காலையிலிருந்து மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல். இளையராஜா, இந்தப் பாடலில் நிறைய மாயங்கள் செய்திருக்கிறார். பிபிசி (BBC) நடத்திய ஆய்வில் இப்பாடல் உலகின் சிறந்த பத்து பாடல்களில் ஒன்றாக தேர்வானதாக முன்பு கேள்விப்பட்டதுண்டு. இப்போது தேடுகையில் 150 நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட 1000க்கும் மேற்பட்ட பாடல்களிலிருந்து இப்பாடல் நான்காவதாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக விக்கிப்பீடியா சொல்கிறது.
அந்த செய்தி வெளியான போது கூட இப்பாடலை கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால் கடந்த வாரம் யத்தேச்சையாக தொலைக்காட்சியில் இந்தப் பாடலை பார்க்க நேரிட்டபோது மிகவும் கவர்ந்துவிட்டது. தொடக்க இசையிலிருந்து முடிவு வரை அதகளம் செய்திருக்கிறார். தற்போது வெளியாகும் பாடல்களில் ஒரு மைக்ரோ செகண்ட் கூட இடைவெளி இல்லாமல் இசையைச் சேர்த்து இரைச்சலை உருவாக்குகிறார்கள். ' அடி ராக்கம்மா கையத்தட்டு...' பாடலில் அங்கங்கே இசையே சேர்க்காமல் இடைவெளி விட்டதே மேஜிக் தருணமாக அமைகிறது. பெரும்பாலும் ஏதோ ஒரு தருணத்தில் பாடகர்கள் இசையமைப்பை தாண்டிச் செல்வார்கள். ஆனால் இந்தப் பாடலை எஸ்.பி.பி. மற்றும் சொர்ணலதா பாடியிருந்தாலும் இந்தப் பாடலின் இசையை எந்த இடத்திலும் அவர்களால் கடக்க முடியவில்லை. இப்பாடல் முழுவதும் ராஜாதான் நிறைந்திருக்கிறார்.
தளபதி திரைப்படத்திற்கு முன்பான ராஜா வேறு. தளபதி திரைப்படத்திற்கு பின்பான ராஜா வேறு என்பது போல தளபதிராஜா தனியாகத் தெரிகிறார்.
தமிழ் கூறும் நல்லுலகம் எந்தக் கலைஞரையும் அவர்கள் வாழும் காலத்தில் கொண்டாடியதில்லை. இப்படியான சூழலில் நமது வாழ்வின் 'STRESS BUSTER ' களாக இருக்கும் இளையராஜாவையும் , வடிவேலுவையும் அவர்கள் வாழும் காலத்திலேயே தமிழுலகத்தால் கொண்டாடப்படுவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
மேலும் படிக்க :
மிகவும் பிடித்தமான மலேசியா வாசுதேவன் பாடல்களில் சில... ❤️
0 comments:
Post a Comment