Thursday, July 16, 2026

இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா !

 


ஸ்பெயின் அணி கூட இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்று சிலராவது கூறியிருப்பார்கள். ஆனால் அர்ஜென்டினா இறுதிக்கு தகுதி பெறும் என்று சிலர் கூட நம்பவில்லை. நம்பிக்கை இல்லாதது ஒரு பக்கம் இருந்தாலும் அர்ஜென்டினா அணி மீதான வெறுப்பும், மெஸ்ஸி மீதான வெறுப்பும் தான் அதிகமாக இருந்தது. ஆனால் இதையெல்லாம் கடந்து இறுதிக்கு வந்து நிற்கிறது மெஸ்ஸியின் அர்ஜென்டினா .


கேபோ வெர்டே , எகிப்து ஆகிய இரண்டு அணிகளையும் மிகுந்த போராட்டத்திற்கு பிறகே வென்றது, அர்ஜென்டினா. ஸ்விட்சர்லாந்திற்கு எதிரான ஆட்டம் அவ்வளவு சிரமமாக இல்லை. ஆனால் இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் பாதியில் நிறைய தள்ளு முள்ளுகள். இங்கிலாந்து முதல் கோல் போட்டவுடன் அதை தக்க வைக்க தடுப்பாட்டதில் ஈடுபட்டது. இந்தத் தொடரில் அர்ஜென்டினா எம்.ஜி.ஆர். மாதிரி மூனு தடவை அடிச்ச பிறகு திருப்பி அடிப்பது மாதிரி முதல் கோல் எதிரணி போட்டுவிட்டால் போதும் தீயாக விளையாடுவார்கள். இந்தப் போட்டியிலும் அப்படியே. 


மெஸ்ஸிக்கு எதிராக பாதுகாப்பு அரண் அமைப்பது கடினம் என்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவை வெல்ல வேண்டுமானால் தொடர்ந்து கோல் அடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். தற்காப்பு ஆட்டம் மெஸ்ஸி &கோ-விற்கு எதிராக செல்லுபடியாகாது. கடந்த சில போட்டிகளிலும் இந்தப் போட்டியிலும் பாக்ஸிற்குள் எத்தனை பேர் இருந்தாலும் அர்ஜென்டினா வீரர்கள் நுழைய இடமே இல்லையென்றாலும் அர்ஜென்டினா கோல் அடித்தது, வென்றது. காரணம் மெஸ்ஸி. கார்னர் கிக்கில் மட்டுமல்ல களத்தில் வேறு இடத்தில் இருந்தாலும் பந்தை பாக்ஸிற்குள் அனுப்புவதில் மெஸ்ஸியே சிறந்தவர். 


இங்கிலாந்து வீரர்கள் பாக்ஸை முழுமையாக ஆக்கிரமித்ததால் அர்ஜென்டினாவின் பெர்னாண்டஸ் வெளியிலிருந்தே கோலடிக்க முயன்றார். முதல் சில முயற்சிகள் தோல்வியடைந்தாலும் இறுதியாக மெஸ்ஸியிடமிருந்து பாஸைப் பெற்று அர்ஜென்டினாவிற்கான முதல் கோலை அடித்தார். இறுதியில் மெஸ்ஸி பந்தை பாக்ஸிற்குள் அனுப்ப மார்டினஸ் அதை தலையால் முட்டி வெற்றி கோலாக மாற்றினார். கால்பந்து ஒரு கூட்டு விளையாட்டு. இதை உணர்ந்து தான் மெஸ்ஸி தானே எல்லா கோல்களையும் அடிக்க வேண்டும் என நினைக்காமல் கோல் வாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்குகிறார். களத்தில் மெஸ்ஸி காட்டும், நிதானம், அமைதி தான் இவ்வளவு ரசிகர்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது. மெஸ்ஸியின் காலத்தில் மெஸ்ஸியே சிறந்த ஆட்டக்காரர். 


அர்ஜென்டினாவின் ஆட்ட வியூகமும் அவர்களுக்கு கை கொடுத்தது.மற்ற போட்டிகள் போலிலில்லாமல் நிறைய மாற்று ஆட்டக்காரர்கள் களமிறக்கப்படது நல்ல பலனைக் கொடுத்தது. எகிப்து போட்டிக்குப் பிறகு பின்களத்தை அர்ஜென்டினா கொஞ்சம் வலுப்படுத்தியிருக்கிறது. இல்லையெனில் இன்னும் பல கோல்கள் விழுந்திருக்கும். கேபோ வெர்டே , எகிப்து போட்டிகள் போல எளிதாக அர்ஜென்டினாவின் பாக்ஸிற்குள் எதிரணியினர் நுழைய முடியவில்லை. இதை இன்னும் தீவிரமாக்கினால் மட்டுமே இறுதியில் வெல்ல முடியும்.


முதல் பாதியில் எதிரணியினர் கொலடிக்காமல் இருந்தாலோ, ஒரு கோல் அடித்திருந்தாலோ, இரண்டு கோல் அடித்திருந்தாலோ கவலை கொள்ளாமல் இரண்டாம் பாதியில் நாம் தான் போட்டியில் வெல்ல வேண்டும் கங்கனம் கட்டிக்கொண்டு ஆடுவது தான் அர்ஜென்டினாவின் பாணியாக இருக்கிறது. இறுதி போட்டியில் ஸ்பெயின் முதல் கோலை அடிக்காது என நம்புவோம்.


எப்படி பார்த்தாலும் இரண்டு சிறந்த அணிகள் இறுதிப் போட்டியில் களமிறங்குகின்றன.  குழு விளையாட்டில் எந்த அணி சிறப்பாக செயல்பட போகிறதோ அந்த அணியே வெல்லும். 

மூன்றாம் இடத்திற்கான போட்டியும் சுவாரசியமாகவே இருக்கப் போகிறது. இங்கிலாந்தா ? பிரான்ஸா ? . பார்ப்போம்.

மேலும் படிக்க:

கேபோ வெர்டேவிற்கு அன்பும் நன்றியும் ♥️







0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms