Thursday, July 27, 2017

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !

பாலியல் என்றவுடன் ஒன்று கொச்சைப்படுத்தப்படுகிறது அல்லது ஒதுக்கி வைக்கப்படுகிறது. கொச்சைப்படுத்தவோ , ஒதுக்கி வைக்கவோ பாலியலில் எதுவுமில்லை. கொச்சைப்படுத்துவதாலும் , ஒதுக்கி வைப்பதாலும் தான் பாலியல் சிக்கல்கள் உருவாகின்றன. பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில்தான் தீர்வுகள் உள்ளன. ஆதலால் புரிந்து கொள்ள பாலியல் பேசுவோம் .

இயற்கையைப் புரிந்து கொள்வதன் முலமே பாலியலையும் புரிந்து கொள்ள முடியும். இனப்பெருக்கம் தான் இயற்கையின் ஆதாரம். இரண்டு வகை இனப்பெருக்கங்கள் இருக்கின்றன.  ஒன்று பாலிலா இனப்பெருக்கம். மற்றொன்று பால் இனப்பெருக்கம். பாலிலா இனப்பெருக்கத்தில் ஆண் , பெண் என்ற தனி உயிரிகள் கூடுவதற்கு தேவையேயில்லை. தன்னைத்தானே பகுத்துக்கொள்வதன் மூலம் அடுத்த தலைமுறை உருவாகிறது. பால் இனப்பெருக்கத்தில் ஆண் , பெண் உயரிகளும் உறுப்புகளும் தேவைப்படுகின்றன. இரண்டும் உறுப்புகளின் உதவியுடன் கூடுவதன் மூலம் அடுத்த தலைமுறை உருவாகிறது. தாவரங்கள் , பறவைகள் , விலங்குகள் என்று பெரும்பாலானவை பால் இனப்பெருக்கத்தின் மூலமே அடுத்த தலைமுறைகளை உருவாக்குகின்றன.

விலங்கினங்களுள் ஒன்றான மனித இனம் இனப்பெருக்க முறையில் மற்ற விலங்கினங்களிலிருந்து நிறையவே வேறுபடுகிறது.  'வலுத்தது நிலைக்கும் ' என்ற கூற்றின்படி ஆப்பிரிக்க காடுகளில் வசிப்பதற்கேற்ற எந்தவித சிறப்புத் தகுதிகளும் இல்லாத காரணத்தால் மற்ற விலங்கினங்களால் விரட்டப்பட்டது, நமது மூதாதையர்கள் என சொல்லத்தக்க குரங்கினம்.அன்றிலிருந்து இன்று வரை பிழைக்க வழிதேடி ஓடிக்கொண்டே இருக்கிறது மனித இனம்.

நதிகரை நாகரீகங்கள் உருவாகும்வரை மேற்கொண்ட இடைவிடாத இடப்பெயர்ச்சியால் மனித இனத்தில் உயிரிழப்பு மிக அதிகமாக இருந்தது. மனித இனமே அழியக்கூடிய சூழல் உருவானது. இனியும் தப்பிப் பிழைக்க வேண்டுமானால் இனத்தைப் பெருக்குவது தான் ஒரே வழி என்ற நிர்பந்தம் உருவானது. அதனால் மனித இனப்பெருக்க முறையில் மாற்றம் நிகழ்ந்தது. மற்ற உயிரினங்கள் ( தாவரங்கள் , பறவைகள் , விலங்குகள் ) வருடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இனப்பெருக்கம் மேற்கொள்ளும். அந்த குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இனப்பெருக்க வேட்கையும் உண்டாகும்.

தங்களின் இனத்தை நிலைநிறுத்தப் போராடிய மனித இனம் , உயிரிழப்புகள் அதிகமிருந்ததால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது போதுமானதாக இருக்கவில்லை. படிப்படியாக மாற்றமடைந்து வருடம் முழுவதும் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் வகையிலும் , வருடம் முழுவதும் பாலியல் வேட்கை நீடிக்கும் வகையிலும் மனித இனம் மாற்றமடைந்தது. இந்த மாற்றத்தின் பயனால் மனித இனம் எண்ணிக்கையில் பெருக ஆரம்பித்தது. அன்று , மனிதனுக்கு மற்ற உயிரினங்கள் அச்சுறுத்தலாக இருந்தன. இன்று, மனித இனம் மற்ற உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் அளவில் பல்கிப் பெருகியுள்ளது.
அழியும் தருவாயில் இருந்தபோது காப்பாற்றிய,   'வருடம் முழுவதும் இனப்பெருக்கம் ' என்ற தன்மையைப் பற்றி பரிசீலிக்க வேண்டிய நிலையில் மனித இனம் உள்ளது. அந்த இனப்பெருக்கத்திற்காக வருடம் முழுவதும் தூண்டப்படும் பாலியல் வேட்கையால் நிறைய சிக்கல்களை மனித இனம் சந்தித்து வருகிறது. காரணம் , இன்றைய மனித இனத்தின் சவால் என்பது இனத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதுதான்.ஆனால் அது எளிதான காரியமல்ல. சீன அரசு விதித்த ஒரு குழந்தை கட்டுப்பாடு கூட தற்போது திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. வேறு வழிமுறைகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.   இயற்கையான சமநிலை உருவாக அதிக காலம் தேவைப்படும். அதற்குள் நிலைமை கட்டுக்கடங்காமல் போகுமானால் அரசுகளே ஊசிகள் போட வேண்டிய சூழல் எதிர்காலத்தில் உருவாகலாம்.

பூமியில் வாழும் இனங்களில் மனித இனம் எப்போதுமே விசித்திரமானதுதான். இறப்பில் கூட எவ்வளவு மாறுபாடுகள். மற்ற உயிரினங்கள் குறிப்பிட்ட காரணங்களால் மரணமடைந்தால் , இந்த மனிதர்கள் மட்டும் விதவிதமான காரணங்களால் இறந்து போகிறார்கள். இன்று , பூமி சந்திக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மக்கள் தொகை பெருக்கம் தான் மிக முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. இதை எல்லோரும் வசதியாக மறந்துவிட்டு வேறுவேறு காரணங்களை உருவாக்குகிறோம். ஒருவர் பயன்படுத்த போதுமான வளத்தை பத்து பேர் சேர்ந்து பயன்படுத்துகிறோம் பற்றாக்குறையுடன்.

மக்கள் தொகையையும் கட்டுப்படுத்த வேண்டும் , அதே சமயம் பாலியல் வேட்கையையும் கைவிட முடியாத நிலையில் தவிக்கிறது மனித இனம். ஒரு உயிரினத்தின் பிறவிப்பயனே இனப்பெருக்கம் என இருக்கும்போது அதைக் கட்டுப்படுத்துவது நிச்சயம் சவாலானது தான். ஆனாலும் ஏதாவது செய்தே ஆக வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. இனம், என்று தனியாக எதுவுமில்லையே ஆண் , பெண் சேர்ந்தது தானே இனம் என்பது. முதலில் ஆண் பற்றிய புரிதலும் பெண் பற்றிய புரிதலும் நம்மிடையே இருக்கிறதா ? 

பேசுவோம்...


தொடர்புக்கு :

குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .20 
பத்து இதழ் சந்தா ரூபாய்.200
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .


மேலும் படிக்க :

எக்காலத்திற்குமான கலைஞன் !

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !

..............................................................................................................................................................................................................................................



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms