Wednesday, June 1, 2011

M.R.ராதாவின் சிறந்த பேச்சு !

M.R.ராதா , ஈடு இணையில்லாத உன்னதமான  கலைஞர் , எதற்கும் , யாருக்கும் அஞ்சாத மகா துணிச்சல்காரர் , பெரியாரின் வழி நடந்த பெரியார் . தனது நாடகங்கள் மூலம் பகுத்தறிவு கருத்துகளை பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பரப்பியவர் . நடிப்பில் யாரும் தொட முடியாத உயரத்தைத் தொட்டவர் . இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் . ஒரு முறை மலேசியா சென்ற போது அவர் பேசியதைக் கேளுங்கள் . 


எவ்வளவு விசயங்களைப் பேசி இருக்கிறார் என்று பாருங்கள் . எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பேச்சு .அரசியல் , மதம் , சினிமா , MGR , சினிமாக்காரர்கள் , கூத்தாடிகள் , மன்னர்கள் , பெரியார் , ஜெயில் , கடவுள் என்று நிறைய பேசி இருக்கிறார் .

சுயமரியாதை மிக்க ஒளிவு மறைவற்ற தமிழனின் பேச்சைக் கேட்ட திருப்தி!

மேலும் பார்க்க  :

நீயா நானா ? கோபிநாத்தின் ஆவேசம் ! 

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...! 

MGR அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் !

.................................

Tuesday, May 31, 2011

குங் பு பாண்டா 2 ( Kung Fu Panda 2) - அற்புதமான கலைப்படைப்பு !

குங் பு பாண்டா 2 ( Kung Fu Panda 2)  , சண்டைகாட்சிகள் நிறைந்த அதிரடியான நகைச்சுவைத் திரைப்படம் . ஜாக் பிளாக் ( Jack Black ) , ஏன்ஜிளினா ஜூலி ( Angelina Jolie ) , ஜாக்கி ஜான்  ( Jackie Chan ) மற்றும் பலர் பின்னணி குரல் கொடுத்துள்ளனர் . குங் பு பாண்டா முதல் பாகம் 2008 ஆண்டு வெளிவந்து மிகபெரிய வரவேற்பைப் பெற்றது . இரண்டாம் பாகமும் அசத்தலாக உள்ளது . அதுவும் முப்பரிமாணத்தில் ( 3 D ) மிகவும் அருமை .

பொம்மை படம்  ( நம் பாசையில் ) என்று ஒதுங்கி விட வேண்டாம் . புதுப்படம் எதாவது பார்க்க வேண்டும் என்று விரும்பினால் இந்தப்படத்திற்க்குச் செல்லுங்கள் உங்கள் பணத்துக்கேற்ற பலன் கிடைக்கும் .படம் முழுவதும்  ( கிராபிக்ஸ்  உதவியால் ) கலையம்சங்கள் நிரம்பிக் கிடக்கின்றன . ஒவ்வொரு காட்சியும் அற்புதம் . 
குறிப்பிடத்தக்க இன்னொரு முக்கிய விசயம் " அழகுணர்ச்சி " . பொதுவாகவே சிறந்த ஆங்கிலப்படங்களில் அழகுணர்ச்சி அதிகமாகவே இருக்கும் . சமீப தமிழ் படங்களில்  அழகுணர்ச்சி என்பதே இல்லாமல் போய்விட்டது . நம் படங்களில் அழகுணர்ச்சி மிகக்குறைவாகவே உள்ளது . ஆனால் , பழைய தமிழ் படங்களில் அழகுணர்ச்சி மிகுதியாக இருக்கும் . சின்ன சின்ன விசயங்களே அழகானவை . இந்தப்படத்தில் அழகுணர்ச்சி படம் முழுவதும் இருக்கிறது .


படத்தின் நாயகன் பண்டாவின் அட்டகாசம் நம்மை படம் முழுவதும் சிரிக்க வைக்கிறது .  படத்தின் முடிவு காட்சிகளில் அதிரடியான சண்டைகளுக்கு மத்தியிலும் கூட  நம்மை  சிரிக்க வைக்க மறக்கவில்லை . டிராகன் வாரியர்ஸ் அணி அதிகமான சாகசங்களை நிகழ்த்திக் காட்டுகிறது . ஜாக் பிளாக் - ன் பின்னணி குரல் படத்தின் மிகப்பெரிய பலம் . ஒட்டுமொத்த  கலைஞர்களின்  உழைப்பால்  நமக்கு ஒரு சிறந்த திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு  உருவாகியுள்ளது .  உங்கள் உதடுகள் சிரிக்கத் தயாராக இருந்தால் உடனே சென்று படத்தைப் பாருங்கள் .


அழகுணர்ச்சி வாழ்க !

மேலும் படிக்க :

5 ரூபா -குறும்படம் !

எது நிரந்தரம் ? 

சூரியன் - உலக சக்திகளின் மையம் ! 


Home Page   


...................................

Saturday, May 14, 2011

ஜனநாயகத்தின் வெற்றி !

நடந்து முடிந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் வெற்றி பெற்றுள்ளது . இணையப்பதிவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைத்துள்ளது . ஆட்சி மாற்றம் அவசியம் தேவை . ஒட்டு மொத்தத்தில் இது ஜனநாயகத்தின் வெற்றி . எவ்வளவு அட்டூழியங்கள் நிகழ்ந்தாலும் 5 வருடத்தில் ஆட்சியை மாற்றும் அதிகாரம் நம்மிடம் உள்ளது . இது ஊழல்வாதிகளுக்கும் , அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர்களுக்கும் விழுந்த சவுக்கடி .

கடந்த ஆட்சியில் எந்த அமைச்சரும் எதுவும் செய்யவில்லை , ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட பணம் எங்கே ? அதனால் தான் ஒரு சிலரைத் தவிர ஒட்டு மொத்த அமைச்சர்களும் மிக மோசமான தோல்விகளை சந்தித்துள்ளனர் . அடுத்து வரும் அமைச்சர்களுக்கு இது ஒரு பாடம் . அமைச்சர்களாக வருபவர்கள் தங்கள் தொகுதிக்கு மட்டும் நல்லது செய்தால் போதாது  , தங்கள் துறை சார்ந்த பயன் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் . அமைச்சராக இருந்து உங்கள் தொகுதிக்கு மட்டும் நல்லது செய்திருந்தால் , நீங்கள் அந்த தொகுதியைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்களாக இருந்தாலும் தோற்க்கடிக்கப்படுவீர்கள் .

அ .தி.மு.க. அதிகம் வென்றதற்கு விஜயகாந்தும் , விஜயகாந்த் அதிகம் வென்றதற்கு அ .தி.மு.க. வும் காரணம் . இனி அ .தி.மு.க. செய்யவேண்டியது . இனி எந்த தேர்தலிலும் எந்தக்காரணம் கொண்டும் பா.ம.க. வையும் ,வி .சி .யையும், காங்கிரசையும் கூட்டணியில் சேர்க்கக் கூடாது . சட்டம் ஒழுங்கை சீர் செய்து , மின்சார தட்டுப்பாடை கட்டுப்படுத்தி , மழைநீரைச் சேமித்து , மரங்களை  வளர்த்து , விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து , கட்சிக்காரர்களின்  ஆட்டத்தைக் கட்டுப்படுத்தி , சமூகத்தின் அனைத்து நிலைகளிலும்  உள்ளவர்களின் வாழ்வை வளப்படுத்தும் நல்ல ஆட்சியைத் தர வேண்டும் ; இல்லையேல் 2011 பாடம் தான் உங்களுக்கும் .

இந்த முடிவின் மூலம்  மக்கள் சொல்வது என்ன?

மிழக மக்கள் பணம் கொடுத்தால் ஓட்டுப் போட்டு விடுவார்கள் என்ற மோசமான முத்திரை நம் மீது விழுந்து இருந்தது . அதை  இந்த தேர்தல் முடிவு மாற்றி விட்டது . நாங்கள் பணத்துக்காக ஓட்டுப்போட மாட்டோம் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளனர் .

குடும்ப அரசியலுக்கும் , குடும்ப சர்வாதிகாரத்திற்க்கும் , குடும்ப அதிகார துஷ்பிரயோகத்திற்க்கும் மக்கள் சரியான பாடம் கற்ப்பித்துள்ளனர் . அடுத்து பதவிக்கு வருபவர்களும் இது போல் நடந்து கொண்டால் அவர்களுக்கும் இதே கதி தான் .

க்கள்பணி ஆற்றாமல் அதிகமாக ஆட்டம் போட்டு பொதுமக்களுக்கு அதிக இன்னல்கள் விளைவித்தவர்களுக்கும் , ஆட்டமும் போடாமல் , மக்கள்பணியும் செய்யாமல் படுத்து தூங்கியவர்களுக்கும் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது . மக்கள்பணி செய்யாமல் இனி யாரும் ஆட்சிக்கு வர முடியாது .

லங்கைத் தமிழர்கள் கொலை செய்யப்படுவதை வேடிக்கை மட்டும் பார்த்து , போராட்டத்தை  திசை திருப்பியவர்களுக்கு மக்கள் வேட்டு வைத்துள்ளனர் . அடுத்து வருபவர் இலங்கைத்  தமிழர் நலனுக்காக பாடுபட வேண்டும் . கட்சத்தீவை மீட்க வேண்டும் .

ழல்வாதிகளை ஓட ஓட விரட்டி உள்ளனர் . இன்னும் எவ்வளவு ஊழல்கள் வெளிவரப்போகிறதோ தெரியவில்லை . இனி ஊழல்வாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது .
திகமான மக்கள் ஓட்டுப்போட தேர்தல் ஆணையத்தின் நடுநிலையான நடவடிக்கைகளே காரணம் . மக்களின் ஓட்டுப் போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது .

க்களின் சிந்திக்கும்  ஆற்றலை என்னவென்று  சொல்வது. சீரிய முறையில் சிந்தித்து மிகக்கவனமாக ஓட்டுப் போட்டுள்ளனர் . மக்களின் மனநிலையை யாராலும் ஊகிக்க முடியவில்லை . கருத்துக்கணிப்புகளில் கட்டுப்படவில்லை . இந்தியா டுடே கருத்துக்கணிப்பு  மட்டுமே ஓரளவு பொருந்தியுள்ளது .

இணையப்பதிவர்கள் அனைவரும் சிறந்த  முறையில் செயல்பட்டுள்ளனர் . கடந்த 5 ஆண்டுகால ஆட்சியை அக்குவேர், ஆணிவேராக அலசி தங்கள் கருத்துகளை முன்வைத்தனர் . இந்த பதிவுகளைப் படித்து பத்துபேர் மாறினால் கூட அது நமக்கு வெற்றி தான் . இனி தான் நமக்கு மிகப்பெரும் பணி உள்ளது . இப்போது அமையப்போகும் ஆட்சியை சரியான வழியில் கொண்டு செல்ல வேண்டும் . சின்ன தப்புகளுக்கும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் . சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ளவர்கள் நலம் பெற வேண்டும் . விவசாயமும்  ,சுற்றுச்சூழலும் முக்கியத்துவம் பெற வேண்டும் . 

இது ஜனநாயகத்தின் வெற்றி . தப்புச்  செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் .   

மாற்றம் ஒன்றே மாறாதது !

மேலும் படிக்க :



...................................................... 

Saturday, May 7, 2011

செங்கொன்றை மலர் - Mayflower

மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த அழகிய மனதை கொள்ளைகொள்ளும்  மரத்தை பார்க்காமல் உங்களால் இருக்கவே முடியாது . இந்த மரம் நம் நாட்டின் பெருவாரியான இடங்களில் காணப்படுகிறது . நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது இயந்திர வாழ்க்கைக்கு மத்தியில் கொஞ்ச நேரம் நின்று ரசிக்க வேண்டியது தான் .



இந்த மலர்   செம்மயிற்கொன்றை என்றும் அழைக்கப்படுகிறது . இதன் அறிவியல் பெயர் - Delonix regia . வெப்பவலயப் பகுதிகளைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இவ்வளவு அடர்ந்த ஆரஞ்சு கலந்த  சிவப்பு நிறத்தை நாம் வேறு இடங்களில் காண்பது அரிது . பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல உள்ளது . இயற்கையின் படைப்பே தனி தான் .

மே மாதங்களில் மட்டும்  அதிகம் பூப்பதால் இந்த மரத்திற்கு Mayflower Tree என்ற பெயர் வந்தது . இந்த அழகிய மே மாதத்தில் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திச்  செங்கொன்றை மலர்களை மட்டுமல்ல வாழ்க்கையையும் ரசியுங்கள் .
இயற்கையைக் கொண்டாடுங்கள் !
.......................................

Wednesday, April 27, 2011

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...!

1957 ஆம் ஆண்டு வெளிவந்த " மகாதேவி " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . இந்தப்படத்தில் MGR , வீரப்பா மற்றும் பலர் நடித்திருந்தனர் . " மணந்தால் மகாதேவி , இல்லையேல் மரணதேவி " இது வீரப்பா பேசிய புகழ் பெற்ற வசனமாகும் . இந்தப் படத்துக்காக மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் இரண்டு பாடல்கள் எழுதினார் . அதில் ஒன்று தான் இந்தப்பாடல் . இந்தப்பாடல் எழுதப்பட்டு 53 வருடங்களுக்கு மேல் ஆனாலும் , இந்தப் பாடலின் வரிகள் நமக்கு மட்டுமல்ல , உலகத்துகே இன்றைக்கும் பொருந்தும் . 

அந்தப்பாடல் : 
                              திரைப்படத்தில்  - http://www.pattukkottaiyar.com/site/?p=199
                                                            

                               
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா , 
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா ,
எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா ,
விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா ,
சிலர்குணமும் இதுபோல் குறுகிப்போகும் கிறுக்கு உலகமடா 
எவ்வளவு வலிமையான வரிகள் .  பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை தான் .
ஈடு இணையில்லாத அந்த உன்னத கவிஞரைக் கொண்டாடுவோம் . பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள - http://www.pattukkottaiyar.com/site/...

முழுப் பாடல் வரிகள்:

( சூழ்ச்சியிலே சுவரமைத்து சுயநலத்தால் கோட்டைகட்டிச்
சுடர்விட்ட நீதிதனைத் தூக்கி எறிந்துவிட்டுச்
சாட்சிகள் வேண்டாம் சகலமும் நானென்று சதிராடும் வீணர்களின் அதிகார உலகமடா
புதிரான உலகமடா _ உண்மைக்கு
எதிரான உலகமடா _ இதில்
பொறுமையைக் கிண்டிவிடும்
போக்கிரிகள் அதிகமடா ) - இந்த வரிகள் படத்தில் இடம் பெறவில்லை .

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா _ இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா _ வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம்
வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல
வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான
பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தைக் குருங்கு தாவும் _ அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் _ சிலர்
குணமும் இதுபோல் குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

நன்றி - மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இணையதளம் .
...........................

மேலும் படிக்க :



Monday, April 25, 2011

" புலியை எந்தக் கூண்டில் அடைத்தாலும் உறுமத்தான் செய்யும் " - வைகோ

சைதாப்பேட்டையில் வைகோ பேசிய பேச்சைக் கேட்கவும் , பார்க்கவும் முடிந்தது . நீண்ட நாட்கள் கழித்துப் பேசினாலும் பேச்சில் நெருப்பு தெறித்தது  .
"  ஐ .நா .சபை  , கொடுங்கோலன் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவித்து கூண்டில் ஏற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் " நடந்தது . பழ நெடுமாறன் , தா. பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

 சமீபத்தில் இலங்கை தமிழர்களுக்காக உயிரிழந்த  தமிழரின் வழக்கில் தவறாக நடந்து கொண்ட  காவல்  துறை அதிகாரிகளை கடுமையாக ( நீங்கள் என்ன ராஜபக்சேவின் கூலி ஆள்களா ? ) விமர்சித்தார் . இரண்டு முறை அந்த கொடுங்கோலனை இந்தியாவிற்கு அழைத்து மரியாதை செய்த இந்திய அரசை வன்மையாக கண்டித்தார் . ராஜபக்சே முதல் குற்றவாளி என்றால் இந்திய அரசும் , தமிழக அரசும் இரண்டாம் குற்றவாளிகள் , இவர்களையும் கூண்டில் ஏற்ற வேண்டும் என்று கடுமையாக சாடினார் .

" என் அரசியல் நிலைக்காக வருந்தவில்லை . " குயிலை எந்தக் கூட்டில் அடைத்தாலும் கூவத்தான் செய்யும் " , " புலியை எந்தக் கூண்டில் அடைத்தாலும் உறுமத்தான் செய்யும் " . எந்தக்கூட்டணியில் இருந்தாலும் இந்த வைகோ விடுதலைப்புலிகளை ஆதரிக்கத்தான் செய்வான் " என்று குறிப்பிட்டார்  .  " ராஜபக்சேவை  போர் குற்றவாளியாக அறிவிக்க ஒட்டு மொத்த இந்தியாவும் ஒன்று சேர வேண்டும் . ராஜபக்சேவிற்கு எதிராக இந்தியாவில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும் " என்றார் . " முக்கியமாக தமிழர்கள் சாதி , மதம் , கட்சி வேறுபாடுகளை  மறந்து ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் . என் கட்சிக்காக யாரையும் அழைக்கவில்லை . எந்தக்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி , கட்சிகளையே பிடிக்காதவர்களாக இருந்தாலும் சரி கொடுங்கோலனுக்கு எதிராக ஒன்று சேருங்கள் . விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க எல்லோரும் பாடுபட வேண்டும்  " என்றார் .

 " முன்பு விடுதலைப்புலிகளைப்பற்றி பேசியவர்களைப் புறக்கணித்தனர் . இனிமேல்  விடுதலைப்புலிகளைப்பற்றி பேசாதவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் " என்று திரும்ப திரும்ப குறிப்பிட்டார் .

நமக்கு வேண்டியதெல்லாம் கொடுங்கோலன் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் .  இலங்கைத்  தமிழர்களுக்கும் மற்றும் உலகத் தமிழர்களுக்கும்  சமமான உரிமை கிடைக்க வேண்டும் . அதுவே  நம் லட்சியம் . அதற்காக ஒன்று படுவோம் , உழைப்போம் . நாளை நமதே !

மேலும் படிக்க :

காங்கிரஸ்காரர்களையும்,காங்கிரசையும் வன்மையாக கண்டிப்போம் ! 

.............................

Saturday, April 23, 2011

5 ரூபா -குறும்படம் !


இதுவரை நான் பார்த்த குறும்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த " 5 ரூபா " குறும்படம் தான் . எதார்த்தமான வசனம் , நல்ல ஒளிப்பதிவு . நீங்களும் ஒரு முறை பாருங்களேன் .




மேலும் பார்க்க :

உலக புத்தக தினம் !


' There are worse crimes than burning books. One of them is not reading them.' - Joseph Brodsky.
 
ஏப்ரல் 23 , உலக புத்தக தினம் . வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களின் நினைவுநாளையே உலக புத்தக தினமாக கொண்டாடுகிறோம் . புத்தகங்கள் இல்லாத உலகை நம்மால் கற்பனைகூட செய்ய முடியாது . புத்தகங்களுக்கும் நமக்குமான உறவு பள்ளிகளில் தொடங்கினாலும் , பள்ளிகளிலேயே முடிவதில்லை , நம் ஆயுள் வரை தொடர்கிறது . எந்த காலகட்டத்திலும்  நம்மைக்  கைவிடாத ஒரே நண்பன், " புத்தகம் " மட்டுமே .புத்தகங்கள் நமக்கு அளிக்கும் அற்புதங்கள் ஏராளம் . ஒவ்வொரு புத்தகமும் நாம் அறியாத  பல கதவுகளைத் திறக்கிறது . 

மனிதனது கண்டுபிடிப்புகளில் புத்தகம் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது . எத்தனையோ சாதனையாளர்கள் உருவானதற்கும் , இன்று உருவாகிக் கொண்டிருப்பதற்கும் புத்தகங்களே காரணம் . புத்தகங்கள் இல்லாத வாழ்க்கை கிணற்றுத் தவளை போலத்தான் இருக்கும் . புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் வாழ்க்கையின் பாதி சுகத்தை இழந்து விடுகிறார்கள் . ஒரு நல்ல புத்தகம் நமக்கு அளிக்கும் களிப்பும் , ஆறுதலும் மிக அதிகம் . வாழ்க்கையே முடிந்துபோனதாக நினைத்து , மனதுடைந்து இருக்கும் சூழலில் "உலகம் ரொம்ப பெரியது , உன் வாழ்க்கையும் தான் " என்று ஒரு புத்தகம் நம்மைத் தேற்றி ஆறுதல் தருகிறது . 

ஒரு புத்தகத்தை நாம் படிக்கும் போது நமது கற்பனைவளம் அதிகரிக்கிறது . நமது சிந்திக்கும் ஆற்றல் அதிகமாகிறது . ஒரு புத்தகத்தை ஒவ்வொரு முறையும்  படிக்கும் போதும் நமக்கு புதிய அனுபவம் கிடைக்கிறது . புத்தகம் அட்சயப்பாத்திரம் போலவே நமக்கு படிக்க படிக்க இன்பத்தைக் கொடுக்கிறது .   
 புத்தகங்களும் , இசையும் இல்லாமல் என்னால் வாழவே முடியாது . என் வாழ்க்கையின் மிகக் கடினமான சூழல்களை புத்தகங்களின்  துணை கொண்டும் , இசையின் துணை கொண்டும் தான் கடந்து வந்திருக்கிறேன் . நமது அத்துனை துன்பங்களையும் , துயரங்களையும் ஒரு புத்தகத்தின் நான்கு வரிகளோ அல்லது ஒரு நல்ல இசையோ மாற்றி விடுகிறது . நம்மை புதுப்பித்துக்கொள்ள புத்தகங்களும் , இசையும் கண்டிப்பாக தேவை . புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் , கண் இருந்தும் குருடர்கள் . இசை கேட்கும் பழக்கம் இல்லாதவர்கள் , காது இருந்தும் செவிடர்கள் .

வாழ்க்கையைக் கொண்டாட புத்தகங்களும் , இசையும் தேவை . புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூறும் காரணம் " படிக்கக் கூடாதுன்னு இல்ல ,படிக்க நேரம் இல்லை " . பணத்தைச் சேர்க்க ஒதுக்கும் நேரத்தைக் கொஞ்சம் புத்தகத்துக்கும் ஒதுக்குங்கள் . பணத்தால் நிலையான மகிழ்ச்சியையும் , நிலையான அமைதியையும் தரமுடியாது . ஆனால் , புத்தகம் தரும்  . இதுவரை இல்லையென்றாலும் இன்றிலிருந்தாவது புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தொடங்குங்கள் . இப்பொழுதே  கிணற்றை ( வீட்டை  ) விட்டு வெளியே வாருங்கள் .அருகில் இருக்கும்  புத்தகக் கடைக்குச் சென்று ஒரு புத்தகமேனும்  வாங்குங்கள் . வாழ்க்கையைக் கொண்டாட ஆரம்பியுங்கள் . 

வாழ்க்கையைக் கொண்டாடுங்கள் புத்தகங்களுடன் !

மேலும் படிக்க :




...............................................................................


Friday, April 22, 2011

பூமியைக் காப்போம் வாருங்கள் !

ஏப்ரல் 22 , உலக பூமி தினம் ( World Earth Day ) .  " ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு " .இந்த விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும் . இயற்கை மட்டும் விதிவிலக்கா என்ன ? இன்றைய இயந்திரச் சூழலில் நமக்கும் இயற்கைக்குமான  உறவைப்பற்றி சிந்திக்க நேரமின்றி சதா ஓடிக்கொண்டே இருக்கிறோம் . இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட நம்மால் வாழ முடியாது . இதை உணர மறக்கிறோம் . எல்லாவற்றுக்கும் ஒரு விதமான கவர்ச்சி தேவைப்படுகிறது . நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் பூமியைப்பற்றிச் சிந்திக்கக்கூட நமக்கு  " உலக பூமி தினம் " என்று ஒரு நாள் தேவைப்படுகிறது . 

பூமியின் முதல் எதிரி யார் ? சந்தேகமே இல்லாமல் மனிதன் தான் . இன்று பூமி இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும் , நம் வாழ்க்கை முறையும்தான் காரணம் . அறிவியல் என்ற பெயரிலும் , கண்டுபிடிப்புகள் என்ற பெயரிலும் தினமும் பூமியைக் காயப்படுத்துகிறோம் . இயற்கையோடு இணைந்த அறிவியலால் மட்டுமே மனித குலத்திற்கு நன்மை ஏற்படும் . இயற்கைக்கு எதிரான அறிவியல் சிறிய நன்மையையும் , பெரிய தீமையையும் கொண்டிருக்கும் . நமது ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் இயற்கைக்கு எதிராகவே உள்ளது . இயற்கையின் தன்மைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் அமைவதில்லை . நமது பயன்பாடும் , வர்த்தகமும் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன . விளைவு , பூமியே ஒரு பெரிய குப்பைத்தொட்டி ஆனதுதான் மிச்சம் .

இன்று நாம் பயன்படுத்தும் பொருள்களில் எத்தனை மண்ணில் மட்கக்கூடியவை . மிகவும் குறைவு . பயன்படுத்தியபின்  தூக்கி எறி ( Use and Through ) கலாச்சாரம்தான் இன்றைய உலகை இயக்குகிறது , இந்தக் கலாச்சாரம் பொருள்களுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் தான் . ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விடக்கூடியச்  சூழல்தான் இன்று உள்ளது . நிலம் , நீர் ,  காற்று என்று பாகுபாடில்லாமல் அனைத்தும் மாசடைந்துள்ளது . நம் மீது  நாமே குப்பைகளை  அள்ளிப்போட்டுக்கொண்டு குப்பைகளுடனே வாழ்கிறோம் . நம் வீட்டில் இருப்பது மட்டும் நம் குப்பையல்ல , பூமியில் எங்கு குப்பை இருந்தாலும்  அது நம் குப்பைதான் , அதற்கு நாம் மட்டுமே காரணம் . 

இதற்கு என்ன செய்யலாம் ? 



Reduce - குறைக்க வேண்டும் :  பிளாஸ்டிக் மற்றும் பூமிக்கு எதிரான மண்ணோடு மண்ணாக மட்காத அனைத்தையும் .

Reuse -  மீண்டும் பயன்படுத்த வேண்டும் :  நாம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களையும் எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்திய  பிறகுதான் குப்பைக்கோ மறுசுழற்சிக்கோ  போட வேண்டும் .
 
Recycle - மறுசுழற்சி செய்ய வேண்டும் : மண்ணில் மட்கும் தன்மை இல்லாத பொருட்களை கண்டிப்பாக மறுசுழற்சி செய்ய வேண்டும் . அது மிகச் சிறிய பொருளாக இருந்தாலும் சரி .
Restore - மீண்டும் சேமிக்க வேண்டும் : இயற்கையின் எந்தப் பொருளைப் பயன்படுத்தினாலும் அந்தப்பொருளை மீண்டும் உருவாக்கி சமநிலையைக் காக்க வேண்டும் . உதாரணமாக ஒரு மரத்தை வெட்டினால் மீண்டும் ஒரு மரத்தை நட வேண்டும் . இயற்கைச் சமநிலை பாதிக்கப்படும் வரை நம்மால் நிம்மதியான வாழ்க்கையை  வாழ முடியாது

முடிந்த அளவுக்கு இந்த விசயங்களை உங்கள் அன்றாட வாழ்க்கைக்குள் கொண்டு வாருங்கள் . நான் ஒருவன் மட்டும் மாறுவதால் என்ன நடந்து விடப்போகிறது ? என்று ஒருபோதும் எண்ண வேண்டாம் . நாம் எல்லோரும் ஒன்று படுவோம் . பூமியைக் காப்பாற்றுவோம் . இல்லையென்றால் சுனாமிக்குள் சிக்கி பரலோகம் போவோமாக !


தீதும் நன்றும் பிறர்தர வாரா !


Thursday, April 21, 2011

அமேசான் - அனைவருக்கும் 5 GB மெமரி இலவசம் !

இணையத்  தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் மேகக்  கணினியகம் ( Cloud Computing ) . முன்பெல்லாம்  நாம் கணக்கு வைத்துள்ள வங்கிக்குச் சென்று மட்டுமே பணத்தை எடுக்க முடியும் . ஆனால் , தற்பொழுது எல்லோரும் ATM யைப் பயன்படுத்தி எங்கு வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்கிறோம் . அதுபோல , மேகக்  கணினியகதைப் பயன்படுத்தி நாம் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை எங்கு இருந்து வேண்டுமானாலும் நமக்குத  தேவையானபோது   பெற்றுக்கொள்ளலாம் . நமது சொந்த CPU போலவே செயல்படும் . நமக்கு தேவையான மென்பொருள்களை இயக்கவும் , தகவல்களைச் சேமிக்கவும் முடியும் .
 
தற்பொழுது இருக்கும் முறைகளால் தகவல்களைச் சேமிக்க மட்டுமே முடியும் . நமக்கு தேவைப்படும் ஒவ்வொரு முறையும் பதிவிறக்கம் ( Download ) செய்து தான் பயன்படுத்த முடியும் . இதனால் , நேரமும் விரயமாகிறது , அதிக மெமரியும் தேவைப்படுகிறது . ஆனால் , மேகக் கணினியகதைப் பயன்படுத்தி தகவல்களைப் பொதுவான இடத்தில் சேமிக்கலாம் , மென்பொருள்களைப் பயன்படுத்தி நேரடியாக இயக்கலாம் , பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை . இன்னும் பல பயன்கள் மேகக் கணினியகம் மூலம் கிடைக்கும் . அதனால் தான் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் மேகக் கணினியகத் துறையில் இறங்கியுள்ளன .

அமேசான் டாட் காம்  பற்றி நிறையப் பேருக்குத் தெரியும் என்று நினைகிறேன் . இது , அமெரிக்காவின் மிகப்பெரிய இணைய சில்லறை வணிக அங்காடி ( America's largest online retailer shop ) ஆகும் . இந்த நிறுவனமும் மேகக் கணினியகத் துறையில் இறங்கியுள்ளது . முதல் கட்டமாக இரண்டு மேகக் கணினியகச் சேவைகளை ( Cloud Drive மற்றும்  Cloud Player )வெயிட்டுள்ளது . 

Cloud Drive மூலம் எந்த ஒரு  இணைய பயன்பாட்டாளரும் 5 GB வரை தகவல்களைச் சேமித்துக்கொள்ள முடியும் . பதிவு செய்ய இந்த உரலியைச் சொடுக்குங்கள் . https://www.amazon.com/clouddrive/learnmore   இது முற்றிலும் இலவசம் . 5 GB க்கு மேல் தேவைப்பட்டால் பணம் கட்டிப் பெற்றுக் கொள்ளலாம் . இதில் Documents , Music,Video ,Photos என்று எதை வேண்டுமானாலும் சேமித்துக் கொள்ளலாம் . ஆனால் , தற்பொழுது மியூசிக் பைல்களை மட்டுமே நேரடியாக பயன்படுத்த முடியும் . அதற்காகத்தான் Cloud Player என்ற சேவையை வழங்குகிறது (  . இந்தச் சேவையைப் பயன்படுத்தி நாம் எங்கிருந்து வேண்டுமானாலும்  பாடல்களைக் கேட்டு மகிழலாம் . இதற்கு இணையவசதியுடன்  கூடிய கணினி அல்லது அலைபேசி ( cell phone ) இருந்தால் போதும் . 

இதில் ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால் தற்பொழுது இந்த வசதியை அமெரிக்காவில் இருப்பவர் மட்டுமே பயன்படுத்த முடியும் . நம்மால் தற்பொழுது Cloud Drive யைப் பயன்படுத்தி  5 GB வரை தகவல்களைச் சேமிக்க மட்டுமே முடியும் .Cloud Pl ayer யைப் பயன்படுத்திப் பாடல்கள் கேட்க முடியாது . கூடிய விரைவில் மற்றவருக்கும்  Cloud Player யைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பலாம் . 

Documents ,Video ,Photos போன்றவற்றை நேரடியாக இயக்க வகை செய்யும் சேவைகளை அடுத்து வழங்க இருக்கிறது அமேசான் .

மேலும் பார்க்க :

நன்றி - ஆனந்த விகடன் .
..................................................

Wednesday, April 20, 2011

தமிழகத்தின் முதல் 10 முக்கியப் பிரச்னைகள்

1 . துறை சார்ந்த அனுபவமும் , தகுதியும் உடையவருக்கு  மட்டுமே அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும்.       அரசியல் அனுபவதிற்காகவோ , குறிப்பிட்ட பகுதியின் பெரும்புள்ளி என்பதற்காகவோ பதவி கொடுக்க கூடாது .

2  . விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் . விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் .

3 . அடிப்படை வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் , முக்கியமாக கிராமம் முதல் நகரங்கள் வரை கழிப்பிடங்கள் கட்டப்பட வேண்டும் .

4 . எல்லா வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை அமல் படுத்த வேண்டும் .  தமிழ் ,ஆங்கிலம் மற்றும் ஹிந்தியும பள்ளிப்படிப்பு வரை கட்டாயமாக்கப்பட வேண்டும் . கல்விக் கொள்ளை கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் . பட்டப்படிப்பு வரை கல்வி இலவசமாக கொடுக்க வேண்டும் .

5 . மருத்துவ காப்பீடு திட்டம் மாற்றப்பட்டு அனைவருக்கும் அறுவைசிகிச்சை வரை இலவச மருத்துவ வசதி செய்து தர வேண்டும் . கல்வி மற்றும்  மருத்துவம் மட்டுமே இலவசமாக இருக்க வேண்டும் . மற்ற இலவசங்கள் ஒழிக்கப்பட வேண்டும் . இந்த இரண்டு இலவசங்கள் மட்டும் முறையாக கிடைத்து விட்டால் எல்லா குடும்பங்களும் மகிழ்ச்சியாக இருக்கும் .  

6 . நகரங்களில் பாலங்கள் கட்டுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட  போக்குவரத்து நெரிசலை குறைக்கத்தான் கொடுக்க வேண்டும் . ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து அதிகப்படுத்தப்பட்டு பைக் மற்றும் கார்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் . தகுந்த காரணம் இல்லாமல் புதிய வாகனங்களுக்கு உரிமம் கொடுக்கக் கூடாது . இதைத் தவிர்த்து எத்தனை  பாலங்கள் கட்டினாலும் நெரிசலைக் குறைக்க முடியாது .

7 . ஆதரவற்றோர் , கைவிடப்பட்டோர் , உண்மையான பிச்சைக்காரர்கள் இல்லாத தேசத்தை உருவாக்க வேண்டும் . நகரங்களில் பிளாட்பாரங்களில் வசிப்பவர்களுக்கு முறையான இருப்பிட  வசதி செய்து தர வேண்டும் .

8 . கிராமப்புற முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் . வேலைக்காக நகரங்களுக்கு இடம் பெயர்வது தடுக்கப்பட வேண்டும் .

9 . விவசாயத்திற்கு இரண்டு மணி நேரம்  மட்டும் இலவச மின்சாரம் வழங்குவதைவிட 24 மணி நேரம் கட்டண மின்சாரம் வழங்கலாம் . சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுவது ஊக்குவிக்கப்பட வேண்டும் . மழைநீரைச் சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும் . வெற்று நிலங்களில்   மரம் வளர்ப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் .

10 . லஞ்சத்தைக் கொஞ்சமாவது குறைக்க  அரசு அலுவலகங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் கண்காணிக்கப்பட வேண்டும் . பொதுமக்களுக்கு அரசு அலுவலகங்களில் உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும் .
இன்றைய சூழ்நிலையில் இவையெல்லாம் சாத்தியமா ? தெரியவில்லை  . இதை எழுதுவதால் நமக்கு ஒரு ஆறுதல் அவ்வளவுதான் . 
 ...............................

Monday, April 11, 2011

ஏப்ரல் 13 ன் கதாநாயகர்களுக்கு !

ஒரு நாள் கதாநாயகர்கள் அனைவருக்கும் வணக்கம் . நீங்கள் ஏற்கப் போகும் அந்த ஒரு நாள் கதாபாத்திரம் தான் அடுத்த 5 ஆண்டுகள்( நிபந்தனைக்கு உட்பட்டது ) நம் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறது . நாம் , ஜனநாயக நாட்டில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நம்மை நம்ப வைப்பது தேர்தல் மட்டுமே . மிச்சம் இருக்கும் அந்த ஒரே ஒரு உரிமையை நாம் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்பதைப் பொருத்துத் தான் நம் வெற்றியும் தோல்வியும் இருக்கப் போகிறது . நாம் பெறப்போகும் வெற்றி நமது வெற்றி மட்டுமல்ல ஜனநாயகத்தின் வெற்றி . நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோம் என்பதை இந்த முறை தேர்தல் ஆணையம் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளது . இனி, நம் ஓட்டில் தான் உள்ளது நம் ஜனநாயகம் . 

ஒரு சில பேர் ஓட்டே போடாமல் வில்லன்களாக மாறலாம் என்று நினைக்கிறார்கள் . அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் , "எல்லோரும் ஊழல்வாதிகள் அவர்களுக்கு ஏன் ஒட்டு போட வேண்டும் " , " நான் ஒட்டு போடாமல் இருப்பதால் பெரிதாக ஒன்றும் நடந்து விடாது" , "என் தனிப்பட்ட வாழ்க்கை நன்றாக இருந்தால் போதும் " என்ற சுயநல மனநிலை தான் நம் வில்லன்களுக்கு இருக்கிறது . இந்த மனநிலை , படித்தவர்களுக்குத் தான் அதிகமாக உள்ளது . அதற்கு காரணம் நல்ல படிப்பு , நல்ல வேலை , நல்ல சம்பளம் . சம்பாதிக்கும் பணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் , யாருக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக வாழலாம் என்ற மனநிலை தான் . இவர்களுக்கு ஓட்டுப் போடுவதெல்லாம் பெரிய விசயமில்லை . பெரு நகரங்களில் வேலை பார்க்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளின் நிலை வேறு மாதிரி இருக்கிறது . அரசியல் சூழ்நிலைகள் தெரியும் , ஓட்டுப் போடவும் ஆசை இருக்கும் . ஊருக்கு போய்வரும் செலவுக்காகவும் , ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைக்க்காகவும் ஓட்டுப் போடுவதையே தவிர்க்க நினைக்கின்றனர் . 

நம் வில்லன்கள் ( ஓட்டுப்போட விருப்பம் இல்லாதவர்கள் ) ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் . மனிதன் எப்போதுமே ஒரு சமுதாய விலங்கு தான் . மற்றவர்களைச் சாராமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது . நாம் எதிர் பார்க்கும் மாற்றத்தை நம்முடைய பங்களிப்பு இல்லாமல் எக்காலத்திலும் கொண்டு வர முடியாது . ஊழல்வாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைத்தால் அவர்களுக்கு எதிராக ஓட்டைப் பதிவு செய்யுங்கள் . குடும்ப அரசியல்  பிடிக்க வில்லையா ? அந்த குடும்பத்தில் இருந்து எத்தனை பேர் தேர்தலில் நின்றாலும் ஒருவருக்கு மட்டும் ஓட்டுப் போடுங்கள் . மற்ற யாருக்கும் ஒரு ஓட்டு கூட பதிவாக கூடாது . மிகச் சிறந்த முறையில் மக்கள் பணி செய்யாத யாரும்  இரண்டு முறைக்கு மேல் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட அனுமதிக்காதீர்கள்  . 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் நிற்பது பிடிக்கவில்லையா ? அவர்கள் யாருக்கும் ஓட்டுப் போடாதீர்கள் . இதையெல்லாம் தவிர்த்து யார் மிஞ்சுகிறார்களோ அவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள் . நீங்கள் எதிர் பார்க்கும் மாற்றம் நிகழும் . ஆனால் , ஓட்டே போடா  விட்டால் நாம் எதிர் பார்க்கும் எந்த மாற்றமும் எக்காலத்திலும்  நிகழாது .

கதாநாயகர்கள் கவனிக்க , எந்த கட்சியைச் சார்ந்தும் , எந்தக் கட்சி தலைவருக்காகவும் , சாதிக்காகவும் , மதத்துக்காகவும் , கவர்ச்சியான பேச்சுக்காகவும் , பணத்துக்காகவும்  ஓட்டுப் போடாதீர்கள் . அப்படிப் போடுவதால் உங்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கப்போவதில்லை . உங்கள் தொகுதியில் நிற்பவர்களை   மட்டுமே கவனத்தில் கொள்ளுங்கள் . அவர்களில் எந்த வேட்பாளர்  , எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்  உங்களது நிலைகளை புரிந்து உங்களுக்கு நல்லது செய்வாரோ அவருக்கு ஓட்டுப்போடுங்கள் . நாட்டை ஆள்வது யாராக இருந்தாலும் நம் தொகுதி நலன்களுக்காக போராடுபவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் . இலவசத்தை  மறந்து விடுங்கள் ,ஏனெனில்  இலவசங்கள் அனைத்துமே நம் வரிப்பணம் . 

யாருமே நல்லது செய்யாவிட்டாலும் கூட தொடர்ந்து இரண்டு முறை எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வரக்கூடாது . ஆட்சி மாற்றம் ஒன்று மட்டுமே ஊழல்வாதிகள் மனதில் சிறிதளவாவது பயத்தை உண்டாக்கும் . மத்திய அரசை எடுத்துக் கொள்ளுங்கள் , கடுமையாக  விலைவாசி உயர்ந்த நிலையிலும் தொடர்ந்து மீண்டும்  காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது . அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததால் இன்று , நாம் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம் . கோடிகளில் இருந்த ஊழல்  இலட்சம் கோடிகள் என்று ஆனது தான் மிச்சம் . ஒரே கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழல்களும் , ஊழல் தொகைகளும்  மட்டுமே உயரும் . நம்  வாழ்க்கைத்தரம்  உயராது , குறைய மட்டுமே செய்யும் . காங்கிரஸ் இருக்கும் வரை இந்தியாவில் ஒட்டு மொத்த வளர்ச்சி எங்குமே இருக்காது . பணம் படைத்தவர்களின் வளர்ச்சி மட்டுமே இருக்கும் .

 காமராஜர் செத்த போதே காங்கிரசும் செத்து விட்டது . உண்மையான இந்தியனாக இருந்தால் இனி எக்காலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போடாதீர்கள் .அதனால் , மக்களே , மக்களுக்கு மக்களே  அடுத்த 5 ஆண்டுகள் நம் வாழ்க்கை கொஞ்சம் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் தற்போது இருக்கும் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது . அதன் பிறகு உங்க விருப்பம் . ஆனால் , எதற்காகவும் ஓட்டுப் போடாமல் இருக்காதீர்கள் .
           
 60 வயதிற்கு மேற்ப்பட்டவர்களுக்கு ( கட்சித் தலைவராகவே இருந்தாலும் ) ஓட்டுப் போடாதீர்கள்....

கட்சி சார்ந்த அரசியலைத் தூக்கி எறிவோம் , மக்கள் நலன் சார்ந்த அரசியலை உருவாக்குவோம் ...

மேலும் படிக்க : 


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms