இரட்டை அர்த்தப் பாடல்களை எழுதி, இசையமைத்து,பாடி அதன் மூலம் பெரும் புகழ் பெற்றவர், பஞ்சாப் பாடகர், அமர்சிங் சம்கிலா. அதற்காகவே தனது 27வது வயதில்(1988) அடையாளம் தெரியாத நபர்களால் மனைவியுடன் சேர்த்து சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் அற்புதமான திரைப்படம் தான், 'அமர்சிங் சம்கிலா'.
புனிதம் என்று எதுவும் பூமியில் இல்லை. மதக்கோட்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்கும் அடிப்படைவாதிகள்தான் புனிதம், புனிதம் என்று தொடர்ந்து கூவிக் கொண்டேயிருக்கிறார்கள். மாற்றம் என்பதே நிலையானது. இதை அடிப்படைவாதிகள் ஏற்பதில்லை. அடிப்படைவாதிகளை வளர்த்து பாதுகாக்கும் வேலையை அனைத்து மதங்களும் தொடர்ந்து செய்து வருகின்றன. அதிலும் ஆயுதம் ஏந்திய அடிப்படைவாதிகள் எப்போதும் ஆபத்தானவர்களே. இதனால் தான் கார்ல் மார்க்ஸ் " மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான முதல் தேவை, மதங்களை அழிப்பது " என்று சொல்லியிருக்கிறார். மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடையில் நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள் தேவையில்லை.
சம்கிலா, தான் பிறந்து வளர்ந்த சூழலலாலேயே இப்படியான பாடல்களை எழுதவும், பாடவும் செய்கிறார். இந்தப் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து இரட்டை அர்த்தப் பாடல்களையே பாடியே புகழ் பெறுகிறார். நன்றாக பாடும் திறமையுள்ளவர் என்பதாலேயே தனது முதல் திருமணத்தை மறைத்து
அமர்ஜ்யோத் எனும் பாடகியை திருமணம் செய்து கொள்கிறார். அந்த காலத்தில் இங்கே என்.எஸ்.கிருஷ்ணனும் தனது முதல் திருமணத்தை மறைத்துவிட்டு டி.ஏ. மதுரத்தை திருமணம் செய்து கொண்டது நினைவிற்கு வருகிறது.
எல்லா நாட்டு கலை வடிவங்களிலும் பாலியல் சார்ந்த குறியீடுகளும், குறிப்பாக பாடல்களில் இரட்டை அர்த்தங்களும் தொடர்ந்து இருந்து வருகின்றன. வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ எல்லோருமே இம்மாதிரியான பாடல்களை ரசிக்கிறார்கள்; கதைகளை தேடித்தேடி வாசிக்கிறார்கள். கலை மக்களுக்கானது . இதில் புனிதம் என்றோ தீட்டு என்றோ எதுவுமில்லை.
தமிழ் திரையிசைப் பாடல்களில் இரட்டை அர்த்தங்கள் அன்றிலிருந்து இன்று வரை தொடர்கின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை அர்த்தம் புரிந்தோ புரியாமலோ கொண்டாடப்பட்டவை. ரசிக்கும் வகையிலான பாடல்களின் எண்ணிக்கையே அதிகம். அந்த அளவிற்கு தமிழ் மொழி இனிமையானது. வெகு சில பாடல்கள் மட்டுமே கொச்சையான மொழியில் எழுதப்பட்டு பாடப்பட்டிருக்கின்றன. கதைகளிலும் கி.ராஜநாரயாணன் தேடித்தேடி சேகரித்த நாட்டார் பாலியல் கதைகள் எல்லாம் பொக்கிஷம். வயதிற்கு வந்த எவரும் இரட்டை அர்த்தப் பாடல்களைக் கேட்கலாம், கதைகளை வாசிக்கலாம், ரசிக்கலாம், வாழலாம்.
மக்கள் தொடர்ந்து விரும்பியதாலேயே எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து இரட்டை அர்த்தப் பாடல்களை பாடுகிறார், சம்கிலா. எதிர்ப்புகள் அதிகரிக்கும் வாழ்வின் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் கடந்தவராகவும், இனி என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்ற நிலையை எப்படி வந்தடைகிறார் என்பதை இயக்குநர் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு கலைஞனாக மாறிய தருணமது. அதனாலேயே இன்று வரை சம்கிலா பஞ்சாபில் கொண்டாடப்படுகிறார். தொடர்ந்து அவரைப் பற்றிய திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சம்கிலா மக்களின் கலைஞன்.
சம்கிலாவாக திலிஜித் தோஸாஞ்ச் அற்புதமாக பொருந்தியிருக்கிறார். இயல்பிலேயே அவர் ஒரு பாடகர் என்பதால் இன்னும் நெருக்கமாக உணர முடிகிறது. சம்கிலாவின் இணையர்,அமர்ஜ்யோத்தாக பரினீதி சோப்ரா நடித்திருக்கிறார். இந்தக் கதாப்பாத்திரத்தில் நாம் பரினீதி சோப்ராவைக் காண முடியாது, அமர்ஜ்யோத்தை மட்டுமே காண முடியும். அந்த அளவிற்கு அந்தக் கதாப்பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.
ஒரு திரைப்படத்தைப் பார்த்து முடித்தவுடனயே அத்திரைப்படத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றுவது அபூர்வம். இந்தத் திரைப்படத்தைப் பார்த்து முடிக்கும் போது அப்படி தோன்றியது. உடனேயே மீண்டும் ஒரு முறை பார்த்தேன். இப்படி பார்க்கும் முதல் திரைப்படமிது. மற்ற சில படங்கள் பார்க்கும் போது இப்படி தோன்றினாலும் உடனே பார்க்க வாய்ப்பு அமையவில்லை. இந்தத் திரைப்படத்திற்கு அந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது. அப்படி பார்க்க ஒரே காரணம், இசை - ஏ.ஆர்.ரஹ்மான் என்பது தான்.
தமிழ் ரசிகர்கள் இது ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றே உணர முடியாத அளவிற்கு மாயம் செய்திருக்கிறார். கொஞ்சம் கூட மேற்கத்திய சாயல் இல்லை. தமிழில் பொன்னியின் செல்வன், மாமன்னன் எல்லாம் மேற்கத்திய பாணி இசையால் இயல்பு மாறிய திரைப்படங்கள். தமிழில் அசலான நம் மண் வாசனை வீசும் ஒரே ஒரு திரைப்படம் கூட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இல்லை. இயக்குநர்கள் காரணமா என்றும் தெரியவில்லை. ரஹ்மான் இசைக்காக மட்டுமே கூட நாம் இத்திரைப்படத்தைக் காணலாம்.
சம்கிலா திரைப்படத்தில் பாடகர் சம்கிலாவின் பாடல்களை மறு உருவாக்கம் செய்ததாலோ என்னவோ மொழி புரியாவிட்டாலும் பாடல்களை ரசிக்க முடிகிறது. தனியாகவும் 3 பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கி இருக்கிறார். அதிலும் கடைசி பாட்டெல்லாம் (மைனே விதா கரோ... ) அற்புதம்.
அமர்சிங் சம்கிலா இவ்வாறு நடத்தப்பட்டதற்கும், கொல்லப்படத்தற்கும் அவர் ஒரு தலித் என்பதும் ஒரு காரணம். இன்று வரை அவரை யார் கொன்றது என்பது தெரியவில்லை.பல முறை மிரட்டிய ஆயுதம் ஏந்திய அடிப்படைவாதிகளா ? சக பாடக போட்டியார்களா ? அவரின் மனைவி, அமர்ஜ்யோத் உயர் சாதி என்பதால் நடத்தப்பட்ட ஆணவப்படுகொலையா? எதுவும் தெரியவில்லை. ஆனால் இன்று வரை பஞ்சாபில் சம்கிலாவின் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. மொழி புரியாவிட்டாலும் அசலான சம்கிலாவும் , அமர்ஜ்யோத்தும் சேர்ந்து பாடிய பாடல்களை கேட்டுப் பாருங்கள். நல்ல அனுபவம். தனித்துவமான குரல்கள். 'Music is the Universal Language ' என்று சொல்வது முற்றிலும் உண்மை.
இயக்குநர் இம்தியாஸ் அலி அவர்களின் அற்புதமான உருவாக்கம். இவரது திரைப்படத்தைப் பார்ப்பது இதுவே முதல் முறை. இவரின் மற்ற திரைப்படங்களையும் காண வேண்டும். கதையின் ஊடாக அடிப்படைவாதம் குறித்தான விமர்சன பார்வையும் முன்வைக்கப்படுகிறது. தமிழ் திரைப்படங்களில் இது அரிது. திரைக்கதையும், கதை சொல்லும் முறையும் அருமை. அங்கங்கே சின்ன சின்ன கார்ட்டூன் காட்சிகள், இரண்டு திரை காட்சிகள் , அசலான சம்கிலா குறித்தான பதிவுகள் என சுவாரசியம் கூட்டி இருக்கிறார். Excellent tribute to phenomenal artist through Art ❤️
இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉
மேலும் படிக்க :
ஹர்காரா - மண்ணின் கதை !
DAREDEVIL MUSTHAFA - FANTASTIC MAKING !