கதைக்கே தேவையில்லாத அதீத வன்முறை காட்சிகளுடனும், வெத்து நாயகத்துதிபாடல்களுடனும் , இன்னமும் பெண்களே பொருளாகவே சித்தரிக்கும் திரைப்படங்கள் பெருமளவில் வெளியாகிக் கொண்டிருக்கும் தமிழக சூழலில் இந்த 'மாமனிதன்' திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
கிராம பின்புலத்தில் வாழ்பவர்களில் சிலர் இத்திரைப்படத்தில் நாயகன் சந்திக்கும் சூழலை எதிர்கொண்டு இருப்பார்கள். ஆனால் இத்திரைப்படத்தில் காண்பித்தது போல ஒருவராவது வாழ்ந்து இருப்பார். மற்றவர்கள் அதே ஊரில் அல்லது பக்கத்து ஊரில் இருந்துகொண்டு நிலைமையை சமாளித்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த நெருக்கடியை , மற்ற திரைப்படங்கள் போல ஏதாவது அற்புதம் நடந்து 'நாயகனாக' மீண்டு வருவது போல காண்பிக்கப் போகிறார்களோ என்று எதிர்பார்த்த நிலையில் 'மனிதனாக' வே காட்சிப்படுத்தியது நல்ல விசயம்.
இன்றைய உலகவணிகமயமாக்கல் சூழலில் மனிதர்களின் தேவைகள் வேண்டுமென்றே அதிகரிக்கப்படுகின்றன. அதிகரித்து வரும் தேவைகளை நிறைவு செய்ய திடீரென ஒரு மாற்றம் நிகழாதா ? என்றே நம்மில் பெரும்பாலானோர் எதிர்பார்க்கிறோம். நாம் மாற்றத்தை மட்டும் எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. வளர்ச்சியை நோக்கி பயணிப்பதிலும் தவறில்லை. ஆனால் உடனடியான வளர்ச்சி என்பது ஆபத்தானது. இதில் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். சிறிய கவனக்குறைவு கூட சிக்கலில் சிக்க வைத்துவிடும். பணம் சார்ந்த விசயங்களில் விதவிதமான வழிகளில் ஏமாற்ற அங்கங்கே மனிதர்கள் இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தில் முக்கியமாக காட்சிப்படுத்தப் பட்டிருப்பது 'அன்பு'. சக மனிதர்கள் மீதான அன்பு தான் மனித இனத்தையே இயங்க வைக்கிறது. பெரும்பாலான பிரச்சனைகளிலிருந்து நம்மை காப்பாற்றுவதும், கரை சேர்ப்பதும் அன்புதான். அந்த அன்பு என்பது மதங்கள் கடந்தது என்பதை சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார், இத்திரைப்படத்தின் இயக்குனர், சீனு ராமசாமி. சாதியை முன்வைத்தும், மதத்தை முன்வைத்தும் மக்களைப் பிரித்து குளிர் காய அரசியல் கட்சிகள் தயாராக இருக்கும் சூழலில் மக்களின் ஒற்றுமையை, மதநல்லிணக்கத்தை படமாக்கியது, பாராட்டிற்குரியது.
இத்திரைப்படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை கல்வியின் முக்கியத்துவம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. " உன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் படிப்பை மட்டும் விட்டுவிடாதே" என்பது காட்சிகளாக விரிகிறது. கல்வி எப்போதும் நம்மைக் கைவிடாது. சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் கல்வியின் பங்கு என்பது மிகவும் முக்கியமானது.
விஜய் சேதுபதியின் நாயக பிம்பம் அவ்வப்போது வெளிப்பட்டாலும் பெரும்பாலான இடங்களில் அடக்கியே வாசித்து இருக்கிறார். காயத்ரி, எதிர்பாராத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குரு சோமசுந்தரம் பாயாகவே வாழ்ந்திருக்கிறார். களத்தில் மாதவனாக வரும் இசை விமர்சகர் ஷாஜி , இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே வந்தாலும் திரைப்படம் முழுவதும் அவரையும் சேர்த்தே கதை நகர்கிறது.
போதாமைகள் இருந்தாலும் எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம்தான், மாமனிதன்.
மேலும் படிக்க :
கர்ணன் - போராடடா ஒரு வாள் ஏந்தடா !
0 comments:
Post a Comment