Sunday, September 1, 2024

The Elephant Whisperers !


ஆவணப்படுத்துதல் என்பது முக்கியமான செயல்பாடு.இதில் நம் அனைவருக்கும் பங்கிருக்கிறது. ஆவணப்படுத்துதல் என்பது எல்லாத் தளங்களிலும் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஆவணப்படுத்தல் மூலம் அறிவும் வரலாறும் பதிவாகிறது. இது ஒரு தொடர் செயல்பாடு.ஆனால் இந்த விசயத்தில் நாம் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். 

ஆவணப்படங்கள் உலகெங்கும் கவனம் பெற்றிருந்தாலும் இந்தியச் சூழலில் இன்னமும் போதிய கவனம் பெறவில்லை. இதன் முக்கியத்துவத்தையும் நாம் உணரவில்லை. மற்ற இயக்குநர்கள் வெளியே தெரிந்த அளவிற்கு இந்திய ஆவணப்பட இயக்குநர்கள் வெளியே தெரியவில்லை. இப்படியான சூழலில் ' The Elephant Whisperers ' ஆவண குறும்படத்திற்கு கிடைத்திருக்கும் விருதானது ஆவணப்படங்கள் குறித்தான புரிதலை கொஞ்சமேனும் அதிரிக்கும். இயற்கையையும், இயற்கையுடன் இணைந்த வாழ்வை வாழும் காட்டின் பாதுகாவலர்களையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் ஆவண குறும்படத்திற்கு விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. 


ஆசியாவிலேயே பழமையான யானை முகாம்களில் ஒன்றாக இருக்கும் முதுமலை யானைகள் முகாம் பற்றியோ அதன் செயல்பாடுகள் பற்றி நம்மில் பெரும்பாலானோருக்கு இதற்கு முன்பு தெரியாது. இந்த ஆவண குறும்படம் அதை நமக்கு தெரியப்படுத்தி இருக்கிறது. எந்த உயிரினமும் மனிதர்களாகிய நாம் கொடுக்கும் அன்பை பெற்றுக்கொண்டு திருப்பிக் கொடுக்கின்றன. சமீபத்தில் கூட உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஆரிப் என்பவர், காயமடைந்த நாரை ஒன்றை குணப்படுத்தி இருக்கிறார். குணமாகி ஓராண்டான பிறகும் அந்த நாரை அவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவர் கூடவே பறந்து செல்வதை தீக்கதிர் வெளியிட்ட ஒரு காணொளியில் காண முடிந்தது.


உலகெங்கிலுமே பல்வேறு விதமான உயிரினங்கள் மனிதர்கள் வாழுமிடங்களிலும், மிருக காட்சி சாலைகளிலும் வளர்க்கப்படுகின்றன. அனைத்துமே அன்பிற்கு கட்டுப்பட்டவனவாகவே இருக்கின்றன. " யானைக்களுக்கு உணர்ச்சிகள் அதிகம், புத்தியும் அதிகம். ஆனாலும் அது ஒரு காட்டு மிருகம் என்பதை அறிந்தே இருக்கிறோம் " என்று பொம்மன் இந்த குறும்படத்தின் ஓரிடத்தில் சொல்கிறார். இந்தப் பார்வை ரொம்ப முக்கியம். " எல்லாவற்றையும் நாங்களே சொல்லிதர முடியாது.அது யானை , யானைக்கூட இருந்துதான் கத்துக்கணும்" என்கிறார், பெள்ளி. இப்படியான புரிதல் இருப்பதால்தான் தாய் யானையைப் பிரிந்த யானைக்குட்டிகளை இவர்களால் வளர்த்தெடுக்க முடிந்திருக்கிறது. 


பொம்மன் மற்றும் பெள்ளியின் வெள்ளந்தியான முகங்களைக் காண்பதும், அவர்களின் வாஞ்சையான பேச்சைக் கேட்பதும் பெரும் மகிழ்வைக் கொடுக்கக் கூடியவை. இவர்கள் வளர்த்த யானைகளான ரகு மற்றும் பொம்மியுடனான இவர்களது உரையாடல்கள் இன்னமும் சுவாரசியமானவை. காட்டின் பாதுகாவலர்கள் (பழங்குடியினர்) குறித்தும், அவர்களுக்கிருக்கும் காடு பற்றிய புரிதல்கள் குறித்தும் , முதுமலை யானைகள் முகாம் குறித்தும் ஒரு சிறு துளி தான் ஆவண குறும்படமாக உருவாகியிருக்கிறது. அந்தச் சூழலிலேயே இன்னும் பதிவு செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. 


இயக்குநர் கார்த்திகியும் மற்றும் குழுவினரும் இரண்டு ஆண்டுகளாக முதுமலை காட்டில் தங்கி இந்த ஆவண குறும்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் காட்டில் பதிவு செய்த பலவற்றை இக்குறும்படத்தில் இணைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் அவை காட்சிக்கு நெருக்கமாக இருந்தாலும் போக போக அவை இடையூறு தருபவையாக இருக்கின்றன. மற்றபடி நல்லதொரு உருவாக்கம்.


பொதுவாகவே விருது என்பதில் பல்வேறு விதமான அரசியல்கள் இருந்தாலும் விருது கிடைக்கும் போது குறிப்பிட்ட படைப்பு வெளியே தெரிய வரும், கூடவே படைப்பாளியும் தெரிய வருவார். ஒரு சில படைப்புகள் தான் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விருது பெற்ற கவனத்தால் பொம்மன், பெள்ளி உள்ளிட்ட 91 யானை பாகன்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டிருக்கிறது‌. இது மட்டுமல்லாமல் 91 பாகன்களுக்கும் தலா பத்து இலட்ச ரூபாய் அவர்கள் விருப்பப்படி வீடு கட்டிக்கொள்ள தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்டிருக்கிறது. காட்டு மனிதர்களை நாட்டு மனிதர்கள் கெடுக்காமல் இருந்தால் சரி.


இயக்குநர் கார்த்திகி மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉. 


மேலும் படிக்க :

Extraordinary Attorney Woo - Feel Good Series !

Life in Colour with David Attenborough - Documentary !

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms