Saturday, October 20, 2012

இந்தியா - மேட் இன் சீனா !

என்னா சார் , என்னா மேடம் எப்படி இருக்கீங்க ? வாழ்க்கை எப்படி போவுது ? எப்படி போனா என்ன வாழனும் அதானே முக்கியம் . வாழ்க்கை ஒரு முறை தான் ;அதை நம் விருப்பப்படி வாழ வேண்டும் ,அவ்வளவு தான் .ஒரு முறை உங்களைச் சுற்றிப் பாருங்கள் . விதவிதமான பொருட்கள் நம் அறையை நிறைத்திருக்கும் .ஒரு சில பொருட்களை தினமும் பயன்படுத்துவோம் .ஒரு சிலவற்றை எப்பவாவது பயன்படுத்துவோம் . ஒரு சிலவற்றை சுவருக்கு வர்ணம் பூசும் மட்டும் எடுப்போம் .பிறகு மீண்டும் அதே இடத்தில் வைத்து விடுவோம் .நாளுக்கு நாள் நாம் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே தான் போகிறது .  
 
பொருள் சார்ந்த வாழ்வை வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் . நாம் சம்பாதிக்கும் பணத்தில் அதிகளவு பணத்தை விதவிதமான பொருட்கள் வாங்கவே பயன்படுத்துகிறோம் . இவ்வளவு பொருட்கள் நம் வீட்டை அடைத்த பிறகும் நமக்கு திருப்தி என்பதே இல்லை . இது நம் குறையல்ல ,நம்மைச் சுற்றி கவனமாக சிக்கலாக வெளியே வரமுடியாதவாறு வலை பின்னப்படுகிறது . உலகத்தின் மாபெரும் ஏமாளிகள்  நாம் தான் . உலகத்தில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு பொருளும் இந்தியச் சந்தையை மையமாக வைத்தே தாரிக்கப்படுகிறது .  தொலைக்காட்சி வந்த பிறகு தான் நாம் பயன்படுத்தி வந்த பொருட்களின் எண்ணிக்கை  பல மடங்கு உயர்ந்து விட்டது . அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மட்டுமே மனிதர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கி விட்டார்கள் .

பொருட்கள் அதிகமாக அதிகமாக நம் நிம்மதி குறைகிறது .  " கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன் ,கண்ணில் தூக்கம் சொக்குமே அது அந்தக் காலமே ,மெத்தை விரித்தேன் ,சுத்தப் பன்னீர் தெளித்தும் ,கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக் காலமே "அண்ணாமலை திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய வரிகள் இவை . பொருட்கள் கூட கூட நாம் அதிகம் உழைக்க வேண்டியிருக்கிறது . உணவிற்காக உழைப்பதை விட மண் ,பொன் போன்ற பொருட்களுக்காகத்தான் அதிகம் உழைக்கிறோம் . எவ்வளவு கிடைத்தாலும் நம் மனம்  அமைதி அடைவதேயில்லை .

இருபதாம் நூற்றாண்டில் அதிகளவில் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன . அதற்கு முன்பு வரை நாம் இவ்வளவு பொருட்களைப் பயன்படுத்தவில்லை . கண்டுபிடிப்புகளை முன்வைத்து நிறைய தொழிற்சாலைகள் உருவாகின . கோடிக்கணக்கான பொருட்கள் சந்தைகளில் குவிக்கப்பட்டன . உள்நாட்டு தேவை போக மீதம் வெளிநாட்டு சந்தைகளில் விற்கப்பட்டன . இன்று, மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியா ,சீனா போன்ற நாடுகள் தான் உலகின் மிகப்பெரிய சந்தையாக உள்ளன . சீனாவில் அதிகளவில் தொழிற்சாலைகள் உள்ளன . தரமில்லாத  மலிவான பொருட்கள் தான் அங்கு  அதிகம்  தயாராகின்றன . சீனத் தயாரிப்புகளோடு வேறு எந்த நாடும் போட்டிபோட முடியாது .

" Made in China " இந்த வார்த்தை சமீப காலமாக மிக அதிகளவில் கண்ணில் படுகிறது . மிகச் சாதாரண 5 ரூபாய் ,10 ரூபாய்  விற்கக்கூடிய பொருட்கள் முதல் விலை உயர்ந்த iphone னின் உதிரி பாகங்கள் வரை அங்கு தயாரிக்கப்படுகின்றன . விளையாட்டு பொம்மைகள் மிக அதிகளவில் தயாராகின்றன . தரம் குறைவான நெகிழியைப் (பிளாஸ்டிக்கைப் ) பயன்படுத்தியே அதிகளவில் பொருட்கள் செய்யப்படுகின்றன . நாம்  என்று அதிகமான பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்தோமோ  அன்று முதல்  நம் தெருக்களில் குப்பைகள் அதிகம் சேரத் தொடங்கின . சீனத் தயாரிப்புகள் மிகக்குறைந்த காலகட்டத்தில் குப்பையாகி விடுகின்றன . இப்போதெல்லாம்  Made in China என்ற வார்த்தையைப்  பார்த்தாலே குப்பை தான் நினைவிற்கு வருகிறது .

விதவிதமான சிறுவர் விளையாட்டுப்  பொம்மைகள் மற்றும் பொருட்கள் , மின்னணுப் பொருட்கள் , தொழிற்சாலை உபகரணங்கள் ,பரிசுப்  பொருட்கள் ,விளையாட்டு உபகரணங்கள்,கடிகாரங்கள் ,நகவெட்டிகள் , சார்ச் லைட்கள் ,LED  பல்ப்கள் , செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் ,கணினி சாதனங்கள் ,ஜெல்லி மிட்டாய் போன்ற தின்பண்டங்கள் ,மிகச் சின்னது முதல் மிகப்பெரியது வரை  நெகிழியால் செய்யப்பட விதவிதமான வீட்டு உபயோகப் பொருட்கள் என்று இன்று நம் நாட்டின் சிறு அங்காடிகள் முதல் பெரிய அளவிலான பல்பொருள்  அங்காடிகள் வரை சீனத் தயாரிப்புகள் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளன . சீனத் தயாரிப்புகள் அதிகம் வெற்றிபெற இரண்டு காரணங்கள் .ஒன்று ,நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கின்றன .இரண்டு , விற்பவருக்கு மற்ற பொருட்களைக் காட்டிலும் அதிக லாபம் கிடைக்கிறது . MRP அச்சிடாத சீனத் தயாரிப்புகளை தங்கள் விருப்பம் போல் விற்பனை செய்கிறார்கள் ,விற்பனையாளர்கள் .

ISI ,AGMARK  என்பதெல்லாம் பள்ளியில் படிக்க மட்டுமே பயன்படுகின்றன . நடைமுறையில் நாம் பொருட்கள் வாங்கும் பொது இவற்றையெல்லாம் கவனிப்பதில்லை . மிக அதிக விலையுள்ள பொருட்கள் வாங்கும் போது மட்டுமே நாம் தரம் குறித்து கவனிக்கிறோம் .மற்ற நேரங்களில் எதையும் கவனிக்காமல் பொருட்கள் வாங்கி விடுகிறோம் . சீனத் தயாரிப்புகளுக்கு கடிவாளம் போடா விட்டால் இந்தியாவில் இந்தியப் பொருட்களை விற்க முடியாத சூழ்நிலை உண்டாகும் .இல்லையென்றால் " இந்தியா "என்னும் பொருள் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்ற நிலை உருவாகிவிடும் . தரமில்லாத சீனப் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் . சிறுவர் விளையாட்டுப் பொருட்களில் இந்தியத் தயாரிப்பை ஊக்குவிக்க வேண்டும் . ஒரு சிறிய நகவெட்டியைக் கூடவா இவ்வளவு பொறியாளர்கள் உள்ள தேசத்தில் இன்னும் தயாரிக்க முடியவில்லை .

இயற்கை பொருட்களைத் தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களும் சுற்றுச்சூழலை மிகக் கடுமையாக பாதிக்கின்றன . பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வெளியிடும் கழிவுகள் , பொருட்கள் உரிய இடத்திற்கு செல்ல தேவைப்படும் போக்குவரத்து எரிபொருள் கழிவு ,நாம் பயன்படுத்திய பிறகு தூக்கி எரிவதால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு என்று பொருட்கள் அதிகமாக ,அதிகமாக இயற்கை அழிகிறது .சீனத் தயாரிப்புகளில் நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் அதிகம் சேர்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது .அவை  சூழலுக்கு கடும் பாதிப்பை உண்டாக்குகின்றன . இன்றைய சூழலில் இயற்கையை பாதிக்காமல் எந்தப் பொருளும் சந்தைக்கு வருவதில்லை . ஒரு சிறு இரும்புத் துண்டு தயாரிக்க எவ்வளவு மண் தோண்டப்படும் ? நாம் உணர்வதே இல்லை . எப்படிப் பார்த்தாலும் விதவிதமான பொருட்களின் அதிகரிப்பு நம் சூழலுக்கு எதிரி தான் .

பொதுவாக நாம் ஒரு விசயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும் . நாம் இருக்கும் இடங்களில்  என்னென்ன பொருட்கள் கிடைக்கிறதோ அதை வைத்து வாழப் பழகிவிட்டால் இயற்கையை ஓரளவு காப்பாற்றலாம் . அதற்கு நாம் செய்ய வேண்டியது  .அவசியம் தேவைப்பட்டால் மட்டுமே புதிய பொருட்களை வாங்க வேண்டும் . முடித்தவரை உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கலாம் . நாம்  இருக்கும்  பகுதில் விளைந்த உணவுப்பொருட்களை வாங்கி உண்பதன் மூலம் நம் உடல் நலத்தையும் பேணலாம் .

விதவிதமான பொருட்களோ , விலை உயர்ந்த பொருட்களோ , நம் சூழலுக்குப் பொருந்தாத  வெளிநாட்டு உணவுகளோ நமக்கு நிலையான அமைதியையோ ,மகிழ்ச்சியையோ தராது . ஒரு நாள் வேண்டுமானால் நீங்கள் மகிழலாம் . மற்ற எதுவும்  அவற்றால் நமக்குக் கிடைக்காது . இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ முயல வேண்டும் . நம்முடன் மற்றவர்களை  ஒப்பிடுவதை நிறுத்தினாலே நாம் பல பொருட்கள் வாங்க மாட்டோம் . ஆடம்பரத்தினால் கிடைக்கும் மற்றவர்களின் அங்கீகாரம் நமக்குத் தேவையில்லை .

முன்பு ஒரு முறை புகழ் பெற்ற வெளிநாட்டு ஞானி ஒருவர் வாரம் ஒருமுறை அங்காடிகளுக்குச்  சென்று அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விதவிதமான பொருட்களை வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு வருவாராம் . அங்காடி ஊழியர் அவரிடம் ," நீங்கள் தான் எந்தப் பொருளையும் வாங்குவதில்லையே ,அப்புறம் ஏன் அவ்வபோது அங்காடிக்கு  வந்து போகிறீர்கள் " என்று கேட்டார் .அதற்கு அந்த ஞானி " எனக்குத் தேவையில்லாத பொருட்கள் எவ்வளவு இந்த உலகத்தில் இருக்கின்றன "என்று பார்வையிடவே வந்ததாக கூறினார் . நமக்குத் தேவையில்லாத பொருட்கள் தான் உலகில் அதிகம் இருக்கின்றன . அதிகமாக தேவைப்படும் அன்பு குறைவாகவே இருக்கிறது . ஆனால் ,அந்த அன்பிற்கு இருக்கும் சக்தி மிகப்பெரியது .

பொருட்களை நம்பி இருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் என்ன செய்வார்கள் ? என்று கவலைப் பட வேண்டாம் . அவர்களுக்காக இந்தியாவின் மிச்சமிருக்கும் விவசாயநிலங்கள் காத்திருக்கின்றன ...



மேலும் படிக்க :

உணவிற்கான உள்நாட்டுப் போர் ?

" இந்தியா " - சர்வாதிகாரிகளின் தேசம் !
..................................................................................................................................................

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு பகிர்வு... கண்ணொளி சூப்பர்...

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்...?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...?
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்...?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...?
ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில்...
ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில்...
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்...!
விவசாயி .... விவசாயி ....

Unknown said...

மிகவும் நல்ல சிந்தனை நண்பரே...தற்போதைய சுழ்நிலைக்கு தேவையான கருத்துகள்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms