Sunday, September 1, 2024

Fandry - மனதிற்கு நெருக்கமான படைப்பு !


நாகராஜ் மஞ்சுலேவின் Sairat திரைப்படம் பார்த்த போதே இந்த Fandry திரைப்படத்தையும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அப்போது தேடிய போது பார்க்கக் கிடைக்கவில்லை. 'அயலி' பார்ப்பதற்காக Zee5 செயலிக்கு சந்தா செலுத்தும் போது நாகராஜ் மஞ்சுலேவின் நிறைய திரைப்படங்கள் Zee5 தளத்தில் இருப்பது தெரிய வந்தது கூடவே Fandry -யும். அப்போதே அயலி பார்த்தாலும் இப்போது தான் Fandry பார்க்க முடிந்திருக்கிறது. காத்திருப்பு வீண் போகவில்லை.


திரைப்படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை தேர்ந்த கதை சொல்லல். சாதிய பாகுபாடுகள் காட்சிகளாக மட்டுமே விரிகின்றன. எந்த இடத்திலும் பிரச்சார நெடி இல்லை. ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து கல்வி கற்க வரும் ஒரு மாணவனின் அக உணர்வுகளையே இத்திரைப்படம் விவரிக்கிறது. குறியீடுகள் திரைப்படமெங்கும் நிறைந்திருக்கின்றன.கதையில் இடம்பெற்ற மனிதர்கள் வாழும் நிலப்பரப்பை நெருக்கமாக உணர வைக்கிறது, ஒளிப்பதிவு. இந்தத் திரைப்படத்தில் மிகவும் ரசித்த விசயம், பின்னணி இசை❤️. Alokananda Dasgupta , மிகவும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். தேவையான இடங்களில் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கும் இசை அவ்வளவு இதமாக இருக்கிறது. 


"நாகராஜ் மஞ்சுலேவின் திரைப்படங்களில் அரசியலை விட அழகியலே அதிகம் இருக்கிறது " என்பது அவர் மீதான விமர்சனமாக இருக்கிறது. இது மிகவும் அபத்தமான வாதம். அரசியலுடன் அழகியலும் சேரும் போதுதான் ஒரு படைப்பு முழுமையடைகிறது. அப்படியே அழகியல் இல்லாமல் 100 சதவீத அரசியல் படம் எடுத்தா மட்டும் உடனே அந்த அரசியலை எல்லோரும் ஏற்றுக் கொள்ளவா போறாங்க‌? இல்லையே. மாற்றம் மெதுவாகவே நிகழும்.


நாகராஜ் மஞ்சுலேவின் கதை சொல்லும் பாணி மிகவும் பிடித்திருக்கிறது. இனி அவரது மற்ற திரைப்படங்களையும் சந்தா முடியும் முன் பார்க்க வேண்டும். 

மேலும் படிக்க :

சேத்துமான் !

கர்ணன் - போராடடா ஒரு வாள் ஏந்தடா !





The Elephant Whisperers !


ஆவணப்படுத்துதல் என்பது முக்கியமான செயல்பாடு.இதில் நம் அனைவருக்கும் பங்கிருக்கிறது. ஆவணப்படுத்துதல் என்பது எல்லாத் தளங்களிலும் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஆவணப்படுத்தல் மூலம் அறிவும் வரலாறும் பதிவாகிறது. இது ஒரு தொடர் செயல்பாடு.ஆனால் இந்த விசயத்தில் நாம் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். 

ஆவணப்படங்கள் உலகெங்கும் கவனம் பெற்றிருந்தாலும் இந்தியச் சூழலில் இன்னமும் போதிய கவனம் பெறவில்லை. இதன் முக்கியத்துவத்தையும் நாம் உணரவில்லை. மற்ற இயக்குநர்கள் வெளியே தெரிந்த அளவிற்கு இந்திய ஆவணப்பட இயக்குநர்கள் வெளியே தெரியவில்லை. இப்படியான சூழலில் ' The Elephant Whisperers ' ஆவண குறும்படத்திற்கு கிடைத்திருக்கும் விருதானது ஆவணப்படங்கள் குறித்தான புரிதலை கொஞ்சமேனும் அதிரிக்கும். இயற்கையையும், இயற்கையுடன் இணைந்த வாழ்வை வாழும் காட்டின் பாதுகாவலர்களையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் ஆவண குறும்படத்திற்கு விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. 


ஆசியாவிலேயே பழமையான யானை முகாம்களில் ஒன்றாக இருக்கும் முதுமலை யானைகள் முகாம் பற்றியோ அதன் செயல்பாடுகள் பற்றி நம்மில் பெரும்பாலானோருக்கு இதற்கு முன்பு தெரியாது. இந்த ஆவண குறும்படம் அதை நமக்கு தெரியப்படுத்தி இருக்கிறது. எந்த உயிரினமும் மனிதர்களாகிய நாம் கொடுக்கும் அன்பை பெற்றுக்கொண்டு திருப்பிக் கொடுக்கின்றன. சமீபத்தில் கூட உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஆரிப் என்பவர், காயமடைந்த நாரை ஒன்றை குணப்படுத்தி இருக்கிறார். குணமாகி ஓராண்டான பிறகும் அந்த நாரை அவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவர் கூடவே பறந்து செல்வதை தீக்கதிர் வெளியிட்ட ஒரு காணொளியில் காண முடிந்தது.


உலகெங்கிலுமே பல்வேறு விதமான உயிரினங்கள் மனிதர்கள் வாழுமிடங்களிலும், மிருக காட்சி சாலைகளிலும் வளர்க்கப்படுகின்றன. அனைத்துமே அன்பிற்கு கட்டுப்பட்டவனவாகவே இருக்கின்றன. " யானைக்களுக்கு உணர்ச்சிகள் அதிகம், புத்தியும் அதிகம். ஆனாலும் அது ஒரு காட்டு மிருகம் என்பதை அறிந்தே இருக்கிறோம் " என்று பொம்மன் இந்த குறும்படத்தின் ஓரிடத்தில் சொல்கிறார். இந்தப் பார்வை ரொம்ப முக்கியம். " எல்லாவற்றையும் நாங்களே சொல்லிதர முடியாது.அது யானை , யானைக்கூட இருந்துதான் கத்துக்கணும்" என்கிறார், பெள்ளி. இப்படியான புரிதல் இருப்பதால்தான் தாய் யானையைப் பிரிந்த யானைக்குட்டிகளை இவர்களால் வளர்த்தெடுக்க முடிந்திருக்கிறது. 


பொம்மன் மற்றும் பெள்ளியின் வெள்ளந்தியான முகங்களைக் காண்பதும், அவர்களின் வாஞ்சையான பேச்சைக் கேட்பதும் பெரும் மகிழ்வைக் கொடுக்கக் கூடியவை. இவர்கள் வளர்த்த யானைகளான ரகு மற்றும் பொம்மியுடனான இவர்களது உரையாடல்கள் இன்னமும் சுவாரசியமானவை. காட்டின் பாதுகாவலர்கள் (பழங்குடியினர்) குறித்தும், அவர்களுக்கிருக்கும் காடு பற்றிய புரிதல்கள் குறித்தும் , முதுமலை யானைகள் முகாம் குறித்தும் ஒரு சிறு துளி தான் ஆவண குறும்படமாக உருவாகியிருக்கிறது. அந்தச் சூழலிலேயே இன்னும் பதிவு செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. 


இயக்குநர் கார்த்திகியும் மற்றும் குழுவினரும் இரண்டு ஆண்டுகளாக முதுமலை காட்டில் தங்கி இந்த ஆவண குறும்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் காட்டில் பதிவு செய்த பலவற்றை இக்குறும்படத்தில் இணைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் அவை காட்சிக்கு நெருக்கமாக இருந்தாலும் போக போக அவை இடையூறு தருபவையாக இருக்கின்றன. மற்றபடி நல்லதொரு உருவாக்கம்.


பொதுவாகவே விருது என்பதில் பல்வேறு விதமான அரசியல்கள் இருந்தாலும் விருது கிடைக்கும் போது குறிப்பிட்ட படைப்பு வெளியே தெரிய வரும், கூடவே படைப்பாளியும் தெரிய வருவார். ஒரு சில படைப்புகள் தான் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விருது பெற்ற கவனத்தால் பொம்மன், பெள்ளி உள்ளிட்ட 91 யானை பாகன்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டிருக்கிறது‌. இது மட்டுமல்லாமல் 91 பாகன்களுக்கும் தலா பத்து இலட்ச ரூபாய் அவர்கள் விருப்பப்படி வீடு கட்டிக்கொள்ள தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்டிருக்கிறது. காட்டு மனிதர்களை நாட்டு மனிதர்கள் கெடுக்காமல் இருந்தால் சரி.


இயக்குநர் கார்த்திகி மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉. 


மேலும் படிக்க :

Extraordinary Attorney Woo - Feel Good Series !

Life in Colour with David Attenborough - Documentary !

அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !


" ஆளும் வர்க்கத்தின் பலம் அரசு இயந்திரங்களான நிர்வாகம், சட்டம், அதிகாரம் முதலிய அரசு இயந்திரங்களை இயக்குவதில் மட்டும் அல்ல பண்பாட்டுத் தளத்திலும் பத்திரமாக இருக்கிறது. எனவே ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் பண்பாட்டுத் தளத்திலும் போராட வேண்டியிருக்கிறது" - கிராம்சி.

பண்பாட்டு தளத்தில் மாற்றம் நிகழாமல் சமூகத்தில் மாற்றம் நிகழாது. ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான சமூக மாற்றத்தையும் தடுக்கும் காரணிகளில் ஒன்றாக பண்பாட்டு கூறுகள் தொடர்ந்து இருந்து வருகிறது. பண்பாட்டு கூறுகளுக்கும் ஆணாதிக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. அதனாலேயே பண்பாட்டு கூறுகளில் நிகழும் மாற்றங்களைக் கண்டு ஆண்கள் அஞ்சுகின்றனர். பண்பாட்டு கூறுகளிலும் காலத்திற்கு ஏற்ற மாற்றம் தேவை என வலுவாகவே பேசுகிறது 'அயலி'. பண்பாட்டில் கலந்திருக்கும் மூட நம்பிக்கைகளை பகுத்தறிவு கொண்டு களைய முன் வர வேண்டும். பண்பாடு என்பதும் மாறிக்கொண்டே இருப்பதுதான். மாற்றத்தை ஏற்காத பண்பாடு அழிந்து போய்விடும். பண்பாட்டிற்கும் அரசியலுக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது. 

" 'கலை கலைக்காகவே 'ன்னு சில பேர் கரடி விடுவானுங்க .அதை நீங்க நம்பாதீங்க .அப்படியிருந்தா அது எப்போவோ செத்துப் போயிருக்கும் . கலை வாழ்க்கைக்காகத்தான்; வாழ்க்கையும் கலையும் சேரும் போதுதான் அதுக்கு உயிரே வருது..."- எம்.ஆர்.ராதா. 

கலை எந்த வடிவத்தில் இருந்தாலும் அது எப்போதும் மக்களுக்கானது. 'அயலி' இந்த மண்ணை பற்றியும் , இந்த மண்ணின் மக்களைப் பற்றியும் பேசுகிறது. தமிழ் நிலம் சார்ந்த குறியீடுகள் இத்தொடர் முழுவதும் நிரம்பியிருக்கின்றன. தமிழ்நாட்டின் பண்பாட்டு ஆய்வாளர், தொ.பரமசிவன் எழுத்தை வாசித்தவர்களுக்கு இந்தத் தொடர் இன்னும் நெருக்கமானதாக இருக்கக்கூடும். நாட்டார் தெய்வங்கள், பிடிமண் கோயில், கொலை செய்யப்பட்டவரையே தெய்வமாக வழிபடுவது, சடங்குகள், பழக்கவழக்கங்கள் என தொ.ப.வின் தாக்கம் நிறைய இருந்தது. 

பரபரப்பில்லாத , திடீர் திருப்பங்கள் இல்லாத, வன்முறை இல்லாத அடுத்தடுத்து இரண்டு தொடர்கள் பார்க்கப்பட்டுவிட்டது. முதலில் பார்த்தது ' Extraordinary Attorney Woo'. இப்போது 'அயலி'. மிகவும் சிறப்பான உருவாக்கம். கதையை தேர்ந்தெடுப்பதில் , திரைக்கதை அமைப்பதில், கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில், ஒளிப்பதிவில், இசையில், கலை அமைப்பில் என தொழில்நுட்ப ரீதியாக சமீப கால மாற்று சினிமா படைப்புகள் நிறைவை அளிக்கின்றன. இத்தொடரும் அப்படியே.

தமிழ்நாட்டில் நாம் பேசுகின்ற அரசியலுக்கும் 80களுக்கு பிறகான தமிழ் சினிமாவிற்கும் தொடர்பே இல்லாமல் இருந்து வந்தது. இதுவும் சமீப ஆண்டுகளில் தான் மாறியிருக்கிறது. அயலியும் நாம் வெளியே பேசுகின்ற அரசியலை திரையில் பேசியிருக்கிறது. முதலில் இப்படியொரு தரமான படைப்பைக் கொடுத்த இயக்குநர், முத்துக்குமார் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்.

அயலியின் பேசுபொருள் நமது வீட்டிலும் , பொதுவெளியிலும் மாறியே ஆக வேண்டியது. புனிதம் என்றும் தீட்டு என்றும் இந்த பூமியில் எதுவும் இல்லை. இதை காரணம் காட்டி பாகுபாடு காண்பிப்பது முடிவிற்கு வர வேண்டும். கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பாக பெண் கல்வியின் முக்கியத்துவத்தை பேசுகிறது, அயலி.

மிகவும் கச்சிதமான கதாப்பாத்திர தேர்வுகள் அயலியின் பெரும் பலம். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் ஏற்று நடித்தவர்கள் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்ச்செல்வியாக நடித்திருக்கும் அபி திரை முழுவதையும் ஆக்கிரமிக்கிறார். சின்ன சின்ன உணர்வுகளைக்கூட சிறப்பாக வெளிப்படுத்தி கவனத்தை இருக்கிறார். மொத்தத்தில் நல்ல தேர்வு. இவரின் அம்மா குருவம்மாவாக அனுமோளும் , அப்பா தவசியாக மதனும் நடித்திருக்கிறார்கள். முதல் 5 பகுதிகள் வரை அம்மாவிற்கும் மகளுக்கும் உள்ள நெருக்கம் விவரிக்கப்படுகிறது. அபிக்கும் அனுமோளுக்கும் இடையே நடிப்பில் நீயா நானா போட்டியே நடக்கிறது.

 தமிழ்ச்செல்வியின் தோழி மைதிலியாக லவ்லினும், அம்மாவாக காயத்ரி கிருஷ்ணனும் மற்றொரு தோழி கயல்விழியாக தாராவும் நடித்திருக்கிறார்கள். சேகராக நடித்திருக்கும் ஜென்சனும் கவனத்தை ஈர்க்கிறார். மற்ற கதாப்பாத்திரங்களும் சிறப்பாகவே உள்ளன. அபியின் குரல், தமிழும் மலையாளமும் கலந்த அனுமோளின் குரல் , மதனின் குரல், காயத்ரி கிருஷ்ணனின் குரல், ஜென்சனின் குரல் என கதாப்பாத்திரங்களின் விதவிதமான குரல்களும் வசீகரிக்கின்றன. 

நறுக்கு தெரித்தார் போல அமைந்த வசனங்கள் பட்டையைக் கிளப்புகின்றன. உலகத் திரைப்படங்களில், மற்ற இந்திய மொழி திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள் என கொண்டாடப்படும் திரைப்படங்களில் வசனங்கள் வலிமை மிக்கதாக இருக்கும். தமிழின் சிறந்த திரைப்படங்களில் வசனங்கள் அந்த அளவிற்கு வலிமை இல்லாமல் இருந்தது. அதையும் இந்த அயலி உடைத்திருக்கிறது. வசனங்களுக்காக மட்டுமே நாம் அயலியைக் கொண்டாடலாம். பல இடங்களில் வசனங்கள் சாட்டையடி கொடுக்கின்றன.பகுத்தறிவின் பாதையில் வசனம் எழுதிய சச்சின் அவர்களுக்கு வாழ்த்துகள். 

ரேவாவின் இசையும் ராம்ஜியின் ஒளிப்பதிவும் படைப்பை இன்னும் நெருக்கமாக அணுக உதவுகின்றன. சின்னச்சின்ன இடங்களிலும் இசை சேர்க்கப்பட்டிருப்பது அழகு. உதாரணமாக தமிழ்ச்செல்வி தனது அப்பாவிடம் போலியாக அழுவது போல பேசி பரீட்சை எழுத சம்மதம் வாங்கும் காட்சியில் சேரக்கப்பட்டிருக்கும் இசை. அதே போல சில இடங்களில் இசை சேர்க்காமல் விடப்பட்டிருப்பதும் அழகுதான். 

காதல் இல்லாமல் ஒரு படைப்பைக் கொடுத்தற்கே முதலில் இயக்குநருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு 'காதல்' என்ற ஒன்று தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கிறது. ஏதாவது ஒரு காதல் படத்தில் இருந்தே ஆக வேண்டும் என பெரும்பாலான இயக்குநர்கள் நினைக்கிறார்கள். சரிங்க அப்படித்தான் இவ்வளவு காதல்களைச் சொல்லி காதலை ஜனநாயகப்படுத்தியிருக்காங்களா ? என்றால் அதுவும் இல்லை. தொடர்ந்து காதலை புனிதப்படுத்தியே வைத்திருக்கிறார்கள். பெண்களை Stalking செய்வதை காதல் என நம்ப வைத்திருக்கிறார்கள். காதல் என்பது இயல்பானது என்றோ , யாருக்கும் யாருக்கும் இடையிலும் நிகழலாம் என்றோ, காதலித்தால் திருமணம் செய்துதான் ஆக வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை என்றோ, வாழ்வில் எத்தனை காதல்கள் வேண்டுமானலும் வரலாம் என்றோ தமிழ் சினிமா பேசவேயில்லை.

அயலியின் இறுதிகட்ட பகுதிகள் தமிழ்ச்செல்வி மூலமாக நாயக பிம்பத்தை உருவாக்கினாலும் பெண்களின் எதிர்குரலாகவே பதிவாகிறது. அத்தனை பண்பாடுகளும், அத்தனை கட்டுப்பாடுகளும், அத்தனை சடங்குகளும், அத்தனை பழக்கழக்கங்களும், அத்தனை கௌரவங்களும் பெண்களைக் கட்டுப்படுத்தவே பயன்படுத்தப்படுவதை அயலி கேள்விக்கு உட்படுத்துகிறது. 

கொரோனா காலத்தில் தமிழகத்தில் மிக அதிக அளவில் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இந்தச் சூழலில் குழந்தை திருமணத்தால் உருவாகும் பாதிப்புகளை வெளிப்படுத்தி குழந்தை திருமணத்திற்கு எதிரான படைப்பாக, பெண் கல்வியை ஆதரிக்கும் படைப்பாக, காலத்திற்கு பொருந்தாத பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் படைப்பாக அயலி மிளிர்கிறது.

பெண் உடலில் இயற்கையாக நிகழும், மனித குழந்தை பிறப்பதற்கு துணைபுரியக்கூடிய 'மாதவிடாய்' மூலம் இன்றும் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் , கிராமம், நகரம் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. குறிப்பாக வழிபாடு தொடர்பான விசயங்களில் இன்றும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பெண்களும் தாங்களாகவே கட்டுப்பாடுகள் விதித்துக்கொள்கின்றனர். மிக அரிதாகவே அந்த நாட்களில் வழிபாடு சார்ந்த விசயங்களில் பெண்கள் ஈடுபடுகின்றனர். 

மாதவிடாய் காலங்களில், பணிபுரியும் பெண்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பெண்களின் வலி நிறைந்த அந்த நாட்களின் பணிச்சுமையை உடனே குறைக்க முடியாவிட்டாலும், அவர்களை ஒதுக்கி வைத்து மனச்சுமை ஏற்றாமல் இருப்பது முக்கியம். தெய்வங்கள், மாதவிடாய் காலங்களில் பெண்கள் வழிபடுவதை தடுப்பதில்லை. அடிப்படைவாதிகளே தடுக்கிறார்கள். 

மொத்தத்தில் அயலி ஒரு பெண்களை மையப்படுத்திய தொடர். இது ஒரு தொடக்கம் தான். அயலி சொல்லாமல் விட்டதாக நினைக்கும் சாதி மறுப்பு திருமணங்கள், ஆணவ படுகொலைகள் , பாலின சமத்துவம் குறித்தான படைப்புகள் அடுத்தடுத்து வெளிவர வேண்டும். அயலியில் போதாமைகள் இருக்கலாம். ஆனால் இதை முற்றாக நிராகரிப்பதற்கான காரணங்கள் எதுவும் இல்லை. 

அடுத்தடுத்து பார்க்க வேண்டிய திரைப்படங்களின், தொடர்களின் வரிசை நீளமாக இருக்கும் நிலையிலும் ஒரு படைப்பு நம்மை மீண்டும் பார்க்கத் தூண்டுவது சாதாரண விசயம் அல்ல. அயலி மீண்டும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. மீண்டும் இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் ❤️

மேலும் படிக்க :

நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !

ஜெய்பீம் -அறத்தின் குரல் ! 


Extraordinary Attorney Woo - Feel Good Series !


வெற்றி பெற்ற பெரும்பாலான இணையத் தொடர்கள் பரபரப்புகளையும் , திடீர் திருப்பங்களையும் , அதீத வன்முறைகளையும் முன்வைத்த சூழலில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உள்ளங்களைக் கவர்ந்திருக்கும் இணையத்தொடர்தான், ' Extraordinary Attorney Woo '. 

Feel Good Series. சின்ன சின்ன விசயங்களைக் கூட பார்த்து பார்த்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். சரி, தவறு என்பதைக் கடந்து அறத்தின் பக்கம் நிற்கிறது இத்தொடர். ' Social Justice ' என்ற வார்த்தை பல முறை வருகிறது. இத்தொடரின் பின்னணி இசை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. நவீன இசைக்கருவிகளின் மூலமும் நல்லதொரு இசையைக் கொடுக்க முடியும் என்பதை இத்தொடரின் இசையமைப்பாளர் நிரூபித்து இருக்கிறார். ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. நவீன தொழிற்நுட்பங்கள் உதவியுடன் அவ்வப்போது காற்றில் உலவ விடப்படும் விதவிதமான திமிங்கலங்கள் , டால்பின்கள் அழகாக இருக்கின்றன.

கொரியத் திரைப்படங்கள், கொரியத் தொடர்கள் இன்றைய இந்திய இளைஞர்களால் ஏன் இவ்வளவு கொண்டாடப்படுகின்றன என்பதற்கான காரணமும் இத்தொடரைப் பார்க்கும் போது விளங்கியது. பழமையும் நவீனமும் கலந்த வாழ்வியல் முறையை கொரிய படைப்புகள் முன்வைக்கின்றன என நினைக்கிறேன். நவீனத்தை ஏற்பதில்தான் இந்தியர்களாகிய நாம் பின்தங்கி இருக்கிறோம். நவீன தொழிற்நுட்பங்களை விரைவாக ஏற்றுக் கொள்கிறோம்‌. வாழ்வியல் முறைகளில் நவீனத்தை நாம் அவ்வளவு எளிதாக ஏற்பதில்லை. அதனால் நவீன வாழ்வை விரும்பும் இந்திய இளைஞர்களை (2k Kids) கொரிய தொடர்கள் ஈர்க்கின்றன போலும்.

ஆட்டிசம் பாதித்த Attorney, Young Woo-வாக, தொடரின் நாயகியாக நடித்திருக்கும் 

Park Eun-bin பிரமிக்க வைக்கிறார். எந்த இடத்திலும் கதாப்பாத்திரத்தை விட்டு விலகவேயில்லை. நடையிலும், பாவனைகளிலும், பேச்சிலும் ஆட்டிசத்தின் பாதிப்புகளை வெளிப்படுத்துகிறார். திமிங்கலங்கள் பற்றிய விசயங்களை எப்போதும் எந்த இடத்திலும் சலிக்காமல் பேசுகிறார்‌. பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார். அடுத்த முறை கண்ணாடி கதவைப் பயன்படுத்தும் போது இவர் போலவே கதவை லேசாக திறந்து 1..2..3.. சொன்ன பிறகுதான் உள்ளே நுழைவோம்‌ போல. அந்த அளவிற்கு நம்முள் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறார். 'Extraordinary' Acting.

சம கால பிரச்சனைகள் பலவற்றை இத்தொடரின் 16 பகுதிகளும் விவாதிக்கின்றன. அவரவரின் நியாயங்கள் முன்வைக்கப்படுகின்றன. எது நியாயமானது என்பதையும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார்கள். சமூக அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. உருவாக்கம் தரமுடன் இருப்பதால் சர்வதேச அளவில் சந்தைப்படுத்த முடிந்திருக்கிறது.   

தொடரின் தலைப்பில் மட்டும் ' Extraordinary ' இல்லை. இந்தத் தொடரே ' Extraordinary ' -ஆக இருக்கிறது. நல்ல அனுபவம். 

மேலும் படிக்க :

ENNIO : THE MAESTRO (THE GLANCE OF MUSIC ) (2021) , DOCUMENTARY MOVIE !

SEX EDUCATION - NETFLIX SERIES !

விட்னஸ் - சாதிக்கும், அதிகாரத்திற்கும் எதிரான குரல் !


2022ம் ஆண்டு, இந்த ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றான 'விட்னஸ்' திரைப்படத்துடன் நிறைவு பெறுகிறது. 

இந்தாண்டு வெளிவந்த நிறைய தமிழ்த் திரைப்படங்கள் நம்பிக்கை அளிக்கின்றன. நாயகத்துதிபாடல்களை மட்டுமே முன்வைக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது. பல்வேறு விதமான அரசியல்களை பேசும் திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. பொறுப்புணர்வுடன் திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் இது அரிதான விசயம். இந்த ஆண்டில் நிறைய வெளிவந்திருக்கின்றன. OTT-ம் ஒரு காரணமாக இருப்பதை மறுக்கமுடியாது. குறிப்பாக SonyLiv தளத்தில் நிறைய குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ( கார்கி, அனல் மேலே பனித்துளி, கடைசி விவசாயி, சேத்துமான், இப்போது விட்னஸ்) இருக்கின்றன. 

'விட்னஸ்' நாம் பேச மறந்த, பேச மறுத்த விசயத்தைப் பேசி இருக்கிறது. சாதிக்கும் அதிகாரத்திற்கும் இடையிலான தொடர்பு திரைப்படம் முழுவதும் விவரிக்கப்படுகிறது. அதிகாரம், எப்போதும் சட்டத்தின் பக்கம் நிற்பதற்குப் பதிலாக சாதியின் பக்கமே நிற்கிறது‌. எளிய மக்களை அடக்கி ஒடுக்கவே அதிகாரம் பயன்படுத்தப்படுகிறது.  

தேர்ந்தெடுத்த கதாப்பாத்திரங்களும், காட்சிப்படுத்திய விதமும் மிகவும் பிடித்திருந்தது. செங்கொடிகளை திரையில் காண்பித்ததும், தீவிர இடதுசாரி தோழர்களின் வாழ்வை செல்வா தோழரின் கதாப்பாத்திரம் வாயிலாக விவரித்ததும் முக்கியமானது. மக்களின் பிரச்சனைகளுக்காக இன்றும் ஓயாமல் குரல் கொடுப்பவர்கள் இடதுசாரி தோழர்கள்தான், ஓட்டரசியல்வாதிகள் அல்ல. 

இவ்வளவு சிக்கலான விசயத்தை தேர்ந்த கலைவடிவமாக கொடுத்த இயக்குநர் தீபக்கிற்கும் , படக்குழுவினருக்கும் வாழ்த்துகள் ! 

இத்திரைப்படத்தைப் பார்க்கும் எவரையும் ஏமாற்றாது. 

மேலும் படிக்க :

நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !

ஜெய்பீம் -அறத்தின் குரல் ! 

The Good The Bad and The Ugly !


வெக்கை நிறைந்த நிலப்பரப்புகள், வெயிலும் , அழுக்கும் படிந்த மனிதர்கள், திரைப்படமெங்கும் முழங்கும் துப்பாக்கிக்குண்டுகள், சீறிப்பாயும் குதிரைகள், அட்டகாசமான கேமிரா கோணங்கள், Tonino Delli Colli -ன் அழகான ஒளிப்பதிவு , Ennio Morricone -ன் மிகச்சிறந்த இசையும் என அற்புதமான திரைப்பட அனுபவம். என்னியோ மோரிக்கோன் இசைக்காகவே பார்க்க ஆரம்பத்ததுதான் 'Dollars Trilogy' என அழைக்கப்படும் Sergio Leone இயக்கிய 'A Fistful of Dollars' , ' For a Few Dollars More' மற்றும் இந்த ' The Good, the Bad and the Ugly' என இந்த மூன்று திரைப்படங்களும்.

மூன்று திரைப்படங்களும் நிறைவையே அளித்தன. அதிலும் இந்த 'The Good, the Bad and the Ugly' திரைப்படமெல்லாம் ஏறக்குறைய மூன்று மணி நேரம். ஆனால் எந்த இடத்திலும் சலிப்பே இல்லை. Sergio Leone இயக்கிய இத்தகைய திரைப்படங்களை 'Spaghetti Western' என்கிறார்கள். முந்தைய இரண்டு திரைப்படங்களைப் போலவே இந்தத் திரைப்படத்திலும் விசில் இசை இடம்பெறுகிறது. என்னியோ மோரிக்கோன் பற்றிய ஆவணப்படம் ( Ennio : the Mastro ( The glance of music )) பார்த்த பிறகு அவரது இசையில் உருவான திரைப்படங்களை தேடிப்பார்க்கும் ஆவல் உருவானது . அது Sergio Leone இயக்கிய திரைப்படங்களிலிருந்து தொடங்கியிருக்கிறது. 

Ennio Morricone is a real master ❤️ 

மேலும் படிக்க :

ENNIO : THE MAESTRO (THE GLANCE OF MUSIC ) (2021) , DOCUMENTARY MOVIE !

SEX EDUCATION - NETFLIX SERIES !


மாமனிதன் ❤️


கதைக்கே தேவையில்லாத அதீத வன்முறை காட்சிகளுடனும், வெத்து நாயகத்துதிபாடல்களுடனும் , இன்னமும் பெண்களே பொருளாகவே சித்தரிக்கும் திரைப்படங்கள் பெருமளவில் வெளியாகிக் கொண்டிருக்கும் தமிழக சூழலில் இந்த 'மாமனிதன்' திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

கிராம பின்புலத்தில் வாழ்பவர்களில் சிலர் இத்திரைப்படத்தில் நாயகன் சந்திக்கும் சூழலை எதிர்கொண்டு இருப்பார்கள். ஆனால் இத்திரைப்படத்தில் காண்பித்தது போல ஒருவராவது வாழ்ந்து இருப்பார். மற்றவர்கள் அதே ஊரில் அல்லது பக்கத்து ஊரில் இருந்துகொண்டு நிலைமையை சமாளித்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த நெருக்கடியை , மற்ற திரைப்படங்கள் போல ஏதாவது அற்புதம் நடந்து 'நாயகனாக' மீண்டு வருவது போல காண்பிக்கப் போகிறார்களோ என்று எதிர்பார்த்த நிலையில் 'மனிதனாக' வே காட்சிப்படுத்தியது நல்ல விசயம்.

இன்றைய உலகவணிகமயமாக்கல் சூழலில் மனிதர்களின் தேவைகள் வேண்டுமென்றே அதிகரிக்கப்படுகின்றன. அதிகரித்து வரும் தேவைகளை நிறைவு செய்ய திடீரென ஒரு மாற்றம் நிகழாதா ? என்றே நம்மில் பெரும்பாலானோர் எதிர்பார்க்கிறோம். நாம் மாற்றத்தை மட்டும் எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. வளர்ச்சியை நோக்கி பயணிப்பதிலும் தவறில்லை. ஆனால் உடனடியான வளர்ச்சி என்பது ஆபத்தானது. இதில் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். சிறிய கவனக்குறைவு கூட சிக்கலில் சிக்க வைத்துவிடும். பணம் சார்ந்த விசயங்களில் விதவிதமான வழிகளில் ஏமாற்ற அங்கங்கே மனிதர்கள் இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள். 

இந்தத் திரைப்படத்தில் முக்கியமாக காட்சிப்படுத்தப் பட்டிருப்பது 'அன்பு'. சக மனிதர்கள் மீதான அன்பு தான் மனித இனத்தையே இயங்க வைக்கிறது. பெரும்பாலான பிரச்சனைகளிலிருந்து நம்மை காப்பாற்றுவதும், கரை சேர்ப்பதும் அன்புதான். அந்த அன்பு என்பது மதங்கள் கடந்தது என்பதை சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார், இத்திரைப்படத்தின் இயக்குனர், சீனு ராமசாமி. சாதியை முன்வைத்தும், மதத்தை முன்வைத்தும் மக்களைப் பிரித்து குளிர் காய அரசியல் கட்சிகள் தயாராக இருக்கும் சூழலில் மக்களின் ஒற்றுமையை, மதநல்லிணக்கத்தை படமாக்கியது, பாராட்டிற்குரியது.

இத்திரைப்படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை கல்வியின் முக்கியத்துவம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. " உன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் படிப்பை மட்டும் விட்டுவிடாதே" என்பது காட்சிகளாக விரிகிறது. கல்வி எப்போதும் நம்மைக் கைவிடாது. சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் கல்வியின் பங்கு என்பது மிகவும் முக்கியமானது. 

விஜய் சேதுபதியின் நாயக பிம்பம் அவ்வப்போது வெளிப்பட்டாலும் பெரும்பாலான இடங்களில் அடக்கியே வாசித்து இருக்கிறார். காயத்ரி, எதிர்பாராத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குரு சோமசுந்தரம் பாயாகவே வாழ்ந்திருக்கிறார். களத்தில் மாதவனாக வரும் இசை விமர்சகர் ஷாஜி , இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே வந்தாலும் திரைப்படம் முழுவதும் அவரையும் சேர்த்தே கதை நகர்கிறது. 

போதாமைகள் இருந்தாலும் எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம்தான், மாமனிதன்.

மேலும் படிக்க :

கர்ணன் - போராடடா ஒரு வாள் ஏந்தடா !

ஜெய்பீம் -அறத்தின் குரல் !


சேத்துமான் ❤️


எழுத்தாளர், பெருமாள் முருகனின் வசனத்திற்காக மட்டுமே இத்திரைப்படத்தைக் காணலாம். அந்த அளவிற்கு வசனங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றன. மிகவும் இயல்பான காட்சியமைப்புகள். தேவைப்படும் இடங்களில் மட்டுமே இசை சேர்க்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் தேர்ந்த படைப்பு.

தமிழ் திரைப்படங்கள், மலையாளத் திரைப்படங்கள் போல அசலான திரைப்படங்களை நோக்கி நகருகிறது என்ற நம்பிக்கையை இத்திரைப்படம் அளிக்கிறது. திரைக்கதையின் ஊடாக வலிந்து திணிக்கப்படும் நாயகத்துதிபாடல்களும் , தேவையே இல்லாமல் சேர்க்கப்படும் வன்முறை காட்சிகளும் நிறைந்த தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகி வரும் சூழலில் 'சேத்துமான்' போன்ற திரைப்படங்கள் நம்பிக்கை அளிக்கின்றன. 

தமிழ்த் திரைப்படங்களில் மிக அதிகளவிலான வன்முறை காட்சிகள் இடம்பெறுவது மிகவும் ஆபத்தானது. இப்போது சின்னத்திரை தொடர்களிலும் தேவையில்லாத வன்முறை காட்சிகள் திணிக்கப்படுகின்றன. தொடர்ந்து காட்டப்படும் வன்முறை காட்சிகளால், வன்முறை சரி என்ற மனநிலையை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் உருவாக்கி வருகிறது. ஒருவரை தாக்குவது மட்டும் வன்முறையல்ல ; தாக்க நினைப்பதே வன்முறைதான் என்பதை முதலில் நாம் உணர வேண்டும். வன்முறை, எப்போதும் எதற்கும் தீர்வாகாது. இதை முன்னிருத்தியே கலைப்படைப்புகள் உருவாக வேண்டும். 

மேலும் படிக்க :

கர்ணன் - போராடடா ஒரு வாள் ஏந்தடா !

நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !

அடி ராக்கம்மா கையத்தட்டு...!


காலையிலிருந்து மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல். இளையராஜா, இந்தப் பாடலில் நிறைய மாயங்கள் செய்திருக்கிறார். பிபிசி (BBC) நடத்திய ஆய்வில் இப்பாடல் உலகின் சிறந்த பத்து பாடல்களில் ஒன்றாக தேர்வானதாக முன்பு கேள்விப்பட்டதுண்டு. இப்போது தேடுகையில் 150 நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட 1000க்கும் மேற்பட்ட பாடல்களிலிருந்து இப்பாடல் நான்காவதாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக விக்கிப்பீடியா சொல்கிறது.  

அந்த செய்தி வெளியான போது கூட இப்பாடலை கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால் கடந்த வாரம் யத்தேச்சையாக தொலைக்காட்சியில் இந்தப் பாடலை பார்க்க நேரிட்டபோது மிகவும் கவர்ந்துவிட்டது. தொடக்க இசையிலிருந்து முடிவு வரை அதகளம் செய்திருக்கிறார். தற்போது வெளியாகும் பாடல்களில் ஒரு மைக்ரோ செகண்ட் கூட இடைவெளி இல்லாமல் இசையைச் சேர்த்து இரைச்சலை உருவாக்குகிறார்கள். ' அடி ராக்கம்மா கையத்தட்டு...' பாடலில் அங்கங்கே இசையே சேர்க்காமல் இடைவெளி விட்டதே மேஜிக் தருணமாக அமைகிறது. பெரும்பாலும் ஏதோ ஒரு தருணத்தில் பாடகர்கள் இசையமைப்பை தாண்டிச் செல்வார்கள். ஆனால் இந்தப் பாடலை எஸ்.பி.பி. மற்றும் சொர்ணலதா பாடியிருந்தாலும் இந்தப் பாடலின் இசையை எந்த இடத்திலும் அவர்களால் கடக்க முடியவில்லை. இப்பாடல் முழுவதும் ராஜாதான் நிறைந்திருக்கிறார். 

தளபதி திரைப்படத்திற்கு முன்பான ராஜா வேறு. தளபதி திரைப்படத்திற்கு பின்பான ராஜா வேறு என்பது போல தளபதிராஜா தனியாகத் தெரிகிறார்.

தமிழ் கூறும் நல்லுலகம் எந்தக் கலைஞரையும் அவர்கள் வாழும் காலத்தில் கொண்டாடியதில்லை. இப்படியான சூழலில் நமது வாழ்வின் 'STRESS BUSTER ' களாக இருக்கும் இளையராஜாவையும் , வடிவேலுவையும் அவர்கள் வாழும் காலத்திலேயே தமிழுலகத்தால் கொண்டாடப்படுவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.


மேலும் படிக்க  :

இசை - உயிரின் ஓசை !

மிகவும் பிடித்தமான மலேசியா வாசுதேவன் பாடல்களில் சில... ❤️

 

கர்ணன் - போராடடா ஒரு வாள் ஏந்தடா !

 


அலை ஓசை திரைப்படத்தில் இடம்பெற்ற ' போராடடா ஒரு வாள் ஏந்தடா... ' என்ற இந்தப் பாடலைத்தான் திரைப்படமாக மாரி செல்வராஜ் உருவாக்கி இருக்கிறார் என்று ஒரு முகநூல் நண்பர் ஏதோ ஒரு பதிவில் எழுதியதை வாசிக்க நேர்ந்தது. அது முற்றிலும் உண்மை என்றே தோன்றுகிறது. 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்திலும் இப்படாலின் வரிகள் இடம்பெற்று இருக்கும். 'கர்ணன் ' திரைப்படத்தில் தனுஷ், யானை மீது அமர்ந்து வரும் போது இப்பாடல் இசைக்கருவிகள் மூலமாக ஒலிக்கும்.

'போராடடா' திரைப்படம் முழுக்க தனுஷ் உரிமைக்காக போராடுகிறார். 'வாள் ஏந்தடா' வரிக்கு ஏற்றவாறு வாள் கதாநாயகன் வந்துவிடுகிறது. இப்படி இந்தப் பாடலை விரித்து இத்திரைப்படத்துடன் ஒப்பிட்டுக்கொண்டே போக முடியும். 90களில் அங்கங்கே நடந்த விசயங்களை கொடியன்குளம் கலவரத்துடன் சேர்த்து உருவாக்கியுள்ளார், இயக்குநர். படத்தின் உருவாக்கத்தில் தனித்து தெரிகிறார், மாரி செல்வராஜ். மிகவும் மெனக்கெட்டு ஒவ்வொரு காட்சியையும் அழகுணர்ச்சியுடன் உருவாக்கியுள்ளார். இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல என்பதை பல்வேறு விதமான உயிரினங்களை திரையில் காட்டுவதன் முலம் சொல்லிக் காட்டுகிறார். தனுஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் சூழலில் கூட இத்திரைப்படம் மாரி செல்வராஜின் படமாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 

இந்தத் திரைப்படத்தைப் பற்றி பேச வேண்டுமென்றால் பேசிக்கொண்டே இருக்கலாம்.கொடியன்குளம் கலவரம் பற்றி இந்தத் திரைப்படம் வந்த பிறகே நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். ஏன் அந்த கலவரம் நடந்தபோது 1995ல் முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கே அப்போது தெரியவில்லை. கலவரம் முடிந்த பிறகுதான் அவருக்கு தெரிய வந்திருக்கிறது. தெரிய வந்தும் பயனில்லை. மனிதத்தன்மையற்ற போலிஸ் வெறியாட்டத்தில் ஒரு ஊரே சிதைக்கப்பட்ட சூழலிலும் கூட எந்த போலிஸூம் தண்டிக்கப்படவில்லை. அதன் பிறகு வந்த கருணாநிதியின் ஆட்சியிலும் யாரும் தண்டிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 

சாதி விசயத்தில் அதிமுக, திமுக இரண்டுமே ஒன்றுதான். என்ன ஒன்று அதிமுகவின் சாதி சார்பு வெளிப்படையாகத் தெரியும், திமுகவின் சாதி சார்பு வெளிப்படையாக தெரியாது அவ்வளவுதான் வித்தியாசம். பேரறிஞர் அண்ணா சாதி ஒழிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்தவும் தொடங்கினார்.கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் அந்த விருப்பம் இருந்தாலும் அவரை முழுமையாக செயல்படவிடாமல் ஏதோ தடுத்திருக்கிறது. எந்த அரசாக இருந்தாலும் எவ்வளவு பெரிய குற்றங்கள் செய்தாலும் போலிஸைக் காப்பாற்றுவதில் கவனமாக இருந்திருக்கின்றன, இருக்கின்றன, இருக்கும். 'சட்டத்தின் முன் அனைவரும் சமம் ' என்பது போலிஸூக்கு பொருந்தாது போல. 

இதுவரை ' கொடியன்குளம் கலவரம்' பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள் தேடித் தெரிந்து கொள்ளுங்கள். சாதி ரீதியான, மத ரீதியான, ஆதிக்க உணர்வு எல்லா இடங்களிலும் இருப்பது போல காவல்துறையிலும் இருக்கிறது. ஆணாதிக்க உணர்வும் காவல்துறையில் மேலோங்கியே உள்ளது. மற்ற பணியிடங்களைப் போலவே காவல்துறையிலும் பெண்கள் பல்வேறு விதமான இன்னல்களைச் சந்திக்கிறார்கள். சமூகத்தின் ஒரு அலகுதான் காவல்துறை, சமூகத்தைப் போலவேதான் காவல்துறை இருக்கும் என்றாலும் சமூகத்தில் நிகழும், மீறல்களுக்கு, குற்றங்களுக்கு முதலில் மக்களாகிய நாம் காவல்துறையைத்தானே அணுகுகிறோம். முதலில் அணுகும் ஒரு அமைப்பே அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்கும் துணை போவதுடன் அதே அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் மக்கள் மீது செலுத்துவதை எப்படி ஏற்க முடியும். அதிகாரத்தாலும், ஆதிக்கத்தாலும் நிகழும் குற்றங்கள் குறைய வேண்டுமெனில் காவல்துறைதான் பெரும் பங்காற்ற வேண்டியிருக்கிறது. வெறும் தண்டனைகள் மட்டும் குற்றங்களைக் குறைத்துவிடாது. என்று காவல்துறை குற்றத்தை குற்றமாக மட்டுமே பார்க்கிறதோ அன்றிலிருந்துதான் மாற்றங்கள் நிகழும். குற்றம் யார் செய்தது? என்பதைப் பொறுத்தே காவல்துறை செயல்படும் எனில் எந்த மாற்றமும் நிகழாது. 

"எத்தனையோ ரத்த வரிகளை

எங்கள் முதுகினில் தந்தவரே

அத்தனையும் வட்டி முதலுடன்

உங்கள் கரங்களில் தந்திடுவோம்" என்று தனது கலையின் மூலமாக வட்டி முதலுடன் இத்திரைப்படத்தைத் தந்திருக்கிறார்,இயக்குநர், மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் காட்டப்பட்டதை விட மிகக் கொடூரமான வன்முறை நிஜத்தில் காவல்துறையால் நிகழத்தப்பட்டிருக்கிறது. நீண்ட அந்த கலவரக் காட்சிகளை திரைப்படத்தில் கூட நம்மால் பாரக்க முடியவில்லை. நிஜத்தில் எவ்வளவு வலிகளை அந்த ஊர் மக்கள் அனுபவித்து இருப்பார்கள். இறுதிவரை அம்மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. 

இத்திரைப்படத்தின் மூலம் விவாதப் பொருளாக மாறி இருக்க வேண்டியது 'சாதிய ரீதியிலான காவல்துறையின் அணுகுமுறை '. ஆனால் திமுக, அதிமுக என்று உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

அதிகாரத் திமிரும் , ஆதிக்க உணர்வும் அழிந்து போகட்டும்!

மேலும் படிக்க :

நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !

ஜெய்பீம் -அறத்தின் குரல் !

Life in Colour with David Attenborough - Documentary ❤️


இயற்கையின் வண்ணங்கள் எவ்வளவு சுவாரசியம் மிக்கவை என்பதை இந்த ஆவணப்படம் விளக்குகிறது. பல்வேறு விதமான உயிரினங்களின் விதவிதமான வண்ணங்கள் வெறும் வண்ணங்கள் மட்டும் அல்ல. தனது பலத்தை வெளிப்படுத்த, இணையைக் கவர, இரையை ஏமாற்ற, தன்னை பாதுகாத்துக் கொள்ள, உணவிற்காக என்று ஒவ்வொன்றிற்கு பின்னும் ஒவ்வொரு கதை இருக்கிறது. அத்தகைய சுவாரசியமான கதைகளில் கொஞ்சம் இந்த ஆவணப்படத்தில் காட்சிகளுடன் பேசப்படுகிறது.

நீங்கள் பார்க்க ஆரம்பித்த பிறகு உங்களது கண்களை விலக்கிக்கொள்ளவே முடியாது. மிகவும் தரமான கேமிராக்களின் உதவியுடன் இயற்கையின் அற்புதங்களை கண்முன் நிறுத்துகிறார்கள். ஆவணப்படம், தென்னிந்தியாவிலிருந்து மயிலுடன்தான் தொடங்குகிறது. இந்திய புலியின் உடலிலுள்ள வண்ணங்கள் குறித்து மிகவும் விரிவாகவே பேசுகிறார்கள். 

நாம் பார்ப்பது போலவே மற்ற உயிரினங்களும் வண்ணங்களைப் பார்ப்பதில்லை. ஒரு சில உயிரினங்கள் நம்மைவிட குறைவான பார்வைத்திறன் கொண்டவையாக இருக்கின்றன. ஒரு சில உயிரினங்கள் நம்மைவிட அதிக பார்வைத்திறன் கொண்டவையாக இருக்கின்றன. வன்முறைகளை மையப்படுத்திய வெப் சீரிஸ், திரைப்படங்களுக்கு இடையே இப்படியான ஒரு ஆவணப்படத்தைப் பார்ப்பது நமக்கு நிச்சயம் புத்துணர்வு அளிக்கும்.

மேலும் படிக்க :

நாமெல்லாம் குற்றவாளிகளே ! 

வலுத்தது நிலைக்கும் !

மிகவும் பிடித்தமான மலேசியா வாசுதேவன் பாடல்களில் சில... ❤️

 


கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச...


சீவி சினுக்கெடுத்து...


தானந்தன கும்மி கொட்டி...


கடலோட ஓடும் ஓடம்...


காடு பொட்டக் காடு...


தென்கிழக்கு சீமையில...


நீ போகும் பாதையில்...


தேடினேன் புதிய சுகம் சேர்ந்தது...


குயிலுக்கொரு நிறம் இருக்கு...


முத்தம்மா மாரி முத்தம்மா தாயிக்கும் தாயான பூமி...


பட்டுவண்ண ரோசாவாம்...


பொன்மானைத் தேடி நானும்...


தாய் மனசு தங்கம்...


வெள்ள மனம் உள்ள மச்சான்...


ஆப்பக்கடை அன்னக்கிளி...


ஏத்தமய்யா ஏத்தம்...


கூடையில கருவாடு...


காதல் வைபோகமே...


மாசமோ மார்கழி மாசம்...


தண்ணி கருத்திருச்சு...


மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்...


பேர் வச்சாலும் வைக்காம போனாலும்...


போக்கிரிக்கு போக்கிரி ராஜா...


சோள இளங்குயிலே...


தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி...


பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்...


எந்த வேலு வந்தாலும்...


கிழக்கு வெளுத்துருச்சு கீழ் வானம் செவந்திருச்சு...


கொழந்தை பாடுறேன் கண்ணுமணி ஏம் பொன்னுமணி...


மனிதன் மனிதன்‌...


நன்றி உனக்கு சொல்ல...


பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி...


நீ பொட்டு வச்ச தங்கக்குடம்...


ஊரு விட்டு ஊரு வந்து...


வெத்தலை வெத்தலையோ...


பட்டுக்கோட்டை அம்மாளு...


வெத்தலைய போட்டேன்டி...


ஆனந்த தேன் காற்று...


ஒரு கூட்டுக் கிளியாக...


போராடடா ஒரு வாளேந்தடா...


ஒரு தங்கரதத்தில்...


வா வா வசந்தமே...


கோடை கால காற்றே...


அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா...


பூங்காற்று திரும்புமா...


வெட்டிவேரு வாசம்...


ஏலமல காட்டுக்குள்ளே...


அடி ஆடு பூங்கொடியே...


இளம் வயசு பொண்ண வசியம் பண்ணும் வளைவிக்காரன்...


கோவில்மணி ஓசை தனை கேட்டதாரோ...


நீங்காத எண்ணம் ஒன்று...


கை வலிக்குது கை வலிக்குது மாமா...


நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்...


வா வா வாத்தியரே வா...


கண்ணைத் தொறக்கனும் சாமி...


பெத்து எடுத்தவதான்...


பொதுவாக என் மனசு தங்கம்...


ஆசை நூறு வகை...


சொல்லி அடிப்பேனடி...


ஒதுங்கு ஒதுங்கு மாவீரன் வண்டி வருது...


ஊட்டி மலை ரோட்டினிலே ஓடுது பார் சைக்கிள் வண்டி...


எதிர் வீட்டு ஜன்னல் ஓரம் ரோஜா செடி...


என்னமா கண்ணு சௌக்கியமா...


ராத்திரியில் பாடும் பாட்டு...


மலையோரம் மயிலே...


ஆகாய கங்கை...


பூவே இளைய பூவே...


ஆத்துமேட்டிலே ஒரு பாட்டு கேட்குது...


எத்தனையோ பொட்ட புள்ள...


இந்த மின்மினிக்கு...


கூட்ஸ் வண்டியிலே...


காக்கிச்சட்ட போட்ட மச்சான்...


"இதுக்கு மலேசியா வாசுதேவன் பாடிய எல்லாப் பாடல்களுமே பிடிச்சிருக்குனு சொல்லிட்டு போயிருக்கலாமே " என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது. ஆனால் உள் மனதோ ஏன் மற்ற பாடல்களையும் குறிப்பிடவில்லை என்றே கேட்கிறது. 

மேலும் படிக்க :

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !



Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms