Friday, April 1, 2011

மூன்றாவது இறுதிப்போட்டி !?

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளுக்குமே  இது மூன்றாவது இறுதிப்போட்டி . இதற்கு முன் இரு அணிகளும் இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ,ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் பெற்றுள்ளன . இரண்டு அணிகளும்  இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடனே தோல்வியை தழுவியுள்ளன . இம்முறை ஆஸ்திரேலியா இல்லை . ஆனால் , இரண்டில் ஒரு அணி தான் வெற்றி பெற முடியும் . அது எது என்பதில் தான் சுவாரசியம் இருக்கிறது . 

 இந்த உலகக்கோப்பையில் ஏறக்குறைய இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளும் சவால் நிறைந்ததாகவே இருந்தது . அதிலும் ஆஸ்திரேலியாவுடன்  வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருந்தது . பாகிஸ்தான் உடனான போட்டியில் யாரும் எதிர் பார்க்காத வகையில் இந்தியா அணியின் பந்து வீச்சும் , களப்பணியும் மிகச் சிறப்பாக இருந்தன . உலககோப்பை தொடங்கிய போது இருந்ததை விட இப்பொழுது இந்தியா பலம் வாய்ந்ததாக இருக்கிறது . இதற்க்கெல்லாம் காரணம் " இந்திய அணியின் ஒற்றுமை " . அனைத்து வீரர்களும் பொறுப்பை உணர்ந்து விளையாடுகிறார்கள் ,நம் தோனியைத் தவிர . ஆனால் , அணித்தலைவர் பொறுப்பில் மிகச் சிறப்பாக செயல் படுவதால் அவரது ஆட்டத்தை நாம் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை . 

இந்தியா , இந்த தொடரில் அதிக முறை முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது . அதே சமயம் இலங்கை அதிக முறை இரண்டாவதாக பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது . அதனால் , இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தாலும் அது நமக்குச்  சாதகம் என்று சொல்லிவிட முடியாது . முதலில் பேட்டிங்கோ , பந்துவீச்சோ  இறுதி வரை போராடினால் மட்டுமே இறுதிப் போட்டியில் வெல்ல முடியும் .

முரளிதரனுக்காக இலங்கை ஆடுகிறது , தெண்டுல்கருக்காக இந்தியா ஆடுகிறது .  இருவருமே அடுத்த உலகக்கோப்பை போட்டியில் ஆடப்போவதில்லை . இலங்கை  1996 ல்  உலகக்கோப்பை வென்ற போது முரளிதரன் அந்த அணியில் இடம் பெற்று இருந்தார் . ஆனால் , இவ்வளவு சாதனைகள் செய்த பிறகும்  தெண்டுல்கருக்கு  இதுவரை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை . இம்முறை , சொந்த மண்ணில் , சொந்த ஊரில்  நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது .  

இரண்டு அணிகளின் பயிற்சியாளர்களும் இந்த உலகக்கோப்பையுடன் அணியை விட்டு விலகப் போகிறார்கள் . கிறிஸ்டன் பதவி ஏற்ற பிறகு இந்தியா அதிக வெற்றிகளை பெற்றுள்ளது . ஜான்ரைட்- கங்குலி ஜோடியால் இந்தியா  2003 ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்றது . கிறிஸ்டன் -தோனி ஜோடி 2011 ல் கோப்பையை வெல்லப் போகிறது !? 

1983 ல் கபில் தேவ் !

2011 ல் தோனி !? 

மேலும் படிக்க :



முகப்பு பக்கம் 

.......................................
 
 

Thursday, March 31, 2011

தொட்டுவிடும் தூரத்தில் உலகக் கோப்பை !



"தெண்டுல்கரை சதம் அடிக்க விட மாட்டோம் , யுவராஜை விரைவாக ஆட்டமிழக்கச் செய்வோம் " என்றெல்லாம் சபதம் விட்ட அப்ரிடி இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவோம் என்று சொல்ல மறந்து விட்டார் .  தெண்டுல்கரை சதம் அடிக்க விடவில்லை , யுவராஜையும் ஒரே பந்தில் ஆட்டம் இழக்கச் செய்து விட்டனர் , ஆனால் , இந்தியா வெற்றி பெற்று விட்டது . கடந்த போட்டி முடிந்த பிறகு பாண்டிங் ," இதற்கு முன்பு இந்தியா இப்படி இணைந்து விளையாடி நான் பார்த்ததில்லை " என்று குறிப்பிட்டார் . இந்த தொடரில் இந்தியா பெற்ற அனைத்து வெற்றியும் எந்தத்  தனி வீரரையும் சார்ந்து இல்லை , எல்லா வெற்றியும் அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி . பாகிஸ்தானுக்கு எதிராக கிடைத்த வெற்றியும் அப்படிப்பட்டதே .

இந்த உலககொப்பைத் தொடரில் பங்களாதேஷ் உடனான போட்டியைத் தவிர இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளும் பரபரப்பான போட்டிகளாகவே இருந்தன .  நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து எதிரான போட்டிகள் கூட சவாலானதாகவே இருந்தன .ஒவ்வொரு போட்டியிலும் இந்தியாவின் பலம் அதிகரித்துக்கொண்டே வந்தது . அதனால் தான் , 260 ரன்கள் மட்டுமே அடித்திருந்தும்  பாகிஸ்தானை திறமையாக வெற்றிகொள்ள முடிந்தது .

கடந்த போட்டிக்கும் , இந்த போட்டிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு . அது என்னவென்றால் , கடந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா இதே 260 ரன்களைத் தான் எடுத்தது . அதில் ஆஸ்திரேலியா நம்முடன் தோற்று விட்டது .ஆனால்,இந்தப் போட்டியில் நாம் அதே 260 ரன்களை வைத்து பாகிஸ்தானை வென்று விட்டோம் . அது தான் இந்தியாவின் பலம் .

சேவாகின் சரவெடியுடன் போட்டி தொடங்கியது . நன்றாக விளையாட வேண்டும் என்ற நெருக்கடி எல்லோரிடமும் இருந்தது . அதனால் தான் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர் . சேவாக் ஆட்டமிழந்த பிறகு போட்டி , பாகிஸ்தான் வசமே இருந்தது . ஒரு அற்புதமான பந்தில் யுவராஜ் ஆட்டமிழந்தார் . 30 ஓவரிலிருந்து 40 ஓவர் வரை இந்தியா 30 ரன்களை மட்டுமே எடுத்தது . இந்த போட்டியிலும் ஆபத்பாந்தவனாக வந்தவர் ரெய்னா தான் . ரெய்னாவின் பொறுப்பான ஆட்டம் தான் இந்தியா 260 ரன்கள் எடுக்க காரணம் .

பந்துவீச்சில் இந்தியா அசத்தி விட்டது . மூன்று வேகப் பந்து வீச்சாளர்களை களம் இறக்கிய தோனியின் அணுகுமுறை சிறந்த வெற்றியைக் கொடுத்தது .முதல் இரண்டு பேர் வேகப் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர். பின்பு , அடுத்தடுத்து இரண்டு பேரை ஆட்டமிழக்கச் செய்தார் யுவராஜ் . உமர் அக்மல் எல்லோருக்கும் பயத்தை உருவாக்கினார் .அவர் மட்டும் ஆட்டம் இழக்காமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும் . தனது சிறப்பான பந்து வீச்சால் அவரை ஆட்டம் இழக்கச் செய்தார் ஹர்பஜன் . பிறகு அப்ரிடியையும் வீழ்த்தினார் . மிஸ்பா கடைசி கட்டத்தில் கொஞ்சம் போராடினார் . மொத்தத்தில் இந்தியாவின் பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருந்தது .  நீண்ட நாட்களுக்கு அப்புறம் 5 பந்து வீச்சாளர்கள் மட்டுமே 50 ஓவர்களையும் வீசியுள்ளனர் . பந்து வீசிய அனைவருக்கும் ஆளுக்கு 2 விக்கெட்கள்  கிடைத்தன . இது அபூர்வமாக நிகழக்கூடியது .  

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் ஆதிக்கம் ( 5 போட்டிகளிலும் இந்தியா வெற்றி ) தொடர்கிறது . பாகிஸ்தான் உடனான நட்பை புதுப்பிக்கவும் இந்த போட்டி உதவியது . விளையாட்டின் சிறப்பே இது தான் .இன்னும் ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றுவிட்டால் போதும் 1983 மற்றும் 2007 ன் நினைவுகள் பல்வேறு சிறப்புகளுடன் மீண்டும் கிடைக்கும் . 

தொட்டுவிடும் தூரத்தில் உலகக் கோப்பை !

மேலும் படிக்க :


முகப்பு பக்கம்
.......................................

Tuesday, March 29, 2011

இந்தியாவின் இரண்டாவது இறுதிப்போட்டி !?

இந்தியா தனது இரண்டாவது இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது . முதல் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்றது நினைவிருக்கலாம் . சாதாரண போட்டியாக இருந்தாலே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதினால் பரபரப்பாக இருக்கும் . அதிலும் உலககோப்பை போட்டி என்றால் பரபரப்புகுச் சொல்லவா வேண்டும் . 

இரு அணிகளுக்கும் இடையிலான தனிப்பட்ட போட்டிகளில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது , உலக கோப்பைப் போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் வருகிறது . இந்த அணிகள் மோதும் போட்டியை கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கிறது . நிறைய பேர் விடுப்பு எடுக்கத் தயாராகி விட்டனர் . நான், நம் நாட்டின் பிரதமரைச் சொல்லவில்லை . அவருக்கு எப்போதுமே எந்த வேலையும் இருந்ததில்லை . அவர் கிரிக்கெட் பார்ப்பதும் ஒன்றுதான் , பாராளுமன்றம் போவதும் ஒன்றுதான் . நான் குறிப்பிட்டது சாதாரண வேலை செய்பவர்களை .

கிரிக்கெட் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல , அது ஒற்றுமையின் அடையாளம் . நாடு ,ஜாதி , மதம் , மொழி , கட்சி , பணக்காரன் ,ஏழை என்ற வேறுபாடுகள் களைந்து எல்லோரும் ஒன்றுபடுவது இந்த விசயத்தில் தான் . அதனால் கிரிக்கெட்டை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை . எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்பவர்களுக்கான இளைப்பாறுதலும் , உற்சாகமும் ,மகிழ்ச்சியும் தருவது கிரிக்கெட் தான் . அதனால் கிரிக்கெட்டைக் கொண்டாடுவதில் தவறில்லை . வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம் தானே . 

இந்தியா எப்போது நன்றாக விளையாடாமல் போகும் என்றும் ,  பாகிஸ்தான் எப்போது நன்றாக விளையாடும் என்றும் எப்போதுமே கணிக்க முடியாது . புள்ளிவிவரங்களை வைத்து இந்த இரு அணிகள் விளையாடும் போட்டியின் முடிவைக் கணிக்க முடியாது . வீரர்களின் மன வலிமையைப் பொறுத்தே முடிவுகள் இருக்கும் . இதில் தோனியின் அணுகுமுறையும் , அப்ரிடியின் அணுகுமுறையும் முக்கியத்துவம் பெறும் . 

வீரர்களின் திறமையை பொறுத்தவரை இரு அணிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை . இரு அணிகளுக்கும்  நெருக்கடிகள் உள்ளன . எந்த அணி நெருக்கடியை சிறப்பாகச் சமாளிக்கிறதோ அந்த அணி வெற்றி பெறும் .


வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் !

இதையும் படியுங்கள் :

...........................................

தேர்தல் ஆணையமும் , நம் ஜனநாயக அரசும் !

தேர்தல் ஆணையம் , இதற்கு முன்பு இவ்வளவு கடுமையாக நடந்து கொண்டதில்லை . இந்தத் தேர்தலுக்கு முன்பு வரை வெறும் பேச்சளவில் மட்டுமே செயல்பட்டு வந்த தேர்தல் ஆணையம் தற்பொழுது தான் செயலில் இறங்கியுள்ளது . எப்போதுமே ஆளும் கட்சியின் அராஜகத்தை தடுக்க முடியாமல் தவிக்கும் தேர்தல் ஆணையத்தைத் தான் இதற்கு முன்பு பார்த்துள்ளோம் . ஆனால் , இந்த முறை மிகத் திறமையாக ஆளும் கட்சியைச்  சமாளித்து வருகிறது . இந்த நடவடிக்கைகள் தேர்தல் முடிந்து தேர்தல் முடிவு அறிவிக்கும் வரை தொடர வேண்டும் . இவ்வளவு கடுமையான சூழலிலும் ஒரு சில இடங்களில் பணம் மற்றும் பரிசுப்பொருள் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது .

நம் நாட்டின்  நீதிமன்றங்களால் மட்டுமே கொஞ்சம் உயிருடன் இருந்த ஜனநாயகம் , தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளால் கொஞ்சம் புத்துணர்ச்சி அடைந்துள்ளது . தேர்தல் ஆணையத்தால் மட்டுமே இவ்வளவு விசயங்களைச் செய்யும்பொழுது நம் ஜனநாயக அரசால் மட்டும் ஏன் எதுவுமே செய்ய முடியவில்லை . ஒரு சாதாரண சட்டத்தைக்கூட முறையாக நிறைவேற்ற முடியவில்லை . தனியார் நிறுவனங்களின் ஏமாற்று வேலைகளையும் , பகல் கொள்ளையையும் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது . ஊழல்களை மூடி மறைக்கவே முயற்சி செய்கிறது நம் அரசு .

சாதாரண மக்களுக்காக எத்தையும் செய்ய யாரும் தயாராக இல்லை . ஊடகங்களின் கவனமும் அரசியல்வாதிகளையும் , சினிமாக்காரர்களையும் சுற்றியே இருக்கிறது . மக்களின் வரிப்பணத்தில் தான் நம் வாழ்க்கை நடக்கிறது என்ற மனநிலை எந்த ஆட்சியாளருக்கும் இல்லை . 

பேசாமல் தேர்தல் ஆணையத்தையே நம் நாட்டை ஆளச் சொல்லி விடலாம் போல ! 

மேலும் படிக்க :




....................................

Monday, March 28, 2011

கழிப்பிடங்கள் எங்கே ?

மிகச்சின்ன கிராமம் முதல் நம் தலைநகரமான சென்னை வரை எல்லா இடங்களிலும் எல்லோருக்கும் மிகப்பெரும் பிரச்சனையாக இருப்பது கழிப்பிடங்கள் . கிராமங்களில் மக்கள் பயன்படுத்தி வந்த வெட்டவெளிகள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக விற்கப்பட்டு வருகின்றன . அரசு, வீடுதோறும் கழிப்பிடம் கட்ட மானியம் வழங்கினாலும் வெட்டவெளியை பயன்படுத்தியே பழக்கப்பட்டதால் வீட்டில் கழிப்பிடம் கட்டத் தயங்குகின்றனர் .விளைவு , நீங்கள் எந்தக் கிராமத்தைக் கடந்தாலும் , எந்த வாகனத்தில் (இரு சக்கர வாகனம் ,பேருந்து , ரயில் என்று  ) சென்றாலும் உங்களை முதலில் வரவேற்ப்பது மனித கழிவுகள் தான் . கிராமத்தில் தான் இப்படி என்றால் நகரத்தில் நிலைமை இதைவிட மோசம் . மக்கள் அதிகமாக கூடும் எந்த இடத்திலும் முறையான கழிப்பிட வசதிகள் இல்லை . அது அரசு அலுவலகமனாலும் சரி விமான நிலையமாக இருந்தாலும் சரி . ஆண்களைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த தமிழ்நாடே ஒரு கழிப்பறை தான் . ஒரு சின்ன இடம் கிடைத்தால் கூட போதும் தங்கள் வேலையைக் காட்டிவிடுவர் .இதில் படித்தவர் , படிக்காதவர் , கிராமம் , நகரம் என்ற பேதமெல்லாம் இருப்பதில்லை . இந்த விசயத்தில் எல்லோரும் ஒன்று தான் . பெண்களின் நிலைமை தான் ரொம்ப கடினம் . கழிப்பறை இல்லாததால் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் .


இதையெல்லாம் விட என்னைத் துயரத்தில் ஆற்றுவது பள்ளி மாணவ , மாணவிகளின் நிலைமை தான் .இதிலும் , மாணவர்கள் எப்படியோ ஒரு விதத்தில் நிலைமையைச் சமாளித்து விடுகின்றனர் . மாணவிகளின் நிலைமை மிகவும் பரிதாபப்பட வைக்கிறது . மாணவிகளுக்கு படிக்கும்போது ஏற்ப்படும் பாதிப்பு அவர்கள் ஆயுள் வரை நீள்கிறது . பெரும்பான்மையான அரசுப்  பள்ளிகளில் போதுமான கழிப்பிட வசதி இல்லை . இந்தியாவின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் சுத்தமான , சுகாதாரமான கழிப்பிட வசதிகள் செய்யப்பட வேண்டும் .

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் , கழிப்பிடங்கள் சுத்தமானதாகவும் , பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் . சுகாதாரம் என்றால் என்ன ? என்று கேட்கும் நிலையில் தான் நம் நாட்டில் கழிப்பிடங்கள் உள்ளன . கவனிக்காமல் விட்டால் கழிப்பிடங்கள் பல்வேறு விதமான தொற்று நோய்கள் பரவுவதற்கு வழிவகுத்துவிடும் . வீடில்லாமல் கூட வாழ முடியும் , ஆனால் , கழிப்பிடங்கள் இல்லாமல் வாழ முடியுமா ?

India's sanitation crisis  

...................................

Friday, March 25, 2011

ஆஸ்திரேலியாவின் 16 ஆண்டு கால ஆதிக்கத்தை நொறுக்கியது இந்தியா !

தொடர்ந்து நான்கு முறை உலககோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி ( 1996 ,1999,2003,2007 ) அதில் மூன்று முறை கோப்பையை  வென்று உலக கோப்பை போட்டிகளில் அசைக்க முடியாத அணியாக இருந்த  ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது இந்தியா .2003  ஆம் ஆண்டு  இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு சரியான முறையில் பதிலடி கொடுத்தது . அஸ்வின் மற்றும் ரெய்னா வை அணியிலிருந்து நீக்காமல்  இருந்தது வெற்றிக்கு உதவியது . அஸ்வின் ஒரு வேகப்பந்து வீச்சாளர் போலவே செயல்படுகிறார் . துவக்கத்திலும் சரி , முடிவிலும் சரி சிறப்பாக பந்து வீசுகிறார் . நல்ல வேளை , தோனியின் மூளை சரியாக  வேளை செய்துள்ளது . இல்லையென்றால் " யாரை அணிக்கு எடுக்குறது  , யாரை தூக்குறதுனு எனக்குத் தெரியும்னு " சொல்லி சாவ்லாவையும் , நெக்ராவையும் மீண்டும் அணிக்கு தேர்வு செய்யாமல்  இருந்தாரே அதுவரை சந்தோசம் .

 ஆஸ்திரேலியாவை 260 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது சிறப்பானது . யுவராஜ்  இந்தியாவின் முன்னனி பந்து வீச்சாளர் ஆகவே மாறிவிட்டார் . ஜாகிர் கான் , ஆட்டத்தின் நடுப்பகுதியில் திருப்பு முனையை ஏற்ப்படுத்துகிறார் ,  கடைசிக் கட்டத்திலும் சிறப்பாக பந்து வீசுகிறார் . காம்பீர் ஆட்டம் இழந்தவுடன் ஆபத்பாந்தவனாக வந்தவர் தோனி அல்ல , பிரெட் லீ . தோனி அவர்களை விரைவாக ஆட்டமிழக்கச் செய்து , அடுத்தடுத்த ஓவர்களில் ரன்களை அள்ளிக்கொடுத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்து விட்டார் . யுவராஜ் மற்றும் ரெய்னாவின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது . பதட்டமான சூழ்நிலையைச்  சிறப்பாக கையாண்டனர் .இதுவரை இந்தியா விளையாடிய   ஏழு போட்டிகளில் நான்கில் ஆட்டநாயகன்  விருதை வென்று யுவராஜ் ,தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து விட்டார் . யுவராஜ் 50 அடித்தால் இந்தியா வென்று விடும் என்ற நம்பிக்கை தொடர்கிறது .

ஆஸ்திரேலியா வெளியேறியது , மற்ற அனைத்து அணிகளையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கும் . அடுத்த போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கப்போகிறோம் . இந்திய அணி , இனி தனது இயல்பான ஆட்டத்தை தொடரும் என்று நம்புவோம் . உலகக்கோப்பையை  மூன்று முறை தொடர்ந்து வென்ற அணியை நாம் வீழ்த்தியது உலககோப்பை வென்றதுக்குச் சமம் . இனி கோப்பையே வாங்கினாலும் அது வெறும் பேருக்காகத்தான் .

.................

Tuesday, March 22, 2011

நீரின்றி அமையாது உலகு !




" நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு " 


விளக்கம் : (முனைவர் ச .மெய்யப்பன் )
                       எவ்வகையில் உயர்ந்தவரும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது . அதுபோலத் தண்ணீரின் இடையறாத ஓட்டமும் மழை பெய்யவில்லை என்றால் இல்லையாகும்.

நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறள் இது . தண்ணீர் ," திரவத் தங்கம் " என்று அழைக்கப்படுகிறது . தண்ணீர் இல்லாமல் நம் வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியாது . உலகத்தில் உள்ள நீரில் 3 % மட்டுமே நல்ல தண்ணீர் . இதை மட்டுமே நாம் குடிக்கப் பயன்படுத்த முடியும் . இதிலும் 2 % சதவீத தண்ணீர் பனிக்கட்டியாக உள்ளது . வெறும் 1 % தண்ணீர் மட்டுமே பூமி முழுவதும் நாம் வாழும் பகுதியில் கிடைக்கிறது . மழை பெய்வதன் மூலம் மட்டுமே நாம் அதிகளவு நல்ல தண்ணீரைப் பெறுகிறோம் . மழை பெய்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது அடர்ந்த வனப்பகுதிகள் தான் . உலகமயமாததாலும் , பொருளாதாரமயமாததாலும் எல்லா நாடுகளிலும் வனப்பகுதியின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது . வனப்பகுதியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐ.நா .சபை 2011 ஆம் ஆண்டை சர்வதேச வன ஆண்டாக ( http://www.un.org/en/events/iyof2011/index.shtml. ) அறிவித்துள்ளது 



நாம் பெரும்பாலும் நதியின் மூலமே தண்ணீரைப் பெறுகிறோம். நதிக்கு தண்ணீர், மழையிடமிருந்து கிடைக்கிறது . நதியின் பிறப்பிடம் சோலைக்காடுகள் . புல்வெளிகள் , பசுமைமாறாக் காடுகள் ஒருங்கிணைந்து காணப்படுவது சோலைக்காடுகள். இந்த வகைக் காடுகள் 
கடல் மட்டத்தில் இருந்து 1,800 மீட்டர் மற்றும் அதற்கு மேலான உயரத்தில் 
காணப்படுகிறது. சோலைக்காடுகளின் தட்பவெப்ப நிலை , தனித்துவமான மண் அமைப்புகளை செயற்கையாக உருவாக்க முடியாததால் இந்த வகை காடுகள் தொல்லுயிர் படிமங்கள் என அழைக்கப்படுகின்றன . தமிழகத்தில் நீலகிரி ,கொடைக்கானல் , ஆனை மலை, அகத்திய மலை மற்றும் மேகமலை ஆகிய பகுதியில் மட்டுமே சோலைக் காடுகள் அரிதாக காணப்படுகின்றன . 

மழைக்காலங்களில் ஏற்படும் அதிகப்படியான மழைப்பொழிவால்  பெறப்படும் நீர்வளம் சோலைக் காடுகளின் புல்வெளிக்கு அடியில் உள்ள பஞ்சு போன்ற அடிப்பரப்பில் சேமிக்கப்படுகிறது . இது தாவர இலைகளால் அமைக்கப்பெற்ற ஓர் அடுக்கு . இந்த அடுக்கில் சேமிக்கப்பட்ட தண்ணீரானது , சிறிது சிறிதாக வெளியேற்றப்பட்டு சிறு சிறு ஓடைகளாக, மிகப்பெரிய அருவிகளாக , ஆறுகளாக உருமாறுகின்றன . இந்த காடுகளில் அதிகப்படியான தாவர இனங்களும், ரோடோடென்ரான், ரோடோமிர்ட்ஸ் , இம்பேஸியன்ஸ், எக்ஸாகம் உள்ளிட்ட சில தாவர இனங்களும் காணப்படுகின்றன . விலங்குகளில் மரத்தவளை, வரையாடு , யானை , பாம்புகள் , கருமந்தி , தேவாங்கு , மாற அணில் , சிறுத்தை , கரடி , கடமான் , காட்டுக்கோழிகள் மிகுந்த அளவு காணப்படுகின்றன . சோலைக்காடுகளின் பரவல் குறைவதால் படிப்படியாக இவ்வகை காடுகள் தொல்லுயிர் படிமங்களாகி வருவதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவிகின்றனர் .


வனப்பகுதில் கால்நடைகளின் மேய்ச்சலைத் தடுத்து வன   உயிரினங்களையும் அதைச் சார்ந்த வனப்பகுதிகளையும் பாதுகாக்கலாம். அந்நிய களைச்செடிகள் , மரங்களை ஒழித்து அதன் மூலம் பரவும் விதை முளைத்தலை தடுக்கலாம் . காட்டுத்தீயை தடுப்பதோடு , தேயிலை , காபி பயிரிடப்படுவதற்காக சோலைக்காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கலாம் . பைன் , யூகலிப்டஸ், அகேசியா வகை மரங்களை முற்றிலும் வனப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தலாம் .

நிலத்தில் வாழும் உயிரினங்களில் 80% வனத்தில்தான் வாழுகின்றன . மனிதனது அத்துமீறலால் பல உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளன .வனத்தை உருவாக்குவதில் மரங்கள் பெரும் பங்கு இருக்கின்றன . மரங்கள் இல்லையென்றால் பூமியில் வனமே இல்லாமல் போய்விடும்  . நாம் சுவாசிக்கத்  தேவைப்படும் பிராண வாயு ( oxygen o2) மரங்களில் இருந்தே அதிகளவு கிடைக்கிறது . தண்ணீர் ,  கிடைப்பதற்கும் மரங்களே முக்கிய காரணம் . நிலச்சரிவைத்   தடுப்பதிலும் மரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன . உணவுப்பொருட்கள் , எரி பொருட்கள் , பல்வேறு வகையான பொருட்கள் செய்ய என்று நாம் மரங்களில் இருந்து பெரும் நன்மைகள் ஏராளம் . மரங்கள் இல்லாமல் மனிதனே இல்லை . இயற்கை இல்லாமல் நம் பூமியே இல்லை . இயற்கையோடு இணைந்து வாழாமல் நம்மால் நிலையான மகிழ்ச்சியையோ ,  வளர்ச்சியையோ எந்தக் காலத்திலும் பெற முடியாது . 

இவ்வளவு கதையும் எதற்காக என்றால் , இன்று (மார்ச் 22)  " உலகத் தண்ணீர் தினம் ". 



நீரின்றி அமையாது உலகு !


மேலும் படிக்க :

.......................         

Monday, March 21, 2011

அனைத்து அரசு அலுவலகங்களிலும் வீடியோ கேமரா ?

அரசு செயல்படுத்தும் எந்தத் திட்டமாக இருந்தாலும் அதில் ஒட்டுமொத்த மக்கள் நலன் கவனிக்கப்பட வேண்டும் . கட்சி நலன் கவனிக்கப்படக் கூடாது . மக்களுக்காகத் தான் அரசு . கட்சிக்காக அரசு இல்லை . யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு பயன்படும் திட்டங்களை தொடர்ந்து செயல் படுத்த வேண்டும் ." டாஸ்மாக் " திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி , " மழைநீர் சேகரிப்பு " திட்டத்தை மறந்தது போல் நடக்கக் கூடாது . ஒட்டுமொத்த மக்கள் நலனும் , ஒட்டு மொத்த வளர்ச்சியும் எல்லா காலகட்டத்திலும் கவனிக்கப்பட வேண்டும் . யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒரு சில விசயங்கள் மாறுவதே இல்லை . எல்லா இடங்களிலும் தரமில்லாத சாலை வசதிகள் , பிரச்சனை குறித்து மனு கொடுக்கப்போகும் போது காட்டும் அலட்சியம் , அரசு வேலைக்கு லஞ்சம் ( மாத சம்பளம்  2000 ஆக இருந்தாலும் சரி , 20000 ஆக இருந்தாலும் சரி )  , அரசு அலுவலகங்களில் லஞ்சம் என்று நாம் சந்திக்கும் அவலங்கள் மாறுவதே இல்லை . ஆட்சியை மாற்றுவதை விட , முதலில் இந்த மாதிரியான விசயங்களை மாற்ற வேண்டும் .  

அதற்கு என்ன செய்யலாம் ? . எல்லா அரசு அலுவலகங்களிலும் வீடியோ கேமரா பொருத்தி , அனைத்து அரசு அலுவலகங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் கண்காணித்தால் என்ன ? 

என்ன நடந்தாலும் , எது வந்தாலும் லஞ்சம் வாங்கியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டவர்கள் அதிகமாக வாழும் தேசம் இது . இவர்களுக்கு எதிராக எதுவும் செய்யாமல் இருப்பதற்கு பதில் இதை மட்டுமாவது செய்யலாம் . நாம் கண்காணிக்கப் படுகிறோம் என்று உணர்ந்தால் இவர்களின் வாங்கும் லஞ்சத்தின் அளவு கொஞ்சமேனும் குறையுமல்லவா ! 

நம் ஜனநாயக நாடு இதைச் செயல் படுத்துமா ?
..................................

Friday, March 18, 2011

தமிழ்நாட்டுக்குத் தேவை இரண்டு இலவசங்கள் ?!


தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே இரண்டு இலவசங்கள் தேவை . ஒன்று இலவச மருத்துவ வசதி , இன்னொன்று இலவச கல்வி வசதி . இரண்டுமே தற்பொழுது இலவசங்கள் என்ற போர்வையில் இருந்தாலும் உண்மையில் அவை இலவசமாக கிடைப்பதில்லை . பெரிய செலவு வைக்கும் எந்த அறுவை சிகிச்சையையும் நாம் இலவசமாக பெற முடியாது . தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் யாருமே பயன்பெறவில்லை என்று கூற முடியாது . மிக மிக குறைந்த அளவு மக்களே இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர் . ஆனால் , இதற்கு ஒதுக்கப்பட்ட பணம் , மருத்துவமனைகளுக்கும் , காப்பீட்டு நிறுவனத்திற்கும் லாபம் , அரசுக்கு இழப்பு . இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை வைத்து எல்லா வசதிகளுடன் கூடிய குறைந்தபட்சம் ஓரே ஒரு மருத்துவமனையாவது கட்டி இருக்க முடியும் . ஆனால் , கட்டவில்லை .இதே நிலைமை தான் கல்விக்கும் . ஓரளவிற்குத்  தரமான பள்ளிக்கல்வி இலவசமாக கிடைக்கிறது .ஆனால் , தரமான தொழிற்கல்வியையோ , மருத்துவ கல்வியையோ நாம் இலவசமாக பெற முடியாது . 

இன்றைய சூழ்நிலையில் , எந்தக் குடும்பமாக இருந்தாலும் மருத்துவத்திற்க்காகவும் , கல்விக்காகவும் தான் அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது . ஒரு பெரிய மருத்துவ செலவை எல்லாக் குடும்பமும் ஏதோ ஒரு காரணத்திற்காக செய்ய வேண்டியுள்ளது . அந்த மருத்துவ செலவு அந்தக் குடும்பத்தின் சேமிப்பை கரைத்து அவர்களை கடனாளி ஆக்குகிறது . அது போலத் தான் கல்வியும் , நல்ல கல்விக் கூடத்தில் இடம் கிடைக்கவும் , தொடர்ந்து படிக்க வைக்கவும் பெரும் தொகை தேவைப் படுகிறது .அவர்களை மீண்டும் கடனாளி ஆக்குகிறது . இந்தக் கடன்களில் இருந்து  மீள பெரும் போராட்டத்தைச்  சந்திக்க வேண்டியுள்ளது . கல்விக்கடன் திட்டம் ஓரளவிற்குப்  பயன் தருகிறது , ஆனால் , ஒட்டுமொத்த தீர்வாக அத்திட்டம் அமையவில்லை . 

நமது கல்வித் திட்டத்தையே ஓட்டுமொத்தமாக மாற்ற வேண்டும் . நாம் படிக்கும் பெரும்பான்மையான விசயங்கள் நம் வாழ்க்கையில் எந்த நேரத்திலும் பயன் தருவதில்லை . அடிப்படை விசயங்களைத் தவிர்த்து மற்றவை நீக்கப்பட வேண்டும் . நம் கல்வி முறை , ஆரம்ப கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை மனப்பாடம் பண்ணும் திறமையை மட்டுமே வளர்க்கிறது . எவ்வளவு படித்தாலும் வேலைக்காக மற்றவர்களையும் , அரசையும் சார்ந்தே நாம் இருக்க வேண்டியுள்ளது .படித்த எல்லோருக்கும் அரசாலோ மற்றவர்களோ வேலை கொடுக்க முடியாது . சுய வேலை வாய்ப்பு தான் தீர்வு . நம் கல்வி முறை சுய வேலைவாய்ப்பை உருவாக்க முனைவதே இல்லை . அதனால் தான் நாடு முழுவதும் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது . சுய வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில் நம் கல்விமுறையை மாற்றி அமைக்க வேண்டும் .  செயல் வழிக் கற்றல் முறையும் , சமச்சீர்க் கல்வியும் பாராட்டுக்குரியவை . யார் ஆட்சிக்கு வந்தாலும் எல்லா வகுப்புகளுக்கும் சமச்சீர்க் கல்வி முறையை அமல் படுத்த வேண்டும் . 

நமக்கு வேண்டியதெல்லாம் இரண்டு தான் . ஒன்று , ஒவ்வொரு இந்தியனுக்கும்  பிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஆகும் மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும் . தரமான மருத்துவ வசதி எல்லோருக்கும் ,எல்லா நேரங்களிலும் இலவசமாக கிடைக்கச் செய்ய வேண்டும் .இன்னொன்று , இந்தியர்கள் அனைவருக்கும் ஆரம்பக்கல்வி முதல் வேலை வாய்ப்பை உருவாக்கும் கல்வி வரை இலவசமாக கொடுக்கப்பட வேண்டும் . நம் தேசிய மொழியான இந்தி , ஆரம்பக்கல்வி முதல் எல்லோருக்கும் கற்றுத் தரப்பட வேண்டும் , தமிழ்நாட்டிலும் தான் . தமிழ்நாட்டில் தமிழ் , இந்தி , ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் எல்லோருக்கும் கற்றுத் தரப்பட வேண்டும் .அதே நேரம் , தமிழ் மொழியை எந்தக் காரணத்திற்க்காகவும் ஒதுக்கக் கூடாது .  இன்றைய சூழ்நிலையில் இவை எல்லாம் சாத்தியமா ! என்று கூட நினைக்கத் தோன்றும் . ஆனால் , சாத்தியம் தான் .

மருத்துவ வசதியும் , கல்வியும் இலவசமாக வேண்டும் !

மற்ற இலவசங்கள்  எதுவும் வேண்டாம் !

மேலும் படிக்க :

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !

திண்ணைப் பேச்சு வீரரிடம் ! 
................................................................................

உலகத்தின் தூக்கம் கலையாதோ ?



" உலகத்தின் தூக்கம் கலையாதோ ...!

உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ ...!

உழைப்பவர் வாழ்க்கை மலராதோ ...!

ஒருநாள் பொழுதும் புலராதோ ...!  "


"தரைமேல் பிறக்க வைத்தான்

எங்களைத்  தண்ணீரில் பிழைக்க வைத்தான் !

கரைமேல் இருக்க வைத்தான்

பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான் !

................................................................................................

ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்

ஒவ்வொரு நாளும்  துயரம் !

ஒரு ஜான் வயிறை வளர்ப்பவர் உயிரை

ஊரார் நினைப்பது சுலபம் ! "



இந்தப்பாடல் படகோட்டி படத்துக்காக திரு . வாலி அவர்கள் எழுதியது . திரு .TMS அவர்களால் அற்புதகமாக பாடப்பட்டது . MGR உணர்வுபூர்வமாக நடித்து இருந்தார் .மீனவர்களின் துன்பங்களையும் , துயரங்களையும் வெளிப்படுத்தும் வகையில் இந்தப்பாடல் அமைந்து இருக்கும் . இந்தப்பாடல் வரிகள் இன்றைய சூழலுக்கும் பொருந்துகின்றன . ஆனால் , " ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்   " என்ற வரி இன்றைக்கு பொருந்துமா ? மீன் பிடிக்கச் சென்றவர் எப்படியும் மறுநாள் வருவார் என்ற நம்பிக்கை அன்று இருந்தது , இன்று இல்லை !. சாதாரண மனிதனுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை . ஆனால் , நடப்பதோ மக்கள் ஆட்சி . உங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமெனில் நீங்கள் பதவியில் இருக்க வேண்டும் . இல்லையென்றால், உங்களை  யார் வேண்டுமென்றாலும் , என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் . கேட்க நாதி இல்லை . 


இன்று , பாதுகாப்புக்கென்று செய்யப்படும் அனைத்தும் ( ராணுவம் ,கப்பல் படை , வான் படை , காவல் நிலையங்கள் , பல்வேறு தொழில்நுட்பங்கள் இன்னும் பல)    " மனிதனிடமிருந்து மனிதனைக் காப்பதற்காக ". என்ன கொடுமை பாருங்கள் . எந்த நாடக இருந்தாலும் , எந்த மதமாக இருந்தாலும் இறப்பவன் மனிதன் தானே . எத்தனை எத்தனை பிரிவினைகள் . நம் மனதை நன்றாக சலவை செய்து வைத்துள்ளனர் . பிரிவினைகளை ஒழிக்க யாருமே முயலவில்லை . பிரிவினைகளை வளர்க்கத்தான் செய்கின்றனர் . சிங்கள கப்பல் படை வீரர்கள் , தமிழக மீனவர்களை கொல்லத்தூண்டுவது எது ? எப்படி ஒரு சக மனிதனை சந்தோசமாக கொல்ல முடிகிறது ? உலகம் முழுவதும்  மனிதர்களால் மனிதர்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும் .

உலகம் எல்லோருக்கும் பொதுவானது ! .

எங்கு வாழ்ந்தாலும் மனிதர்கள் அனைவரும் மனிதர்களே !

மேலும் படிக்க :

காங்கிரஸ்காரர்களையும்,காங்கிரசையும் வன்மையாக கண்டிப்போம் !

காங்கிரஸை அழிப்போம் !
.......................................................

தமிழக பத்திரிக்கை உலகம் - ஆளும் கட்சியின் அடிமையா ?




தமிழக பத்திரிக்கை உலகம் ஆளும் கட்சியின் அடிமையாக மாறிவிட்டது . மக்கள் பிரச்சனைகள் தலைப்பு செய்தியாக வருவதில்லை . அரசியல் தலைவர் குளிக்கப்போனார்  , நேற்று அவர் தூங்கவில்லை , கடிதம் எழுதினார் , கூட்டு வைத்தார், டெல்லி பயணம் ( பதவி பிச்சை வாங்க) . ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஆட்டம் காண்கிறது .

முதல்வர் மற்றும் பிரதமர் பேசும் எதற்கும் பயன்படாத வெட்டிப்பேச்சை
பக்கம் பக்கமாக போடுகின்றன .மக்களுக்கு பயன்தரும் செய்திகளை எங்கோ
ஒரு ஓரத்தில் போடுகின்றன . தினத்தந்தி படித்துதான் நான் நன்கு தமிழ் கற்றுக் கொண்டேன். இன்றும் எழுத்துப்பிழைகள் குறைவாக உள்ள நாளிதழாக தினத்தந்தி உள்ளது .ஆனால், இப்பொழுது  தினத்தந்தியில் வரும்  தலைப்பு செய்திகள் அனைத்தும் ஆளும் கட்சியின் ஜல்ராவாகவுள்ளது . எப்போதுமே தினத்தந்தி ஆளும் கட்சியின் ஜால்ரா தான் .ஆனால், அது  வெளியில் தெரியாது . இப்போது சாதாரண மனிதனுக்குக்கூட தினத்தந்தியின் 
நிலை புரியும் . அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும்  அவர்களுக்கும் ஜால்ரா போடுவார்கள் . நம் நிலைமை தான் பாவம் .


மக்கள்  பிரச்சனைகள் தலைப்பு செய்தியாக வருவதில்லை . தினத்தந்தியின் தலையங்கம் யாருமே படிக்க முடியாத வகையில் மிகச்சிறிய எழுத்தில் அச்சடிக்கப் பட்டுள்ளது . தினத்தந்தியில் தலையங்கம் என்று ஒன்று வருவதே மூன்று நாட்களுக்கு முன்புதான் எனக்குத்தெரியும் . தலையங்கத்தைமுதல்பக்கத்தில் போடுங்கள் அல்லது 4 வது பக்கத்திலேயே 
பெரியதாகபோடுங்கள் . இல்லையென்றால் தலையங்கமே போடாதீர்கள் . 

இந்த நேரத்தில் சுப்பிரமணியன் சாமி அவர்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும் . இந்தியாவின் துணிச்சல் மிகு மனிதர் . எத்தனையோ பேருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றித் தெரிந்திருந்தாலும் யாரும் வழக்கு தொடர  முயற்சி செய்யவில்லை . இவர் மட்டுமே வழக்கு தொடர்ந்தார் . வெற்றியும் பெற்றார் . பெருவாரியான மக்களுக்கு ஸ்பெக்ட்ரம் பற்றி தெரியவந்தது சுப்பிரமணியன் சாமி அவர்கள் புண்ணியத்தில் தான் . அடுத்து தமிழக முதல்வரை குறி வைத்துள்ளார் ? ஆக மொத்தத்தில் இவர் ஒரு " ஒன் மேன் ஆர்மி " . இவர் பணி தொடரட்டும் . இவர் புண்ணியத்தில் இந்தியாவில்   ஜனநாயகம் கொஞ்சம் உயிருடன் இருக்கிறது .


மின்சார தட்டுப்பாடு மீண்டும் தலை தூக்குகிறது . இரண்டு மணி நேரமாக இருந்த மின்தடை தற்பொழுது ஐந்து மணி நேரமாக மாறிவிட்டது . இது மட்டும் இல்லாமல் எப்பொழுது மின்சாரம் போகும் , எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது . மின்சார தட்டுப்பாடு ஆரம்பித்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டாலும்  ஆளும் அரசு எதிர் கட்சியை குறை சொல்கிறது .
இதைப்பற்றி எந்தப்   பத்திரிக்கையும் பெரிதாக எழுதுவதில்லை . சின்ன பெட்டிச்  செய்தியாக மட்டுமே இடம் பெறுகிறது .


தமிழகத்தில் எல்லாப் பத்திரிக்கைகளும் ஆளும் கட்சியின் அடிமையாக இல்லை . ஆனால் , எந்தப் பத்திரிக்கையும் (ஒரு சில விதிவிலக்குகள் உண்டு ) நடுநிலையாகவும் , மக்கள் நலனில் கவனம் செலுத்தும் நிலையிலும் இல்லை .அவரவர் சார்ந்த அரசியல் கட்சியின் நலனுக்காகவும் , பரபரப்பாக எதையாவது எழுதி பணம் சம்பாதிக்கவும் மட்டுமே பத்திரிக்கை நடத்துகின்றனர் . இடையில் மாட்டிக்கொள்வது இளிச்சவாயர்களான நாம்தான் .


உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கரையிருந்தால் அடுத்து நடைபெறும் தேர்தலில் மக்கள் ஓட்டுப்போட உதவவேண்டும் . எப்படி ? 234 தொகுதிகளிலும் களப்பணியாற்ற வேண்டும் . ஒவ்வொரு தொகுதியிலும் 5 வருடத்திற்கு முன்பு என்னென்ன பிரச்சனைகள் இருந்தன . கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அந்தப்பிரச்சனைகள் தீர்க்கப்பட்டனவா இல்லையா ? தீர்க்கப்படவில்லை எனில் அந்த சட்டமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட   நிதி எங்கே போனது ? தொகுதிக்கு என்ன செய்திருக்கிறார் ? என்று கண்டுபிடித்து எழுதுங்கள் . இதைச் செய்யக்கூடிய தகுதி  நிறையப்
 பத்திரிக்கைகளுக்கு உள்ளது .இவர்களின் நிருபர்கள் எல்லாத்தொகுதியிலும்
உள்ளனர்  . ஆனால் ,  செய்ய மாட்டார்கள் .  வெட்டிக் கருத்துக்கணிப்பு
 மட்டும்   எல்லாப் பத்திரிக்கைகளும் வெளிவரும் .


சட்டமன்ற உறுப்பினர் எந்தக்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நிதியை ஒழுங்காகப் பயன்படுத்தி தொகுதிக்கு நல்லது செய்திருந்தால் அவர் மீண்டும் பதவிக்கு வரட்டும் . இல்லையென்றால் அவரை தூக்கி எறியுங்கள் . கட்சியைப் பார்த்து ஓட்டுப் போடாதீர்கள் . உங்கள் தொகுதியில் நிற்பவரில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உங்களுக்கு நல்லது செய்பவரை தேர்ந்தெடுங்கள் .

கட்சிக்காக நடத்தப்படும் ஆட்சியை தூக்கி எறியுங்கள் !


மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியை கொண்டு வாருங்கள் !

தமிழக பத்திரிக்கை உலகம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள

இந்த இணைய தொடர்பில் சென்று  படித்துப்பாருங்கள் .


ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஆட்டம் காண்கிறது !
..............................................

காங்கிரஸ்காரர்களையும்,காங்கிரசையும் வன்மையாக கண்டிப்போம் !

                                                                        
சோனியாகாந்தி யார் ? காங்கிரஸ் கட்சியின் தலைவி அவ்வளவுதானே.
அவர் , மத்திய அரசு சார்ந்த எந்தப்பதவியிலும் இல்லை . அப்புறம் எதற்கு மத்திய அரசு சார்ந்த விளம்பரங்களில் சோனியாகாந்தியின் படம் வெளியிடப்படுகிறது . கட்சித்தலைவி என்றால் கட்சிக்குள் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் சொந்தப்பணத்தில் உங்கள் தலைவிக்கு விளம்பரம் செய்யுங்கள் . எங்கள் வரிப்பணத்தில் ஏன் விளம்பரம் செய்கிறீர்கள் ? குடியரசுத்  தலைவர் பெயர் கூட இடம்பெறுவதில்லை .





கடந்த ஆண்டு நடந்த ஒரு சம்பவம் . ஜூலை 6 ஆம் தேதி டெல்லி விமான நிலையத்தில் 3 வது டெர்மினல் திறக்கப்பட்டது . அந்த அடிக்கல்லில்  சோனியாகாந்தி பெயர் எதற்கு உள்ளது ?


                               


தேசிய நெடுஞ்சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்ட பெயர் பலகைகளில் மன்மோகன் சிங் படமும் சோனியா காந்தி படமும் இடம்பெற்றன .இங்கும் நெடுஞ்சாலைத் துறைக்கும் சோனியா காந்திக்கும் என்ன சம்பந்தம் ?  நீதி மன்றம் , இவர்களின் படங்கள் இடம் பெற்ற பெயர் பலகைகளை நீக்கக்கோரி உத்தரவிட்டது . ஆனால் ,இன்னும் பெரும்பாலான இடங்களில் அவர்களின் படங்கள் உள்ள பெயர் பலகைகள் நீக்கவில்லை .( தேசிய நெடுஞ்சாலைகளின் நடுவில் வைக்கப்பட்ட அரளிச் செடிகளுக்கு தண்ணீர் ஊத்துகின்றனர் . ஆனால் வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக நடப்பட்ட மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதில்லை ,பல இடங்களில் மரங்களே நடப்படவில்லை . கணக்குக் காட்டாமல் வாங்கப்படும் சுங்கப்பணம் எங்கே போகிறது ??? )




இதைக் கண்டிக்காத சோனியாகாந்தியையும், இந்தச்செயலை தொடர்ந்து செய்து வரும் மத்திய அமைச்சர்களையும் வன்மையாக கண்டிப்போம் . இனிமேலாவது இதை நிறுத்திக்கொள்ளுங்கள் .


இதுவரை நடந்த பெரும் ஊழல்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் போதுதான் நடந்துள்ளது . உதாரணம் : நகர்வாலா , போபர்ஸ் , ஹவாலா , காமன்வெல்த் ,ஆதர்ஷ் , ஸ்பெக்ட்ரம் இன்னும் பல . அடுத்து S கற்றை ஸ்பெக்ட்ரம் ??  ஊழல் செய்யவே ஆட்சிக்கு வருகின்றார்களா என்றும் தெரியவில்லை . அப்போ காங்கிரஸ் இருக்கும் வரை ஊழல் இருக்கும் .  ஊழல் இருக்கும் வரை இந்தியா வளராது . அதனால அடுத்து யாருக்கு ஓட்டு போடலாம் ?????!!!!!!? அது ரகசியம்   ?


பாரத பிரதமர் சொல்கிறார் "ஊழல்தான் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது ". யார் ஆட்சியில் ஊழல் நடக்கிறது ? உங்கள் ஆட்சியில் தானே . உங்களால் தான் நாட்டில் நடக்கும் ஊழலைத் தடுக்க முடியவில்லையே அப்புறம் எதற்கு இன்னும் பதவியில்இருக்கிறீர்கள் ?  தேர்தல் செலவு உங்கள் ஊழல் பணத்தைவிடகுறைவுதான் . அதனால் மீண்டும் தேர்தல் நடத்துவதில் ஒன்றும் தப்பில்லை .

 மக்கள் நலனும் , நாட்டின் வளர்ச்சியும் தான் முக்கியம் என்றால் உடனே ஆட்சியைக் கலைக்க வேண்டியது தானே ஆனால் செய்யமாட்டீர்கள்  . பதவி சுகம் உங்களை கலைக்க விடாது .  மக்கள் நலனுக்காக மட்டும்  ஆட்சி செய்யுங்கள் . இல்லை என்றால் உடனே பதவி  விலகுங்கள் . வீண்பேச்சு பேசாதீர்கள் ! சோனியாகாந்தி அவர்களே , பிரதமர் வேண்டுமானால் உங்கள்பொம்மையாக இருக்கலாம் ,அதற்காக         இந்தியனும் ,இந்தியாவும்  உங்கள் பொம்மையாக இருக்கும் என்று நினைக்காதீர்கள் !

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும் போது அது வேறு நாடு என்று சொன்னீர்கள் . இப்போது தமிழக மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள் . இந்தியர்கள் அனைவரும் தமிழர்கள் இல்லை .ஆனால் இந்தியாவில் வாழும் தமிழர்கள் அனைவரும் இந்தியர்கள் தானே. இப்பொழுது கொல்லப்படும் ஒவ்வொருமீனவரும் இந்தியர் . இப்போது என்ன சொல்லப்போகிறீர்கள் ? ஒட்டுமொத்த இந்தியாவின் ஆதரவைப்   பெறவேண்டிய காலகட்டம் இது .
ஊடகங்களும் "தமிழக மீனர்வர்களைக்  காப்பாற்றுவோம்  " என்று தான் போராடுகின்றன . இனி "இந்திய மீனர்வர்களைக்  காப்பாற்றுவோம்" என்று போராட வேண்டும் .  இந்தியிலும் , ஆங்கிலத்திலும் நம் மீனவர்கள் நிலை மொழி பெயர்க்கப்பட  வேண்டும் . ஓட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை பெறவேண்டும் .

இலங்கை கடற்படை அவர்கள் எல்லையில் காவல் காக்கின்றனர் . இந்திய கடற்படை  என்ன செய்கிறது ? பதில் சொல்லுங்கள் ?
பூமியில் வாழும் எல்லா மனிதர்களும்  சமம் தான் . ஒரு மனிதன் பெரிய பதவியில் இருக்கும் போது கொல்லப்பட்டால் அதற்கு காரணமானவர்களை பல ஆண்டுகளுக்கு கொடுமைப் படுத்துவீர்கள் முடிந்தால் கொல்வீர்கள் . ஆனால் கொல்லப்படுவது ஒரு  சாதாரண மனிதனாக இருந்தால் ஒரு நாள் இரங்கல் ,  2  இலட்சம் பணம் அவ்வளவுதானா ?  பதில் சொல்லுங்கள் ?

மக்கள் நலனுக்காக மட்டும் ஆட்சி செய்யுங்கள் !

இல்லையென்றால் உடனே பதவி விலகுங்கள்  !

வீண்பேச்சு பேசாதீர்கள் !

கட்சி நலன் சார்ந்த அரசியலை காலி செய்வோம் !

மக்கள் நலன் சார்ந்த அரசியலை உருவாக்குவோம் !
......................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms