Monday, September 2, 2024

மக்காமிஷி ( Makkamisi) ❤️


குழந்தைகள் உலகிலிருந்து தெரிந்து கொண்ட பாடல். கடந்த ஒரு வாரமாக அவங்களுக்கு 'Morning Vibe' இந்தப் பாடல் தான். அவங்களுடன் சேர்ந்து கேட்டு ஓய்வு நேரங்களில் முனுமுனுக்கும் அளவிற்கு பிடித்துப் போய்விட்டது. 


ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஜெயம் ரவி நடித்து வெளியாக இருக்கும் ' Brother ' எனும் திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. பால் டப்பா எனும் பெயருடைய தமிழ் ராப் பாடகர் இப்பாடலை எழுதி பாடியிருக்கிறார். கேட்கும் போது மிகவும் எனர்ஜியாக இருக்கிறது. இந்தக் கால தத்துவபாடல் என்றும் சொல்லலாம். பால் டப்பா, ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


பால் டப்பா யார் என்று தேடும் போது தான் தெரிந்தது குழந்தைகளின் போன வார ' Morning Vibe' பாடலான 'காத்து மேல ' பாடலை எழுதி பாடியவர் என்று. இந்த இரண்டு பாடல்களிலேயே குழந்தைகளை கவர்ந்துவிட்டார் பால் டப்பா ❤️. 


" மக்காமிஷி.. 

பிரச்னையை லேப்ட் ஹண்ட்ல ஹாண்டில் பண்ற மைக்கேல்ஹஸி......"


மேலும் படிக்க :

காதல் வானிலே... காதல் வானிலே...-பிரித்தி உத்தம்சிங் ❤️

அடி ராக்கம்மா கையத்தட்டு...!

பாலியல் சுரண்டல்கள் ஒழியட்டும் !


கேரள திரையுலகில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத் திரையுலகிலும் ஏன் உலகத்தில் உள்ள எல்லா திரையுலகிலும் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறலும் , பாலியல் சுரண்டலும் இருக்கிறது. இதை உலகில் உள்ள எந்தத் திரையுலகும் மறுக்க முடியாது என்பது தான் யதார்த்தம். 


மூடி மறைக்க முயற்சிப்பதை விட்டுவிட்டு முதலில் திரையுலகில் இருப்பவர்களே இதை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் மேலும் குற்றங்கள் நிகழாமல் தடுக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் மனநிலை ஒழியாமல் எந்த மாற்றமும் நிகழாது.


இந்தியாவைப் பொறுத்தவரை பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் காவலர்களாக இருந்தாலும், வழக்கறிஞர்களாக இருந்தாலும் கூட பாலியல் ரீதியான அத்துமீறல்களும், வன்கொடுமைகளும் பணியிடங்களில் நிகழ்கின்றன. 

இவை எல்லாவற்றுக்கும் ஆணாதிக்க மனநிலை தான் காரணமாக இருக்கிறது. ஆணாதிக்க மனநிலை ஒழியாமல் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது எங்கும் கிடைக்காது. 


இயல்பாகவே ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் மாற்று பாலினத்தவராக இருந்தாலும் இன்னொரு மனிதர் மீது ஈர்ப்பு வருவது இயல்பு. இதில் எந்தத் தவறும் இல்லை.பெண்ணோ, ஆணோ 'Mutual Consent ' இல்லாமல் நடக்கும் எதுவும் தவறு தான்; குற்றம் தான். 


வாழ்க்கைச் சூழல் காரணமாக வெவ்வேறு விதமான பணிகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் அவர்களுக்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். 


ஆணாதிக்க மனநிலையை வளர்ப்பதில் தமிழ்த் திரைப்படங்களும், சின்னத்திரையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாயக்துதிபாடலை வளர்ப்பதுடன் , அதீத வன்முறையையும், பெண்களை கவர்ச்சி பொருளாகவும் முன்வைக்கின்றன. பள்ளி மாணவர்களின் மோதல்கள் கூட மரணம் வரை செல்வதற்கு யார் காரணம்? 


இயற்கையைப் போலத்தான் பெண்களும் எத்தனை விதமான தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டாலும் அவர்கள் தொடர்ந்து இயங்குவதை யாராலும் தடுக்க முடியாது. 


ஆணாதிக்க மனநிலை ஒழியட்டும் !


எல்லோருக்கும் நல்வாழ்வு அமையட்டும் !


மேலும் படிக்க:

பெண் எனும் உருமாறும் சக்தி !


காதல் வானிலே... காதல் வானிலே...-பிரித்தி உத்தம்சிங் ❤️


ராசய்யா(1995) திரைப்படத்தில், இளையராஜா இசையமைப்பில் உருவான இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் சாதாரணமாக கடந்து போக முடிந்ததில்லை. சமீப காலங்களில் சன் லைப் தொலைக்காட்சியில் தான் இப்பாடலை அதிகம் பார்த்திருக்கிறேன். 


இளையராஜாவின் இசை, வாலியின் டச் நிறைந்த பாடல் வரிகள், பிரபுதேவாவின் நடனம், ரோஜாவின் வசீகரம் இவற்றையெல்லாம் கடந்து அதிகம் ஈர்த்தது அந்த பெண் குரல். தேடிய போது தான் தெரிந்தது, அந்தக் குரலிற்குச் சொந்தக்காரர் பிரித்தி உத்தம்சிங் என்று. இவர், இளையராஜாவின் உதவியாளராக இருந்து பின்னாளில் இசையமைப்பாளராக மாறிய உத்தம் சிங்ஙின் மகள். 


குறிப்பாக இந்த வரிகள் காதில் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. 


"அன்னையாம் ஒரு

தந்தையாம் அது காதல்தான்

காதல்தான் ஓ..."


"அப்பர் சுந்தரர்

அய்யன் காதலில் ஆண்டாள்

கொண்டதும் காதல்தான்..."


"ஓம் சாந்தி ஓம்

சாந்தி ஓம் சாந்தி ஓம்

சாந்தி ஓம்"


அதே ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற "அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்...(சந்திரலேகா)" பாடலும் இந்த பிரித்தி உத்தம்சிங் பாடியது தான். இரண்டு பாடல்களிலும் ஆண் குரல்களைத் தாண்டி ஒலிப்பது பிரித்தியின் குரல் தான். வேறு தமிழ் பாடல்கள் பாடியிருக்கிறாரா என்று தெரியவில்லை. 


உயிரை மீட்டும் குரல் பிரித்தி உத்தம் சிங்ஙுடையது . இவரது மற்ற மொழி பாடல்களையும் கேட்க வேண்டும்.


மேலும் படிக்க  :


அடி ராக்கம்மா கையத்தட்டு...!


பட்டுவண்ண ரோசாவாம் ...!



Maharaj - வடக்கிலிருந்து ஒரு வெளிச்சம் 👍


தமிழ்நாட்டில் இப்படியான பகுத்தறிவு கருத்துகளை முன்வைத்து திரைப்படங்கள் எடுப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் எடுக்கமாட்டார்கள். கடந்த ஓராண்டாக பார்ப்பன ஆதிக்கத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் வடக்கிலிருக்கும் அரசியல்வாதிகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இந்தச் சூழலில் இப்படியானதொரு திரைப்படம் வெளிவந்திருக்கிறது. 


19ம் நூற்றாண்டில் பம்பாய் நகரத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இந்த 'மகராஜ்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பகுத்தறிவு மற்றும் சீர்திருத்த கருத்துகளை யார் சொன்னாலும் நாம் வரவேற்க வேண்டும். குஜராத்தில் பிறந்த கர்சன்தாஸ் எனும் பிராமணர், பகுத்தறிவு கருத்துகளை அங்கே அந்த காலகட்டத்தில் முன் வைத்திருக்கிறார். அதனால் இன்னல்களையும் சந்தித்திருக்கிறார். எல்லோரையும் சமமாக நடத்தும் எவரும் ( பிராமணராக இருந்தாலும் ) பார்ப்பனர் அல்ல. பிறப்பால், தான் மற்றவர்களை விட உயர்ந்தவர் என நினைக்கும் ஒவ்வொருவரும் ( பிராமணராக இல்லாவிட்டாலும் )பார்ப்பனர் தான். பிறப்பால் அனைவரும் சமமே.


பக்தியின் பெயரால் நடக்கும் கொடுமைகள் இன்றும் குறைந்தபாடில்லை. அப்படி பக்தியை துணையாக வைத்துக் கொண்டு மக்களை முட்டாளாக்கி குளிர்காய்ந்த மகராஜ் எனும் ஒரு மடத்தைச் சேர்ந்த சாமியாரின் அயோக்கியத்தனத்தை தோலுரித்து காட்டும் திரைப்படம் தான் இது. கடவுளுக்கும் பக்தருக்கும் இடையில் சாமியாரோ ,வேறு யாருமோ தேவையில்லை. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளை மட்டுமே வழிபட வேண்டும். கடவுள் பேரைச் சொல்லி ஏமாற்றும் கூட்டத்துடன் எப்போதும் சேரக்கூடாது. 


தற்போதைய காலம் என்பது ஜக்கி, நித்தியானந்தா, ரவிசங்கர், பாபா ராம்தேவ், பால் தினகரன் போன்ற கார்ப்பரேட் சாமியார்களின் காலமாக இருக்கிறது. இவர்கள் எவரையும் நம்பக்கூடாது. இவர்கள் இல்லாமல் இந்தியா முழுவதும் விதவிதமான ஆதீனங்கள், அமைப்புகள் இருக்கின்றன. இவர்களும் ஏமாற்றுக்காரர்கள் தான். எந்த மதமாக இருந்தாலும் எந்தக் கடவுளாக இருந்தாலும் கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் யாரும் தேவையில்லை. கடவுளே தேவையில்லை என்பது தனியாக விவாதிக்க வேண்டியது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளை மட்டுமே நம்புங்கள்.


ஒரே நேர்கோட்டில் கதையை சொல்லி முடித்திருக்கிறார்கள். " ஆளும் வர்க்கத்தின் பலம் அரசு இயந்திரங்களான நிர்வாகம், சட்டம், அதிகாரம் முதலிய அரசு இயந்திரங்களை இயக்குவதில் மட்டும் அல்ல பண்பாட்டுத் தளத்திலும் பத்திரமாக இருக்கிறது. எனவே ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் பண்பாட்டுத் தளத்திலும் போராட வேண்டியிருக்கிறது" - என்ற கிராம்சியின் கூற்றுக்கிணங்க இந்திய மக்களின் பண்பாட்டுத் தளத்திலும் இறங்கி போராடினால் மட்டுமே இந்த பாசிச, மக்கள் விரோத,மதவாத பாஜக அரசை அதிகாரத்திலிருந்து தூக்கியெறிய முடியும். இந்து என்பது வேறு இந்துத்துவம் என்பது வேறு என்பதை இந்திய மக்கள் உணரும் போது பாஜக அதிகாரத்தில் இருக்காது.


விதவிதமான வடிவங்களில் மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் அதிகளவில் பிற்போக்குத் தனங்கள் பரப்பப்படும் பாலிவுட் சினிமாவிலிருந்து இப்படியானதொரு திரைப்படம் வந்திருப்பது ஆச்சரியம் தான். இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். பிற்போக்குத் தனங்கள் ஒழிந்து போகட்டும். எல்லா மதங்களிலும் சாமியார்களின் ஆதிக்கம் அழியட்டும். சமத்துவம் பரவட்டும்.


மேலும் படிக்க  :


FANDRY - மனதிற்கு நெருக்கமான படைப்பு !


DAREDEVIL MUSTHAFA - FANTASTIC MAKING !

குரங்கு பெடல் ❤️


ஏறக்குறைய அனைத்து குழந்தைகளின் கைகளிலும் மொபைல் போன்கள் வந்துவிட்டாலும் சைக்கிள் மீதான பிரியம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. முன்பைப் போல இடவசதி இல்லாவிட்டாலும் கூட அடம் பிடித்தாவது சைக்கிள் வாங்கி விடுகிறார்கள், குழந்தைகள். இப்படியான சூழலில் எழுத்தாளர் ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தான் 'குரங்கு பெடல் '.


குழந்தைகளையும் சைக்கிளையும் பிரிக்க முடியாது. சைக்கிளுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள பிணைப்பை 80 களின் காலப் பின்னணியில் அழகியலுடன் சொல்லியிருக்கிறது இத்திரைப்படம். குரங்கு பெடல் என்பதையும், வாடகை சைக்கிள் என்ற நடைமுறையும் இப்போதைய தலைமுறைக்குத் தெரியாது. இத்திரைப்படத்தைக் காணும் போது அவர்களும் தெரிந்து கொள்வார்கள். 


இத்திரைப்படத்தில் சைக்கிளுடன் அப்பாவிற்கு நேர்ந்த அனுபவமும், மகனிற்கு கிடைத்த அனுபவமும் வெவ்வேறானவை. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் காண வேண்டிய திரைப்படம். அப்படி குழந்தைகளுடன் சேர்ந்து காணும் போது சைக்கிளுடனான தங்களது கடந்த கால நினைவுகளை அசை போட முடியும். 


கதைக்குத் தேவையே இல்லாத , குழந்தைகளும் பார்ப்பார்கள் என்ற குறைந்தபட்ச பொறுப்புணர்வு கூட இல்லாமல் அதீத வன்முறைக் காட்சிகள் இன்றைய திரைப்படங்களில் திணிக்கப்படும் சூழலில், அமைதியான சூழலை அழகாக படம்பிடித்து அனைவரும் ரசித்து பார்க்கும்படி செய்திருக்கிறது இந்த 'குரங்கு பெடல்'.


சைக்கிள் மீதான காதல் நமக்குத் தீர்வதேயில்லை. நாம் வெவ்வேறு வாகனங்களில் பயணித்தாலும் இப்போதும் சைக்கள் வாங்க வேண்டும், சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே தான் இருக்கும். எங்கு இருந்தாலும், என்ன பணி செய்தாலும் தினமும் சைக்கிள் ஓட்டுவதை தவற விடாதவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். சைக்கிள் ஓட்டுவது உடலுக்கும் இயற்கைக்கும் நல்லது. 


இந்தத் திரைப்படத்தைக் காணும் போது இன்னும் நிறைய விசயங்களைச் சேர்த்திருக்கலாமோ என்று கூட தோன்றும். சிறுகதையை திரையனுபவமாக மாற்றியிருப்பதால் அதற்குள்ளாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார்கள். இலக்கிய படைப்புகள் திரைப்படங்களாவதும், இரண்டு மூன்று பேர் சேர்ந்து திரைக்கதை எழுதுவதும் மிகவும் ஆரோக்கியமான விசயம். 


இன்றைய திரைப்படங்களில் குழந்தைகள் குழந்தைகளாக காட்டப்படுவதில்லை அல்லது குழந்தைகளே இல்லை. இந்தச் சூழலில் குழந்தைகளுக்காக, குழந்தைகளுக்கான திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் கமலக்கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள். கமலக்கண்ணன் இயக்கிய 'மதுபானக்கடை' திரைப்படத்தை இதுவரை பார்க்காதவர்கள் இப்போதாதவது பார்த்து விடுங்கள்.உங்களுக்கு நல்லதொரு திரையனுபவம் கிடைப்பது உறுதி. இவரது 'வட்டம்' திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. அடுத்து அதையும் காண வேண்டும். 


நல்ல சிறுகதை, நல்ல ஒளிப்பதிவு, நல்ல இசை, நல்ல இயக்கம் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


மேலும் படிக்க  :


அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !


சேத்துமான் ❤️

Amar Singh CHAMKILA ❤️❤️❤️


இரட்டை அர்த்தப் பாடல்களை எழுதி, இசையமைத்து,பாடி அதன் மூலம் பெரும் புகழ் பெற்றவர், பஞ்சாப் பாடகர், அமர்சிங் சம்கிலா. அதற்காகவே தனது 27வது வயதில்(1988) அடையாளம் தெரியாத நபர்களால் மனைவியுடன் சேர்த்து சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் அற்புதமான திரைப்படம் தான், 'அமர்சிங் சம்கிலா'.  


புனிதம் என்று எதுவும் பூமியில் இல்லை. மதக்கோட்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்கும் அடிப்படைவாதிகள்தான் புனிதம், புனிதம் என்று தொடர்ந்து கூவிக் கொண்டேயிருக்கிறார்கள். மாற்றம் என்பதே நிலையானது. இதை அடிப்படைவாதிகள் ஏற்பதில்லை. அடிப்படைவாதிகளை வளர்த்து பாதுகாக்கும் வேலையை அனைத்து மதங்களும் தொடர்ந்து செய்து வருகின்றன. அதிலும் ஆயுதம் ஏந்திய அடிப்படைவாதிகள் எப்போதும் ஆபத்தானவர்களே. இதனால் தான் கார்ல் மார்க்ஸ் " மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான முதல் தேவை, மதங்களை அழிப்பது " என்று சொல்லியிருக்கிறார். மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடையில் நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள் தேவையில்லை.


சம்கிலா, தான் பிறந்து வளர்ந்த சூழலலாலேயே இப்படியான பாடல்களை எழுதவும், பாடவும் செய்கிறார். இந்தப் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து இரட்டை அர்த்தப் பாடல்களையே பாடியே புகழ் பெறுகிறார். நன்றாக பாடும் திறமையுள்ளவர் என்பதாலேயே தனது முதல் திருமணத்தை மறைத்து 

அமர்ஜ்யோத் எனும் பாடகியை திருமணம் செய்து கொள்கிறார். அந்த காலத்தில் இங்கே என்.எஸ்.கிருஷ்ணனும் தனது முதல் திருமணத்தை மறைத்துவிட்டு டி.ஏ. மதுரத்தை திருமணம் செய்து கொண்டது நினைவிற்கு வருகிறது.


எல்லா நாட்டு கலை வடிவங்களிலும் பாலியல் சார்ந்த குறியீடுகளும், குறிப்பாக பாடல்களில் இரட்டை அர்த்தங்களும் தொடர்ந்து இருந்து வருகின்றன. வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ எல்லோருமே இம்மாதிரியான பாடல்களை ரசிக்கிறார்கள்; கதைகளை தேடித்தேடி வாசிக்கிறார்கள். கலை மக்களுக்கானது . இதில் புனிதம் என்றோ தீட்டு என்றோ எதுவுமில்லை. 


தமிழ் திரையிசைப் பாடல்களில் இரட்டை அர்த்தங்கள் அன்றிலிருந்து இன்று வரை தொடர்கின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை அர்த்தம் புரிந்தோ புரியாமலோ கொண்டாடப்பட்டவை. ரசிக்கும் வகையிலான பாடல்களின் எண்ணிக்கையே அதிகம். அந்த அளவிற்கு தமிழ் மொழி இனிமையானது. வெகு சில பாடல்கள் மட்டுமே கொச்சையான மொழியில் எழுதப்பட்டு பாடப்பட்டிருக்கின்றன. கதைகளிலும் கி.ராஜநாரயாணன் தேடித்தேடி சேகரித்த நாட்டார் பாலியல் கதைகள் எல்லாம் பொக்கிஷம். வயதிற்கு வந்த எவரும் இரட்டை அர்த்தப் பாடல்களைக் கேட்கலாம், கதைகளை வாசிக்கலாம், ரசிக்கலாம், வாழலாம். 


மக்கள் தொடர்ந்து விரும்பியதாலேயே எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து இரட்டை அர்த்தப் பாடல்களை பாடுகிறார், சம்கிலா. எதிர்ப்புகள் அதிகரிக்கும் வாழ்வின் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் கடந்தவராகவும், இனி என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்ற நிலையை எப்படி வந்தடைகிறார் என்பதை இயக்குநர் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு கலைஞனாக மாறிய தருணமது. அதனாலேயே இன்று வரை சம்கிலா பஞ்சாபில் கொண்டாடப்படுகிறார். தொடர்ந்து அவரைப் பற்றிய திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சம்கிலா மக்களின் கலைஞன்.


சம்கிலாவாக திலிஜித் தோஸாஞ்ச் அற்புதமாக பொருந்தியிருக்கிறார். இயல்பிலேயே அவர் ஒரு பாடகர் என்பதால் இன்னும் நெருக்கமாக உணர முடிகிறது. சம்கிலாவின் இணையர்,அமர்ஜ்யோத்தாக பரினீதி சோப்ரா நடித்திருக்கிறார். இந்தக் கதாப்பாத்திரத்தில் நாம் பரினீதி சோப்ராவைக் காண முடியாது, அமர்ஜ்யோத்தை மட்டுமே காண முடியும். அந்த அளவிற்கு அந்தக் கதாப்பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். 


ஒரு திரைப்படத்தைப் பார்த்து முடித்தவுடனயே அத்திரைப்படத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றுவது அபூர்வம். இந்தத் திரைப்படத்தைப் பார்த்து முடிக்கும் போது அப்படி தோன்றியது. உடனேயே மீண்டும் ஒரு முறை பார்த்தேன். இப்படி பார்க்கும் முதல் திரைப்படமிது. மற்ற சில படங்கள் பார்க்கும் போது இப்படி தோன்றினாலும் உடனே பார்க்க வாய்ப்பு அமையவில்லை. இந்தத் திரைப்படத்திற்கு அந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது. அப்படி பார்க்க ஒரே காரணம், இசை - ஏ.ஆர்.ரஹ்மான் என்பது தான். 


தமிழ் ரசிகர்கள் இது ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றே உணர முடியாத அளவிற்கு மாயம் செய்திருக்கிறார். கொஞ்சம் கூட மேற்கத்திய சாயல் இல்லை. தமிழில் பொன்னியின் செல்வன், மாமன்னன் எல்லாம் மேற்கத்திய பாணி இசையால் இயல்பு மாறிய திரைப்படங்கள். தமிழில் அசலான நம் மண் வாசனை வீசும் ஒரே ஒரு திரைப்படம் கூட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இல்லை. இயக்குநர்கள் காரணமா என்றும் தெரியவில்லை. ரஹ்மான் இசைக்காக மட்டுமே கூட நாம் இத்திரைப்படத்தைக் காணலாம்.


சம்கிலா திரைப்படத்தில் பாடகர் சம்கிலாவின் பாடல்களை மறு உருவாக்கம் செய்ததாலோ என்னவோ மொழி புரியாவிட்டாலும் பாடல்களை ரசிக்க முடிகிறது. தனியாகவும் 3 பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கி இருக்கிறார். அதிலும் கடைசி பாட்டெல்லாம் (மைனே விதா கரோ... ) அற்புதம். 


அமர்சிங் சம்கிலா இவ்வாறு நடத்தப்பட்டதற்கும், கொல்லப்படத்தற்கும் அவர் ஒரு தலித் என்பதும் ஒரு காரணம். இன்று வரை அவரை யார் கொன்றது என்பது தெரியவில்லை.பல முறை மிரட்டிய ஆயுதம் ஏந்திய அடிப்படைவாதிகளா ? சக பாடக போட்டியார்களா ? அவரின் மனைவி, அமர்ஜ்யோத் உயர் சாதி என்பதால் நடத்தப்பட்ட ஆணவப்படுகொலையா? எதுவும் தெரியவில்லை. ஆனால் இன்று வரை பஞ்சாபில் சம்கிலாவின் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. மொழி புரியாவிட்டாலும் அசலான சம்கிலாவும் , அமர்ஜ்யோத்தும் சேர்ந்து பாடிய பாடல்களை கேட்டுப் பாருங்கள். நல்ல அனுபவம். தனித்துவமான குரல்கள். 'Music is the Universal Language ' என்று சொல்வது முற்றிலும் உண்மை.


இயக்குநர் இம்தியாஸ் அலி அவர்களின் அற்புதமான உருவாக்கம். இவரது திரைப்படத்தைப் பார்ப்பது இதுவே முதல் முறை. இவரின் மற்ற திரைப்படங்களையும் காண வேண்டும். கதையின் ஊடாக அடிப்படைவாதம் குறித்தான விமர்சன பார்வையும் முன்வைக்கப்படுகிறது. தமிழ் திரைப்படங்களில் இது அரிது. திரைக்கதையும், கதை சொல்லும் முறையும் அருமை. அங்கங்கே சின்ன சின்ன கார்ட்டூன் காட்சிகள், இரண்டு திரை காட்சிகள் , அசலான சம்கிலா குறித்தான பதிவுகள் என சுவாரசியம் கூட்டி இருக்கிறார். Excellent tribute to phenomenal artist through Art ❤️ 


இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


மேலும் படிக்க :


ஹர்காரா - மண்ணின் கதை !


DAREDEVIL MUSTHAFA - FANTASTIC MAKING !


சூப்பர் சிங்கர் 10 - விஜயகாந்த் ❤️ !


விஜய் தொலைக்காட்சி ஏற்கனவே விஜயகாந்த்-ஐ முன் வைத்து ஒரு 'நீயா? நானா?' நிகழ்ச்சியை நடத்தி அவருக்கு மரியாதை செய்தது. தற்போது சூப்பர் சிங்கர் 10-லும் ஒரு சுற்றை விஜயகாந்த் சுற்றாக ( என்றென்றும் கேப்டன் விஜயகாந்த்) அறிவித்து மிகவும் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறது. வணிக நோக்கம் இருந்தாலும் இதையும் மற்றவர்கள் செய்ய தயாராக இல்லை என்பது தான் உண்மை.


விஜயகாந்த் எப்படி பொது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டாரோ அதே போல அவர் நடித்த பாடல்களும் தொடர்ந்து புறக்கணிப்பை சந்தித்து வந்திருக்கின்றன. விஜயகாந்த் நடித்த பாடல்களில் சிறப்பான பாடல்கள் இருந்தாலும் அவை அவ்வளவாக ஒளிபரப்பப்படவில்லை. கமல் , ரஜினி பாடல்களே தொடர்ந்து முன்நிறுத்தப்பட்டன; முன்நிறுத்தப்படுகின்றன. இப்போதும் பெரிய மாற்றமெல்லாம் இல்லை. இப்படியான சூழலில் விஜயகாந்த் பாடல்களை முன் வைத்து ஒரு நிகழ்ச்சி என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. 


நடிகை ராதா, இயக்குநர்கள் அரவிந்தராஜ் மற்றும் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பங்குபெற்று விஜயகாந்த் உடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அவை உணர்ச்சிப்பூர்வமான தருணங்களாக அமைந்தன. தொகுப்பாளர் பிரியங்காவும் விஜயகாந்த் மீதான பிரமிப்பை வார்த்தைகளில் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார். விஜய் தொலைக்காட்சியும் நிகழ்ச்சியின் ஊடாக அவரைப் பற்றிய காணொளி பதிவு, சூப்பர் சிங்கர் ஜுனியர்களை பாட வைத்தது, விஜயகாந்தின் உருவச் சிலையை சிறப்பு பரிசாக கொடுத்தது என தனது பங்களிப்பைச் செய்தது. 


ஏறக்குறைய பாடிய அனைவருமே சிறப்பாகவே பாடினார்கள். பலருக்கும் நல்ல குரல் வளம். விஜயகாந்த் நடித்த திரைப்படங்களிலிருந்து தனிப்பாடல்கள், ஜோடி பாடல்கள், குழு பாடல்கள் இடம்பெற்றன. நல்ல பாடல்கள் தேர்வு. அதிலும் 'என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச...' பாடலெல்லாம் இன்னமும் காதில் கேட்கிறது. இந்தப் பாடலில் இவ்வளவு ரசனையான வரிகள் இருப்பதும் இப்போதுதான் தெரிந்தது. 

சூப்பர் சிங்கர் ஜுனியர்கள் பாடிய பகுதியும் சிறப்பாக இருந்தது.


இந்நிகழ்ச்சியில் முக்கியமான அம்சம் என்பது பாடல்களுக்கு பின்னணியில் இசைக்கருவிகள் வாசித்தவர்கள்தான். சமீப காலங்களில் கேட்டத்தில் சிறப்பான இசை. பாடல்கள் சிறப்பாக அமைந்ததற்கு இவர்களும் ஒரு காரணம். இவர்களுக்காகவே இந்த நிகழ்ச்சியின் மற்ற பகுதிகளை பார்க்கும் ஆவல் உருவாகியிருக்கிறது. 


மொத்தத்தில் இப்படியொரு நிகழ்ச்சியை நடத்தியதற்கு விஜய் தொலைக்காட்சிக்கு அன்பும் நன்றியும் !


மாமனிதர் விஜயகாந்த் பற்றிய ஆவணப்படம் எடுக்கப்பட வேண்டும். அவருடன் பணியாற்றியவர்கள் இருக்கும் போதே அவரைப்பற்றிய தகவல்களை சேகரித்து ஒரு முழுமையான ஆவணப்படம் எடுக்கப்பட வேண்டும். எந்த ஒன்றையும் ஆவணப்படுத்துதல் என்பதில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். இனிமேலாவது ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவத்தை தமிழ் சமூகம் உணர வேண்டும்.


வாய்ப்புள்ளவர்கள் Disney+ HotStar -ல் இப்போதும் காணலாம். விஜயகாந்த் -ஐ பிடித்தவர்களுக்கு இந்நிகழ்ச்சியும் கண்டிப்பாக பிடிக்கும்.

மேலும் படிக்க :

மாமனிதர் - விஜயகாந்த் ❤️

மாமனிதர் - விஜயகாந்த் ❤️




சிகரெட் பிடித்தல், மதுக்குடித்தல் போன்ற தீய பழக்கங்கள் நமது பால்ய காலங்களிலேயே நமக்குப் பழக்கமானவையாக இருக்கின்றன. ஆனால் எனது பால்ய காலங்களில் என்னை, தீய பழக்கங்களிலிருந்து எனக்குத் தெரியாமலேயே காப்பாற்றிவர், விஜயகாந்த் தான். அதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது தான் உணர முடிகிறது. அப்போது தீவிரமான விஜயகாந்த் ரசிகன். விஜயகாந்த் தனது திரைப்படங்களில் மதுக்குடிப்பதையோ, சிகரெட் பிடிப்பதையோ நியாப்படுத்தியிருக்கமாட்டார். அதனால் தானோ என்னவோ அவரைப் பின்பற்றிய நாங்களும் அப்பழக்கங்களை கடைபிடிக்கவில்லை. விஜயகாந்திற்கு பதிலாக ரஜினி அல்லது கமல் ரசிகராக இருந்திருந்தால் நிச்சயம் ஏதாவது ஒரு தீயபழக்கத்தைப் பழகியிருப்போம். 


'காந்தி பிறந்த மண் ' என்ற திரைப்படத்திற்குப் பிறகு விஜயகாந்த் ரசிகராக இருக்கவில்லை. என்ன காரணம் என்றும் நினைவில்லை. அதன் பிறகு யாருடைய ரசிகராகவும் இல்லை. அதே சமயம் விஜயகாந்த் என்ற மனிதரின் மீதான மதிப்பு எப்போதும் குறைந்ததில்லை. அவரது கடைசி கால இஸ்லாமிய தீவிரவாத ஒழிப்பு திரைப்படங்களுக்கு முன்பு வரை அவர் தேர்ந்தெடுத்த நடித்த கதாப்பாத்திரங்கள் கண்ணியம் மிக்கவை. நிறைய திரைப்படங்களில் வெள்ளந்தியான பாத்திரங்களில் நடித்திருக்கிறார். 


விஜயகாந்த் எப்போதும் மக்களின் கலைஞன். ரஜினி, கமல் போன்றவர்கள் கவனமாக தவிர்த்த விளிம்பு நிலை மக்களின் கதாப்பாத்திரங்களில் தொடர்ந்து நடித்தவர். மக்களோடு ஒருவராகவே தன்னை அடையாளப்படுத்தியவர். நிஜ வாழ்விலும் அப்படித்தான் இருந்திருக்கிறார். அவர் பேசிய அரசியல் மேடைகளிலும் ஒலித்தது சாமானிய மக்களின் குரல்தான். இப்போது வேண்டுமானாலும் அவர் பேசியதை கேட்டுப் பாருங்கள் உண்மை புரியும். திரையில் செங்கொடியோடு தோன்றியவர் அவர் மட்டும்தான். மக்களில் ஒருவராக , மக்களின் தலைவனாக திரையில் தோன்றினார்.


எம்.ஜி.ஆர்.-ன் அரசியல் செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களுக்கு உட்பட்டவை. ஆனால் அவரது திரைப்படங்களிலும், திரையிசைப் பாடல்களிலும் சமதர்ம , பொதுவுடைமை கருத்துகள் நிறைந்திருக்கும். அதே போல மதுக்குடிக்கும், சிகரெட் பிடிக்கும் காட்சிகளை தவிர்த்திருப்பார். தனது திரைப்படங்களிலும் இதே பாணியை விஜயகாந்த் கடைபிடித்தார். இன்று வரை நடித்த நடிகர்களில் அதிக காட்சிகளில் தமிழர்களின் ஆடையான வேட்டி சட்டையுடன் தோன்றியவர், விஜயகாந்த் மட்டுமே. தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா ! என்ற முழக்கத்தை முன்வைத்தவர்.


ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். ஈழத் தமிழர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்தவர். மற்ற உச்ச நடசத்திரங்கள் என்று சொல்லப்படும் எவரும் வெறும் குரல் கூட கொடுத்ததில்லை. ஈழத் தமிழர்கள் விடுதலை பெறும் வரை தனது பிறந்தநாளை கொண்டாட மாட்டேன் என்ற உறுதியோடு இருந்தார். அரசியல் கட்சி தொடங்கும் வரை அதை கடைபிடித்தார். யார் சமரசம் செய்தார்கள் என்று தெரியவில்லை, அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அவரது பிறந்தநாள் ' வறுமை ஒழிப்புத் தினமாக ' கொண்டாடப்பட்டது. 


நாடகங்கள் ஆதிக்கம் செலுத்திய ஆரம்ப காலத்தில் பார்ப்பனர்களுக்கு தனியாகவும்,அவர்கள் சாப்பிட்ட பிறகே மற்றவர்களுக்கு தனியாகவும் உணவு பரிமாறப்பட்டது. இதை முதன் முதலில் உடைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். தனது நாடகங்களில் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக உணவு பரிமாறப்பட்டது. இதை தனது வாழ்நாளின் கடைசி வரை கடைபிடித்தார். அவரது குடும்ப விழாக்களில் கூட பிரபலமாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே மாதிரியாகவே உணவு பரிமாறப்பட்டது. அதே போல தன்னை தேடி வந்தவர்கள் அனைவருக்கும் உணவளித்தார். யார் என்றே தெரியாத முகமறியாதவர்களுக்கும் அதிகளவில் உதவிகள் செய்தார். இதை எம்.ஜி.ஆரும் பிறகு விஜயகாந்தும் கடைபிடித்தனர். ஆனால் என்.எஸ்.கிருஷ்ணன் அளவிற்கு உதவிகள் செய்தனரா என்று தெரியவில்லை. தமிழக சூழலில் இன்னமும் அதிகம் கொண்டாடப்பட வேண்டியவர், என்.எஸ்.கிருஷ்ணன்.


உணவு சார்ந்த விசயத்தில் விஜயகாந்த் செய்தவை அனைத்தும் தற்போது கொண்டாப்படுகின்றன. திரைப்பட படப்பிடிப்பில் அனைவருக்கும் சமமான உணவு என்பது மிகப்பெரிய விசயம். இன்றும் எத்தனை பேர் இதைக் கடைபிடிக்கின்றனர் என்று தெரியவில்லை. விஜயகாந்த் கல்யாண மண்டபம் போனால் வேண்டிய உணவு நிச்சயம் கிடைக்கும் என்பது திரைத்துறையில், விளிம்புநிலையில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. பலரின் பசி போக்கிய அப்படியான அன்ன சத்திரத்தை இடித்து தள்ளியது , அரசியல். உணவு விசயத்தில் மட்டுமல்ல திரைப்படத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் ஊதியம் முதற்கொண்டு எல்லாமும் சரியாக கிடைத்திருக்கிறதா என்பதையும் உறுதி செய்திருக்கிறார். இதனாலேயே இவருக்கு ' கேப்டன் ' என்ற பெயர் பொருத்தமாக இருக்கிறது.


தேமுதிக வின் கொள்கை என்பது ' மக்களுக்கு நல்லது செய்யனும்' என்பது மட்டும் தான். சூழ்ச்சிகளும், சுயநலமும், துரோகங்களும், பதவி வெறியும், ஆதிக்கத் திமிரும் நிறைந்திருந்த அரசியல் களத்தில் நீடித்திருக்க அது மட்டும் போதவில்லை. விஜயகாந்தைப் போலவே அவரது தொண்டர்களும் தங்களது சொந்தப் பணத்தை செலவு செய்து தேர்தலில் களம் கண்டார்கள். விஜயகாந்தைப் போலவே அவரது தொண்டர்களுக்கும் பொருளாதார அளவில் இழப்பு தான். பலர் வேறு கட்சிகளுக்கு தாவி விட்டனர். இப்போது தேமுதிக திக்கற்ற நிலையில் நிற்கிறது. ஆதாயத்திற்காக வெகுமக்களுக்கு எதிரான பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. தேமுதிகவைத் தாங்கியது விஜயகாந்த் என்ற ஒற்றைப் பெயர் தான். தற்போது தேமுதிக, கேப்டன் இல்லாத கப்பல். 


அஞ்சா நெஞ்சனாக , நியாயத்திற்கு குரல் கொடுப்பவராக, மனம் முழுவதும் அன்பு நிறைந்தவராக இருந்தவரின் கடைசி காலங்கள் மிகுந்த துயர் மிகுந்ததாக மாறிப்போனது. மீளாத் துயரிலிருந்து அந்த உடல் விடுதலை பெற்றுவிட்டது. அவரது மனம் இங்கேயேதான் இருக்கும். வெறும் வார்த்தைக்காக இல்லை. விஜயகாந்த் செய்த செயல்கள் நீண்ட காலத்திற்கு நினைவில் இருக்கும். அவர் செய்த செயல்களில் வெறும் ஒரு சதவீத்தை செய்யக்கூட நாம் தயாராக இல்லை என்பது தான் கள யதார்த்தம். 


திரையில் மக்களுக்காக குரல் கொடுத்த நடிகன் !


நிஜத்தில் மக்களுக்காக குரல் கொடுத்த அரசியல்வாதி !


மக்களுக்காகவே வாழ்ந்த மக்களின் தலைவன் !


Swathi Mutthina male haniye ❤️


கன்னட தேசத்திலிருந்து மற்றுமொரு கவிதை இத்திரைப்படம். கன்னடத் திரைப்படங்களின் தரம் கூடிக்கொண்டே போகிறது. கதை, வசனம், ஒளிப்பதிவு , இசை என அனைத்தும் நமக்கு நல்லதோரு அனுபவத்தைக் கொடுக்கிறது. 


திரைப்படத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருப்பவர் கதாநாயகி Siri Ravikumar தான். மிகையில்லாத நடிப்பு. அடுத்து கதாநாயகனாக நடித்திருக்கும் இயக்குநர் ராஜ்.பி‌.செட்டி கவனத்தை ஈர்க்கிறார். அனைத்து கதாப்பாத்திரங்களும் காரணத்துடன் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஒரு காட்சியில் வந்தாலும் அழுத்தமான ஒரு விசயத்தைச் சொல்லிச் செல்கிறார்கள். 


ஆர்ப்பாட்டமில்லாத திரைப்படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.


Feel Good Movie


இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


Veyilmarangal ( Trees under the Sun ) !


விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைப்பாடுகளை, அவர்கள் சந்திக்கும் அரசியலை அழகியலுடன் முன்வைக்கும் திரைப்படம். கதையின் ஊடாக இயற்கையை அவ்வளவு நெருக்கமாக காட்சிப்படுத்தி இருக்கிறார், இயக்குநர் பிஜுகுமார் தாமோதரன். இயற்கையை அவதானிக்கும் எவருக்கும் பிஜுகுமார் அவர்களின் திரைப்படங்கள் நிச்சயம் பிடிக்கும். 


எளிய மக்கள் அரசாங்காத்தாலும் துரத்தப்படுகின்றனர். ஆதார் கார்டு இல்லையென்பதால் நிவாரணமும் கிடைக்காது என்கின்றனர். ( இன்றைய சென்னை வெள்ளத்திலும் இது தான் நிலைமை. ரேசன் கார்டு இல்லையென்றால் நிவாரணம் கிடைக்காதாம் ).சொற்ப கூலி கொடுக்கும் நிலப்பிரபுவால் துரத்தப்படுகின்றனர். அப்போது இந்திரன்ஸ் பேசும் வசனம் " நீங்கள் எங்களைத் துரத்துவதால் ஒன்றும் செத்துப் போகமாட்டோம். எங்களின் உடலில் ஆரோக்கியம் உள்ளவரை இந்தப் பூமியில் வாழ்வோம்❤️ ".


இந்த பூமியில் மனித இனம் தொடர்ந்து இயங்க அதிக உடலுழைப்பைக் கொடுப்பவர்கள், விளிம்பு நிலை மக்கள்தான். இந்திய அளவில் அவர்கள் சாதியின் பெயராலும் கொடுமைகளை அனுபவிக்கின்றனர். 


மனித இனம் இந்தப் பூமிக்குச் செய்து வரும் அயோக்கியத்தனங்களால் உருவாகி இருக்கும் காலநிலைமாற்ற விளைவுகளால் தங்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்படுபவர்களாக விளிம்புநிலை மக்களே உள்ளனர். இதையும் இயக்குநர் காட்சிப்படுத்தி இருக்கிறார்.


ஆர்ப்பாட்டமில்லாத , அமைதியான மனதிற்கு மிகவும் நெருக்கமான படைப்பு 👍


மேலும் படிக்க :

ADRISHYA JALAKANGAL !

 JANA GANA MANA - பாசிச எதிர்ப்பு சினிமா !

கூழாங்கல் ❤️


நடையின் ஊடாக வெக்கையான நிலப்பரப்பையும் , அங்கு வாழும் அசலான மனிதர்களையும் , அவர்களின் வாழ்வியலையும் முன்வைக்கும் ஒரு மண் மணக்கும் படைப்பு. திரைப்படம் ஒரு காட்சி ஊடகம் என்பதை உணர்ந்து நிறைய விசயங்களை அழகிய திரைமொழியுடன் குறிப்பால் உணர்த்துவது சிறப்பு. தமிழ்த் திரைப்படங்கள் தொடர்ந்து தவறவிடும் விசயமிது. 


எந்தப் படைப்பாக இருந்தாலும் பார்வையாளர்களும் அதில் பங்கெடுத்து ஒரு உரையாடலை அந்தப் படைப்புடன் நிகழ்த்த வேண்டும்.  இந்தத் திரைப்படத்தில் பார்வையாளர்கள் தாங்களே யூகித்துக் கொள்ளும் வகையில் பல காட்சிகள் அமைந்திருக்கின்றன. காட்சி ஊடகமான திரைப்படத்தில் எல்லாவற்றையும் நீட்டித்து விளாவாரியாக சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்,  குறிப்பாக வன்முறையை நீட்டித்து காட்டுவதே தங்களின் கடமை என இருக்கும் இயக்குநர்கள் இதை உணர வேண்டும்.


ஒளிப்பதிவும், பின்னணி இசையும் திரைப்படத்தை மேலும் நெருக்கமாக உணர வைக்கின்றன. அவை  எந்த இடத்திலும் திரைப்படத்தை இடையூறு செய்யவில்லை. சண்டையின் போது பேசப்படும் கெட்ட வார்த்தைகள் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதுவும் திரைப்படத்திற்கு கூடுதல் யதார்த்த தன்மையைக் கொடுத்திருக்கிறது. 


குழந்தைதன்மையுடன்  குழந்தையை திரையில் பார்ப்பது அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. 

கருப்பு வெள்ளை காலத்திற்கு பிறகு தமிழ்த் திரைப்படங்கள் குழந்தைகளை குழந்தைகளாக காட்டாமல் பெரியவர்கள் போலவே காட்டி வருகின்றன. நிறைய படங்களில் குழந்தைகளைக் காட்டுவதேயில்லை , அப்படியே காட்டினாலும் நகைச்சுவை காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். இப்படியான சூழலில் இந்த 'கூழாங்கல்' திரைப்படத்தில் முக்கியப் கதாப்பாத்திரமாக ஒரு சிறுவனை குழந்தைத்தன்மை சிதையாமல் காட்சிப்படுத்தியிருப்பது மிகவும் பாராட்டிற்குரியது.


மொத்தத்தில் நம்மையும் அந்த வெக்கையான நிலப்பரப்பில் நடக்க வைத்த இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉.


1.15 மணி நேரம் மட்டுமே ஓடக்கூடிய சிறிய திரைப்படம் தான் . வாய்ப்புள்ளவர்கள் கண்டிப்பாக பாருங்கள். 


மேலும் படிக்க:


ஹர்காரா - மண்ணின் கதை !


அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !






ஹர்காரா - மண்ணின் கதை !


நாட்டார் தெய்வங்கள் குறித்தான குறிப்புடன் தொடங்கும் போதே திரைப்படம் நம்மை ஈர்க்கத் துவங்கி விடுகிறது. நாட்டார் தெய்வங்கள் எப்படி மக்களின் வாழ்வியலிலிருந்து தோன்றியிருக்கின்றன என்பதை இத்திரைப்படம் முன்வைக்கிறது. பெரும்பாலும் நாம் நமது முன்னோர்களையும் இயற்கையின் ஏதோ ஒரு வடிவத்தையுமே குலதெய்வங்களாக வணங்குகிறோம். அவையே நாட்டார் தெய்வங்கள்.


" நாட்டார் தெய்வங்கள் எவையும் 'முன்னே வந்து' வரம் தரும் தெய்வங்கள் அல்ல; 'பின்னே நின்று' பாதுகாப்புத் தரக்கூடியன. அவை அழிக்கும் ஆற்றல் அற்றவை. மாறாக வயல் களத்திலும், அறுவடைக் காலத்திலும், கண்மாய்க் கரையிலும், ஊர் மந்தையிலும், ஊர் எல்லையிலும் தூங்காமல் நின்று காவல் காக்கக்கூடியன. " என்று கூறுகிறார் ,தொ.பரமசிவன் . நாட்டார் தெய்வங்கள் அனைத்தும் காவல் தெய்வங்களாக இருப்பதை நாம் உணர முடியும். ஒரு மலைவாழ் மக்களின் காவல் தெய்வமாக 'மாதேஸ்வரன்' மாறிய கதை தான் 'ஹர்காரா'.


 நமது நாட்டார் தெய்வங்கள் கற்பனைக் கதைகளான இதிகாசங்களிலிருந்து தோன்றவில்லை. நிறுவனமயப்படுத்தப்பட்ட நடைமுறையோ, வழிபாடோ , பேதங்களோ, படையலோ நாட்டார் தெய்வங்களுக்கு இல்லை. அவை மக்களின் வாழ்வுடன் கலந்தவை. பெரிய பெரிய கோயில்களில் பல கால பூசைகளுடன் பெருந்தெய்வங்கள் இருந்தாலும் அவை எதுவும் நாட்டார் தெய்வங்களுக்கு ஈடாகாது. அவை மக்களின் வாழ்விலிருந்து விலகி நிற்பவை. 


காளி வெங்கட் மலையேறும் காட்சியின் போது வரும் இடைவேளை வரை சரியாக செல்லும் திரைக்கதையில் பின்பு விறுவிறுப்பு குறைந்து விடுகிறது. இறுதிகட்ட காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சுவாரசியம் கூட்டியிருந்தால் இன்னும் நெருக்கமான படைப்பாக இத்திரைப்படம் அமைந்திருக்கும். மற்றபடி நல்லதொரு அனுபவம். இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉 ❤️.


தமிழில் வன்முறை வெறியாட்டத் திரைப்படங்கள் தொடந்து வெளிவரும் சூழலில் ' ஹர்காரா ' போன்ற மக்களின் வாழ்வியலைப் பேசும் அர்த்தமுள்ள திரைப்படங்களும் வெளிவருவது நம்பிக்கையளிக்கிறது. இவ்வாறு மக்களின் வாழ்வியலை மையப்படுத்திய திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும். 


ஆகவே மக்களே ! வன்முறை வெறியாட்டத் திரைப்படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவதில் கொஞ்சத்தையாவது நம் வாழ்வைச் சொல்லும் 'ஹர்காரா' போன்ற திரைப்படங்களுக்குக் கொடுக்க வேண்டும். 


மேலும் படிக்க:


அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !


நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !


ஜெய்பீம் -அறத்தின் குரல் ! 


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms