Tuesday, September 30, 2014

காகித மலர்கள் !

தமிழ்  இலக்கியத்தின் தவிர்க்கமுடியாத ஆளுமையான ஆதவனால் எழுதப்பட்டது தான் இந்த 'காகித மலர்கள் ' ( 1977 ) நாவல் . மனிதர்களின் மனப்போக்குகளை ,வேசங்களை இவ்வளவு நெருக்கமாக எழுத்தில் பதிவு பண்ண முடியுமா ? என்ற ஆச்சரியம் நாவல்  முழுமைக்கும் உள்ளது . ஆனால், இது சாத்தியம் என்றே நிரூபித்திருக்கிறார் ,ஆதவன் .ஆம் ,இவருக்கு மட்டுமே சாத்தியம் . 70 களில் டெல்லியில் வாழ்ந்த சில தமிழ்க் குடும்பங்கள்  எப்படி இருந்தன என்ற பிம்பத்தை இந்த நாவல் வெளிப்படுத்துகிறது .

 நாகரிக வாழ்வு என்ற பெயரில் தனது சுயத்தை இழந்து விதவிதமான வேசங்கள் அணிவதன் மூலம் தன்னை திருப்திபடுத்த முயலும் கதாப்பாத்திரங்களை 'காகித மலர்கள் ' முன்வைக்கிறது . மனிதர்களின் சுயம் , தனித்துவம் , அணியும் பிம்பங்கள் பற்றி அதிகம் பேசும் இந்நாவல் இயற்கை குறித்தும் ,செயற்கை உரங்கள் மற்றும் வீரிய விதைகளின் தீமைகள் குறித்தும் , மத்திய அரசில் அதிகாரத்தை கைபற்றத் துப்பில்லாத தமிழக அரசியல் கட்சிகள் குறித்தும் பேசுகிறது . இந்நாவலில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் விதவிதமான வேசங்கள் அணிந்தாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனச்சாட்சி அவர்களைக் கேள்வி கேட்கிறது ; தாங்கள் அணியும் வேசங்களை உணருகிறார்கள் .ஆனால் ,மீண்டும்  வேசங்களையே அணிகிறார்கள் .

இந்த நாவலிலிருந்து சில பகுதிகள் :-

" தன்னைத் தன் பார்வையில் நிரூபித்துக்கொள்வதுதான் அவனுக்கு முக்கியம் .தன்னைப் பற்றித் தன் திருப்திக்காகத் தெரிந்துகொள்வதுதான் முக்கியம் .ஆழத்தில் வெகு ஆழத்தில் , அவன் யார் ? அவன் யாசிப்பது எது?

இதை அவன் கண்டுபிடிக்க வேண்டும் . தேடியவாறிருக்க வேண்டும் .மற்றவர்கள் அவனைப்பற்றி உருவாக்கும் பிம்பங்களுக்குப் பலியாகமல் அவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் "

...........

"ஆம்; திரையுலகத்துக்கு வெளியிலும்கூட சிறிய அளவிலோ பெரிய அளவிலோ ஒவ்வொருவருக்கும் நடிப்புத்திறமை தேவைப்படுகிறது "

.................

" இயற்கை , பெண்ணைப்போல , மனிதனை இயங்க வைக்கும் சக்தி ; மனித குலத்துக்குத் தொடர்ச்சியை அளிப்பது ; அதை மிகையாக இலட்சியப்படுத்தி பூஜை செய்யாமல் அன்னியோன்னியமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அதைப் பயன்படுத்த வேண்டும் - அதே சமயத்தில் அதைச் சூறையாடிவிடக்கூடாது "

......................

" முதலில் , நம்மை நாமே தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம் . அதற்கு வேண்டிய அவகாசத்தைக்கூட நாம் பெறாமலிருப்பதே நம் துரதிஷ்டம் . இதுதான் வெற்றி , இதுதான் முன்னேற்றம் , என்று ஏதோ சிலவற்றை நாம் நிச்சயமாக நம்பிக்கொண்டு , அவற்றையே அடிப்படையாகக் கொண்டு நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு விட்டோம் . இந்த நம்பிக்கைகள் தவறாக இருக்கலாம் ; இவற்றைச் சார்ந்து உருவான அமைப்புகள் யாவும் தவறாக இருக்கலாம் . எது நமக்கு உண்மையிலேயே முக்கியமானது ? எது நமக்கு உண்மையிலே இன்பம் தருவது ? சாதிக்கக்கூடியதாக இருப்பதாலேயே எல்லாவற்றையும் சாதிக்க வேண்டியதில்லை. வெல்லக்கூடிய யாவற்றையும் வெல்ல வேண்டியதில்லை . செலவழிக்கக்கூடிய எல்லாவற்றையும் செலவழிக்க வேண்டியதில்லை. மனிதன் மென்மேலும் தன் ஆற்றல்களை உணர்ந்து வருகிறான் . ஆனால் அவற்றை எப்படி , எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்பதை மட்டும் உணரவில்லை. எல்லாவற்றையுமே பயன்படுத்த முயலவேண்டியதில்லை என்பதையும் உணரவில்லை..."

........................

" ரெனி டு போ என்ற ஃபிரெஞ்ச் அறிஞர் சொல்லியிருக்கிறார் , மிருகக்காட்சி சாலையில் மிருகங்களைக் குடிவைக்கும்போது நாம் எடுத்துக்கொள்ளும் சிரத்தைகூட மனிதர்களை நகரங்களில் குடிவைக்கும்போது எடுத்துக் கொள்வதில்லையென்று. வெவ்வேறு மிருகங்களின் இயல்பான வசிக்குமிடத்துக்கேற்றவாறு இங்கு தனித்தனிப் பாணிகளில் ஒவ்வொரு மிருகத்திற்கும் இடம் அமைத்திருக்கிறார்கள் . ஆனால் நம் நகரங்களில் வெவ்வேறு பூர்வீகங்கள் , மதக் கலாச்சாரச் சூழ்நிலைகள் ஆகியவற்றைச் சேர்ந்த மனிதர்கள் ஒரேவிதமான வீடுகளில் வளர்கிறார்கள் , ஒரே விதமான பள்ளிகளில் ஒரே விதமான கல்வியைக் கற்கிறார்கள் , ஒரே விதமான வேலைகளில் திணிக்கப்படுகிறார்கள் , ஒரே விதமான பிம்பங்களை அணிகிறார்கள் , யாசிக்கிறார்கள். "

............................

" உலகெங்கிலும் குண்டர்கள் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார்கள் . மக்களை இவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் . சில குழுக்கள் , இவர்களுடைய சுயநலமான நோக்கங்கள் , மனித சமூகத்தின் முன்னேற்றம் ,மேம்பாடு என்று எதையெதையோ இவர்கள் கொச்சையாகப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் உருவாக்கியுள்ள  கொள்கைகள்,அமைப்புகள் , இவற்றின் பொருட்டுத் தவறான முறையில் சூறையாடப்பட்டுவரும் , சேததமடைந்து வரும் , இயற்கை வளங்கள் , மனித இயல்புகள்..."

..................................

" தனி மனிதன் நிர்வாக அமைப்பில் தன்னையும் பங்குதாரனாக உணராமல் அதனின்றும் தனிமைப் படுத்தப்பட்டவனாக உணருவதால், தன் பிரச்சனைகளின் தீர்வுக்காகத் தானே நேரடியாகச் செயல்படும் தெம்போ, ஊக்கமோ அவனுக்கில்லை... மறு பக்கத்தில் பெரும்பாலானவர்கள் பெரும் அமைப்புகளில் ஒரு ஆணியாகவோ பல்சக்கரமாகவோ இயங்கிக் கொண்டு , தன் செயல்களின் இறுதி விளைவுகளை நிர்ணயிக்கும் திறனற்றவராய் இருப்பதும் , தம்மிடமிருந்து தாமே அந்நியப்பட்ட , ஆரோக்கியமான சுய உந்துதல்களால் மழுங்கி மரத்துப்போன ஒரு மக்கள் சமூகம் உருவாகவே வழிசெய்கிறது..."

..................................................

" வீர்ய விதைகளுக்கு அதிக அளவில் தண்ணீரும் , செயற்கை உரமும் , பூச்சிக் கொல்லிகளும் தேவைப்படுகின்றன . இம்மூன்றில் ஒன்று குறைந்தாலும் விளைச்சல் பழைய பாணி விதைகள் மூலம்  கிடைப்பதை விடவும் குறைந்துவிடுகிறது ...."

இந்நாவலில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் போலியான வேசங்களையே அணிவதால் அவர்கள் தான் வாசமில்லா " காகித மலர்கள் " என்று அர்த்தப்படுத்துகிறார், ஆதவன் .

நன்றி - ஆதவன் , உயிர்மை பதிப்பகம் .

மேலும் படிக்க :-

தேவதச்சன் - கவிதைகளின் நாயகன் !

...................................................................

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms