம் . இந்த நம்பிக்கைகள் தவறாக இருக்கலாம் ; இவற்றைச் சார்ந்து உருவான அமைப்புகள் யாவும் தவறாக இருக்கலாம் . எது நமக்கு உண்மையிலேயே முக்கியமானது ? எது நமக்கு உண்மையிலே இன்பம் தருவது ? சாதிக்கக்கூடியதாக இருப்பதாலேயே எல்லாவற்றையும் சாதிக்க வேண்டியதில்லை. வெல்லக்கூடிய யாவற்றையும் வெல்ல வேண்டியதில்லை . செலவழிக்கக்கூடிய எல்லாவற்றையும் செலவழிக்க வேண்டியதில்லை. மனிதன் மென்மேலும் தன் ஆற்றல்களை உணர்ந்து வருகிறான் . ஆனால் அவற்றை எப்படி , எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்பதை மட்டும் உணரவில்லை. எல்லாவற்றையுமே பயன்படுத்த முயலவேண்டியதில்லை என்பதையும் உணரவில்லை..."

........................

" ரெனி டு போ என்ற ஃபிரெஞ்ச் அறிஞர் சொல்லியிருக்கிறார் , மிருகக்காட்சி சாலையில் மிருகங்களைக் குடிவைக்கும்போது நாம் எடுத்துக்கொள்ளும் சிரத்தைகூட மனிதர்களை நகரங்களில் குடிவைக்கும்போது எடுத்துக் கொள்வதில்லையென்று. வெவ்வேறு மிருகங்களின் இயல்பான வசிக்குமிடத்துக்கேற்றவாறு இங்கு தனித்தனிப் பாணிகளில் ஒவ்வொரு மிருகத்திற்கும் இடம் அமைத்திருக்கிறார்கள் . ஆனால் நம் நகரங்களில் வெவ்வேறு பூர்வீகங்கள் , மதக் கலாச்சாரச் சூழ்நிலைகள் ஆகியவற்றைச் சேர்ந்த மனிதர்கள் ஒரேவிதமான வீடுகளில் வளர்கிறார்கள் , ஒரே விதமான பள்ளிகளில் ஒரே விதமான கல்வியைக் கற்கிறார்கள் , ஒரே விதமான வேலைகளில் திணிக்கப்படுகிறார்கள் , ஒரே விதமான பிம்பங்களை அணிகிறார்கள் , யாசிக்கிறார்கள். "

............................

" உலகெங்கிலும் குண்டர்கள் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார்கள் . மக்களை இவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் . சில குழுக்கள் , இவர்களுடைய சுயநலமான நோக்கங்கள் , மனித சமூகத்தின் முன்னேற்றம் ,மேம்பாடு என்று எதையெதையோ இவர்கள் கொச்சையாகப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் உருவாக்கியுள்ள  கொள்கைகள்,அமைப்புகள் , இவற்றின் பொருட்டுத் தவறான முறையில் சூறையாடப்பட்டுவரும் , சேததமடைந்து வரும் , இயற்கை வளங்கள் , மனித இயல்புகள்..."

..................................

" தனி மனிதன் நிர்வாக அமைப்பில் தன்னையும் பங்குதாரனாக உணராமல் அதனின்றும் தனிமைப் படுத்தப்பட்டவனாக உணருவதால், தன் பிரச்சனைகளின் தீர்வுக்காகத் தானே நேரடியாகச் செயல்படும் தெம்போ, ஊக்கமோ அவனுக்கில்லை... மறு பக்கத்தில் பெரும்பாலானவர்கள் பெரும் அமைப்புகளில் ஒரு ஆணியாகவோ பல்சக்கரமாகவோ இயங்கிக் கொண்டு , தன் செயல்களின் இறுதி விளைவுகளை நிர்ணயிக்கும் திறனற்றவராய் இருப்பதும் , தம்மிடமிருந்து தாமே அந்நியப்பட்ட , ஆரோக்கியமான சுய உந்துதல்களால் மழுங்கி மரத்துப்போன ஒரு மக்கள் சமூகம் உருவாகவே வழிசெய்கிறது..."

..................................................

" வீர்ய விதைகளுக்கு அதிக அளவில் தண்ணீரும் , செயற்கை உரமும் , பூச்சிக் கொல்லிகளும் தேவைப்படுகின்றன . இம்மூன்றில் ஒன்று குறைந்தாலும் விளைச்சல் பழைய பாணி விதைகள் மூலம்  கிடைப்பதை விடவும் குறைந்துவிடுகிறது ...."

இந்நாவலில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் போலியான வேசங்களையே அணிவதால் அவர்கள் தான் வாசமில்லா " காகித மலர்கள் " என்று அர்த்தப்படுத்துகிறார், ஆதவன் .

நன்றி - ஆதவன் , உயிர்மை பதிப்பகம் .

மேலும் படிக்க :-

தேவதச்சன் - கவிதைகளின் நாயகன் !

...................................................................

Saturday, August 9, 2014

வலுத்தது நிலைக்கும் !

450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி என்று இன்று அழைக்கப்படுகிற கிரகம் 7927 மைல் விட்டமுள்ள மிதக்கும் பாறை .இந்தப்பாறையில் கடல்கள் உருவாக 100 கோடி ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன.350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தான் முதல் உயிரினம் தோன்றியிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது . பூமியில் எவ்வாறு உயிரினம் தோன்றியது என்பது குறித்த ஆராய்ச்சி இன்று வரை தொடர்கிறது .சமீபத்தில் கூட சில ஆராய்ச்சியாளர்கள் ,செவ்வாய் கிரகத்திலிருந்து பிரிந்து வந்த ஒரு பாறை பூமியின் மீது மோதியதால் தான் உயிரினம் தோன்றியது என்று தெரிவித்துள்ளனர். இப்படித்தான் உயிரினம் தோன்றியது இதுவரை அழுத்தமாக யாராலும் சொல்ல முடியவில்லை .உண்மையான காரணம் இயற்கை மட்டுமே அறியும் .

பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் முதலில் தோன்றின .பரிணாம வளர்ச்சியின் காரணமாக அடுத்ததாக தாவரங்கள் தோன்றின.பரிணாம வளர்ச்சி என்பது உயிரினங்களின் மரபணுக்களில் தேவை, சூழல், தன்னெழுச்சியான  நிகழ்வுகள் சார்ந்து தொடர்ச்சியாக நிகழும் மாற்றங்கள் காரணமாக உயிரினங்களின் தகவமைப்புகளில் ஏற்படும் மாற்றம் என்று சுருக்கமாகச் சொல்லலாம் .இந்த மாற்றம் நிகழ கோடிக்கணக்கான வருடங்கள் தேவைப்படுகின்றன .உயிரினங்களின் உருவாக்கத்தில் தாவரங்களின் தோற்றம் முக்கியமான நிகழ்வு . பூமியின் ஆதார சக்தியான சூரியஒளியைப் பயன்படுத்தி காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு  மற்றும் நிலத்தில் உள்ள தண்ணீர் உதவியுடன் ஒளிச்சேர்க்கை நடைபெற்று தங்களுக்குத் தேவையான உணவைத் தாங்களே தாயாரித்துக்கொள்வதுடன் ஆக்ஸிஜன் வாயுவையும் தாவரங்கள் வெளியிடுகின்றன .

அடுத்ததாக நீர் வாழ்வன ,நில வாழ்வன , நீர் நில வாழ்வன , பறப்பன , ஊர்வன ,நடப்பன என்று தாவரங்கள் வெளியிடும் ஆக்ஸிஜனை உயிர்மூச்சாக கொண்டு உயிர்வாழும் உயிரினங்கள் தோன்றின . முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் உயிரினங்களிருந்து பரிணாம வளர்ச்சியின் காரணமாக குட்டி போட்டு பால் கொடுக்கும் உயிரினங்களான பாலூட்டிகள் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகின.அந்தப் பாலூட்டி இனங்களில் ஒன்று தான் குரங்கிலிருந்து உருவான மனித இனம் . மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது . மனித இனத்தில் முதலில் தோன்றியது பெண் தான் . குரங்கிலிருந்து முழு பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக மாறியது 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான்.

அடர்ந்த ஆப்பிரிக்கக் காடுகளில் பல வகை குரங்குகள் வாழ்ந்து வந்தன . வெயிலும் வெப்பமும் மிகுந்த அந்தச் சூழலில் மற்ற குரங்கினங்களால் விரட்டப்பட்ட குரங்கினம் தான் பின்னாளில் மனிதனாக மாறியது . மற்ற விலங்குகளுக்கு இருப்பது போன்ற எந்தவித சிறப்புத் தகுதிகளும் இல்லாத அந்த குரங்கினத்தால் அந்தச்சூழலில் வாழமுடியவில்லை . சுற்றிலும் இருந்த  சிங்கம்,சிறுத்தை,பாம்பு ,கழுகு போன்றவற்றிடமிருந்து தப்பிப்பதே பெரும் போராட்டமாக இருந்தது . எண்ணிக்கையில் குறைவாக இருந்த அந்த மனிதனாக மாறப் போகிற குரங்கினம் அழிந்து போகும் ஆபத்துக்கு உள்ளாகி  "அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள் (Endangered Species) " பட்டியலில் சேர்ந்தது .இன்று அதே குரங்கினம் பல உயிரினங்களை Endangered Species ஆக மாற்றிக் கொண்டிருப்பது தான் இயற்கையின் விளையாட்டு .

இயற்கைக்கு இரக்கம் என்பதே துளியும் கிடையாது . " திறமையிருந்தால் பிழைத்துக்கொள், இல்லையேல் அழிந்து போ " என்ற Survival of the Fittest  ( வலுத்தது நிலைக்கும் ) மட்டுமே இயற்கையின் ஒரே விதி . இந்த விதிக்கு உட்பட்டு மிகத் திறமையாக 4 லட்சம் ஆண்டுகளாக இயற்கையின் விளையாட்டில் பங்குபெற்றுள்ள இனம் தான் மனித இனம் . இந்த விளையாட்டில் மனிதன் என்று தோற்கிறானோ அன்றே அழிந்துவிடுவான் . ஆப்பிரிக்கக் காடுகளில் இருந்து உயிர் பிழைப்பதற்காக வெளியேறிய குரங்கினம் மரக்கிளையில் தொங்கியபடி நடந்த பழக்கத்தில்  இரண்டு கால்களில் நடக்க ஆரம்பித்தது . பெரிய குரங்கினங்களைச் சார்ந்து வாழ்ந்த பழக்கத்தில் விட்டுக்கொடுத்து அனுசரித்து கூட்டமாக வாழப் பழகிக் கொண்டன .விதவிதமான பழங்களைத் தேடித் தின்ற பழக்கத்தில் (ஓ..அந்தப் பழக்கத்துல தான் இன்றும் மனிதன் விதவிதமான உணவுகளைத் தேடித்தேடி தின்கிறானோ ?) மாறுபட்ட நிறம் ,மணம், சுவை உணரத் தெரியும் . தங்களை பூமியில் நிலைநிறுத்திக்கொள்ள இந்தத் திறமைகள் மட்டும் போதவில்லை . ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலை உண்டானது .

எதிர்பாரதவிதமாக அந்த அதிசயமும் நிகழ்ந்தது .இந்தப் பூவுலகில் கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன .இவற்றின் ஒரே பிறவிப்பயன் இனவிருத்தி தான். மற்ற மிருகங்கள் வருடத்தில் சில வாரங்கள் மட்டும்,பருவகாலத்தில் இனம் சேர்ந்து தங்கள் இனத்தைப் பெருக்கும் .இதற்கு நேர் மாறாக காலம்,நேரம் ,பருவம்,உருவம் கருதாமல் வருடத்தின் முன்னூற்றி அறுபத்தைந்தே கால் நாட்களும் தாராளமாக உறவு கொண்டு தங்களது இனத்தை பன்மடங்காக பெருக்கி காட்டியது ( இன்றும் பெருக்கிக் கொண்டே தான் இருக்கிறோம் ) மனித இனம் .

இயற்கையில் ஒரு வட்டம் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கிறது . மற்ற பெரிய குரங்குகளாலும் விலங்குகளாலும்  அடித்துவிரட்டப்பட்ட மனித இனம் இன்று அனைத்து விலங்குகளையும் அடித்து விரட்டுகிறது ,ஏன் சக மனிதனையும் விட்டு வைக்கவில்லை . உயிர் பிழைத்திருக்க தான் வாழ்ந்த சூழலைவிட்டு இடம் பெயர வேண்டிய கட்டாயத்தை எல்லா விலங்குகளுக்கும் ஏற்படுத்திய பெருமை பெற்றது ,மனித இனம் .மற்ற விலங்குகள் மனிதனுக்குச் செய்ததை இன்று மனிதன் மற்ற விலங்குகளுக்குச் செய்கிறான் .

மனிதனுக்கு முன்பு வாழ்ந்த எந்த உயிரினமும் பூமியை இந்த அளவிற்கு அக்குவேராக ஆணிவேராக அலசி ஆராயவில்லை . பிறந்தோமா ,உணவைத் தேடித் தின்றோமா ,இனவிருத்தி பண்ணினோமா ,செத்தோமா என்று இருந்தன . பூமியில் என்னென்ன எங்கெல்லாம் இருக்கிறது , என்னென்ன உயிரினங்கள் வாழ்கின்றன ,தனது இனம் எங்கெல்லாம் இருக்கிறது என்ற எந்தவித ஆராய்ச்சியிலும் இறங்கவில்லை .பூமியைத் தாண்டியும் யோசித்து ஆகாயத்தையும் அடைய நினைக்கவில்லை .காரணம், மனிதனைப் போல உயிர் பிழைத்திருப்பதற்கு மிக நீண்ட தொலைவு பயத்துடன் பயணிக்க வேண்டிய தேவை அவற்றிற்கில்லை .அவை இருந்த இடத்திலேயே எல்லாம் கிடைத்தன ,அதானால் பெரிதாக எதையும் யோசிக்கவில்லை .மனிதனின் நிலை அப்படி அல்ல ,ஒவ்வொரு விசயத்திற்கும் போராட வேண்டிய கட்டாயம் இருந்தது ,இன்றும் இருக்கிறது .

மனிதன் இன்றும் ஒரு நாடோடி தான் ,பணம் ,பொருளுக்காகவும் ,உயிர் பிழைத்திருப்பதற்காவும் , ஊர் ஊராக ,நாடு நாடாக சுற்றி அழைகிறான் .மற்ற உயிரினங்களுக்கும் ,வளங்களுக்கும் மனிதன் எதிரி என்ற நிலை போய் மனிதனுக்கு மனிதனே எதிரி என்ற நிலை உண்டாகிவிட்டது போல் தோன்றினாலும் , இயற்கையைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி , நல்லது கெட்டது , சரி தவறு , கதாநாயகன் வில்லன் என்ற எந்தப்பாகுபாடும் இல்லை . மனிதனைப் போல அறம் சார்ந்த வாழ்வை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே ஒவ்வொரு விசயத்திலும் அறத்தை மீறும் வழக்கமும் இயற்கையில் இல்லை . " வலுத்தது நிலைக்கும் " - இது ஒன்று மட்டும் தான் இயற்கையின் ஒரே அறம் . இயற்கை ,அன்று ஆப்பிரிக்கக் காடுகளில் மனிதனுக்காகவும் கவலைப்படவில்லை ,இன்று மனிதனால் பாதிக்கப்படும் மற்ற உயிரினங்களுக்காகவும் கவலைப்படவில்லை . இயற்கையின் முன் எல்லா உயிரினங்களும் சமம் தான் .

ஒரு சுழற்சி எங்கும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது . பிரபஞ்சத்தில் இருக்கு இல்லை ,இல்லை இருக்கு தான் தொடர்ந்து நிகழ்கிறது . பால்வீதியில் பெரிய பாறைகளும் , நட்சத்திரங்களும் எதிலாவது மோதி வெடித்துச் சிதறித் தூள் தூளாக மாறுகின்றன . நாளடைவில் சிதறிய துகள்கள் மீண்டும் இணைந்து நட்சத்திரமாகவோ பாறையாகவோ மீண்டும் மாறுகின்றன . இது பால் வீதியில் தொடர்ந்து நிகழ்கிறது ,இது பிரபஞ்சத்திற்கும் பொருந்தும் .அறிவியலின்படி சூரியனிலிருந்து தோன்றியது தான் பூமி . பூமியின் ஆதார சக்தியும் சூரியன் தான் . சூரியஒளி பூமியில் விழாவிட்டால் பூமியின் இயக்கமே நின்றுவிடும் சூழல் உருவாகிவிடும் . பூமியில் ஒளிச்சேர்க்கை நடைபெறாவிட்டால் தாவரங்கள் அழிந்துவிடும் . தாவரங்கள் அழிந்துவிட்டால் ஆக்ஸிஜன் கிடைக்காது . ஆக்ஸிஜன் இல்லையென்றால் எல்லாம் காலி . சூரியனின் அழிவு தான் பூமியின் அழிவும் , சூரியன் இருக்கும் வரை பூமியும் இருக்கும் . சூரியனிலிருந்து உருவான பூமி ஒரு நாள் சூரியனை அடையும் . அதுவரை மனிதன் இருப்பானா எனபது சந்தேகமே !

பூமியில் வாழும் மற்ற உயிரினங்கள் அனைத்தும் இயற்கையை முழுமையாக நம்புகின்றன . தங்களின் குறைப்பாடுகள் பற்றியோ ,இழப்புகள் பற்றியோ அவற்றுக்கு எப்போதுமே கவலைகள் இல்லை .தங்களை இயற்கையின் ஒரு பகுதியாகவே உணர்கின்றன .மனிதன் மட்டும் இயற்கையை நம்புவதில்லை . எந்த உயிரினமும் ,தங்கள் தேவைக்கு மீறிய எதையும்  இயற்கையிடம் இருந்து பெறுவதில்லை . தாவரங்கள், தங்கள் தேவைக்கு மேல் உணவு தயாரிப்பதில்லை .அவை ,என்றோ பிறக்கப்போகும் தனது சந்ததிக்கு இப்போதே  எதையும் சேமிப்பதில்லை . விலங்குகள் (ஊனுண்ணிகள் ), தங்களின் பசிக்கு மட்டுமே வேட்டையாடுகின்றன . நாளைக்கு என்ன நடக்குமோ என்று பயந்து பயந்து பொருளைச் சேர்க்கும் பழக்கமும் அவற்றுக்கு இல்லை . இன்றைய உணவைக் கொடுத்த இயற்கை ,நாளைய உணவையும் கொடுக்கும் என்ற நம்பிக்கை மனிதனைத் தவிர எல்லா உயிரினங்களுக்கும் இருக்கிறது .

மனிதனின் இந்த நம்பிக்கையின்மைக்கும் இயற்கையே காரணம் . பூமியில் கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்தன ,வாழ்கின்றன ,வாழும் (சூரியன் இருக்கும் வரை ).உயிரினங்கள் அழிவதும் ,புது உயிரினங்கள் தோன்றுவதும் பூமியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . இதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது .இது இயற்கையின் ஒரு அங்கம் .மனிதனின் செயல்பாடுகள் காரணமாக பூமியெங்கும் லட்சக்கணக்கான உயிரினங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன .இயற்கை , நம்மை வைத்தே இவ்வளவு உயிரினங்களை அழிக்கிறதே, நம்மை அழிக்க என்னவெல்லாம் செய்யும் என்ற பயம் தான் ,இயற்கையின் மீதான நம்பிக்கையின்மைக்குக் காரணம் . அதானால் தான் தொடர்ந்து இயற்கைக்கு எதிராக செயல்பட்டு, இயற்கையின் செயல்கள் அனைத்தையும் செயற்கையாக செய்து பார்த்து இயற்கையை வெல்ல நினைகிறான் . மனிதனும் இயற்கையின் ஒரு அங்கம் தான் என்பதை உணர மற(று)க்கிறான் . பூமியில் மனித இனமும் அழிவது உறுதி . எப்போது என்பது தான் தெரியவில்லை .

பரிணாம வளர்ச்சி இன்றும் நிகழ்ந்து கொண்டிருப்பது உண்மையென்றால் மனிதனிலிருந்து இன்னொரு உயிரினம் கண்டிப்பாக தோன்றியே தீரும் .குரங்கினத்தை குரங்கே ஒடுக்கியதால் மனிதன் தோன்றினான் .மனிதயினத்தை மனிதனே ஒடுக்குவதன் மூலம் யார் உருவாகப் போகிறார் என்று தெரியவில்லை . ஆறறிவுடன் ஒன்று சேர்ந்து ஏழறிவுள்ள உயிரினம் உருவாகலாம் .எல்லாம் காலத்தின் கையில் . வலுத்தது நிலைக்கும் !

இந்தக் கட்டுரை " குறி " சிற்றிதழில் வெளிவந்துள்ளது .

தொடர்புக்கு :

குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .20 
பத்து இதழ் சந்தா ரூபாய்.200
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941


இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :

சூரியன் - உலக சக்திகளின் மையம்

ரிமோட் கன்ரோல் வாழ்க்கை !  

....................................................................................................................................................................

Tuesday, July 22, 2014

மனிதம் எங்கே ?

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் வேடிக்கை பார்த்தோம் , மியான்மரிலிருந்து முஸ்லீம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்டபோதும் வேடிக்கை பார்த்தோம் , ஆப்பிரிக்க நாடுகளில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போதும் வேடிக்கை பார்த்தோம் , இப்போது , அறிவுலகில் பெரிய அறிவாளிகளாக பீனிக்ஸ் பறவைகளாக அடையாளம் காணப்படும் இஸ்ரேலியர்களின் நாடான இஸ்ரேலின் தாக்குதல்கள்களால் காஸா பகுதியிலுள்ள அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள் .தெற்கு இஸ்ரேல் பகுதியிலுள்ள மக்கள் , காஸாவின் ஹமாஸ் தாக்குதல்களால் பாதிக்கப்படுகறார்கள் ; கொல்லப்படுகிறார்கள் .

உலகெங்கிலுமே போரை நியாயப்படுத்தி அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள் . ஏ ! போரை நியாயப்படுத்துபவர்களே உங்கள் போரை , உங்கள் சண்டையை மககள் பாதிக்காவண்ணம் போரைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாத அப்பாவி மக்களைக் கொல்லாமல் பாலைவனம் போன்ற இடங்களில் நடத்தக்கூடாது . எண்ணை வளங்களை வசப்படுத்த , ஆயுதங்களை விற்க , அதிகாரத்தை நிலைநாட்ட , சிறுபாண்மை இனத்தை அழித்தொழிக்க உலகெங்கிலும் போர்கள் நடக்கின்றன . ஆறறிவு உள்ள ஒரே உயிரினம் என்ற பெருமையுடன் தன் இனத்தையே வெவ்வேறு காரணங்கள் சொல்லி அழித்தொழிக்கிறது .இதயமில்லா இயந்திரம் போல அத்தனையையும் வேடிக்கை பார்க்கிறோம் அல்லது வேடிக்கை மட்டும் பார்க்க வைக்கப்படுகிறோம் . உக்ரைன் பகுதியில் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது மிகவும் கொடூரமான செயல் . இந்த விசயத்திலும் கேடு கெட்ட அரசியல் தான் முன் வைக்கப்படுகிறது . உங்க சண்டையில நாங்க ஏண்டா சாகனும் .

நம்மைச் சுற்றி , நம்மை வைத்து நிறைய அரசியலும் பெரும் வணிகமும் நடக்கின்றன . அவை நம்மிடையே மிச்சமிருக்கும்  கொஞ்ச நஞ்ச மனிதத்தன்மையையும் அழித்துக்கொண்டிருக்கின்றன . இந்தப் பூமியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் , ஒவ்வொரு பொருளும் வணிகமாக்கப்படுகிறது .இன்றைய அரசியல்வாதிகள் , பெரு முதலாளிகளின் தேவை சுயநலவாதிகள் தான் .எல்லாவற்றிலும்  கேள்வி கேட்கும் சமூகத்தை வெறுக்கிறார்கள் ; வேரோடு அழிக்க நினைக்கிறார்கள் . சமீபத்திய உதாரணங்கள் ஜூலியன் அஸாஞ்சே மற்றும் எட்வர்ட் ஸ்னோடோன் . எதேசதிகாரத்திற்கு எதிராக தைரியமாக கேள்வி கேட்ட இந்த இரண்டு பேரும் தூதரகங்களில் கைதிகள் போல் வாழ்கிறார்கள் .நமக்காக ( மனிதர்களுக்காக ) கேள்வி கேட்பவர்களுக்கு நாம் தரும் ஆகப் பெரும் பரிசு இது தான் .

பெருமுதலாளிகளை, சட்டாம்பிள்ளைகளை எதிர்த்து இந்த இரண்டு பேரைக் கூட நம்மால் சுதந்திரமாக வாழ வைக்க முடியவில்லை . போரினால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறோம் ? நமக்கே இந்த நிலை வந்தாலும் நமக்காக யாரும் வரமாட்டார்கள் . போர் எப்படிப்பட்டது என்பதை போரால் பாதிக்கப்பட்ட நம் ஈழத்துச் சொந்தங்களை கேட்டுப்பாருங்கள் தெரியும் . போரை விடவும் போருக்குப் பிந்தைய வாழ்க்கை மிகக் கொடியது . எல்லாவற்றையும் வேடிக்கை மட்டும் பார்க்கும் நம்மிடையே இருந்த மனிதத்தன்மை எங்கே ?

மனிதத்தின் அழிவு , மனித இனத்தின் அழிவு !
.............................................................

Saturday, July 19, 2014

தனியழகு !

மின்கம்பிகளுக்கு
தனியே
அழகென்று
ஏதுமில்லை
பறவை(கள்)
அமர்ந்த பிறகு
தனியழகு ! 

Monday, June 30, 2014

ரிமோட் கன்ரோல் வாழ்க்கை !

ரிமோட் கன்ரோல் செயல்பாடு மனித வாழ்வில் பெரும் பாதிப்பை உண்டு பண்ணியுள்ளது . இந்தப் பாதிப்பு நாம் உணரா வண்ணம் நிகழ்ந்துள்ளது. ரிமோட் கன்ரோலைப் பயன்படுத்தாமலே   தொலைக்காட்சி பார்த்தோம், கார் ஓட்டினோம் , வீட்டில் வாழ்ந்தோம் இன்னும் பல வேலைகள் செய்தோம் . அப்போதும் ஒரு வாழ்க்கை வாழ்ந்தோம் . ரிமோட் கன்ரோலைப் பல்வேறு விதங்களில் பயன்படுத்திக் கொண்டும் ஒரு வாழ்க்கை வாழ்கிறோம் .என்ன வித்தியாசம் ?

நாம் இயக்க நினைக்கும் பொருட்களை தொலைவிலிருந்தே உடனடியாக இயக்க ரிமோட் கன்ரோல் பயன்படுகிறது. நமது நேரத்தை மிச்சப்படுத்திய ஒரு கண்டுபிடிப்பாக இருந்தாலும் ஒரு விதத்தில் நம்மை சோம்பேறியாகவும் மாற்றிவிட்டது . விசயம் அதுவல்ல. இந்த ரிமோட் கன்ரோல் செயல்பாடு நம் வாழ்வை எவ்வாறு பாதித்துள்ளது என்பது சற்றே அதிர்ச்சி தரும் விசயம்.

நாம் பயன்படுத்தும் பலவிதமான ரிமோட்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது தொலைக்காட்சி ரிமோட் தான். தொலைக்காட்சி ரிமோட்டால் சண்டை வராத வீடுகளே இல்லை. ரிமோட் என்ன செய்கிறது ,நாம் அமுக்கிய பட்டனுக்கு உரிய வேலையை எந்தக் கேள்வியும் கேட்காமல் செய்து முடிக்கிறது. ரிமோட்டின் இந்த கேள்வி கேட்காத தன்மை நமக்கு மிகவும் பிடித்திருககிறது. பொதுவாகவே  தனது செயல் குறித்து மற்றவர்கள் கேள்வி கேட்பதை மனிதன் விரும்புவதில்லை. ஆகவே நமக்கு ரிமோட் மிகவும் பிடித்த பொருளாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை . இதில் பிரச்சனை எங்கு ஆரம்பிக்கிறது என்றால் ரிமோட் கன்ட்ரோல் மூலம் பொருட்கள் இயங்குவது போல் சக மனிதர்களும் எந்தக் கேள்வியும் கேட்காமல் தன் சொல்படி இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறபோதுதான்.

 தான் சொல்லும் வேலையைச் செய்யாதவர்கள் மீது எரிந்து விழுகிறோம் . தான் கொடுத்த வேலை குறித்து கேள்விகள்  கேட்பதும் பிடிப்பதில்லை. தான் சொல்லும் வேலையை எந்தக் கேள்வியும் கேட்காமல் மற்றவர்கள் செய்து முடிக்க வேண்டும் என்ற மனநிலை சமூகத்தின் அனைத்து தளத்திலும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது . அரசுகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடும்பங்கள் அனைத்திலும் இந்த ரிமோட் கன்ரோல் மனநிலை பெருகியுள்ளது. குறிப்பாக குடும்பங்களில் கணவன் மனைவியையோ அல்லது மனைவி கணவனையோ ரிமோட் போல இயக்க நினைப்பதாலேயே நிறைய பிரச்சனைகள் வெடிக்கின்றன.

இந்த ரிமோட் கன்ரோல் மனநிலை நம்மை நாமே அழித்துக் கொள்ள மிகச் சிறந்த வழி . " தி கிரேட் டிக்டேட்டர் " திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் சார்லி சாப்ளின் மேடையில் பேசும் பேச்சு , நாம் இயந்திரத்திற்கு எவ்வளவு மரியாதை தர வேண்டும் ,மனிதர்களுக்கு எவ்வளவு மரியாதை தர வேண்டும் என்பதை மிக தெளிவாக எடுத்துக் கூறியது . இயந்திரங்கள் எப்போதும் இயந்திரங்களே , அவற்றுக்கு மனிதத்தன்மை கிடையாது . எப்போதும் மனிதனை இயந்திரத்தோடு ஒப்பீடு செய்யக்கூடாது . சாப்ளின் தனது " மாடர்ன் டைம்ஸ் " திரைப்படத்தில் இயந்திரங்களின் செயல்பாட்டை அழுத்தமாக பகடி செய்திருப்பார் . ஒவ்வொரு நொடியும் இயந்திரங்களுடனே வாழ வேண்டிய சூழலில் நமது மனதிலும் இயந்திரத்தன்மை அதிகரித்தபடியே இருக்கிறது . மனிதத்தன்மை குறைய குறைய மனித இனத்திற்கு அழிவு தான் .

ரிமோட் கன்ரோல் மனநிலையையும் ,இயந்திரத்தன்மையையும் தொலைவில் வைப்போம் .மனிதத்தன்மையை மனதில் வைப்போம் !

மேலும் படிக்க :

மெதுவான எளிய வாழ்க்கை !

வாழ்க்கை ஒரு போராட்டம் !
............................................................

Friday, May 23, 2014

எது வளர்ச்சி ?

எங்க பார்த்தாலும் வளர்ச்சி வளர்ச்சினே பேசிக்கிறாங்க . தனி மனித வளர்ச்சி , கிராம நகர வளர்ச்சி , பொருளாதார வளர்ச்சி ,நாட்டின் வளர்ச்சி , உலகின் வளர்ச்சினு பலவிதமான வளர்ச்சி பற்றி பலரும் வகுப்பெடுக்கறாங்க . உலகமயமாக்கல், இந்த வளர்ச்சின்ற பேர சொல்லிக்கிட்டு தான் உலகெங்கும் கிளை பரப்புகிறது. உண்மையில் உலகமயமாக்கலால் வளர்ந்ததை விட அழிந்ததே அதிகம். அப்படியென்றால் வளர்ச்சியை எப்படி நிர்ணயம் செய்வது ?

வளர்ச்சியின் உண்மையான பொருள் இயற்கையிடமிருக்கிறது. இயற்கையில் வளர்ச்சி என்பது அழிவால் வருவதில்லை. அழிவு இருந்தாலும் ஒரு கட்டுப்பாடான சமநிலை இயற்கையில் பேணப்படுகிறது. அளவுக்கு மீறிய வளர்ச்சியையும் , உடனடியான வளர்ச்சியையும் இயற்கை ஒருபோதும் ஆதரிப்பதில்லை . இன்றைய நவீன வளர்ச்சி என்பது அளவுக்கு மீறிய வளர்ச்சியையும் , உடனடியான வளர்ச்சியையும் நோக்கி மனிதனைத் தள்ளுகிறது .உலகமய வளர்ச்சியில் சமநிலைக்கு சிறிதும் இடமில்லை. ஏற்றத்தாழ்வுகளை முன்பிருந்ததை விட அதிகப்படுத்தியது தான் உலகமயமாக்கலின் சாதனை. முற்றுப் பெறாத வளர்ச்சியை உலகமயமாக்கல் தொடர்ந்து வலியுறுத்துகிறது. இந்த முற்றப்பெறாத வளர்ச்சி தான் ஒரு நிறுவனத்தின் அழிவுக்குக் காரணமாகிறது .

உண்மையில் வளர்ச்சி என்பது கொடுத்துப் பெறுவதும் , பெற்றுக் கொண்டு  கொடுப்பதும் தான் , ஒன்றை அழித்துப் பெறுவதல்ல . ஒரு மரத்தின் வளர்ச்சியை உதாரணமாகச் சொல்லலாம் . ஒரு மரம் விதையிலிருந்து வளர்ந்து முழு வளர்ச்சியை அடைவது வரை நீர் , வேதிப் பொருட்கள், நுண்ணுயிரிகள், சூரிய ஒளி, கார்பன் டை ஆக்சைடு , ஆக்ஸிஜன் , வெப்பம் , குளிர் போன்ற பல்வேறு காரணிகள் தேவைப்படுகின்றன. அதே மரம் வளரும் போதும் , வளர்ந்த பின்பும் நிறைய பலன்களைத் தருகிறது . மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது , ஆக்ஸிஜன் கிடைக்கிறது , மழைப் பொழிவுக்குக் காரணமாகிறது, பல்வேறு விதமான உயிரினங்கள் வாழ்வதற்கு வாழிடத்தையும் , உணவையும் தருகிறது , வறண்ட காற்றை குளுமைப்படுத்துகிறது ,நிழல் தருகிறது இவ்வாறு பலவற்றை தன்னைச் சுற்றி இருப்பவற்றுக்கு தருகிறது. பல நாடுகளில் சம்பாதித்து ஒரே இடத்தில் குமிக்கும் வேலையை  மரங்கள் செய்வதில்லை ; மனிதர்கள் செய்கிறார்கள் . மாறாத சமநிலையுடன் தன்னைச் சுற்றி இருப்பவற்றிடமிருந்து பெற்றுக் கொண்டு கொடுப்பதும் , கொடுத்துப் பெறுவதும்  தான் உண்மையான வளர்ச்சி .

சமநிலையைப் பேணாத எதுவும் வளர்ச்சியல்ல ; குறைபாடு தான் . இன்றைய வளர்ச்சி என்பது இயற்கையை அழிப்பதில் தொடங்கி இயற்கையை அழிப்பதிலேயே முடிகிறது. ஆறுகளும் , மலைகளும், மரங்களும் பெரிய அளவில் ஒரே நேரத்தில் அழிவைச் சந்திக்கின்றன , வளர்ச்சியின் காரணமாக . கட்டுப்பாடுள்ள வளர்ச்சி தான் எல்லோருக்கும் நல்லது. பத்தடி வளரும் மரம் 12 அடி வளரலாம் , நூறடி வளர்ந்தால் யாருக்கும் லாபமில்லை. அதிகபட்ச வளர்ச்சியே அதிகபட்ச அழிவைத்தரும் மரத்துக்கும் தான் ,மனிதனுக்கும் தான் , நாட்டுக்குந்தான்.    பெரு நிறுவனங்களின் வளர்ச்சியை கட்டுக்குள் வைப்பது தான் அரசாங்கத்தின் கடமை .கடமையைச் செய்யாமல் இருக்க அரசுகளே விலை போகின்றன.

ஒன்றை அழித்துப் பெறுவதல்ல வளர்ச்சி. ஒன்றைக் கொடுத்துப் பெறுவதே வளர்ச்சி !

மேலும் படிக்க :

விவசாயமும் கிராமமும் தொலைக்காட்சியும் !

இந்தியா - மேட் இன் சீனா !


Wednesday, April 30, 2014

ஆம் ஆத்மியின் குரல் !

நடந்து முடிந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியின் குரல் ,லஞ்சம் , ஊழலுக்கு எதிரான குரலா ? அல்லது மாற்றத்திற்கான குரலா ? தெரியவில்லை. மக்களுக்காகப் போராடும் களப்போராளிகள் அதிகம்பேர் பங்குபெற்ற தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கிறது. இத்தனை பேரையும் நேரடியாக அரசியலில் பங்கு பெற வைத்தது நிச்சயமாக ஆம் ஆத்மியின் சாதனை தான். ஆம் ஆத்மியின் வேட்பாளர் தேர்வு மிகவும் வெளிப்படையாகவே உள்ளது. தமிழகத்தில் ஆம் ஆத்மி சார்பில் 25 வேட்பாளர்கள் என்பது ஆச்சரியம் தான். வெளியில் மதசார்பற்றவர்கள் போல் காட்டிக் கொண்டு சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது தான் மாநில , தேசிய அளவிளான அரசியல் கட்சிகளின் பொது புத்தி . ஆம் ஆத்மி இவ்வாறு இல்லை என்பது சற்றே ஆறுதல் தருகிறது.

ஒரு தேசிய கட்சியாக நாடு முழுவதும் களமிறங்கியிருக்கும் ஆம் ஆத்மியின் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒட்டு மொத்த இந்தியாவின் மாற்று அரசியலுக்கான நம்பிக்கைக் கீற்றாய் டெல்லியில் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி அவசரப்பட்டு சிறுபிள்ளைத்தனமாக பதவியிலிருந்து விலகியது பெரிய விமர்சனமாக உள்ளது. எதற்காக பதவி விலகியது என்பது சிந்திக்க வேண்டிய விசயம் . மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை உரிய நேரத்தில் நிறைவேற்ற முடியாத காரணத்தால் தான் ஆம் ஆத்மி பதவி விலகியது . பதவிக்காக எவ்வளவு கீழ்த்தரமாக வேண்டுமானலும் நடந்துகொள்ளும் அரசியல்வாதிகள் அதிகம் இருக்கும் நாடு தான் இந்தியா. பதவிக்காக இங்கே கருணாநிதி என்னவெல்லாம் செய்வார் என்பது எல்லோரும் அறிந்ததே.

 கெஜிரிவால் ,காங்கிரஸ் எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டிலிருந்து திடீரென்று மோடி எதிப்பு நிலைப்பாட்டிற்கு மாறியது நிறைய பேருக்கு பிடிக்கவில்லை . ஆம் ஆத்மியின் கொள்கை ஊழல் எதிப்பு என்றால் கெஜிரிவால், ராகுலை எதிர்த்து தான் போட்டியிட்டுருக்க வேண்டும் . கெஜிரிவால் ,மோடிக்கு எதிராக நிற்பது காங்கிரஸுடன் மறைமுக கூட்டு வைத்திருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது . கெஜிரிவால் ஒரு சர்வாதிகாரி போலவே செயல்படுகிறார் என்றும் சொல்கிறார்கள். இப்படி ஆம் ஆத்மி மீதும், கெஜிரிவால் மீதும் நிறைய விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன .ஒரு அரசியல் கட்சிக்கு ஊழல் எதிர்ப்பு , வெளிப்படைத் தன்மை இவை மற்றும் போதுமா ? காங்கிரஸ் ,பா.ஜ.க., மற்றும் பல்வேறு மாநில கட்சிகள் மீது இருக்கும் வெறுப்பை ஆம் ஆத்மி எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்போகிறது ? தெரியவில்லை .

இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி பெறும் ஒவ்வொரு ஓட்டும் மாற்றத்திற்கான ஓட்டாகவே இருக்கும் . இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி இந்தியா முழுவதும் பெறப் போகும் வாக்கு சதவீதம் மற்ற அரசியல் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடும் . ஒட்டு மொத்த இந்தியாவிற்காக கொள்கைகள் வகுத்து செயல்பட்டால் மட்டுமே ஆம் ஆத்மி வளர முடியும் . இந்தியாவை ஒரே விதமான அளவுகோலில் எப்போதுமே அளக்க முடியாது . பல்வேறு தரப்பட்ட மக்களின் குரலாக ஆம் ஆத்மி ஒலிக்க இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் . எது எப்படியோ " நோட்டா " வில் விழும் ஓட்டும் " ஆம் ஆத்மி "ல் விழும் ஓட்டும் மற்ற கட்சிகளுக்கு மக்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற அச்சத்தை நிச்சயம் உண்டாக்கும் .

மேலும் படிக்க :

கட்சி அரசியலை வேரறுப்போம் !

காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் !

...................................................................................................................................................................

Saturday, March 22, 2014

விவசாயமும் கிராமமும் தொலைக்காட்சியும் !

விவசாயம்,விவசாயி குறித்து யாரும் எந்த நிகழ்ச்சியும் தயாரிக்கவோ ,ஒளிபரப்பவோ முன்வருவதில்லை. வெள்ளித்திரை, சின்னத்திரை மனிதர்கள் மட்டுமே பல்வேறு விதமான நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகின்றனர். இதுவும் ஒருவிதமான தீண்டாமை தான்.இன்றைய சமூகத்தில் மிகப்பெரிய தீண்டாமையைச் சந்திப்பது விவசாயமும், விவசாயியும் தான். "தன் மகன்(ள்) ஒரு விவசாயி ஆக இருப்பதில் தான் பெருமை " என்று பெற்றோர்கள் நினைக்கும் நிலை உருவாகும் வரை விவசாயம் என்பது தீண்டத்தகாததாகவே இருக்கும் . இதை மாற்ற வேண்டியது யாருடைய கடமை?

சமூகத்தின் பிரதிபளிப்பு தான் சினிமா என்றால் 70 % திரைப்படங்கள் விவசாயம் குறித்தோ அல்லது விவசாயம் சார்ந்த தொழில்கள் குறித்தோ , அதில் ஈடுபடும் மனிதர்கள் குறித்தோ இருக்க வேண்டும் . ஆனால், இங்கு, விதவிதமான காதல்கள் தவிர தமிழ் சினிமாவில் என்ன இருக்கிறது.


 இந்தியாவின் ஆன்மா, இன்னமும் கிராமங்களில் வாழ்வதாகச் சொல்கிறார்கள் . ஆனால் , எல்லாத் தரப்பினராலும் கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன . ஆட்சியாளர்களும் ,அரசியல்வாதிகளும் " கிராமம் " என்ற வாரத்தையை மறந்தும் உச்சரிப்பதில்லை . சமீபத்தில் எல்லாக் கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்டன . ஒரு தேர்தல் அறிக்கையில் கூட கிராமம் என்ற வாரத்தையே இல்லை . இந்தியாவில் கிராமங்கள் என்பதே இல்லையா ? இதுல காந்திய தேசம் ( கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு - காந்தி ) என்ற பெருமை வேறு .

கிராமிய கலைகளை மையமாக வைத்து ஒரே ஒரு நிகழ்ச்சி நடத்தக் கூடாதா ! சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சினிமாப் பாடல்களைப் பாடவும் , சினிமாப்பாடல்களுக்கு ஆடவும் வைக்கிறீர்களே .பாடத் தெரியாதவர்களுக்கு பாடச் சொல்லிக்கொடுத்தும் , ஆடத் தெரியாதவர்களுக்கு ஆடச் சொல்லிக்கொடுத்தும் நிகழ்ச்சிகள் நடத்துகிறீர்களே . ஏன்  கிராமியக் கலைகளை கற்றுக் கொடுத்து ஒரு நிகழ்ச்சியாவது நடத்தக் கூடாது ? தமிழ்நாட்டில்  சினிமாவைத் தவிர எதுவுமே  இல்லையா !

 இயல் ,இசை , நாடகம் என்று மூன்று தமிழ் உண்டெனச் சொல்கிறார்கள் .   இயல் என்பது இன்றைய இலக்கியம் , நாடகம் என்பது இன்றைய சினிமா , இசை என்பது ?  சினிமா இசை தான் தமிழிசையாக மாறிப் போய்விட்டது .சினிமாப் பாடல் தவிர்த்து , ஒரு புதிய பாடலை உருவாக்கி பாடும் வகையில் போட்டிகள் நடத்தலாம் . புதிய வகை நடனப் போட்டிகள் வைக்கலாம் . நல்ல இசைக்கானப் போட்டிகள் நடத்தலாம் . அதை விடுத்து வெறும் சினிமாப் பாடல்களைப் மட்டுமே பாடவும் , ஆடவும் வைத்துக்கொண்டு மார்க் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் .இதுல சீசன் 1,2,3,4,5,6,7,8 வேறு .
 சினிமா ஸ்டுடியோ சென்னையில் இருக்கலாம் . அதற்காக நகர மக்களுக்காக மட்டுமே நீங்கள் நிகழ்ச்சிகள் தயாரிப்பீர்களா !

தமிழ்நாடு முழுக்க கடுமையான  வறட்சி நிலவும் இன்றைய சூழலில் , அன்றன்றைய தேவைகளை பூர்த்தி செய்வதே பெரும் சோதனையாக இருக்கும் நிலையில் " ஒல்லி பெல்லி " குறித்தெல்லாம் கவலை இல்லை . எங்கள் பகுதிகளில் வேலை செய்யத் தயாராக இருப்பவர்களுக்கும் வேலை கிடைப்பதில்லை . விவசாயம் நன்றாக நடைபெற்றால் மட்டுமே எல்லோருக்கும் வேலை கிடைக்கும் . வேலை தேடி வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை  உள்ளது உள்ளது .சற்று இளைப்பாற தொலைக்காட்சியை நாடினால் அது தொல்லைக்காட்சியாக இருக்கிறது .குறிப்பாக இந்த செய்தி சேனல்கள் பக்கமும் , ஆளாளுக்கு தீர்ப்பு சொல்ற சேனல்கள் பக்கமும் எட்டிப் பார்க்கக் கூட முடியவில்லை . இடையில இந்த சீசன்கள் வேறு . அதனால் பெண்களுக்கு , வன்முறைக் காட்சிகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நெடுந்தொடர்கள் . ஆண்களுக்கு , நேரத்தை விழுங்கும் கிரிக்கெட் ! தான் பொழுதுபோக்கு . நெடுந்தொடர்களிடமிருந்து பெண்களையும் , கிரிக்கெட்டிடமிருந்து ஆண்களையும் காப்பாற்றுங்கள்.

நீதிமன்றத்தை நாடி வழக்குத் தொடுத்து " கண்டிப்பாக ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும் வாரத்தில் ஒரு மணி நேரமாவது வார இறுதி நாட்களில் மாலை 6 முதல் 10க்குள் விவசாயம், கிராமம் , கிராமம் சார்ந்த கலைகள் ,நிகழ்ச்சிகளாக ஒளிபரப்ப வேண்டும் " என்று தீர்ப்பு தான் வாங்க வேண்டும் போல ...!

(  இந்தப் பதிவு , என்னால்  முகநூலில் எழுதப்பட்ட இரண்டு கருத்துரைகளின்  தொகுப்பு )

மேலும் படிக்க :

 ஆக்காட்டி ஆக்காட்டி ! 
                                                                                                                                        
சினிமா - கிரிக்கெட் - இந்தியா ! 

MGR அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் !

...................................................................................................................................................................

Wednesday, February 19, 2014

தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் !

இந்திய கிரிக்கெட் வரலாறு இரண்டு இடங்களில் தோனியின் பெயரை அழுத்தமாக பதிவு செய்யும் . ஒன்று , அனைத்து சர்வதேச கோப்பைகளையும் வென்ற இந்தியாவின் சிறந்த அணித்தலைவர் .இரண்டு ,தனி ஒரு நாட்டுக்கு எதிரான வெளிநாட்டுப் பயணங்களில் மோசமான தோல்விகளை அதிகளவு  சந்தித்த இந்தியாவின் அணித்தலைவர் . இந்திய கிரிக்கெட் அணி , 1970 களில் கத்துக்குட்டி அணியாக சர்வதேச போட்டிகளில்  விளையாடி மோசமான தோல்விகளை சந்தித்த போது  அப்போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை . வளரும் அணி தொடர்ந்து தோற்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது . அந்த அணி வெற்றி பெற முயற்சிப்பதே சாதனையாக பார்க்கப் படுகிறது . ஒரு நாள் போட்டியில் சாம்பியன் , டெஸ்ட் மற்றும் 20-20 போட்டிகளில் உலகத்  தரவரிசையில் இரண்டாம் இடம் பெற்றுள்ள ஒரு அணி தொடர்ந்து மோசமாக தோற்பது தான் இந்திய ரசிகர்களால்  மட்டுமல்ல உலக கிரிக்கெட் ரசிகர்களாலும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு என்றாலும் வெற்றி, தோல்வி இரண்டுக்கும் அணித்தலைவரே பொறுப்பேற்கிறார் . வெற்றிகளை குவித்த போது தோனியைத்  தலையில் வைத்து கொண்டாடினோம் .தற்போது அதே தோனி தொடர் தோல்விகளை சந்திக்கும் போது நமது உதடுகள்  அவரை ஏசுகின்றன . இந்த நிலை விரைவில் மாறி இந்திய அணி வெற்றிகளைக் குவிக்கும் போது நாம் மீண்டும் தோனியைப் புகழ ஆரம்பித்து விடுவோம் . முன்பு இங்கிலாந்திலும் ,ஆஸ்திரேலியாவிலும் அடைந்த மோசமான தோல்விகளுக்கு ( இரண்டு நாடுகளிலும் நான்கு டெஸ்டிலும் தோல்வி ) நன்றாக செயல்படாத வீரர்களை பழைய சாதனைகளுக்காக தொடர்ந்து தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினர் தான் காரணம் . அடுத்ததாக நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பைக்கு முற்றிலும் புதிய அணியை  ( IPL போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர்கள் ) தேர்வு குழு தேர்ந்தெடுத்தது. அதன் விளைவாக சாம்பியன்ஸ் கோப்பையை அசத்தலாக வென்றது . நான் இதுவரை பார்த்த கிரிக்கெட் தொடர்களில் ,ஒரு தொடர் முழுவதும் இந்தியா சிறப்பாக பந்துவீசியது கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மட்டுமே .20 ஓவராக குறைக்கப்பட்ட இறுதிப் போட்டியில் ( இலக்கு 126 )கூட பந்துவீச்சால் தான் இந்தியா வென்றது . அதன் பிறகு இந்தியாவில் நடந்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவை நான்கு டெஸ்ட்களிலும் தோற்கடித்தது . பிறகு நடந்த  7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் ஆஸ்திரேலியாவை வென்றது . சச்சினுக்காக தென்னாப்பிரிக்கத்  தொடரைச்  சிதைத்து மேற்கு இந்தியத் தீவுகள் உடனான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் திடீரென்று உருவாக்கப்பட்டது . அதிலும் இந்தியா வென்றது . போதிய பயிற்சியும் , அனுபவமும் இல்லாததால் தென்னாப்பிரிக்கத் தொடரில் மோசமான தோல்விகளை இந்தியா சந்தித்தது .

நியுசிலாந்தில் இவ்வளவு மோசமான தோல்விகள் எதிர்பார்க்காதது தான் . தோல்விகளுக்கு 11 பேர் கொண்ட அணித்தேர்வும் ,தோனியின் தற்காப்பு மனோபாவமும் ஒரு காரணம் . 5 ஒரு நாள் போட்டிகள் 2 டெஸ்ட் அனைத்திலும் டாஸ் வென்றாலும் ஒரு  போட்டியைத் தவிர மற்ற அனைத்திலும் முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்தார் . இந்த அணுகுமுறை வெற்றி தராதபோதும் மீண்டும் மீண்டும் பந்துவீச்சையே ஏன் தேர்வு செய்தார் என்று தெரியவில்லை? தோனிக்கு ,மட்டையாளர்கள் ,பந்துவீச்சாளர்கள் யார் மீது நம்பிக்கை இல்லை அல்லது  யாரை அதிகம் நம்புகிறார் குழப்பமாக இருக்கிறது .திறமை இருந்தாலும் புதிய வீரர்களைக்  களமிறக்குவதில் தோனி மிகவும் அதிகப்படியான தயக்கம் காட்டுகிறார் . கடந்த IPL தொடரிலும் இதையே செய்தார் . பத்ரிநாத் சிறப்பாக விளையாடாத போதும் இறுதிப் போட்டி வரை தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார் . பாப் டு பிளிசிஸ் ,பாபா அபராஜித் போன்ற வீரர்களுக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்கவில்லை . இந்த ஆண்டும் இந்த இரண்டு வீரர்களையும் சென்னை வாங்கியுள்ளது . முதலில் சென்னை அணி இந்த IPL ல் பங்கேற்பதே கேள்விக்குறி தான். கோடிகளிலே புரண்டாலும் சூது கவ்வத்தான் செய்கிறது .இது சூதின் குணமா அல்லது மனிதனின் பேராசையா !அதிகாரத்திற்கும் நீதிக்கும் இடையேயான போட்டியில் எது வெல்லும் என்று தெரியவில்லை . ராஜஸ்தான் அணியின் அணுகுமுறை தான் கோடிகள் புரண்டாலும்   IPL போட்டிகளை அர்த்தப்படுத்துகிறது . ரஹானே ,ஸ்டுவர்ட் பின்னி , சஞ்சு சாம்சன்  ,தாம்பே என்று வயது வித்தியாசம் பார்க்காமல் திறமைக்கு மதிப்புக் கொடுக்கிறது . ரகானே ,ஸ்டுவர்ட் பின்னி இந்திய அணியில் இடம்பெற்று விட்டனர் .  விரைவில் சஞ்சு சாம்சனும் இடம் பெறுவார் .

பந்து வீச்சாளர்களைப்  பயன்படுத்துவதிலும் தோனியின் அணுகுமுறை பெரும்பாலும் வெற்றி தருவதில்லை . கடந்த இரண்டு ,மூன்று தொடர்களிலும்  இந்தியப்  பந்துவீச்சு எதிரணிக்கு ஏந்தவித நெருக்கடியையும் தரவில்லை . அனுபவமின்மை ஒரு காரணமாக  இருந்தாலும் தோனியின் அணுகுமுறையும் ஒரு காரணம் . சுழற்பந்து எடுபடும் மைதானங்களிலும் வேகப்பந்து வீச்சிற்கே முன்னுரிமை கொடுக்கிறார் .பகுதிநேரப் பந்துவீச்சாளர்களைப் பெரும் தயக்கத்துடன் தான் பந்து வீச அழைக்கிறார். அவர்கள் சிறப்பாகவே பந்து வீசினாலும் முழுமையாக பயன்படுத்துவதில்லை.கள வியூகம் அமைப்பதிலும் தோனி பின்தங்கியே உள்ளார். இவ்வளவிற்கு பிறகும் இந்தியா பெற்ற வெற்றிகளுக்கு தோனி, வீரர்களிடம் வைத்திருக்கும் அதிகப்படியான நம்பிக்கை தான் காரணம் . இதற்கு முந்தைய அணித்தலைவர்கள் தோனி அளவிற்கு வீரர்களை நம்பியதில்லை . தோனியின் இந்த நம்பிக்கை தான், அவருக்கு  இவ்வளவு வெற்றிகளையும் , பேரையும் ,புகழையும் பெற்றுத்தந்துள்ளது .t20 இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை வேறு அணித்தலைவராக இருந்த்திருந்தால் ஜோகிந்தர் சர்மாவை கண்டிப்பாக பந்துவீச அழைத்திருக்க மாட்டார் . ஆனால் ,தோனியின் நம்பிக்கை வென்றது .
தோனிக்கு பெரிய வெற்றிகளைப் பெற்றுத்தந்த இந்த அதிகப்படியான நம்பிக்கை தான் தற்போது தோல்விகளையும் பெற்றுத்தருகிறது. குறைவான திறமை உள்ளவர்களிடமிருந்தும் அதிகப்படியான திறமையை எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்.

அணித்தேர்வு :

கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவிலிருந்து 15 பேரைத் தேர்வு செய்வது மிகவும் சவாலானது. தேர்வுக்குழு இந்தப்பணியைத் திறம்படவே செய்கிறது . உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடுபவர்கள் தேசிய அணியில் இடம்பெறுகின்றனர். முன்பை விட தற்போது அணித்தேர்வில் வெளிப்படைத்தன்மை தெரிகிறது.

11 பேர் தேர்வு :

களமிறங்கும் 11பேரைத் தேர்ந்தெடுப்பதில் கடந்த இரண்டு , மூன்று தொடர்களாக தோனி சொதப்பி வருகிறார்.சரியான 11 பேரை தேர்வு செய்து விட்டாலே அணித்தலைவரின் பாதிப்பணி முடிந்துவிடும். வெற்றி பெற்றாலோ,  தோல்வி அடைந்தாலோ முதலில் தீர்மானித்த அணி தான் தொடர் முழுவதும் விளையாடுகிறது. நியுசிலாந்து தொடர் ஆரம்பிக்கும் போதே தோனி சொல்கிறார் " பரிசோதனை முயற்சிகளில் இறங்க மாட்டோம் " .சரி, அப்படி பரிசோதனை முயற்சி எதுவும் செய்யாததால் நியுசிலாந்து தொடரில் இந்தியா பெற்றது என்ன ? தோல்விகள் மட்டும் தான் . அதே வேளையில் நியுசிலாந்து அணி தொடர் முழுவதும் பரிசோதனை முயற்சிகளில் இறங்கியது . ஒவ்வொரு போட்டிக்கும் அணி வீரர்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தது . இந்தியா ஒரு போதும் இவ்வாறு செயல்படாது . குறைபாடுகள் அதிகம் இருந்தாலும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் அந்த அணியை மாற்றவே மாட்டார்கள் . 50 ஓவர்கள் விளையாடும் போட்டியில் கூட ஜடேஜாவுடன்  சேர்த்து 5 பந்து வீச்சாளர்கள் இடம்பெறுகிறார்கள் . 200 முதல் 300 ஓவர்கள் பந்துவீச வேண்டிய டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுடன்  சேர்த்து 4 பந்து வீச்சாளர்கள் மட்டுமே ஆடும் அணியில் இடம்பெறுகிறார்கள் . டெஸ்ட் அணிக்கு முற்றிலும் பொருந்தாத வீரராக ஜடேஜா இருந்தும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது .டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள்  தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அஸ்வினுக்கு இரண்டு டெஸ்ட்களிலும் வாய்ப்பளிக்கவில்லை .ஜடேஜாவை விட அஸ்வின் சிறந்த ஆல்ரவுண்டர் . அமித் மிஸ்ரா தொடர்ந்து இரண்டு தொடர்களாக  புறக்கணிக்கப்பட்டுள்ளார் . ஈஸ்வர் பாண்டேவுக்கு வாய்ப்பளிக்கவில்லை .பேருக்கு ஒரு போட்டியில் மட்டும் ஸ்டுவர்ட் பின்னிக்கு வாய்ப்பு . அடுத்து ஆசியக் கண்டத்தில் நடைபெறும் போட்டிகளில் என்ன செய்யப் போகிறார்களோ .

பந்துவீச்சு : 

இந்தியக் கிரிக்கெட் அணியா ! வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டது ; பந்து வீச்சு சுமார் தான் , எப்பவாவது சிறப்பாக பந்து வீசுவார்கள் .இந்தக் கதையைத் தான் நாம் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த ஆரம்பித்த காலத்தில் இருந்துu சொல்கிறார்கள் . மற்ற நாடுகளில்  சிறந்த பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள் . உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் யாரும் தற்போது இந்திய அணியில் இல்லை .முன்பாவது இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கென்று ஒரு தனித்துவம் இருந்தது . மற்ற அனைத்து அணிகளும் இந்தியச் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள அஞ்சும் . தற்போது அந்த நிலையும் இல்லை . அனைத்து அணிகளும் மிக எளிதாக இந்தியச் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்கின்றன . இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விக்கட் வீழ்த்தும் தகுதியுள்ள பவுன்சர் பந்துகளை வீசத் தெரிவதே இல்லை . பேருக்கு பவுன்சர் போடுகிறோம் என்று வீசுகிறார்கள், அது 6 ஆகவோ 4 ஆகவோ மாறிவிடுகிறது . இந்தியப் பந்துவீச்சில் நிலைப்புத்தன்மை என்பதே எப்போதும் இல்லை .எப்ப நன்றாக பந்து வீசுவார்கள் ,எப்ப மோசமாக பந்து வீசுவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது . இப்போது இந்தியக் கிரிக்கெட் அணியின் இடத்தைத் தக்கவைக்க தரமான பந்து வீச்சாளர்களைக் கண்டடைவது அவசியம் .

மட்டைவீச்சு :

 இந்திய அணியின் மட்டைவீச்சு எப்போதும் கொஞ்சம் அதிகமான திறனுடன் தான் இருக்கிறது. அந்த திறனை முழுதாக பயன்படுத்த தவறிவிடுகிறார்கள் .பொதுவாகவே இந்திய வீரர்களிடம் மனோபலம் சற்று குறைவாகவே உள்ளது. கடினமான போட்டியில் ஒரு அளவிற்கு மேல் வெற்றி பெற போராடுவதே இல்லை. மட்டைவீச்சாளர்கள் போராட்ட குணத்துடன் செயல்பட்டால் இன்னும் அதிகமான போட்டிகளில் வெற்றி பெறலாம்.

களவியூகம் :

இந்திய அணி களவியூகம் அமைப்பதில் அனைத்துவிதமான போட்டிகளிலும் அழகாக சொதப்புகிறது. பார்மில் இல்லாத வீரர்கள் கூட இந்தியாவிற்கு எதிராக அட்டகாசமாக ஆடுகிறார்கள் . பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே பந்து வீசினாலும் பார்ட்னர்சிப்பை பிரிக்கும் வகையில் கள வியூகம் அமைக்கப்படுவதில்லை. எதிரணி வீரர்கள் அடித்து ஆடாவிட்டாலும்  களத்தடுப்பாளர்களை எல்லைக்கோட்டிலேயே நிறுத்துகிறார், தோனி. மோசமான கள வியூகத்தால் இந்திய அணிக்கு எதிராக விளையாடும் அணிகள் ஒரு நாள் போட்டிகளில் எளிதாக 300 ரன்களுக்கு மேல் எடுத்துவிடுகிறார்கள். சமீபத்திய தோல்விகளுக்கு மோசமான கள வியூகமும் ஒரு காரணம். தோனி இதைப்புரிந்து கொள்ள வேண்டும் .

தோனி , வெளிநாடுகளில் தனியொரு நாட்டிற்கு எதிரான தொடர்களில் பெரிய தோல்விகளைச் சந்தித்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் பங்கு பெறும் கிரிக்கெட் தொடர்களில் பெரிய வெற்றிகளைப் பெற்று இருக்கிறார். அடுத்த தொடர்களில் என்ன நடக்குமோ தெரியவில்லை . பலவீனங்கள் இருந்தாலும் இந்தியா தரவரிசையில் தொடர்ந்து நல்ல நிலையிலேயே இருக்கிறது. இதைத் தக்கவைக்குமா என்பதுதான் தெரியவில்லை.

மேலும் படிக்க :

தோனி வாங்கிய சச்சின் உலககோப்பை !

சினிமா - கிரிக்கெட் - இந்தியா !
....................................................................................................................................................................

Wednesday, January 22, 2014

K.A.தங்கவேலுவின் நகைச்சுவை !

 
தமிழ் திரைப்பட வரலாற்றில் அன்று முதல் இன்று வரை  கதாநாயகனுக்கு நண்பனாக ஒரு நகைச்சுவை நடிகர் தான் நடிக்கிறார் .ஏன்? தெரியவில்லை . கதாநாயகனை ஒப்பந்தம் செய்தவுடன் நகைச்சுவை நடிகரைத் தான் ஒப்பந்தம் செய்கிறார்கள் .ஜெமினி கணேசனின் நண்பனாக பல படங்களில் தங்கவேலு நடித்துள்ளார். 


அம்பிகாபதி -தங்கவேலு , நகைச்சுவை நடிகர் கருணாநிதியுடன் ( வெங்காய புலவர் ) இணைந்து நாய் வாலை நிமிர்த்த முயற்சி செய்யும் நகைச்சுவை அசரடிக்கும்.முழுப் படத்தையும் பார்க்க.


கல்யாண பரிசு - " மன்னார் அன் கம்பெனி " யை மறக்க முடியுமா ? மன்னார் அன் கம்பெனியின் மேனேஜர் என்று பொய் சொல்லிக் கொண்டு இவர் பண்ணும் அலப்பரை அருமை .K.A.தங்கவேலுவிற்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்த படம் .




 
கைதி கண்ணாயிரம்-இந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகன் அளவிற்கு முக்கியமான வேடம் .கவுண்டமணி பிற்காலத்தில் இந்தத் தலையா ! அந்தத் தலையா! என்று சொல்வதற்கு முன்பே தங்கவேலு இந்தப்பயலே! அந்தப் பயலே! (பணாதப் பயலே, ஊசிப் பயலே,கொரங்குப் பயலே,மூஞ்சூருப் பயலே ..) என்று சொல்லியிருக்கிறார். இந்தப்படத்தில் தங்கவேலுவிற்கு ஜோடிப் பாடலும் உண்டு.




இரும்புத்திரை - தங்கவேலுவின் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த படம் .ஒரு தொழிலாளியாக தங்கவேலுவின் நடிப்பு அபாரம் . "கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல.." இன்றும் இந்தப் பாடல் பாட்டாளி மக்களின் நிலையைப் பிரதிபளிக்கிறது . பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களால் எழுதப்பட்ட அற்புதமான பாடலிது.நான் நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருக்கும் படம் இது தான்.


அடுத்த வீட்டுப்பெண் - தன் மனைவி சரோஜாவுடன் இணைந்து கலக்கிய படம் ." கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே..!" கதாநாயகன் பாடுவது போல அமைந்த பாடலை அறைக்கு உள்ளிருந்து தங்கவேலு பாடுவார்.

அறிவாளி - முற்போக்கான பத்திரிகை எழுத்தாளராக நடித்திருப்பார் நம் சக்ரவர்த்தி .  படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்ணை கலப்பு திருமணம் செய்து கொண்டு அவர் படும்பாடு அட்டகாச நகைச்சுவை .


ரம்பையின் காதல் - தங்கவேலு கதாநாயகனாக நடித்த படம் .இந்தப் படத்தின் கதாநாயகி பானுமதி . இந்தப் படத்தைத் தழுவித்தான் வடிவெலு நடித்த "இந்திரலோகத்தில் நா.அழகப்பன் " படம் எடுக்கப்பட்டது .டி.எஸ்.பாலையா எமனாக நடித்திருப்பார் .எமன் வேசத்தில் பாலையாவைப் பார்க்கும் போதே சிரிப்பு வந்துவிடும் .அலட்டிக்காமல் சிரிக்க வைக்கும் திறமை பாலையாவிற்கு உண்டு .

தங்கவேலுவின் மேலும்  சில நகைச்சுவைக் காட்சிகள் :

 
 
 
 
 
 
 
 
 
 
 
மேலும் படிக்க :                                                                                                                       
                                                     
 
 
.....................................................................................................................................................................
 
                                                            
 
 

Tuesday, December 31, 2013

வட்டியில் சுழலும் வாழ்வு ..!

நீங்கள் உலகின் எந்தப்பகுதியில் வசித்தாலும் வட்டியுடன் தான் வாழ வேண்டிய சூழல் உள்ளது . கொடுத்த கடனுக்கு வட்டி வாங்குபவராகவோ அல்லது வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுபவராகவோ இருக்க வேண்டும் . வட்டி கட்டுபவர்களின் எண்ணிக்கை  தான் அதிகமாக இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை .ஏன் ?எல்லா நாடுகளுமே உலக வங்கியிடம் கடன் பெற்றுள்ளன ;வட்டியும் கட்டுகின்றன.கடன், பல வேளைகளில் ஆக்கசக்தியாக இருந்தாலும் சில வேளைகளில் வாழ்வையே அழிக்கும் அழிவுசக்தியாகவும் இருக்கிறது .சாதரணமாகவே வாழ்வைப் பாதிக்கும்  கடனும் ,வட்டியும்,  உலக வணிகமயமாக்கத்தின் காரணமாக சமூக அமைப்பில் இருக்கும் அனைவரையும் வெகுவாக பாதிக்கும் காரணிகளாக மாறிவிட்டன .

மருத்துவத்திற்காகவும் ,கல்விக்காகவும் தான் நாம் அதிகம் கடன் வாங்குகிறோம் . "தகவல் பெறும் உரிமை போல , மருத்துவ சேவை பெறும் உரிமையையும் , கல்வி பெரும் உரிமையையும் நமது அரசிடமிருந்து பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் .மக்களின் மருத்துவ சேவைக்காக சீனா செலவளிக்கும் தொகையில் நான்கில் ஒரு பங்கைத் தான் இந்திய அரசு, இந்திய மக்களுக்காக செலவிடுகிறது " என்று  பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் சொல்கிறார்.

ஒரு வலிமையான நாட்டை உருவாக்க மக்களின் ஆரோக்கியமும் , சர்வதேச தரமுள்ள கல்வியும் அவசியம் .இந்தியாவில் மருந்துகள்,மருத்துவர்களின் சேவை மற்றும் மருத்துவமனைகள் என அனைத்தும் மிகப்பெரும் வணிகம் .மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் வாங்கி முழுதும் பயன்படுத்தாமல் தூக்கி எறியப்படும் மருந்துகளின் வழியே , மக்கள் பணம் அதிகமாக குப்பைக்குப் போகிறது . " எவ்வளவு செலவானாலும் பராயில்லை " இந்த வசனம் இரண்டு இடங்களில் அதிகமாகப் பேசப்படுகிறது .ஒன்று , உயிர் போகக் கூடிய இக்கட்டான நிலையில் மருத்துவமனைகளில் .இரண்டு ,ஓரளவு உள்ளூர்த் தரமான படிப்பிற்காக கல்விநிலையங்களில் . இந்த இரண்டு இடங்களிலும் எந்தக்கேள்வியும் கேட்காமல் பணத்தைக்கொட்ட நாம் எப்போதும் தயாராகவே இருக்கிறோம் .பணத்தைக் கொட்ட முடியாதவர்கள் அந்த இரண்டு இடங்களிலும் அனுமதிக்கப்படுவதில்லை . ஒரு பெரிய மருத்துவச் செலவோ அல்லது கல்விச் செலவோ ஒரு குடும்பத்தின் மொத்த சொத்தையே அழித்துவிடுகிறது . வங்கிகள் தற்போது கல்விக்காக கடன் கொடுப்பது போல, மருத்தவ செலவிற்காகவும் கடன் கொடுக்கும் நிலை வந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் .தமிழக அரசின் இலவச காப்பீட்டுத் திட்டங்கள் இன்னும் எளிமைப்படுத்தப்பட வேண்டும் .

நம் அரசியல்வாதிகள், இனி மேடைகளில் பேசும் போது " அன்பார்ந்த வாக்களப் பெரும்குடி கடனாளிகளே .." என்று தான் பேச வேண்டியிருக்கும் . அந்த அளவிற்கு நிலமை மோசமாகி வருகிறது ." ஒரு ரூபாய் கூட கடனில்லாமல் வாழும் வாழ்க்கை தான் சிறந்தது " ," கடனில்லாதவனே பெரும் பணக்காரன் " போன்ற கற்பிதங்கள் காற்றில் பறக்கின்றன . கடன் பட்டாவது மற்றவர்கள் நுகரும் (பயன்படுத்தும் ) பொருளை வாங்கியே தீர்வது என்று வெறி கொண்டு அழைகிறோம் .அந்த வெறியில் வட்டி என்று ஒன்று இருப்பது கண்ணுக்கே தெரிவதில்லை .வட்டிக்கு கடன் கொடுக்க தயாராக இருக்கும் யாரிடம் வேண்டுமானாலும் கடன் வாங்குகிறோம் .இந்த வாய்ப்பை நன்றாகப்  பயன்படுத்தி கொள்ளும் கடன் கொடுப்பவர்கள் பணத்தைக் கொடுத்து தங்கள் விருப்பம் போல் வட்டி வசூல் செய்கின்றனர் . கடன் வாங்குவதில் இருந்த கற்பிதங்களைப் போல கடன் கொடுப்பதில் இருந்த கற்பிதங்களும் ( " அதிக வட்டி வாங்குபவன் குடும்பம் ,  வம்ச விருத்தி இல்லாமல் அழிந்து போகும் " , "வட்டிப் பணத்துல மட்டும் திங்கிற சோறு உடம்பில் தங்குமா ? ") கரைந்தே போய்விட்டன . பணத்தைச் சேமிப்பாக வங்கியிலோ ,வீட்டிலோ வைக்காமல் குறைந்த வட்டிக்கு பணத்தைக் கடனாக கொடுப்பர்களையும் இந்த வட்டிப் பேர்வளிகள் கெடுத்துவிடுகிறார்கள் .

விவசாயம் , சிறு தொழில் போல வட்டித்தொழிலும் கணிசமான நபர்களால் செய்யப்படுகிறது . குறைந்த நேரத்தில் ,குறைந்த  உடலுழைப்பில் நிறைய வருமானம் சம்பாதிக்கும் தொழிலாக இது உள்ளது .சிலர் அரசின் அனுமதி வாங்கியும் பலர் அனுமதி வாங்காமலும் வட்டித்தொழில் செய்கின்றனர் .அனுமதி வாங்கியோ வாங்காமலோ நேர்மையுடன் முறையாக செய்யப்படும் வட்டித்தொழிலால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை . குண்டர் படையுடன் அநியாய வட்டி வாங்கி மக்களின் உழைப்பை வட்டியாக திங்கும் கூட்டத்தால் தங்கள் வாழ்வை இழந்தவர்களும் , வாழ்வை அழித்துக்கொண்டவர்களும் அநேகம் .காலம் காலமாக இது தொடர்கிறது . 

 மற்றவர்கள்  செய்வதைப் பார்த்து தாங்களும் வட்டித்தொழில் செய்து அழிந்த குடும்பங்களும் இருக்கவே செய்கின்றன .வட்டித்தொழில் செய்வதற்கும் ஒரு  திறமை வேண்டும் .இல்லாவிட்டால் போட்ட பணத்தை எடுக்க முடியாது . 
" கட்டுக்கட்டா நோட்டுச்சேருது கெட்டிக்காரன் பொட்டியில.. அது குட்டியும் போடுது வட்டியில .." என்று பட்டுக்கோட்டையார் எழுதியது எவ்வளவு பொருத்தமாக உள்ளது .

கால மாற்றத்தில் கடனும் ,வட்டியும் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத விசயங்களாக மாறிவிட்டன .கடன் என்று வரும் போது ஒன்றுகு பல முறை யோசித்து தான் வாங்க வேண்டும் . ஏனென்றால் கடன் வாங்கிக் கொடுக்க முடியாவிட்டால் நம்மை மிகவும் கீழ்த்தரமாக பேசுவார்கள் , அவமானப்படுத்துவார்கள் .மானத்தை பெரிதாக நினைப்பவர்கள் கடனே வாங்கக் கூடாது .எப்படி பார்த்து பார்த்து வாங்கினாலும் கடன் ஒரு நாளாவது நம்மை அவமானப்படுத்தும் .

சமீப காலமாக நகையை அடமானமாக வைத்து வாங்கும் கடனான " நகைக் கடன் " மிகவும் அதிகரித்துள்ளது . இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிறைய தனியார் நிறுவனங்கள் நகைக்கு கடன் கொடுக்கும் துறையில் குதித்து பல வருடங்கள் ஆகி விட்டன .சிறிய அளவிலும், பெரிய அளவிலும் நகைக்கு கடன் கொடுக்கின்றனர் . கடன் கொடுப்பவர்களும்  கையில் நகை இருப்பதால், வந்தால் பணம் ,வராமல் போனால் நகை என்று தைரியமாக  கடனைக் கொடுக்கின்றனர் . மற்ற கடன்களை விட நகைக்கடன் மிக விரைவாக கிடைக்கிறது .இந்தியாவில் தங்கம், அதிகம் விற்பனையாவதற்கு இதுவும் ஒரு காரணம் .அவசரத்திற்கு உதவும் என்றே நிறைய பேர் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர் .

அடுத்ததாக " ஆட்டோ பைனான்ஸ் " என்ற பெயரில் வாகனங்கள் வாங்க கடன் கொடுத்து கடனுடன் வட்டியையும் வசூல் செய்வது . பதிய வாகனம் ,பழைய வாகனம் எதுவாக இருந்தாலும் பைனான்ஸ் கிடைக்கிறது .ஒரே நிபந்தனை, வாகன பதிவு புத்தகத்தை (ஆர்.சி.புக்)அடமானமாகக் கொடுக்க வேண்டும் .முழுக்கடனையும் அடைத்த பிறகு பதிவுப்புத்தகத்தை மீட்டுக்கொள்ளலாம் . குறு,சிறு மற்றும் பெரு நகரங்களில் இந்த ஆட்டோ பைனான்ஸ் -களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து விட்டது .சாலைகளில் இந்த அளவிற்கு வாகனங்கள் பெருகியதற்கு இந்த ஆட்டோ பைனான்ஸ் களும் ஒரு காரணம் .அதே நேரத்தில் சாதாரண ,மிகவும் குறைவாக சம்பாதிப்பவர்களையும் தாங்கள் நினைத்த வாகனத்தில் பயணிக்க வைத்து ஒரு சமூக அடையாளத்தைக் கொடுத்ததும் இந்த ஆட்டோ பைனான்ஸ் -கள் தான் .வங்கிகளும் வாகனங்கள் வாங்க கடன் கொடுக்கின்றன .

வீடு கட்டுவது என்பது அன்று முதல் இன்று வரை பெரும் செலவு வைப்பதும் , நாம் போட்ட கணக்கை பொய்யாக்கி நம்மைக் கடனாளி ஆக்குவதும் தான் . எப்படித்தான் பார்த்துப் பார்த்து கட்டினாலும் ஒரு கட்டத்தில் கடன் வாங்கும் சூழல் உருவாகி விடுகிறது .வங்கிகளும் வீடு கட்ட கடன் தருகின்றன . மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கிறது .கூலி வேலை செய்பவர்களுக்கும் ,விவசாயிகளுக்கும் ,சிறு தொழில் செய்பவர்களுக்கும் வங்கிகள் எளிதில் கடன் கொடுப்பதில்லை ,அப்படியே கொடுத்தாலும் மிகக் குறைந்த அளவே கடன் தருகிறார்கள். அதே நேரத்தில் பக்கவான தகவல்களைத் தயார் செய்து ஏமாற்றும் நோக்கத்துடன் கோடிக்கணக்கில் கடன் கேட்கும்  மிகப்பெரிய நிறுவனங்களுக்கு கடன் உடனே கிடைத்து விடுகிறது .இன்று மத்தியில் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் இந்தப் பெரு நிறுவன முதலாளிகள் தான் .

எந்த வகைக் கடனாக இருந்தாலும் வங்கிகளில் ,அதுவும் அரசு வங்கிகளில் வாங்குவது மிகவும் நல்லது .வங்கி கொடுக்கும் கடனுக்கும் ,தனி நபர் கொடுக்கும் கடனுக்கும் உள்ள பெரிய வித்தியாசம்  " முறைப்படி நடத்தல் (Systematic Planning ) ". தனி நபர் கொடுக்கும் கடனில் இந்த முறைப்படி நடப்பதை எதிர்பார்க்க முடியாது .உதாரணமாக ,ஒரு நாள் வட்டி கட்ட தாமதமானால் வங்கி அந்த ஒரு நாள் வட்டியை மட்டுமே கட்ட வேண்டிய வட்டியுடன் சேர்த்துக் கொள்ளும் .தனி நபர் வட்டி வாங்கும் விசயத்தில் இது சாத்தியமில்லை ,ஒரு நாள் தாமதமானாலும் ஒரு மாத வட்டியையே சேர்த்து வாங்கும் மனிதர்களும் இருக்கவே செய்கின்றனர்.

கடன் வாங்கியிருக்கேன் என்று சொன்னவுடன் கேட்கப்படும் முதல் கேள்வி , எத்தனை வட்டிக்கு கடன் வாங்கியிருக்கீங்க ? அதாவது வட்டி சதவீதம்  ( %) எவ்வளவு ? என்பது தான் . கடன் வாங்குவதில் இந்த வட்டி சதவீதம் பெரும் பங்கு வகிக்கிறது . கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த வட்டி சதவீதமே மூலக்காரணம் . பெரும்பாலான நேரங்களில் கடன் ஒரு பிரச்சனையே இல்லை .வட்டியால் ,அபராத வட்டியால் ஏற்படும் பிரச்சனைகளை அதிகம் .மிகவும் நம்பகமான இடங்களிலும் ,வங்கிகளிலும் கடன் பெறுவதே நல்லது . அவசர காலங்களில் வேறு வழியில்லாமல் பிரச்சனைகள் வரும் என்று தெரிந்தும் யாரிடமாவது கடன் பெற வேண்டிய சூழல் உருவாகிவிடுகிறது .

கடனால் உண்டாகும் மன உலைச்சல்களையும் , பிரச்சனைகளையும் தவிர்க்க வாங்கிய கடனை வட்டியுடன் கட்டி நாணயமாக நடந்து கொள்வது தான் ஒரே வழி . " நாணயம் மனுசனுக்கு அவசியம், மிகவும் அவசியம் அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த நன்மையான ரகசியம் .." என்று ஒரு பழைய தமிழ்த்திரைப்பாடலே ( அமர தீபம் என்னும் படத்தில் காமாட்சி என்பவர் எழுதிய பாடலிது ) உள்ளது . மற்றவர்கள் வாங்கிய கடனை கட்டுகிறார்களா இல்லையா என்பதைக் கவனிக்காமல் நாம் வாங்கிய கடனைக் கட்டுவதில் நாணயமாக நடந்து கொண்டால் தான் நம் மனம் நிம்மதியடையும் . நிம்மதியான வாழ்விற்கு நாணயமும்  நாணயமும் அவசியம் . நம் வாழ்க்கை நம் கையில்...

மேலும் படிக்க :

கலாசார விடுதலையே சமூக விடுதலை !

மதுவும் மனிதனும் !

பெண் விடுதலையும் சாதி ஒழிப்பும் !

..................................................................................................................................................................

Thursday, November 14, 2013

K.A.தங்கவேலு நடித்த பாடல்கள் !

தமிழ் சினிமாவின் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான தங்கவேலு நிறைய பாடல் காட்சிகளில் நடித்துள்ளார் . எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நடிப்புக்குச் சொந்தக்காரர் தான் நம் தங்கவேலு . அவர் நடித்த பாடல் காட்சிகளைக் காண்பது இன்னும் சுவாரசியம் நிரம்பியதாகவே இருக்கிறது .பாட்டாளி மக்களின் சாமானிய குரலை பிரதிபளிப்பது போலவே நிறைய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் . அவர் நடித்த பெரும்பாலான பாடல் காட்சிகள் எளிமையான முறையிலேயே படமாக்கப்பட்டுள்ளன . பாடல் வரிகளும் மிகவும் எளிமையாகவே உள்ளன . இந்த மாபெரும் கலைஞனின் சில பாடல்கள் .

பார்த்தீரா ஐயா  பார்த்தீரா ...


உல்லாச உலகம் உனக்கே சொந்தம் ...


புள்ளி வைக்கிறான் பொடியன் சொக்குறான் ...


கண்ணாலே பேசி பேசிக் கொள்ளாதே...


சாலா மிஸ்திரி பருப்பு பிஸ்தா பருப்பு ....


கண்ணு தெரிஞ்சு நடக்கணும்...


அத்தானும் நான் தானே....



சாஞ்சா சாயர பக்கமே ஆடுர செம்மறி ஆடுகளா...


அங்கமிது அங்கமிது...


அச்சா பகத் அச்சா...


அதோ கீர்த்தனா ஆரம்பத்திலே...




கண்டாலும் கண்டேனே...



காதல் உண்டாகும் கட்டழகி உன்னைக் கண்டாலே...


 மேலும் படிக்க :

 K.A.தங்கவேலு - நகைச்சுவைச் சக்கரவர்த்தி !

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

M.R.ராதாவின் சிறந்த பேச்சு !
.................................................................................................................................................................... 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms