Thursday, January 10, 2013

கலாச்சார விடுதலையே சமூக விடுதலை !

தற்போது நடக்கும் பெரும்பான்மையான பிரச்சனைகளுக்கு கலாச்சாரக் கூறுகள் தான் காரணமாக இருக்கின்றன . கலாச்சாரக் கூறுகளிலிருந்து வெளியே வராத வரை மனித சமூகம் முன்னோக்கிச் செல்ல முடியாது . உணவு ,உடை,இருப்பிடம் ,மனித உறவுகள் ,பழக்கவழக்கம் ,குழந்தைகள் ,ஆண் மற்றும் பெண் குறித்த நிலைப்பாடுகள் ,பாலியல் ,வாழும் முறை என்று  ஒவ்வொரு விசயத்திற்கும் ஒவ்வொரு விதமான வரையறுக்கப்பட்ட கோட்பாடுகள் கலாச்சாரத்தில் இருக்கின்றன . சமூக அமைப்பில் இருக்கும் ஒரு சிலர்  தங்களுக்கு ஆதாயம் தரும் அனைத்து கலாச்சாரக் கூறுகளையும் மிகக் கவனமாக பாதுகாத்து வருகின்றனர் ; ஆதாயம் தராதவற்றை காற்றில் விடவும் அவர்கள் தயங்குவதில்லை . சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர எத்தனையோ தலைவர்கள் தீவிரமாக போராடினார்கள் . அவர்களது செயல்பாடுகள்  சமூகத்தில் நிரந்தர மாற்றத்தைக் கொண்டு வராவிட்டாலும் நிலைமை மோசமாகாமல் பார்த்துக்கொண்டது .

குழந்தைகளை குழந்தைகள் போலவும் ,பெண்களைப் பெண்கள் போலவும் நடத்தாத எந்தக் கலாச்சாரமும் குற்றமுடையது தான் . நம் இந்தியக் கலாச்சாரம் ,தமிழக கலாச்சாரம்  குற்றமுடையது தான் . பெண்களுக்கு எதிரான கொடுமைகள் உலகெங்கிலும் இருந்தாலும் இந்தியாவில் அதிகமாகவே இருக்கின்றன . உலக அளவில் பெண்கள் பாதுகாப்பில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுக்குப் பின்னால் தான் இந்தியா உள்ளது . ஆணாதிக்க கலாசாரம் தான் இந்தியாவில் உள்ளது .பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் நன்றாக படிக்கவும் ,நன்றாக சம்பாதிக்கவும் மட்டுமே தூண்டப்படுகிறார்கள் .  மற்ற எந்த விசயங்களிலும் கவனம் செலுத்த பெற்றோரும் ,கல்விக் கூடங்களும் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை . இங்கு ஆண் குழந்தையை ஒரு விதமாகவும் பெண் குழந்தையை வேறு  விதமாகவும் தான் வளர்க்கிறார்கள் . ஆண் பிள்ளைகளுக்குக் கிடைக்கும் சுதந்திரம் பெண் பிள்ளைகளுக்குக் கிடைப்பதில்லை . தங்களை தாங்களே தாழ்வு மனப்பான்மையுடன் நினைக்கும் நிலை பெண் பிள்ளைகளுக்கு உருவாகிறது . சமூகத்தின் அனைத்து கூறுகளும்  பெண்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன .

இன்றும் பெண்கள் எவ்வளவு படித்திருந்தாலும்  திருமணத்திற்குப் பின் கணவன் சொல்லும்படி நடந்து கொள்ள பணிக்கப்படுகிறார்கள் . எவ்வளவு அவமானப் படுத்தினாலும் குடும்ப மானம் கெட்டுவிடும் என்பதற்காகப் பொறுத்துப் போகிறார்கள் . விதவைகள் மறுமணம் செய்ய நம் கலாசாரம் இன்னுமும் முழுமையான சுதந்திரம் தரவில்லை . ஒரு பெண் தன் கணவனை இழந்த பிறகு , குடும்பத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் ஆண்கள்  அந்தப் பெண்ணைப்  அடைய முயற்சி செய்கின்றனர் .இதே நிலை ஆணுக்கு வரும்போது அவனின் அடுத்த திருமணம் பற்றி மட்டுமே நம் கலாசாரம் பேசுகிறது .

அன்று பெண்கள் உடன்கட்டை ஏறியதற்குக் காரணம் வீட்டிற்குள் நடந்த பாலியல் தொந்தரவுகள் தான் காரணமாக இருந்திருக்கின்றன . பெண்களுக்கு வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பாலியல் தொந்தரவுகள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன . குடும்ப மானம் போய்விடும் என்பதற்காக வீட்டிற்குள்ளும் வெளியிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் கொடுமைகள் மூடி மறைக்கப் படுகின்றன .இந்தப் மனப்பான்மை தவறு செய்தவர்களை மீண்டும் தவறு செய்யத் தூண்டுகிறது . அதனால் தான் கி.ராஜநாராயணன்,  "ஒழுக்கம் ,ஒழுக்கம்னு எங்கே கூச்சல் கேட்குதோ ,அங்கேதான் நிறைய ஒழுக்கக்கேடு இருக்கும் . ஒவ்வொருத்தனும் மனுசுக்குள்ள ஆயிரம் தடவை சோரம் போறான் .வெளியே பேசுறது பதிவிரதத்தனம் .சென்னையிலேயே,ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி நடந்துச்சா இல்லையா ? கம்ப்யூட்டர் கம்பெனியில கக்கூஸு அடைச்சு , குழாயை  உடைச்சப்ப வண்டி வண்டியா ஆணுறைகளை எடுத்த கதை நாடு முழுக்க நாறுச்சா இல்லையா ? அப்ப வெளியே மூடிக்கிட்டு உள்ள வெறியோட அலையுறதுல என்ன இருக்கு ? அட , பச்சப்புள்ளைங்க மேல எவ்வளவு வன்முறை நடக்குது ? என்னடா , இந்தக் கி.ரா. இந்த வயசுல இப்படிப் பேசுறானேனு நெனைக்கக் கூடாது .இந்த வயசுல நான் பொய் பேசக் கூடாது , இல்லையா ?மொதல்ல இங்கே குடும்பம்கிற அமைப்பு உடையணும்னு நெனைக்கிறேன் " என்று சொன்னாரோ என்னவோ . குடும்பம் என்கிற அமைப்பு மீது நம் கலாசாரம் கட்டமைத்து வைத்திருக்கும் கூறுகள் மீது நாம் கேள்வி எழுப்ப வேண்டிய நேரமிது .

உலகெங்கிலும் அதிகமாக துன்புறுத்தப்படுவது பெண்ணின் உடல் தான் . நாடுகளுக்கு இடையிலான போர்களின் போதும் , இனத்தின் பெயரால் நடத்தப்படும் போர்களின் போதும் , மதக் கலவரங்களின் போதும் ,ஜாதிக் கலவரங்களின் போதும் முதலில் பாதிக்கப்படுவது  பெண்களின் உடல் தான் . எல்லா இடங்களிலும் பெண்களை கட்டுப்படுத்தி விட்டு பெண்களைத்  தெய்வம் என்று சொல்லி  போலியான உருவகம் நம் நாட்டில் கொடுக்கப்படுகிறது . தினமும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே தான் போகிறது . டெல்லி சம்பவத்திற்குப் பிறகு எல்லா மட்டங்களிலும் தொடர்ந்து உணர்வு சார்ந்த நிலையிலேயே விவாதித்துக் கொண்டே இருக்கிறார்கள் . அடிப்படைக் காரணத்தை அறியவும் அதைக் களையவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

இந்தியாவில் நடக்கும் அனைத்து பாலியல் வன்கொடுமைகளும்  எந்தச் சூழலில் நடக்கின்றன . அதை வகைப்படுத்தி மூல காரணத்தை அறிந்தால் மட்டுமே நம்மால் இம்மாதிரியான குற்றம் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முடியும் . புதிதாக சட்டம் இயற்றியவுடன் எல்லாம் நின்று விடும் என்று நினைப்பது முட்டாள்தனம் . இந்தியாவில் ஏற்கனவே நிறைய சட்டங்கள் இருக்கின்றன ,அதைச் செயல்படுத்துபவர்கள் தான் தொடர்ந்து தவறு செய்கிறார்கள் .

காவல்துறை இந்த விசயத்தில் மிக மோசமாக செயல்படுகிறது . ஏன் காவல்துறை அதிகாரிகளே தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சாதாரணப் பெண்களையும் , இன்னும் சொல்லப்போனால் பெண் காவலர்களையே தங்கள் பாலியல் இச்சைக்கு இணங்கும் படி துன்புறுத்துகிறார்கள் . அரசியல்வாதிகளின் மகன்கள்  செய்யும் அட்டூழியங்கள் அனைத்தும் காவல்துறையால் மறைக்கப்படுகிறது .இந்த நிலையில் பாலியல் குற்றங்களை எவ்வாறு காவல்துறையால் தடுக்க முடியும் என்று தெரியவில்லை .

நம் நாட்டில் நாளுக்கு நாள் குற்றங்கள் பெருகுவதற்கு மதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது . மதுவுக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது என்றாலும் கொண்டாட்டங்களின் போது மட்டுமே அன்று மது பயன்படுத்தப்பட்டது . இன்று போல் எப்பாடு பட்டாவது தினமும் மது அருந்துதல் என்பது அன்று இருக்கவில்லை . இன்று ," காதல் செய்யாதவன் இளைஞன் இல்லை , மது குடிக்காதவன் மனிதன் இல்லை " என்ற நிலை உருவாகிவிட்டது . குற்றங்களுக்கு மூல காரணமான மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்காமல் சட்டம் இயற்றுவதால் எந்த நன்மையையும் ஏற்படப்போவதில்லை ஊடகங்களில் பெண்களை போகப் பொருளாக இன்னும் இழிவாக சித்தரிக்கிறார்கள் . இதையெல்லாம் தடுக்க  வேண்டும் .எழுத்தாளர் பாமரன் பக்கம் :- சட்டங்கள் காக்குமா சரிகாக்களை….?

பாலியல் கல்வி தரப்பட வேண்டிய அவசியம் குறித்து கி.ராஜநாராயணன் கூறியது :

"பாலியல் கல்வி கண்டிப்பா வேணும்னு சொல்றேன். இல்லைன்னா, குட்டிச்சுவராப் போயிடும் . எப்படி வாழணும்னு மொதல்ல நாம கத்துக்கணும் . பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கணும் . மறைச்சு மறைச்சு வெச்சுதான் பெரிய விசயமாக்கிட்டோம் . பிள்ளைங்க இது ஒரு பெரிய விஷயம்னு நெனைச்சு , அந்த ஞாபகமாகவே அலையுது . நான் கேட்குறேன் ... ஒரு நாள்ல முக்கா நாளு ஒருத்தன் இந்த நெனைப்பாவே திரியுறான்னா , அது சிக்கலா, இல்லையா ? அது அவனோட சிக்கல் மட்டும்தானா .. சமுதாயத்தோட சிக்கலுமா ? கம்ப்யூட்டர் மூலமா மணிக்கணக்கா உறவாடுறானே ,அவனோட ஆழ்மனசுத் தேவை என்ன ? கிராமப்புறங்கள்ல மேல் வயித்துப் பசி , கீழ் வயித்துப் பசினு சொல்வாங்க . ரெண்டு பசியுமே மோசமானது . ஆனா, இங்கே எல்லோருமே மேல் வயித்துப் பசியைத் தீர்க்குறதைப் பத்தி மட்டும்தான் பேசுறோம் . கீழ் வயித்துப் பசியை மறந்துடுறோம்  "

பாலியல் கல்வி கொடுக்கப் பட வேண்டிய அவசியத்தை நம் கல்வியாளர்கள் உணர வேண்டும் . ஆணுக்குப் பெண்ணைப் பற்றிய புரிதல்களையும் ,பெண்ணுக்கு ஆணைப் பற்றிய புரிதல்களையும் முதலில் கற்பிக்க வேண்டும் . ஆண்களுக்கு தனியாகவும் ,பெண்களுக்குத் தனியாகவும் நடத்தப்படும் கல்விகூடங்களைத் தடை செய்து இருபாலரும் பயிலும் கல்விக் கூடங்களை மட்டுமே இயங்க அனுமதிக்க வேண்டும் . இருபாலர்களும் படிக்கும் நிறைய கல்விக்கூடங்களில் ஆண்கள்  பெண்களுடனும் , பெண்கள் ஆண்களுடனும்  பேச தடை விதித்துள்ளனர் . இது மனிதத்தமையற்ற செயல் . ஆண்களை பெண்களும் ,பெண்களை ஆண்களும் சிறு வயது முதலே புரிந்து கொண்டாலே போதும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து விடும் .
எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஆண்களிடமிருந்து பாலியல் ரீதியாக தங்களைக் காத்துக்கொள்ள பெண்களுக்குப்  பயிற்சி அளிக்க வேண்டும் .

இயற்கையிலேயே  ஆணுக்கு பெண் மீதும் , பெண்ணுக்கு ஆண் மீதும் ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும் . பெண் ,ஆண்களால் ரசிக்கப்படுவதையும் , ஆண் , பெண்களால் ரசிக்கப்படுவதையும் விரும்புகிறார்கள் . ஆனால் ,இந்த இயல்பான விசயத்தை தங்கள் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர் நவீன முதலாளிகள் . அதனால் தான் அழகு சாதனப் பொருட்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது . ஆண் மீது பெண்ணுக்கு உள்ள ஈர்ப்பை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதில்லை . எந்த வணிக விளம்பரங்களும் ஆணின் உடலை கவர்ச்சிப் பொருளாக காட்டவில்லை .ஆணின் தொப்புள் குழியை விதவிதமாக காட்டவில்லை ; பம்பரம் விடவில்லை . ஆண்கள் சட்டை அணியாமல் தெருவில் நடந்தால் கூட அதைக் கவர்ச்சியைத் தூண்டும் விதத்தில் யாரும் கவனிப்பதில்லை . காரணம் ,நம் கலாசாரம் ஆணாதிக்க கலாசாரம் .ஆண் எது செய்தாலும் சரி ,என்பது நம் சமூகத்தின் பொதுப்புத்தியாகவே உள்ளது .   ஆனால் , பெண் மீது ஆணுக்கு இருக்கும் ஈர்ப்பை முழுவதும் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தி பெண்ணை ஒரு போகப் பொருளாக பார்க்கும் நிலையை உருவாக்கிவிட்டன , இன்றைய ஊடகங்களும்  ( தொ(ல்)லைக்காட்சி , பத்திரிகைகள் ,சினிமா  இன்னும் பல ) , வணிக நிறுவனங்களும் .


ஒரு அழகான ஆண் தெருவில் நடந்து போனால் ,சில  பெண்கள் அந்த ஆணைப் பார்க்கக் கூடும் . அதே நேரத்தில் ஒரு அழகான் பெண் தெருவில் நடந்து போனால் வயது வித்தியாசமின்றி இளம்வயது ஆண் முதல் முதிய ஆண் வரை அந்தப் பெண்ணை விரசமான பார்வையோடு பார்க்கிறார்கள் . பெண்ணின் உடலில் எந்த பாகம் உடையால் மூடப் படாமல் இருக்கிறதோ அங்கேயே ஏறக்குறைய எல்லா ஆண்களின் பார்வையும் போகிறது .  குடும்பங்களில் சொத்துக்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் பெண்களுக்கு நேரடியான பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்படுகின்றன .பேருந்துகளில் பெண்களை உரச ஆண்களின் உடல்கள் துடிக்கின்றன .மோசமான  குடும்ப சூழ்நிலை காரணமாகவும் , குடும்பப் பொருளாதாரத்திற்காகவும் , தங்கள் வேலையக் காப்பாற்றிக் கொள்ளவும் , சுய கெளரவதிற்காகவும்  தாங்கள் படும் இன்னல்களை மறைக்கிறார்கள்  . ஒரு சிலர் காதல் என்ற பெயரைச் சொல்லி பெண்களை வல்லாங்கு செய்கிறார்கள் . பெண்களுக்கு எதிரான பெரும்பாலான பாலியல் தொந்தரவுகள் , ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி மிரட்டி அவர்களை தங்கள் ஆசைக்கு தொடர்ந்து பணிய வைக்கின்றனர் வக்கிர புத்தி ஆண்கள் .

ஆண்கள் பெண்கள் சேர்ந்து வளர்வதை ஒரு குறிப்பட்ட வயதிற்குப் பிறகு நம் கலாசாரம் தடை செய்கிறது . அதே கலாசாரம் திருமணம் என்று வரும்போது ஒரு ஆணையும் பெண்ணையும் ஒரே அறைக்குள் தள்ளிவிட்டு நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழுங்கள்  என்று சொல்கிறது . பருவ வயதில் ஆணுக்கும் ,பெண்ணுக்கும் தங்கள் உடலில்  நடைபெறும் ஹார்மோன் சார்ந்த மாற்றங்கள் பற்றிய புரிதல் வேண்டும் . எதிர்பாலினத்தின் உடலில் நடைபெறும் மாற்றங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் . மொத்தத்தில் பாலியல் அறிவு குறைபாடு தான் பாலியல் சார்ந்த குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது .


 ஒரு ஆண், ஒரு பெண்ணை அடித்தால் அது மிகச் சாதாரணமாகப் பார்க்கப்படுகிறது . அதே நேரத்தில் ஒரு பெண் ,ஒரு ஆணை அடித்தால் அது அவமானமாகப் பார்க்கப்படுகிறது .படித்த ஆண்கள் முதல் படிக்காத ஆண்கள் வரை பெண்களை அடிகிறார்கள் .அதை நம் கலாசாரம் பெரிது படுத்துவதில்லை ."அடிக்கிற கை தான் அணைக்கும் "," கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்"  என்று சொல்லி ஆணின் மிருகத்தனத்திற்கு வக்காலத்து வாங்குகிறது ,நம் கலாசாரம் .சமத்துவத்தை பேண வேண்டிய இடமான கல்விக்கூடங்களும் ஆண்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் பிரிவினையையே உண்டாக்குகிறது . தன்னை ஏற்றுக்கொள்ளாத பெண்ணிடத்தில் ஆண் ,தன் மிருகத்தனத்தைக் காட்டுகிறான் .ஆணாதிக்க சமூகம் இருக்கும் வரை உலகெங்கிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறவே செய்யும் .பெண்ணைப் பற்றிய நம் எண்ணங்கள் மாற வேண்டும் . பெண்ணிற்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து சக மனுசியாக நடத்த வேண்டும் . ஆண் பெண் சமத்துவத்தைப் பேணும் கலாசாரமே சிறந்த கலாசாரம் .

பாலியல் சுதந்திரம் பற்றி பேச வேண்டிய நிலை உருவாகியுள்ளது . இருவருக்கும் விருப்பம் இருந்தால் யார் யாரை வேண்டுமாலும் காதலிக்கலாம் .யார் யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து வாழலாம் . விருப்பம் இல்லையென்றால் யாரும் யாரையும் துன்புறுத்தக் கூடாது . இந்த நிலை உருவானாலே பாதிப் பிரச்னை தீர்ந்து விடும் .ஆண்கள் ,காதலிக்கவும் , காதலை பெண்ணிடம் சொல்லவும் , பெண்ணைப் பார்த்து படுக்கையைப் பகிர்ந்து கொள்ளலாமா என்று கேட்பதற்கும் சுதந்திரம் இங்கே இருக்கிறது . அதே சுதந்திரம் இங்கே பெண்ணுக்கு இல்லை . பெண் விடுதலை தான் சமூக விடுதலையின் தொடக்கமாக இருக்க முடியும் .

தமிழகத்தில் இயங்கும் பெரும்பான்மையான கல்விக்கூடங்களின் பெயர்கள் அனைத்தும் சாதியின் பெயரைத் தாங்கி இருக்கின்றன . இந்த நிலையில் இந்தக் கல்விக் கூடங்கள் சாதியை ஒழிக்கும் என்று நாம் எப்படி நம்புவது ? முதலில் சாதியின் பெயர்  எந்தக் கல்விக் கூடத்தின் பெயரிலும் இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும் . கலாசாரத்தின் பிடியிலும் ,மதத்தின் பிடியிலும் சமூகம் இருக்கும் வரை சாதியை ஒழிக்க முடியாது . சாதியின் பெயரால் தமிழனும் ,மொழியின் பெயரால் இந்தியனும் பிளவுபட்டு இருக்கிறான் . ஆதலால் நாம் , மனிதர்களை ஒன்றிணைப்போம் . மனிதம் வெல்லட்டும் !

பெண் விடுதலை , மதுவிலக்கு ,சாதி ,தீண்டாமை என்று பெரியார் முன்னெடுத்த அனைத்து பிரச்சனைகளும் இன்றும் அப்படியே உள்ளன .

பெண் விடுதலை ,பாலியல் விடுதலை மற்றும் கலாசார விடுதலையே சமூக விடுதலை !

மேலும் படிக்க :

எது கலாசாரம் - கி.ரா...!

சமத்துவத்தைப் பேணுமா கல்வி ?
...................................................................................................................................................

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms