விஜய் தொலைக்காட்சி ஏற்கனவே விஜயகாந்த்-ஐ முன் வைத்து ஒரு 'நீயா? நானா?' நிகழ்ச்சியை நடத்தி அவருக்கு மரியாதை செய்தது. தற்போது சூப்பர் சிங்கர் 10-லும் ஒரு சுற்றை விஜயகாந்த் சுற்றாக ( என்றென்றும் கேப்டன் விஜயகாந்த்) அறிவித்து மிகவும் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறது. வணிக நோக்கம் இருந்தாலும் இதையும் மற்றவர்கள் செய்ய தயாராக இல்லை என்பது தான் உண்மை.
விஜயகாந்த் எப்படி பொது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டாரோ அதே போல அவர் நடித்த பாடல்களும் தொடர்ந்து புறக்கணிப்பை சந்தித்து வந்திருக்கின்றன. விஜயகாந்த் நடித்த பாடல்களில் சிறப்பான பாடல்கள் இருந்தாலும் அவை அவ்வளவாக ஒளிபரப்பப்படவில்லை. கமல் , ரஜினி பாடல்களே தொடர்ந்து முன்நிறுத்தப்பட்டன; முன்நிறுத்தப்படுகின்றன. இப்போதும் பெரிய மாற்றமெல்லாம் இல்லை. இப்படியான சூழலில் விஜயகாந்த் பாடல்களை முன் வைத்து ஒரு நிகழ்ச்சி என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
நடிகை ராதா, இயக்குநர்கள் அரவிந்தராஜ் மற்றும் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பங்குபெற்று விஜயகாந்த் உடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அவை உணர்ச்சிப்பூர்வமான தருணங்களாக அமைந்தன. தொகுப்பாளர் பிரியங்காவும் விஜயகாந்த் மீதான பிரமிப்பை வார்த்தைகளில் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார். விஜய் தொலைக்காட்சியும் நிகழ்ச்சியின் ஊடாக அவரைப் பற்றிய காணொளி பதிவு, சூப்பர் சிங்கர் ஜுனியர்களை பாட வைத்தது, விஜயகாந்தின் உருவச் சிலையை சிறப்பு பரிசாக கொடுத்தது என தனது பங்களிப்பைச் செய்தது.
ஏறக்குறைய பாடிய அனைவருமே சிறப்பாகவே பாடினார்கள். பலருக்கும் நல்ல குரல் வளம். விஜயகாந்த் நடித்த திரைப்படங்களிலிருந்து தனிப்பாடல்கள், ஜோடி பாடல்கள், குழு பாடல்கள் இடம்பெற்றன. நல்ல பாடல்கள் தேர்வு. அதிலும் 'என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச...' பாடலெல்லாம் இன்னமும் காதில் கேட்கிறது. இந்தப் பாடலில் இவ்வளவு ரசனையான வரிகள் இருப்பதும் இப்போதுதான் தெரிந்தது.
சூப்பர் சிங்கர் ஜுனியர்கள் பாடிய பகுதியும் சிறப்பாக இருந்தது.
இந்நிகழ்ச்சியில் முக்கியமான அம்சம் என்பது பாடல்களுக்கு பின்னணியில் இசைக்கருவிகள் வாசித்தவர்கள்தான். சமீப காலங்களில் கேட்டத்தில் சிறப்பான இசை. பாடல்கள் சிறப்பாக அமைந்ததற்கு இவர்களும் ஒரு காரணம். இவர்களுக்காகவே இந்த நிகழ்ச்சியின் மற்ற பகுதிகளை பார்க்கும் ஆவல் உருவாகியிருக்கிறது.
மொத்தத்தில் இப்படியொரு நிகழ்ச்சியை நடத்தியதற்கு விஜய் தொலைக்காட்சிக்கு அன்பும் நன்றியும் !
மாமனிதர் விஜயகாந்த் பற்றிய ஆவணப்படம் எடுக்கப்பட வேண்டும். அவருடன் பணியாற்றியவர்கள் இருக்கும் போதே அவரைப்பற்றிய தகவல்களை சேகரித்து ஒரு முழுமையான ஆவணப்படம் எடுக்கப்பட வேண்டும். எந்த ஒன்றையும் ஆவணப்படுத்துதல் என்பதில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். இனிமேலாவது ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவத்தை தமிழ் சமூகம் உணர வேண்டும்.
வாய்ப்புள்ளவர்கள் Disney+ HotStar -ல் இப்போதும் காணலாம். விஜயகாந்த் -ஐ பிடித்தவர்களுக்கு இந்நிகழ்ச்சியும் கண்டிப்பாக பிடிக்கும்.
மேலும் படிக்க :
0 comments:
Post a Comment