Saturday, August 3, 2013

நல்லவன் கையில் நாணயம் !

தமிழ்  இசைக்கடலில் மூழ்கி தேட தேட முத்துக்கள் கிடைத்துக் கொண்டே இருக்கினறன. சமீபத்தில் கிடைத்த முத்து இந்தப் பாடல் .1972 ஆம் வருடம் வெளிவந்த "யார் ஜம்புலிங்கம் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . இசையமைத்து இந்தப்பாடலைப் பாடியவர் தமிழ் இசைச் சித்தர் என்றழைக்கப்படும் சி.எஸ்.ஜெயராமன் .இவர் ஆரம்ப கால தமிழ் சினிமாவின் தனித்துவமான பாடகர் . இந்தப் பாடலை யார் எழுதியது என்று தெரியவில்லை.

 அந்தப் பாடல் :


பாடல் வரிகள் :

நல்லவன் கையில் நாணயம் இருந்தால் 
நாலு பேருக்கு சாதகம் 
 
நல்லவன் கையில் நாணயம் இருந்தால் 
நாலு பேருக்கு சாதகம் 

அது பொல்லாதவன் பையில் இருந்தால்
எல்லா உயிர்க்கும் பாதகம்
எல்லா உயிர்க்கும் பாதகம்
 
நல்லவன் கையில் நாணயம் இருந்தால் 
நாலு பேருக்கு சாதகம் 

இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி
இறந்தும் இறவாதிருக்கின்றான் 
 
இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி
இறந்தும் இறவாதிருக்கின்றான்  
 
பணத்திமிர் கொண்ட மனிதர் நிமிர்ந்திருந்தாலும்
நடை பிணமாக நடக்கின்றான் 
 
நல்லவன் கையில் நாணயம் இருந்தால் 
நாலு பேருக்கு சாதகம் 

லட்சங்கள் முன்னே லச்சியமெல்லாம்
எச்சிலை போலே பறக்குமடா
 
அச்சடித்திருக்கும் காகித பெருமை
ஆண்டவனார்க்கும் இல்லையடா
ஆண்டவனார்க்கும் இல்லையடா
 
நல்லவன் கையில் நாணயம் இருந்தால் 
நாலு பேருக்கு சாதகம் 

ஓடும் உருலும்
ஓடும் உருலும் உலகம் தண்ணில்
தேடும் பொருளும் தேவைதான்
தேடும் பொருளும் தேவைதான்
 
அதில் மயக்கம் இல்லாமல் அடக்கம் இருந்தால்
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான் 
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்  
 
" லட்சங்கள் முன்னே லச்சியமெல்லாம் எச்சிலை போலே பறக்குமடா ", 
எது உயர்ந்த வாழ்க்கை என்பதற்கு சிறந்த விளக்கம் இந்த வரிகள்," ஓடும் உருலும்
 உலகம் தண்ணில்தேடும் பொருளும் தேவைதான், அதில் மயக்கம் இல்லாமல் 
அடக்கம் இருந்தால்,அதுவே உயர்ந்த வாழ்க்கை தான் "
 
மேலும் படிக்க :
 
எங்கே தேடுவேன் ? எங்கே தேடுவேன் ?  

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது ! 
...................................................................................

Tuesday, July 30, 2013

K.A.தங்கவேலு - நகைச்சுவைச் சக்கரவர்த்தி !

K.A.தங்கவேலு , தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகர் ; நல்ல குரல்வளம் உடையவர் . தான் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் நகைச்சுவையாக்கும் கலை அவருக்கு மட்டுமே வாய்த்தது .ஆபாச வசனங்களைப் பேசாத அற்புதக் கலைஞர் என்றும் அவருடைய குரலின் ஏற்ற இறக்கமே காட்சிக்கும் வசனத்திற்கும் தனி பலத்தைத் தந்துவிடும் என்றும் சொல்கிறார்கள். அவருக்கு பின்னால் வந்த ஏராளமான நகைச்சுவை நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர் .கடைசி காலம் வரை நாடகங்கள் நடத்தியவர் .ஜாடிக்கு ஏத்த மூடி போல இவருக்கு மனைவியாக வந்தவர் , எம்.சரோஜா .சரோஜாவும் நகைச்சுவை நடிகை தான் . இருவரும் சேர்ந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகளெல்லாம் நமக்கு இரட்டைக் கொண்டாட்டம் .

தங்கவேலுவின் நலினமான பேச்சுத் திறமை வேறு எவருக்கும் வாய்க்கவில்லை . அவர் பேசுவதை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்;பார்க்கக் கூட வேண்டியதில்லை;சலிக்கவே சலிக்காது .உடல்மொழியில் சிரிக்க வைக்க பலர் இருந்தாலும் ,குரல் மொழியில் சிரிக்க வைக்க இவர் மட்டுமே இருந்தார்;இருக்கிறார் ;இருப்பார் .தங்கவேலு  பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் என்னைச் சிரிக்கவைத்துவிடும் . இவருக்கு அடுத்ததாக குரல் மொழியில் சிரிக்க வைத்தவர் ,வி.கே.ராமசமி .

23-01-1983 , ஆனந்த விகடன் பேட்டியில் தங்கவேலு ,  " ஆரம்ப காலத்துலே சினிமாவிலே நடிக்க சான்ஸ் கேட்டு கம்பெனி கம்பெனியா படியேறி இறங்கினவன் நான் . ' பாடத் தெரியுமா ?'னு கேட்பாங்க ;'நீஞ்சத் தெரியுமா ?'னு கேட்பாங்க . சிமென்ட் தரையிலே நெஞ்சு தேய நீஞ்சிக் காட்டியிருக்கேன் . எனக்குப் பொன்னாடை போர்த்த யாரையும் நான் அனுமதிக்கறதில்லே. வேணுமானா துப்பட்டியைக் கையிலே கொடுத்துடுங்கன்னு சொல்லி வாங்கிக்கிடுவேன் . ஏன்னா , ஒருத்தருக்குப் பொன்னாடை போர்த்தறாங்கன்னு சொன்னா , அந்த ஆள் அவுட்னு அர்த்தம் ! பாலையா அண்ணே கடைசி வரைக்கும் பொன்னாடை போர்த்திக்கலையே...!" என்று சொல்லியிருக்கிறார் .

பாலையா ஒரு பேட்டியில் " நான் பார்த்த அளவில் என்.எஸ்.கிருஷ்ணனுகுப் பிறகு சிறந்த நகைச்சுவை நடிகர் தங்கவேலு தான் " என்று சொல்லியிருகிறார்.
நம் நகைச்சுவைச் சக்கரவர்த்தி, காரைக்கால் (பாண்டிச்சேரி) பகுதியில் உள்ள திருமலராஜன்பட்டினத்தில் பிறந்ததாக விக்கிப்பீடியா சொல்கிறது .1950 முதல் 1970 வரை நிறைய படங்களில் நடித்துள்ளார். சிங்காரி (1951) அமரகவி (1952) கலியுகம் (1952) பணம் (1952) அன்பு (1952) திரும்பி பார் (1952) பணக்காரி (1953) இல்லற ஜோதி (1954) சுகம் எங்கே (1954) நண்பன் (1954) பணம் படுத்தும் பாடு (1954) பொன் வயல் (1954) போன மச்சான் திரும்பி வந்தான் (1954) விளையாட்டு பிள்ளை (1954) வைர மாலை (1954) உலகம் பலவிதம் (1955) எல்லாம் இன்பமயம் (1955) கதாநாயகி (1955) குலேபகாவலி (1955) கோடீஸ்வரன் (1955) கோமதியின் காதலன் (1955) செல்ல பிள்ளை (1955) மகேஸ்வரி (1955) மங்கையர் திலகம் (1955) மேதாவிகள் (1955) மிஸ்ஸியம்மா (1955) அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1955) அமர தீபம் (1956) காலம் மாறிப்போச்சு (1956) குடும்ப விளக்கு (1956) நல்ல வீடு (1956) நாக பஞ்சமி (1956) மர்ம வீரன் (1956) மாதர்குல மாணிக்கம் (1956) அலாவுதீனும் அற்புத விளக்கும் (1957) அம்பிகாபதி (1957) எங்க வீட்டு மகாலக்ஷ்மி (1957) கற்புக்கரசி (1957) சக்ரவர்த்தி திருமகள் (1957) சௌபாக்கியவதி (1957) நீலமலை திருடன் (1957) பக்த மார்க்கண்டேயா (1957) பாக்யவதி (1957) மல்லிகா (1957) மாயா பஜார் (1957) வனங்காமுடி (1957) உத்தம புத்திரன் (1958) கடன் வாங்கி கல்யாணம் (1958) கன்னியின் சபதம் (1958) காத்தவராயன் (1958) செஞ்சுலக்ஷ்மி (1958) நீலாவுக்கு நிறஞ்ச மனசு (1958) பூலோக ரம்பை (1958) மனமுள்ள மறுதரம் (1958) மாங்கல்ய பாக்கியம் (1958) வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958) கல்யாண பரிசு (1959) தாய் மகளுக்கு கட்டிய தாலி (1959) நான் சொல்லும் ரகசியம் (1959) மஞ்சள் மகிமை (1959) அடுத்த வீட்டு பெண் (1960) அன்பிற்கோர் அண்ணி (1960) இரும்புத்திரை (1960) கடவுளின் குழந்தை (1960) கைதி கண்ணாயிரம் (1960)  கைராசி (1960) தங்கம் மனசு தங்கம் (1960) தங்கரத்தினம் (1960) தெய்வ பிறவி (1960) நான் கண்ட சொர்க்கம் (1960)  பாட்டாளியின் வெற்றி (1960) புதிய பாதை (1960) மீண்ட சொர்க்கம் (1960) அரசிளங்குமாரி (1961) திருடாதே (1961) பாசமலர் (1961) எங்க வீட்டு பெண் (1965) Konte pilla (1967) உயிர் மேல் ஆசை (1967) ராஜாத்தி (1967) தில்லானா மோகனாம்பாள் (1968) நம் நாடு (1969) வியட்நாம் வீடு (1970) . 1970 -குப் பிறகும் படங்களில் நடித்தார்.இவரைப் பற்றிய முழுவிவரம் தெரியவில்லை .

ரம்பையின் காதல் ,நான் கண்ட சொர்க்கம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.நிறைய படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் ,சில படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்துள்ளார். பல்வேறு வேடங்களில் நடித்திருந்தாலும் நகைச்சுவை நடிப்பில் ஒரு சிறந்த கலைஞன் .மேலே கொடுத்த படங்கள் உதாரணங்கள் தான் . இந்தக் கலைஞனை பற்றி மேலும் அறிந்து கொள்ள அவரது மற்ற படங்களையும் பார்க்க வேண்டும்.சிரிப்புக்கு உத்திரவாதம் தரும் இந்த மாபெரும் கலைஞனுக்கு நாம் செய்தது என்ன?

எந்த வருடம் பிறந்தார் என்றும் தெரியவில்லை .இறந்த நாள் 28-செப்டம்பர் -1994 என்று விக்கிப்பீடியா சொல்கிறது . மொத்தம் எத்தனை படங்களில் நடித்தார் என்றும் தெரியவில்லை .தனது கடைசி காலம் வரை நாடகம் நடத்தியிருக்கிறார் .எந்தக் கலைஞனையும் வாழும் காலத்தில் தமிழகம் கொண்டாடியதில்லை .அதற்கு இவரும் விதிவிலக்கில்லை .இவரையும் கடைசி காலத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை.

1971-ல் ஆனந்த விகடனில் வந்த பேட்டி

கேள்வி- " நீங்கள் இருவரும்  இப்போதெல்லாம் படங்களில் ஏன் நடிப்பதில்லை ? நீங்களாக ஒதுங்கிவிட்டீர்களா? அல்லது திரையுலகம் உங்களை ஒதுக்கி விட்டதா?"

பதில் - " ரொம்பச் சங்கடமான கேள்வியைக் கேட்டுட்டீங்களே.." என்று தனக்கே உரித்தான ஒரு குரலுடன் நம்மைப் பார்த்துப் புன்னகைத்தார் தங்கவேலு .
" நானாகவும் ஒதுங்கலை;அவங்களாவும் ஒதுக்கிடலை.என்னமோ தெரியலே ,ஒரு 'பிரேக்' வந்துடுச்சி . இந்த  'பிரேக்' வந்து பத்து வருசம் ஆகப்போவுது . நான் நடிச்சுக்கிட்டிருந்த போது ஒரு கணிசமான தொகையை வாங்கிக்கிட்டு இருந்தேன். அப்போ திடீர்னு சில பேர் வந்து குறைந்த தொகையை வாங்கிக்கிட்டு நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. 'குறைந்த தொகை'யை மனசிலே வச்சுக்கிட்டு எல்லோரும் அந்தப் பக்கம் போயிட்டங்க .நானும் சரோஜாவும் மட்டும் இந்தப் பக்கம் தனியா நின்னுட்டோம். அவ்வளவுதாங்க விசயம்..."

கேள்வி - "இப்போ உங்க வாழ்க்கை வசதி எல்லாம் எப்படி?"

பதில் - " கலைவாணர் ஆசியாலே நான் அப்போ இருந்த மாதிரியே இப்போதும் ஸ்டெடியா,செளக்கியமா இருந்துக்கிட்டு வர்றேன். அதுலே பாருங்க, ஒரு விசேஷம்... நாங்க வெளியூருக்கு நாடகம் நடத்தப் போனா, அங்கே பார்க்கிறவங்க எல்லாம் நான் கல்யாண பரிசிலே சொன்ன டயலாகையே திருப்பி என்னைப் பார்த்துச் சொல்றாங்க. ' தங்கவேலு அண்ணாச்சி, உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சி ! ' அப்படீன்னு கேட்கிறாங்க . இதுக்கு என்னங்க சொல்றது...!"  என்று சிரிக்கிறார் தங்கவேலு .

 தங்கவேலுவைப் பற்றி யாராவது புத்தகம் எழுதியிருக்கிறார்களா ? தெரியவில்லை .அவரைப்  பற்றிய புத்தகம் கண்ணில் பட்டால் எனக்குச் சொல்லுங்கள் . இவரை வைத்து ஒரு டாகுமென்ட்ரி படமே எடுக்கலாம் .
கைதி கண்ணாயிரம் படத்தில் மனோகர் ,தங்கவேலுவைப் பார்த்துக் கேட்பார்
"சிங்காரம் (தங்கவேலு )செத்தவனைக் கூட நீ சிரிக்க வச்சுருவியேப்பா ". உண்மை தான். யாரையும் நோக வைக்காமல் எல்லொரையும் சிரிக்க வைத்தவருக்குக் கிடைத்த அங்கிகாரம் இந்த வசனம் .

இந்தக் கலைஞனுக்கு நன்றி சொல்வோம் !

இந்தக் கலைஞனைக் கொண்டாடுவோம் !

நன்றி : ஆனந்த விகடன் ,விக்கிப்பீடியா.

மேலும் படிக்க :

நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி !

ஜம்புலிங்கமே ஜடாதரா ...!

எங்கே தேடுவேன் ? எங்கே தேடுவேன் ?
..................................................................................................................................................................

Saturday, July 13, 2013

பெண் விடுதலையும் சாதி ஒழிப்பும் !

தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மையான பள்ளிக்கூடங்கள் ,கல்லூரிகள் தங்கள் பெயர்களில் சாதிப் பெயர்களைக் கொண்டுள்ளன .முதலில் கல்விக்கூடங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வெண்டும் .படித்தவர்கள் சுயசிந்தனையாளர்களாக இருக்கும் வகையில் நம் கல்விமுறை அமைய வெண்டும் .பல தனியார் நிறுவனங்கள் சாதி அடிப்படையிலேயே வேலையாட்களைத் தேர்வு செய்கின்றன .ஒவ்வொரு விழாவின் போதும் வைக்கப்படும் பேனர்கள் சாதி வெறியைப் பரப்புகின்றன.அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சாதியை வெளிப்படுத்தும் பேனர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. 

உலகெங்கிலும் மனிதர்கள் மீதான அடக்குமுறை மனிதர்களாலேயே வெவ்வேறு பெயர்களில் நிகழ்த்தப்படுகிறது .இனம் ,மதம்,மொழி மற்றும் சாதி சார்ந்து உலகம் முழுக்கவே அடக்குமுறைகள் நிகழ்கின்றன .இன்னொரு மனிதனை அடக்க நினைக்கும் அனைத்தையும் எதிர்க்க வேண்டும்.

படிக்காதவர்களை விட படித்தவர்கள் அதிகமான சாதி வெறியுடன் இருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் . சாதியும் அரசியலும் பிரிக்க முடியாத நிலையில் இருக்கின்றன . சாதிகளை களைய வேண்டிய கல்விக்கூடங்கள்,தங்கள் பெயர்களில் சாதிகளின் பெயரைத் தாங்கி இருக்கின்றன . பள்ளியிலிருந்து தொடங்க வெண்டும். சேர்க்கையின் போதே சாதி கேட்கப்படுகிறதே.  மனிதன் எப்போதுமே தனக்கு கீழ் அடிமையாக யாரவது இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். ஆண்டான் அடிமை மனநிலை இன்னும் மாறவில்லை .பொருளாதார வளர்ச்சி மட்டுமே இன்று தீர்வாக இருக்கிறது . எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதிகாரமும் , பணமும் மட்டுமெ நம் சமூக அமைப்பில் மரியாதையைத் பெற்றுத்தருகிறது . அதை எல்லோரும் அடையவிடாமல் தடுக்கவே ஒரு பெரும் கூட்டம் தொடர்ந்து செயல்படுகிறது.

நம் பெயரைச் சொல்லும் போதே நம் மதத்தையும் சேர்த்தே சொல்கிறோம்.தமிழன் என்று சொல்லும் போதே நம் இனதத்திலுள்ள சாதிகளையும் சேர்த்தே சொல்கிறோம்.சாதி இல்லாமல் போக தமிழன் என்ற இன அடையாளத்தை துறக்க வேண்டும்.எத்தனை பேர் தயார்? சாதி அடையாளத்தை வெறுக்கும் அல்லது வெறுக்க நினைக்கும் பலர் இன அடையாளத்தை துறக்கத் தயாறாக இல்லை.சாதி,மதம் ,இனம்,மொழி,மாநிலம்,நாடு சார்ந்த பேதங்கள் உலகெங்கிலும் இருக்கின்றன. பேதங்களால் வரும் பிரச்சனைகளை சிறிது சிறிதாகத்தான் குறைக்க முடியும் .பிரச்சனை வரும்போது மட்டும் ஒன்று கூடி கத்திப் கத்திப் பேசிவிட்டு ஓய்ந்து விடுவதால் ஒன்றும் நடக்காது .

பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் சாதி,மத,இன ரீதியான பிரச்சனைகளுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது . பெண் தாழ்ந்த சாதி என்று வரையறுக்கப்படும் சாதியாக இருந்து,  ஆண் உயர்ந்த சாதி  என்று வரையறுக்கப்படும் சாதியாக இருந்துவிட்டால் அங்கே பிரச்சனை மூடி மறைக்கப்படுகிறது .மூடத்தனமான கலாச்சாரக் கூறுகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறாதவரை இம்மாதிரியான பிரச்சனைகள் அரசியலாக்கப்படும் .
முதலில் ஒட்டு மொத்த பெண் விடுதலைக்காகப் போராடுவோம் .பிறகு சாதிக்கு எதிராக போராடுவோம்.

கற்காலத்தை நோக்கிப் பயணித்தால் மட்டுமே பொதுத்தளம் சாத்தியம்.பூமியில் எந்தப்பகுதியில் வாழும் மனிதனும் நம்மைப் போலவே குருதியும் , மூக்கிலே மூச்சு விடக்கூடியவள்/வன் தான் என்பதை உணர்ந்து எல்லோரும் மனிதர்கள் என்ற நிலையை அடைந்து பூமியில் இருக்கும் எல்லோரும் உயிரினங்கள் என்ற நிலையை அடைய வேண்டும். எப்பொது???

மேலும் படிக்க:

கலாசார விடுதலையே சமூக விடுதலை !  

ஒன்று எங்கள் ஜாதியே ...!  

கட்சி அரசியலை வேரறுப்போம் !  
..................................................................................................................................................................

Thursday, July 4, 2013

உதிரிப்பூக்கள் !


வாழ்க்கை நமக்குத்தரும் அனுபவங்கள் அற்புதமானவை . உறவுகள் , இயற்கை, காலம் , சமூகம்  ஆகியவை தரும் அனுபவங்களை விட ஒரு திரைப்படம் தரும் அனுபவம் அலாதியானது . நீண்ட நாட்களாக காத்திருந்து பார்த்த திரைப்படம் " உதிரிப்பூக்கள்" . ஒரே திரைப்படத்தில் இவ்வளவு அனுபவங்கள் கிடைப்பது அபூர்வம் . கலாச்சார கோட்பாடுகளுக்கு உட்பட்டு ,காலச்சாரத்தை விசாரணை செய்யும் வகையில் இத்திரைப்படம் கட்டமைக்கப்பட்டுள்ளது .இந்த ஒரே திரைப்படத்திற்காக இன்னும் பல ஆண்டுகள் தமிழ் சினிமா பெருமைப்பட்டுக்கொள்ளலாம் .

1979 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத்திரைப்படம் இன்றுவரை ஈர்ப்புக் குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், உயிரோட்டமான திரைக்கதை தான் .புதுமைப்பித்தன் எழுதிய " சிற்றன்னை " என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது .பொதுவாகவே மகேந்திரனின் திரைப்படங்களில் வசனங்கள் கூர்மையாக இருக்கும் ;இந்தப்படத்திலும் அப்படியே . ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ஏதோ ஒரு இடத்தில் ஒரு அழுத்தமான வசனத்தை பேசிவிடுகிறது .கதாப்பாத்திரங்களின் தேர்வும் ,இந்தத் திரைக்கதையில் அந்தக் கதாப்பாத்திரங்கள் கோர்க்கப்பட்டிருக்கும் விதமும் அவ்வளவு அழகு.

தொடர்ந்து கதாநாயகன் துதி பாடும் படங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் முற்றிலும் கதையை நம்பிப் படமெடுத்து அதை வெற்றி பெறவும் செய்த பெருமை மகேந்திரனுடையது . தமிழ்சினிமா வரலாற்றில் இந்தப்படம் ஒரு திருப்புமுனை .அதுவரை வெற்றி விதிகள் என்று சொல்லப்பட்ட அத்தனையையும் இந்தப்படம் மீறியது. எப்படிப்பார்த்தாலும் கதையை நம்பி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் தான் காலம் கடந்து எல்லோராலும் ரசிக்கப்படுகின்றன . 

விஜயன் ,சுந்தரவடிவேலுவாக நடித்திருக்கிறார். அவரது முகம் வெளிப்படுத்தும் பாவங்கள் சிறப்பானது .எவ்வளவு நடந்தாலும் எதைப்பற்றியும் கவலையில்லாமல் தன் போக்கிலே கடைசிவரை இருக்கும் வகையில் இவரது கதாப்பாத்திரம் அமைந்துள்ளது . இந்தப் படத்திற்கு பிறகு விஜயன் எத்தனையோ படங்களில் நடித்தாலும் இந்த சுந்தரவடிவேலு கதாப்பாத்திரம் தான் நம் கண் முன்னே வந்து போகிறது .

லஷ்மியாக அஷ்வினி வாழ்ந்துள்ளார். திரைப்படத்தில் இரண்டு இடங்களில் கதை சொல்லும் பாணியில் புதுமையை புகுத்தியுள்ளார் . சுந்தரவடிவேலுவின் அம்மா முறை உள்ளவர், அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது இவர் பதில் சொல்வதற்குப் பதிலாக இவரது மகன் பதில் சொல்வதுபோல காட்சியும் , லஷ்மி தன் கணவனான சுந்தரவடிவேலுவிடம் கேட்க நினைத்த கேள்வியாக (எனக்கு இன்னொரு புருசன் வேணும்னு நான் கேட்டா நீங்க சரீனு சொல்வீங்களா இப்படி சத்தம் போட்டு கேட்க எந்த பொண்ணுக்கும் வழி இல்லையே ) காட்டப்படும் காட்சியும் நிச்சயம் புதுமை தான் . சுந்தரவடிவேலுவிடம் அஸ்வினி மற்றும் சரத்பாபு அடிவாங்கிய காட்சிகளை நேரடியாக காட்டாமல் தவிர்த்தது அழகு . 

சாருஹாசன் பேசும் ஒவ்வொரு வசனமும் அர்த்தம் பொதிந்ததாகவும் ,முதிர்ச்சியாகவும் இருக்கிறது . அட என்னடா நம்ம ஊரல எல்லாம் பஞ்சாயத்து ராத்திரில நடக்கும் , நிறையப் படத்துல பகல்ல நடக்கற மாதிரியே காமிக்கிறாங்களேனு   நீண்ட காலம எனக்கு ஒரு வருத்தம் இருந்தது .இந்தப் படம் பார்த்த பிறகு அந்த வருத்தம் போய்விட்டது .எங்க ஊர்ல பஞ்சாயத்து ராத்திரில தான் நடக்கும் ; வாய்சண்டை அதிகம் ,கைச்சண்டை குறைவு . 

ஒரு கலாச்சார அமைப்பில் ஒருவன், மற்றவர்களின் விருப்பதிற்கு மாறாக வரம்பு மீறீ நடப்பதால் ஏற்படும் சிக்கல்களை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் ,இயக்குனர் மகேந்திரன் . நான் இதுவரை பார்த்த திரைப்படங்களில் ஒரு திரைப்படத்தின் தலைப்பு , திரைப்படத்திற்கு இவ்வளவு பொருத்தமாக அமைந்தது இந்தத் திரைப்படத்திற்குத்தான் .இளையராஜாவின் பின்னணி இசை இந்தப் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது . இந்தப்படத்தில் பாடியதற்காக எஸ்.ஜானகி தமிழக அரசின் சிறந்த பின்னணிப்பாடகி விருதை வென்றார் . இந்தப்படம் ,எடிட்டர் லெனின் அவர்களின் முதல் திரைப்படம்.

மகேந்திரன் , தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் . இவரது திரைமொழியும் ,வசனங்களும் வீரியம் மிக்கவை .குறைவான படங்களே இயக்கியிருந்தாலும் தனித்துவமானவர் .இவரது எழுத்தும் வசீகரமானவை .விகடன் பொக்கிசத்தில் வந்த இவரது பேட்டி அருமை . நிஜ வாழ்விலும் தனித்துவமானவர் என்பதை அவரது பேட்டி உணர்த்தியது . இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கு நன்றி சொல்ல வெண்டும் ,அவர் MGR . ஆம் திரைத்துறையை விட்டு மூன்று முறை விலகிச்சென்ற மகேந்திரனை மீண்டும் திரைத்துறைக்கு கொண்டு வந்து சேர்த்தவர் . மணிரத்னம் உதவியாளராக சேர விரும்பிய ஒரே இயக்குனர் மகேந்திரன் மட்டும் தான்.
மகேந்திரனின் மற்ற படங்கள் முள்ளும் மலரும், பூட்டாத பூட்டுகள், ஜானி,நெஞ்சத்தை கிள்ளாதே ,நண்டு,மெட்டி,அழகிய கண்ணே,கை கொடுக்கும் கை,கண்ணுக்கு மை அழகு,ஊர் பஞ்சாயத்து,சாசனம் . நல்ல அனுபவத்திற்கு அவரது மற்ற படங்ளையும் பார்க்க வெண்டும் .


உதிரிப்பூக்கள் :


மேலும் படிக்க :

அவள் அப்படித்தான் !

..................................................................................................................................................................

Saturday, June 8, 2013

அவள் அப்படித்தான் !

தமிழகத்தில் வாழ்ந்து கொண்டு திரைப்படங்களைத் தவிர்த்து வாழ்வது மிகவும் கடினமான காரியம் . அந்த அளவிற்கு திரைப்படங்கள் நம் வாழ்வுடன் பிண்ணிப்  பிணைந்து உள்ளன . எந்த மாதிரியான படங்களை பார்க்க வேண்டும் என்பதை பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன . இது ரசனை சார்ந்த விசயம் என்பதால் எல்லோருக்கும் பிடிக்கும்படியான திரைப்படம் இதுவரை எடுக்கப்படவில்லை .ஒருவருக்கு  பிடிக்கும் ஒரு திரைப்படம் மற்றவருக்கு பிடிக்காது . அவரவர்களுக்கு பிடிக்கும் படங்களைப் பார்க்க வேண்டியது தான் .

 ஒரு சிலருக்கு சிறுவயதில் பார்க்க நினைத்த படங்களை இப்போது பார்க்க வேண்டும் என்று தோன்றும் . தனக்குப் பிடித்த நடிகர்,நடிகை மற்றும்  இயக்குனர்களின் வேறு படங்களைப் பார்க்கத் தோன்றும் . வாசிப்பின் மூலமும் நிறைய திரைப்படங்களைப் பார்க்கத் தோன்றும் . நண்பர்கள் மூலமாகவும் தற்போது Facebook மூலமாகவும் உலகெங்கும் வெவ்வேறு மொழிகளில் உருவான மாறுபட்ட திரைப்படங்கள் பற்றித் தெரிந்து கொள்கிறோம் .புதுத்திரைப்படங்கள் ,படம் பார்த்தவர்களின் கருத்துக்களை வைத்தே மற்றவர்களால் பார்க்கப்படுகின்றன . திரைப்படம் பார்க்கும் பழக்கம் உள்ள ஒவ்வொருவருக்கும்  " இந்தப் திரைப்படங்களைப்  பார்க்க வேண்டும் !" என்று பட்டியல் வைத்து இருப்பார்கள் . ஒவ்வொருவரின் பட்டியலும் கண்டிப்பாக வேறுபடும் .

பார்க்க வேண்டிய திரைப்படங்களின் பட்டியல், அனுபவம் கூட கூட  மாறிக்கொண்டே இருக்கும் . நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்த திரைப்படங்களில் ஒன்றுதான், " அவள் அப்படித்தான் ". 1978  ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தை இயக்கியவர்,ருத்ரய்யா . ஸ்ரீபிரியா,கமல்,ரஜினி மற்றும் பலர் இந்தத் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முற்றிலும் மாறுபட்ட திரைப்படம். எனது எதிர்பார்ப்புகளை பல மடங்கு பூர்த்தி செய்த படம் .மஞ்சு,அருண் மற்றும் தியாகு இந்த மூன்று கதாப்பாத்திரங்களுக்கு இடையேயான உரையாடல் தான் இந்தத் திரைப்படம் . உரையாடல்களின் மையப்புள்ளி அருண் கதாப்பாத்திரம் . அருண் மற்றும் தியாகு ஆகிய இருவருக்கும் இடையேயான உரையாடல் .அருண் மற்றும் மஞ்சு இடையேயான உரையாடல் இத்திரைப்படத்தில் அடுத்தடுத்து இடம்பெறுகிறது . ஆனால் , இந்தக் கதையின் மையப்புள்ளி மஞ்சு கதாப்பாத்திரம் .

உரையாடல் ,  இந்தத் திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலப்படங்கள் போல இந்தப்படத்திற்கு ருத்ரய்யா ,வண்ணநிலவன் மற்றும் சோமசுந்தரேஸ்வர் ஆகிய மூவரும்  இணைந்து திரைக்கதையும் ,உரையாடலும் எழுதியுள்ளனர் .தமிழ்ச் சூழலில் இது மிகவும் அரிது . ஆங்கில வசனங்கள் அதிகம் இடம்பெற்று இருந்தாலும் கதைச் சூழலுக்குப் அழகாக பொருந்துகின்றன. ஒரு சமூக சேவகி கேமரா முன்பு  தோன்ற மேக் அப் போடனுமா னு கேட்குறாங்க .அதற்கு மஞ்சு கதாப்பாத்திரம் சொல்லும் பதில் " நீங்க எப்பவும் போடுவீங்களே இந்த சொசைட்டி மேக் அப் அதைப் போட்டா போதும் " ," வித்தியாசமா இருக்குற மாதிரி காட்டிகிறது ஒரு passon " என்று மஞ்சு தியாகுவே பார்த்து கேட்பார் .அதற்கு அருண் (கமல்)" அப்படி இருக்குறதுதான் சரி னு நான் நம்பறேன் "என்று சொல்வார் . அந்த வசனம் இன்று கமலை நேரடியாகவே விமர்சிப்பது போல அமைத்துவிட்டது . இன்னும் குறிப்பிடும்படியான வசனங்கள் படமெங்கும் உள்ளன .

மனித மனங்களின் கருப்புப்பக்கங்களைப் படம்பிடித்துக் காட்டப்படுவதன் காரணமாகவோ என்னவோ இந்தப்படத்தின் பெரும் பகுதி இருட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது . குளோசப் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன . நல்லுசாமி மற்றும் ஞானசேகரன்  ஆகியோர்  ஒளிப்பதிவு செய்துள்ளனர் . இளையராஜாவின் இசையில் "உறவுகள் தொடர்கதை .."," பன்னீர் புஷ்பங்களே .." ஆகிய பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளன .இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவர், கங்கை அமரன் .

ஆறுமுகம் என்னும் தனது பெயரை ருத்ரய்யா என்று மாற்றி வைத்துக்கொண்டார் இப்படத்தின் இயக்குனர் . இவர் இயக்கிய இன்னொரு படம் " கிராமத்து அத்தியாயம் ". அதன்பிறகு படம் இயக்கவில்லை ; கமலுக்காகவும் , பாலச்சந்தருக்காகவும் பல ஆண்டுகள் வேலை செய்துள்ளார் . இப்படி ஒரு படம் எடுக்க மிகப்பெரும் துணிச்சல் வேண்டும் . படிப்பறிவு சதவீதம் மிகவும் அதிகரித்துள்ள இன்றைய சூழலில் இப்படி ஒரு படம் எடுக்க யாருக்கும் துணிச்சல் இல்லை . 1978 -ல் இப்படி ஒரு படம் தயாரிக்க யாரும் முன்வராத காரணத்தாலோ என்னவோ ருத்ரய்யாவே இந்தப்படத்தை தயாரித்துள்ளார் . 

டைட்டில் முதல் முடிவு வரை இந்தப்படம் மற்ற படங்களிலிருந்து வேறுபடுகிறது . டாகுமென்ட்ரி படத்திற்கு செயல்ரீல் என்று சொன்னது பால்ய காலத்தை நினைவு படுத்தியது . மஞ்சு  கதாப்பாத்திரம் ,மிகவும் சிறப்பாக  கட்டமைக்கப்பட்டுள்ளது . பெண்ணிற்கு முக்கியத்துவம் கொடுத்து மிகவும் குறைந்த படங்களே தமிழ் மொழியில் எடுக்கப்பட்டுள்ளன . அதுவும் இந்தப்படம் பெண்களைப் பற்றிப் பேசுகிறது . சிறந்த தமிழ்ப் படங்களை
வரிசைப்படுத்தினால் முதல் 5 படங்களுக்குள் இந்தப்படம் கண்டிப்பாக இடம்பெறும் . உரையாடலுக்காக மட்டுமே இந்தப்படம் இன்னும் பல வருடங்கள் பேசப்படும் .

அவள் அப்படித்தான் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் நல்லுசாமி அவர்களின் பேட்டி ஏப்ரல் மாத " அந்திமழை " மாத இதழில் வந்துள்ளது .இந்தப் படம் பற்றி அவர் கூறி இருக்கும் தகவல்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன . இந்தப் பேட்டியை அவசியம் படியுங்கள்.அந்தப் பேட்டி -http://andhimazhai.com/news/view/nallusamy-12-4-2013.html



அவள் அப்படித்தான்  : ( ஒரு நல்ல அனுபவத்திற்கு வாழ்த்துக்கள் )



கடந்த ஒரு வருடத்தில் தேடிப்  பார்த்த படங்கள்  400 blows , City Lights ,Modern Times ,The Great Dictator ,Pather Panchali ,செம்மீன் ,பாலை ,மதுபானக்கடை,Cinema Paradiso ,Spring Summer Winter Fall ,Crocodile . பாலை படம் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் . சார்லி சாப்ளின் ஒரு  மாபெரும் கலைஞன் .சாப்ளினைப் போல் மனிதர்களை இவ்வளவு தூரம் யாரும் பகடி செய்ததில்லை.கொரிய இயக்குனரான கிம் டி டுக் -ன்  படங்கள் (Spring Summer Winter Fall ,Crocodile,etc ) நம்மை தத்துவ விசாரணை செய்பவை .

தற்போது பார்க்க விரும்பும் படங்கள் - வீடு ,உதிரிப்பூக்கள் ,La Strada ,Rashomon,Lime Light ..

மேலும் படிக்க :

ஆக்காட்டி ஆக்காட்டி ! 

கட்ட புள்ள குட்ட புள்ள ...!

M.R.ராதாவின் சிறந்த பேச்சு !
.....................................................................................................................................................................

Sunday, June 2, 2013

உரல் -திருகை கல்...!

Friday, May 31, 2013

கட்ட புள்ள குட்ட புள்ள ...!

தமிழ் மண்ணோடும் மக்களோடும் கலந்துவிட்ட குரல், டி.எம்.எஸ்.-ன் குரல் . தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பாடகர்களில் பெரும் புகழ்பெற்றவர் டி.எம்.எஸ் மட்டுமே . டி.எம்.எஸ்., தமிழ் திரையிசைப் பாடல்களின் தனிப்பெரும் தலைவன் . அவர் இசையமைத்துப் பாடிய முருகன் பாடல்கள் மக்களிடையே பெரும்புகழ் பெற்றன . ஆனந்த விகடனில் வெளிவந்த விகடன் 25 மூலமும் மற்றும்  இசை விமர்சகர் ஷாஜி ,டி.எம்.எஸ். பற்றி எழுதிய கட்டுரை மூலமும்  டி.எம்.எஸ்.பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது . டி.எம்.எஸ். பற்றி ஷாஜி எழுதிய கட்டுரை - http://musicshaji.blogspot.in/2011/01/blog-post_03.html.டி.எம்.எஸ். பற்றி எழுதப்பட்ட விரிவான கட்டுரை . 

 சிவாஜி மற்றும் எம்.ஜி .ஆருக்கு பாடியதை தவிர மற்றவர்களுக்குப் பாடியதில் ரஜினிக்காக பாடிய இந்தப்பாடலும் (கட்ட புள்ள குட்ட புள்ள ...) "ரயில் பயணங்களில்" திரைப்படத்தில் டி.எம்.எஸ்.-ன் குரல்களில் ஒலித்த "அமைதிக்குப் பெயர் தான் சாந்தி.. ", "நூலுமில்லை வானுமில்லை .." பாடல்களும் பெரும் புகழ் பெற்றன . 

டி.எம்.எஸ். மற்றும் ஜானகியின் குரல்களில் ஒலிக்கும் இந்தப்பாடல் இளையராஜாவின் இசையமைப்பில்  1978 ஆம் ஆண்டு வெளிவந்த " பைரவி " என்னும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது . பெண் பின்னணிப் பாடகிகளில் தனிப்பெரும் தலைவி எஸ் .ஜானகி தான் .

டி.எம்.எஸ். -ன் உடலுக்கு மட்டுமே மரணம் . தமிழ் மக்களின் துக்கத்தை நீண்ட காலமாக பகிர்ந்து கொள்ளும் குரல் டி.எம்.எஸ்.-ன்  குரல் தான் . மகிழ்ச்சியைக் கொடுத்த குரல் ,தன்னம்பிக்கை கொடுத்த குரல், எத்தனையோ மனிதர்களின் துயர்களைத் துடைத்த குரல் அழியப்போவதில்லை . உலகில் எங்கோ ஒரு மூலையில் அவரது குரல் ஒலித்துக்கொண்டே தான் இருக்கப்போகிறது .

மேலும் படிக்க :

 என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே ! 

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...!  

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு !  

...................................................................................................................................................

Saturday, April 20, 2013

எங்கே தேடுவேன் ? எங்கே தேடுவேன் ?


 பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்கள் ,சதிகாரர்கள் . பண்ட மாற்று முறைக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட பணம் .இன்று மனிதனின் சுவாசமாகவே மாறிவிட்டது . நிறைய பிரச்சனைகளின் தொடக்கப்புள்ளியாகவும் முடிவுப்புள்ளியாகவும் பணமே இருப்பது நம் வாழும் காலத்தின் கோலம் . நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடாமல் ,நம் உண்மையான தேவையை  உணர்ந்து பணத்தைப் பயன்படுத்தினால் பல சிக்கல்களிலிருந்து தப்பிக்கலாம் . நம் கடுமையான உழைப்பின் மூலம்  சம்பாதிக்கும் பணத்தை விளம்பரங்களின் மூலம் கவர்ந்து செல்ல  ஒரு பெரும் கூட்டம் எப்போதும் தயாராகவே இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .

"இளமையில் பெருக்காவிட்டலும் முதுமையில் சிறுக்காமல் இருக்கவேண்டும் "  என்று சங்கப்பாடல் ஒன்று கூறுகிறது . அதாவது இளமைப் பருவத்தில் அதிகம் சம்பாதிக்காவிட்டாலும் ,முதுமைப் பருவத்தில் இருப்பதை இழக்காமல் இருக்கவேண்டும் என்பது தான் அந்தப் பாடலின் பொருள் . எல்லோரது வீட்டிலும் இருக்கும் பொருள் நம் வீட்டிலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை . மனிதன் வாழும் வரை பணம் தொடர்பான சிக்கல்களும் தொடரும் .எல்லோரும் பணத்தைத் தேடி ஓட வேண்டியதும் தொடரும் . தேவையைக் குறைத்துக் கொண்டால் பணம் நமக்கு அடிமை . தேவையை வளர்த்துக் கொண்டால் நாம் பணத்திற்கு அடிமை .

1952 ஆம் ஆண்டு வெளிவந்த " பணம் " என்ற திரைப்படத்தில் கண்ணதாசனால் எழுதப்பட்ட  இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது . N .S .கிருஷ்ணன் அவர்களை நினைவுபடுத்தும் பாடலாகவே இன்றும் உள்ளது . N .S .கிருஷ்ணனால் சிறப்பாக பாடி நடிக்கப்பட்ட பாடலிது .

பாடல் வரிகள் :

எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்?
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்?
கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ?
கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ?
கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?
கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?
அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் பணத்தை
எங்கே தேடுவேன் பணத்தை
எங்கே தேடுவேன்?

பூமிக்குள் புகுந்து புதையலானாயோ?
பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?
பூமிக்குள் புகுந்து புதையலானாயோ?
பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?
சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?
சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ?
எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?
திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?
திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?
இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இரக்கமுள்ளவரிடம் இருக்காத பணந்தனை
எங்கே தேடுவேன் பணத்தை

தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
சூடஞ் சாம்பிராணியாய்ப் புகைந்து போனாயோ?
எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணமே பணமே பணமே பணமே!

வேடிக்கையாக பாடப்பட்ட பாடலாக இருந்தாலும் பொருள் நிறைந்த பாடல் .
எங்கே தேடுவேன் ?

பணம் பற்றிய இன்னொரு தமிழ்ப் பாடல் -காசே தான் கடவுளப்பா !

கல்லறை கூட சில்லரை  இருந்தால் வாய் திறந்தே மொழி பேசுமடா !

மேலும் படிக்க :

வரவு எட்டணா செலவு பத்தணா ! 

 கையில வாங்கினேன் பையில போடல ...!

.....................................................................................................................................................................

Wednesday, March 13, 2013

ஈழத்தை நோக்கி ....

ஊடகங்களின் பிடியிலிருந்து வெளிவந்து சமூகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மாணவர்கள் அனைவருக்கும் உறுதுணையாக இருக்க வேண்டியது நம் கடமை . நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை மறைத்து தொடர்ந்து ஒரு போலியான ,மாயமான உலகை நம் கண்முன் நிறுத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வேலையை மட்டுமே ஊடகங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன . அப்படிப்பட்ட ஊடகங்களைத் தாண்டி இப்படி போராட்டம் தொடங்கி இருப்பதற்காக நாம் பெருமைப்பட வேண்டும் . சினிமாவைத் தாண்டி ,அரசியலைத் தாண்டி நம் ஊடகங்கள் யோசிப்பதே இல்லை . அரசியல் செய்திகளும் ,சினிமா செய்திகளும் ,கிரிக்கெட் செய்திகளும் மட்டுமே ஊடகங்களால் தொடர்ந்து முன்நிறுத்தப்படுகின்றன . நம் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கும் வேலை ஊடகங்களால் தொடர்ந்து செய்யப்படுகின்றன .

இந்த மாணவர்கள் போராட்டத்தை மறைக்கவே ஊடகங்கள் விரும்புகின்றன . ஆளும் கட்சி என்ன சொல்கிறதோ அதைச் செய்வதும் பணம் சம்பாதிப்பதும் மட்டுமே ஊடகங்களின் கடமைகளாக இருக்கின்றன . நாளிதழ்களில் மாணவர்கள் போராட்டம் பற்றிய செய்திகள் வெளியிடப்படவில்லை.செய்தி  தொலைக்காட்சிகளில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மாணவர்கள் போராட்டம் பற்றிப் பேசுகிறார்கள் .மற்ற நேரங்களில் அடக்கி வாசிக்கிறார்கள் . செய்தித் தொலைக்காட்சிகளின் மூலம் நடக்கும் ஒரே நல்ல விசயம் "கருத்துச் சுதந்திரம் ".இதற்கு முன்பு யாரையும் யாருக்கு எதிராகவும் கருத்துச் சொல்ல எந்தச் தொலைக்காட்சியும் அனுமதித்ததில்லை . இன்று கருத்துகள் மக்களைச் சென்றடைகின்றன . அவர்கள் சொல்வது சரியா? தவறா ?என்று முடிவு செய்வது மக்கள் வேலை . அரசுக்கு எதிராக கருத்துச் சொல்லவே இவ்வளவு காலம் ஆகிவிட்டது . எப்போது நம் உரிமைகளை மீட்டெடுக்கப் போகிறோமோ தெரியவில்லை .

உணர்ச்சிவசப்படாமல் ,அமைதியாக ஆக்கப்பூர்வமாக சிந்தித்து இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் . தமிழக மாணவர்களின் குரலாக மட்டுமல்லாமல் தமிழர்களின் குரலாக ,இந்தியர்களின் குரலாக ,உலக நாடுகளின் குரலாக ,மனிதர்களின் குரலாக ஒலிக்க வேண்டும் . இந்தியாவின் 65 சதவீத இளைஞர்களின் சக்தியை சரியாகப்  பயன்படுத்த வேண்டும் . வன்முறையைத் தூண்டி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவே ஆளும் அதிகார வர்க்கம் விரும்பும் என்பதை மனதில் கொண்டு கூடங்குளம் போராட்டத்தைப் போல தொடர்ந்து அற வழியில் போராட வேண்டும் .

இலங்கையில் கொல்லப்பட்டது தமிழர்கள் மட்டுமல்ல சக மனிதர்கள் தான் என்ற மனப்போக்கை இந்தியா முழுவதும் , உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் . அதை நோக்கி இந்தப் போராட்டம் முன் நகர்ந்தால் மட்டுமே வெற்றியைப் பெற முடியும் .தனித் தமிழ் ஈழம் கிடைக்கும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் . சமீபத்தில்  டெல்லி போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்தது .அதன் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக உலகெங்கும் விவாதங்கள் நடந்தன . முன்பை விட தற்பொழுது இந்தியாவில் என்ன நடந்தாலும் உலகம் கூர்ந்து கவனிக்கிறது ,கருத்து சொல்கிறது .இந்தச் சூழலை நாம் தவர விடக்கூடாது .

அடுத்த கட்டமாக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களை ஒன்றிணைத்து இந்தப் போராட்டத்தில் பங்குபெறச் செய்ய வேண்டும் . பெரும்பான்மையான தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டிலிருந்து இந்தப்போராட்டம் தொடங்கியிருப்பது தான் சரியானது .போராட்டத்தின் முதன்மையான நோக்கம் பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் ஈழத்தை உருவாகுவது தான் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் .

தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களின் ஆதரவு இல்லாமல் தமிழ் ஈழம் உருவாக முடியாது என்பது தான் உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்களின் ஒரே நம்பிக்கை . இந்த நிலையிலாவது அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் .இன்னொரு அடியை அவர்களால் தாங்க முடியாது .அவர்கள் துணையுடன் உலகத் தமிழர்களின் ,உலக மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும் .பொது வாக்கெடுப்பின் மூலம் தெற்கு சூடான் உருவானது  போல தனி ஈழம் உருவாகும் வரை போராட்டம் தொடர வேண்டும்  . 




கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும் . கிடைப்பது சுதந்திர தனி ஈழமாக இருக்கட்டும் !

நான் காலத்தை நம்புகிறேன் !

2011,ஜூலை 11 - இன்று தெற்கு சூடான் , நாளை தமிழ் ஈழம் ...! ....



Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms