Saturday, February 6, 2016

முகநூல் பதிவுகள் - வாசித்ததில் பிடித்தது !


வாசிக்கும் புத்தகங்களிலிருந்து பிடித்த வரிகளை முகநூலில் அவ்வப்போது  பதிவிடுவது வழக்கம் . அப்படி பதிவிட்டதிலிருந்து சில....

'னுசனுக்குக் கோபத்தையும் பொறாமையையும் ஏமாத்தத்தையும் காட்டிக்கிட              ஒரு போக்கிடம் வேணுமில்லா ? மனுசென அடிச்சா கேஸூ உண்டும். மாட்டை            அடிச்சா உடையக்காரன் கேப்பான். வாய் பேசாம அனாதையா நிக்கே ஒரு மரம் அதெத் தீத்துக் கட்டுவோம்னு கோடாலியைத் தீட்டிக்கிட்டுப் புறப்பட்டுட்டான். '

 - ' ஒரு புளியமரத்தின் கதை ' நாவலில் சுந்தர ராமசாமி.

'தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும் 

தானே தான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்

தானே தனக்குத் தலைவனுமாமே !'


- திருமூலர் , 'கடலுக்கு அப்பால் ' நாவலில் இடம் பெற்றுள்ளது.

லகெங்கிலும் குண்டர்கள் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார்கள் . மக்களை இவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் . சில குழுக்கள் , இவர்களுடைய சுயநலமான நோக்கங்கள் , மனித சமூகத்தின் முன்னேற்றம் ,மேம்பாடு என்று எதையெதையோ இவர்கள் கொச்சையாகப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் உருவாக்கியுள்ள கொள்கைகள்,அமைப்புகள் , இவற்றின் பொருட்டுத் தவறான முறையில் சூறையாடப்பட்டுவரும் , சேதமடைந்து வரும் , இயற்கை வளங்கள் , மனித இயல்புகள்...'

- காகித மலர்கள் நாவலில் ஆதவன்.

ரெனி டு போ என்ற ஃபிரெஞ்ச் அறிஞர் சொல்லியிருக்கிறார் , மிருகக்காட்சி சாலையில் மிருகங்களைக் குடிவைக்கும்போது நாம் எடுத்துக்கொள்ளும் சிரத்தைகூட மனிதர்களை நகரங்களில் குடிவைக்கும்போது எடுத்துக் கொள்வதில்லையென்று. வெவ்வேறு மிருகங்களின் இயல்பான வசிக்குமிடத்துக்கேற்றவாறு இங்கு தனித்தனிப் பாணிகளில் ஒவ்வொரு மிருகத்திற்கும் இடம் அமைத்திருக்கிறார்கள் . ஆனால் நம் நகரங்களில் வெவ்வேறு பூர்வீகங்கள் , மதக் கலாச்சாரச் சூழ்நிலைகள் ஆகியவற்றைச் சேர்ந்த மனிதர்கள் ஒரேவிதமான வீடுகளில் வளர்கிறார்கள் , ஒரே விதமான பள்ளிகளில் ஒரே விதமான கல்வியைக் கற்கிறார்கள் , ஒரே விதமான வேலைகளில் திணிக்கப்படுகிறார்கள் , ஒரே விதமான பிம்பங்களை அணிகிறார்கள் , யாசிக்கிறார்கள். '
- காகித மலர்கள் நாவலில் ஆதவன் .

'யற்கை , பெண்ணைப்போல , மனிதனை இயங்க வைக்கும் சக்தி ; மனித குலத்துக்குத் தொடர்ச்சியை அளிப்பது ; அதை மிகையாக இலட்சியப்படுத்தி பூஜை செய்யாமல் அன்னியோன்னியமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அதைப் பயன்படுத்த வேண்டும் - அதே சமயத்தில் அதைச் சூறையாடிவிடக்கூடாது .'

- காகித மலர்கள் நாவலில் ஆதவன் 

' ன்னைத் தன் பார்வையில் நிரூபித்துக்கொள்வதுதான் அவனுக்கு முக்கியம் .தன்னைப் பற்றித் தன் திருப்திக்காகத் தெரிந்துகொள்வதுதான் முக்கியம் .ஆழத்தில் வெகு ஆழத்தில் , அவன் யார் ? அவன் யாசிப்பது எது?
இதை அவன் கண்டுபிடிக்க வேண்டும் . தேடியவாறிருக்க வேண்டும் .மற்றவர்கள் அவனைப்பற்றி உருவாக்கும் பிம்பங்களுக்குப் பலியாகமல் அவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் '

- காகிதமலர்கள் நாவலில் ஆதவன் .

'ந்தையிலிருந்து வேறுபடுபவர்களுடைய கனவுகள் தான் சமுதாயத்தை மாற்ற முடியும் . மேன்மையடையச் செய்ய முடியும் . ஜனநாயகம் மந்தைத்தனத்தைத்தான் உருவாக்குகிறது .செல்வாக்குள்ளவர்கள் தம் செல்வாக்கை மேன்மேலும் வலுப்படுத்திக் கொள்ள இது உதவுகிறது . ஒரே மாதிரியான கட்டிடங்கள், வாழ்க்கை முறை ,கல்வித் திட்டம் இவை தனி மனித வேட்கைகளை , கனவுகளை ஒடுக்குகின்றன .'

- "காகித மலர்கள் " நாவலில் ஆதவன்.

 'ரீட்சை பாஸாகி, எவனிடமோ வேலைக்குப் போய் மாசச் சம்பளத்துக்கு மாரடித்துக்கொண்டு , காலாகாலத்தில் சுயமாகவோ நிர்ப்பந்திக்கப்பட்டோ ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கொண்டு, குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு , எனக்கு வேண்டிய பிரதிபிம்பங்களை அவர்களிடம் தேடி என்னையும் அவர்களையும் சலிக்கச் செய்துகொண்டு, அவர்களையே நான் தொடர்ந்து உயிர் வாழ ஒரு நோக்கமாக்கிக்கொண்டு , அவர்களும் என்னை அப்படியே ஆக்கிக்கொண்டு , ஒருவரோடொருவர் இறுகப் பிணைத்துக்கொண்டு , இந்தப் பிணைப்பை உன்னதமானதாகக் கற்பித்துக்கொண்டு , அந்தக் கற்பனையின் பளபளப்பு மங்காமலிருக்க எப்போதும் ஏதேதோ வகைப் பாலிஷ்களால் அதன் மேல் தேய்த்துக்கொண்டு... சே, அபத்தம் ,அபத்தம் . வாழ்க்கையே வெறும் அபத்தம். '

- " என் பெயர் ராமசேஷன் " எனும் நாவலில் ஆதவன் .

மேலும் படிக்க :



Sunday, January 31, 2016

செருப்பு தைக்கும் கலை !

செருப்பு , நம் வாழ்வில் தவிர்க்க முடியாத பங்கு வகிக்கிறது.
பெரும்பாலானோர் தற்போது பிஞ்ச செருப்பை தைத்து அணிவதில்லை ;செருப்பு நல்ல நிலையில் இருந்தாலும் கூட. நுகர்வு கலாச்சாரம் செருப்பையும் விட்டுவைக்கவில்லை. இதற்கு முன்பு பயன்படுத்திய செருப்புகள் பயன்பாட்டுக் காலத்தில் பிய்யவேயில்லை. கடைசியாக பள்ளிக்காலத்தில் தான் பிஞ்ச செருப்பை தைத்து அணிந்ததாக ஞாபகம்.

இன்றைய சூழலில் செருப்புகள் உயர்வான தரத்துடன் தயாரிக்கப்படுகின்றனவோ என்னவோ ? எளிதில் பிய்வதில்லை. ஆனால் ஆயுள் குறைவு. தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் செருப்பு அவ்வளவு தரமில்லை போலும். நல்ல நிலையிலேயே பிய்ந்துவிட்டது. சற்று தயக்கத்துடனே தான் செருப்பைத் தைக்கப் போனேன். ஏனென்றால் பிய்ந்த இடம் அப்படி இதை எப்படி தைக்கப் போகிறார் என்ற யோசனையுடனே செருப்பு தைப்பவரை கவனிக்க ஆரம்பித்தேன். தைத்து முடித்தவுடன் என்னாலேயே நம்ப முடியவில்லை. செருப்பு பிய்ந்த இடமே வெளியில் தெரியவில்லை. அவ்வளவு நேர்த்தியாக ,கலை நுணுக்கத்துடன் தைக்கப்பட்டிருந்தது. செருப்பு தைக்கும் கலையை நேரடியாக பார்த்து வியந்த தருணமது. இந்த செருப்பின் ஆயுட்காலம் முழுவதும் அந்தக் கலைஞரின் நினைவு இருக்கும்.

நல்ல நிலையில் இருக்கும் செருப்பு பிய்ந்துவிட்டால் தூக்கி எறியாதீர்கள். அதை நேர்த்தியுடன் தைத்து
தெருவெங்கும் கலைஞர்கள் காத்திருக்கிறார்கள் !

மேலும் படிக்க :

மரணத்திற்கும் விலை உண்டு !

புகழேந்தி - மக்களின் மருத்துவர் !
...................................................................................................................................................................

Thursday, December 31, 2015

நானும் நானாக !

நதியும் நதியாக
கடலும் கடலாக
காடும் காடாக
ஊரும் ஊராக
அதுவும் அதுவாக
அவளும் அவளாக
இல்லாத  தேசத்தில்
நானும் நானாக இல்லை  ... !

மேலும் படிக்க :

பிரியாத பிரியங்கள் ...!

நிலவே நீ ஒரு ...!
...................................................................................................................................................................


Tuesday, November 10, 2015

குறி - சிற்றிதழ் !

தமிழ் கூறும் நல்லுலகில் சிற்றிதழ்களுக்கான களம் இன்னமும் ஆக்கமுடன் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. மிகுந்த சிரமங்களுக்கிடையே தான் ஒவ்வொரு சிற்றிதழின் இதழும் வெளிவருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருந்து வெளிவரும் 'குறி 'எனும் சிற்றிதழின் நிலையும் அதுவே. ஆனால் ஒவ்வொரு இதழும் அதற்கான பக்கங்களைத் தேடிக்கொள்கின்றன. சற்றும் பரிச்சயமில்லாத விசயங்களை வெளிக்கொண்டு வருவதே சிற்றதழ்களின் ஆகப்பெரும் பணியாக இருக்கிறது. வாசித்தவரையில் குறி இதழ்களில் குறைந்தபட்சம் ஒரு விசயமாவது பரிச்சயமில்லாததாக இருக்கும். இந்த வகையில் சிற்றிதழ்களுக்கு நமது தொடர்ந்த ஆதரவு தேவைப்படுகிறது.

சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவருவதற்கு இதழ் குறித்த ஆக்கப்பூர்வமான பின்னூட்டங்களும் ,பொருளாதார வளமும் தான் முக்கியமானதாக இருக்கின்றன . மிகுந்த நெருக்கடிக்கிடையே கொண்டு வரப்பட்ட இதழானது எந்த அளவிற்கு சென்று சேர்ந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளாமல் அடுத்த இதழைக் கொண்டு வருவது மிகவும் சிரமம். எந்தக் கலைப்படைப்பாக இருந்தாலும் விமர்சனமும் மக்களின் ஆதரவும் கண்டிப்பாகத் தேவை. இதழ்கள் தொடர்ந்து வெளிவருவதற்கு பொருளாதாரமும் முக்கியமான தேவையாக இருக்கிறது.சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவருவதற்கும் , இடையில் நின்று போவதற்கும் இந்த இரண்டு காரணங்கள் தான் முக்கியமானதாக இருக்கக்கூடும். வேறு காரணங்களும் இருக்கலாம்.

குறி சிற்றிதழைத் தொடர்ந்து நடத்துவதா ,வேண்டாமா என்ற குழப்பமான தயக்கத்திலேயே  இதழாசிரியர், மணிகண்டன் இருக்கிறார். இதற்கு அவர் குறிப்பிடும் முதல் காரணம் , முன்பு கொண்டுவந்த இதழ் பற்றிய பின்னூட்டம் கிடைக்கப் பெறாததே." போதிய ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் குறி இதழ் தொடர்ச்சியாக வெளிவருவதற்கு முயற்சி செய்வேன் " என்று குறிப்பிட்டார் .
ஒவ்வொரு இதழும் குறிப்பிட்ட விசயங்களை மட்டும் முன்னிலைப் படுத்தாமல் ஒரு கலவையாகவே இருக்கிறது .' எந்த ஒரு எழுத்தும் அதற்கான இடத்தைத் தேடிக் கொள்ளும் ' என்று சொல்வார்கள் . குறி சிற்றிதழில் வெளிவந்த படைப்புகள் அவ்வாறாக இடத்தைத் தேடிக் கொண்டவை தான்.   இதன்படி குறி சிற்றிதழும் அதற்கான இடத்தைத் தேடிக் கொள்ளும் நமது ஆதரவு இருந்தால் .

குறி சிற்றிதழ் 11 வது இதழ் பற்றி ஒரு பார்வை :

இந்த இதழிலும் பெண்ணியம் ,LGBT , சாதிய எதிர்ப்பு , இயற்கை , நவீனம் ,கவிதைகள் என்று கலவையான விசயங்கள் இடம் பெற்றுள்ளன . மற்ற இதழ்களில் இல்லாத சுதந்திரம் சிற்றிதழ்களில் இருப்பதை மறுக்க முடியாது . அதனால் தான் மற்ற இதழ்களில் வெளியிட இன்னும் தயங்கும் LGBT வகைமையச் சேர்ந்த படைப்புகளை இரண்டாவது முறையாக குறி வெளியிட்டுள்ளது . இதழ் 10 ல் அபிலாஷ் எழுதிய சிறுகதை ஒன்று வெளிவந்தது . இதழ் 11 ல் ஆர்த்தி வேந்தன் எழுதிய கட்டுரை வெளிவந்திருக்கிறது .' இந்தியாவின் பிரிடா காலோ ' என்ற தலைப்பில் அம்ரித்தா ஷெர் கில் பற்றி எழுதிய கட்டுரையிது . குறைந்த வயதில் இம்மண்ணை விட்டு மறைந்த ஒரு தனித்த படைப்பாளியின் வரலாறு அது .

செ.லிட்டில் பிளவர் என்பவர்  , 'ஆண்டாள் பிரியதர்ஷினியின் பெண்கள் ' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் . ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதி வெளியிட்ட  'வேடிக்கை மனிதர்கள்'  என்ற தொகுப்பில் உள்ள மூன்று கதைகளில் இடம்பெற்ற பெண்களைப் பற்றி விவாதித்து இருக்கிறார் .

 புலியூர் முருகேசன், ' கருந்துளையின் இரண்டு வழிகள்' என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் . புனைவின் வழியே சாதிய கொடுமைகளை பதிவு செய்திருக்கிறார் .

ச.முகமது அலி , 'இயற்கை வழிபாடு' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் . ' இயற்கை விவசாயம் ' என்ற வார்த்தையில் உள்ள முரண் பற்றி பதிவு செய்திருக்கிறார் . இயல்பாக தானாக நடப்பது தானே இயற்கை . விவசாயம் என்பதே இயற்கைக்கு எதிரானது தானே . அப்படி இருக்கும் போது இயற்கை விவசாயம் என்பது முரண் தானே . அதை கேள்வி கேட்டிருக்கிறார் . மாற்று கருத்துகள் இருந்தாலும் தற்போது விவாதிக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது .

அசோக் எழுதியிருக்கும் ' மீரா ' எனும் சிறுகதை நவீன வாழ்வின் ஒரு பகுதியைப் பதிவு செய்திருக்கிறது . சுவாரசியமான சிறுகதை .
     
இந்த இதழில் பல கவிதைகள் உள்ளன . கவிதைகள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாததால் அவற்றை விட்டுவிட்டேன்.

தொடர்புக்கு :

குறி சிற்றிதழ் ,
SBK  வளாகம் ,
சந்தை சாலை ,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:

குறி தனி இதழ் ரூபாய் .15 
பத்து இதழ் சந்தா ரூபாய்.150
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :

எக்காலத்திற்குமான கலைஞன் !

வலுத்தது நிலைக்கும் ! 
...................................................................................................................................................................

Tuesday, October 27, 2015

49ஓ - பொறுப்புள்ள கலைஞரின் மறுவருகை !

எளிய மனிதர்களின் கதாப்பாத்திரங்களில் நடித்து நாட்டு நடப்புகளையும் , மூட நம்பிக்கைகளையும் பகடி செய்யும் வசனங்களைப் பேசி சிரிக்க வைத்தவர் தான் கவுண்டமணி. நகைச்சுவைப் பாத்திரங்களில் தனி முத்திரையைப் பதித்திருந்தாலும் , குணச்சித்திர வேடங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களை மிஞ்சும் வகையில் அவ்வளவு அற்புதமாக நடித்திருப்பார். வில்லன் வேடங்களிலும் அசத்தியிருப்பார்.

சமீப காலங்களில் மிகவும் தேர்ந்தெடுத்தே படங்களில் நடிக்கிறார். அதிலும் அவரை கதாநாயகனாக நடிக்க வைக்க (49 ஓ,  எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை ) பெரும் முயற்சி தேவையாய் இருந்திருக்கிறது. திரையில் அதிகம் பேசப்படாத விவசாயிகளின் வாழ்வைப் பேசியதாலேயே இந்த 49ஓ திரைப்படத்தில் நடிக்க முன்வந்திருக்கிறார். திருப்பங்கள் நிறைந்த நல்ல கதை. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் பெரிய வெற்றியை அடைந்திருக்கும் .

கதையையும் , கவுண்டமணியையும் மட்டுமே நம்பி படமெடுத்திருக்கிறார்கள். அதனால் தானோ என்னவோ மற்றவற்றில் போதிய கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார்கள்.கவுண்டமணி நாயகனாக நடித்த படத்தைப் பார்த்தோம் என்ற உணர்வை விட கவுண்டமணியுடன் சேர்ந்தமர்ந்து ஒரு படத்தைப் பார்த்தோம் என்ற உணர்வே மேலோங்கி இருக்கிறது.
வசனங்களுக்கு பெயர் பெற்ற கவுண்டமணி இந்தப் படத்திலும் ஏமாற்றவில்லை. நிறைய வசனங்கள் கவனிக்கும்படியாய் உள்ளன.

முதலில் இப்படி ஒரு கதையை படமாக்க முன்வந்ததற்காகவே படக்குழுவினரைப் பாராட்டலாம்.தமிழ்த் திரைப்படங்களின் சமூகக் கடமையான  வலிந்து திணிக்கப்பட்ட காதல் , பாடல்கள் , சண்டைக் காட்சிகள் இல்லாதது சிறப்பு. விவசாயி , விவசாயம் என்ற வார்த்தைகளையே உச்சரிக்கத் தயங்கும் ஆட்சியாளர்களும் , அதிகாரிகளும் , கலைஞர்களும் வாழும் தேசத்தில் விவசாயம் , விவசாயி என்ற வார்த்தைகளை உச்சரித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் வலியை ஓரளவிற்கு இத்திரைப்படம் பதிவு செய்துள்ளது. இயற்கை விவசாய செயல்பாட்டாளரான நம்மாழ்வாரின் புகைப்படம் இடம்பெற்ற தட்டியை ஒரு காட்சியில் காண்பிக்கிறார்கள்.சிறிய நிகழ்வென்றாலும் திரையில் நம்மாழ்வாரைக் காண்பது மகிழ்வைக் கொடுத்தது.

விவசாய நிலங்கள் மனைகளாக மாறுவதை மட்டும் காட்டாமல் தேர்தல் ஆணையத்தையும் கேள்வி கேட்கிறார்கள். ரியல் எஸ்டேட் புரோக்கராக வரும் ஆசாமியை போன்றவர்கள் கடந்த ஆட்சியில் எல்லா ஊர்களிலும் காணக்கிடைத்தவர்கள் தான். அதிலும் அவரது உடையான கருப்பு பேண்ட் , வெள்ளை சட்டை அவ்வளவு பொருத்தம். இப்பவும் பல பேர் இந்த ஆடைகளுடன் உலவுகிறார்கள். கருப்பு பேண்ட் , வெள்ளை சட்டை என்பது நில புரோக்கர்களின் டிரஸ் கோடோ என்னவோ !

நடைமுறையில் சாத்தியமோ இல்லையோ , மனைகளாக பிரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு அதில் டிராக்டரில் கவுண்டமணி உழுவது போல் முடியும் இறுதிக் காட்சி ரசிக்க வைத்தது.மசாலா படங்களுக்கு கொடுக்கும் ஆதரவில் சிறிதளவையாவது இம்மாதிரியான திரைப்படங்களுக்கு கொடுக்க வேண்டும்.

 "தான் ஒரு நடிகன் , அவ்வளவு தான் .அதைத் தாண்டி எதுவும் இல்லை" என்று எம்.ஆர்.ராதாவிற்கு பிறகு நாயக துதிபாடலை வெறுக்கும் கலைஞர் தான் , கவுண்டமணி. இந்தப் பொறுப்புள்ள கலைஞரின் மறுவருகையை வரவேற்பதுடன் , அவரை மீண்டும் திரையில் காண காத்திருப்போம் !

மேலும் படிக்க :

எக்காலத்திற்குமான கலைஞன் !

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !

தேவதச்சன் - கவிதைகளின் நாயகன் !
...................................................................................................................................................................

Tuesday, September 22, 2015

புகழேந்தி - மக்களின் மருத்துவர் !

" நவீன மருத்துவத்தின் தந்தை வில்லியம் ஆஃப்லர். இவர்தான் அலோபதி மருத்துவத்துக்கான முதல் புத்தகத்தை உருவாக்கியவர்.  ' ஒரு மருத்துவர் , நோயாளியின் உடல் மூலமாகத்தான் மருத்துவம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும் முடிவான அறிவைப் பெறுகிறார்.அதே சமயம் , நோய் பற்றியும் மருந்துகள் பற்றியும் விளக்கிக் கூறுவது அந்த நோயாளிக்கு மருத்துவர் தரும் சன்மானமோ , பிச்சையோ அல்ல. அது ஒவ்வொரு மருத்துவரின் கடமை!' என்கிறார் ஆஃப்லர்.  ஆனால் இன்று , 'ஏன் , எதற்கு ' என்று கேள்வி கேட்காமல் , நோயாளிகள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் நினைக்கிறார்கள் ! " -நோயாளிகளின் மீது அன்பும் , மனிதத்திற்கு எதிரானவர்கள் மீது வெறுப்புமாகப் பேசுகிறார் மருத்துவர் புகழேந்தி. ஆயிரங்கள் , லட்சங்களில் மருத்துவக் கட்டணங்கள் கொள்ளையடிக்கப்படும் இந்தக் காலத்தில் மூன்று ரூபாய் கன்சல்டேஷன் ஃபீஸூக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர்.அணுக்கதிர் வீச்சு , தடுப்பூசி என ஆய்வுகளின் அடிப்படையில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்பவர். தான் கடந்து வந்த பயணத்தை விவரிக்கிறார்.

"நான் , பிறந்து வளர்ந்தது அருப்புக்கோட்டை .அப்பா , அம்மா இருவருமே பள்ளி ஆசிரியர்கள். ' யார் எது சொன்னாலும் , ஏன் , எதற்கு என்று கேள்வி கேள் ' என்று பழக்கப்படுத்தப்பட்ட நாத்திக வழியில் வந்த அப்பா. காந்தியவாதி அம்மா. அந்தச் சூழல்தான் எனக்குத் தெளிவையும் எளிமையையும் பழக்கப்படுத்தியது. அருப்புக்கோட்டை தேவாங்கர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த,  மதுரை மருத்துவக் கல்லூரியின் 1984 -வது வருட பேட்ச் மாணவன். ஆரம்பத்தில் படிப்பில் மட்டுமே இருந்தது கவனம். ரமேஷ் , செல்லபாண்டியன் , நாகர்ஜூனன் போன்ற நண்பர்களின் அறிமுகம் காரணமாக,  சமூகம் சார்ந்த விசயங்களில் கவனம் திரும்பியது.

பட்டம் பெற்று வெளியே வரும்போது மருத்துவத் தொழிலைப் பணம் சம்பாதிக்கும் விசயமாக மேற்கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். கிராமத்தில் பணியாற்ற வேண்டும் என்பது மட்டும் விருப்பமாக இருந்தது. நண்பர்கள் இருந்த தைரியத்தால் , கல்பாக்கம் பகுதியில் கிளினிக் தொடங்கினேன். கன்சல்டேஷன் ஃபீஸாக மூன்று ரூபாய் வாங்கினேன். தேவை இல்லாமல் ஊசி போடுவது இல்லை , வீரியமிக்க ஆன்ட்டிபயாடிக் கொடுப்பது இல்லை என்பதும் எனது கொள்கை.

ஆனால் , ' மருத்துவரைப் பார்த்து வந்த மறுநாளே நோய் குணமாக வேண்டும் ' என்ற மனநிலையில் இருந்தவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள்.  'இந்த ஆளு லூசா ? மூணு ரூபாய்க்கு வைத்தியம் பார்க்குறாராம் !' என்று சந்தேகப்பட்டார்கள். 'நோய் ஏன் வருகிறது ? அவை மீண்டும் நம்மைத் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?' என்று நான் விலாவாரியாக விளக்குவதையும் அவர்கள் ரசிக்கவில்லை . 'என்ன பிரச்னைன்னு கேட்டோமா... கலர் கலரா ரெண்டு மாத்திரையை எழுதிக் கொடுத்தோமான்னு இல்லாம வளவளன்னு பேசுறானே !' என்று அலுத்துக் கொண்டார்கள். அப்போதெல்லாம் நான் பொறுமையை மட்டுமே கடைப்பிடித்தேன்.

நாட்கள் , மாதங்கள் , வருடங்கள்... இன்று என் கிளினிக்குக்கு 50 மீட்டர் தள்ளிதான் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. ஆனால் , அங்கு செல்பவர்களைவிட என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். இப்போது கன்சல்டிங் ஃபீஸை 10 ருபாயாக உயர்த்தி இருக்கிறேன்.இதுவே குறைவு என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் , இந்தக் கட்டணமே எனக்குப் போதுமான வருமானம் அளிக்கிறது என்றால் நம்புவீர்களா ?

உதாரணமாக , மருந்துக் கடைகளில் 32 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு மருந்து , அரசு பதிவு பெற்ற மருத்துவர்களுக்கு 4 ரூபாய்க்கு  வழங்கப்படும். டிரிப்ஸ் செட் 50 ரூபாய் என்றால் , எங்களுக்கு 5 ரூபாய்க்குக் கிடைக்கும்.  இந்த சலுகையைப் பெரும்பாலான மருத்துவர்கள் தங்களை வளப்படுத்திக்கொள்ள எப்படி மடை மாற்றுகிறார்கள் என்பது நான் விளக்கிச் சொல்லித்தான் உங்களுக்குப் புரியும் என்பது இல்லை!

அணுக்கதிர் கசிவினால் கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் ஆறு பேர் அதிகபட்ச கதிர்வீச்சுக்கு உள்ளானார்கள் என ஒரு பத்திரிகை செய்தி வெளியிடுகிறது. அந்தப் பகுதியில் அணுக்கதிர் வீச்சின் பாதிப்பு பற்றிய பிரசாரங்களைத் தொடங்குகிறோம். 'உங்களுக்கு விவரம் தெரியாது.  அணுக்கதிர்கள் கசிய வாய்ப்பே இல்லை.  விளம்பரத்துக்காக ஏதேனும் கலகம் செய்யாதீர்கள்! ' என்று கல்பாக்கம் அணுசக்தி மையத்தில் இருந்து எங்களிடம் மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.  அணுசக்தி நகரிய மக்களிடம் ஆய்வு நடத்தியதில் , மல்டிபிள் மைலமா நோயால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. போராட்டங்களை முன்னைக் காட்டிலும் தீவிரப்படுத்துகிறோம்.மத்திய, மாநில உளவுப் பிரிவுகள் ஓரு கட்டத்தில் பொறுமை இழந்து , மாமல்லபுரம் டி.எஸ்.பி. என்று ஒருவரை இடையூறு செய்ய வைக்கிறார்கள்... 'நீ யாரு ? அணுசக்தி பத்தி உனக்கு என்னய்யா தெரியும் ? நீ ஒரு போலி டாக்டர்னு சொல்லி அரெஸ்ட் பண்ணவா ?' என்று மிரட்டுகிறார் அவர். 'உங்களுக்கும் சேர்த்துத்தாங்க நான் பேசுறேன்.2006-ல் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவிடம் , 'சிறந்த மருத்துவர்'னு விருது வாங்கின என்னை 'போலி டாக்டர்'னு அரெஸ்ட் பண்ணா , நீங்க யார் யாருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கும் னு யோசிச்சுப் பார்த்தீங்களா ?' எனக் கேட்டேன். அமைதியாகிவிட்டார்.

'உயிரியல் போர் ஆயுதம் ' குறித்து , பேசியும் எழுதியும் வருகிறேன். 'எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி. கிருமி.பரிசோதனைக்கூடத்தில் உருவாக்கப்பட்ட ஓர் உயிரியல் போர் ஆயுதம் ' என நான் சொன்னபோது ,
மருத்துவ உலகத்தில் இருந்தே பலத்த எதிர்ப்புகள். ஆனால் , அது என் சொந்தக் கருத்து இல்லை.  நோபல்  பரிசு பெற்ற வங்காரி மாத்தாய் சொன்னது. ஒருமுறை இயக்குநர் ஜனநாதனிடம் இது தொடர்பாகப் பேசிக்கொண்டு இருந்தேன் . இந்த விவகாரம் தொடர்பாகச் சில புத்தகங்களை அவருக்குப் படிக்க கொடுத்தேன். அதை மையமாக வைத்து உருவான படம்தான் 'ஈ'!

எனக்குக் கல்யாணம் முடிந்து இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தனர்.சென்னையின் பிரபல மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றார்கள். நான் கூடவே கூடாது என்றேன். "என் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட நான் மறுத்துவிட்டேன் 'னு எழுதிக்கொடுங்க' எனக் கேட்டார்கள். 'மத நம்பிக்கையா ? பெண் குழந்தைகள் என்பதால் அலட்சியமா ?' என்றெல்லாம் பல விதங்களில் இம்சித்தார்கள். தடுப்பூசிகளின் ஆபத்துகள் பற்றி நான் என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. குழந்தைகளுக்குப் போடும் போலியோ சொட்டு மருந்தே அவர்களுக்குப் பெரும் பிரச்னைகள் ஆகும் தீமைபற்றி அவர்களுக்கு விளக்கினேன்.

போலியோ சொட்டு மருந்தைக் கண்டுபிடித்த அமெரிக்காவிலேயே வாய் வழியாகப் போடும் போலியோ சொட்டு மருந்து புழக்கத்தில் இல்லை.  அவர்கள் ஊசி வழியாகத்தான் போலியோ மருந்து செலுத்துகிறார்கள். ஆனால் , சொட்டு மருந்து பழக்கத்தை இன்னமும் நாம் புழக்கத்தில் வைத்திருக்கிறோம். உலக சுகாதார நிறுவனம் 500 பொது மக்களுக்கு ஒரு மருத்துவர் கட்டாயம் என்று நிர்ணயித்திருக்கிறது. ஆனால் , இங்கோ கிராமப்புறங்களில் 30 ஆயிரம் மக்களுக்குத்தான் ஒரு மருத்துவர் இருக்கிறார். அப்படி இருப்பவர்களும் 'மருத்துவர்'களாக இருக்கிறார்களா என்பதுதான் இங்கு பிரச்னையே ! இந்த நிலைமை மாறும். நான் மாறி இருக்கிறேன். நீங்களும் மாறத் தயாரானால் , நம்மால் மாற்ற முடியும் ! ".

22-09-2010 என்று தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் எனர்ஜி பக்கங்கள் பகுதியில் ' நான் புகழேந்தி ஆனது எப்படி 'என்ற தலைப்பில் வெளிவந்த மருத்துவர் புகழேந்தியின் பேட்டி இது.

அணுக்கதிர் வீச்சின் பாதிப்பு குறித்து பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் மிகத் தீவிரமாக களப்பணியாற்றும் மருத்துவர் தான் நம் புகழேந்தி. கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்தும் அணுக்கதிர் வீச்சின் பாதிப்பு குறித்தும் நாம் பரவலாக அறிந்து கொள்ளும் முன்னரே கல்பாக்கம் அணுமின் நிலையத்திலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகளால் உருவான பாதிப்புகள் குறித்து தனது விரிவான கள ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியவர். புகழேந்தியின் கேள்விகளுக்கு கல்பாக்கம் அணுமின்நிலைய அதிகாரிகள் இன்னமும் உரிய பதில் அளிக்கவில்லை.

இன்று வரை நம்மிடையே "பாதுகாப்பான உறவு" எனப் பரப்பப்பட்ட செய்திகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விசுவாசமான பிரச்சாரங்களும் ஒழுக்கம் பற்றிய விளிம்புக்குள்ளேயே சுற்றிவந்தன. மூன்றாம் உலக நாடுகளின் சுற்றுலா தளங்களில் இறக்கிவிடப்பட்ட, இந்த எய்ட்ஸ் பற்றிய மறுபக்க ஆய்வுகள், இன்றுவரை புரிய வைக்கப்பட்ட செய்திகளைத் தலைகீழாக மாற்றியுள்ளது.
எய்ட்ஸ் பீதியை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட ஊசி தயாரிக்கும் குழுமங்களும், இரத்தம் செலுத்தும் மையங்களும், ஆணுறை தயாரிக்கும் நிறுவனங்களும் கொள்ளையடிக்கத் தொடங்கிவிட்டன. " என்கிறார் புகழேந்தி. மேலும் படிக்க - எயிட்ஸ் - அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட பேரழிவு ஆயுதம்!, மருத்துவர் புகழேந்தி 

"குறிப்பிட்ட ஒரு நோயால் ஒரு நாட்டில் ஒரு இடத்தில் அதன் பாதிப்பு, இறப்புவிகிதம் அதிகம் இருக்குமானால், தடுப்பூசியின் காரணமாக அது உறுதியாக தடுக்கப்படும் என்று அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்டிருந்தால், செலவுகுறைந்த மாற்று வழிகளில் அதை தடுக்கமுடியாது என இருக்கும் சமயத்தில் மட்டுமே தடுப்பூசியை பயன்படுத்துவது நன்மை பயக்கும்." என்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதே தவறு என்றும் சொல்கிறார் .

மக்களோடு இருந்து கொண்டு , மக்களுக்கு சேவை செய்து கொண்டு , மக்களுக்காகவே போராடுகிறார் , மக்களின் மருத்துவர் , புகழேந்தி !

புகழேந்தி பற்றிய வேறு பதிவுகள் :




நன்றி - ஆனந்த விகடன். 

மேலும் படிக்க :



..................................................................................................................................................................


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms