Thursday, November 30, 2017

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !

வயதிற்கு வருதல் என்ற நிகழ்வை வைத்து நிறைய விசயங்களை தொடர்புபடுத்தி பேச முடியும். 14 வயது என அறிவியல் நிர்ணயித்தாலும்
கால மாற்றத்தால் இந்நிகழ்வு முன்பின் நிகழ்கிறது. அதற்கு முன்பே பாலியல் துன்புறுத்தலை குறிப்பிட்ட சதவீத குழந்தைகள் சந்திக்க வேண்டி வருகிறது. ஆண் குழந்தையோ , பெண் குழந்தையோ யாரோ ஒருவரின் இச்சைக்கு பலியாகிவிடுகின்றனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட இக்கொடுமை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் சதவீதத்தில் தான் வித்தியாசம் உள்ளது. பாலியல் கல்வி கற்பிக்கப்படும் நாடுகளிலேயே இப்படி என்றால் நம் நாட்டின் நிலைமை இன்னும் மோசம் தான்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய அரசால் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்தியாவில் 53 சதவீத குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பதிமூன்று மாநிலங்களில் எடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் வெளியிடப்பட்ட தகவலிது. இதில் 50% குற்றங்கள், உறவினர்கள் , தெரிந்த, பக்கத்து வீட்டு அண்ணன் , மாமா , தாத்தா  என்று நன்கு அறிமுகமானவர்களாலேயே நிகழ்த்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் என்றவுடன் பெண் குழந்தைகள் மட்டும் என்று நினைத்துவிடாதீர்கள். இதில் ஆண் குழந்தைகளும் அடக்கம்.அதிலும் ஒரு சில இடங்களில் பாதிக்கப்பட்ட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையே அதிகம். ஆண் குழந்தை தானே என்று கண்டுகொள்ளாமல் இருக்கும் மனநிலை நமக்கு அதிகம். அதனால் தான் இங்கே குறிப்பிட வேண்டியதிருக்கிறது. ஆண் குழந்தைகள் மீதும் கவனமும் , அக்கறையும் தேவை.

5-12 வயதுடையவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாக அந்த புள்ளிவிவரம் சொல்கிறது. பாலியல் கல்வியின் மூலம் ஓரளவு புரிதலை உண்டாக்க முடியும். அப்படியே பாலியல் கல்வி கற்பிப்பதாக இருந்தாலும் வயது வந்த பின் சொல்லித் தருவது தான் சரியாக இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் தான் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை துன்புறுத்தலிலிருந்து காப்பாற்ற வேண்டி இருக்கிறது. 5 வயதிலேயே நல்ல தொடுதல் , கெட்ட தொடுதல் பற்றி புரிய வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கும் முன்பே கூட குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களைச் சந்திக்கக்கூடிய நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. நல்ல தொடுதல் , கெட்ட தொடுதல் குறித்து பெற்றோர்களும் பள்ளிக்கூடங்களும் தான் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். இது உலகளாவிய பிரச்சனை தான் , நம் சமூகத்தில் போதிய பாலியல் அறிவு இல்லை தான். ஆனாலும் இந்த துன்புறுத்தல்களிலிருந்து எப்படியாவது நம் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும். இந்த வயதுகளில் ஏற்படும் பாதிப்பு சிலருக்கு வாழ்க்கை முழுவதுமே நீடிக்கிறது. அப்படியொரு நிலைமை வராமல் காக்க வேண்டியது நம் பொறுப்பு.

எல்லோரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் காலகட்டத்தில்தான் நாம் இப்போது வாழ்கிறோம். ஆதலால் நாம் தான் ஆரம்பத்திலேயே புரிதலை உண்டாக்க வேண்டும். உறவினர்கள் , தெரிந்தவர்கள் நம் குழந்தைகளின் கைகளை தொடலாம் , கண்ணத்தை கிள்ளலாம் , கண்ணத்தில் முத்தம் வைக்க விடலாம். அதுவும் குழந்தைகளுக்கு விருப்பம் இருந்தால் தான். ஆனால் உதடு , மார்பு , பிறப்புறுப்பு , பின்புறம் இந்த நான்கு இடங்களில் யாரையும் தொட அனுமதிக்கக் கூடாது என்று நம் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். அப்படி யாராவது செய்தால் உடனே ' இங்கே தொடாதீங்க' என்று சொல்லவோ, கத்தவோ பழக்க வேண்டும். அதை உடனே பெற்றோரிடமோ , நம்பிக்கையானவரிடமோ தெரியபடுத்தவும் சொல்லித்தர வேண்டும். பெற்றோரிடம் சொல்வதற்கு நாம் குழந்தைகளின் நம்பிக்கையைப் பெற வேண்டும். அதற்கு நாம் நம் பிள்ளைகளிடம் எரிந்து விழாமல் கணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். 



ஆண் பிள்ளையாக இருந்தாலும் , பெண் பிள்ளையாக இருந்தாலும் இந்த சொல்லித்தரும் பணியைச் செய்ய அம்மாவே பொருத்தமானவர். இந்த வேலையையும் பெண் தான் செய்யனுமா ? என்று கேட்காதீர்கள். பெண்ணால் மட்டுமே இந்த விசயத்தை சரியாக கையாள முடியும் என்று உளவியல் சொல்கிறது. இவையெல்லாம் சாத்தியமாக நாம் நம் பிள்ளைகளிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அவர்களின் நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அப்போது தான் அவர்களிடம் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கண்டுபிடிக்க முடியும்.முதலில் நமக்கு பக்குவம் வர வேண்டும். அப்போது தான் அதே பக்குவத்தை பிள்ளைகளிடமும் உருவாக்க முடியும். நம் பிள்ளைகளுக்கு பிடித்ததையும் , பிடிக்காததையும் , கேட்டதையும் , கேட்காததையும் வாங்கித் தருவது மட்டும் நமது பணியல்ல. வாழ கிடைத்திருக்கும் இந்த ஒரே ஒரு வாழ்க்கையையும் நல்ல முறையில் வாழ வழிவகை செய்வதும் நம் கடமை தான்.

பெண் பிள்ளைகள் வயதிற்கு வருவதை ஒரு கொண்டாட்டமாக வெளிப்படுத்தும் மரபு நம்மிடையே இருக்கிறது. உறவுக்காரர்களை அழைத்து, பந்தல் போட்டு , மைக் செட் கட்டி , உணவு சமைத்து ஒரு விழாவாகவே கொண்டாடுகிறார்கள். சிங்காரித்து மூக்கறுத்த கதையாக எல்லாம் செய்து விட்டு இயற்கையான,  இயல்பான,  எல்லோருக்கும் பொதுவான ஒரு நிகழ்வை 'தீட்டு' என்கிறார்கள். ஒரு பெண்ணை அடிமைப்படுத்துவது இங்கிருந்து தான் தொடங்குகிறது என்றும் கூறலாம்.ஆகவே பெண் விடுதலையும் இங்கிருந்து தான் தொடங்க வேண்டும். இதனாலேயே பெண்ணியவாதிகள் மாதவிடாய் குறித்து அதிகம் பேசவும் , எழுதவும் செய்கிறார்கள். ஆண் எங்கெல்லாம் செல்ல அனுமதி இருக்கிறதோ அங்கெல்லாம் செல்ல பெண்ணிற்கும் ( மாதவிடாய் காலத்திலும் ) அனுமதி தேவை.

உடல் ரீதியாக ஒரு பெண் இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டார் என்பதை வெளிப்படுத்தும் நிகழ்வே , மாதவிடாய். பெரும்பாலும்10 லிருந்து 16 வயதிற்குள்  மாதவிடாய் தொடங்குகிறது , 45 லிருந்து 55 வயதிற்குள்  நின்று விடுகிறது. அதோடு இனப்பெருக்கம் செய்யும் திறனும் முடிவிற்கு வந்து விடுகிறது. பெண் வயதிற்கு வந்த பிறகு மாதம் ஒரு  கருமுட்டை உருவாகி ஆணிடம் இருந்து வரும் விந்தணுவிற்காக காத்திருக்கும். அப்படி விந்தணு வந்தால் அதனுடன் இணைந்து கரு உண்டாகி வளர்ந்து குழந்தையாக பிறக்கும். அப்படி நிகழாவிடில் கருமுட்டை உடைந்து , கருவிற்கு ஊட்டசத்து அளிப்பதற்காக சேகரமான இரத்தத்துடன் கலந்து மாதவிடாயாக வெளியேறுகிறது. இதுல எங்கிருந்துயா தீட்டை கண்டீங்க. ஏற்கனவே மாதவிடாயின் போது உடலளவில் சோர்வாக இருப்பவர்களை வீட்டுக்குத் தூரம், தூமை , தீட்டு , இங்கே போகக் கூடாது , அங்கே போகக்கூடாது என்று ஒதுக்கி வைத்து மனதளவிலும் காயப்படுத்துகிறோம். மாதவிடாய் தீட்டு என்றால் நாம் எல்லோரும் அந்த தீட்டின் மூலம் பிறந்தவர்கள் தான். மனித இனமே தீட்டு தான்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கல்வியறிவு அதிகரிக்க அதிகரிக்க சானிட்டரி நேப்கின் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது. பின்தங்கிய கிராமங்களில் இருப்பவர்கள் கூட பள்ளி செல்லும் மாணவிகள் உதவியுடன் நேப்கின் பற்றி அறிந்து கொண்டு பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.  இது ஒரு ஆரோக்கியமான சூழல். ஆனால் இந்தியாவின் பல மாநிலங்களில் நிலைமை இன்னும் மோசம் தான். இந்த நிலையில் சானிட்டரி நேப்கினை இந்தியப் பெண்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் பொறுப்பில் உள்ள மத்திய அரசு நேப்கினுக்கு 12% GST வரி விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக இல்லாவிட்டாலும் படிப்படியாகவாவது வரியைக் குறைத்து நேப்கினுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்க வேண்டும்.  
   
பெண் வயதிற்கு வருவதும் , அதன் பின்னான நிகழ்வுகளும் தான் இப்படி இருக்கிறதென்றால் ஆண்கள் வயதிற்கு வருவது அதைவிட கொடுமையாக பார்க்கப்படுகிறது. ஆண்களும் வயதிற்கு வருவார்கள் என்பது  அதிர்ச்சியளிக்க கூடிய விசயமாகத்தான் இன்று வரை இருக்கிறது. இந்த நிலையில் நமது பாலியல் அறிவு இருக்கிறது. முதன் முதலில் ஆணிலிருந்து விந்து வெளியேறுவதைத் தான் ஆண் வயதிற்கு வருதல் என்கிறார்கள். ஆனால் இந்த நிகழ்வை குற்ற உணர்வோடு கடந்தவர்கள் தான் அதிகம். விதைப்பையில் உற்பத்தியாகும் விந்து , மன உந்துதலின் காரணமாகவோ , தூக்கத்திலோ , சிறுநீரில் கலந்தோ வெளியேறுகிறது. பெண், வயதிற்கு வரப்போகிற வயதிலிருந்தோ அல்லது அதற்கு பின்போ மற்ற பெண்கள் இனி இப்படி , இப்படி இருக்கும் ஒன்றும் பயப்படாதே என்று தைரியமூட்டுவார்கள். அதே நேரத்தில் ஆண்களுக்கு யாரும் சொல்லித் தருவதில்லை. தந்தை கூட தனது மகனுக்குச் சொல்லித் தருவதில்லை. தட்டு தடுமாறி உண்மையைக் கண்டுபிடிக்கும் வரையிலும் இந்திய ஆண்கள் குற்ற உணர்வுடனே இருக்கிறார்கள். 

வயதிற்கு வருதல் என்பது பெண்களுக்கு  ஒடுக்குமுறையாகவும் , ஆண்களுக்கு அறியாமையாகவும் இருக்கிறது.இந்த சூழலில் தான் பிள்ளைகளுக்கு பாலியல் கல்வி கண்டிப்பாக கற்பித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.ஆனால் இதைப்பற்றி யாரும் பேசுவது கூட இல்லை, அப்புறம் எப்படி செயல்படுத்துவது. பாலியல் கல்வி, என்றால் ஆணிற்கும் , பெண்ணிற்குமான உடல்உறவைப் பற்றி கற்பிப்பது என்று கொச்சையாகத்தான் புரிந்து கொள்ளப்படுகிறது. 'ஒண்ணும் தெரியாதப்பவே என்னென்னமோ பண்ணுதுக இதுல இதையும் சொல்லிக் கொடுத்தா இன்னும் மோசமாகிவிடும் ' என்று என்ன ஏது என்று தெரியாமலேயே பிதற்றுகிறார்கள். உண்மையில் பாலியல் கல்வி என்பது ஆண் , பெண் உடல்களில் , மனங்களில் நிகழும் மாற்றங்கள் , பாலியல் ஈர்ப்பு , எதிர் பாலினத்தைப் பற்றி புரிந்து கொள்ளுதல் , பாலியல் உறுப்புகள் பற்றிய புரிதல் , பாதுகாப்பாக இருத்தல் என்று பலவற்றையும் உள்ளடக்கியது தான் பாலியல் கல்வி. எதிர் பாலினத்தை தெரிந்து கொள்வதற்கு முன் முதலில் தன் உடல் பற்றிய புரிதல் ஆணிற்கும் , பெண்ணிற்கும் தேவை. எதையுமே கற்பிக்காமல் இந்த காலத்து பிள்ளைகள் எதுலயுமே சரியில்லை என்று கூப்பாடு போடுவதால் ஒன்றும் நிகழப்போவதில்லை.

இயற்கையின் நியதிபடியே மிக பாதுகாப்பான இடத்தில் , குறிப்பிட்ட அளவு வெப்பம் எப்போதும் இருக்கும்  வகையிலேயே பிறப்புறுப்புகள்  அமைக்கப்பட்டுள்ளன. தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளும் திறனும் அவற்றுக்கு உண்டு. நமது வாயிலிருக்கும் கிருமிகளின் எண்ணிக்கையை விட பிறப்புறுப்புகளில் இருக்கும் கிருமிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்கிறார்கள்.இருந்தாலும் முடிந்தவரை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இங்கே ஆரம்பத்திலேயே 'அசிங்கம்  அங்கே தொடாதே ' என்று சொல்லி தான் பழக்கப்படுத்துகிறோம். அந்த உறுப்புகளால் தான் உருவாகிறோம் , அந்த உறுப்பின் வழியே தான் பிறக்கிறோம். அந்த உறுப்புகளால் தான் இன்பமடைகிறோம். ஆனால் அந்த உறுப்புகள் மட்டும் அசிங்கம். எந்த ஊர் நியாயம் இது ? அப்படியானால் அந்த அசிங்கத்தின் வழியே பிறந்த நாமெல்லாம் அசிங்கங்கள் தானே. பிறப்புறுப்புகளை மையப்படுத்தியே கெட்ட வார்த்தைகள் என்று சொல்லப்படுபவை பேசப்படுவதால் அந்த உறுப்புகளே அசிங்கம் என நினைக்கத் தொடங்கிவிட்டதா, பொதுமனம். மற்ற எல்லா உறுப்புகளை விடவும் அதிக முக்கியத்துவம் தரப்பட எல்லாவித நியாயங்கள் இருந்தாலும் குறைந்தபட்ச முக்கியத்துவமாவது கொடுக்கப்பட வேண்டும். மற்ற உடல் உறுப்புகள் போலவே பிறப்புறுப்புகளுக்கும் உரிய கவனம் கொடுக்கும் வகையில் புரிதல்களை உருவாக்க வேண்டும்.

பேசுவோம்...

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .20 
பத்து இதழ் சந்தா ரூபாய்.200
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms