Wednesday, December 5, 2012

எது கலாசாரம் - கி.ரா...!

 கி.ராஜநாரயணன் ,வட்டார மொழி இலக்கியத்தின் முன்னோடி , தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் . ஊரூராக தேடியலைந்து நாட்டார் கதைககளை ஆவணப்படுத்தியவர் . நாட்டார் வழக்கில் இயல்பாகவே  இழையோடியிருந்த பாலியலையும் ,பாலியல் கதைகளையும் பதிவு செய்தவர் . தலைசிறந்த கதைசொல்லியான அவரது நேர்காணல் 14-11-12 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது . ஒரு சில வார்த்தைகளின் மூலம் மட்டுமே பெரிய கோட்டையையே தகர்க்கும் சக்தி உண்மையான படைப்பாளிகளுக்கு மட்டுமே வாய்க்கிறது . எந்தவித விழுமியங்களிலும் சிக்காமல் வாழ்க்கையை எளிமையாக அணுகுகிறார் ,கி .ரா . அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது . கலாசாரம் குறித்து அவர் சொன்னதை மட்டுமே இங்கே பகிர்ந்து கொள்கிறேன் .


சமஸ் :-

" கட்டுக்கோப்பான கலாசாரத்திற்குப் பேர் போன இடைசெவல் மாதிரி ஒரு இந்தியக் கிராமம் ; உலகிலேயே முற்போக்கானதாகச் சொல்லப்படும் பிரெஞ்சு  கலாசாரச்  சூழல் நிலவும் பாண்டிச்சேரி மாதிரி ஒரு நகரம் .. இரண்டிலும் நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் . எந்தக் கலாசாரம் உண்மையில் உன்னதமானதாக உங்களுக்குத் தெரிகிறது ?"

 கி.ரா :-

" பிரெஞ்சு கலாசாரம் தான் உன்னதமாத் தெரியுது . இந்தப் பொறப்பு எடுத்த நோக்கம் என்ன? சந்தோசமா வாழனும் . அதுதான் நோக்கம் .சந்தோசமா எப்படி வாழறது ? பறவைகளை மாதிரி மனுஷன் வாழணும் . எந்தக் கட்டுப்பாடும் இல்லாம , அவனவன் நினைச்ச மாதிரி சுதந்திரமா,சந்தோசமா வாழனும் . அதுக்கு எந்தக் கலாசாரம் எடம் கொடுக்குது ? இந்தியக் கலாசாரம் எடம் கொடுக்கல .அட , விருப்பப்பட்ட ஒரு மனுஷாளோட சேர்ந்து வாழ்ற சுதந்திரம்கூட இங்கே இல்லையே ? ஒரு காலத்துல கிராமங்கள்ல அந்தக் கலாசாரம் இருந்துச்சு . விருப்பம்போல வாழலாம் ; புடிக்கலைன்னா அத்துக்கிட்டுப் போய்டலாம் .இன்னொண்ணு சேர்த்துக்கிடலாம் . புள்ளைங்களுக்கும்  தெரியும் . அம்மாதான் நம்மளோட அம்மா ,நம்ம அப்பா இவரு இல்லைங்கிறது . ஊருக்கும் தெரியும் . யாரும் எதையும் தப்பா நெனைக்கிறது இல்லை .சந்தோஷமா இருந்தாங்க .ஆனா ,அந்த மாதிரி கிராமம் எல்லாம் இப்ப குறைஞ்சுக்கிட்டு வருது . நகரத்துக்காரன் எல்லாம் சேர்ந்து கிராமத்தைப் புனிதமாக்கிட்டான் .கட்டுப்பாடு கட்டுப்பாடுனு பேசி வாழ்க்கையையே பொழைப்பா மாத்திக்கிட்டு ஆளாளுக்குப் பைத்தியம் பிடுச்சு அலையுறோம் ."

சமஸ் :-

"அப்படி என்றால் , ஒரு கலாசாரத்தை மதிப்பிட பாலியல் சுதந்திரம் தான் அளவுகோலா ? "


கி.ரா :-

" ஆமா ,கலாசாரம்னு பேசுனா , மொதல்ல அங்கே இருந்து தானே தொடங்கணும் ? ஒழுக்கம் ,ஒழுக்கம்னு எங்கே கூச்சல் கேட்குதோ ,அங்கேதான் நிறைய ஒழுக்கக்கேடு இருக்கும் . ஒவ்வொருத்தனும் மனுசுக்குள்ள ஆயிரம் தடவை சோரம் போறான் .வெளியே பேசுறது பதிவிரதத்தனம் .சென்னையிலேயே,ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி நடந்துச்சா இல்லையா ? கம்ப்யூட்டர் கம்பெனியில கக்கூஸு அடைச்சு , குழாயை  உடைச்சப்ப வண்டி வண்டியா ஆணுறைகளை எடுத்த கதை நாடு முழுக்க நாறுச்சா இல்லையா ? அப்ப வெளியே மூடிக்கிட்டு உள்ள வெறியோட அலையுறதுல என்ன இருக்கு ? அட , பச்சப்புள்ளைங்க மேல எவ்வளவு வன்முறை நடக்குது ? என்னடா , இந்தக் கி.ரா. இந்த வயசுல இப்படிப் பேசுறானேனு நெனைக்கக் கூடாது .இந்த வயசுல நான் பொய் பேசக் கூடாது , இல்லையா ?மொதல்ல இங்கே குடும்பம்கிற அமைப்பு உடையணும்னு நெனைக்கிறேன் ."

சமஸ் :-

" இந்தியாவுக்குப் பாலியல் கல்வி வேண்டும் என்று நினைக்கிறீர்களா? "

கி.ரா.:-

" கண்டிப்பா வேணும்னு சொல்றேன். இல்லைன்னா, குட்டிச்சுவராப் போயிடும் . எப்படி வாழணும்னு மொதல்ல நாம கத்துக்கணும் . பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கணும் . மறைச்சு மறைச்சு வெச்சுதான் பெரிய விசயமாக்கிட்டோம் . பிள்ளைங்க இது ஒரு பெரிய விஷயம்னு நெனைச்சு , அந்த ஞாபகமாகவே அலையுது . நான் கேட்குறேன் ... ஒரு நாள்ல முக்கா நாளு ஒருத்தன் இந்த நெனைப்பாவே திரியுறான்னா , அது சிக்கலா, இல்லையா ? அது அவனோட சிக்கல் மட்டும்தானா .. சமுதாயத்தோட சிக்கலுமா ? கம்ப்யூட்டர் மூலமா மணிக்கணக்கா உறவாடுறானே ,அவனோட ஆழ்மனசுத் தேவை என்ன ? கிராமப்புறங்கள்ல மேல் வயித்துப் பசி , கீழ் வயித்துப் பசினு சொல்வாங்க . ரெண்டு பசியுமே மோசமானது . ஆனா, இங்கே எல்லோருமே மேல் வயித்துப் பசியைத் தீர்க்குறதைப் பத்தி மட்டும்தான் பேசுறோம் . கீழ் வயித்துப் பசியை மறந்துடுறோம் .  "


சமஸ் :-

" இந்த வயதில் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? உங்கள் முதல் காதலை இப்போது நினைவுகூர முடியுமா ? "

கி.ரா :-

"     முதல் காதல் ... ஹா ... ஹா ... பசிக்குது . அந்தச் சமயத்துல பக்கத்துல நல்ல சாப்பாடு .உடனே கிடைச்சுட்டா ,அதை ஒரு விசயமா நெனைப்போமா ? அப்படித்தான் இந்தக் காதலும் . கிடைச்சுட்டா , அந்த நேரச் சாப்பாடு . கிடைக்காட்டி , அதுக்குப் பேர் காதல் . கிடைக்கவே கிடைக்காட்டி , அது  அமரக் காதல் , காவியக் காதல் . ஒரு விஷயம் சொல்லலாம் . காதல் ஒரு தடவை மட்டும் வர்றது இல்லை .வந்துக்கிட்டே இருக்குறது . "


இந்த 90 வயதுக்காரரிடம் நாம் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது ...!

நன்றி - ஆனந்த விகடன் .


மேலும் படிக்க :

மெதுவான எளிய வாழ்க்கை !

உண்மையான கொண்டாட்டம் !

வாழ்க்கை ஒரு போராட்டம் !
.................................................................................................................................................

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms