சமீபத்தில் திண்டுக்கலிலிருந்து சென்னைக்கு வைகை அதிவேக விரைவு ரயிலில் பயணம் செய்தேன். அற்புதமான பயணம். இயற்கையின் பல்வேறு பரிமாணங்களை ரசித்து மகிழ்ந்தேன். நல்ல குளிர்ந்த காற்று, வயல்வெளிகளின் பச்சை வாசம்.வானெங்கும் மேக கூட்டங்கள். மலைகளிலிருந்து சிறிய வகை மேகங்கள் தோன்றிக் கொண்டே இருந்தன. பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல இருந்தது, நானும் பார்த்துக்கொண்டேதான் இருந்தேன் .
ஒவ்வொருமுறையும் திண்டுக்கலுக்கும் திருச்சிக்கும் இடையில் பயணிக்கும் போது நான் கவனிக்கும் ஒ ரு விஷயம் மயில்கள். அன்று மேகமூட்டமாக இருந்ததால் மயில் தோகை விரிப்பதை எப்படியும் பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் தொடர்ந்து வயல்வெளிகளைப் பார்த்துக்கொண்டே வந்தேன். முதலில் ஒரு சில ஆண் மயில்கள் தென்பட்டன. ஆனால், அவை தோகை விரிக்கவில்லை. பார்த்துக்கொண்டே வரும் போது, ஒரு ஆண் மயில் தோகை விரித்த காட்சியைக் கண்டேன். காரணம் என்னவென்று பார்த்தால், பக்கத்தில் ஒரு பெண் மயில் இருந்தது. முதன் முறையாக இயகையான சூழ்நிலையில் ஒரு ஆண் மயில் தோகை விரிப்பதை அன்றுதான் கண்டேன்.
வயல்வெளிகளில் தேங்கி இருந்த மழை நீரில் தெரிந்த தென்னை மரங்களின் நிழலும்,வானத்து மேகங்களின் நிழலும் அவ்வளவு அழகு. காடுகளில் பறந்து கொண்டிருந்த பல்வேறு வகையான பறவைகள் அந்த ரம்மியமான சூழலுக்கு மேலும் அழகு சேர்த்தன. சின்ன சின்ன பட்டாம்பூச்சிகள் , மைனாக்கள் , காடைகள் , வெண்சங்கு போன்ற நிறமுடைய கொக்குகள் தங்களின் வசந்த கால வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தன. ஒரு சில கழுகுகளையும் காணமுடிந்தது. வெகு நீண்ட காலத்துக்கு பிறகு கழுகுகளைக் கண்டேன். கழுகு என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது, தாய்க் கோழியும் அதன் குஞ்சுகளும் தான். கழுகு கோழிக் குஞ்சுகளை தூக்க வரும் போது, சாதுவான பறவையான கோழிக்கும் வீரம் வந்து கழுகைத் துரத்தும். பக்கத்துக்கு வீட்டுக்காரர்களிடம் சண்டை வருவதால், இன்று
கிராமங்களில் கோழி வளர்க்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. அதனால் கழுகையும் பார்க்க முடியவில்லை.
பயணத்தின் போது நேர்த்தியான கரும்பு தோட்டங்கள் தென்பட்டன. தைப்பொங்கலின் போது நாம் கடிக்கும் கருப்பு கரும்பை தோட்டத்துடன் பார்ப்பது இதுதான் முதல் முறை. இந்த தோட்டங்கள், இப்போதே தைப்பொங்கலை நினைவு படுத்திவிட்டன. திருச்சி வந்தவுடன், தினத்தந்தி படிக்க ஆரம்பித்தேன்.தற்போது நடக்கும் மத்திய அரசு, ஒட்டுமொத்த இந்தியாவை விலை பேசி அமெரிக்க முதலாளிக்கு வித்துவிடும் போலிருக்கிறது . இவ்வளவு மனித சக்தியை வைத்துக்கொண்டு அமெரிக்காவிடம் அடி பணிவது நன்றாகவா இருக்கிறது.
அடுத்து நாஞ்சில் நாடனின் " தீதும் நன்றும் " வாசிக்க ஆரம்பித்தேன். அதில் இடம் பெற்ற விளம்பரம் பற்றிய கட்டுரை,பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை அடிக்கும் யுக்தியை நமக்கு சொன்னது. இன்று , இந்தியா , வாங்கும் சக்தி அதிகம் கொண்ட மிகப்பெரிய சந்தையாக மாறிவிட்டது. நாம் உணவுக்காக செலவிடும் தொகையைவிட மற்ற ஆடம்பர விசயங்களுக்குத்தான் அதிகம் செலவளிக்கிறோம். செலவளிக்கிறோம் என்பதைவிட செலவளிக்க தூண்டப்படுகிறோம் . இன்று தொலைக்காட்சி நம்மை விளம்பரங்களின் அடிமையாக மாற்றி விட்டது. நமக்கு தேவை இருக்கோ, இல்லையோ எல்லாப்பொருட்களையும் வாங்கும்படி தூண்டப்படுகிறோம். இன்றைய சமுதாயத்தின் மிகப்பெரிய எதிரி , தொ(ல்)லைக்காட்சி தான். சுயசிந்தனை என்பதே இல்லாமல் போய்விட்டது . முடிந்தவரை தொ(ல்)லைக்காட்சி பார்ப்பதை தவிருங்கள் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
செம்பரப்பாக்கம் ஏரியை பார்க்கும் போது, இளையராஜா பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. "சிறுவானி தண்ணி குடிச்சு நான் பவானியில்..." இந்தப் பாடலில் ஒரு வரி வரும்" யாரா இருந்தாலும் செம்பரப்பாக்கம் தண்ணி குடிச்சு சென்னையில் வளர வேண்டும் ". அதனால்தானோ என்னவோ எல்லோரும் சென்னையை தேடி வருகின்றனர்.தாம்பரத்தை நெருங்கும்போது பறவையாய் இருந்த நான் கரப்பான்பூச்சியாய் மாற ஆரம்பித்தேன். கிராமத்து வாழ்கையில் பறவையாய் சுற்றிதிரிந்தேன்.சென்னையில இடிபாடுகளுக்கிடையில் கரப்பான்பூச்சியாய் வாழப்போகிறேன். இவ்வாறாக எனது ஒரு ரயில் வண்டிப் பயணம் நிறைவு பெற்றது. அடுத்த ரயில் வண்டிப் பயணத்துக்காக காத்துக்
கொண்டு இருக்கின்றேன்....!
எல்லோருக்கும் பயணங்கள் தொடரட்டும் .....!
வாழ்க்கை இனிக்கட்டும் .....!
மேலும் படிக்க :
1 comments:
Hai super story, rail-myil vandi payanam.
Post a Comment