" ஆளும் வர்க்கத்தின் பலம் அரசு இயந்திரங்களான நிர்வாகம், சட்டம், அதிகாரம் முதலிய அரசு இயந்திரங்களை இயக்குவதில் மட்டும் அல்ல பண்பாட்டுத் தளத்திலும் பத்திரமாக இருக்கிறது. எனவே ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் பண்பாட்டுத் தளத்திலும் போராட வேண்டியிருக்கிறது" - கிராம்சி.
பண்பாட்டு தளத்தில் மாற்றம் நிகழாமல் சமூகத்தில் மாற்றம் நிகழாது. ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான சமூக மாற்றத்தையும் தடுக்கும் காரணிகளில் ஒன்றாக பண்பாட்டு கூறுகள் தொடர்ந்து இருந்து வருகிறது. பண்பாட்டு கூறுகளுக்கும் ஆணாதிக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. அதனாலேயே பண்பாட்டு கூறுகளில் நிகழும் மாற்றங்களைக் கண்டு ஆண்கள் அஞ்சுகின்றனர். பண்பாட்டு கூறுகளிலும் காலத்திற்கு ஏற்ற மாற்றம் தேவை என வலுவாகவே பேசுகிறது 'அயலி'. பண்பாட்டில் கலந்திருக்கும் மூட நம்பிக்கைகளை பகுத்தறிவு கொண்டு களைய முன் வர வேண்டும். பண்பாடு என்பதும் மாறிக்கொண்டே இருப்பதுதான். மாற்றத்தை ஏற்காத பண்பாடு அழிந்து போய்விடும். பண்பாட்டிற்கும் அரசியலுக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது.
" 'கலை கலைக்காகவே 'ன்னு சில பேர் கரடி விடுவானுங்க .அதை நீங்க நம்பாதீங்க .அப்படியிருந்தா அது எப்போவோ செத்துப் போயிருக்கும் . கலை வாழ்க்கைக்காகத்தான்; வாழ்க்கையும் கலையும் சேரும் போதுதான் அதுக்கு உயிரே வருது..."- எம்.ஆர்.ராதா.
கலை எந்த வடிவத்தில் இருந்தாலும் அது எப்போதும் மக்களுக்கானது. 'அயலி' இந்த மண்ணை பற்றியும் , இந்த மண்ணின் மக்களைப் பற்றியும் பேசுகிறது. தமிழ் நிலம் சார்ந்த குறியீடுகள் இத்தொடர் முழுவதும் நிரம்பியிருக்கின்றன. தமிழ்நாட்டின் பண்பாட்டு ஆய்வாளர், தொ.பரமசிவன் எழுத்தை வாசித்தவர்களுக்கு இந்தத் தொடர் இன்னும் நெருக்கமானதாக இருக்கக்கூடும். நாட்டார் தெய்வங்கள், பிடிமண் கோயில், கொலை செய்யப்பட்டவரையே தெய்வமாக வழிபடுவது, சடங்குகள், பழக்கவழக்கங்கள் என தொ.ப.வின் தாக்கம் நிறைய இருந்தது.
பரபரப்பில்லாத , திடீர் திருப்பங்கள் இல்லாத, வன்முறை இல்லாத அடுத்தடுத்து இரண்டு தொடர்கள் பார்க்கப்பட்டுவிட்டது. முதலில் பார்த்தது ' Extraordinary Attorney Woo'. இப்போது 'அயலி'. மிகவும் சிறப்பான உருவாக்கம். கதையை தேர்ந்தெடுப்பதில் , திரைக்கதை அமைப்பதில், கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில், ஒளிப்பதிவில், இசையில், கலை அமைப்பில் என தொழில்நுட்ப ரீதியாக சமீப கால மாற்று சினிமா படைப்புகள் நிறைவை அளிக்கின்றன. இத்தொடரும் அப்படியே.
தமிழ்நாட்டில் நாம் பேசுகின்ற அரசியலுக்கும் 80களுக்கு பிறகான தமிழ் சினிமாவிற்கும் தொடர்பே இல்லாமல் இருந்து வந்தது. இதுவும் சமீப ஆண்டுகளில் தான் மாறியிருக்கிறது. அயலியும் நாம் வெளியே பேசுகின்ற அரசியலை திரையில் பேசியிருக்கிறது. முதலில் இப்படியொரு தரமான படைப்பைக் கொடுத்த இயக்குநர், முத்துக்குமார் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்.
அயலியின் பேசுபொருள் நமது வீட்டிலும் , பொதுவெளியிலும் மாறியே ஆக வேண்டியது. புனிதம் என்றும் தீட்டு என்றும் இந்த பூமியில் எதுவும் இல்லை. இதை காரணம் காட்டி பாகுபாடு காண்பிப்பது முடிவிற்கு வர வேண்டும். கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பாக பெண் கல்வியின் முக்கியத்துவத்தை பேசுகிறது, அயலி.
மிகவும் கச்சிதமான கதாப்பாத்திர தேர்வுகள் அயலியின் பெரும் பலம். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் ஏற்று நடித்தவர்கள் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்ச்செல்வியாக நடித்திருக்கும் அபி திரை முழுவதையும் ஆக்கிரமிக்கிறார். சின்ன சின்ன உணர்வுகளைக்கூட சிறப்பாக வெளிப்படுத்தி கவனத்தை இருக்கிறார். மொத்தத்தில் நல்ல தேர்வு. இவரின் அம்மா குருவம்மாவாக அனுமோளும் , அப்பா தவசியாக மதனும் நடித்திருக்கிறார்கள். முதல் 5 பகுதிகள் வரை அம்மாவிற்கும் மகளுக்கும் உள்ள நெருக்கம் விவரிக்கப்படுகிறது. அபிக்கும் அனுமோளுக்கும் இடையே நடிப்பில் நீயா நானா போட்டியே நடக்கிறது.
தமிழ்ச்செல்வியின் தோழி மைதிலியாக லவ்லினும், அம்மாவாக காயத்ரி கிருஷ்ணனும் மற்றொரு தோழி கயல்விழியாக தாராவும் நடித்திருக்கிறார்கள். சேகராக நடித்திருக்கும் ஜென்சனும் கவனத்தை ஈர்க்கிறார். மற்ற கதாப்பாத்திரங்களும் சிறப்பாகவே உள்ளன. அபியின் குரல், தமிழும் மலையாளமும் கலந்த அனுமோளின் குரல் , மதனின் குரல், காயத்ரி கிருஷ்ணனின் குரல், ஜென்சனின் குரல் என கதாப்பாத்திரங்களின் விதவிதமான குரல்களும் வசீகரிக்கின்றன.
நறுக்கு தெரித்தார் போல அமைந்த வசனங்கள் பட்டையைக் கிளப்புகின்றன. உலகத் திரைப்படங்களில், மற்ற இந்திய மொழி திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள் என கொண்டாடப்படும் திரைப்படங்களில் வசனங்கள் வலிமை மிக்கதாக இருக்கும். தமிழின் சிறந்த திரைப்படங்களில் வசனங்கள் அந்த அளவிற்கு வலிமை இல்லாமல் இருந்தது. அதையும் இந்த அயலி உடைத்திருக்கிறது. வசனங்களுக்காக மட்டுமே நாம் அயலியைக் கொண்டாடலாம். பல இடங்களில் வசனங்கள் சாட்டையடி கொடுக்கின்றன.பகுத்தறிவின் பாதையில் வசனம் எழுதிய சச்சின் அவர்களுக்கு வாழ்த்துகள்.
ரேவாவின் இசையும் ராம்ஜியின் ஒளிப்பதிவும் படைப்பை இன்னும் நெருக்கமாக அணுக உதவுகின்றன. சின்னச்சின்ன இடங்களிலும் இசை சேர்க்கப்பட்டிருப்பது அழகு. உதாரணமாக தமிழ்ச்செல்வி தனது அப்பாவிடம் போலியாக அழுவது போல பேசி பரீட்சை எழுத சம்மதம் வாங்கும் காட்சியில் சேரக்கப்பட்டிருக்கும் இசை. அதே போல சில இடங்களில் இசை சேர்க்காமல் விடப்பட்டிருப்பதும் அழகுதான்.
காதல் இல்லாமல் ஒரு படைப்பைக் கொடுத்தற்கே முதலில் இயக்குநருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு 'காதல்' என்ற ஒன்று தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கிறது. ஏதாவது ஒரு காதல் படத்தில் இருந்தே ஆக வேண்டும் என பெரும்பாலான இயக்குநர்கள் நினைக்கிறார்கள். சரிங்க அப்படித்தான் இவ்வளவு காதல்களைச் சொல்லி காதலை ஜனநாயகப்படுத்தியிருக்காங்களா ? என்றால் அதுவும் இல்லை. தொடர்ந்து காதலை புனிதப்படுத்தியே வைத்திருக்கிறார்கள். பெண்களை Stalking செய்வதை காதல் என நம்ப வைத்திருக்கிறார்கள். காதல் என்பது இயல்பானது என்றோ , யாருக்கும் யாருக்கும் இடையிலும் நிகழலாம் என்றோ, காதலித்தால் திருமணம் செய்துதான் ஆக வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை என்றோ, வாழ்வில் எத்தனை காதல்கள் வேண்டுமானலும் வரலாம் என்றோ தமிழ் சினிமா பேசவேயில்லை.
அயலியின் இறுதிகட்ட பகுதிகள் தமிழ்ச்செல்வி மூலமாக நாயக பிம்பத்தை உருவாக்கினாலும் பெண்களின் எதிர்குரலாகவே பதிவாகிறது. அத்தனை பண்பாடுகளும், அத்தனை கட்டுப்பாடுகளும், அத்தனை சடங்குகளும், அத்தனை பழக்கழக்கங்களும், அத்தனை கௌரவங்களும் பெண்களைக் கட்டுப்படுத்தவே பயன்படுத்தப்படுவதை அயலி கேள்விக்கு உட்படுத்துகிறது.
கொரோனா காலத்தில் தமிழகத்தில் மிக அதிக அளவில் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இந்தச் சூழலில் குழந்தை திருமணத்தால் உருவாகும் பாதிப்புகளை வெளிப்படுத்தி குழந்தை திருமணத்திற்கு எதிரான படைப்பாக, பெண் கல்வியை ஆதரிக்கும் படைப்பாக, காலத்திற்கு பொருந்தாத பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் படைப்பாக அயலி மிளிர்கிறது.
பெண் உடலில் இயற்கையாக நிகழும், மனித குழந்தை பிறப்பதற்கு துணைபுரியக்கூடிய 'மாதவிடாய்' மூலம் இன்றும் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் , கிராமம், நகரம் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. குறிப்பாக வழிபாடு தொடர்பான விசயங்களில் இன்றும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பெண்களும் தாங்களாகவே கட்டுப்பாடுகள் விதித்துக்கொள்கின்றனர். மிக அரிதாகவே அந்த நாட்களில் வழிபாடு சார்ந்த விசயங்களில் பெண்கள் ஈடுபடுகின்றனர்.
மாதவிடாய் காலங்களில், பணிபுரியும் பெண்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பெண்களின் வலி நிறைந்த அந்த நாட்களின் பணிச்சுமையை உடனே குறைக்க முடியாவிட்டாலும், அவர்களை ஒதுக்கி வைத்து மனச்சுமை ஏற்றாமல் இருப்பது முக்கியம். தெய்வங்கள், மாதவிடாய் காலங்களில் பெண்கள் வழிபடுவதை தடுப்பதில்லை. அடிப்படைவாதிகளே தடுக்கிறார்கள்.
மொத்தத்தில் அயலி ஒரு பெண்களை மையப்படுத்திய தொடர். இது ஒரு தொடக்கம் தான். அயலி சொல்லாமல் விட்டதாக நினைக்கும் சாதி மறுப்பு திருமணங்கள், ஆணவ படுகொலைகள் , பாலின சமத்துவம் குறித்தான படைப்புகள் அடுத்தடுத்து வெளிவர வேண்டும். அயலியில் போதாமைகள் இருக்கலாம். ஆனால் இதை முற்றாக நிராகரிப்பதற்கான காரணங்கள் எதுவும் இல்லை.
அடுத்தடுத்து பார்க்க வேண்டிய திரைப்படங்களின், தொடர்களின் வரிசை நீளமாக இருக்கும் நிலையிலும் ஒரு படைப்பு நம்மை மீண்டும் பார்க்கத் தூண்டுவது சாதாரண விசயம் அல்ல. அயலி மீண்டும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. மீண்டும் இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் ❤️
மேலும் படிக்க :
நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !
ஜெய்பீம் -அறத்தின் குரல் !