(12-10-2020) இதுவரையிலுமான 12 பகுதிகளும் பார்த்து முடித்தாகிவிட்டது. தொலைக்காட்சியில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது ஒரே ஒரு பகுதி தான். மீதி எல்லாம் 'Zee 5' செயலியில் தான். ஆரம்ப பகுதிகள் பார்க்கும் போது பொறுமையை சோதிக்கும் அளவிற்கு அதிக அளவிலான விளம்பரங்கள் வந்தன. இவ்வளவு சிரமபட்டு பார்க்கனுமா என்று கூட தோன்றியது. ஆனால் தொடரைப் பார்ப்பதை நிறுத்தவில்லை.இந்த வாரம் விளம்பரங்களே இல்லை. அதனால் ஒரே மூச்சில் நான்கைந்து பகுதிகள் கூட பார்க்க முடிந்தது.
தீண்டாமையின் கோர முகம் ஒவ்வொரு பகுதியிலும் தோலுரித்து காட்டப்படுகிறது. பீமாக நடித்திருக்கும் குட்டிப் பையன் நிறைய இதயங்களை வென்றுவிட்டார். அவருக்கு தமிழில் பின்னணி குரல் கொடுத்தவரையும் பாராட்டியே தீர வேண்டும். " பச்சமண்ண என்னா பாடு படுத்தியிருக்கானுக " என்று தொடரைப் பார்க்கும் பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். இதுவரை தொலைக்காட்சி தொடர் பார்க்கும் மக்களுக்கு பழக்கமில்லாத சாதிய ஏற்றத்தாழ்வுகள் இந்தத் தொடரில் காண்பிக்கப்படுகின்றன. பல இடங்களில் மிகவும் அழுத்தமாகவே காட்சிகள் விரிகின்றன.
கல்வி எவ்வளவு முக்கியம் என்பதையும் கடந்த காலங்களில் சாதியின் பெயரால் கல்வி எவ்வாறு மறுக்கப்பட்டது என்பதையும் இந்தத் தொடரைப் பார்க்கும் இன்றைய தலைமுறை கொஞ்சமேனும் தெரிந்து கொள்ளும். கல்வி ஒன்று மட்டுமே பிரிவினையை முற்றிலுமாக அழிக்கும். கல்வி ஒன்று மட்டுமே எல்லோரையும் சமநிலைப்படுத்தும். அதனால்தான், சமத்துவத்திற்கு எதிரான பார்ப்பனியம் புதிய கல்விக்கொள்கையைக் கொண்டு வருகிறது. கல்வியும், வாய்ப்பும் அனைவருக்கும் கிடைக்கக்கூடாது என பார்ப்பனியம் விரும்புகிறது. இதை முறியடிப்பது பார்ப்பனியத்திற்கு எதிரான மக்கள் மற்றும் இயக்கங்களின் கைகளில்தான் இருக்கிறது.
இந்த ஒரு தொடர் எல்லாவற்றையும் மாற்றி விடுமா ? தெரியாது. ஆனால் இத்தொடர் மக்கள், தங்களவில் சிறிதளவிலேனும் மாற நிச்சயம் தயார்படுத்தும்.
நாயகத்துதிபாடலுக்கு எதிரானவர், அம்பேத்கர். ஆனால் அவரது தொடரே நாயகத்துதிபாடல் மனநிலையில் உருவாக்கப்பட்டிருக்கிறதோ என்ற ஐயம் உருவாகும் விதத்தில் தொடர்ந்து காட்சிகள் இடம்பெறுகின்றன. இது ஒன்றே தவிர மற்ற எதுவும் உறுத்தலாக இல்லை. மற்றபடி நடிகர்கள் தேர்வு, ஒளிப்பதிவு, இசை, வடிவமைப்பு என எல்லாம் சிறப்பாகவே உள்ளன. தமிழில் உரையாடல் எழுதியிருக்கும் தோழர் கவிதா பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள் . காட்சிகளுடன் ஒன்றிப் போக வசனங்கள் உதவுகின்றன. நேரடியாக வசனங்கள் எழுதுவதை விட , மொழி மாற்றம் செய்யும்போது , அவர்களின் வாயசைப்பிற்கு ஏற்றவாறு வசனங்கள் எழுதுவது சிரமமானது. ஒரளவு சிறப்பாகவே தோழர் கவிதா பாரதி அவர்கள் பணியாற்றியிருக்கிறார். எந்தவிதமான வாயசைப்பிற்கும் எப்படிப்பட்ட வசனமும் எழுதும் அளவிற்கு தமிழ் மொழி செழுமை நிறைந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
(24-01-2021) மதவாத வலதுசாரிகளின் ஆட்சியில் தினமும் எதிர்மறை விசயங்களே மக்களுக்கு பரிசாக கிடைத்துக் கொண்டிருக்கும் சூழலில் தொடர்ந்து வாழ்வதற்கான நம்பிக்கையை நாம் யாரிடமிருந்தாவது அல்லது எதனிடமிருந்தாவது பெறுவது அவசியமாகிறது. எனக்கு அப்படியான நம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டிருப்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'புரட்சியாளர் டாக்டர்.அம்பேத்கர் ஒரு சகாப்தம் ' எனும் இத்தொடர். இன்று வரை (24-01-2021) ஒளிபரப்பப்பட்டிருக்கும் 49 பகுதிகளையும் பார்த்தாச்சு. பெரும்பாலும் Zee5 செயலியின் உதவியுடன்தான் பார்த்திருக்கிறேன்.
ஒரு மொழிபெயர்ப்புத் தொடரை அதுவும் ஒரு வாழ்க்கை வரலாற்றுத் தொடரை இவ்வளவு சுவாரசியமாக கொண்டு செல்வது என்பது மிகவும் சவாலானது. பெரும் உழைப்பு கொடுக்கப்பட்டே இத்தொடர் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒரு வெப் சீரியல் போலவே இத்தொடரை அணுகலாம். இது வரை பார்க்காதவர்கள் கூட இனிமேல் Zee5 செயலியின் உதவியுடன் பார்க்க ஆரம்பிக்கலாம். சமத்துவத்தை விரும்பும் எவரையும் இத்தொடர் ஏமாற்றாது. இத்தொடரை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து கொடுப்பது என்பதும் மிகவும் சவாலான பணிதான். அந்தப் பணியும் சிறப்பாகவே நடந்து வருவதை உணர முடிகிறது. சமூக நீதி பேசும் உரையாடல்களை தோழர் கவிதா பாரதி அவர்கள் எழுதி வருகிறார். மொழிமாற்றுத் தொடர் என உணர முடியாத அளவிற்கு மிகவும் பொருத்தமான அதே சமயம் அனல் தெறிக்கும் வசனங்கள் தொடர்ந்து இடம் பெறுகின்றன. பின்னணி இசையும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. நாயகத் துதிபாடலை மிக கடுமையாக எதிர்த்த அம்பேத்கரின் கதாப்பாத்திரம் மட்டும் நாயகத்துதிபாடல் மனநிலையில் அணுகப்பட்டிருப்பது மட்டுமே தொடர்ந்து சிறு நெருடலாக இருந்து வருகிறது. மற்ற சிக்கல்கள் எதுவும் தென்படவில்லை.
தீண்டாமையை கடைபிடிக்கும் சாதிய ஆதிக்க மனநிலையை தெரிந்து கொள்வதுடன் கூடவே சமத்துவம், கல்வியின் முக்கியத்துவம்,பெண் கல்வி, குடும்ப அமைப்பு, குழந்தை வளர்ப்பு, சமூக நீதி, நன்னெறிகள் என பல விசயங்களை உள்ளடக்கிய அடர்த்தியான தொடராகவே இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. வரும் காலங்களில் பெரியார் பற்றியோ அல்லது வேறு யாரைப் பற்றியுமோ தொடர் எடுக்க இருப்பவர்களுக்கு டாக்டர்.அம்பேத்கர் பற்றிய இத்தொடர் நிச்சயம் உதவி செய்யும்.இந்தத் தொடரை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு ஒருவித உத்வேகத்தையும் ,நம்பிக்கையையும் இத்தொடர் தொடர்ந்து கொடுத்து வருகிறது.
சாதித் தலைவராக சுருக்கப்பட்ட ஒரு மாமேதையை கொஞ்சமேனும் மக்களின் மனங்களில் பதிய வைக்க இத்தொடர் உதவி வருகிறது. நீ டாக்டர் ஆக வேண்டும், இஞ்சினியர் ஆக வேண்டும் என்று குழந்தைகளை கேட்டு பழக்கப்பட்ட குடும்பங்களில் ' நீ படிச்சு அம்பேத்கர் மாதிரி அறிவாளி ஆகனும்' என்ற குரல் கேட்க ஆரம்பிப்பது எவ்வளவு பெரிய சாதனை. அதைத்தான் இத்தொடர் நிகழ்த்தி வருகிறது. சமத்துவத்தை நோக்கிய பாதை என்பது மிகவும் நீண்டது. அந்த சமத்துவப் பாதையில் இத்தொடர் நம்மை பயணிக்க வைக்கிறது.
கொரோனா அலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொடரும் பாதியில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இப்போது மீண்டும் தொடர்ந்தாலும் மகிழ்ச்சி தான்.
மேலும் படிக்க :
ஜே.சி.குமரப்பா பிறந்தநாள் (ஜனவரி 4) !


9:26:00 PM
மானிடன்










