Friday, April 8, 2011

சூரியன் - உலக சக்திகளின் மையம்

சூரியன் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை செய்யவே முடியாது . உலக சக்திகளின் பிறப்பிடம் சூரியன் தான் . சூரிய ஒளி பூமியை வந்தடைய 8 நிமிடங்கள்  20 வினாடிகள் ஆகின்றன . இந்த ஒளியிலிருந்து தான் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கின்றன . ஒளிச்சேர்க்கை மட்டும் நின்று விட்டால் நம் பூமியில் உயிரினங்கள் வாழவே முடியாது . எல்லா உயிரினங்களுக்கும் தேவையான ஆற்றலின் மூல வடிவம் ஒளிச்சேர்க்கை தான் . உயிரினங்களுக்கு தேவையான உணவும் , ஆற்றலும் தாவரங்களையே சார்ந்தே உள்ளன . ஏன் நாம் சுவாசிக்க தேவைப்படும் ஆக்சிஜன் தாவரங்களில் இருந்தே கிடைக்கிறது . சூரிய ஆற்றல் , பூமியின் அனைத்து உயிர்களின் ஆதார ஆற்றல் ஆகும்.. மேலும் பூமியின் காலநிலை மற்றும் வானிலை ஆகியவையும் சூரியனை சார்ந்தே உள்ளன. 


சூரியனை பற்றி சிந்திக்கும் மனநிலை நமக்கு இல்லை . இயந்திர வாழ்க்கை நம்மை இயற்கையிடமிருந்து பிரித்துக் கொண்டே இருக்கிறது . பொருள் அழிவதைப் பற்றியும் , பொருள் சேர்ப்பதைப் பற்றியும் கவலைப் படவே நமக்கு நேரம் போதவில்லை . நம கண் முன்னாலே இயற்கை அழிவதை நாம் கவனத்தில் கொள்வதில்லை . இயற்கை இல்லாமல் ஒரு நிமிட வாழ்க்கை கூட சாத்தியமில்லை . சூரியனிடமிருந்து  நாம் கற்றுக்கொள்ள நிறைய விசயங்கள் இருக்கின்றன . 

பூமியின்  எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும்  நம அன்றாட வாழ்க்கை, சூரிய உதயத்திலிருந்து தான் தொடங்குகிறது . சூரிய மறைவின் போது ஏறக்குறைய நம்முடைய அன்றாட வாழ்க்கை முடிவுக்கு வருகிறது . ஆனால் , நாம் பணத்திற்காக சூரியன் மறைந்த பிறகும் உழைக்கிறோம் . ஒரு நிமிடம் நம முன்னோர்களை நினைத்து பாருங்கள் . மின் விளக்கோ மற்ற எந்தவிதமான மின்சார சாதனங்களோ கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில் அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் . சூரிய ஒளியில் தங்கள் இயக்கத்தை தொடங்கி சூரியன் மறைவின் போது தங்கள் இயக்கத்தை நிறுத்தி , ஓய்வெடுத்து  அமைதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள் . அதனால் தான் ஆரோக்கியமான வாழ்க்கையை அவர்களால் வாழ முடிந்தது .

சிந்தித்து பார்க்கும் போது நம வாழ்க்கையை மின் சாதனங்கள் பிடுங்கி கொண்டு விட்டது போல் தோன்றுகிறது  . இன்று ,மின் சாதனங்கள் இல்லாத  நம் அன்றாட வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியாது . எல்லோரும் மின்சாரத்தின்  அடிமைகளாக மாறி விட்டோம் . மின்சாதனங்கள் தான் நம் வாழ்கையை இயக்குவது போல நினைத்துக் கொண்டு அவைகளுடனே வாழ்கிறோம் தினமும் . மின் சாதனங்களின் மூலம் எல்லா நேரங்களிலும் நிலையான மகிழ்ச்சியையோ , அமைதியையோ  நம்மால் எப்போதுமே பெற முடியாது . காரணம் , அவை இயங்க எப்போதும் மின்சாரம் தேவை . 

சரி சூரியனுக்கு வருவோம் . சூரியஒளி பட்டுக் கொண்டே இருக்கும் தண்ணீர் தான் நம் உடலுக்கு நல்லது . நம் உடலுக்கு மட்டுமல்ல எல்லா உயிரினங்களுக்கும் அது தான் நல்லது . விலங்குகள் சூரியஒளி படும் தண்ணீரை  மட்டுமே அருந்துகின்றன . அதனால் தான் நம் முன்னோர்கள் , கேணி ,குளம் , ஏரி போன்றவற்றை சூரியஒளி படும் வகையிலேயே அமைத்திருந்தனர் . அவர்களுக்கு வயிறு  சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சனையும் ஏற்ப்படவில்லை . அவர்களால் நீண்ட நாள் ஆரோக்கியமுடன் வாழ முடிந்தது . இன்று , பல்வேறு  விதமான சுத்திகரிப்பு முறைகளைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம் . ஆனாலும் , நம் ஆரோக்கியம் என்பது மருத்துவமனையை நம்பியே உள்ளது . 



சூரியன் மிகவும் விசித்திரமானவர் . பூமியின் வெப்ப மண்டல பகுதியைச் சேர்ந்தவர்கள் , அதிக வெப்பத்தால் பாதிக்கப் படுகின்றனர் . குளிர் மண்டலப் பகுதிகளை சேர்ந்தவர்கள் , வெப்பம் இல்லாததால்  பாதிக்கப் படுகின்றனர் . மழை பெய்யவும் சூரியன் தான் காரணம் , சூரிய வெப்பத்தால் தான் நீர் ஆவியாகி  மேகத்துடன் இணைந்து மழையாக பெய்கிறது .நிலவுக்கு ஒளி சூரியனிடமிருந்து தான் கிடைக்கிறது . எவ்வளவு சுவாரசியம் பாருங்கள் . சூரியன் ஒரே இடத்தில்  இருக்கிறது . பூமி , சூரியனைச் சுற்றுகிறது . பூமியை நிலவு சுற்றுகிறது . சூரிய ஒளிக்கு எதிராக நிலவின் ஒளி குளுமையாக இருக்கிறது . இப்படி எல்லாத்துக்கும்  சூரியன் காரணமாக இருப்பதால் தான் கிரேக்கர்கள் சூரியனை கடவுளாக வழிபட்டார்களோ என்னவோ ! 

ஆங்கில கவிஞர் ஷெல்லி, " சூரியஒளி படும்  அனைத்து பொருள்களும் அழகாக இருக்கின்றன " என்று குறிப்பிட்டார் . நம்மில் எத்தனை பேருக்கு சூரிய உதயத்தையும் , சூரிய மறைவையும் பார்க்கும் பழக்கம் இருக்கிறது . ஏறக்குறைய எல்லோரும் மறந்து விட்டோம் . அதை கன்னியாகுமரியில் மட்டுமே பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டோம் . கிராமங்களில் இருப்பவர்களுக்கு சூரியனைப் பார்ப்பது இப்பொழுதும் சாத்தியம் . ஆனால் , நகரங்களில் அன்னாந்து பார்த்தால் விதவிதமான கட்டிடங்கள்  மட்டுமே தெரிகின்றன . நகரத்தில் வாழ்ந்த போதிலும் சூரிய உதயத்தையும் , மறைவையும் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள் , கொடுத்து வைத்தவர்கள் . 

வானத்தை பார்த்துக்கொண்டே இருப்பதே ஒரு வகை தியானம் போன்றது தான் . சூரியன் ,சூரிய வெளிச்சம் , விதவிதமான வண்ணங்கள் , ஓடும் மேகங்கள் , மேகங்கள் நமக்கு உணர்த்தும் பல்வேறு வடிவங்கள் , நிலவு , நட்சத்திரங்கள் என்று வானம் நமக்கு அளிக்கும் விசயங்கள் ஏராளம் . இன்றைய  குழந்தைகள் நட்சத்திரங்களை பார்க்கும் வாய்ப்பை வெகுவாக இழந்து விட்டனர் . எப்பொழுதெல்லாம் மனம் அமைதி இல்லாமல் இருக்கிறதோ அப்பொழுது வானத்தைப் பாருங்கள் அமைதி கிடைக்கும் . இயற்கையின் ஒரு வடிவமான வானம் மட்டுமே நமக்கு இவ்வளவு தரும் போது இயற்கையோடு இணைந்து நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக  இருக்கும் !  

எங்கு இருந்தாலும் வானத்தையும் ,  சூரியனையும் ( காலை 8 மணிக்கு முன் , மாலை 5 .45 கு பின் )   பார்க்க மறக்காதீர்கள் !       

சூரியன், உலக சக்திகள் மற்றும் உலக இயக்கத்தின் மையம் !

கடவுள் இல்லை என்று யாரும் சொல்ல வேண்டாம் . நம் கண்ணால் பார்க்கக் கூடிய ஒரு கடவுள்  "சூரியன் "..! 


மேலும் படிக்க :
 


........................................... 

Monday, April 4, 2011

மனிதனாய் இருக்க மறந்து விடாதே ...!



குழந்தையாய் இரு 

          சிரிக்கும் வரை ...!

சிறுவனாய் இரு
          விளையாடும் வரை...!
  
மாணவனாய் இரு
         படிக்கும் வரை ...!

இளைஞனாய்  இரு
        ஜெயிக்கும் வரை ...1

மனிதனாக இருக்க
         மறந்து விடாதே சாகும் வரை ...!


....................................    

Sunday, April 3, 2011

தோனி வாங்கிய சச்சின் உலககோப்பை !

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி களிக்க வேண்டிய தருணமிது . 1983 கு பிறகு இப்ப வாங்கும் அப்ப வாங்கும்னு எல்லா உலககோப்பை போட்டிகளையும் பசியை மறந்து , தூக்கத்தை தொலைத்து பார்த்துக்கொண்டே இருந்தோம் . 28 வருட ஏக்கம் முடிவுக்கு வந்துவிட்டது . இப்பொழுது  உலககோப்பையை வென்றே விட்டோம் . ஆனால் , இந்த உலககோப்பை சாதாரணமாக கிடைக்க வில்லை . ஒரு நீண்ட போராட்டத்திற்கு பிறகு தான் நம் கைகளை அடைந்துள்ளது . 

இந்த ஒரு உலககோப்பையை வெல்ல நாம் மூன்று இறுதிப் போட்டிகளில் வெல்ல வேண்டி இருந்தது . முதலாவது இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவையும் ( காலிறுதி ), இரண்டாவது இறுதிப் போட்டியில் பாகிஸ்தானையும் (அரையிறுதி ) , மூன்றாவது இறுதிப் போட்டியில் இலங்கையையும் (இறுதி ) வீழ்த்தித் தான் உலக கோப்பையை வென்றோம் . மூன்றுமே கடினமான போட்டிகள் தான் ,ஆனால் ,ஆஸ்திரேலியாவுடனான போட்டி தான் மிகக் கடினமாக இருந்தது . இந்த உலககோப்பை வெல்வதற்கு எந்த தனிப்பட்ட வீரரும் காரணமாக இல்லை . எல்லா வீரர்களுக்குமே வெற்றியில் பங்கு உண்டு . உலககோப்பை வெல்ல ஒரே காரணம் " அணியின் ஒற்றுமை " தான் .

மிகச் சிறப்பான பந்து வீச்சுடன் ஆட்டத்தை துவக்கிய இந்தியா , மிக மோசமான பந்து வீச்சுடன் முதல் 50 ஓவர்களை நிறைவு செய்தது . 274 ரன்களை எடுத்து விட்டு ஆனந்த கூத்தாடியது , இலங்கை .எப்படியும் இந்தியாவை வீழ்த்தி விடலாம் என்று தான் நினைத்திருப்பார்கள் .ஆனால் , அவகளின் ஆனந்தம் ,சேவாகையும் , சச்சினையும் ஆட்டமிழக்கச் செய்யும் வரையே நீடித்தது . அதன்  பிறகு ஆட்டம் இந்தியாவின் கைகளில் வந்தது . காம்பிர் மிகச் சிறப்பாக , துணிச்சலுடன் விளையாடினார் . சதத்துக்காக விளையாடாமல் அணியின் வெற்றிக்காக விளையாடினார் . அவருக்கு கோலி நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் . பிறகு ஆட்டத்தை நம் அணித்தலைவர் , தோனி கையில் எடுத்துக்கொண்டார் . இந்த உலககோப்பையில் தனது சிறந்த ஆட்டத்தை மிக முக்கியமான போட்டியில் வெளிப்படுத்தி உள்ளார் . இறுதிப் போட்டியில் நாம் வெல்வதற்கு தோனியும் முக்கிய காரணம் . 

1983 ல் இருந்த நிலை வேறு . அன்று மிகச் சாதாரண அணியாக பங்கு பெற்று கோப்பை வென்றது இந்தியா . அது மிகச் சிறப்பான வெற்றி . அந்த போட்டியையும் இந்தப் போட்டியையும் ஒப்பிட வேண்டாம் . இந்தியாவின் மிகச் சிறந்த அணித்தலைவர் தோனி தான் . இவரது தலைமையில் இந்தியா பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது . 2007 ல் முதலாவது 20-20  உலககோப்பையை வென்று காட்டினார் . இவரது சிறந்த தலைமையால்  டெஸ்ட் போட்டிகளில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது . இப்பொழுது 28 வருடங்களுக்கு அப்புறம் ஒரு நாள் உலக கோப்பையை வென்று , ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் இந்தியாவை முதல் இடத்தில் உட்கார வைத்துள்ளார் . இதை விட என்ன வேண்டும் .

எல்லோரையும் விட ஒருவர் மகிழ்ச்சி துள்ளலில் ஆனந்த கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார் . பேட்டிங் சாதனைகளின் ஒட்டு மொத்த குத்தகைதாரர் . அவர் , சச்சின் தெண்டுல்கர் . ஆறு உலக கோப்பை போட்டிகளில் விளையாடி , இந்த முறை மட்டுமே கோப்பையை வெல்ல முடித்திருக்கிறது . இப்போது மட்டும் வெல்லாமல் போயிருந்தால் அவரது சாதனைகளுக்கு ஒரு அர்த்தமே இருந்திருக்காது . இது அவருக்கு மிகச் சிறந்த தருணம் . 

 இதைப் பற்றி சச்சின் கூறியது  "இதை விட மேலான ஒன்றை என்னால் கேட்கவே முடியாது. உலகக் கோப்பையை வென்றது தான், எனது வாழ்வின் பெருமைமிகு தருணம். சக அணி வீரர்களுக்கு நன்றி. அவர்கள் இல்லையென்றால் எதுவும் சாத்தியமில்லை. எனது ஆனந்தக் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. உலகக் கோப்பையை வென்றுள்ள இந்த இந்திய அணியில் இடம்பெற்றிருப்பது மிகப் பெரிய கெளரவம். கேரி, பாடி உப்டன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி." 

எப்படியோ உலககோப்பையை வென்று விட்டோம் . இதை வென்று கொடுத்த தோனி மற்றும் நம் அணி வீரர்கள் அனைவரையும் பாராட்டுவோம் . 

எல்லோரும் கொண்டாடுவோம் !


........................... 

Friday, April 1, 2011

மூன்றாவது இறுதிப்போட்டி !?

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளுக்குமே  இது மூன்றாவது இறுதிப்போட்டி . இதற்கு முன் இரு அணிகளும் இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ,ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் பெற்றுள்ளன . இரண்டு அணிகளும்  இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடனே தோல்வியை தழுவியுள்ளன . இம்முறை ஆஸ்திரேலியா இல்லை . ஆனால் , இரண்டில் ஒரு அணி தான் வெற்றி பெற முடியும் . அது எது என்பதில் தான் சுவாரசியம் இருக்கிறது . 

 இந்த உலகக்கோப்பையில் ஏறக்குறைய இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளும் சவால் நிறைந்ததாகவே இருந்தது . அதிலும் ஆஸ்திரேலியாவுடன்  வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருந்தது . பாகிஸ்தான் உடனான போட்டியில் யாரும் எதிர் பார்க்காத வகையில் இந்தியா அணியின் பந்து வீச்சும் , களப்பணியும் மிகச் சிறப்பாக இருந்தன . உலககோப்பை தொடங்கிய போது இருந்ததை விட இப்பொழுது இந்தியா பலம் வாய்ந்ததாக இருக்கிறது . இதற்க்கெல்லாம் காரணம் " இந்திய அணியின் ஒற்றுமை " . அனைத்து வீரர்களும் பொறுப்பை உணர்ந்து விளையாடுகிறார்கள் ,நம் தோனியைத் தவிர . ஆனால் , அணித்தலைவர் பொறுப்பில் மிகச் சிறப்பாக செயல் படுவதால் அவரது ஆட்டத்தை நாம் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை . 

இந்தியா , இந்த தொடரில் அதிக முறை முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது . அதே சமயம் இலங்கை அதிக முறை இரண்டாவதாக பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது . அதனால் , இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தாலும் அது நமக்குச்  சாதகம் என்று சொல்லிவிட முடியாது . முதலில் பேட்டிங்கோ , பந்துவீச்சோ  இறுதி வரை போராடினால் மட்டுமே இறுதிப் போட்டியில் வெல்ல முடியும் .

முரளிதரனுக்காக இலங்கை ஆடுகிறது , தெண்டுல்கருக்காக இந்தியா ஆடுகிறது .  இருவருமே அடுத்த உலகக்கோப்பை போட்டியில் ஆடப்போவதில்லை . இலங்கை  1996 ல்  உலகக்கோப்பை வென்ற போது முரளிதரன் அந்த அணியில் இடம் பெற்று இருந்தார் . ஆனால் , இவ்வளவு சாதனைகள் செய்த பிறகும்  தெண்டுல்கருக்கு  இதுவரை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை . இம்முறை , சொந்த மண்ணில் , சொந்த ஊரில்  நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது .  

இரண்டு அணிகளின் பயிற்சியாளர்களும் இந்த உலகக்கோப்பையுடன் அணியை விட்டு விலகப் போகிறார்கள் . கிறிஸ்டன் பதவி ஏற்ற பிறகு இந்தியா அதிக வெற்றிகளை பெற்றுள்ளது . ஜான்ரைட்- கங்குலி ஜோடியால் இந்தியா  2003 ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்றது . கிறிஸ்டன் -தோனி ஜோடி 2011 ல் கோப்பையை வெல்லப் போகிறது !? 

1983 ல் கபில் தேவ் !

2011 ல் தோனி !? 

மேலும் படிக்க :



முகப்பு பக்கம் 

.......................................
 
 

Thursday, March 31, 2011

தொட்டுவிடும் தூரத்தில் உலகக் கோப்பை !



"தெண்டுல்கரை சதம் அடிக்க விட மாட்டோம் , யுவராஜை விரைவாக ஆட்டமிழக்கச் செய்வோம் " என்றெல்லாம் சபதம் விட்ட அப்ரிடி இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவோம் என்று சொல்ல மறந்து விட்டார் .  தெண்டுல்கரை சதம் அடிக்க விடவில்லை , யுவராஜையும் ஒரே பந்தில் ஆட்டம் இழக்கச் செய்து விட்டனர் , ஆனால் , இந்தியா வெற்றி பெற்று விட்டது . கடந்த போட்டி முடிந்த பிறகு பாண்டிங் ," இதற்கு முன்பு இந்தியா இப்படி இணைந்து விளையாடி நான் பார்த்ததில்லை " என்று குறிப்பிட்டார் . இந்த தொடரில் இந்தியா பெற்ற அனைத்து வெற்றியும் எந்தத்  தனி வீரரையும் சார்ந்து இல்லை , எல்லா வெற்றியும் அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி . பாகிஸ்தானுக்கு எதிராக கிடைத்த வெற்றியும் அப்படிப்பட்டதே .

இந்த உலககொப்பைத் தொடரில் பங்களாதேஷ் உடனான போட்டியைத் தவிர இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளும் பரபரப்பான போட்டிகளாகவே இருந்தன .  நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து எதிரான போட்டிகள் கூட சவாலானதாகவே இருந்தன .ஒவ்வொரு போட்டியிலும் இந்தியாவின் பலம் அதிகரித்துக்கொண்டே வந்தது . அதனால் தான் , 260 ரன்கள் மட்டுமே அடித்திருந்தும்  பாகிஸ்தானை திறமையாக வெற்றிகொள்ள முடிந்தது .

கடந்த போட்டிக்கும் , இந்த போட்டிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு . அது என்னவென்றால் , கடந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா இதே 260 ரன்களைத் தான் எடுத்தது . அதில் ஆஸ்திரேலியா நம்முடன் தோற்று விட்டது .ஆனால்,இந்தப் போட்டியில் நாம் அதே 260 ரன்களை வைத்து பாகிஸ்தானை வென்று விட்டோம் . அது தான் இந்தியாவின் பலம் .

சேவாகின் சரவெடியுடன் போட்டி தொடங்கியது . நன்றாக விளையாட வேண்டும் என்ற நெருக்கடி எல்லோரிடமும் இருந்தது . அதனால் தான் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர் . சேவாக் ஆட்டமிழந்த பிறகு போட்டி , பாகிஸ்தான் வசமே இருந்தது . ஒரு அற்புதமான பந்தில் யுவராஜ் ஆட்டமிழந்தார் . 30 ஓவரிலிருந்து 40 ஓவர் வரை இந்தியா 30 ரன்களை மட்டுமே எடுத்தது . இந்த போட்டியிலும் ஆபத்பாந்தவனாக வந்தவர் ரெய்னா தான் . ரெய்னாவின் பொறுப்பான ஆட்டம் தான் இந்தியா 260 ரன்கள் எடுக்க காரணம் .

பந்துவீச்சில் இந்தியா அசத்தி விட்டது . மூன்று வேகப் பந்து வீச்சாளர்களை களம் இறக்கிய தோனியின் அணுகுமுறை சிறந்த வெற்றியைக் கொடுத்தது .முதல் இரண்டு பேர் வேகப் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர். பின்பு , அடுத்தடுத்து இரண்டு பேரை ஆட்டமிழக்கச் செய்தார் யுவராஜ் . உமர் அக்மல் எல்லோருக்கும் பயத்தை உருவாக்கினார் .அவர் மட்டும் ஆட்டம் இழக்காமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும் . தனது சிறப்பான பந்து வீச்சால் அவரை ஆட்டம் இழக்கச் செய்தார் ஹர்பஜன் . பிறகு அப்ரிடியையும் வீழ்த்தினார் . மிஸ்பா கடைசி கட்டத்தில் கொஞ்சம் போராடினார் . மொத்தத்தில் இந்தியாவின் பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருந்தது .  நீண்ட நாட்களுக்கு அப்புறம் 5 பந்து வீச்சாளர்கள் மட்டுமே 50 ஓவர்களையும் வீசியுள்ளனர் . பந்து வீசிய அனைவருக்கும் ஆளுக்கு 2 விக்கெட்கள்  கிடைத்தன . இது அபூர்வமாக நிகழக்கூடியது .  

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் ஆதிக்கம் ( 5 போட்டிகளிலும் இந்தியா வெற்றி ) தொடர்கிறது . பாகிஸ்தான் உடனான நட்பை புதுப்பிக்கவும் இந்த போட்டி உதவியது . விளையாட்டின் சிறப்பே இது தான் .இன்னும் ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றுவிட்டால் போதும் 1983 மற்றும் 2007 ன் நினைவுகள் பல்வேறு சிறப்புகளுடன் மீண்டும் கிடைக்கும் . 

தொட்டுவிடும் தூரத்தில் உலகக் கோப்பை !

மேலும் படிக்க :


முகப்பு பக்கம்
.......................................

Tuesday, March 29, 2011

இந்தியாவின் இரண்டாவது இறுதிப்போட்டி !?

இந்தியா தனது இரண்டாவது இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது . முதல் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்றது நினைவிருக்கலாம் . சாதாரண போட்டியாக இருந்தாலே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதினால் பரபரப்பாக இருக்கும் . அதிலும் உலககோப்பை போட்டி என்றால் பரபரப்புகுச் சொல்லவா வேண்டும் . 

இரு அணிகளுக்கும் இடையிலான தனிப்பட்ட போட்டிகளில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது , உலக கோப்பைப் போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் வருகிறது . இந்த அணிகள் மோதும் போட்டியை கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கிறது . நிறைய பேர் விடுப்பு எடுக்கத் தயாராகி விட்டனர் . நான், நம் நாட்டின் பிரதமரைச் சொல்லவில்லை . அவருக்கு எப்போதுமே எந்த வேலையும் இருந்ததில்லை . அவர் கிரிக்கெட் பார்ப்பதும் ஒன்றுதான் , பாராளுமன்றம் போவதும் ஒன்றுதான் . நான் குறிப்பிட்டது சாதாரண வேலை செய்பவர்களை .

கிரிக்கெட் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல , அது ஒற்றுமையின் அடையாளம் . நாடு ,ஜாதி , மதம் , மொழி , கட்சி , பணக்காரன் ,ஏழை என்ற வேறுபாடுகள் களைந்து எல்லோரும் ஒன்றுபடுவது இந்த விசயத்தில் தான் . அதனால் கிரிக்கெட்டை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை . எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்பவர்களுக்கான இளைப்பாறுதலும் , உற்சாகமும் ,மகிழ்ச்சியும் தருவது கிரிக்கெட் தான் . அதனால் கிரிக்கெட்டைக் கொண்டாடுவதில் தவறில்லை . வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம் தானே . 

இந்தியா எப்போது நன்றாக விளையாடாமல் போகும் என்றும் ,  பாகிஸ்தான் எப்போது நன்றாக விளையாடும் என்றும் எப்போதுமே கணிக்க முடியாது . புள்ளிவிவரங்களை வைத்து இந்த இரு அணிகள் விளையாடும் போட்டியின் முடிவைக் கணிக்க முடியாது . வீரர்களின் மன வலிமையைப் பொறுத்தே முடிவுகள் இருக்கும் . இதில் தோனியின் அணுகுமுறையும் , அப்ரிடியின் அணுகுமுறையும் முக்கியத்துவம் பெறும் . 

வீரர்களின் திறமையை பொறுத்தவரை இரு அணிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை . இரு அணிகளுக்கும்  நெருக்கடிகள் உள்ளன . எந்த அணி நெருக்கடியை சிறப்பாகச் சமாளிக்கிறதோ அந்த அணி வெற்றி பெறும் .


வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் !

இதையும் படியுங்கள் :

...........................................

தேர்தல் ஆணையமும் , நம் ஜனநாயக அரசும் !

தேர்தல் ஆணையம் , இதற்கு முன்பு இவ்வளவு கடுமையாக நடந்து கொண்டதில்லை . இந்தத் தேர்தலுக்கு முன்பு வரை வெறும் பேச்சளவில் மட்டுமே செயல்பட்டு வந்த தேர்தல் ஆணையம் தற்பொழுது தான் செயலில் இறங்கியுள்ளது . எப்போதுமே ஆளும் கட்சியின் அராஜகத்தை தடுக்க முடியாமல் தவிக்கும் தேர்தல் ஆணையத்தைத் தான் இதற்கு முன்பு பார்த்துள்ளோம் . ஆனால் , இந்த முறை மிகத் திறமையாக ஆளும் கட்சியைச்  சமாளித்து வருகிறது . இந்த நடவடிக்கைகள் தேர்தல் முடிந்து தேர்தல் முடிவு அறிவிக்கும் வரை தொடர வேண்டும் . இவ்வளவு கடுமையான சூழலிலும் ஒரு சில இடங்களில் பணம் மற்றும் பரிசுப்பொருள் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது .

நம் நாட்டின்  நீதிமன்றங்களால் மட்டுமே கொஞ்சம் உயிருடன் இருந்த ஜனநாயகம் , தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளால் கொஞ்சம் புத்துணர்ச்சி அடைந்துள்ளது . தேர்தல் ஆணையத்தால் மட்டுமே இவ்வளவு விசயங்களைச் செய்யும்பொழுது நம் ஜனநாயக அரசால் மட்டும் ஏன் எதுவுமே செய்ய முடியவில்லை . ஒரு சாதாரண சட்டத்தைக்கூட முறையாக நிறைவேற்ற முடியவில்லை . தனியார் நிறுவனங்களின் ஏமாற்று வேலைகளையும் , பகல் கொள்ளையையும் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது . ஊழல்களை மூடி மறைக்கவே முயற்சி செய்கிறது நம் அரசு .

சாதாரண மக்களுக்காக எத்தையும் செய்ய யாரும் தயாராக இல்லை . ஊடகங்களின் கவனமும் அரசியல்வாதிகளையும் , சினிமாக்காரர்களையும் சுற்றியே இருக்கிறது . மக்களின் வரிப்பணத்தில் தான் நம் வாழ்க்கை நடக்கிறது என்ற மனநிலை எந்த ஆட்சியாளருக்கும் இல்லை . 

பேசாமல் தேர்தல் ஆணையத்தையே நம் நாட்டை ஆளச் சொல்லி விடலாம் போல ! 

மேலும் படிக்க :




....................................

Monday, March 28, 2011

கழிப்பிடங்கள் எங்கே ?

மிகச்சின்ன கிராமம் முதல் நம் தலைநகரமான சென்னை வரை எல்லா இடங்களிலும் எல்லோருக்கும் மிகப்பெரும் பிரச்சனையாக இருப்பது கழிப்பிடங்கள் . கிராமங்களில் மக்கள் பயன்படுத்தி வந்த வெட்டவெளிகள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக விற்கப்பட்டு வருகின்றன . அரசு, வீடுதோறும் கழிப்பிடம் கட்ட மானியம் வழங்கினாலும் வெட்டவெளியை பயன்படுத்தியே பழக்கப்பட்டதால் வீட்டில் கழிப்பிடம் கட்டத் தயங்குகின்றனர் .விளைவு , நீங்கள் எந்தக் கிராமத்தைக் கடந்தாலும் , எந்த வாகனத்தில் (இரு சக்கர வாகனம் ,பேருந்து , ரயில் என்று  ) சென்றாலும் உங்களை முதலில் வரவேற்ப்பது மனித கழிவுகள் தான் . கிராமத்தில் தான் இப்படி என்றால் நகரத்தில் நிலைமை இதைவிட மோசம் . மக்கள் அதிகமாக கூடும் எந்த இடத்திலும் முறையான கழிப்பிட வசதிகள் இல்லை . அது அரசு அலுவலகமனாலும் சரி விமான நிலையமாக இருந்தாலும் சரி . ஆண்களைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த தமிழ்நாடே ஒரு கழிப்பறை தான் . ஒரு சின்ன இடம் கிடைத்தால் கூட போதும் தங்கள் வேலையைக் காட்டிவிடுவர் .இதில் படித்தவர் , படிக்காதவர் , கிராமம் , நகரம் என்ற பேதமெல்லாம் இருப்பதில்லை . இந்த விசயத்தில் எல்லோரும் ஒன்று தான் . பெண்களின் நிலைமை தான் ரொம்ப கடினம் . கழிப்பறை இல்லாததால் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் .


இதையெல்லாம் விட என்னைத் துயரத்தில் ஆற்றுவது பள்ளி மாணவ , மாணவிகளின் நிலைமை தான் .இதிலும் , மாணவர்கள் எப்படியோ ஒரு விதத்தில் நிலைமையைச் சமாளித்து விடுகின்றனர் . மாணவிகளின் நிலைமை மிகவும் பரிதாபப்பட வைக்கிறது . மாணவிகளுக்கு படிக்கும்போது ஏற்ப்படும் பாதிப்பு அவர்கள் ஆயுள் வரை நீள்கிறது . பெரும்பான்மையான அரசுப்  பள்ளிகளில் போதுமான கழிப்பிட வசதி இல்லை . இந்தியாவின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் சுத்தமான , சுகாதாரமான கழிப்பிட வசதிகள் செய்யப்பட வேண்டும் .

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் , கழிப்பிடங்கள் சுத்தமானதாகவும் , பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் . சுகாதாரம் என்றால் என்ன ? என்று கேட்கும் நிலையில் தான் நம் நாட்டில் கழிப்பிடங்கள் உள்ளன . கவனிக்காமல் விட்டால் கழிப்பிடங்கள் பல்வேறு விதமான தொற்று நோய்கள் பரவுவதற்கு வழிவகுத்துவிடும் . வீடில்லாமல் கூட வாழ முடியும் , ஆனால் , கழிப்பிடங்கள் இல்லாமல் வாழ முடியுமா ?

India's sanitation crisis  

...................................

Friday, March 25, 2011

ஆஸ்திரேலியாவின் 16 ஆண்டு கால ஆதிக்கத்தை நொறுக்கியது இந்தியா !

தொடர்ந்து நான்கு முறை உலககோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி ( 1996 ,1999,2003,2007 ) அதில் மூன்று முறை கோப்பையை  வென்று உலக கோப்பை போட்டிகளில் அசைக்க முடியாத அணியாக இருந்த  ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது இந்தியா .2003  ஆம் ஆண்டு  இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு சரியான முறையில் பதிலடி கொடுத்தது . அஸ்வின் மற்றும் ரெய்னா வை அணியிலிருந்து நீக்காமல்  இருந்தது வெற்றிக்கு உதவியது . அஸ்வின் ஒரு வேகப்பந்து வீச்சாளர் போலவே செயல்படுகிறார் . துவக்கத்திலும் சரி , முடிவிலும் சரி சிறப்பாக பந்து வீசுகிறார் . நல்ல வேளை , தோனியின் மூளை சரியாக  வேளை செய்துள்ளது . இல்லையென்றால் " யாரை அணிக்கு எடுக்குறது  , யாரை தூக்குறதுனு எனக்குத் தெரியும்னு " சொல்லி சாவ்லாவையும் , நெக்ராவையும் மீண்டும் அணிக்கு தேர்வு செய்யாமல்  இருந்தாரே அதுவரை சந்தோசம் .

 ஆஸ்திரேலியாவை 260 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது சிறப்பானது . யுவராஜ்  இந்தியாவின் முன்னனி பந்து வீச்சாளர் ஆகவே மாறிவிட்டார் . ஜாகிர் கான் , ஆட்டத்தின் நடுப்பகுதியில் திருப்பு முனையை ஏற்ப்படுத்துகிறார் ,  கடைசிக் கட்டத்திலும் சிறப்பாக பந்து வீசுகிறார் . காம்பீர் ஆட்டம் இழந்தவுடன் ஆபத்பாந்தவனாக வந்தவர் தோனி அல்ல , பிரெட் லீ . தோனி அவர்களை விரைவாக ஆட்டமிழக்கச் செய்து , அடுத்தடுத்த ஓவர்களில் ரன்களை அள்ளிக்கொடுத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்து விட்டார் . யுவராஜ் மற்றும் ரெய்னாவின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது . பதட்டமான சூழ்நிலையைச்  சிறப்பாக கையாண்டனர் .இதுவரை இந்தியா விளையாடிய   ஏழு போட்டிகளில் நான்கில் ஆட்டநாயகன்  விருதை வென்று யுவராஜ் ,தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து விட்டார் . யுவராஜ் 50 அடித்தால் இந்தியா வென்று விடும் என்ற நம்பிக்கை தொடர்கிறது .

ஆஸ்திரேலியா வெளியேறியது , மற்ற அனைத்து அணிகளையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கும் . அடுத்த போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கப்போகிறோம் . இந்திய அணி , இனி தனது இயல்பான ஆட்டத்தை தொடரும் என்று நம்புவோம் . உலகக்கோப்பையை  மூன்று முறை தொடர்ந்து வென்ற அணியை நாம் வீழ்த்தியது உலககோப்பை வென்றதுக்குச் சமம் . இனி கோப்பையே வாங்கினாலும் அது வெறும் பேருக்காகத்தான் .

.................

Tuesday, March 22, 2011

நீரின்றி அமையாது உலகு !




" நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு " 


விளக்கம் : (முனைவர் ச .மெய்யப்பன் )
                       எவ்வகையில் உயர்ந்தவரும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது . அதுபோலத் தண்ணீரின் இடையறாத ஓட்டமும் மழை பெய்யவில்லை என்றால் இல்லையாகும்.

நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறள் இது . தண்ணீர் ," திரவத் தங்கம் " என்று அழைக்கப்படுகிறது . தண்ணீர் இல்லாமல் நம் வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியாது . உலகத்தில் உள்ள நீரில் 3 % மட்டுமே நல்ல தண்ணீர் . இதை மட்டுமே நாம் குடிக்கப் பயன்படுத்த முடியும் . இதிலும் 2 % சதவீத தண்ணீர் பனிக்கட்டியாக உள்ளது . வெறும் 1 % தண்ணீர் மட்டுமே பூமி முழுவதும் நாம் வாழும் பகுதியில் கிடைக்கிறது . மழை பெய்வதன் மூலம் மட்டுமே நாம் அதிகளவு நல்ல தண்ணீரைப் பெறுகிறோம் . மழை பெய்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது அடர்ந்த வனப்பகுதிகள் தான் . உலகமயமாததாலும் , பொருளாதாரமயமாததாலும் எல்லா நாடுகளிலும் வனப்பகுதியின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது . வனப்பகுதியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐ.நா .சபை 2011 ஆம் ஆண்டை சர்வதேச வன ஆண்டாக ( http://www.un.org/en/events/iyof2011/index.shtml. ) அறிவித்துள்ளது 



நாம் பெரும்பாலும் நதியின் மூலமே தண்ணீரைப் பெறுகிறோம். நதிக்கு தண்ணீர், மழையிடமிருந்து கிடைக்கிறது . நதியின் பிறப்பிடம் சோலைக்காடுகள் . புல்வெளிகள் , பசுமைமாறாக் காடுகள் ஒருங்கிணைந்து காணப்படுவது சோலைக்காடுகள். இந்த வகைக் காடுகள் 
கடல் மட்டத்தில் இருந்து 1,800 மீட்டர் மற்றும் அதற்கு மேலான உயரத்தில் 
காணப்படுகிறது. சோலைக்காடுகளின் தட்பவெப்ப நிலை , தனித்துவமான மண் அமைப்புகளை செயற்கையாக உருவாக்க முடியாததால் இந்த வகை காடுகள் தொல்லுயிர் படிமங்கள் என அழைக்கப்படுகின்றன . தமிழகத்தில் நீலகிரி ,கொடைக்கானல் , ஆனை மலை, அகத்திய மலை மற்றும் மேகமலை ஆகிய பகுதியில் மட்டுமே சோலைக் காடுகள் அரிதாக காணப்படுகின்றன . 

மழைக்காலங்களில் ஏற்படும் அதிகப்படியான மழைப்பொழிவால்  பெறப்படும் நீர்வளம் சோலைக் காடுகளின் புல்வெளிக்கு அடியில் உள்ள பஞ்சு போன்ற அடிப்பரப்பில் சேமிக்கப்படுகிறது . இது தாவர இலைகளால் அமைக்கப்பெற்ற ஓர் அடுக்கு . இந்த அடுக்கில் சேமிக்கப்பட்ட தண்ணீரானது , சிறிது சிறிதாக வெளியேற்றப்பட்டு சிறு சிறு ஓடைகளாக, மிகப்பெரிய அருவிகளாக , ஆறுகளாக உருமாறுகின்றன . இந்த காடுகளில் அதிகப்படியான தாவர இனங்களும், ரோடோடென்ரான், ரோடோமிர்ட்ஸ் , இம்பேஸியன்ஸ், எக்ஸாகம் உள்ளிட்ட சில தாவர இனங்களும் காணப்படுகின்றன . விலங்குகளில் மரத்தவளை, வரையாடு , யானை , பாம்புகள் , கருமந்தி , தேவாங்கு , மாற அணில் , சிறுத்தை , கரடி , கடமான் , காட்டுக்கோழிகள் மிகுந்த அளவு காணப்படுகின்றன . சோலைக்காடுகளின் பரவல் குறைவதால் படிப்படியாக இவ்வகை காடுகள் தொல்லுயிர் படிமங்களாகி வருவதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவிகின்றனர் .


வனப்பகுதில் கால்நடைகளின் மேய்ச்சலைத் தடுத்து வன   உயிரினங்களையும் அதைச் சார்ந்த வனப்பகுதிகளையும் பாதுகாக்கலாம். அந்நிய களைச்செடிகள் , மரங்களை ஒழித்து அதன் மூலம் பரவும் விதை முளைத்தலை தடுக்கலாம் . காட்டுத்தீயை தடுப்பதோடு , தேயிலை , காபி பயிரிடப்படுவதற்காக சோலைக்காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கலாம் . பைன் , யூகலிப்டஸ், அகேசியா வகை மரங்களை முற்றிலும் வனப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தலாம் .

நிலத்தில் வாழும் உயிரினங்களில் 80% வனத்தில்தான் வாழுகின்றன . மனிதனது அத்துமீறலால் பல உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளன .வனத்தை உருவாக்குவதில் மரங்கள் பெரும் பங்கு இருக்கின்றன . மரங்கள் இல்லையென்றால் பூமியில் வனமே இல்லாமல் போய்விடும்  . நாம் சுவாசிக்கத்  தேவைப்படும் பிராண வாயு ( oxygen o2) மரங்களில் இருந்தே அதிகளவு கிடைக்கிறது . தண்ணீர் ,  கிடைப்பதற்கும் மரங்களே முக்கிய காரணம் . நிலச்சரிவைத்   தடுப்பதிலும் மரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன . உணவுப்பொருட்கள் , எரி பொருட்கள் , பல்வேறு வகையான பொருட்கள் செய்ய என்று நாம் மரங்களில் இருந்து பெரும் நன்மைகள் ஏராளம் . மரங்கள் இல்லாமல் மனிதனே இல்லை . இயற்கை இல்லாமல் நம் பூமியே இல்லை . இயற்கையோடு இணைந்து வாழாமல் நம்மால் நிலையான மகிழ்ச்சியையோ ,  வளர்ச்சியையோ எந்தக் காலத்திலும் பெற முடியாது . 

இவ்வளவு கதையும் எதற்காக என்றால் , இன்று (மார்ச் 22)  " உலகத் தண்ணீர் தினம் ". 



நீரின்றி அமையாது உலகு !


மேலும் படிக்க :

.......................         

Monday, March 21, 2011

அனைத்து அரசு அலுவலகங்களிலும் வீடியோ கேமரா ?

அரசு செயல்படுத்தும் எந்தத் திட்டமாக இருந்தாலும் அதில் ஒட்டுமொத்த மக்கள் நலன் கவனிக்கப்பட வேண்டும் . கட்சி நலன் கவனிக்கப்படக் கூடாது . மக்களுக்காகத் தான் அரசு . கட்சிக்காக அரசு இல்லை . யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு பயன்படும் திட்டங்களை தொடர்ந்து செயல் படுத்த வேண்டும் ." டாஸ்மாக் " திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி , " மழைநீர் சேகரிப்பு " திட்டத்தை மறந்தது போல் நடக்கக் கூடாது . ஒட்டுமொத்த மக்கள் நலனும் , ஒட்டு மொத்த வளர்ச்சியும் எல்லா காலகட்டத்திலும் கவனிக்கப்பட வேண்டும் . யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒரு சில விசயங்கள் மாறுவதே இல்லை . எல்லா இடங்களிலும் தரமில்லாத சாலை வசதிகள் , பிரச்சனை குறித்து மனு கொடுக்கப்போகும் போது காட்டும் அலட்சியம் , அரசு வேலைக்கு லஞ்சம் ( மாத சம்பளம்  2000 ஆக இருந்தாலும் சரி , 20000 ஆக இருந்தாலும் சரி )  , அரசு அலுவலகங்களில் லஞ்சம் என்று நாம் சந்திக்கும் அவலங்கள் மாறுவதே இல்லை . ஆட்சியை மாற்றுவதை விட , முதலில் இந்த மாதிரியான விசயங்களை மாற்ற வேண்டும் .  

அதற்கு என்ன செய்யலாம் ? . எல்லா அரசு அலுவலகங்களிலும் வீடியோ கேமரா பொருத்தி , அனைத்து அரசு அலுவலகங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் கண்காணித்தால் என்ன ? 

என்ன நடந்தாலும் , எது வந்தாலும் லஞ்சம் வாங்கியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டவர்கள் அதிகமாக வாழும் தேசம் இது . இவர்களுக்கு எதிராக எதுவும் செய்யாமல் இருப்பதற்கு பதில் இதை மட்டுமாவது செய்யலாம் . நாம் கண்காணிக்கப் படுகிறோம் என்று உணர்ந்தால் இவர்களின் வாங்கும் லஞ்சத்தின் அளவு கொஞ்சமேனும் குறையுமல்லவா ! 

நம் ஜனநாயக நாடு இதைச் செயல் படுத்துமா ?
..................................

Friday, March 18, 2011

தமிழ்நாட்டுக்குத் தேவை இரண்டு இலவசங்கள் ?!


தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே இரண்டு இலவசங்கள் தேவை . ஒன்று இலவச மருத்துவ வசதி , இன்னொன்று இலவச கல்வி வசதி . இரண்டுமே தற்பொழுது இலவசங்கள் என்ற போர்வையில் இருந்தாலும் உண்மையில் அவை இலவசமாக கிடைப்பதில்லை . பெரிய செலவு வைக்கும் எந்த அறுவை சிகிச்சையையும் நாம் இலவசமாக பெற முடியாது . தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் யாருமே பயன்பெறவில்லை என்று கூற முடியாது . மிக மிக குறைந்த அளவு மக்களே இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர் . ஆனால் , இதற்கு ஒதுக்கப்பட்ட பணம் , மருத்துவமனைகளுக்கும் , காப்பீட்டு நிறுவனத்திற்கும் லாபம் , அரசுக்கு இழப்பு . இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை வைத்து எல்லா வசதிகளுடன் கூடிய குறைந்தபட்சம் ஓரே ஒரு மருத்துவமனையாவது கட்டி இருக்க முடியும் . ஆனால் , கட்டவில்லை .இதே நிலைமை தான் கல்விக்கும் . ஓரளவிற்குத்  தரமான பள்ளிக்கல்வி இலவசமாக கிடைக்கிறது .ஆனால் , தரமான தொழிற்கல்வியையோ , மருத்துவ கல்வியையோ நாம் இலவசமாக பெற முடியாது . 

இன்றைய சூழ்நிலையில் , எந்தக் குடும்பமாக இருந்தாலும் மருத்துவத்திற்க்காகவும் , கல்விக்காகவும் தான் அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது . ஒரு பெரிய மருத்துவ செலவை எல்லாக் குடும்பமும் ஏதோ ஒரு காரணத்திற்காக செய்ய வேண்டியுள்ளது . அந்த மருத்துவ செலவு அந்தக் குடும்பத்தின் சேமிப்பை கரைத்து அவர்களை கடனாளி ஆக்குகிறது . அது போலத் தான் கல்வியும் , நல்ல கல்விக் கூடத்தில் இடம் கிடைக்கவும் , தொடர்ந்து படிக்க வைக்கவும் பெரும் தொகை தேவைப் படுகிறது .அவர்களை மீண்டும் கடனாளி ஆக்குகிறது . இந்தக் கடன்களில் இருந்து  மீள பெரும் போராட்டத்தைச்  சந்திக்க வேண்டியுள்ளது . கல்விக்கடன் திட்டம் ஓரளவிற்குப்  பயன் தருகிறது , ஆனால் , ஒட்டுமொத்த தீர்வாக அத்திட்டம் அமையவில்லை . 

நமது கல்வித் திட்டத்தையே ஓட்டுமொத்தமாக மாற்ற வேண்டும் . நாம் படிக்கும் பெரும்பான்மையான விசயங்கள் நம் வாழ்க்கையில் எந்த நேரத்திலும் பயன் தருவதில்லை . அடிப்படை விசயங்களைத் தவிர்த்து மற்றவை நீக்கப்பட வேண்டும் . நம் கல்வி முறை , ஆரம்ப கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை மனப்பாடம் பண்ணும் திறமையை மட்டுமே வளர்க்கிறது . எவ்வளவு படித்தாலும் வேலைக்காக மற்றவர்களையும் , அரசையும் சார்ந்தே நாம் இருக்க வேண்டியுள்ளது .படித்த எல்லோருக்கும் அரசாலோ மற்றவர்களோ வேலை கொடுக்க முடியாது . சுய வேலை வாய்ப்பு தான் தீர்வு . நம் கல்வி முறை சுய வேலைவாய்ப்பை உருவாக்க முனைவதே இல்லை . அதனால் தான் நாடு முழுவதும் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது . சுய வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில் நம் கல்விமுறையை மாற்றி அமைக்க வேண்டும் .  செயல் வழிக் கற்றல் முறையும் , சமச்சீர்க் கல்வியும் பாராட்டுக்குரியவை . யார் ஆட்சிக்கு வந்தாலும் எல்லா வகுப்புகளுக்கும் சமச்சீர்க் கல்வி முறையை அமல் படுத்த வேண்டும் . 

நமக்கு வேண்டியதெல்லாம் இரண்டு தான் . ஒன்று , ஒவ்வொரு இந்தியனுக்கும்  பிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஆகும் மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும் . தரமான மருத்துவ வசதி எல்லோருக்கும் ,எல்லா நேரங்களிலும் இலவசமாக கிடைக்கச் செய்ய வேண்டும் .இன்னொன்று , இந்தியர்கள் அனைவருக்கும் ஆரம்பக்கல்வி முதல் வேலை வாய்ப்பை உருவாக்கும் கல்வி வரை இலவசமாக கொடுக்கப்பட வேண்டும் . நம் தேசிய மொழியான இந்தி , ஆரம்பக்கல்வி முதல் எல்லோருக்கும் கற்றுத் தரப்பட வேண்டும் , தமிழ்நாட்டிலும் தான் . தமிழ்நாட்டில் தமிழ் , இந்தி , ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் எல்லோருக்கும் கற்றுத் தரப்பட வேண்டும் .அதே நேரம் , தமிழ் மொழியை எந்தக் காரணத்திற்க்காகவும் ஒதுக்கக் கூடாது .  இன்றைய சூழ்நிலையில் இவை எல்லாம் சாத்தியமா ! என்று கூட நினைக்கத் தோன்றும் . ஆனால் , சாத்தியம் தான் .

மருத்துவ வசதியும் , கல்வியும் இலவசமாக வேண்டும் !

மற்ற இலவசங்கள்  எதுவும் வேண்டாம் !

மேலும் படிக்க :

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !

திண்ணைப் பேச்சு வீரரிடம் ! 
................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms