Tuesday, December 31, 2013

வட்டியில் சுழலும் வாழ்வு ..!

நீங்கள் உலகின் எந்தப்பகுதியில் வசித்தாலும் வட்டியுடன் தான் வாழ வேண்டிய சூழல் உள்ளது . கொடுத்த கடனுக்கு வட்டி வாங்குபவராகவோ அல்லது வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுபவராகவோ இருக்க வேண்டும் . வட்டி கட்டுபவர்களின் எண்ணிக்கை  தான் அதிகமாக இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை .ஏன் ?எல்லா நாடுகளுமே உலக வங்கியிடம் கடன் பெற்றுள்ளன ;வட்டியும் கட்டுகின்றன.கடன், பல வேளைகளில் ஆக்கசக்தியாக இருந்தாலும் சில வேளைகளில் வாழ்வையே அழிக்கும் அழிவுசக்தியாகவும் இருக்கிறது .சாதரணமாகவே வாழ்வைப் பாதிக்கும்  கடனும் ,வட்டியும்,  உலக வணிகமயமாக்கத்தின் காரணமாக சமூக அமைப்பில் இருக்கும் அனைவரையும் வெகுவாக பாதிக்கும் காரணிகளாக மாறிவிட்டன .

மருத்துவத்திற்காகவும் ,கல்விக்காகவும் தான் நாம் அதிகம் கடன் வாங்குகிறோம் . "தகவல் பெறும் உரிமை போல , மருத்துவ சேவை பெறும் உரிமையையும் , கல்வி பெரும் உரிமையையும் நமது அரசிடமிருந்து பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் .மக்களின் மருத்துவ சேவைக்காக சீனா செலவளிக்கும் தொகையில் நான்கில் ஒரு பங்கைத் தான் இந்திய அரசு, இந்திய மக்களுக்காக செலவிடுகிறது " என்று  பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் சொல்கிறார்.

ஒரு வலிமையான நாட்டை உருவாக்க மக்களின் ஆரோக்கியமும் , சர்வதேச தரமுள்ள கல்வியும் அவசியம் .இந்தியாவில் மருந்துகள்,மருத்துவர்களின் சேவை மற்றும் மருத்துவமனைகள் என அனைத்தும் மிகப்பெரும் வணிகம் .மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் வாங்கி முழுதும் பயன்படுத்தாமல் தூக்கி எறியப்படும் மருந்துகளின் வழியே , மக்கள் பணம் அதிகமாக குப்பைக்குப் போகிறது . " எவ்வளவு செலவானாலும் பராயில்லை " இந்த வசனம் இரண்டு இடங்களில் அதிகமாகப் பேசப்படுகிறது .ஒன்று , உயிர் போகக் கூடிய இக்கட்டான நிலையில் மருத்துவமனைகளில் .இரண்டு ,ஓரளவு உள்ளூர்த் தரமான படிப்பிற்காக கல்விநிலையங்களில் . இந்த இரண்டு இடங்களிலும் எந்தக்கேள்வியும் கேட்காமல் பணத்தைக்கொட்ட நாம் எப்போதும் தயாராகவே இருக்கிறோம் .பணத்தைக் கொட்ட முடியாதவர்கள் அந்த இரண்டு இடங்களிலும் அனுமதிக்கப்படுவதில்லை . ஒரு பெரிய மருத்துவச் செலவோ அல்லது கல்விச் செலவோ ஒரு குடும்பத்தின் மொத்த சொத்தையே அழித்துவிடுகிறது . வங்கிகள் தற்போது கல்விக்காக கடன் கொடுப்பது போல, மருத்தவ செலவிற்காகவும் கடன் கொடுக்கும் நிலை வந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் .தமிழக அரசின் இலவச காப்பீட்டுத் திட்டங்கள் இன்னும் எளிமைப்படுத்தப்பட வேண்டும் .

நம் அரசியல்வாதிகள், இனி மேடைகளில் பேசும் போது " அன்பார்ந்த வாக்களப் பெரும்குடி கடனாளிகளே .." என்று தான் பேச வேண்டியிருக்கும் . அந்த அளவிற்கு நிலமை மோசமாகி வருகிறது ." ஒரு ரூபாய் கூட கடனில்லாமல் வாழும் வாழ்க்கை தான் சிறந்தது " ," கடனில்லாதவனே பெரும் பணக்காரன் " போன்ற கற்பிதங்கள் காற்றில் பறக்கின்றன . கடன் பட்டாவது மற்றவர்கள் நுகரும் (பயன்படுத்தும் ) பொருளை வாங்கியே தீர்வது என்று வெறி கொண்டு அழைகிறோம் .அந்த வெறியில் வட்டி என்று ஒன்று இருப்பது கண்ணுக்கே தெரிவதில்லை .வட்டிக்கு கடன் கொடுக்க தயாராக இருக்கும் யாரிடம் வேண்டுமானாலும் கடன் வாங்குகிறோம் .இந்த வாய்ப்பை நன்றாகப்  பயன்படுத்தி கொள்ளும் கடன் கொடுப்பவர்கள் பணத்தைக் கொடுத்து தங்கள் விருப்பம் போல் வட்டி வசூல் செய்கின்றனர் . கடன் வாங்குவதில் இருந்த கற்பிதங்களைப் போல கடன் கொடுப்பதில் இருந்த கற்பிதங்களும் ( " அதிக வட்டி வாங்குபவன் குடும்பம் ,  வம்ச விருத்தி இல்லாமல் அழிந்து போகும் " , "வட்டிப் பணத்துல மட்டும் திங்கிற சோறு உடம்பில் தங்குமா ? ") கரைந்தே போய்விட்டன . பணத்தைச் சேமிப்பாக வங்கியிலோ ,வீட்டிலோ வைக்காமல் குறைந்த வட்டிக்கு பணத்தைக் கடனாக கொடுப்பர்களையும் இந்த வட்டிப் பேர்வளிகள் கெடுத்துவிடுகிறார்கள் .

விவசாயம் , சிறு தொழில் போல வட்டித்தொழிலும் கணிசமான நபர்களால் செய்யப்படுகிறது . குறைந்த நேரத்தில் ,குறைந்த  உடலுழைப்பில் நிறைய வருமானம் சம்பாதிக்கும் தொழிலாக இது உள்ளது .சிலர் அரசின் அனுமதி வாங்கியும் பலர் அனுமதி வாங்காமலும் வட்டித்தொழில் செய்கின்றனர் .அனுமதி வாங்கியோ வாங்காமலோ நேர்மையுடன் முறையாக செய்யப்படும் வட்டித்தொழிலால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை . குண்டர் படையுடன் அநியாய வட்டி வாங்கி மக்களின் உழைப்பை வட்டியாக திங்கும் கூட்டத்தால் தங்கள் வாழ்வை இழந்தவர்களும் , வாழ்வை அழித்துக்கொண்டவர்களும் அநேகம் .காலம் காலமாக இது தொடர்கிறது . 

 மற்றவர்கள்  செய்வதைப் பார்த்து தாங்களும் வட்டித்தொழில் செய்து அழிந்த குடும்பங்களும் இருக்கவே செய்கின்றன .வட்டித்தொழில் செய்வதற்கும் ஒரு  திறமை வேண்டும் .இல்லாவிட்டால் போட்ட பணத்தை எடுக்க முடியாது . 
" கட்டுக்கட்டா நோட்டுச்சேருது கெட்டிக்காரன் பொட்டியில.. அது குட்டியும் போடுது வட்டியில .." என்று பட்டுக்கோட்டையார் எழுதியது எவ்வளவு பொருத்தமாக உள்ளது .

கால மாற்றத்தில் கடனும் ,வட்டியும் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத விசயங்களாக மாறிவிட்டன .கடன் என்று வரும் போது ஒன்றுகு பல முறை யோசித்து தான் வாங்க வேண்டும் . ஏனென்றால் கடன் வாங்கிக் கொடுக்க முடியாவிட்டால் நம்மை மிகவும் கீழ்த்தரமாக பேசுவார்கள் , அவமானப்படுத்துவார்கள் .மானத்தை பெரிதாக நினைப்பவர்கள் கடனே வாங்கக் கூடாது .எப்படி பார்த்து பார்த்து வாங்கினாலும் கடன் ஒரு நாளாவது நம்மை அவமானப்படுத்தும் .

சமீப காலமாக நகையை அடமானமாக வைத்து வாங்கும் கடனான " நகைக் கடன் " மிகவும் அதிகரித்துள்ளது . இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிறைய தனியார் நிறுவனங்கள் நகைக்கு கடன் கொடுக்கும் துறையில் குதித்து பல வருடங்கள் ஆகி விட்டன .சிறிய அளவிலும், பெரிய அளவிலும் நகைக்கு கடன் கொடுக்கின்றனர் . கடன் கொடுப்பவர்களும்  கையில் நகை இருப்பதால், வந்தால் பணம் ,வராமல் போனால் நகை என்று தைரியமாக  கடனைக் கொடுக்கின்றனர் . மற்ற கடன்களை விட நகைக்கடன் மிக விரைவாக கிடைக்கிறது .இந்தியாவில் தங்கம், அதிகம் விற்பனையாவதற்கு இதுவும் ஒரு காரணம் .அவசரத்திற்கு உதவும் என்றே நிறைய பேர் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர் .

அடுத்ததாக " ஆட்டோ பைனான்ஸ் " என்ற பெயரில் வாகனங்கள் வாங்க கடன் கொடுத்து கடனுடன் வட்டியையும் வசூல் செய்வது . பதிய வாகனம் ,பழைய வாகனம் எதுவாக இருந்தாலும் பைனான்ஸ் கிடைக்கிறது .ஒரே நிபந்தனை, வாகன பதிவு புத்தகத்தை (ஆர்.சி.புக்)அடமானமாகக் கொடுக்க வேண்டும் .முழுக்கடனையும் அடைத்த பிறகு பதிவுப்புத்தகத்தை மீட்டுக்கொள்ளலாம் . குறு,சிறு மற்றும் பெரு நகரங்களில் இந்த ஆட்டோ பைனான்ஸ் -களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து விட்டது .சாலைகளில் இந்த அளவிற்கு வாகனங்கள் பெருகியதற்கு இந்த ஆட்டோ பைனான்ஸ் களும் ஒரு காரணம் .அதே நேரத்தில் சாதாரண ,மிகவும் குறைவாக சம்பாதிப்பவர்களையும் தாங்கள் நினைத்த வாகனத்தில் பயணிக்க வைத்து ஒரு சமூக அடையாளத்தைக் கொடுத்ததும் இந்த ஆட்டோ பைனான்ஸ் -கள் தான் .வங்கிகளும் வாகனங்கள் வாங்க கடன் கொடுக்கின்றன .

வீடு கட்டுவது என்பது அன்று முதல் இன்று வரை பெரும் செலவு வைப்பதும் , நாம் போட்ட கணக்கை பொய்யாக்கி நம்மைக் கடனாளி ஆக்குவதும் தான் . எப்படித்தான் பார்த்துப் பார்த்து கட்டினாலும் ஒரு கட்டத்தில் கடன் வாங்கும் சூழல் உருவாகி விடுகிறது .வங்கிகளும் வீடு கட்ட கடன் தருகின்றன . மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கிறது .கூலி வேலை செய்பவர்களுக்கும் ,விவசாயிகளுக்கும் ,சிறு தொழில் செய்பவர்களுக்கும் வங்கிகள் எளிதில் கடன் கொடுப்பதில்லை ,அப்படியே கொடுத்தாலும் மிகக் குறைந்த அளவே கடன் தருகிறார்கள். அதே நேரத்தில் பக்கவான தகவல்களைத் தயார் செய்து ஏமாற்றும் நோக்கத்துடன் கோடிக்கணக்கில் கடன் கேட்கும்  மிகப்பெரிய நிறுவனங்களுக்கு கடன் உடனே கிடைத்து விடுகிறது .இன்று மத்தியில் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் இந்தப் பெரு நிறுவன முதலாளிகள் தான் .

எந்த வகைக் கடனாக இருந்தாலும் வங்கிகளில் ,அதுவும் அரசு வங்கிகளில் வாங்குவது மிகவும் நல்லது .வங்கி கொடுக்கும் கடனுக்கும் ,தனி நபர் கொடுக்கும் கடனுக்கும் உள்ள பெரிய வித்தியாசம்  " முறைப்படி நடத்தல் (Systematic Planning ) ". தனி நபர் கொடுக்கும் கடனில் இந்த முறைப்படி நடப்பதை எதிர்பார்க்க முடியாது .உதாரணமாக ,ஒரு நாள் வட்டி கட்ட தாமதமானால் வங்கி அந்த ஒரு நாள் வட்டியை மட்டுமே கட்ட வேண்டிய வட்டியுடன் சேர்த்துக் கொள்ளும் .தனி நபர் வட்டி வாங்கும் விசயத்தில் இது சாத்தியமில்லை ,ஒரு நாள் தாமதமானாலும் ஒரு மாத வட்டியையே சேர்த்து வாங்கும் மனிதர்களும் இருக்கவே செய்கின்றனர்.

கடன் வாங்கியிருக்கேன் என்று சொன்னவுடன் கேட்கப்படும் முதல் கேள்வி , எத்தனை வட்டிக்கு கடன் வாங்கியிருக்கீங்க ? அதாவது வட்டி சதவீதம்  ( %) எவ்வளவு ? என்பது தான் . கடன் வாங்குவதில் இந்த வட்டி சதவீதம் பெரும் பங்கு வகிக்கிறது . கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த வட்டி சதவீதமே மூலக்காரணம் . பெரும்பாலான நேரங்களில் கடன் ஒரு பிரச்சனையே இல்லை .வட்டியால் ,அபராத வட்டியால் ஏற்படும் பிரச்சனைகளை அதிகம் .மிகவும் நம்பகமான இடங்களிலும் ,வங்கிகளிலும் கடன் பெறுவதே நல்லது . அவசர காலங்களில் வேறு வழியில்லாமல் பிரச்சனைகள் வரும் என்று தெரிந்தும் யாரிடமாவது கடன் பெற வேண்டிய சூழல் உருவாகிவிடுகிறது .

கடனால் உண்டாகும் மன உலைச்சல்களையும் , பிரச்சனைகளையும் தவிர்க்க வாங்கிய கடனை வட்டியுடன் கட்டி நாணயமாக நடந்து கொள்வது தான் ஒரே வழி . " நாணயம் மனுசனுக்கு அவசியம், மிகவும் அவசியம் அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த நன்மையான ரகசியம் .." என்று ஒரு பழைய தமிழ்த்திரைப்பாடலே ( அமர தீபம் என்னும் படத்தில் காமாட்சி என்பவர் எழுதிய பாடலிது ) உள்ளது . மற்றவர்கள் வாங்கிய கடனை கட்டுகிறார்களா இல்லையா என்பதைக் கவனிக்காமல் நாம் வாங்கிய கடனைக் கட்டுவதில் நாணயமாக நடந்து கொண்டால் தான் நம் மனம் நிம்மதியடையும் . நிம்மதியான வாழ்விற்கு நாணயமும்  நாணயமும் அவசியம் . நம் வாழ்க்கை நம் கையில்...

மேலும் படிக்க :

கலாசார விடுதலையே சமூக விடுதலை !

மதுவும் மனிதனும் !

பெண் விடுதலையும் சாதி ஒழிப்பும் !

..................................................................................................................................................................

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் சிரமம் தான்...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms