Sunday, September 1, 2024

கர்ணன் - போராடடா ஒரு வாள் ஏந்தடா !

 


அலை ஓசை திரைப்படத்தில் இடம்பெற்ற ' போராடடா ஒரு வாள் ஏந்தடா... ' என்ற இந்தப் பாடலைத்தான் திரைப்படமாக மாரி செல்வராஜ் உருவாக்கி இருக்கிறார் என்று ஒரு முகநூல் நண்பர் ஏதோ ஒரு பதிவில் எழுதியதை வாசிக்க நேர்ந்தது. அது முற்றிலும் உண்மை என்றே தோன்றுகிறது. 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்திலும் இப்படாலின் வரிகள் இடம்பெற்று இருக்கும். 'கர்ணன் ' திரைப்படத்தில் தனுஷ், யானை மீது அமர்ந்து வரும் போது இப்பாடல் இசைக்கருவிகள் மூலமாக ஒலிக்கும்.

'போராடடா' திரைப்படம் முழுக்க தனுஷ் உரிமைக்காக போராடுகிறார். 'வாள் ஏந்தடா' வரிக்கு ஏற்றவாறு வாள் கதாநாயகன் வந்துவிடுகிறது. இப்படி இந்தப் பாடலை விரித்து இத்திரைப்படத்துடன் ஒப்பிட்டுக்கொண்டே போக முடியும். 90களில் அங்கங்கே நடந்த விசயங்களை கொடியன்குளம் கலவரத்துடன் சேர்த்து உருவாக்கியுள்ளார், இயக்குநர். படத்தின் உருவாக்கத்தில் தனித்து தெரிகிறார், மாரி செல்வராஜ். மிகவும் மெனக்கெட்டு ஒவ்வொரு காட்சியையும் அழகுணர்ச்சியுடன் உருவாக்கியுள்ளார். இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல என்பதை பல்வேறு விதமான உயிரினங்களை திரையில் காட்டுவதன் முலம் சொல்லிக் காட்டுகிறார். தனுஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் சூழலில் கூட இத்திரைப்படம் மாரி செல்வராஜின் படமாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 

இந்தத் திரைப்படத்தைப் பற்றி பேச வேண்டுமென்றால் பேசிக்கொண்டே இருக்கலாம்.கொடியன்குளம் கலவரம் பற்றி இந்தத் திரைப்படம் வந்த பிறகே நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். ஏன் அந்த கலவரம் நடந்தபோது 1995ல் முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கே அப்போது தெரியவில்லை. கலவரம் முடிந்த பிறகுதான் அவருக்கு தெரிய வந்திருக்கிறது. தெரிய வந்தும் பயனில்லை. மனிதத்தன்மையற்ற போலிஸ் வெறியாட்டத்தில் ஒரு ஊரே சிதைக்கப்பட்ட சூழலிலும் கூட எந்த போலிஸூம் தண்டிக்கப்படவில்லை. அதன் பிறகு வந்த கருணாநிதியின் ஆட்சியிலும் யாரும் தண்டிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 

சாதி விசயத்தில் அதிமுக, திமுக இரண்டுமே ஒன்றுதான். என்ன ஒன்று அதிமுகவின் சாதி சார்பு வெளிப்படையாகத் தெரியும், திமுகவின் சாதி சார்பு வெளிப்படையாக தெரியாது அவ்வளவுதான் வித்தியாசம். பேரறிஞர் அண்ணா சாதி ஒழிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்தவும் தொடங்கினார்.கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் அந்த விருப்பம் இருந்தாலும் அவரை முழுமையாக செயல்படவிடாமல் ஏதோ தடுத்திருக்கிறது. எந்த அரசாக இருந்தாலும் எவ்வளவு பெரிய குற்றங்கள் செய்தாலும் போலிஸைக் காப்பாற்றுவதில் கவனமாக இருந்திருக்கின்றன, இருக்கின்றன, இருக்கும். 'சட்டத்தின் முன் அனைவரும் சமம் ' என்பது போலிஸூக்கு பொருந்தாது போல. 

இதுவரை ' கொடியன்குளம் கலவரம்' பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள் தேடித் தெரிந்து கொள்ளுங்கள். சாதி ரீதியான, மத ரீதியான, ஆதிக்க உணர்வு எல்லா இடங்களிலும் இருப்பது போல காவல்துறையிலும் இருக்கிறது. ஆணாதிக்க உணர்வும் காவல்துறையில் மேலோங்கியே உள்ளது. மற்ற பணியிடங்களைப் போலவே காவல்துறையிலும் பெண்கள் பல்வேறு விதமான இன்னல்களைச் சந்திக்கிறார்கள். சமூகத்தின் ஒரு அலகுதான் காவல்துறை, சமூகத்தைப் போலவேதான் காவல்துறை இருக்கும் என்றாலும் சமூகத்தில் நிகழும், மீறல்களுக்கு, குற்றங்களுக்கு முதலில் மக்களாகிய நாம் காவல்துறையைத்தானே அணுகுகிறோம். முதலில் அணுகும் ஒரு அமைப்பே அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்கும் துணை போவதுடன் அதே அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் மக்கள் மீது செலுத்துவதை எப்படி ஏற்க முடியும். அதிகாரத்தாலும், ஆதிக்கத்தாலும் நிகழும் குற்றங்கள் குறைய வேண்டுமெனில் காவல்துறைதான் பெரும் பங்காற்ற வேண்டியிருக்கிறது. வெறும் தண்டனைகள் மட்டும் குற்றங்களைக் குறைத்துவிடாது. என்று காவல்துறை குற்றத்தை குற்றமாக மட்டுமே பார்க்கிறதோ அன்றிலிருந்துதான் மாற்றங்கள் நிகழும். குற்றம் யார் செய்தது? என்பதைப் பொறுத்தே காவல்துறை செயல்படும் எனில் எந்த மாற்றமும் நிகழாது. 

"எத்தனையோ ரத்த வரிகளை

எங்கள் முதுகினில் தந்தவரே

அத்தனையும் வட்டி முதலுடன்

உங்கள் கரங்களில் தந்திடுவோம்" என்று தனது கலையின் மூலமாக வட்டி முதலுடன் இத்திரைப்படத்தைத் தந்திருக்கிறார்,இயக்குநர், மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் காட்டப்பட்டதை விட மிகக் கொடூரமான வன்முறை நிஜத்தில் காவல்துறையால் நிகழத்தப்பட்டிருக்கிறது. நீண்ட அந்த கலவரக் காட்சிகளை திரைப்படத்தில் கூட நம்மால் பாரக்க முடியவில்லை. நிஜத்தில் எவ்வளவு வலிகளை அந்த ஊர் மக்கள் அனுபவித்து இருப்பார்கள். இறுதிவரை அம்மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. 

இத்திரைப்படத்தின் மூலம் விவாதப் பொருளாக மாறி இருக்க வேண்டியது 'சாதிய ரீதியிலான காவல்துறையின் அணுகுமுறை '. ஆனால் திமுக, அதிமுக என்று உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

அதிகாரத் திமிரும் , ஆதிக்க உணர்வும் அழிந்து போகட்டும்!

மேலும் படிக்க :

நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !

ஜெய்பீம் -அறத்தின் குரல் !

Life in Colour with David Attenborough - Documentary ❤️


இயற்கையின் வண்ணங்கள் எவ்வளவு சுவாரசியம் மிக்கவை என்பதை இந்த ஆவணப்படம் விளக்குகிறது. பல்வேறு விதமான உயிரினங்களின் விதவிதமான வண்ணங்கள் வெறும் வண்ணங்கள் மட்டும் அல்ல. தனது பலத்தை வெளிப்படுத்த, இணையைக் கவர, இரையை ஏமாற்ற, தன்னை பாதுகாத்துக் கொள்ள, உணவிற்காக என்று ஒவ்வொன்றிற்கு பின்னும் ஒவ்வொரு கதை இருக்கிறது. அத்தகைய சுவாரசியமான கதைகளில் கொஞ்சம் இந்த ஆவணப்படத்தில் காட்சிகளுடன் பேசப்படுகிறது.

நீங்கள் பார்க்க ஆரம்பித்த பிறகு உங்களது கண்களை விலக்கிக்கொள்ளவே முடியாது. மிகவும் தரமான கேமிராக்களின் உதவியுடன் இயற்கையின் அற்புதங்களை கண்முன் நிறுத்துகிறார்கள். ஆவணப்படம், தென்னிந்தியாவிலிருந்து மயிலுடன்தான் தொடங்குகிறது. இந்திய புலியின் உடலிலுள்ள வண்ணங்கள் குறித்து மிகவும் விரிவாகவே பேசுகிறார்கள். 

நாம் பார்ப்பது போலவே மற்ற உயிரினங்களும் வண்ணங்களைப் பார்ப்பதில்லை. ஒரு சில உயிரினங்கள் நம்மைவிட குறைவான பார்வைத்திறன் கொண்டவையாக இருக்கின்றன. ஒரு சில உயிரினங்கள் நம்மைவிட அதிக பார்வைத்திறன் கொண்டவையாக இருக்கின்றன. வன்முறைகளை மையப்படுத்திய வெப் சீரிஸ், திரைப்படங்களுக்கு இடையே இப்படியான ஒரு ஆவணப்படத்தைப் பார்ப்பது நமக்கு நிச்சயம் புத்துணர்வு அளிக்கும்.

மேலும் படிக்க :

நாமெல்லாம் குற்றவாளிகளே ! 

வலுத்தது நிலைக்கும் !

மிகவும் பிடித்தமான மலேசியா வாசுதேவன் பாடல்களில் சில... ❤️

 


கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச...


சீவி சினுக்கெடுத்து...


தானந்தன கும்மி கொட்டி...


கடலோட ஓடும் ஓடம்...


காடு பொட்டக் காடு...


தென்கிழக்கு சீமையில...


நீ போகும் பாதையில்...


தேடினேன் புதிய சுகம் சேர்ந்தது...


குயிலுக்கொரு நிறம் இருக்கு...


முத்தம்மா மாரி முத்தம்மா தாயிக்கும் தாயான பூமி...


பட்டுவண்ண ரோசாவாம்...


பொன்மானைத் தேடி நானும்...


தாய் மனசு தங்கம்...


வெள்ள மனம் உள்ள மச்சான்...


ஆப்பக்கடை அன்னக்கிளி...


ஏத்தமய்யா ஏத்தம்...


கூடையில கருவாடு...


காதல் வைபோகமே...


மாசமோ மார்கழி மாசம்...


தண்ணி கருத்திருச்சு...


மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்...


பேர் வச்சாலும் வைக்காம போனாலும்...


போக்கிரிக்கு போக்கிரி ராஜா...


சோள இளங்குயிலே...


தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி...


பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்...


எந்த வேலு வந்தாலும்...


கிழக்கு வெளுத்துருச்சு கீழ் வானம் செவந்திருச்சு...


கொழந்தை பாடுறேன் கண்ணுமணி ஏம் பொன்னுமணி...


மனிதன் மனிதன்‌...


நன்றி உனக்கு சொல்ல...


பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி...


நீ பொட்டு வச்ச தங்கக்குடம்...


ஊரு விட்டு ஊரு வந்து...


வெத்தலை வெத்தலையோ...


பட்டுக்கோட்டை அம்மாளு...


வெத்தலைய போட்டேன்டி...


ஆனந்த தேன் காற்று...


ஒரு கூட்டுக் கிளியாக...


போராடடா ஒரு வாளேந்தடா...


ஒரு தங்கரதத்தில்...


வா வா வசந்தமே...


கோடை கால காற்றே...


அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா...


பூங்காற்று திரும்புமா...


வெட்டிவேரு வாசம்...


ஏலமல காட்டுக்குள்ளே...


அடி ஆடு பூங்கொடியே...


இளம் வயசு பொண்ண வசியம் பண்ணும் வளைவிக்காரன்...


கோவில்மணி ஓசை தனை கேட்டதாரோ...


நீங்காத எண்ணம் ஒன்று...


கை வலிக்குது கை வலிக்குது மாமா...


நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்...


வா வா வாத்தியரே வா...


கண்ணைத் தொறக்கனும் சாமி...


பெத்து எடுத்தவதான்...


பொதுவாக என் மனசு தங்கம்...


ஆசை நூறு வகை...


சொல்லி அடிப்பேனடி...


ஒதுங்கு ஒதுங்கு மாவீரன் வண்டி வருது...


ஊட்டி மலை ரோட்டினிலே ஓடுது பார் சைக்கிள் வண்டி...


எதிர் வீட்டு ஜன்னல் ஓரம் ரோஜா செடி...


என்னமா கண்ணு சௌக்கியமா...


ராத்திரியில் பாடும் பாட்டு...


மலையோரம் மயிலே...


ஆகாய கங்கை...


பூவே இளைய பூவே...


ஆத்துமேட்டிலே ஒரு பாட்டு கேட்குது...


எத்தனையோ பொட்ட புள்ள...


இந்த மின்மினிக்கு...


கூட்ஸ் வண்டியிலே...


காக்கிச்சட்ட போட்ட மச்சான்...


"இதுக்கு மலேசியா வாசுதேவன் பாடிய எல்லாப் பாடல்களுமே பிடிச்சிருக்குனு சொல்லிட்டு போயிருக்கலாமே " என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது. ஆனால் உள் மனதோ ஏன் மற்ற பாடல்களையும் குறிப்பிடவில்லை என்றே கேட்கிறது. 

மேலும் படிக்க :

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !



புலன் விசாரணை - வசனங்கள் ❤️


"ஓட்டு வாங்கற வரைக்கும் ஜனங்களை எஜமானரா நினைக்கனும். வாங்கனதுக்கு அப்புறம் நாம எஜமானரா இருக்கனும் 

"

" தேர்தலையும் தீபாவளி மாதிரி ஒரு பண்டிகை நாளா கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. என்ன ஒரு வித்தியாசம். தீபாவளிக்கு வேட்டு போடுறாங்க.தேர்தலுக்கு ஓட்டு போடறாங்க  "

" நாம தாராளமா தப்பு பண்றோம். ஏராளமா சம்பாரிக்கிறோம்னு தெரிஞ்சு தான் நமக்கு ஓட்டு போடறாங்க " 

 "பசியை என்னைக்காவது தீர்த்திடுவோம்னு அவுங்க நெனச்சுக்கிட்டே இருக்கனும். தீர்க்கக் கூடாது, தீர்க்கவே கூடாது. நாம சோசலிசம் பேசிக்கிட்டே இருக்கனும். ஜனங்க சோத்துக்கு அலைஞ்சுகிட்டு இருக்கனும். இது தான்யா அரசியல்   "

"ஒரே பொய்யை நாலு தடவை திருப்பி திருப்பி சொன்னா அதையே ஜனங்க உண்மைனு நம்ப ஆரம்பிச்சுருவாங்க "

" மக்கள், போலீச இன்னைக்கு வெறுக்கல. நம்ம நாடு சுதந்திரம் அடையறதுக்கு முன்னால பிரிட்டிஷ்காரன் காலத்திலிருந்தே போலீசுனா விரோதியாத்தான் பார்க்குறாங்க. அப்பவும் சரி இப்பவும் சரி நாட்டை ஆளுறவங்க போலீச அடியாளாத்தான் பயன்படுத்துறாங்க  "

" சட்டம்கிறது ஒரு கழுதை மாதிரி முன்னாடி போன கடிக்கும் , பின்னாடி போன ஒதைக்கும் "

" உங்களுக்கு சாதகமான கட்சிக்காரங்க தப்பு பண்ணா அப்படியே மறைச்சுடுவீங்க. உங்களுக்கு பிடிக்காத கட்சிக்காரங்க தப்பு பண்ணா பக்கம் பக்கம் எழுதுவீங்க. பொறுப்பு  போலீஸ்காரங்களுக்கு மட்டும் அல்ல உங்களுக்கும் இருக்கிறது " 

'புலன் விசாரணை (1990)' திரைப்படத்திற்காக லியாகத் அலிகான் எழுதிய வசனங்கள் 🔥

மேலும் படிக்க :

மனிதரில் இத்தனை நிறங்களா !

அவள் அப்படித்தான் !


Saturday, August 31, 2024

Adrishya Jalakangal ❤️


 கலை என்ன செய்யும் ? 

இப்படியான திரைப்படத்தை எடுக்கும். நமக்கு மாற்றுப் பார்வைகளை வழங்கும். மனங்களை விசாலமாக்கும். அரசதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தும். கற்பனைக்கு சிறகுகள் கொடுத்து பறக்கவிடும். 

சிறுகதை, நாவலில் மட்டுமல்ல திரைப்படத்திலும் ஜாலங்கள் செய்ய முடியும் என இயக்குநர் பிஜுகுமார் தாமோதரன் உணர்த்தியிருக்கிறார். இவரின் மற்ற திரைப்படங்களையும் காண வேண்டும். 

டொவினோ தாமஸ் தனது உடல் மொழியில் பழைய சாயல் இல்லாமல் தனித்துத் தெரிய நிறைய உழைத்திருக்கிறார். எந்த இடத்திலும் இந்த உடல்மொழி மாறவேயில்லை. தன்னால் இப்படியான திரைப்படங்களிலும், இப்படியான கதாப்பாத்திரத்திலும் நடிக்க முடியும் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். 

நிமிஷா சாஜயன் கதாப்பாத்திரம் கொஞ்சம் நாயகித்தன்மையுடன் இருந்தாலும் ரசிக்க முடிகிறது. எப்போதும் போல ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுவரையிலுமே நிமிஷாவிற்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு அவர் நியாயம் செய்திருக்கிறார். எந்தக் கதாப்பாத்திரம் கொடுத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறார்.இதுவே இவரது தனித்தன்மை.

டொவினோ, நிமிஷா இருவரின் கதாப்பாத்திரங்களும் அடையாளமற்றவர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இவர்களைக் காணும் போது நாமும் அடையாளமற்றவர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. 

அழகியல் மட்டும் கலையாகாது. அழகியலுடன் அரசியலும் சேரும் போதுதான் கலை முழுமையடைகிறது. அந்த வகையில் இந்தத் திரைப்படம், முழுமையான கலைப்படைப்பாக மாறிவிடுகிறது. இதற்கு ஒளிப்பதிவும் இசையும் துணை நிற்கின்றன. பல இடங்களில் வசனங்கள் சிறப்பாக இருக்கின்றன. போர் எதிர்ப்பு, சுற்றுச்சூழல், இயற்கை, அதிகார அரசியல், எளிய மனிதர்களின் குரல்கள் , புத்தகங்கள் , இசை, சம கால பிரச்சனைகள் எனப் பலவற்றை பேசியிருக்கும் இத்திரைப்படம் டொவினோவின் நடிப்பையும் மீறி இயக்குநரின் திரைப்படமாகவே மிளிர்கிறது. 

இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉.

மசாலா திரைப்பட பிரியர்களுக்கு இத்திரைப்படம் பிடிக்காது. நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் அதை கலையின் மூலம் எதிர்கொள்ளலாம் என கலை மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கும் , மலையாளத் திரைப்பட பிரியர்களுக்கும் இத்திரைப்படம் நிச்சயம் பிடிக்கும்.


மேலும் படிக்க:

மனிதரில் இத்தனை நிறங்களா !

JANA GANA MANA - பாசிச எதிர்ப்பு சினிமா !

எங்கெங்கு காணினும் குப்பைகள் !


நாகரீக மனிதர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வாழும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் குப்பைகள் குறித்து மக்கள் மட்டுமல்ல அரசுகளும் கண்டுகொள்வதில்லை. ஆனால் குப்பை மேலாண்மைக்கு தனியாக வரி மட்டும் சேர்த்து வாங்குகிறார்கள். 

நாளுக்குநாள் சேரும் குப்பைகளின் அளவு மிகவும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த குப்பைப் பெருக்கத்திற்கு பல்வேறு விதமான காரணிகள் இருக்கின்றன. ஆனால் அதிகமும் கண்ணில் படுவது பிளாஸ்டிக் பொருட்கள்தான். அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களால் உண்டாகும் குப்பைகளுடன் பயன்பாட்டில்  இருந்து பயன்படாமல் மாறும் குப்பைகளும் சேர்ந்து கொள்கின்றன. 

குப்பைகள் என்றுமே இருக்கின்றன. ஆனால் முன்பு அவை எளிதில் மட்கும் குப்பைகளாக, விவசாய நிலங்களுக்கு உரமாக இருந்தன. இன்று எளிதில் மட்கும் குப்பைகளுடன் எளிதில் மட்காத குப்பைகளும் சேர்ந்து கொள்வதால் தானாக மட்குவதில் சிரமம் உண்டாகிறது, அத்துடன் விவசாய நிலங்களுக்கு உரமாக பயன்படுத்த முடியாமலும் போகின்றன. 

சுகாதார பணியாளர்களின் அயராத உழைப்பால்தான் இந்த அளவிற்காவது பேசிக் கொண்டிருக்கிறோம். இவர்கள் மட்டும் தொடர்ந்து இயங்காமல் போனால் நாம் குப்பைகளுடன் குப்பைகளாகத்தான் வாழ வேண்டியிருக்கும். இன்றும் எல்லா ஊர்களிலும் குப்பைகளை, தினமும் அள்ளப்படும் இடங்களில் கொட்டாமல் கண்ணில் படும் காலி இடங்களில் கொட்டும் மனநிலையே அதிகம் உள்ளது. இந்த விசயத்தில் மக்களாகிய நமக்கு பொறுப்புணர்வு தேவை. 

மட்கும் குப்பைகளையும், மட்காத குப்பைகளையும் பிரிப்பது என்பது சவாலான வேலையாக இருக்கிறது. அரசுகளும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை அறிவிக்காமல் திடீரென பிளாஸ்டிக் பொருட்களுக்கு  தடை என அறிவிப்பதும் அப்புறம் அந்த அறிவிப்பை காற்றில் விடுவதும் தொடர்கதையாக இருக்கிறது. அந்த பிளாஸ்டிக் தடையும் எளிய மக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்  பொருட்களுக்குத்தான். கார்பரேட் நிறுவனங்கள்தான் பிளாஸ்டிக் குப்பைகளை அதிகப்படுத்துகின்றன. ஆனால் இன்று வரை எந்த அரசும் கார்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கவேயில்லை. 

மறுசுழற்சி என்பது ஏமாற்று வேலை. மறுசுழற்சி செய்யக்கூடியவை என்று வலம் வரும் பிளாஸ்டிக் பொருட்களில் 5%  கூட மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. எளிதில் மட்கும் பொருட்களை நோக்கி பயணிப்பதுதான் சரியான தீர்வாக இருக்கும்.    

இயற்கையில் கழிவு என்றும் குப்பை என்றும் எதுவும் இல்லை. நாமும் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்படித்தான் வாழ்ந்து வந்தோம். மட்கும் குப்பைகளை மண்ணுக்கு உரமாகவும், மட்காத குப்பைகளை பழைய இரும்புக்கடையில் எடையாகவும் போட்டோம். இப்போது எல்லாம் மாறிவிட்டது. எதற்கும் நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். 

எப்படிப் பார்த்தாலும் குப்பைகள் குறித்து அரசுகளும், மக்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலகட்டமிது. அனைத்து வகையான வணிக நிறுவனங்களும் குப்பைகளை குறைக்க முன்வர வேண்டும். இந்நிறுவனங்கள் சரியாக திட்டமிட்டால் நிறைய குப்பைகளை குறைக்க முடியும். வரும் காலங்களில் குப்பைகளை கையாள தனியாக அமைச்சரகம் உருவாக்க வேண்டிய சூழல் உண்டாகும் வாய்ப்பே அதிகம். 

மொத்தத்தில் ஆக்கப்பூர்வமான கழிவு மேலாண்மை உடனடி தேவையாக இருக்கிறது. இப்போதும் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்தால் இயற்கை, நாம் வீசும் குப்பைகளை நம் மீதே வீசும்  !

மேலும் படிக்க:

நாமெல்லாம் குற்றவாளிகளே !

அக்னியையும் தாண்டி ...!

நளினி ஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் கதை !


" பாலியல் தொழிலை அங்கிகரியுங்கள் என்று கேட்கவில்லை. எங்களுக்கு மரியாதை கொடுங்கள் என்று தான் கேட்கிறோம் "

 - நளினி ஜமீலா

சக மனிதர்களிடமிருந்து மரியாதையை மட்டுமே நாம் அதிகம் எதிர்பார்க்கிறோம். "மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் " என்பதன்படியே இன்றும் வாழ்கிறோம். மரியாதை கொடுக்காத எந்த இடத்திற்கும் நாம் செல்வதில்லை. ஆனால் அதே சமயம் துப்புரவு பணியாளர்கள் , வீட்டு வேலை செய்பவர்கள் , பாலியல் தொழிலாளர்கள் , மாற்றுப்பாலினத்தவர்கள் , மூட்டை தூக்குபவர்கள் , கூலித் தொழிலாளர்கள் , சாலையோரத்தில் குடியிருப்பவர்கள் , பிச்சைக்காரர்கள் என்று நம்மிடையே வாழும் விளிம்புநிலை மனிதர்களுக்கு நாம் எந்த மரியாதையையும் கொடுப்பதில்லை. எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர்கள் செய்யும் வேலையை நாம் செய்யப்போவதில்லை. ஆனால் அவர்களை மலினமான பார்வையாலும் , ஏச்சுக்களாலும் கடந்து போகிறோம். நாம் மதிக்காவிட்டாலும் நம்மைச் சார்ந்தே வாழும் துயரமான வாழ்க்கை அவர்களுடையது.ஆனால் நம்மை விட சிறந்த வாழ்க்கை. 

நளினி ஜமீலா, இந்த நூலில் சொல்லப்பட்டவரை எந்த இடத்திலும் தான் ஒரு பாலியல் தொழிலாளி என்ற குற்ற உணர்வை அடையவேயில்லை. அவரது சூழ்நிலைகள் தான் எல்லாவற்றுக்கும் காரணமாக அமைகின்றன என்பதை மட்டுமே கூறியுள்ளார். தன்னுடைய மகளை 'இவள் நளினி மகள் ' என அழைக்கப்பட்டதையே பெருமையாக கருதுகிறார். யார் மீதும் எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. 

எல்லாவிதமான மனிதர்களும் ஒரே மாதிரி தான் பிறக்கிறார்கள். அவரவர் பிறக்கின்ற இடத்தை வைத்து தான் பேதங்கள் கற்பிக்கப்படுகின்றன. சூழ்நிலைகளே நமது எல்லோருடைய வாழ்க்கையையும் நிர்ணயிக்கின்றன.

இவர்கள் இல்லாமல் பூமியில் வாழ்வே இல்லை. ஆனால் இவர்களுக்கு உண்டான மரியாதைக்காக போராடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பெண்களும் , விவசாயிகளும் !

மதிப்போம் மதிப்படைவோம் !


மேலும் படிக்க:

தெய்வம் என்பதோர்... - தொ.பரமசிவன் !

BEAUTY AND THE DOGS (2017)

Saturday, July 27, 2024

சாதி ஒழிப்பிற்கான சாத்தியமான வழிகள் - ஆ.சிவசுப்பிரமணியன் !


கேள்வி - சாதி ஒழிப்பிற்கான சாத்தியமான வழிகள் என எவற்றைச் சொல்வீர்கள் ? 

பண்பாட்டு ஆய்வாளர், ஆ.சிவசுப்பிரமணியன்  : " அடிப்படையில் இதற்கான முன்னெடுப்புகள் அரசிடமிருந்துதான் தொடங்க வேண்டும். ஏனென்றால், சமூகப் பாதுகாப்பு என்ற ஒன்று இன்றைக்குச் சமூகத்தில் கேள்விக்குரியதாக இருக்கிறது. அது, சாதிய அடிப்படையில்தான் நிகழ்கிறது. உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், எல்லோருமாகச் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் அல்லது அரசு பார்த்து உதவி செய்ய வேண்டும். இவை இரண்டும் இல்லாத நிலையில், நீங்கள் உங்கள் சமூகத்து ஆள்களிடம்தான் அல்லது அமைப்பிடம்தான் போய் நிற்க வேண்டும். எல்லோருக்கும் பாதுகாப்புத் தர வேண்டிய அரசாங்கம், ஓட்டு அரசியலில் சாதியம் சார்ந்ததாக இன்றைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. காவல்நிலையத்தில் உயர்சாதி அதிகாரி ஒருவரிடம் , ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் , புகார் அளித்து சரியான அணுகுமுறையைப் பெற முடியுமா ? அதே நேரத்தில், அந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் ஓர் அமைப்போடு அங்கு சென்றால், சரியான விதத்தில் அணுகப்படுவார். இதுதான் யதார்த்தம். இங்கே அரசு அமைப்பே சாதியமாக உள்ளது. அடுத்ததாகக் கல்வி நிறுவனங்கள். அவை, நியாயமான முறையில் இன்னும் ஜனநாயகப்படுத்தப்படவில்லை. அனைத்து சமூகத்தவருக்கும் அவரவர் திறமைக்கு உரிய வகையில் மேலே படிக்க வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.குறிப்பாக, உயர்கல்வியில் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. ஆகவே, அவர்கள் குறிப்பிடும்படியான வேலைவாய்ப்பும் பெற வழியின்றி போய்விடுகிறது". 

கேள்வி - அப்படியானால், அம்பேத்கர் முன்மொழியும் அகமணமுறை ஒழிப்பில் உங்களுக்கு...

பண்பாட்டு ஆய்வாளர், ஆ.சிவசுப்பிரமணியன் : " நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அதற்கு ஆதாரமே இவைதான்.அகமண முறை ஒழிப்பிற்கான சூழல் எப்படி உருவாகும் ? முறையான கல்வி பெற்று , வேலைவாய்ப்பு பெற்று, ஒன்றாகப் பணியாற்றுகிற சூழலில் தானே காதல் மலர மூடியும். இணைந்து பயில்வது, இணைந்து பணியாற்றுவது , இணைந்து உண்பது எனச் சூழல் உருவானால், தானாக சாதிமறுப்பு திருமணங்கள் நடக்கும். அதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும்". 

ஜூலை 2018, விகடன் தடம் மாதயிதழில் வெளிவந்த பண்பாட்டு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் நேர்காணலிலிருந்து...

அதிகமாக சாதி புழங்கும் இடமாக , சாதியவாதிகளுக்கு பக்கபலமாக இருப்பவை காவல் நிலையங்கள் தான். சாதி சார்ந்து ஒவ்வொரு குற்றத்திலும் தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கப்பட்ட பிறகே குற்றமே பதிவு செய்யப்படுகிறது. அப்படியே பதிவு செய்தாலும் முதலில் மேம்போக்காகவே பதிவு செய்யப்படுகிறது. அதற்கும் அழுத்தம் கொடுக்கப்பட்ட பிறகே சரியான பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்கு பதியப்படுகிறது. காவல் துறையிலேயே சாதிய ஒடுக்குமுறைகள் நிறைய இருப்பதாக சொல்லப்படுகிறது. சாதிய பாகுபாடுகளை வளர்ப்பதில் காவல் நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காவல் நிலையங்கள் மக்களை சமத்துவத்துடன் நடத்த ஆரம்பித்தாலே போதும் நிறைய நல்ல மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும்.

மேலும் படிக்க :



மனிதம் பரவட்டும் !


மனிதர்களின் மனங்களில் மனிதம் வளர்வதற்கு பதிலாக வன்மமே அதிகம் வளர்ந்து வருகிறது. ஏதேனும் ஒரு செய்தித்தாளை எடுத்து புரட்டிப் பாருங்கள், உண்மை புரியும்.மனிதர்கள் எப்படி இவ்வளவு வன்மம் நிறைந்தவர்களாக மாறிப் போனார்கள். அவர்களிடம் வன்மம் உருவானதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்தால் அவை மிகமிகச் சிறியவையாகவே இருக்கின்றன, இருந்தும் அவை வன்மத்தை உருவாக்கி அழிவைத் தந்திருக்கின்றன. 

குற்றங்கள் எல்லா காலங்களிலும் இருப்பவை தான். ஆனால் தற்போது நடக்கும் மனிதர்களுக்கு இடையிலான  குற்றங்களில் வன்மமே பெரும் பங்கு வகிக்கிறது. எல்லாவிதமான குற்றங்களாலும் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள் தான். 

மனித மனங்கள் நாளுக்குநாள் சுருங்கிக் கொண்டேதான் போகின்றன. மனங்கள் விசாலமடையாமல் எல்லோருக்கும் நன்மை நடக்காது. " மனிதர்களின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு, மனிதர்களை வெறுக்காதே " -ஷேக்ஸ்பியர். இந்த வரிகளை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும். 

இன்னொரு மனிதர் மீது வன்மம் கொள்வதற்கு முன்பாக இந்த வரிகளை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். 

வன்மம் வீழட்டும்

மனிதம் பரவட்டும் ❤️

மேலும் படிக்க :

ஆதிக்க உணர்வு அழிந்து போகட்டும்!

ஆதிக்கமும் அதிகாரமும் !


Beauty and the Dogs (2017)


தமிழில் வெளிவந்த 'அனல் மேலே பனித்துளி ' திரைப்படம் இந்த Beauty and the Dogs -ஐ மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. அனல் மேலே பனித்துளி-யே மிகவும் சிறப்பாக படமாக்கப்பட்டிருந்தது. 'Beauty and the Dogs' இன்னும் பல மடங்கு பதைபதைப்பை உருவாக்குகிறது. 

போலீஸ் எல்லா ஊர்களிலும் 'போலீஸ்' தான். எல்லா நாடுகளிலும் அதிகாரத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் குற்றங்களை மூடி மறைக்கவே அரசுகள் விரும்புகின்றன. அதுவே குற்றத்தை நிகழ்த்தியது காவல்துறையாக இருக்கும் போது நீதிக்காக பல மடங்கு போராட வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்டது பெண்ணாக இருக்கும் போது அப்பெண்ணையே நிலைகுலைய செய்துவிடுகிறது. காவல்துறை தனது குற்றத்தை மறைக்க எந்த எல்லை வரை செல்லும் என்பதை சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளனர். அதே போல பெண்ணின் மனவலிமைக்கு முன் எந்த மிரட்டலும் ஒன்றும் செய்யாது என்பதையும் உணர வைக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருக்கும் Mariam Al Ferjani , ஆரம்பத்தில் குதூகலத்துடன் அப்பாவிற்கு தெரியாமல் கேளிக்கை விருந்தில் கலந்து கொள்வது, பாதிக்கப்பட்ட பிறகு அடுத்து என்ன செய்வது என்பதை அறியாமல் திகைத்து நிற்பது, ஆண் நண்பரின் தொடர்ச்சியான வலியுறுத்தல்களுக்குப் பிறகு காவல் துறையை நாடுவது, காவல்துறையின் பல்வேறு விதமான மிரட்டல்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்து நீதிக்காக போராடுவது என உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தத் திரைப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 

இந்தத் திரைப்படத்தின் தொடக்க Party காட்சியில் ஒலிக்கும் பின்னணி இசை மிகவும் அட்டகாசமாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது.

மேலும் படிக்க :

அனல் மேலே பனித்துளி !

JANA GANA MANA - பாசிச எதிர்ப்பு சினிமா !

Sunday, July 23, 2023

வடகிழக்கு மாநிலங்களை காப்போம் !

 


இன்று வரை இயற்கை வளங்கள் சிதைவடையாமல் இருக்கும் வடகிழக்கு மாநிலங்களை பிரிவினைவாத பாஜகவிடமிருந்து காப்பாற்ற வேண்டும். பாஜக, கால் பதித்திருக்கும் ஒவ்வொரு இடத்திலும் மக்களிடையே பிரிவினைவாதத்தையும் வெறுப்பையுமே வளர்த்திருக்கிறது. மணிப்பூர் வன்முறைக்கும் இதுவே காரணம். 


பாஜக இருக்கும் இடத்தில் முதலாளிகள் மட்டுமே வளர்ந்திருக்கிறார்கள், மக்களின் வாழ்க்கைத்தரம் எல்லா இடங்களிலும் குறைந்திருக்கிறது. ஒட்டு மொத்த இந்திய மக்களின் வளர்ச்சி குறித்து ஒருபோதும் பாஜக  சிந்தித்ததில்லை.  பார்ப்பனியம், தனது ஆதாயத்திற்காக எந்த எல்லைக்கும் போகும், எதையும் செய்யத் தயங்காது. பாஜகவின் நிலைப்பாடும் இதுதான். வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் பிரிவினைவாதத்தை வளர்த்து சூழ்ச்சி செய்து ஆட்சியைக் கைபற்றியிருக்கிறது. 


பாஜக எந்த இடத்தில் நுழைந்தாலும் அங்கிருக்கும் சிறுபான்மையினர்தான் அவர்களின் இலக்கு. அந்தச் சிறுபான்மையினர் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராகவோ, குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவராகவோ , குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம். அங்கிருக்கும் பெரும்பான்மையினர் மத்தியில் அந்தச் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து அவதூறுகளையும், வெறுப்புகளையும் வளர்த்து வன்முறையைத் தூண்டி தனக்கு வேண்டியதை சாதித்து கொள்வதுதான் பாஜகவின் செயல்திட்டம். 2002ல் இனப்படுகொலை நடந்த பிறகு பாஜக குஜராத்திலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஏனெனில் பாஜக, பெரும்பான்மையினரை மட்டுமே ஆதரிக்கும். பெரும்பான்மையினரின் செயல்களை நியாயப்படுத்தும். பெரும்பான்மையினரில் இருக்கும் குற்றவாளிகளுக்கும் பதவிகள் கொடுத்து அழகு பார்க்கும். அடுத்து மணிப்பூர் என்ன ஆகுமோ ? தெரியவில்லை.


வடகிழக்கு மாநிலங்களில் இன்று வரை பழங்குடியின மக்களால் காப்பாற்றப்பட்டு வந்து இயற்கை வளங்களின் நிலை இனி என்ன ஆகுமோ என்பதே பெரும் கவலையாக இருக்கிறது. இதைப் பற்றி பாஜக 1% கூட சிந்திக்கப் போவதில்லை. அனைத்து இயற்கை வளங்களையும் அள்ளி கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் அடிமாட்டு விலைக்கு கொடுத்துவிட்டு வேடிக்கை மட்டுமே பார்க்கும். 


தாங்கள் இந்திய அளவில் சிறுபான்மையினமாக இருப்பதால் உருவான தாழ்வு மனப்பான்மையை மறைக்க இந்து ,இந்துத்துவா என்று சொல்லி பெரும்பான்மையினர் முதுகில் ஏறி சவாரி செய்கிறார்கள், பார்ப்பனர்கள். இதை  உணராதவரையில் இந்திய நாட்டிற்கு, இந்திய மக்களுக்கு விடிவுகாலமே இல்லை. நாம் சமநிலைப்படுத்தவில்லை என்றால் இயற்கை அனைத்தையும் சமநிலைப்படுத்தும். 


பார்ப்பனியம் - RSS - பாஜக ஆதிக்கம் செலுத்தும் வரை இந்தியா எல்லோருக்குமானதாக இருக்காது. இந்தியா என்ன உங்கப்பன் வீட்டு சொத்தா ? இந்தியா, இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தம். பிரிவினைவாத, மதவாத, இனவாத, சாதிவாத, கார்ப்பரேட்வாத , சமத்துவத்திற்கு எதிரான சக்திகளை வீழ்த்தி எல்லோருக்குமான இந்தியாவை கட்டமைப்போம்.


பார்ப்பனியம் வீழும் இடத்திலிருந்தே புதிய இந்தியா தோன்ற முடியும் ! 


மேலும் படிக்க:


டெல்லி எரிகிறது !


Saturday, July 15, 2023

தக்காளியும் விவசாயியும் பின்னே கார்ப்பரேட்களும் !


தக்காளியும் வெங்காயமும் வருடத்திற்கு ஒரு முறையோ இரு முறையோ தான் உற்பத்தி குறையும் போது கிலோ 100 ரூபாயைத் தாண்டுகிறது. உற்பத்தி அதிகமாகும் போது தானாகவே குறைந்துவிடுகிறது.சில சமயங்களில் விலை கிடைக்காமல் கிழே கொட்டும் நிலையும் ஏற்படுகிறது. அப்போதெல்லாம் அவர்களுக்காக யாரும் கவலைப்படுவதில்லை. இப்போதைய விலையேற்றமும் 1000-ல் ஒரு விவசாயிக்கு பலன் கொடுக்கலாம்.


இந்திய நாட்டில் விவசாயியாக வாழ்வது பெரும் சவால். தமிழ்நாட்டைப் பொருத்தவரை பால் வருமானம் என்ற ஒன்று இருப்பதால்தான் விவசாயிகள் நிலத்தையே உழுகின்றனர். இல்லையென்றால் பாதி நிலங்கள் தரிசாக மாறியிருக்கும். தற்போது மாட்டுத் தீவனங்களின் விலையேற்றத்தால் பால் வருமானமும் குறைய ஆரம்பித்துவிட்டது. இலவச மின்சாரம் மற்றும் மானியங்கள் கொடுக்கப்பட்டாலும் விவசாயிகளின் வாழ்வு இன்னமும் மேம்படவில்லை. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வது தீர்வாக சொன்னாலும் இது எல்லோருக்கும் சாத்தியமானதாக இல்லை.


இன்றைய தொடு திரை வாழ்விலும் " உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது " என்பது மட்டும் மாறவேயில்லை. எல்லா உழைப்பிற்கும் விலை இருக்கிறது. விவசாயிகளின் உழைப்பிற்கும் விலை இருக்கிறது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் விவசாயிகளின் உழைப்பிற்கு விலையே கிடைப்பதில்லை. ஏதோ இந்த விலையேற்றம் தற்போது தக்காளி, சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு கொஞ்சம் நம்பிக்கையை அளிக்கலாம் அவ்வளவு தான்.


தற்போதைய காலநிலை மாற்றத்தால் முதல் பாதிப்பைச் சந்திப்பவர்கள் விவசாயிகள்தான். விளைச்சலின் போது பெய்ய வேண்டிய மழை பெய்வதில்லை. அறுவடையின் போது பெய்யும் மழை அனைத்தையும் அழித்துவிட்டு போய்விடுகிறது. சமீப ஆண்டுகளில் அனைத்து விதமான விவசாய பயிர்களுக்கும் மிக அதிக அளவிலான ரசாயன உரங்களும் , பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.ஒரு புறம் இது ஒட்டு மொத்த சமூகத்தின் உடல்நிலையை கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கிறது. மறுபுறம் இதற்கான செலவுகளும் விவசாயிகளைப் பாதிக்கின்றன. இயற்கை விவசாயம் குறித்தான புரிதல்களும் பயன்பாடுகளும் அதிகரிக்க வேண்டும். 


விவசாயிகளும் பணப்பயிர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் உணவுப்பயர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை தாங்களே விளைவித்துக்கொண்டு மீதியை விற்க வேண்டும். அப்படி செய்தால் விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும். சந்தையில் தேவை குறைவதால் மக்களுக்கும் பலன் கிடைக்கும். இதைப் படிப்படியாகவாவது தொடங்க வேண்டும்.   


'100 நாள் வேலையால் விவசாயம் பாதிக்கிறது' என்பது ஏற்புடையதல்ல. 100நாள் வேலை வந்த பிறகுதான் விவசாய கூலிகளின் தினசரி கூலி உயர்ந்திருக்கிறது. " அப்போதெல்லாம் சோத்த மட்டும் போட்டோம் நாளெல்லாம் பாடுபட்டாங்க. இப்ப சம்பளம் எல்லாம் கேட்கிறாங்க " என்ற‌ நிலபிரபுத்துவ மனநிலை தான் 100 நாள் வேலையை குறை கூறுவதற்கு காரணம்.  


'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்' என்ற 100 நாள் வேலைத்திட்டம் நிச்சயமாக முந்தைய காங்கிரஸ் அரசின் சாதனைதான். இன்றும் கடைக்கோடி மக்களையும் நேரடியாக சென்று சேரும் ஒரே மத்திய அரசின் திட்டம் இது மட்டும்தான். எல்லோராலும் கைவிடப்பட்டவர்களை , முதியவர்களை இந்த திட்டம் தான் சோறு போட்டு காப்பாற்றுகிறது. மற்றவர்களுக்கு இது உபரி வருமானம். இந்த பணம் முழுவதும் உள்ளூர் சந்தையிலேயே செலவிடப்படுவதால் உள்ளூர் பொருளாதாரத்தைக் காப்பாற்றும் திட்டமாகவும் இதனைப் பார்க்கலாம். இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.


100நாள் வேலையால் விவசாயிகள் பாதிக்காமல் இருக்க உள்ளாட்சி அமைப்புகள் களத்தில் இறங்க வேண்டும். வெகு சில இடங்களில் 100நாள் வேலைத்திட்டம் விவசாயிகளுடன் இணைந்து செயல்பாட்டில் உள்ளது. விவசாயிகள் உள்ளாட்சி அமைப்பில் தங்களுக்கு தேவையான ஆட்களை பதிவு செய்தால் 100 நாள் வேலை செய்பவர்கள் அங்கே அனுப்பப்படுவார்கள். இது தமிழ்நாடு முழுவதும் செயல்பாட்டிற்கு வந்தால் '100நாள் வேலையால் விவசாயம் பாதிக்கிறது ' என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.


விவசாய விளைபொருட்களின் ( காய்களிகள், பழங்கள், அரிசி, பருப்பு, எண்ணெய்... ) உற்பத்தி குறையும் போது விலை கூடும். உற்பத்தி அதிகமாகும் போது விலை தானாகவே குறைந்துவிடும். ஆனால் ஊடகங்களில் எப்போதும் இவைதான் பெரிதுபடுத்தப்படுகின்றன. இதே சூழலில் ஏறினால் இறங்காத பொருட்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள்தான். இவை பற்றி யாரும் வாய் திறப்பதில்லை. இரண்டு ஆண்டுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய விவசாய பொருட்களின் விலைகளுக்கும், தற்போதைய விவசாய விளைபொருட்களின் விலைகளுக்கும் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பெரிய வித்தியாசம் இருக்காது. அதே போல இரண்டு ஆண்டுகளில் ஏற்றம் மட்டுமே கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவன தயாரிப்புகளைக் கவனியுங்கள். எதற்காக நாம் அதிகம் செலவு செய்கிறோம் என்பது தெளிவாகும்.


சோப்புகள், பற்பசை, டீத்தூள், நேப்கீன்கள், மருந்து, மாத்திரைகள், பெட்ரோல், டீசல், எரிவாயு, கார், பைக், கட்டுமான பொருட்கள் என்று பலவும் அதிக விலையேற்றத்தை சந்தித்து இருக்கின்றன. இவற்றை எல்லாம் சத்தமே இல்லாமல் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். காரணம் இவை தொடர்ந்து விளம்பரங்கள் செய்யப்படுதன் மூலமாக நமது மூளையில் ஏற்றப்பட்டுள்ளன. அதனால் இந்தப் பொருட்களின் விளையேற்றத்தை நாம் கண்டுகொள்வதில்லை. நமது வாழவின் ஒவ்வொரு நிமிடமும் கார்ப்பரேட் நிறுவனங்களால் பணமாக மாற்றப்படுகிறது. 


விவசாயமும், விவசாய விலை பொருட்களின் விற்பனையும் எளிய மக்களின் கைகளில் இருக்கும் வரை மட்டுமே உற்பத்தி சார்ந்த ஏற்ற இறக்கங்கள் பொருட்கள் விலையில் எதிரொலிக்கும். என்று இவை அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கைகளுக்குப் போகிறதோ அன்றிலிருந்து எதற்கும் ஏற்றம் மட்டுமே இருக்கும். இறக்கம் என்பதே இருக்காது. உற்பத்தியே அதிகரித்தாலும் விற்பனை விலை குறையாது. இந்த நிலை உருவாகாமல் தடுக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் தள்ளிப் போடலாம். எல்லாம் நம் கைகளில் தான்.


மேலும் படிக்க :

உணவிற்கான உள்நாட்டுப் போர் ?

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms