Tuesday, March 22, 2011

நீரின்றி அமையாது உலகு !




" நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு " 


விளக்கம் : (முனைவர் ச .மெய்யப்பன் )
                       எவ்வகையில் உயர்ந்தவரும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது . அதுபோலத் தண்ணீரின் இடையறாத ஓட்டமும் மழை பெய்யவில்லை என்றால் இல்லையாகும்.

நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறள் இது . தண்ணீர் ," திரவத் தங்கம் " என்று அழைக்கப்படுகிறது . தண்ணீர் இல்லாமல் நம் வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியாது . உலகத்தில் உள்ள நீரில் 3 % மட்டுமே நல்ல தண்ணீர் . இதை மட்டுமே நாம் குடிக்கப் பயன்படுத்த முடியும் . இதிலும் 2 % சதவீத தண்ணீர் பனிக்கட்டியாக உள்ளது . வெறும் 1 % தண்ணீர் மட்டுமே பூமி முழுவதும் நாம் வாழும் பகுதியில் கிடைக்கிறது . மழை பெய்வதன் மூலம் மட்டுமே நாம் அதிகளவு நல்ல தண்ணீரைப் பெறுகிறோம் . மழை பெய்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது அடர்ந்த வனப்பகுதிகள் தான் . உலகமயமாததாலும் , பொருளாதாரமயமாததாலும் எல்லா நாடுகளிலும் வனப்பகுதியின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது . வனப்பகுதியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐ.நா .சபை 2011 ஆம் ஆண்டை சர்வதேச வன ஆண்டாக ( http://www.un.org/en/events/iyof2011/index.shtml. ) அறிவித்துள்ளது 



நாம் பெரும்பாலும் நதியின் மூலமே தண்ணீரைப் பெறுகிறோம். நதிக்கு தண்ணீர், மழையிடமிருந்து கிடைக்கிறது . நதியின் பிறப்பிடம் சோலைக்காடுகள் . புல்வெளிகள் , பசுமைமாறாக் காடுகள் ஒருங்கிணைந்து காணப்படுவது சோலைக்காடுகள். இந்த வகைக் காடுகள் 
கடல் மட்டத்தில் இருந்து 1,800 மீட்டர் மற்றும் அதற்கு மேலான உயரத்தில் 
காணப்படுகிறது. சோலைக்காடுகளின் தட்பவெப்ப நிலை , தனித்துவமான மண் அமைப்புகளை செயற்கையாக உருவாக்க முடியாததால் இந்த வகை காடுகள் தொல்லுயிர் படிமங்கள் என அழைக்கப்படுகின்றன . தமிழகத்தில் நீலகிரி ,கொடைக்கானல் , ஆனை மலை, அகத்திய மலை மற்றும் மேகமலை ஆகிய பகுதியில் மட்டுமே சோலைக் காடுகள் அரிதாக காணப்படுகின்றன . 

மழைக்காலங்களில் ஏற்படும் அதிகப்படியான மழைப்பொழிவால்  பெறப்படும் நீர்வளம் சோலைக் காடுகளின் புல்வெளிக்கு அடியில் உள்ள பஞ்சு போன்ற அடிப்பரப்பில் சேமிக்கப்படுகிறது . இது தாவர இலைகளால் அமைக்கப்பெற்ற ஓர் அடுக்கு . இந்த அடுக்கில் சேமிக்கப்பட்ட தண்ணீரானது , சிறிது சிறிதாக வெளியேற்றப்பட்டு சிறு சிறு ஓடைகளாக, மிகப்பெரிய அருவிகளாக , ஆறுகளாக உருமாறுகின்றன . இந்த காடுகளில் அதிகப்படியான தாவர இனங்களும், ரோடோடென்ரான், ரோடோமிர்ட்ஸ் , இம்பேஸியன்ஸ், எக்ஸாகம் உள்ளிட்ட சில தாவர இனங்களும் காணப்படுகின்றன . விலங்குகளில் மரத்தவளை, வரையாடு , யானை , பாம்புகள் , கருமந்தி , தேவாங்கு , மாற அணில் , சிறுத்தை , கரடி , கடமான் , காட்டுக்கோழிகள் மிகுந்த அளவு காணப்படுகின்றன . சோலைக்காடுகளின் பரவல் குறைவதால் படிப்படியாக இவ்வகை காடுகள் தொல்லுயிர் படிமங்களாகி வருவதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவிகின்றனர் .


வனப்பகுதில் கால்நடைகளின் மேய்ச்சலைத் தடுத்து வன   உயிரினங்களையும் அதைச் சார்ந்த வனப்பகுதிகளையும் பாதுகாக்கலாம். அந்நிய களைச்செடிகள் , மரங்களை ஒழித்து அதன் மூலம் பரவும் விதை முளைத்தலை தடுக்கலாம் . காட்டுத்தீயை தடுப்பதோடு , தேயிலை , காபி பயிரிடப்படுவதற்காக சோலைக்காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கலாம் . பைன் , யூகலிப்டஸ், அகேசியா வகை மரங்களை முற்றிலும் வனப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தலாம் .

நிலத்தில் வாழும் உயிரினங்களில் 80% வனத்தில்தான் வாழுகின்றன . மனிதனது அத்துமீறலால் பல உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளன .வனத்தை உருவாக்குவதில் மரங்கள் பெரும் பங்கு இருக்கின்றன . மரங்கள் இல்லையென்றால் பூமியில் வனமே இல்லாமல் போய்விடும்  . நாம் சுவாசிக்கத்  தேவைப்படும் பிராண வாயு ( oxygen o2) மரங்களில் இருந்தே அதிகளவு கிடைக்கிறது . தண்ணீர் ,  கிடைப்பதற்கும் மரங்களே முக்கிய காரணம் . நிலச்சரிவைத்   தடுப்பதிலும் மரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன . உணவுப்பொருட்கள் , எரி பொருட்கள் , பல்வேறு வகையான பொருட்கள் செய்ய என்று நாம் மரங்களில் இருந்து பெரும் நன்மைகள் ஏராளம் . மரங்கள் இல்லாமல் மனிதனே இல்லை . இயற்கை இல்லாமல் நம் பூமியே இல்லை . இயற்கையோடு இணைந்து வாழாமல் நம்மால் நிலையான மகிழ்ச்சியையோ ,  வளர்ச்சியையோ எந்தக் காலத்திலும் பெற முடியாது . 

இவ்வளவு கதையும் எதற்காக என்றால் , இன்று (மார்ச் 22)  " உலகத் தண்ணீர் தினம் ". 



நீரின்றி அமையாது உலகு !


மேலும் படிக்க :

.......................         

3 comments:

Anonymous said...

Nice.......

மானிடன் said...

நன்றி.......

Unknown said...

I am a 8 th student can I use this for speech competition

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms