நாட்டார் தெய்வங்கள் குறித்தான குறிப்புடன் தொடங்கும் போதே திரைப்படம் நம்மை ஈர்க்கத் துவங்கி விடுகிறது. நாட்டார் தெய்வங்கள் எப்படி மக்களின் வாழ்வியலிலிருந்து தோன்றியிருக்கின்றன என்பதை இத்திரைப்படம் முன்வைக்கிறது. பெரும்பாலும் நாம் நமது முன்னோர்களையும் இயற்கையின் ஏதோ ஒரு வடிவத்தையுமே குலதெய்வங்களாக வணங்குகிறோம். அவையே நாட்டார் தெய்வங்கள்.
" நாட்டார் தெய்வங்கள் எவையும் 'முன்னே வந்து' வரம் தரும் தெய்வங்கள் அல்ல; 'பின்னே நின்று' பாதுகாப்புத் தரக்கூடியன. அவை அழிக்கும் ஆற்றல் அற்றவை. மாறாக வயல் களத்திலும், அறுவடைக் காலத்திலும், கண்மாய்க் கரையிலும், ஊர் மந்தையிலும், ஊர் எல்லையிலும் தூங்காமல் நின்று காவல் காக்கக்கூடியன. " என்று கூறுகிறார் ,தொ.பரமசிவன் . நாட்டார் தெய்வங்கள் அனைத்தும் காவல் தெய்வங்களாக இருப்பதை நாம் உணர முடியும். ஒரு மலைவாழ் மக்களின் காவல் தெய்வமாக 'மாதேஸ்வரன்' மாறிய கதை தான் 'ஹர்காரா'.
நமது நாட்டார் தெய்வங்கள் கற்பனைக் கதைகளான இதிகாசங்களிலிருந்து தோன்றவில்லை. நிறுவனமயப்படுத்தப்பட்ட நடைமுறையோ, வழிபாடோ , பேதங்களோ, படையலோ நாட்டார் தெய்வங்களுக்கு இல்லை. அவை மக்களின் வாழ்வுடன் கலந்தவை. பெரிய பெரிய கோயில்களில் பல கால பூசைகளுடன் பெருந்தெய்வங்கள் இருந்தாலும் அவை எதுவும் நாட்டார் தெய்வங்களுக்கு ஈடாகாது. அவை மக்களின் வாழ்விலிருந்து விலகி நிற்பவை.
காளி வெங்கட் மலையேறும் காட்சியின் போது வரும் இடைவேளை வரை சரியாக செல்லும் திரைக்கதையில் பின்பு விறுவிறுப்பு குறைந்து விடுகிறது. இறுதிகட்ட காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சுவாரசியம் கூட்டியிருந்தால் இன்னும் நெருக்கமான படைப்பாக இத்திரைப்படம் அமைந்திருக்கும். மற்றபடி நல்லதொரு அனுபவம். இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉 ❤️.
தமிழில் வன்முறை வெறியாட்டத் திரைப்படங்கள் தொடந்து வெளிவரும் சூழலில் ' ஹர்காரா ' போன்ற மக்களின் வாழ்வியலைப் பேசும் அர்த்தமுள்ள திரைப்படங்களும் வெளிவருவது நம்பிக்கையளிக்கிறது. இவ்வாறு மக்களின் வாழ்வியலை மையப்படுத்திய திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும்.
ஆகவே மக்களே ! வன்முறை வெறியாட்டத் திரைப்படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவதில் கொஞ்சத்தையாவது நம் வாழ்வைச் சொல்லும் 'ஹர்காரா' போன்ற திரைப்படங்களுக்குக் கொடுக்க வேண்டும்.
மேலும் படிக்க:
அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !
நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !
0 comments:
Post a Comment