மக்களிடையே மதவாதிகளால் தொடர்ந்து சிறுபான்மையின வெறுப்பை விதைத்துக் கொண்டிருக்கும் கன்னட மண்ணிலிருந்து ஒரு அற்புதமான திரைப்படம். இஸ்லாமியர்கள் குறித்தான பொதுப்பார்வைக்கு முஸ்தபா எனும் கதாபாத்திரத்தின் மூலமாக பதிலளித்து இருக்கிறார்கள். ரொம்பவெல்லாம் அவர்கள் மெனக்கெடவில்லை.தங்களின் மேதைமையை மறந்து மிக எளிய மக்களின் மனநிலையை திரையில் கொண்டு வந்து இருக்கிறார்கள். ஆனால் அது தான் கடினமும் கூட.
சின்ன சின்ன விசயங்கள் கூட அழகாக கவனப்படுத்தப்பட்டுள்ளன. பார்ப்பன மனநிலையும் விவரிக்கப்பட்டிருக்கிறது. ஏன் அவர்கள் கிரிக்கெட் விளையாட்டைத் தேர்ந்தெடுக்கிறார்கள். என்பதற்கான மிகப் பொருத்தான விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டில் ஒருவரை ஒருவர் தொட்டு விளையாட வேண்டிய அவசியம் இல்லை. எப்படியான மனநிலை பாருங்கள்.
ஒவ்வொரு விசயத்தையும் வெற்றுக்கூச்சல்கள் இல்லாமல் இயல்பாக சொல்லியிருப்பதுதான் இத்திரைப்படத்தின் பலம். இடையிடையே வரும் அனிமேஷன் காட்சிகள் அழகு. படத்தின் நிளத்தை குறைக்க உதவுகின்றன. இசையும் திரைப்படத்திற்கு இடையூறு இல்லாமல் பொருத்தமாக அமைந்திருக்கிறது. நடிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
Poornachandra Tejaswi என்கிற கன்னட எழுத்தாளிரின் சிறுகதையையே திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்கள். சிறுகதையின் தலைப்பான ' Daredevil Musthafa' என்பதையே திரைப்படத்திற்கும் தலைப்பாக வைத்திருக்கிறார்கள். Poornachandra Tejaswi -ன் நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்து இருக்கிறார்கள்.
Shashank Soghal இயக்கியிருக்கும் முதல் திரைப்படமிது. தனது பணியை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். எந்தத் திரைப்படமானாலும் திரைக்கதை முக்கியம். இயக்குநருடன் சேர்ந்து நான்கு பேர் திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். அதனாலேயே மனதிற்கு நெருக்கமான படைப்பாக மாறியிருக்கிறது. ஒரு நல்ல திரைப்படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற இவர்களது எண்ணம் நிறைவேறியிருக்கிறது. கூட்டுழைப்பின் வெற்றி.
தேர்ந்த படைப்பைக் கொடுத்ததற்கு படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இந்தத் திரைப்படத்திற்கு தற்போதைய காங்கிரஸ் அரசு முழுமையான வரிவிலக்கு அளித்திருக்கிறது. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இப்படைப்பு இருக்கிறது. கன்னட மொழியில் ஆங்கிய சப்டைட்டிலுடன் காணலாம். நிறைய பேர் நல்ல திரைப்படமாக இருந்தாலும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டால்தான் பார்க்கிறார்கள். இந்த மனநிலை மாற வேண்டும். எந்த மொழியில் இருந்தாலும் பார்த்துப் பழகும் மனநிலைக்கு நாம் வர வேண்டும். எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம். FeelGoodMovie ❤️
Aeysha, Sulaikha Manzil இப்போது Daredevil Musthafa என தொடர்ந்து மூன்று வாரங்களாக இஸ்லாமிய வாழ்வை முன்வைக்கும் திரைப்படங்களையே பார்த்தாச்சு.
மேலும் படிக்க :
0 comments:
Post a Comment