Wednesday, December 28, 2011

2011 ம் வருடமும் சாமானியனும் !

ஒரு சாமானியனின்  கவலைகள் என்பதா ,கேள்விகள் என்பதா ,ஆதங்கம் என்பதா ,இயலாமை என்பதா அல்லது அறியாமை என்பதா தெரியவில்லை .

  • ஆட்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன . ஆனால் , அதிகார மையங்களின் பிடியிலிருந்து மக்கள் இன்னும் வெளியே வரமுடியவில்லை . பிரதமர் ,முதல்வர் போன்ற மேல் நிலை ஊழியர்களிலிருந்து அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர்கள் வரை சாமானிய மக்கள் மீது அதிகாரம் செலுத்துபவர்களாகவே இருக்கின்றனர் . மக்களின் வரிப்பணம் தான் தனக்கு சோறு போடுகிறது என்ற மனநிலை அவர்களுக்கில்லை . சாமானியர்கள் மீது அதிகபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் தொடர்ந்து முன்னிலையில் இருப்பவர்கள் காவல்துறையைச்  சேர்ந்தவர்கள் . பொய் வழக்கு ,லாக்கப் சித்திரவதை , தடியடி , துப்பாக்கிச்சூடு என்று சாமானியர்கள் மீது பாயும் அதிகாரத்தின் நீளம் அதிகம் . உலகமே அதிகார மையங்களின் கட்டுப்பாட்டிலே இருப்பதாகத் தெரிகிறது . உண்மையான மக்களுக்கான ஆட்சி எங்குதான் நடைபெறுகிறது ? யாராவது சொல்லுங்களேன் .

  •  லஞ்சம் ,ஊழல் என்பது மனித விலங்குகளின் ஜீனிலியே பதிந்துபோன விசயமாக மாறிவிட்டது . லஞ்சம் , ஊழல் குறைவான நாடு வேண்டுமானால் உலகில் இருக்கலாம் .ஆனால் , லஞ்சம் ஊழலே இல்லாத நாடு என்று ஒன்று உலகில் இருக்க வாய்ப்பில்லை.

  • அண்ணா ஹசாரே போராட்டத்தை ஒரு சில ஊடகங்கள் காந்தியவழிப் போராட்டம் , மக்களுக்கான போராட்டம் என்று சொல்கின்றன . இல்லை ,இது கார்பரேட் கம்பெனிகளின் போராட்டம் , மத்திய தர மக்களின் உடல் நோகா மெழுகுவர்த்தி போராட்டம் என்று வேறு சில ஊடகங்கள் ஏசுகின்றன . அதிகம் படிப்பறிவில்லாத என்னைப்போன்ற சாமானியர்கள்  எதை நம்புவது ?
  • அண்ணா ஹசாரே, எத்தனை முறை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினாலும் வரிந்து கட்டிக்கொண்டு  ஆதரவு தரும் ஊடகங்கள் , இரோம் சர்மிளா , ஓடிஸா போஸ்கோ , பழங்குடியினர் ,கூடங்குளம் மற்றும் பல  பிரச்சனைகள் குறித்து வாயே திறக்காமல் இருப்பது நம்மை யோசிக்க வைக்கிறது .

  • சுயஒழுக்கம் என்பதை சட்டங்களால் உருவாக்க முடியாது . சிறந்த கல்விமுறையாலும் , சிறந்த குழந்தை வளர்ப்பாலும் மட்டுமே சுய ஒழுக்கத்தை உருவாக்க முடியும் . ஆனால் , இன்றைய கல்விமுறை கண்ணை மறைத்து , கடிவாளம் பூட்டிய குதிரையைப் போல கொள்ளுக்கும் ,புல்லுக்கும் ஓடுவது   போலவே உள்ளது .

  • இந்த வருடம் நடந்த ஆட்சிமாற்றம் எல்லோருக்கும் மகிழ்ச்சியே . பலன் ??? ஒரு நாடக நடிகர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார் , ஒரு சர்வாதிகாரி பதவியில் அமர்ந்திருக்கிறார் அவ்வளவுதான் . மக்களைப்பற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல் பிடிவாதமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன . பழையபடி காவல்துறை சர்வாதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது . சே ! இந்த முறையும் நம்ம ஓட்டு வேஸ்டு தானா ? எப்ப தான் நாம் போடும் ஓட்டுக்கான பலனை அனுபவிக்கப் போகிறோமோ ?

  • 50 ஆண்டுகளுக்கும் மேலாக அடக்குமுறைக்கு ஆளான தெற்கு சூடான் ஜூலை 9 , 2011 அன்று தனிநாடாக உதயமானது . ஈழம் எப்போது தனி நாடாவது ? சீனாவின் பிடியிலிருந்து திபெத்தை யார் மீட்டெடுப்பது ? ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையை எப்படிப் போக்குவது ? உலகெங்கும் நடக்கும் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை யார் தட்டிக்கேட்பது ?

  • இதுவரைக்கும் அணுஉலை பற்றிக் கவலைப்படாத நாடுகள் கூட புகுசிமா நிகழ்விற்குப் பிறகு அணுஉலை பற்றி அச்சமும் ,அணுவைப் பயன்படுத்துவதில் தயக்கமும் கொண்டிருக்கின்றன . எப்படிப் பார்த்தாலும் அணுசக்தி பூமிக்கு ஆபத்தானது தான் . 20 ஆண்டுகளுக்கும் மேலான கூடங்குளம் மக்களின் போராட்டத்தை கேலிப்பொருளாக்கி 5 மாவட்ட மக்களுக்காக கவலைப்படாமல் , 14000 கோடிக்காக மட்டுமே கவலைப்படுகிறது தற்போதைய காங்கிரஸ் அரசு . இதே காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகையுடன் ஒப்பிடும் போது இந்த 14000 கோடி மிகவும் சொற்பமானது . 

  • தொடர்ந்து இயற்கைக்கு எதிராக செயல்படும்வரை நமக்கு வீழ்ச்சிதான் . நமது செயல்பாடுகள் இயற்கையின் அனைத்து கூறுகளையும் பாதித்துவிட்டன . நம்மால் இயற்கையைக் கட்டுப்படுத்தவோ , வெற்றி கொள்ளவோ எப்போதும் முடியாது . விதவிதமான நோய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன . குறிப்பாக உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கட்டிகள் மற்றும் புற்றுநோய்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன . தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகின்றன . மற்ற நாடுகளில் தடை செய்யப்பட மருந்துகள் இப்போதும் விற்பனை செய்யப்படுகின்றன . காரணம் ?

  • பிரிவினைவாத அரசியலின் பலிகடாவாக எப்போதும் இருப்பது சாமானிய மக்கள்தான் . ஜாதி அரசியல் ,மத அரசியல் , கட்சி அரசியல்  என்று பிரிவினைகளை உருவாக்கி தங்கள் ஆதாயத்திற்கு சாதாரண மக்களை முட்டாள்களாக்கி , உணர்ச்சிவசப்படவைத்து குளிர்காய்வதுதான் அரசியல்வாதிகளின் வேலையாகிவிட்டது . தமிழ்நாட்டுக்கும் , கேரளாவுக்கும் இடையிலான பிரச்சனையை தமிழர்களுக்கும் ,மலையாளிகளுக்கும் இடையிலான பிரச்சனையாக மாற்றிய பெருமை இரு மாநில அரசியல் கட்சிகளையும் , ஊடகங்களையுமே சேரும் . முன்பு , காவிரிப் பிரச்சனையில் கர்நாடகாவில் இருந்த தமிழர்கள் தாக்கப்பட்டார்கள் . கர்நாடகாவில் இருந்த தமிழர்கள் , தமிழர்கள் என்று அடையாளப்படுத்தவே பயப்பட்டனர் . ஆனாலும் , இன்றும் எத்தனையோ தமிழர்கள் பிழைப்புக்காக அங்கு வாழ்கின்றனர் . அதே பிழைப்புக்காக கர்நாடாக மக்களில் சிலர் இங்கும் வாழ்கின்றனர் . அதுபோல , இன்று சண்டை கட்டிக்கொண்டாலும் நாளை மலையாளிகள் தமிழ்நாட்டிலும் , தமிழர்கள் கேரளாவிலும் பிழைப்புக்காக வாழத்தான் போகின்றனர் .

  • இலக்கியம் படிக்க முயற்சி செய்யும் என்னைப்போன்ற பட்டிக்காட்டனுக்கு நிறைய கேள்விள் எழுகின்றன . அரசியல் கட்சிகள் எந்தப்பிரச்சனையிலும் ஒற்றுமையாக செயல்படுவதில்லை என்று விமர்சிக்கும் எழுத்துலகம் , அரசியல் கட்சிகளை விட அதிக பிரிவினைகளைக் கொண்டிருக்கிறது . எவ்வளவு முக்கிய பிரச்சனையாக இருந்தாலும் ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து சொல்கின்றனர் ; நம் மண்டை காய்கிறது . இலக்கியம் என்றாலே பொது தானே அப்புறம் ஏன் பெண் இலக்கியம் , ஆண் இலக்கியம் , தலித் இலக்கியம் என்று ஏகப்பட்ட பிரிவினைகள் . இவ்வளவு வேறுபாடுகளை வைத்துக்கொண்டு  இந்த பிரிவினை இலக்கியங்களால் சமத்துவத்தை உருவாக்க முடியுமா ? முதலில் படைப்பு தான் பேசப்பட வேண்டும் . பிறகு தான் அதை யார் எழுதியது என்று பார்க்க வேண்டும் .பிரிவினைகளைப்  புறந்தள்ளி உலக இலக்கியங்களுக்கு இணையான தரமான இலக்கிய படைப்புகள் உருவாக்குவதை நோக்கியும் , சமூகத்தை சீர்படுத்துவதில் இலக்கியத்திற்கு இருக்கும் மாபெரும் பங்கை உணர்ந்தும் எழுத்துலகம் பயணிக்குமா ? 

  • சினிமாவில் இன்னும் அருவாள் தூக்கும் கும்பல் இடம்பெறுகிறது . அதிகபட்ச வன்முறைக்காட்சிகள் பார்ப்பவர்களின் மனநிலையை வெகுவாக பாதித்து மனதை மரத்துப்போகச் செய்கின்றன . சமீபகாலப் திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்கள் திரைக்கதையின் வேகத்தைக் குறைக்கின்றன . கண்டிப்பாக 5 கும் மேற்பட்ட பாடல்கள் இருக்க வேண்டும் என்ற விதியை விட்டுக்கொடுக்கும் மனநிலையில் நிறைய இயக்குனர்கள் இல்லை . கதையை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களும் கடந்த 2 ஆண்டுகள் ஓரளவு வரவேற்பைப் பெற்று இருக்கின்றன . இது நல்ல விசயம் . " ஆரணிய காண்டம் " , "எங்கேயும் எப்போதும் " மற்றும் " பாலை"  இந்த ஆண்டின் சிறந்த படங்களாக இருக்கக்கூடும் .

  • இந்த ஆண்டு , உலக சாம்பியன் கபடிப்  போட்டியில்  ஆண்கள் பிரிவிலும் ,பெண்கள் பிரிவிலும் உலகக்கோப்பைகளை வாங்கி ஆட்டோவில் பயணித்து வீடு வந்து சேர்ந்தனர் ,இந்திய கபடி அணியினர் . மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது இந்தியா . எவ்வளவு பெரிய பிரச்சனையையும் மறக்கவைக்கும் சக்தி கிரிக்கெட் விளையாட்டிற்கு உள்ளது .பெருமளவு மக்களின் பிடித்தமான பொழுதுபோக்காக இருப்பதும் அதுவே . இது அரசியல் தொழிலில் ஈடு பட்டுள்ளவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது .முதல் முறையாக பார்முலா ஒன் கார் பந்தயம் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது . மற்ற விளையாட்டுகள் பற்றி ஊடகங்களுக்கும் , நமக்கும் எந்தவித  கவலையுமில்லை . ஒலிம்பிக் பதக்கம் ???

  • ஒவ்வொரு ஆண்டும் விளம்பரங்கள் வாயிலாக நம் மூளை சலவை செய்யப்படுவதன் மூலம் நமது வீடுகளில் இறக்குமதியாகும் விதவிதமான  பொருட்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் . இந்தியா மிகப்பெரிய வணிக சந்தையாக மாறிவிட்டது . சிறிய ,பெரிய எந்தக் குடும்பமாக இருந்தாலும் ஒவ்வொரு மாதமும் உணவிற்காக செய்யும் செலவைவிட மற்ற பொருட்கள் வாங்கவே அதிகம் செலவு செய்கிறது . 

  • இந்த ஆண்டில் தான் அனந்த பத்மநாபசாமி கோவில் , ஒரே வாரத்தில் உலகின் பணக்கார கடவுளாக மாறியது . தங்கம் மட்டும் இன்று ஓட்டைக் காலணா போல புழக்கத்தில் இல்லாமல் இருந்திருந்தால் தங்கத்திற்கு எந்த மதிப்பும் இருந்திருக்காது . தங்கம் , பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து புழக்கத்தில் இருப்பது மிகப்பெரிய சரித்திர நிகழ்வு . இன்று ,சாமானியன் தங்கம் வாங்க நினைப்பதே பெரிய சாதனை தான் . 

  • காலம், கொண்டாட்டத்திற்கு இடம் ஒதுக்கும்போதே  துயரங்களுக்கும் ,மரணங்களுக்கும் சேர்த்தே இடம் ஒதுக்குகிறது . மார்ச் 11 ,2011 அன்று ஜப்பானை உலுக்கிய சுனாமி இந்த ஆண்டின் துயரமாக பதிவாகியுள்ளது . ஜப்பானுக்கு சுனாமி ஒன்றும் புதிதல்ல . புகுசிமாவில் இருந்த அணுஉலைகள் பாதிக்கப்பட்டு , கதிர்கள் வெளியேறியது தான் கொடூரம் . இயற்கையால் பாதி அழிகிறது ,மனிதனால் பாதி அழிகிறது . இயற்கை  அழிவுகளில் நீடித்த பாதிப்புகள் இல்லை . மனிதனால் ஏற்படும் அழிவுகளால் நீடித்த பாதிப்புகள் உருவாகின்றன . மலேசியா வாசுதேவன் மரணமும், ஸ்டீவ் ஜோப்ஸின் மரணமும் இந்த ஆண்டின் மறக்க முடியாத மரணங்கள் . மரணங்கள் எங்கேயும் எப்போதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன .ஆனால் , ஒரு சில மரணங்கள் மட்டுமே கவனிக்கப்படுகின்றன . காரணம் ? 

இவ்வளவுக்கும் மத்தியில் தொடர்ந்து வாழ நமக்கு சக்தி அளிப்பவை , இயற்கை மீதான பிடிப்பும் , நம்பிக்கையும் மற்றும் மற்றவர்கள் நம் மீது காட்டும் அன்பும் , நாம் மற்றவர்கள் மீது காட்டும் அன்பும் தான் .

ஆமாம் .2012 ல உலகம் அழியப் போகுதாமே !
2000 ஆண்டைப் போல 2012 ஆண்டும் சுவாரசியமாகி விட்டது . மனிதன் தொடர்ந்து இயங்க இந்த மாதிரியான சுவாரசியங்கள் அவசியமாகின்றன .

வலுத்தது நிலைக்கும் !

மேலும் படிக்க :

சுற்றுச்சூழல் 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 
..................................................................................................................................................................... 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms