Wednesday, April 30, 2014

ஆம் ஆத்மியின் குரல் !

நடந்து முடிந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியின் குரல் ,லஞ்சம் , ஊழலுக்கு எதிரான குரலா ? அல்லது மாற்றத்திற்கான குரலா ? தெரியவில்லை. மக்களுக்காகப் போராடும் களப்போராளிகள் அதிகம்பேர் பங்குபெற்ற தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கிறது. இத்தனை பேரையும் நேரடியாக அரசியலில் பங்கு பெற வைத்தது நிச்சயமாக ஆம் ஆத்மியின் சாதனை தான். ஆம் ஆத்மியின் வேட்பாளர் தேர்வு மிகவும் வெளிப்படையாகவே உள்ளது. தமிழகத்தில் ஆம் ஆத்மி சார்பில் 25 வேட்பாளர்கள் என்பது ஆச்சரியம் தான். வெளியில் மதசார்பற்றவர்கள் போல் காட்டிக் கொண்டு சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது தான் மாநில , தேசிய அளவிளான அரசியல் கட்சிகளின் பொது புத்தி . ஆம் ஆத்மி இவ்வாறு இல்லை என்பது சற்றே ஆறுதல் தருகிறது.

ஒரு தேசிய கட்சியாக நாடு முழுவதும் களமிறங்கியிருக்கும் ஆம் ஆத்மியின் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒட்டு மொத்த இந்தியாவின் மாற்று அரசியலுக்கான நம்பிக்கைக் கீற்றாய் டெல்லியில் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி அவசரப்பட்டு சிறுபிள்ளைத்தனமாக பதவியிலிருந்து விலகியது பெரிய விமர்சனமாக உள்ளது. எதற்காக பதவி விலகியது என்பது சிந்திக்க வேண்டிய விசயம் . மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை உரிய நேரத்தில் நிறைவேற்ற முடியாத காரணத்தால் தான் ஆம் ஆத்மி பதவி விலகியது . பதவிக்காக எவ்வளவு கீழ்த்தரமாக வேண்டுமானலும் நடந்துகொள்ளும் அரசியல்வாதிகள் அதிகம் இருக்கும் நாடு தான் இந்தியா. பதவிக்காக இங்கே கருணாநிதி என்னவெல்லாம் செய்வார் என்பது எல்லோரும் அறிந்ததே.

 கெஜிரிவால் ,காங்கிரஸ் எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டிலிருந்து திடீரென்று மோடி எதிப்பு நிலைப்பாட்டிற்கு மாறியது நிறைய பேருக்கு பிடிக்கவில்லை . ஆம் ஆத்மியின் கொள்கை ஊழல் எதிப்பு என்றால் கெஜிரிவால், ராகுலை எதிர்த்து தான் போட்டியிட்டுருக்க வேண்டும் . கெஜிரிவால் ,மோடிக்கு எதிராக நிற்பது காங்கிரஸுடன் மறைமுக கூட்டு வைத்திருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது . கெஜிரிவால் ஒரு சர்வாதிகாரி போலவே செயல்படுகிறார் என்றும் சொல்கிறார்கள். இப்படி ஆம் ஆத்மி மீதும், கெஜிரிவால் மீதும் நிறைய விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன .ஒரு அரசியல் கட்சிக்கு ஊழல் எதிர்ப்பு , வெளிப்படைத் தன்மை இவை மற்றும் போதுமா ? காங்கிரஸ் ,பா.ஜ.க., மற்றும் பல்வேறு மாநில கட்சிகள் மீது இருக்கும் வெறுப்பை ஆம் ஆத்மி எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்போகிறது ? தெரியவில்லை .

இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி பெறும் ஒவ்வொரு ஓட்டும் மாற்றத்திற்கான ஓட்டாகவே இருக்கும் . இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி இந்தியா முழுவதும் பெறப் போகும் வாக்கு சதவீதம் மற்ற அரசியல் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடும் . ஒட்டு மொத்த இந்தியாவிற்காக கொள்கைகள் வகுத்து செயல்பட்டால் மட்டுமே ஆம் ஆத்மி வளர முடியும் . இந்தியாவை ஒரே விதமான அளவுகோலில் எப்போதுமே அளக்க முடியாது . பல்வேறு தரப்பட்ட மக்களின் குரலாக ஆம் ஆத்மி ஒலிக்க இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் . எது எப்படியோ " நோட்டா " வில் விழும் ஓட்டும் " ஆம் ஆத்மி "ல் விழும் ஓட்டும் மற்ற கட்சிகளுக்கு மக்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற அச்சத்தை நிச்சயம் உண்டாக்கும் .

மேலும் படிக்க :

கட்சி அரசியலை வேரறுப்போம் !

காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் !

...................................................................................................................................................................

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms