Sunday, September 1, 2024

பெரியார் ஒருவரே !



பெரியாரின் கொள்கைகளை பெரியாரைத் தவிர வேறு எவராலும் கடைபிடிக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். பெரியார், தான் பேர் வாங்க வேண்டும் என்பதற்காக எந்தக் கொள்கையையும் முன்நிறுத்தவில்லை. மக்களுக்கு நல்லதென்றால் எதை வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் ஆதரிப்பார், மக்களுக்கு தீங்கு என்றால் எதை வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார், அவ்வளவுதான் பெரியார். எந்த வட்டத்திற்குள்ளும் பெரியாரை அடக்கிவிட முடியாது. 


மக்களின் நலன்களையும் , மக்களுக்கான விடுதைலையையும், சமத்துவத்தையும், அனைவருக்குமான சுதந்திர வாழ்க்கையையும் உறுதி செய்ய தொடர்ந்து குரல் கொடுத்தார். அனைத்துவிதமான ஆதிக்கங்களையும் எதிர்த்தார். மக்களின் நலன்கள் மட்டுமே முன்நிறுத்தப்பட்டதால்தான் பெரியாரின் கொள்கைகள் இன்றும் பேசப்படுகின்றன. 


இவ்வளவு காலம் பெரியாரின் கொள்கைகள் பேசப்படுவதை பெரியாரே விரும்பியிருக்கவில்லை. பெரியாரின் கொள்கைகளின் தொடர்ச்சியாக வேறு புதிய கொள்கைகள் இந்நேரம் உருவாகியிருக்க வேண்டும். அத்தகைய ஆக்கப்பூர்வமான மாற்றம் இங்கே நிகழவில்லை. அந்த அளவிற்கு நாம் பின்தங்கி இருக்கிறோம். தான் கண்ட அனைத்தையும் அறிவியலின் கண் கொண்டு பார்த்தவர்தான், பெரியார். அறிவிற்கு பொருந்தாத எதையும் அவர் நம்பவில்லை; ஏற்கவில்லை. நாயகத்துதிபாடல், நாயகத்துதிபாடல் உருவாக்கும் கும்பல் மனப்பான்மை இவற்றை கடுமையாக வெறுத்தார். ஆனால் இன்று அவரை வைத்து நாயகத்துதிபாடலும், கும்பல் மனப்பான்மையும் செய்யப்படுவது பெரியாருக்கு நாம் செய்யும் துரோகம். 


எதிர்தரப்பையும் தன்பக்கம் ஈர்க்கும் வல்லமை பெரியாருக்கும் இருந்தது, அறிஞர் அண்ணாவிற்கும் இருந்தது. கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் எதிர்தரப்பின் நியாயங்களை ஏற்றுக்கொண்டார்கள். முக்கியமாக தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொண்டார்கள். இந்தப் போக்கு பின்பு மாறிவிட்டது. தமிழகத்தில் நாயகத்துதிபாடல் மனநிலையை வளர்த்துவிட்டதில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. இன்று, தமிழகத்தில் எல்லா கட்சிகளும், எல்லா அமைப்புகளும் நாயகத்துதிபாடலில் சிக்கி லயித்துக் கொண்டிருக்கின்றன. நாயகத்துதிபாடல் முன்நிறுத்தப்படும் எந்த இடத்திலும் ஆக்கப்பூர்வமான மாற்றம் நிகழாது. 


" யார் சொல்லியிருந்தாலும், 

எங்கு படித்திருந்தாலும், 

நானே சொன்னாலும், 

உனது புத்திக்கும், 

பொது அறிவிற்கும்,

பொருந்தாத எதையும் நம்பாதே ! " 

-  பெரியார் ❤


மேலும் படிக்க :

M.R.ராதாவின் சிறந்த பேச்சு !


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms